'மிஸ்ரர் லிங்கம் வேக் அப். வேக் அப் மிஸ்ரர் லிங்கம்'
யாரோ என்னை உலுக்குவதை உணரமுடிந்தது. இமைகளைத் திறக்கமுடியாதவாறு பெருங்கனமொன்று வந்து அதன்மேல் குந்தியிருந்தது. உடலின் ஒருபகுதியையேனும் அசைக்கமுடியா இயலாமையில் தத்தளித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் அதேகுரல்
'ஆர் யூ ஓகே மிஸ்ரர் லிங்கம்? ற்றை ரு வேக் அப். யூ ஆர் ஓகே நௌ'
மிகுந்த சிரமத்துடன் இமைகளைத் திறக்கிறேன். ராசலெட்சுமி!
'வந்திற்றியா என்ரை ராசாத்தி!
'மிஸ்ரர் லிங்கம் மிஸ்ரர் லிங்கம். டொக்ரர் திஸ் பேஷன்ற் இஸ் லூசிங் ஹிஸ்....'
******
'என்ரை அல்லிராணி அரளிவிதைய அரச்சுக்குடிச்சிற்றுது எண்டு கேள்விப்பட்டோடண நான் துடிச்சுப் போய்ற்றன் தெரியுமா? ஏனடியாத்தை அப்பிடிச்செய்தனீ?'
'அதுக்காக இப்பிடியா மாட்டுவண்டிலக் கொண்டுபோய் பத்தைக்குள்ள விடுவீங்க? பாருங்க உடம்பெல்லாம் ஒரே கீறல் காயம். காலில வேற பத்துப்போட்டுக் கிடக்கு'
'நீ கதையை மாத்தாதையணை. ஏனெணை என்ரை குஞ்சு நஞ்சைக் குடிச்சது?'
'நஞ்சைக் குடிச்சதாலதானே இப்ப அப்பு உங்களைப் பாக்க விட்டவர்'
'தச்சலா(தற்செயலாக) ஒண்டு கிடக்க ஒண்டு நடந்திருந்தா?'
'நான் ஒரு எற்பன்தான் குடிச்சனான்'
'எண்டலுமெணை நஞ்சோடை ஆரும் விளையாடுறதே? தச்சலா உனக்கொண்டு நடந்திருந்தா?'
'அய்! அய்யான்ரை ஆசையைப்பாருங்கோவன். எனக்கொண்டு நடந்திருந்தா இன்னொருத்தியைப் பிடிக்கலாமெண்டு நினைச்சியளோ? நான் சாகிறதாயிருந்தா உங்களையும் கொண்டுபோட்டுத்தான் சாவன் தெரிஞ்சுகொள்ளுங்கோ?'
'ஏனடியாத்தை இப்ப இப்பிடியெல்லாம் கதைக்கிறாய்?'
'அப்ப சத்தம் போடாம படுங்க பாப்பம். இன்னும் ரெண்டுமாதத்தில பள்ளிக்கூட விளையாட்டுப்போட்டீல நீங்க வெல்லட்டா கூட்டாளிப் பெட்டையளிட்டை என்ரை மானம் போயிரும்'
'போனமுறை விளையாட்டுப் போட்டியிலதான் நீ என்னோட முதன்முதல் கதைச்சனீ ஞாபகமிருக்கோ?'
'அதுக்குப் பிறகு நீங்க எனக்குப் பின்னால வந்து பம்மினதும் ஞாபகமிருக்கு'
இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் அது. அஞ்சலோட்டத்தின் போது எமது இல்லத்தின் மூன்றாவது வீரர் தடக்கி விழவே மற்றைய இல்ல வீரர்களுக்கும் எங்களுக்கும் இடையே நீண்ட இடைவெளி உண்டாகிவிட, இறுதியாளாய்த், தோல்வி நிச்சயம் என்கின்ற உறுதியில் ஓடிக்கொண்டிருக்க. . .
