Tuesday, November 10, 2020

மனிதன் படைத்த குரங்கு (5)


கணினித் திரையில் தோன்றிய ஓலைச்சுவடிகளின் எழுத்துக்களைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. தமிழ்ப்பிராமியையோ வட்டெழுத்துக்களையோ சிறிதேனும் ஒத்ததாக அல்லாமல் அவையிருந்தன. எனக்கோ மண்டை காய்ந்தது. நீண்ட யோசனையின் பின்னர் அந்தப் படங்களில் காணப்படும் வரிவடிவங்களை முதலில் அடையாளம் காணம் நோக்குடன் பட-வகைப்பாடாக்கும் (image classification) செய்வதற்கான செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டினை (Artificial Intelligent processing) செயற்படுத்தினோம்.

இச்செயல்முறையினூடாக முப்பத்தெட்டு (38) வகையான வரிவடிவங்களை அடையாளங்காணக்கூடியதாக இருந்தது. பின்னர் தொடக்ககால மறைகுறியாக்க உத்தியினைப் (decryption method) பயன்படுத்தி இவ்வெழுத்துக்கள் ஒவ்வொன்றும் இந்தப்படங்களில்  காணப்படும் நிகழ்தகவினை (probability), தற்காலத்தில் கிடைக்கும் சித்தர் இலக்கியங்களில் காணப்படும் எழுத்துக்களின் நிகழ்தகவோடு ஒப்பிட்டும், அதன் பின்னர் அப்படங்களில் அவதானிக்கப்பட்ட ஒவ்வொரு சொற்களின் முதலெழுத்துக்களை ஆராய்ந்தும் ஓரளவிற்கு எம்மால் அவ்வரிவடிவங்களில் பலவற்றை  உய்த்துணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

பெரும்பாலான வரிவடிவங்களை உய்த்துணர்ந்த பின்னர் ஏனைய வரிவடிவங்களை அடையாளங்காண்பது சாதாரணமான புதிர்ப்போட்டியாகவே இருந்தது. கீறிட்ட இடங்களை நிரப்புவதுபோல் ஒவ்வொரு எழுத்தாக இட்டு நிரப்பி அது கருத்துள்ள ஒரு சொல்லை உருவாக்குகின்றதா என்பதைக் கண்டறிந்து பின்னர் அவ்வெழுத்து ஏனைய இடங்களிலும் சரிவரப் பொருந்துகின்றதா என்பதனை வாய்ப்புப்பார்த்து உறுதிப்படுத்துவதற்கான நிரலிகளையும் உருவாக்கி முடிக்கவே எமக்கு இருவாரங்களாகி விட்டிருந்தன.

இந்தக்காலத்திற்குள் எனக்கு இந்த வேலையில் அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டிருந்தது. இதனைக் கண்டுபிடித்து நான் என்னத்தைச் சாதிக்கப்போகின்றேன்? அல்லது எனக்குத்தான் இதனால் என்ன பலன் கிடைக்கப் போகின்றது? என்கின்ற எண்ணங்கள் எழுந்து ஓர் ஆயாசத்தை எனக்குள் உருவாக்கின.

இவ்வுலகைப் பொறுத்தவரைக்கும் நான் என்றைக்கோ இறந்து விட்டவன். எனவே இதைக்கண்டுபிடித்தாலும் அந்தப்பெருமை என்னைச் சேரப்போவதில்லை. நானும் ஒரு இயந்திரப்பொறியாக இந்தப்பொறியினால் கையாளப்படுகின்றேனே தவிர எனக்கென்று தனிப்பட எந்தவொரு ஆதாயமோ அனுகூலமோ விளையப்போவதில்லை. வேளாவேளைக்கு சாப்பாடும் நீராகாரங்களும் மட்டும் தவறாமல் கிடைத்துவிடுகின்றது. இந்தச்சாப்பாடு சாப்பிட்டு நாக்கிற்கும் அலுத்துப்போய்விட்டது. எனக்கே எனக்கென்றான தனிமையும் இங்கே கிடையாது. இவைபோன்ற காரணங்களினால் நான் உளச்சோர்விற்கு ஆளாகிக் கொண்டிருப்பது புரிந்தது. ஆயினும் அதிலிருந்து விடுபட மனமுமின்றி வழியுமின்றி இருந்தேன்.

