Saturday, June 27, 2009

நீ சொல்லுவ மச்சான்,
“நேற்றுப் போல் இன்று இல்லை. இன்று போல் நாளை இல்லை... ”
பாடல் வரிகளைச் சுமந்தவாறே வந்த காற்று காதில் அறைந்தது.

உண்மைதான் கடந்த சனிக்கிழமை, ஊரிலிருந்து வந்த நண்பன் ஒருவனுடன் மிகவும் பரபரப்பாக் கடந்து சென்றிருந்தது. ஆனால் இந்த சனிக்கிழமை? செல்லவேண்டிய அலுவல்கள் இருந்தாலும், பணியிடத்தில் அறிவிக்கப்பட்டிருந்த சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தது அலுப்பாய் இருந்தது. மாலைநேரம் தாண்டித் தொடர்ந்து கொண்டிருந்த உறக்கத்தையும், ஐரோப்பியக் கண்டத்திலிருந்து வந்த உறவினர் ஒருவரின் அழைப்புக் கலைத்து விட்டிருந்தது. வெளியே எங்காவது காற்றாடச் சென்றுவரவேண்டும் போல் இருக்கவே குளித்துவிட்டுப் புறப்பட்டேன்.


இருமலுக்கு யோக்கற் (yoghurt, தமிழல் இதையும் தயிர் என்றே அழைப்பது சரியாய் இருக்குமா?) இதமாயிருக்கும் என்ற அறை நண்பனின் கருத்தை ஏற்றுக்கொண்டு அருகிலிருக்கும் 24 மணிநேர Shop & Save இற்குச் சென்று புதிதாக அறிமுகமாகியிருக்கும் யோக்கற்றுகள் இரண்டு வாங்கினேன். ஒன்றுதான் வாங்க நினைத்தேன், ஆனால் ஒரு யோக்கற் $1.10, இரண்டு யோக்கற் $1.65. எனவே இரண்டாகவே வாங்கிக்கொண்டு அருகிலிருக்கும் பூங்காவை அடைந்தேன். ஒன்றை அருந்தி முடிக்கவே வயிறு போதும் என்றது. ஆனால் நாக்கோ மற்றதையும் கவனி என்றது கண்களைப் பார்த்து. எனக்கும் என் நாக்கிற்கும் இப்போது பெரும்யுத்தம். நாக்கின் சுவையரும்புகள் தங்கள் பணிகளை அளவுக்குமீறிச் செய்துவிட்டிருந்ததுடன் கண்களையும் தங்களுடன் கூட்டுச்சேர்த்து விட்டிருந்தன. நேரம் செல்லச்செல்ல எனக்கான ஆதரவாளர்கள் எல்லாம் எதிரணியுடன் கூட்டு வைக்கத் தொடங்கியிருந்தனர். தனிமையில் “நான்”. என் தோல்வியை ஒப்ப மனமும் விரும்பவில்லைபோல் எனக்குக் கூறியது (அல்லது அப்படி நடித்ததோ தெரியவில்லை). மத்தியஸதம் வகிப்பதாகக் கூறி என் மண்டையைக் கழுவத்தொடங்கியது. விழுந்தும் மீசையில் மண்படாமல் காட்டிக்கொள்வதே இப்போதைக்குப் புத்திசாலித்தனம் என பட்டறிவு வேறு, பாடம் புகட்ட நானும் என் சம்மதத்தை வழங்கினேன். சில வினாடிகள் தாமதித்திருந்தாலும், என் சம்மதமின்றியே அது நிகழ்ந்து விட்டிருக்கலாம் என்பது வேறு விடயம்.


அப்பா! என்ன வல்லமை இந்த நாக்கிற்கு!

இதனால்தான் முன்னோர்கள் எல்லாம் நாவடக்கம் தேவையென்றார்களோ? இத்தனை நாளும் நாவடக்கம் என்பது பேச்சை, வார்த்தைகளைப் பற்றியது என்றே எண்ணியிருந்தேன். “வில்லில் இருந்து விடுபட்ட அம்பும், வாயிலிருந்து விடுபட்ட சொல்லும் திரும்பிப் பெற முடியாதவை.” என்கின்ற பழமொழியோ, “ஒரு பெண்ணின் மூன்றங்குல நாக்கு ஆறடி மனிதனைக் கொல்லும்” என்கின்ற சொல்லாடல்களோ ஏதும் அர்த்தமற்றவையாகவே அப்போது எனக்குப் புலப்பட்டன.