'கமோன் லிங்கம் வேகமா ஓடுங்க! முன்னுக்குப் போற ஆக்களைப் பிடிச்சிரலாம். கமோன்'
குரல்கேட்டு இடப்புறமாய்த் திரும்ப, ராசலெட்சுமி! ஓட்ட வீரர்கள் குறுக்காகப் போகாமல் தடுப்பதற்காக இடையிடையே நிறுத்தப்பட்டிருந்த மாணவிகளில் ஒருத்தியாய். ஒருகணம் எனக்கே திகைப்பாகிப் போனது. ராசலெட்சுமிக்கு, எங்கள் பள்ளிக்கூடத் தேவதைக்கு, ஊரின் பேரழகிக்கு என்னை, எனது பெயரைத், தெரிந்திருக்கிறதா?
'கன்னியர் கடைக்கண் காட்டிவிட்டால் மண்ணில் காளையர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்'
உயிரைக் கொடுத்து ஓடுவது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படியொரு ஓட்டம். மயிரிழையில் மூன்றாமவனை முந்தி மூன்றாமிடத்தைத் தட்டிப்பறித்தேன். யாருமே எதிர்பார்த்திராத வெற்றி அது.
திகைத்துப் போயிருந்த நண்பர்களிடம் உண்மையைச் சொன்னேன். நம்ப மறுத்தனர். தாங்கள் பார்க்க ராசலெட்சுமியுடன் நான் உரையாடினால் கள்ளும் கள்ளக்கோழியும் தருவதாய்ப் பந்தயம் கட்டினார்கள்.
கொஞ்சம் அழகிகளுக்கே திமிரிருக்கும் எங்கள் ஊரில், எழில் கொஞ்சும் ரதியாய், அழகிகளின் ராணியாய்த் திகழும் ராசலெட்சுமி மட்டும் அதற்கென்ன விதிவிலக்கா? படிப்பில் பெயரெடுத்த பல மாணவர்களையே எடுத்தெறிந்துபேசி செருப்பைக் கழற்றிக் காட்டுபவள் வெறும் ஓட்டக்காரனான என்னை ஊக்கப்படுத்தியதை நான்கூடத்தான் நம்பத் தயாராயிருக்கவில்லை.
வெள்ளி அல்லது சனி இரவுகளில் ஈரச்சாக்குப் போட்டுப் பிடிக்கும் கோழியை மறுநாள் மதியம் நண்பர்களுடன் தனியிடத்தில் நெருப்பில் வாட்டி கள்ளுடன் சேர்த்தடிக்கும்போது வரும் ஒருவித போதை தரும் சந்தோஷத்திலும், இதைச்சாட்டாய் வைத்து ராசலெட்சுமியுடன் ஒருமுறை உரையாடிவிடலாம் என்பதே மனதிற்கு மகிழ்ச்சியாயிருந்தது.
பந்தயப்படி மறுநாள் பள்ளிக்கூடம் முடிவடைந்தது வீடுசெல்லும் போது அவளைப் பின்தொடர்ந்தோம். நண்பர்கள் விலகி நிற்க நான் அவளை நெருங்கினேன்.
காலடியோசை கேட்டு நின்று திரும்பி முறைத்தாள்.
'அம்மாணை செருப்பைக் கழட்டிப் போடாதையும் ஐசே! பெடியளோட பந்தயம் கட்டினபடியாலதான் உம்மோடை கதைக்க வந்தனான். நீர் என்னோடை கதைக்கத் தேவையில்லை. சும்மா கதைக்கிற மாதிரி நடிச்சாலே காணும். நான் பந்தயத்தில வெண்டிருவன்'
'ம். அவ்வளவு பயமிருந்தாக் காணும்'
'நான் ஓடேக்குள்ள நீர் எனக்கு கமோன் சொன்னீர் என்று சொல்ல ஒருத்தரும் நம்பயில்லை. நீர் சரியான திமிர் பிடிச்சனீராம். பெடியளோட கதைக்கமாட்டீராம் எண்டுசொல்லி என்னைப் பொய்யன் எண்டுறாங்கள்'
'ஏன் என்னைப்பார்த்தா திமிர்பிடிச்சவள் மாதிரயா இருக்கு?'
'ஐயையோ. அம்மாண நான் அப்பிடிச்சொல்லேல்ல. மற்றப் பெடியள்தான் அப்பிடிச் சொன்னவங்கள்'
'வேறென்ன சொன்னவங்கள்?'
'நீர் நல்ல வடிவெண்டு உமக்குப் பெரிய எண்ணமாம்.'
'ஏன் அப்ப நான் வடிவில்லையோ?'