நான் உளச்சோர்வுற்றிருப்பதை அந்தக்குரங்கும் மனிதப்பொறியும் உணர்ந்துகொணடிருக்க வேண்டும். அவை வந்து என்னை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

நீ உன் செயல்களின் விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றாய். பகவத்கீதையில் கிருஷ்ணன் என்ன சொல்கின்றான் என்பது உனக்குத் தெரிந்ததுதானே. பின் எதற்காக உன்உளம் சோர்வடைகின்றது என்று தொடங்கியது அந்தக்குரங்கு.

கீதாவுபதேசம் கேட்ட அருச்சுனனே பதின்மூன்று நாட்களில் அபிமன்யு இறந்ததையறிந்து சோகத்தில் மூழ்கவில்லையா? வாழ்வில் பிடிப்பிழந்ததாகப் புலம்பவில்லையா? நீங்களானால் என்னை என் குடும்பத்திடமிருந்து வலிந்து பிரித்து வைத்திருக்கின்றீர்கள். அருச்சுனனுக்கு மகனையிழந்தாலும் தன் வீரத்தைப் பறைசாற்றிப் பெருமைசேர்க்கும் பேறிருந்தது. ஆனால் எனக்கு?

நீ நிக்கலஸ் ரெஸ்லா பற்றிக் கேள்விப்படவில்லையா? அவர் இருக்கும் காலத்தில் அவரின் பெருமைகள் மறைக்கப்பட்டிருந்தன. அவரின் கண்டுபிடிப்புகளைப் பிறர் உரிமை கோரியிருந்தனர். அவர் இவையெதையுமே கணக்கிலெடுக்காமல் உலகிற்கே இலவச மின்சாரம் வழங்க முயற்சித்ததை நீ அறியவில்லையா? இன்று மின்சாரக் கார்களுக்கு அவரின் பெயரினை வைத்து எலன் மாஸ்க் அழகு பாரப்பதை அறிந்திருப்பாய்தானே? தோமஸ் அல்வா எடிசனின் மோசடிகளும் அம்பலத்திற்கு வருவதை அறிந்திருப்பாய். பின் எதற்காக வருத்தப்படுகின்றாய்? வரலாற்றில் நின்பெயரும் நிலைபெறும். கவலையடையாதே.

நான் எதுவும் பேசாதிருந்தேன்.

வரலாற்றில் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட வரலாற்று நாயகர்கள் காலம் கடந்தாவது மீண்டும் வெளிக்கொணரப்படுவார்கள். எனவே நீ பலனைப் பற்றி நினைக்காமல் உன் கடமையைச் செய். விளைவுகள் அல்ல வாழ்க்கை. விழைவும் அதை விளைவிக்கச் செய்யும் செயல்களுமே வாழ்க்கை. வாழ்க்கை என்பது குட்டை போன்று ஓரிடத்தில் தேங்கிக்கிடப்பதல்ல. அது ஒரு நதி போன்று இறப்பெனும் கடலை அடையும் வரை ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

என்னதான் நீ சொன்னாலும் என்மனம் உற்சாகம் பெறமுடியாமல் உளச்சோர்வடைந்தே இருக்கின்றது.

உன் உளச்சோர்வைப் போக்கும் வழி எனக்குத் தெரியும் என்றவாறே இடைபுகுந்து கண்சிமிட்டியது மனிதப்பொறி.

உனக்கொரு துணை தேவைப்படுகின்றது என்று ஊகிக்கின்றேன். அனும பக்தனான இந்தக் குரங்கால் அதை அனுமானிக்கு முடியாமல் இருக்கிறது. என்ன? நான் சொல்வது சரிதானே? என்று சொல்லி மீண்டும் கண்ணடித்தது அந்த மானிடப்பொறி.

உனக்கு என்னுடன் தனகாமல் இருக்க முடிவதில்லை. என? என்றது அந்த மனிதக் குரங்கு.

உன்னுடன் தனகாமல் இந்தச் சிடுமூஞ்சியிடனா தனக முடியும் என என்னையும் இழுத்தது அந்த மானிடப்பொறி.

ஏனோ தெரியவில்லை. எனக்கு அந்தக்குரங்கையும் மானிடப்பொறியையும் பார்க்கும் போது ஒரு தாத்தாவையும் அவரின் பேரனையும் பார்ப்பதாகவே இப்போதெல்லாம் தோன்றத் தொடங்கியிருந்தது. தாத்தாவிடம் பேரனுக்கில்லாத உரிமையா என்பதுபோல் அம்மானிடப்பொறியும் அந்தக்குரங்கை எந்நேரமும் சீண்டிக்கொண்டேயிருக்கும். அந்தக்குரங்கும் அம்மானிடப்பொறி செய்யும் அனைத்துக் சேட்டைகளையும் இரசித்தவாறே எதுவும் பேசாமல் இருக்கும். அவையிரண்டும் தங்களுக்குள் ஐக்கியமாகியிருப்பது போன்று என்னுடன் நெருங்கிப் பழகுவதில்லை. எனக்கும் அவற்றுடன் அதிக நெருக்கம் காட்டுவதில் ஆர்வமும இருக்கவில்லை.

