Friday, March 23, 2018

சங்கவையும் சங்கீதாக்களும்


நேரம் நள்ளிரவாகிக்கொண்டிருந்தது. வானின் உச்சியில் முழுநிலா காய்ந்துகொண்டிருந்தது. நிலவின் ஜொலிப்பில் நட்சத்திரங்கள் தம் சோபையை இழந்துவிட்டிருந்தன. கூதற்காற்று காதோரங்களைக் கூசச்செய்துகொண்டிருந்தது. அந்த ஊரோ ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தது. ஆயினும் இருஜோடி விழிகள் மாத்திரம் அந்த நள்ளிரவிலும் உறக்கம் துறந்து கலக்கத்தில் எங்கோ தொலைவை வெறித்தபடியே இருந்தன.

'சங்கீ!"

நள்ளிரவின் அந்த அமைதியைக் கலைக்காமல் மிகமிக மெல்லமாக ஒலித்தது அங்கவையின் குரல்.

'என்னக்கா?'

அங்கவையை ஏறிட்டு நோக்கினாள் சங்கவை.

'கபிலர் தாத்தாவைப் பாரேன்! பாவம் அவர். எமக்காக எல்லா இடமும் அலைந்து திரிகிறார்.'

'ஆமாம் அக்கா. எங்கள் அரண்மனையில் எத்தனை மதிப்புடன் அவர் இருந்தார். இப்போது எமக்காக அவர்படும் அவமானங்களைப் பார்க்கச் சகிக்கமுடியாமல் இருக்கிறதக்கா'

'ஏன்தான் இந்த மன்னர்களுக்கு இத்தனை பேராசையோ? எம்தந்தை வேள்பாரி எவருக்கும் எந்தக் கெடுதலையும் கனவில்கூட நினைத்ததில்லையே'

'அவர் மனிதர்களை மட்டுமா நேசித்தார்? மரஞ்செடிகொடிகளைக்கூட நேசித்த அந்த மாமனிதரை இப்படி வஞ்சகமாய் வீழ்த்திவிட்டார்களே பேராசைக்காரப் பெருவேந்தர்கள்'

'முல்லைக்குத் தேர்கொடுத்தான் பாரி என்று பாரெங்கும் எம்தந்தையின் கொடைத்தன்மையை எல்லாப் புலவர்களும் புகழ்ந்தார்களே'

'ஆமாம் அக்கா! கபிலர் தாத்தாகூட அப்பாவை மழை என்று போற்றினாரே ஞாபகமிருக்கிறதா அக்கா?'

'ம்ம்ம்.. எப்படியடி சங்கீ அதை மறக்கமுடியும்?'

அந்த நான்கு நயனங்களிலும் அந்த அரண்மனைக் காட்சிகள் விரிந்தன.

பறம்புமலையைத் தலைநகராகக்கொண்டு அதைச்சூழவிருந்த முன்னூறு ஊர்களையும் நீதிவழுவாது மிகச்சிறப்பாக ஆட்சிபுரிந்துகொண்டிருந்தான் வேளிர்குல திலகம் பாரிவேள் மன்னன். அவன் வீரத்தில் மட்டுமல்லாது வாரிவாரி வழங்கும் கொடையிலும் சிறந்து விளங்கினான். நாளாந்தம் பல்வேறுநாடுகளைச் சேர்ந்த புலவர்கள், பாணர்கள், விறலியர்கள், இரவலர்கள் என எல்லோரும் அவனைநாடிச்சென்று பரிசில்களும் தானங்களும் பெற்றுக் கொண்டிருந்தனர். அப்படி வந்தவர்தான் கபிலரும். ஆயினும் பாரியின் ஆத்மநண்பராக மாறி அவன்  அவைக்களப்புலவரானார். அதுமட்டுமன்றி பாரிவேள் மன்னனின் குழந்தைகளான அங்கவை சங்கவை ஆகியோருக்கு ஆசானாகவும் ஆகினார்.

அவையில் கூடும் பல்வேறு இடங்களைச் சேர்ந்த புலவர்களும் பாரிமன்னனைப் போன்றவொரு கொடைவள்ளலைத் தாங்கள் அறிந்ததேயில்லை என்று புகழ்பாடினர். அதைக்கேட்ட கபிலர், பாரியைப் போன்றே கொடையளித்து உலகை வறுமையின்பிடியிலிருந்து காக்கும் வேறொருவரும் உள்ளார் என்கிறார்.

