தமிழ்மொழியில் இலக்கங்களை எழுதுவதற்கென்று தனித்துவமான
குறியீடுகள் அல்லது எழுத்துகள் இருந்தாலும், இன்றைய நாட்களில் பஞ்சாங்கங்களைத் தவிர்த்து
அவை பயன்படும் இடங்களைக் காண்பது அரிது. ஆயினும் மொரீசியஸ் நாட்டின் பணத்தாள்களில்
இவ்விலக்கங்களை இப்போதும் காணக்கூடியதாயிருப்பது குறித்துத் தமிழர்கள் அனைவரும்
பெருமை கொள்ளலாம்.
இத்தமிழ் இலக்கங்களை வைத்து, சிறுவர்கள் முதல் பெரும்
புலவர்கள் வரை தமிழில் விளையாடி வந்திருக்கிறார்கள். அவற்றைப்பற்றிச் சற்றே
பார்க்கலாம்.
சிறுவயதில் விடுகதைகள் அல்லது புதிர்கள் போட்டு அவற்றை அவிழ்க்கச்சொல்லி
விளையாடுவது சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்றாகும். அந்த
வகையில் தமிழ் எண்களை வைத்துச் சிறுவர்கள் பகிடியாக விளையாடும் விடுகதைகளில் ஒன்றைப் பார்ப்போம்.
உன் தலையில ஏழ (ஏழு) வைச்சு இடையில அஞ்ச (ஐந்து) வைச்சு கடைசியா மையை
வைச்சா உன்பெயர் வரும் அது என்ன?
இவ்விடுகதைக்கான விளக்கத்தினை இனிப் பார்ப்போம்
தலையில் ஏழு: முதலாவது எழுத்தாக ஏழு. தமிழ் இலக்கங்களில்
ஏழைக் குறிப்பது எ.
இடையில் ஐந்து: இடையில் வரும் எழுத்தாக ஐந்து. தமிழ் இலக்கங்களில்
ஐந்தைக் குறிப்பது ரு.
கடைசியில் மை: கடைசி எழுத்து மை.
ஆகவே இம்மூன்று எழுத்துகளையும் அதே வரிசைப்படி இணைக்க எருமை
எனவரும்.
இனித் தமிழிலக்கியத்தில், இவ்வாறு
தமிழெண்களை வைத்து விளையாடப்பட்டிருக்கும் ஒளவையாரின் ஒருபாடலைப் பார்ப்போம்.
எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா
இப்பாடலுக்குரிய விளக்கத்தை இனிப்பார்ப்போம்.
எட்டேகால் லட்சணமே: தமிழ் இலக்கங்களில் எட்டைக் (8) குறிப்பதற்கு 'அ' வும்
கால்ப்பங்கினைப் (1/4) குறிப்பதற்கு 'வ' வும்
பயன்படுத்தப்படுகிறது. எனவே எட்டேகால் இலட்சணமே என்பதன் பொருள்
அவலட்சணமே என்னும் பொருளைக்குறித்து நிற்கின்றது
எமனேறும் பரி என்பது எருமையையும் பெரியம்மை வாகனம் என்பது
காகத்தையும், முட்ட மேல்கூரையில்லாவீடு என்பது குட்டிச் சுவரையும்
குலராமன் தூதுவன் என்பது இராமனின் தூதுவனாய் இலங்கைசென்று சீதையைச் சந்தித்த
அனுமனின் இனமான குரங்கையும் குறித்து நிற்கின்றது. ஆரை அடா சொன்னாய் என்பது ஆரைக்
கீரையைச் சொன்னாய் என்றும் பொருள் கொள்ளலாம். அப்படியல்லாமல் யாரையடா சொன்னாய்
என்று கோபத்தில் கேட்பதாகவும் பொருள் கொள்ளலாம்
இங்கே கவனிக்கத்தக்கவேண்டிய விடயம் இப்பாடல் பாடப்பட்ட
நிலைக்களனாகும். இப்பாடல் கம்பரைப்பார்த்து ஒளவையார் பாடியது என்று சொல்வோரும்
உள்ளனர் ஆயினும் இப்பாடல் ஒட்டக்கூத்தரை நோக்கியே பாடப்பட்டது என்பதே உண்மையாகும்.
