Monday, May 3, 2021

காலுங் காதலும் (2)

இம்முறை நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் நானிருந்தேன். நடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவதென்பது நினைத்தே பார்க்கமுடியாத காரியம். இந்நிலையையிட்டு என்னிலும் அதிகம் வருந்தியது ராசலட்சுமிதான். அவளுடைய இராசிதான் என்னால் இம்முறை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று ஞானவதி பகிடியாக ராசலெட்சுமியிடம் கூறப்போய் அது பெரிய பிரச்சினையில் போய் முடிந்தது.

ராசலட்சுமியைத் தவிர்த்து மேலும் ஐந்து ஜீவன்களும் என்னுடைய நிலையை எண்ணித் துக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் வேறுயாரும் அல்ல. அப்புவும் அம்மாவும் என் மூன்று தங்கைகளும் தான். அம்மாவின் வேண்டுதலோ அல்லது ராசலட்சுமியின் வேண்டுதலோ அல்லது ஒட்டகப்புலத்து முறிவு நெறிவு வைத்தியரின் திறமையாலோ தெரியாது அடுத்த சில மாதங்களில் நான் பூரணமாகக் குணமடைந்தேன்.

நான் பூரண குணமடைந்த சில மாதங்களில், துலா மிதித்துக் கொண்டிருந்த அப்பு தவறி விழுந்து தன் கைகளையும் கால்களையும் உடைத்துக் கொண்டார். குடும்ப வண்டிலை இழுக்க வேண்டிய பொறுப்பு எள் தோள்களில் வீழ்ந்தது. எஸ். எஸ். சி சோதனை எடுப்பதற்கு மூன்று மாதங்கள் இருப்பதற்குள் என் பாடசாலை வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டாலும் அது எங்கள் காதலிற்கு வெறும் காற்புள்ளியாக மாத்திரமே அப்போது தெரிந்தது.

வீட்டில் வறுமையும் தன் தலையை விரித்துக் கொண்டு வந்து குடிகொண்டது. இம்முறை வெங்காயச் செய்கையும் பெரிதாய் வாய்க்கவில்லை. அப்பு ஓரளவிற்குத் தேறி நடக்கத் தொடங்கியிருந்தாலும் மண்வெட்டி பிடிக்குமளவிற்குத் தேறியிருக்கவில்லை. வீட்டில் எந்நேரமும் புறுபுறுத்துக் கொண்டேயிருந்தார். இடையிடையே கள்ளுத் தவறணையில் அவரைக் காணக்கிடைப்பதாய் நண்பர்கள் வந்து சொன்னார்கள். இவ்வாறே சில வருடங்கள் உருண்டோடின. வறுமையின் பிடியிலிருந்து எந்த விடியலும் தோன்றுவதாய்த் தெரியவில்லை.

என்ன வாழ்க்கையடா இது என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில்தான்,

”நீயும் என்னோட வாவன் கிளிநொச்சிக்கு போவம். அங்க திருவையாத்துப் பக்கம் நிறையக் காணிகள் சும்மா கிடக்காம். நாங்க போய் அதுகளை வெட்டித் துப்பரவாக்கித் தோட்டம் செய்யலாமாம். காணியும் எங்களுக்கே வந்திரும் எண்டுறாங்கள்”

என்று ஒன்றுவிட்ட மாமா முறையிலான அயலவர் ஒருவர் அழைக்க நானும் அங்கு போகலாம் என முடிவெடுத்தேன். அதனை ராசலட்சுமியிடம் கூறிய போது அவள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து அடம்பிடித்தாள். அங்கு நான் சென்று விட்டால் தன்னை நான் மறந்து விடுவேன் என்று கூறி அழுதாள். நானும் எனது குடும்ப நிலையைினை அவளுக்கு விளங்கும் படி எத்தனையோ தடவைகள் எடுத்துக் கூறி, நிச்சயம் நான் அவளை மறக்க மாட்டேன் என்று அம்மா மேல் சத்தியமும் செய்தேன்.

”உந்தச் சத்தியத்தையெல்லாம் நான் நம்ப மாட்டன்.”