குனிந்து யோக்கற் குவளைகளைப் பார்த்தேன். இரண்டுமே வெறுமையாக...

'இங்கே யோக்கற் குவளைகள் வெறுமையாக'. நான் சிரித்துக் கொண்டேன். Zen துறவிகள் யாரையாவது இந்தக் கணத்தில் சந்தித்துக்கொள்ள முடியுமா?


Zen தத்துவங்கள், ஓஷோவின் நூல்கள் மூலமாகவே எனக்கு அறிமுகமாகியிருந்தன. ஆரம்மபத்தில், என் பதின்மப் பருவங்களில் வாசிப்பதற்கு வேறு நூல்கள் கிடைக்காத பொழுதுகளில் பொழுதைப் போக்குவதற்காகவே அவரின் நூல்களை வாசித்தேன். முக்கியமாக அதில் வரும் சின்னச்சின்னக் கதைகளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தேன். பின்னாட்களில் அவரது கருத்துகள் கொஞ்சம் கொ்ஞ்சமாக விளங்குவது (புரிவது) போலவும் விளங்காதது (புரியாதது) போலவும் விளையாட்டுக் காட்டுகையில் ஆர்வம் பிறந்தது. Zen தத்துவங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவர்கட்கு அது தனது தத்துவங்களை மிகவும் சிறிய சிறிய கதைகளில் அடக்கி வைத்திருக்கிறது என்கின்ற சூட்சுமம் புலப்பட்டது. பொதுவாக முதலாவது கதையாக அது உங்கள் தேநீர்க் குவளை முற்றிலுமாக நிரப்பப்பட்டிருக்கின்றது என்பதாய்ச் சொல்கிறது. அது, வெற்றுக்குவளையாக வாருங்கள் அப்போதுதான் உங்களை நிரப்பிக் கொள்ள முடியும் என்கிறது. ஏற்கனவே வேறு கருத்துக்களால், கொள்கைகளால் நிரம்பி வழியும் உங்களிற்கு, வார்க்கப்படும் உண்மைகள் வெளியே கொட்டப்பட்டுவிடும் என்பதைச் சொல்கிறது.

பொதுவாகவே உண்மைகள் தர்க்கங்கட்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன. அப்படி இருப்பதனால் தான் அவை உண்மையாகவும் இருக்கின்றன என்றே நான் நம்புகின்றேன். தர்க்கிப்புகளின் மூலம் ஒன்றை உண்மையெனக் காட்ட முடியுமாயின் அதே தர்க்கிப்புகளின் மூலமு்ம் அதைப் பொய்யாக்கியும் காட்டலாம்.

ஒரு தடவை ஒரு மதப் பிரச்சாரத் தலைவரும், ஒரு நாத்திகப் பிரச்சாரத் தலைவரும் சந்தித்துக் கொண்டனர். பொதுவாகவே ஆத்திகவாதிகள் என்று தம்மைச் சொல்லிக்கொள்பவர்களும் சரி நாத்திகவாதிகள் என்று தம்மைக் காட்டிக் கொள்பவர்களும் சரி, ஒருவரில் ஒருவர் எதிர்மறையாகத் தொங்கிக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை. எப்போது அவர்கள் சந்தித்துக் கொண்டாலும் அங்கே தர்க்கம் ஆரம்பித்து விடுகிறது. இங்கே சந்தித்துக் கொண்டவர்களோ தலைவர்கள்! தர்க்கம் மணிக்கணக்கைத் தாண்டி, நாட்கணக்கிற்கு எட்டி எப்படியோ முடிவிற்கும் வந்துவிட்டது. தங்கள் இருப்பிடம் வந்ததும் இருவரும் செய்த முதல்வேலை தங்களின் வாதங்களுக்குச் சான்றாக இதுவரை காலமும் வைத்திருந்த அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தியதுடன், இருவருமே தங்கள் கொள்கைகளையும் மாற்றிக் கொண்டார்கள். உண்மை மட்டும் அப்போதும் இருவரையும் பார்த்து மௌனமாய்ச் சிரித்திருக்கும்.