உனக்கு ஒரு துணைக்கு நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம் என்றது அம்மானிடப்பொறி.

இல்லைத் தேவையில்லை. எனனைப்போல் இன்னுமொருவரை அவரது குடும்பத்திடமிருந்து பிரித்து விடாதீர்கள். எனக்கு அந்தப் பாவம் வேண்டாம் என்றேன்.

நீ புத்திசாலிதான். பாராட்டுகின்றேன். என்றவாறே என்னைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தது அம்மானிடப்பொறி.

எதற்காக இப்போது சிரிக்கின்றாய் என்றேன் கொஞ்சம் சினத்துடன்.

உன் மொழி ஆழுமையைப் பார்த்து நான் வியக்கின்றேன்.

அப்படி என்ன மொழியாழுமையைக் கண்டுவிட்டாய் என் பதிலில்?

இன்னுமொருவனை என்றோ ஒருத்தியை என்றோ நேரடியாகச் சொல்லாமல் ஒருவரை என்று பொதுப்பாலில் சொல்லி நீ எம்மை ஆழம் பார்ப்பதை இத்தனைநாட்கள் உன்னுடன் பழகிய பின்னர் அறியமுடியாமல் இருப்பேனா?

அறப்படிச்ச மூஞ்சூறு கழனிப்பானைக்குள்ள விழுந்துதாம். அறப்படிச்சால் உப்பிடித்தான் கண்டதையும் கடியதையும் யோசிக்கத் தோன்றும்.

அது அறப்படிச்ச மூஞ்சூறு இல்லை. அறவடித்த முன்சோறு.

சரி. இது இனி பழமொழிகளை வைத்து அலுப்படிக்கப் போகின்றது. மனதுக்குள் கடுப்பேறியது.

எனது முகம் கடுத்ததை அக்குரங்கும் அவதானித்திருக்க வேண்டும். இப்போது அது இடையே புகுந்து, வேண்டுமானால் பேச்சுத்துணைக்கு ஒரு ரோபோவை உனக்கு ஒழுங்குபடுத்தித் தருவதற்கு ஆவன செய்கின்றேன் என்றது.

என்ன கிழவா உளறுகிறாய்? இவனுக்கும் உன்னைப்போல் வெறும் பேச்சுத்துணைக்குத்தான் ஆள் தேவை என்று நினைத்தாயா? நான் இவனுக்கு அதற்கும் மேலாக எல்லா வகையிலும் துணையாக இருக்கத் தக்கதான ஒரு துணையையே அளிக்க விரும்புகின்றேன். இவனையும் கடவுளாக்குவதாகக் கூறிவிட்டு அவனது தேவைகளைக்கூடக் கவனிக்காவிட்டால் எப்படி?

ஏதோ புரிந்தது போலவும் எதுவுமே புரியாதது போலவும் நான் திரிசங்கு நிலையில் விழித்தேன்.

அப்படியானால் இன்னுமோர் மானிட உயிரியை எம்முடன் இணைக்கப் போகின்றாயா? என்று அம்மானிடப்பொறியை விளித்தது அக்குரங்கு.

இல்லை. நாங்கள் மூவர் மட்டுமே இந்த இலக்கின் பயணத்தில் இணைந்து பயணிக்கப் போகின்றோம். இவ்வுலகை ஆண்ட, ஆளும், ஆளப்போகும் மூன்று வகை இனங்களையும் நாம் ஒவ்வொருவரும் பிரதிநிதித்துவம் செய்வதால் இன்னொரு மானிடரை எம்முடன் இணைத்துக்கொள்ள முடியாது.

ஓ! அப்ப அதற்கும் ரோபோவா?