”இதுக்கும் மேல என்னண்டடியப்பா உன்னை நான் நம்ப வைக்கிறது?”

”ம்… ம்…ம்… அபபடியெண்டா உங்கட இந்தக் காலுகள் மேல சத்தியம் செய்யுங்கோ பாப்பம். அப்ப நான் உங்கள நம்பிறன்”

எனககுச் சிரிப்பாய் வந்தது.

”ஏனடியாத்தை! போயும் போயும் காலில போய்ச் சத்தியம் பண்ணச் சொல்லிக் கேக்கிற?”

”ஆ! ஏனெண்டா நீங்க ஓடேக்குள்ள உங்கட இந்தக் காலுகளைப் பாத்துத் தான் எனக்கு உங்களிலயே ஆசை வந்தது. உங்கட காலுகள் சரியான வடிவு தெரியுமா?”

எனக்கு நம்புவதா விடுவதா என்று தெரியவில்லை. ஆயினும் அவளைச் சமாதானம் செய்வதற்காக என் கால்களின் மேல் சத்தியம் செய்தேன்.

”நான் இன்னும் ஒண்டும் என்ர மனசில நினைச்சிருக்கிறன். அதுக்கு என்ர அப்பு மட்டும் ஓமெண்டிட்டார் எண்டால் நல்லாயிருக்கும். ஆனா அப்பூட்ட எப்பிடிக் கதைக்கிறதெண்டுதான் தெரியேல்ல.

என்று கூறிவிட்டு ராசலெட்சுமி சென்றுவிட்டாள். இப்படி என்னதான் வில்லங்கமாக அவள் யோசிக்கிறாளோ என்ற எண்ணத்துடன் நானும் வீட்டுக்குத் திரும்பினேன்.

மறுநாள் மாலை ராசலெட்சுமியின் தாயும் தந்தையும் எம் வீட்டிற்குத் திடீரென வருகை தந்தனர். இதை எங்கள் வீட்டில் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்களை வரவேற்கக் கூடிய நிலையில் எங்கள் வீடும் இருக்கவில்லை. வீட்டின் முற்றத்தில் கிடந்த கோழிப் பீக்களை மணலைக் காலால் தட்டி மூடினேன். முற்றத்தில் சற்றுத் தள்ளிப் படுத்திருந்த மாட்டினை எழுப்பி தள்ளிப் போகச் செய்ய, அது சனியன் வாலைத் தூக்கிச் சாணியைப் போட்டது. எனக்கோ மானம் கப்பல் ஏறிக்கொண்டிருந்தது.

பின்வளவிற்குள் நின்றிருந்த அம்மாவைக் கூப்பிட்டேன். அம்மாவும் எனது காதல் பற்றி அரசல்புரசலாக அறிந்திருந்தார். இவர்களைக் கண்டதும் அம்மாவிற்கு காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை. அவர் போய்க், குடித்துவிட்டு வந்து படுத்துக் கிடந்த அப்புவைத் தட்டி எழுப்பினார்.

அதன் பின் நடந்தவை யாருடைய வாழ்க்கையிலுமே நடக்கக் கூடாதவை. விடுப்புப் பார்ப்பதற்காக அயலட்டங்கள் வீதியில் கூடிவிட்டிருந்தனர். அதன் பின்னர் ராசலட்சுமியின் முகத்தில் எப்படி என்னால் விழிக்க முடியும். அவளிடம் சொல்லாமலேயே நான் திருவையாறுக்குப் புறப்பட்டு விட்டேன்.

ஊரினதும் ராசலட்சுமியினதும் ஞாபகங்கள் என்னைப் பாடாய்ப் படுத்தின. ஞாபகங்களில் தொல்லையிலிருந்து என்னை விடுவிப்பதற்காய் அதிக நேரத்தினைத் தோட்ட வேலைகளில் செலவழித்தேன். காடுகள் வெட்டித் துப்பரவாக்கி எனக்கென்றொரு குடிலும் கட்டி முழு நேரமும் தோட்ட வேலைகளில் மூழ்கியதால் எதிர்பார்த்ததை விட அமோக அறுவடை.