இப்போது மீண்டும் Zen-இற்கே வருவோம். எப்படி இவர்களின் நிரம்பி வழிந்திருந்த குவளைகளிற்குள் மற்றவர்களின் தேநீர் நிரப்பப்பட்டது? பொதுவாக தர்க்க ரீதியில் சிந்தித்துப் பார்த்தால் தேநீரால் நிரப்பப்பட்ட குவளைக்குள் தேநீரை ஊற்றிக்கொண்டே இருந்தால், ஊற்றுவதில் பெருமளவு வெளியே சிந்தினாலும், ஏற்கனவே உள்ளே இருப்பதும் சிறிதுசிறிதாக அகற்றப்பட்டு ஒரு கால அளவையின் பின் புதிதாக ஊற்றப்பட்ட தேநீரே அங்கு செறிவுடன் சேர்ந்திருக்கும். அப்படியானால் ஏன் வெற்றுக் குவளைகளாய் வரச்சொல்கிறார்கள்? ஒருவேளை நீண்ட காலம் செல்லலாம் என்பதாலும், பெருமளவிலானவை விரயமாகிவிடும் என்பதினாலும் இருக்குமோ? அல்லது இப்படியெல்லாம் தர்க்கிப்பதால் எந்த உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமல் எமது காலமும் வீணாகிவிடுமோ?

சிந்தனையை ஊடறுத்து தன்பக்கம் திருப்பியது, உள்ளூர் நண்பன் ஒருவனின் அழைப்பு. (ஆவணி மாதத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்காக, இப்போதே Boonlay யில் நடக்கும் ஒத்திகைகளைப் பற்றிக் கூறுவதற்காக அழைத்ததாகப் பின்னர் அழைக்கையில் கூறியிருந்தான்.) அதே நேரத்தில் இன்னோர் தொலைதூர நண்பனிடமிருந்தும் அழைப்பு வரவே, உள்ளூர் அழைப்பினைத் துண்டிக்க வேண்டிய கட்டாயம். வழமையான அலம்பல்களின் பின்னர், “முக்தியடைய என்ன வழி?” என்கின்ற பதிவைப் பற்றி அலசத் தொடங்கினான். சொல்ல வந்த விடயத்தை பலதடவை தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டிருப்பதாய்க குறைப்பட்டான். பின்னூட்டமிட்டவர்களின் கருத்துக்களிலிருந்து, அவர்களனைவருமே நான் குறிப்பிட்ட கடவுளைப் பற்றியோ அல்லது “முக்தி” பற்றியோ தப்பாகவே புரிந்து கொண்டுள்ளார்கள் என்றான். இல்லையே! சிலர் சரியாகப் புரிந்து கொண்டிருப்பதாய்த்தான் எனக்குப் படுகிறது என்றேன். இல்லை அது Anonymous -கள். அவர்கள்கூட பட்டும் படாமலுமே பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் என்றான். நான் எனது பின்னூட்டங்களில் கூடுதல் விளக்கம் அளித்திருக்கவேண்டும் என்று குறைபட்டுக் கொண்டான்.

“நீ சொல்லுவ மச்சான், ஆனால் நான் ஊருக்கு அடிக்கடி போறனானடாப்பா.”

4 comments:

 1. பல்முனைகளில் அலசி சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துகள்

  ReplyDelete
 2. வெற்றுக் குவளைகளாக இருந்தால் உணமியைத் தேட வேண்டிய அவசியமே இல்லை,வலசு.
  தானாகவே நிரம்பும்.

  ReplyDelete
 3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 4. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்.
  //
  வெற்றுக் குவளைகளாக இருந்தால் உணமையைத் தேட வேண்டிய அவசியமே இல்லை,வலசு.
  தானாகவே நிரம்பும்.
  //

  ம்ம்ம்.....
  நிரம்புவது அனைத்துமே உண்மையாயிருக்கும் என்கிறீர்களா?

  ReplyDelete