அவையிலுள்ளோர் திகைக்கிறாhர்கள். யார் அவர்? இதுகாறும் நாங்கள் அப்படியொருவரைக் கேள்விப்பட்டதில்லையே என்று கபிலரை வினவுகிறார்கள். உடனே கபிலர் தன்பாடலை எடுத்துவிடுகிறார்,

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே
- (புறநானூறு – 107 ஆம் பாடல்)

சிறந்த புலவர்கள் எல்லோரும் பாரி பாரி என்று எம்மன்னனின் பல்வேறு சிறப்புகளையும் கொடைத் தன்மையையும் புகழ்ந்துபாடுகின்றனர். ஆனால் இந்த உலகில் பாரி ஒருவன் மட்டுமே அப்படிச் சிறப்பு வாய்ந்த வள்ளல் அல்ல. இவ்வுலகைக் காப்பதற்காக மாரியும் இங்கே உள்ளது என்கிறார்.

நீரின்றி அமையாது உலகு என்றார் பின்னர் வந்த வள்ளுவர். அந்த நீரினை உலகுக்குத் தருவது மழையே. மழை பொய்த்துவிட்டால் எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடி உலகே அழிந்துவிடும். முகில்கள் மழையினை மண்ணுக்கு ஈந்து உலகைக் காப்பதுபோல் பாரிமன்னனும், தன் ஈகையால் இவ்வுலகைக் காத்துக்கொண்டிருக்கிறான் என்று அவனைக் குறைத்துக் காட்டுவது போன்ற தொனியில் உயர்வாகக் புகழ்கிறார் கபிலர்.

பாரியின் புகழ் மென்மேலும் பரவு முடியுடை மூவேந்தர்களுக்கும் பொறாமைத்தீ மூழ்கிறது. தாங்கள் பெரும்படையுடனும் வலிமையுடனும் இருக்கப் புலவர்கள் யாரும் தங்களைப் பாடாது குறுநிலமன்னனான பாரியைப் போற்றிப்பாடுவது பொறுக்காமல், மூவேந்தர்களுமே ஒன்றிணைந்து பாரியின் மேல் போர்தொடுத்து அவன் பறம்புமலையை முற்றுகையிட்டனர்.

தன்னிறைவுபெற்ற நாடாகத் தன்நாட்டை உருவாக்கி வைத்திருந்தவன் பாரி. அவன் தானத்தில் மட்டுமன்றி வீரத்திலும், ஓரரசைத் திறம்படக் கொண்டுநடத்துவதிலும் வல்லவனாயிருந்தவன். மூவேந்தர்களின் முற்றுகை அவன் தேசத்தைப் பாதிக்கவில்லை. பகைவர்கள் உள்ளே நுழைய முடியாதபடி அவன் காவல் மிகமிகப் பலமாக இருந்தது. பாரியின் ஆருயிர் நண்பரான கபிலரும் தன் பங்கிற்கு மலைகளில் உள்ள கிளிகளையும் குருவிகளையும் பழக்கி நெற்கதிர்களையும் தானியங்களையும் முற்றுகைக்கு அப்பாலுள்ள பிரதேசங்களிலிருந்து அரண்மனைக்கு எடுத்துவரச் செய்திருந்தார். எனவே மாதக்கணக்கில் நீண்ட முற்றுகையால் எந்தப் பயனும் கிட்டாமல் மூவேந்தரும் விழிபிதுங்கினர். அந்தநேரத்தில்த்தான் கபிலர் தன்னையும் அறியாமல் ஒரு மாபெரும் தவறினையிழைத்தார்.

மூவேந்தர்களையும் எள்ளிநகையாடக் கருதிய கபிலர் ஒரு பாடலை ஓர் ஓலையில் எழுதி முற்றுகையிட்டிருந்த மூவேந்தருக்கும் அனுப்பினார். பாரிமன்னன் சரணடைவதற்கான ஓலை அதுவென நம்பிய அரசர்கள் மூவரும் ஓலையைப் பிரித்து அதிலிருந்த பாடலைப் படித்ததும் ஏமாற்றம் அடைந்தனர்.