ஏறத்தாழ ஆறு மாதங்களின் பின்னர் ஊருக்குத் திரும்பினேன். ஊரிலிருந்து புறப்படும் முன்னர் நடந்த நிகழ்வுகளால் மனம் சஞ்சலப்பட்டாலும், அதை இப்போது அனேகமானோர் மறந்துவிட்டிருப்பார்கள் என்ற ஒரு நப்பாசை மனதினுள்.

ஆனால் நான் அறிந்த செய்தியோ என் இதயத்தைக் காரை முள்ளால் தேய்த்தது போலிருந்தது. என்ர ராசலட்சுமி என்னை விட்டிட்டு ஏன் இந்தக் கேவலமான உலகை விட்டிட்டே நிரந்தரமாகப் போய்விட்டாள். அரளி விதை அவளுக்குப் புதியதில்லைத்தான். ஆனாலும் என்ரை அல்லிராணியை அரளிராணி கொன்று விட்டாள். தான் போவதாய் இருந்தால் என்னையும் கொன்றுவிட்டுத்தான் போவேன் என்று சொல்லியிருந்தாள். அப்போது தெரிந்திருக்கவில்லை இப்படி என்னை உயிருடன் கொன்றுவிட்டுப் போவதைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள் என்று. என்னை நடைப்பிணமாக்கி விட்டு அவள் போயே போய்விட்டாள்.

என் சோகமெல்லாம் கோபமாய் மாறி என் அப்புவின் மேல் பாய்ந்தது. இதுவரை அப்புவை எதிர்த்து ஒருவார்த்தை பேசியறியாத நான், கண்டபாட்டுக்கு அவரை ஏசத் தொடங்கினேன். அதைக்கண்டு அம்மா தான் மாரிலடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள். அதைத் தொடர்ந்து மூன்று தங்கைகளும் அழத்தொடங்க எனக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது.

அண்டைக்கு மட்டும் அப்பு குடிக்காமலிருந்திருந்தால் வந்திருந்தவர்களையோ அல்லது ராசலட்சுமியைப் பற்றியோ கேவலமாக் கதைத்திருக்க மாட்டார் என்றே இப்போதும் தோன்றுகிறது. அவர்கள் திடீரென்று வந்து திருமணம் பற்றிக் கதைத்ததும், நான் கூடத்தான் திக்குமுக்காடிப் போயிருந்தேன். என் வயதொத்த ஒரு சிலர் அப்போது  திருமணம் முடித்திருந்தாலும், மூன்று தங்கைகளை அடுக்கடுக்காய் வீட்டினுள் வைத்துக்கொண்டு என் திருமணத்தைப் பற்றி எண்ணிப் பார்ப்பதென்பது அதிலும் எமது இந்த வறுமை நிலையில் இதுவெல்லாம் கொஞ்சம் கூடச் சாத்தியமேயில்லாத ஒன்று.

எனக்கு வீட்டில் யாருடனும் பேசப்பிடிக்கவில்லை. அம்மாதான் தங்கைகளைக் கரை சேர்க்க வேண்டியது என் பொறுப்பென்றும் அப்புவால் எதுவும் முடியாதென்றும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார். ஊரிலிருக்கப் பிடிக்காததால் நான் மீண்டும் திருவையாற்றுக்கே சென்று விட்டேன். ஓரளவு நிதிநிலை தேறியவுடன் மூத்த தங்கையின் திருமணத்தை நிறைவேற்றினேன். அது நடந்து சில வாரங்களிலேயே அப்புவும் போய்ச் சேர்ந்தார்.

இரண்டாவது தங்கையின் திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்த போது ஊரில் நிலைமைகள் மாறியிருந்தன. ஊரில் பல இளைஞர்கள் தலைமறைவாகியிருந்தார்கள். அடிக்கடி இரவுகளில் இராணுவத்தினர் வந்து வீடுகளில் சோதனை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனால் அம்மாவும் கடைசித் தங்கையும் ஊரில் தனித்திருக்கப் பயப்பட்டனர். எனவே நானும் அவர்களுடனேயே தங்கவேண்டியதாகிப் போனது.

