Friday, June 19, 2009

இப்படியும் பூக்கலாம் நட்பு(பூ)


அகதிகள் என்றால் யார்?
என்ன, சிரிப்புத் தானே வருகிறது? “அந்த இனத்தில் இருந்து கொண்டே, என்ன நக்கலா?” என்று நீங்கள் முணுமுணுப்பது விளங்குகிறது (புரிகிறது).

சரி! அனாதைகள் என்றால்?
பெற்றோரை இழந்து நிர்க்கதியாய் நிற்பவர்கள். சரியா?

எங்கள் அனுபவங்களில் அகதிகளாக்கப்பட்டிருக்கிறோம். அனாதைகளாயும் ஆகியிருக்கிறோம் எம்மில் பலர். இருந்தபோதிலும் வாழ்க்கைச் சக்கரம் உருண்டுகொண்டேயிருக்கிறது. இல்லையா? எத்தனையோ கவலைகள், சந்தோஷங்கள், ஏக்கங்கள், ஆதங்கங்கள், எவ்வளவோ வலிகள், இழப்புகள், மரணங்கள், மனரணங்கள் இவ்வளவற்றையும் தாங்கி எது எம்மை வாழவைக்கிறது, என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

தாய், தந்தை, சகோதரங்கள், உறவுகள் அனைத்துமே எமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்றால் நிச்சயிக்கப்படுகிறது. அல்லது எழுமாற்றாக எமது பிறப்பு அவ்வாறு நிகழ்ந்து விடுகிறது. ஆனால் எம்மால் நிர்ணயிக்கப்படக் கூடியதாக எமது விருப்புவெறுப்புகளுக்கு இசைவானதாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியுமானால், அந்த உறவு நட்பாக மட்டுமே இருக்கமுடியும். குடும்ப உறவுகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாத பல பிரச்சனைகளுக்குக் கூட நட்பு வடிகாலாய் அமைகிறது. என்னைப் பொறுத்தவரை நண்பர்களே இல்லாதவர்கள் பிறப்பிலேயே சபிக்கப்பட்டவர்கள்.

உங்களில் யாருக்காவது உங்களின் முதல் நண்பன் அல்லது நண்பி யாரென்று நினைவிருக்கிறதா? எப்படி அந்த நட்பு உங்களிடையே உருவாகியது என்பது ஞாபகத்திற்கு வருகிறதா? அவருடனான நட்பு இப்பொழுதும் தொடர்கிறதா?

சரி, ஒருவருடன் எப்படி இந்த நட்பு மலர ஆரம்பிக்கிறது. ஒன்றாய்ப் படிப்பவர்கள், ஒன்றாய் வேலை செய்பவர்கள், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் இப்படியானவர்களிடம் இலகுவில் சினேகம் உண்டாகி விடுகிறது. சில வேளைகளில் ஒரே அமைப்பில் இருப்பவர்களிடையும் தோழமை ஏற்பட்டு விடுகிறது. அல்லது ஒரே தொழிலில் இருப்பவர்களிடையே தொழில் நிமித்தம் பழக்கம் ஏற்பட்டு, பின் அதுவே காலப்போக்கில் நட்பாய் விரிகிறது. இவற்றை விடுத்து, முன்பு பேனா நண்பர்கள், இப்போது மின்நண்பர்கள் (e-friends அல்லது internet friends என்பதற்கு இது சரியான தமிழ்ப்பதமாய் அமையுமா?) போன்றவர்களும் காணப்படுகிறார்கள். இவற்றைவிட வேறு எப்படி ஒரு நட்பெனும் பூ மலரக்கூடும்?