புலவர்களுக்குள் எப்போதுமே போட்டியும் பொறாமையும்
காணப்படுவது அக்கால இயல்பாகும். ஒருமுறை ஒட்டக்கூத்தர் முன்னாலும்
புகழேந்திப்புலவர் பின்னாலும்வர மன்னன் வீதியுலா செல்கிறான். அப்போது தன்
இருகால்களையும் நீட்டிக்கொண்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒளவையார்
ஒட்க்கூத்தருக்கு எவ்வித மரியாதையுமு; செய்யாமல் அப்படியே அமர்ந்திருக்கிறார். மன்னன்
வருகையில் ஒருகாலை மடக்குகிறார். புகழேந்திப்புலவருக்கு இருகால்களையும்
மடக்குகிறார். அதைக்கண்ட ஒட்டக்கூத்தர் அவமானத்தால் ஒளவையாரைச் சாடும் நோக்கில்
மன்னன் முன்னிலையில் ஒளவையாரைப் பார்த்து, அவரை ஏளனம் செய்யும் வகையிலும் அதேசமயம்
விடுகதையாகவும்,
ஒருகாலடி நாலிலைப் பந்தலடி. என்கிறார்.
அதற்குப் பதிலடியாகவே ஒளவையார் எட்டேகால் இலட்சணமே எனத் தொடங்கி
ஆரை அடா சொன்னாய் என்று பெரும்பாலும் நான்கு இலைகளுடனேயே காணப்படும் ஆரைக்கீரை
விடையாக வரும் வகையில் ஒட்டக்கூத்தரை அவர் தன்னை மறைமுகமாக அடி என்று சொன்னதற்குப்
பதிலடியாக அவரையும் மறைமுகமாக அடா என்று சொல்லி ஏளனம் செய்து பாடுகின்றார்.
பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கினை மன்னன் அறிந்து
காரணம் கேட்டு, ஒட்டக்கூத்தர்
தான் புகழேந்திப்புலரிலும் சிறந்தவர் என்று கூற மன்னன் ஒட்டக்கூத்தரையும்
புகழேந்தியையும் போட்டியிடவைக்க, ஒளவையார் மதி என்னும் பொருளினைத் தமது ஒரு பாடலில் மூன்றுமுறை வருமாறு பாடல்
அமைக்கச் சொல்கிறார். ஒளவையாரையும் புகழேந்தியாரையும் அவமதிக்கவேண்டும் என்கின்ற ஆத்திரத்தில் அவர்
‘வெள்ளத்து
அடங்காச் சின வாளை
வேலிக் கமுகின் மீதேறித்
துள்ளி முகிலைக் கிழித்து மழைத்
துளியோடு இறங்கும் சோணாடா!
கள்ளக் குறும்பர் குலம் அறுத்த
கண்டா! அண்டர் கோபாலா!
பிள்ளை மதி கண்ட எம்பேதை
பெரிய மதியும் இழந்தாளே’
என்று இரண்டு மதிகளை மட்டுமே கொண்டு தன் பாடலை முடிக்க, உடனேயே ஒளவையார்,
ஒட்டா ஒருமதி கெட்டாய்
என்று கூறி ஒட்டக்கூத்தரின் ஆணவத்தை அடக்குகின்றார்.
புகழேந்தியர் தன் பாடலில் மூன்று மதிகள் (பிறை) வருமாறு
பாடிய பாடலைக் கீழே காணலாம்
பங்கப் பழனத்து உழும் உழவர்
பலவின் கனியைப் பறித்தொன்று
சங்கிட்டு எறியக் குரங் கிளநீர்
தனைக் கொண்டு எறியும் தமிழ்நாடா!
கொங்கார்க் கமரர் பதியளித்த
கோவே! ராஜ குல திலகா!
வெங்கட் பிறைக்கும் கரும் பிறைக்கும்
மெலிந்த பிறைக்கும் விழிவேலே!
தமிழ் இலக்கங்களை மட்டுமன்றி சாதாரண எண்களை வைத்தும்
தமிழ்ப்புலவர்கள் தம் வித்துவத்தைக் காட்டிச் சென்றிருக்கிறார்கள். அந்த வகையில்
விவேகசிந்தாமணியில் அமைந்த ஒருபாடலை இனிப்பார்ப்போம்.