அளிதோ தானே பாரியது பறம்பே !
நளிகொண் முரசின் மூவிரு முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயனுடைத்தே;
ஒன்றே, சிறியிலை வெதிரினெல் விளையும்மே
இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பல மூழ்க்கும்மே;
மூன்றே, கொழுங்கொடிவள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணிநிற வோரிபாய்தவின் மீதழிந்து
திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான்க ணற்றவன் மலையே; வானத்து
மீன்க ணற்றதன் சுனையே; யாங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும்,
தாளிற் கொள்ளலிர்இ வாளிற் றரலன்;
யானறி குவனது கொள்ளு மாறே,
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர
வாடினர் பாடினர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கீ யும்மே
- (புறநானூறு – 109 ஆம் பாடல்)

எல்லா வகையான வளங்களும் இயற்கையாகவே மலிந்திருக்கும் பறம்புமலையில் மக்களுக்குத் தேவையான அனைத்துவிதமான உணவுப்பொருட்களும் தாமாகவே விளைகின்றன. பாரியின் பறம்புமலையோ பகைவரால் வெற்றிகொள்ளப்பட முடியாத அளவிற்குப் பலமும் இயற்கை அரணும் வாய்ந்தது. ஆயினும் உங்களுக்கு அவனது இந்த நாடும் பறம்புமலையும் வேண்டுமாயின், நீங்கள் பாணர்கள் விறலியர்களுடன் வந்து இரந்து நிற்பின், பாரி உங்களுக்குத் தன்நாட்டையும் இந்தப் பறம்புமலையையும் தானமாகவே தந்துவிடுவான் என்பது அப்பாடலின் சுருக்கமான பொருள்.

அப்பாடலைப் படித்ததும் அவர்கள் பாரியைத் தம்மால் போரில் வெற்றிகொள்ளமுடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்தனர். மூவரசர்களும் கூடி மந்திராலோசனை நடத்தினர். அவர்களிடம் ஒரு வஞ்சக எண்ணம் உருவாகியது.

மூவேந்தர்களும் பாணர்களாக மாறி விறலியருடன் சேர்ந்து பறம்பு மலைக்குள் புகுந்தனர். இரவலர்களாக உள்ளே வருபவர்களுக்கு எந்தவித காவல்த்தடையும் பாரியின் ஆட்சியில் இருந்ததில்லை. பாரியின் அரண்மனைக்குள் புகுந்த அந்த மூன்று வேடதாரிகளும் நயவஞ்சகமாகப் பாரியைக் கொன்று அவன் நாட்டையும் பறம்புமலையையும் கைப்பற்றினர்.

பாரியின் உயிர் நண்பரான கபிலரால் பாரியின் இழப்பைத் தாங்கமுடியவில்லை. பாரியின் மரணத்திற்குத் தனது பாடல்தான் காரணமாகிவிட்டதோ என்கின்ற குற்றவுணர்ச்சியும் அவருள்ளத்தில் எழுந்து அவரைத் துளைத்தது. உயிர்வாழ்வதை வெறுத்தார். ஆயினும் பாரியின் மகள்களும் அவரின் மாணவிகளுமான அங்கவையையும் சங்கவையையும் கரையேற்றிவிட்டு வடக்கிருக்கத் துணிந்தார்.

அங்கவையையும் சங்கவையையும் மணமுடித்து ஏற்றுக்கொள்ளுமாறு பல்வேறுமன்னர்களையும் சென்று வேண்டினார். மூவேந்தர்களுக்கும் அஞ்சிய ஏனைய குறுநில மன்னர்களோ, பாரியின் புதல்விகளை மணக்க மறுத்தனர்.

சில வாரங்களுக்கு முன்னர் மூவேந்தர்களுமே போட்டிபோட்டு மணஞ்செய்துகொள்ள விரும்பிய,  சகல சௌபாக்கியங்களுடனும் விளங்கிய அந்தவிரு அரசிளங்குமாரிகளும் இப்போது எல்லோராலும் தீண்டத்தகாதவர்களாய்ப் பார்க்கப்பட்டனர். அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைகள் போல், இவர்கள் இருக்குமிடங்களை நாடிவந்து உதவிபெற்றுச் சென்றவர்கள் எல்லாம் இப்போது இவர்களைக் கண்டாலே அஞ்சி ஒதுங்கினர்.

'சங்கீ! கவலைப்படதேடி. நாம் இப்படி இருப்பதைப் பார்த்தால் கபிலர்தாத்தா இன்னும் வருந்துவார்.'
'ஆமாம் அக்கா, அவர் பாவம். எமக்காகத்தான் இன்னமும் உயிருடனிருக்கிறார். அவருக்காகவாவது நாம் கவலையில்லாமல் இருப்பதைப்போன்று நடிக்கவேண்டும்'

'ம்ம்ம்...' அங்கவையிடமிருந்து பெருமூச்சொன்று எழுந்தது.