ஓம்! இம்மானிடனுக்காக இன்னொரு மானிட உயிரியை எம்முடன் இணைப்பது எமது நோக்கிற்கே ஆபத்தாக முடியலாம். இவனுக்கு ஒரு மானிடப்பெண் துணையினை எம்மால் ஏற்படுத்தித் தர முடியாது. ஆனால் மானிடப் பெண்ணிலும் மேம்பட்டதான ஒரு பெண் துணையினை வேண்டுமானால் எங்களால் உருவாக்கித்தர முடியும். இவனுக்குப் பிடித்த வடிவில் அவ்வாறான பொம்மைகளை நாங்கள் யப்பானிலிருந்தோ இங்கிலாந்திலிருந்தோ தருவித்துக்கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவின் மூலமாக இவன் தனக்கான மிகப்பொருத்தமான துணையாக அதிலொன்றைப் பயிற்றுவித்து விட்டால், பின் அந்த மாதிரியை ஏனைய பொம்மைகளிலும் இவனால் பயன்படுத்தமுடியும்.

ச்சே! என்ன கதை கதைக்கிறீர்கள் நீங்கள் இருவரும்?

உனக்குப் பிடிக்காத மாதிரி நீ எங்களுடன் உரையாடலாம். ஆனால் உனக்குத் தேவையான அனைத்தையும் செய்து தரவேண்டியது எங்களது கடமை. விரையிலேயே அவை உன்னை வந்தடைந்துவிடும். அவற்றைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாமல் இருப்பதும் உன்னைப் பொறுத்தது. இனி உங்கள் இருவரையும் தொந்தரவு செய்யாமல் நான் விலகிக் கொள்கின்றேன். உங்கள் வேலையினை நீங்கள் தொடரலாம். கூறிவிட்டு விலகிச் சென்றது மானிடப்பொறி.

மானிடவுயிரியைப் படைத்ததே உங்கள் உயிரினம் தான் என்று நீ கூறினாயே. பின் எப்படி நீ அம்மானிட உயிரிகளில் உருவான சித்தர்களின் சிந்தனைகளையோ அவற்றின் கருத்துகளையோ புரிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றாய்? அப்படியானால் உங்கள் உயிரினத்திலும் பார்க்க எமது உயிரினம் மேம்பட்ட அறிவைக் கொண்டிருக்கின்றது என்பதை இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றாயா?

செயற்கை நுண்ணறிவினூடாக உங்கள் கணினிக்குக் கற்பித்த பின்னர் எப்படி அது உங்களிலும் விட மேம்பட்டதாக வேலை செய்கின்றதோ அப்படித்தான் எம்மால் உருவாக்கப்பட்ட மானிட உயிர்களும். மிகத்திறமையாகக் கற்றுக்கொண்ட சில மானிடரின் கருத்துக்களை சாதாரணமான என்னால் புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கின்றது. எங்கள் இனத்தில் நான் வெறும் கற்றுக்குட்டியே. என்னிலும் எத்தனையோ மடங்கு அறிவில் சிறந்து விளங்கிய எம்மவர்கள் இருந்திருக்கின்றார்கள். அவர்களுடன் உங்கள் சித்தர்களையெல்லாம் ஒப்பிடவே முடியாது. அதுமட்டுமல்ல. நாங்கள் உங்கள் உடலில் உள்ள நரம்பு மண்டலங்களில் ஒருவித சக்தி அலைகளை உருவாக்கிவிட்டிருக்கின்றோம். அவற்றைக் குவியப்படுத்திப் பயிற்சிகளை மேற்கொண்டால் உங்களின் மூலாதாரத்திலிருந்து முதல் சக்தி மையம் உருவாகும். அது படிப்படியாக மேலேறி…

தெரியும்.

குண்டலினி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே

- என்று ஒளவையாரும் பாடியிருக்கின்றார்.

அதே தான். மூலாதாரத்திலிருந்து புறப்படும் சக்தி உச்சந்தலையை அடைந்து எப்போது உச்சந்தலையில் உள்ள சக்திமண்டலம் திறக்கின்றதோ அப்போது நீங்கள் அளவிலா பேரானந்தத்தை அடைவீர்கள். அதுகூட எம்மால் உருவாக்கப்பட்டதே. அதே சக்தியை நீங்கள் உங்கள் குறி வழியே வெளியே விட்டாலும் இன்பத்தை அடைவீர்கள். அதையே சிற்றின்பம் என்கின்றீர்கள்.

அட என்ன விந்தை! விந்தை விரயமாக்காமல் மேலனுப்பினால் பேரின்பம். அதையே கீழே விட்டால் சிற்றின்பம்!