வழமையாக நான் பேருந்திலிருந்து இறங்கி வேலைத் தளம் நோக்கிச் செல்கையில், அருகிலிருக்கும் தொழிற்சாலைகளில் இரவுப்பணி முடித்து வீட்டிற்குச் செல்வோரைக் காணக்கூடியதாய் இருக்கும். அதில் சிலமுகங்கள், அட! இது நம்மாளு அப்படியென்று சொல்லக்கூடிய வகையில் எமது நிறத்தில், (குதிரைகள் போல, மகாத்மா காந்திக்கு நன்றி!) இருக்கும். அப்படியான சில முகங்களில் கூட ஒன்றிரண்டே, இது பழகுவதற்கு பிரச்சனையாய் இராது என்று மனதின் ஒப்புதலைப் பெறும். அப்படியான ஒர் முகத்தினை வேலைநாட்களில் தினமும் தரிசிக்கக் கூடியதாய் இருக்கும். அப்படி அந்த முகத்தினைக் காண நேர்கையில் மட்டும் மனம், அட இந்த முகத்தை நேற்றுக் கண்டனான் என்று நினைவுபடுத்திக் கொள்ளும். சில வேளைகளில் அது நேற்றல்ல போன கிழமையாகக்(சென்ற வாரம்) கூட இருக்கக்கூடும். அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் மனமந்தி வேறுநினைவுக் கிளைகளுக்குத் தாவி விடும்.

அட! தினந்தோறும் இவரைச் சந்திக்கின்றோமே என்கின்ற எண்ணத்தில், ஒரு நாள் சாடையாய் அவரைப்பார்த்துத் தலையசைத்தேன். அவர் உற்றுக்கவனித்திருந்தால் சிலவேளை தன்னைப்பார்த்துத்தான் தலையசைக்கிறேனோ என்கின்ற சந்தேகம் மட்டுமே ஏற்படும் வகையில் அந்தத் தலையசைப்பு இருந்தது. அவரிடமிருந்து எதுவித எதிர்வினையும் இன்றியே ஏதோ காற்றில் வந்த தூசிக்கு விலத்திய தலையாட்டலாய் அது போய்விட்டது. மறுநாள் காலையில் மீண்டும் முதல்தினத்தை விட சற்று அதிகமாய் தலையசைத்தேன். இது தனக்குத்தானோ என்கின்ற சந்தேகத்திலோ என்னவோ (அல்லது எனக்குத்தான் அப்படி ஒரு பிரமையோ?) என்னை ஒருமாதிரிப் பார்த்துவிட்டு எதவும் நடக்காததுபோல் அவர் சென்றுவிட்டார். எனக்கும் ஒருவித ஆர்வம் வந்தவிட்டது. மறுநாளும் அவ்வாறே. இம்முறை அவருக்கு தன்னைப் பார்த்துத் தான் தலையசைக்கிறேன் என்கின்ற சந்தேகம் வந்திருக்கும். பின் வாரஇறுதி விடுமுறைகளைக் கழித்துவிட்டுச் சென்றதில் அவரைப் பற்றிய நினைவுகளை மறந்து விட்டிருந்தேன். கடந்து சென்ற பின்னர்தான் கடந்த வாரத்து நினைவுகள் மீண்டுவந்தன. பின்னால் திரும்பினேன். அடடா! அவரும் தான். மறுநாள் சாடையாக சந்தேகத்துடன் இருவருமே தலையசைத்தக் கொண்டோம். நாட்கள் செல்லச்செல்ல தலையசைப்புடன் புன்னகைகளையும் பூக்கவிட்டுக்கொண்டோம். ஒருவார்த்தைகூட பேசியதில்லை. இந்தவாரம் முதல் நான்குநாட்களும் அவரைக்காண முடியவில்லை. எனது பயணங்களின் சிலநிமிடநேரத் தாமதங்கள் காரணமாய் இருந்திருக்கக்கூடும்.

இன்று காலையும் சற்றுத் தாமதமாகவே சென்றிருந்தேன். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வீதியினைக் கடப்பதற்காக நின்ற சமயம், மறுகரையில் அவர். பலமாகக் கைகாட்டி ஹாய் சொன்னார். பதிலுக்கு நானும் கைகாட்டினேன். நான் வீதியைக் கடக்கும் வரை காத்திருந்தவர், அருகில் சென்றதும்,
“you tamil-ஆ?” என்றார்.