'பார்த்தீர்களாக்கா இந்த நன்றிகெட்ட உலகத்தை. அன்று எம் தந்தையின் அரசாட்சியில், வலிய வந்து எம்மிடம் அன்புபாராட்டுவதாய்க்காட்டி நடித்தவர்கள் எல்லாரும் இன்று எம்மை ஈனப்பிறவிகள் போன்று ஒதுக்கிவைப்பதைப் பார்க்கையில் நெஞ்சு ஆறுதில்லையாக்கா'

'ஆமாம் சங்கீ. அன்றைக்கு அப்பாவும் இருந்தார், எம்மிடம் அரசும் இருந்தது. இன்று அப்பாவும் எம்முடன் இல்லை. அரசும் இல்லை. அனாதைகளாகிவிட்டோமடி'

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!
- (புறநானூறு - 112 ஆம் பாடல்)

*****************************

“அப்பாவை விடவே மாட்டார்களாண்ணா?” - கேவினாள் சங்கீதா

“அழாதே சங்கீ! அண்ணா நானிருக்கிறேன்” - சின்னஞ்சிறுவயதிலேயே பக்குவப்பட்டுவிட்ட கனி தன் தங்கைக்கு ஆறுதல் கூறினான்

தான் கருவிலிருக்கையிலேயே தன் தந்தை பிரிக்கப்பட்டுவிட்ட சோகத்திற்குச் சொந்தக்காரி அந்தக் குட்டித்தேவதை. தன் பிரிய கணவனின் பிரிவால் வாடினாலும் கருசுமந்த உயிரையும் கருவிலிருக்கும் உயிரையும் நினைந்திரங்கித் தன் காலத்தை ஓட்டிய தாயினையும் இழந்து இன்று தன் தனயனுடன் தனித்து விடப்பட்டிருக்கிறாள்.

ஒவ்வொரு பெண்குழந்தைகளினதும் குட்டிவயதுக் கதாநாயகனாய் விளங்குவது தந்தையே. இவளோ தந்தையைக் கண்ணாலேயே காணமுடியாத துர்ப்பாக்கிய நிலையிலிருந்தாள். எல்லாமாக விளங்கிய அன்னையும் மரணத்தைத் தழுவிவிடத் தன் சின்னஞ்சிறு அண்ணனுடன் நிர்க்கதியாய்த் தவிக்கின்றாள்.

“அப்பாவை நம்மிடம் விடுவதற்கு என்னண்ணா செய்யலாம்?”

அந்த மழலை சங்கீதா தன் மனவேதனைகளைச் சொல்லியொரு மடலை வரைந்திருக்கிறது. அது செவிடன் காதில் ஊதிய சங்காகாதிருக்கட்டும்!

அன்புடன் சதுரிகா அக்காவுக்கு!

அம்மாவையும் இழந்து அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய் இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்த போதே அப்பா கைது செய்யப்பட்டார். எனக்கு இன்று எனக்கு பத்து வயது இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில்தான் அப்பாவின் மடியில் இருக்கக் கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே. அம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா! உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.

அக்கா நான் இப்ப கடவுளை விட உங்கட அப்பாவைதான் நம்புறன் ஏனென்றால் இந்த உலகத்தில் அவரால் மட்டும்தான் எங்கட அப்பாவை விடுவிக்க முடியும். இது நடக்க நீங்களும் உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ. அன்புள்ள அக்கா அம்மாவும் அப்பாவும் இல்லாத இந்த வீட்டில் எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை.அக்கா என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனது அப்பாவை விடுதலை செய்ய நீங்களும் உதவுங்கள்.

நன்றி

இப்படிக்கு அன்புள்ள உங்கள் தங்கையாக,
ஆ.சங்கீதா

இப்படி இன்னும் எத்தனை சங்கீதாக்கள் வெளித்தெரியாமல்!

**************

தாய்வீடு - ஏப்ரல் 2018 இற்காக எழுதப்பட்டது.

1 comment:

  1. ஈழத்துச் சங்கீதாக்களின் துயரங்கள், சங்ககால இலக்கியங்களைத் தோண்டித்துருவும் பணியிலுள்ள இப்படைப்பாளியின் உணர்வுகளை தொடர்ந்து கசக்கியபடியே இருக்கின்றன. பகையரசர்களால் தந்திரமாக அழித்தொழிக்கப்பட்ட பாரிமன்னரின் இரு புதவிகள் எவ்வாறு காடுகளில் திரிந்தபடி நிர்க்கதிக்கு ஆளானார்களோ அந்நிலைக்கு சங்கீதாக்களை இங்கு ஒப்பீடு செய்கிறார் எம் படைப்பாளி. அவரின் ஆக்கமும் உணர்வும் போற்றப்படுவதாக! - வேலணை வாணர்

    ReplyDelete