'இஞ்ச பாரும் ஐசே! நான் ஒண்டுமே சொல்லேல்லை. அவங்கள்தான் எல்லாம் சொன்னவங்கள்?'
'அப்ப உமக்கு நான் வடிவான ஆளாத் தெரியேல்லை என?'
அவள் முறைப்பது தெரியவே நான் தடக்கியது உறைத்தது.
'இல்லையில்லை நீர் சரியான வடிவு. உம்மைப்போல இவ்வளவு வடிவான ஒரு பெட்டையை நான் பார்த்ததேயில்லை'
'அப்ப இதுவரைக்கும் எத்தனை பெட்டையளைப் பார்த்திருக்கிறீர்?'
'என்ன நீர்? நான் அப்பிடியான ஆளில்லை' முகத்தில் கோபத்தைக் காட்டினேன்.
'இதென்ன நீர்? லூசு மாதிரி. இதுக்கேன் கோவிக்கிறீர்?'
'ஓம் நான் லூசுதான். அவங்களோட பந்தயம் கட்டி உம்மோடை வந்து கதைச்சன்பாரும்'
'அப்ப அவங்களோட பந்தயம் கட்டியிருக்காட்டி என்னோட வந்து கதைச்சிருக்க மாட்டீரோ?'
'நான் ஏன் உம்மோடை வந்து கதைக்கிறன். நீரும் உம்மடை திமிரும் உம்மோடையே இருக்கட்டும் எண்டு விட்டிட்டிருந்திருப்பன்'
'அப்ப உங்களுக்கு உண்மையா என்னில விருப்பமில்லையா?'
அவள் குரல் கரகரத்திருந்தது. இவ்வளவு நேரமும் என்னை நீர் என்று அழைத்தவள் இப்போது நீங்கள் என்கிறாள். அப்படியானால் இவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா? வயிற்றினுள் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கத் தொடங்கின.
'விருப்பம் இல்லாமலா உம்மோடை வந்து இவ்வளவு நேரமும் கதைச்சுக் கொண்டிருக்கிறன்?'
'இல்லை. நீங்க பொய் சொல்லுறீங்க. உங்களுக்கு என்னில விருப்பமில்ல. இனி என்னோடை கதைக்க வேண்டாம். நான் போறன்'
முகத்தைத் திருப்பிக்கொண்டு புறப்பட்டாள். அவள் நயனங்கள் இரண்டிலும் இரு கண்ணீர் முத்துக்களை நான் கண்டேன்.
காதலுக்கும் கண்ணில்லை. காதலில் வீழ்ந்திருப்பவர்கட்கும் கண்ணில்லை. ஆனால் மற்றவர்களுக்கு இருக்கிறதே
ஊருக்குள் காதலிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. சிலமாதங்களிலேயே எங்கள் காதல் அவள் தந்தைக்குத் தெரியவர ராசலெட்சுமியின் பள்ளிப்படிப்பு நிறுத்தப்பட்டது.
சனி ஞாயிறு காலைகளில் சந்தைக்குச் சென்றுவிட்டு வரும் வழியினை ராசலெட்சுமியின் வீட்டினருகாக வருவதற்கும். வீட்டிற்கு அடுத்துள்ள பனங்காணியினுள் ஓய்வெடுப்பதற்கும் வண்டில்மாடுகள் பழகிவிட, அவள் தந்தை அவளை வீட்டின் முற்றத்திற்குக் கூட வரவிடாமல் சிறைவைக்க அவள் அரளிவிதையினை விழுங்கியிருந்தாள்.
ராசலெட்சுமி அரளி விதையை அரைச்சுக் குடிச்சிற்றாளாம் எண்டு கேள்விப்பட்டவுடன் சந்தைக்குக் கொண்டு சென்றிருந்த வெங்காயத்தை அப்படியே விட்டுவிட்டு மாடுகளை அரையும் குறையுமாக வண்டிலில் இழுத்துக் கட்டிவிட்டு மாடுகளை அவளின் வீட்டை நோக்கி விரட்டிய போதுதான் நுகத்தடியிலிருந்து ஒரு மாடு விலக வண்டி முட்பற்றைக்குள் சாய்ந்தது.
நன்றி தாய்வீடு - ஏப்ரல் 2021
(தொடரும்)
No comments:
Post a Comment