“ஆமா! சொல்லுங்க. எப்பிடியிருக்கீ்ங்க?” என்றேன்.

சிறிதுநேர உரையாடலின்பின் நானும் தமிழ்நாடு என்கின்ற நினைப்பில்
“நீங்க பாலக்காடு பக்கமா?” என்றார்.

“இல்லைங்க, நான் யாழ்ப்பாணம்” என்றேன்.

“ஓ! அப்படியா? நீங்க பேசறதப் பார்க்கையிலயே கெஸ் (guess) பண்ணினேன். தப்பா எடுத்துக்காதீங்க” என்றார்.

“பரவால்லீங்க, பாண்டீல கூட நாம தமிழில பேசினா, கேரளாவா? என்னு தான் கேப்பாங்க” என்றேன்

“ஓ! நீங்க, அங்க இருந்திருக்கீங்களா?” என்றவர்,
“எப்படிங்க, இப்ப உங்க ஊரு நிலமை? என்னங்க எல்லாமே இப்பிடியாச்சே! ஆமா, நியூசில சொல்றதெல்லாம் உண்மையாங்க?, உண்மையிலேயே அவரு இருக்காருங்களா? இல்ல இறந்திட்டாருங்களா? முகாமில அடைச்சு வச்சிருக்கிறவங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் பிடிச்சக்கொண்டுபோய் கொல்லுறாங்களாமே?” ஆதங்கத்துடன் அவர் கேள்விகளை அடுக்கத் தொடங்கினார்.

எந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிவருமோ என்கின்ற தயக்கத்தில், இப்போதெல்லாம் நான் google chat மற்றும் yahoo messanger களில் பிறர் பார்வையினின்றும் மறைந்து (invisible) நிற்கின்றேனோ அந்தக் கேள்விகள் நெஞ்சைப் பிசையத் தொடங்கியது.

என் இனிய தமிழக நண்பர்களே! உங்களைப் போலத் தான் நாங்களும். சில வேளைகளில் எங்களிலும் விட உங்களுக்குத்தான் அதிகம் தெரிந்திருக்கும். அதற்கான வாய்ப்பும், வசதியும், தெரிந்துகொள்வதற்கான தயக்கமின்மையும் உங்களுக்கே அதிகம்.

(இப்போதுதான் அவர் பெயரை நானோ, இல்லை என்பெயரை அவரோ கேட்டுக்கொள்ளவில்லை என்பது நினைவிற்கு வருகிறது. வரும் வாரமும் காலைகள் விடியும் தானே!)

14 comments:

  1. என்னைப் பொறுத்தவரை நண்பர்களே இல்லாதவர்கள் பிறப்பிலேயே சபிக்கப்பட்டவர்கள்.//

    சத்திய பூர்வமான வார்த்தை,வலசு.

    நட்பும் காதலைப் போலத்தான்.காரணமின்றி நிகழ்வது.பகுத்தறிவினைத் தாண்டிய மாயம்.

    ReplyDelete
  2. உன்னை பார்த்த அந்த கணமே கெஸ் (guess) பண்ணினேன் நீ ஒரு நல்ல நண்பன் என்று ....!!!
    அதனால் உன் பெயரை கேட்கவில்லை

    அது வேலணை வலசு என்றாலும் பரவாயில்லை என்று

    நட்புடன்

    ஆரூரன்

    ReplyDelete
  3. நட்பு பற்றி நல்ல அலசல்

    ReplyDelete
  4. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன்.
    //
    நட்பும் காதலைப் போலத்தான்.காரணமின்றி நிகழ்வது.பகுத்தறிவினைத் தாண்டிய மாயம்.
    //
    உண்மைதான். ஆனாலும் ஒரு சின்ன வித்தியாசம் காதல் ஒருவர் மீதே [ஒரு நேரததில் :-)] உண்டாகும். நட்பு பலர் மீதும் உண்டாகலாம்.