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே
சகிக்க முடியாதினி என் சகியே மானே!
இப்பாடலுக்குரிய விளக்கத்தை இனிப்பார்ப்போம்.
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே: ஒரு நாலும் இரண்டு அரையும் ஒன்றும்
( 4
+ 2 x 1/2 + 1 = 6 - இராசிகளில் ஆறாவது கன்னி)
ஐயரையும் அரையும்: ஐந்து அரையும்
அரையும்
(5
x 1/2 + 1/2 = 3 - வாரத்தில் மூன்றாவது நாளான செவ்வாய்)
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும்: இரண்டு நான்கும் மூன்றும்
ஒன்றும்
(2 x 4 + 3 + 1 = 12 - பன்னிரெண்டாவது
நட்சத்திரம் உத்தரம். உத்தரம் -> உத்தரவு = விடை/பதில்)
நான்கும் அறுநான்கும்: நான்கும் மேலும்
ஆறு நான்குகளும்
(4
+ 6 x 4 = 28 - தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றில் 28 ஆவது ஆண்டு 'ஜெய' ஆகும்)
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே: நாலும் பத்தும்
பதினைந்தும்
( 4
+ 10 + 15 = 29 - தமிழ் ஆண்டுகள் என்று சொல்லப்படுபவற்றில் 28 ஆவது ஆண்டு 'மன்மத' ஆகும்)
இதனை மேலும் விளக்கமாகப் பார்க்கின்
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய் - கன்னியே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன் - உண்மையாய் உன்
செவ்வாயைக் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்- பதிலைச் சொல்வாய்
இம் மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின் - நான் கூறியவற்றை
விளங்கிக்கொண்டு எனக்கு பதில் உரைப்பாயானால்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே - ஜெயம் பெறுவாய்
/ வெற்றியடைவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே - நான் வேறெதுவும்
உனக்குச் சொல்லத் தேவையில்லை,
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந் தாலே - மன்மதத்தாலே -
அதனால் உண்டான காதல் உணர்வினை/வேதனையினை
சகிக்க முடியாதினி என் சகியே மானே! - இனியும் என்னால்
தாங்கமுடியாது என் தோழியே,
மான் போன்றவளே
இனிக் காளமேகப்புலவர் பாடிய ஒருபாடலைப் பார்ப்போம்
பூநக்கி ஆறுகால், புள்ளினத்துக்கு
ஒன்பதுகால்,
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே. மானே கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு,
கண்டதுண்டு, கேட்டதில்லை காண்!
இப்பாடலுக்கான விளக்கம்:
பூநக்கி ஆறுகால்: பூ-நக்கி - பூவினை நக்கும் வண்டு.
வண்டிற்கு ஆறு கால்கள் உண்டு
புள்ளினத்துக்கு ஒன்பதுகால்: புள்ளினம் - பறவை, ஒன்பது கால் (9 x 1/4 = 2 1/4 -இரண்டேகால்)
பறவைக்கு இரண்டே (தேற்று ஏகாரம்) கால்
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே: ஆனை - யானை, கால் பதினேழ் (1/4 x 17 = 4 1/4 - நாலேகால்)
யானைக்கு நாலே (தேற்று ஏகாரம்) கால்.
இந்த வகையில் அண்மைக்காலத்துக் கவிஞர் கண்ணதாசன் அவர்களின்
பாடல் ஒன்றை நோக்குலோம்.
சரவணப் பொய்கையில் நீராடி என்கின்ற பாடலில்
அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
அஞ்சுதலை என்பது ஐந்து தலைகளைக் குறிக்கவில்லை. மாறாக
அஞ்சுதல் அதாவது பயத்தினைக் குறிக்கின்றது.
ஆறுதலை என்பது ஆறு தலைகள் என்கின்ற கருத்தில் அல்லாமல்
ஆறுதல் என்பதைக் குறிக்கின்றது.
நன்றி: தாய்வீடு (மார்ச் 2018)
No comments:
Post a Comment