சில மாதங்களில் திருநெல்வேலி தபாற்கட்டைச் சந்தியடியில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலை அடுத்து நாடு முழுதும் பீதியில் உறைந்து போயிருந்தது. அப்போதைய ஒரு இரவில் வீட்டிற்கு வந்த இராணுவத்தினர் என்னையும் அடித்து உதைத்துக் கைதுசெய்து தம்மோடு கொண்டு சென்றனர். சில மாதங்களில் நான் விடுவிக்கப்பட்டதும் கடைசித் தங்கையின் திருமணத்தை ஒருமாதிரி ஒப்பேற்றிவிட்டு ஊரிலிருக்கப் பிடிக்காமல் ஏஜென்சிக்காரன் ஒருவனைப் பிடித்து வெளிநாட்டிற்குக் கிளம்பினேன். முதலில் ஜேர்மனியில் தஞ்சமடைந்திருந்தேன். பின் அங்கிருந்து கப்பலேறிக் கனடாவை வந்தடைந்தேன்.

இப்போது அம்மா எனது திருமணத்தைப் பற்றி அதிகம் வற்புறுத்தத் தொடங்கினார். ராசலட்சுமியின் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்ப்பதற்கு என்னால் முடியாமலிருந்தது. ஆயினும் வருடங்கள் சில செல்ல இங்கே வந்த ஏனையவர்களின் நடவடிக்கைகளைக் கண்ட பின்னர் எனது மனதிலும் சலனங்கள் ஏற்படலாயின. ஆயினும் திருமண பந்தத்தில் இணைவதைத் தவிர்த்துக் கொண்டேன். உறவு கொண்ட பெண்களின்றில்லை, வேறு எந்தப் பெண்ணுடனும் என்னால் மனதால் நெருங்க முடியாதிருந்தது. இடையில் அம்மாவும் இறந்துபோக எனக்கென்ற உறவுகள் இனியில்லை என்கின்ற எண்ணம் மனதில் ஆழமாக வேரூன்றியது.

அப்பாவின் குடிபோதையால் ராசலட்சுமியை இழந்த நான், இன்று எனது தனிமையைத் தவிர்ப்பதற்காய் குடிபோதையில் மூழ்கத் தொடங்கினேன். விளைவு தெரிந்தது தான். எனது தனிமையைக் கலைத்து சர்க்கரை வியாதியும் வந்து என்னுடன் ஒட்டிக் கொண்டது.

இன்சுலின் இன்றி வாழ்க்கை இனியில்லை என்கின்ற நிலையில் காலங்கள் உருண்டன.

திடீரென ஒருநாள்  எனது வலது உள்ளங்காலில் விறைப்புத் தன்மையை உணர்ந்தேன். அதனுடன் சேர்ந்து ஒருவித இனந்தெரியாத வலி அல்லது குறுகுறுப்பு என் உள்ளங்கால் முழுதும் பரவியது. எனது காலைத் தரையிலேயே குத்திக் குத்திப் பார்த்தேன். அந்த உபாதை போவதாய்த் தெரியவில்லை. எமர்ஜென்சிக்கு வந்து காட்டினேன். வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்.

எனது உள்ளங்காலின் உள்ளே புண்ணொன்று புரையோடிப் போயிருப்பதாய்ச் சொன்னார்கள். இன்னமும் ஏதேதோவெல்லாம் சொன்னார்கள். ஈற்றில் என் காலின் முழங்காலுக்குச் சற்றுக் கீழே உள்ள பகுதியிலிருந்து வெட்டியகற்ற வேண்டுமென்றார்கள்.

அப்போதுதான் ராசலட்சுமிக்குச் செய்துகொடுத்த சத்தியம் நினைவிற்கு வந்தது.

ராசாத்தி, நீ ஆசைப்பட்ட கால்! 

(முற்றும்)
நன்றி: தாய்வீடு - மே 2021

No comments:

Post a Comment