    ReplyDelete
  5. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரன்
    //
    உன்னை பார்த்த அந்த கணமே கெஸ் (guess) பண்ணினேன் நீ ஒரு நல்ல நண்பன் என்று ....!!!
    அதனால் உன் பெயரை கேட்கவில்லை
    //
    நன்றி நண்பா

    ReplyDelete
  6. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  7. நட்பு இருகை ஓசை மாதிரி ஆனால் எந்த கை முதலில் தட்டுவது என்கிற தயக்கம் போல் ஸ்டார்டிங்க் ட்ரபுல் இருக்கும் !

    நாம பேசிப் பார்ப்போமே என்று இறங்கினால் பழக தொடங்குவார்கள்.

    நீங்கள் அதில் கைதேர்ந்தவர் போல ! வாழ்த்துகள் !

    ReplyDelete
  8. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோவி.கண்ணன்.
    //
    நட்பு இருகை ஓசை மாதிரி ஆனால் எந்த கை முதலில் தட்டுவது என்கிற தயக்கம் போல் ஸ்டார்டிங்க் ட்ரபுல் இருக்கும் !

    நாம பேசிப் பார்ப்போமே என்று இறங்கினால் பழக தொடங்குவார்கள்.
    //
    உண்மை தாங்க.

    ReplyDelete
  9. நல்ல பூ என்பதன் மருவல் தான் நட்புவோ? நல்ல பூ = நற் பூ = நட்பு?

    ReplyDelete
  10. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி rav.
    //
    நல்ல பூ என்பதன் மருவல் தான் நட்புவோ? நல்ல பூ = நற் பூ = நட்பு?
    //
    ஆகா!
    நட்பிற்கு புது விளக்கம்!!!!!!!!!!!!!

    ReplyDelete
  11. //உங்களில் யாருக்காவது உங்களின் முதல் நண்பன் அல்லது நண்பி யாரென்று நினைவிருக்கிறதா? எப்படி அந்த நட்பு உங்களிடையே உருவாகியது என்பது ஞாபகத்திற்கு வருகிறதா? அவருடனான நட்பு இப்பொழுதும் தொடர்கிறதா..

    காலத்தின் சுழிக்காற்றில் எல்லாமே மறந்து போய்விட்டது..
    John boscoவில் படிக்கும் போது, எனக்குத் தெரிந்து என் முதல் நண்பன்... ஆனால் அவன் இப்போ எங்கே என்று தெரியாது..
    ஆனால் பின்னர் சந்தித்த அனைத்து நண்பர்களும் நண்பிகளும் இன்னமும் தொடர்பில் இருக்கின்றார்கள்...

    உங்களுக்கு எப்படி?

    // நல்ல பூ என்பதன் மருவல் தான் நட்புவோ? நல்ல பூ = நற் பூ = நட்பு?

    நல்ல விளக்கம்... :)

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சுபானு.
    //

    காலத்தின் சுழிக்காற்றில் எல்லாமே மறந்து போய்விட்டது..
    John boscoவில் படிக்கும் போது, எனக்குத் தெரிந்து என் முதல் நண்பன்... ஆனால் அவன் இப்போ எங்கே என்று தெரியாது..
    ஆனால் பின்னர் சந்தித்த அனைத்து நண்பர்களும் நண்பிகளும் இன்னமும் தொடர்பில் இருக்கின்றார்கள்...

    உங்களுக்கு எப்படி?
    //
    எனது முதல் நண்பனுடனான தொடர்பு இப்போதும் தொடர்கிறது தொலைபேசியினூடாக, அவன் கனடாவில் இருந்தாலும்.

    வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆமா, இது எதுக்கு?

    ReplyDelete