இந்த உரையாடல்களின் பின்னர் என் மனச்சோர்வு அகன்று மனம் புத்துணர்ச்சி பெற்றிருப்பதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

மேலும் இரு வாரங்களில் இயந்திரக் கற்கை நிரலிகளின் உதவியுடன் எம்மால் அச்சுவடிகளை வாசிக்கக் கூடியதாவிருந்தது. ஆயினும் அவற்றின் உட்பொருட்களை விளங்கிக் கொள்வது மிகவும் சவால் நிறைந்ததாக விளங்கியது. அவற்றைப் புரிந்து கொள்வதற்கு இயந்திரக்கற்கையின் செயற்கை நுண்ணறிவால் முடியாது என்பதும் புரிந்தது.

கடவுளைப் பற்றிப் போதிக்கும் வேதம், அதன் முடிவில் கடவுள் இல்லை என்று கூறுவதுபோல் இச்சுவடிகளின் ஆழ்பொருட்களும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு ஒருவித அயர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

அதில் ஒரு பாடல்த் தொகுப்பு என் கவனத்தை அதிகம் ஈர்த்தது. கடவுளைக் கண் முன்னே உறுதியாய்க் காட்டுவதாய் சத்தியம் செய்தது. அதில் ஆழ்ந்து மூழ்கத் தொடங்கினேன்.

அது உபநிடதங்களில் வரும் கேள்விபதில் போன்று அமைந்திருந்தது.

நீ தான் கடவுள். இவ்வுலகைப் படைத்தவனும் நீதான். அதைக் காப்பவனும் நீதான். அதை அழிப்பவனும் நீதான்.

நான் எப்படிக் கடவுளாவேன்? எப்படி நான் இவ்வுலகைப் படைத்தவனாவேன்? அதைக் காத்து அழிப்பவனாவேன்? நீ என்னை வெறும் மாயைக்குள் தள்ளுகின்றாய்?

அப்படியானால் எல்லாமே மாயை. நீ மாயை, நான் மாயை, கடவுள் மாயை, இவ்வுலகம் மாயை.

நீ என்னைக் குழப்புகின்றாய்

எப்படி நீ இவ்வுலகை உணருகின்றாய்?

என் ஐம்புலன்களால்

நன்றாகச் சிந்தித்துப்பார். நீ உன் கண்கள் வழியே பார்த்தாலும் அதைக் கண்கள் பார்ப்பதில்லை. அவை வெறும் கருவிகளே. கனவினில் எப்படிக் காட்சிகளைக் காண்கின்றாய்? ஏனைய புலன்களையும் எவ்வாறு அறிகின்றாய்?

என் ஐம்புலன்களும் என் சிந்தையில் அவற்றை உணர வைக்கின்றனவா?

அதேதான். நீ காணும் இவ்வுலகு உன்  மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பெறிகளெனும் கருவிகள்கொண்டு உன் சிந்தை படைத்தது. உன் உற்றார் உறவினர் சுற்றம் எல்லோரும் அவ்வாறே?

அது எப்படி? என்னை உருவாக்கியது என்பெற்றோர்கள் அல்லவா?

அது வெறும் மாயை. நீ மட்டுமே அதுவும் இக்கணத்தில் மட்டுமே நிஜம். ஏனையவை எல்லாம் உன் மனம் உருவாக்கிய மாயைகளே.

அப்படியானால் காலம்? என் கடந்தகால ஞாபகங்கள்?

காலம் என்பதே ஒரு மாபெரும் மாயநதி. உன் மனம் உருவாக்கிய மாயையே இநதக் காலம். இதோ இந்தக்குரங்கு, அந்த மானிடப்பொறி, இந்தக் கொரோனா வைரஸ், உன் தாய், தந்தை, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி, குழந்தை, குட்டி, உன் தாரம், இந்தத் தாய்வீடுப் பத்திரிகை அதை வாசிக்கும் வாசகர்கள் எல்லாமே வெறும் தோற்ற மயக்கங்களே. இவையெல்லாவற்றையும் படைத்தவன் நீயே. அதைக் காப்பவனும் நீயே அதை அழிக்கப் போகின்றவனும் நீயே. ஆம் உன்னைப் பொறுத்தவரை நீ அழிந்தவுடன் உன்னால் படைக்கப்பட்ட இவ்வுலகும் அழிந்துவிடும். எனவே நீயே உன் இவ்வுலகின் கடவுளானவன்.

மாயைகள் விட்டு விடுதலையாகி நான் கடவுளாளேன்.


(முற்றும்)

நன்றி - தாய்வீடு (நவம்பர் 2020) 

No comments:

Post a Comment