Friday, May 25, 2018

கனடாவில் அடுத்த தலைமுறைத் தமிழரும் தமிழும்



வந்தாரை வாழவைத்தல் தமிழரின் மரபாகும். அந்தத் தமிழரே ஏதிலிகளாக, அகதிகளாக அலைந்து திரிந்த போதினில், அவர்களைத் தன்மண்ணில் குடியேற அனுமதித்து வாழவைத்துக் கொண்டிருக்கும் கனடாவில், எமது அடுத்த சந்ததியினரிடம் தமிழ்மொழி நிலைக்குமா என்பது மிகவும் சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருக்கின்றது. பல்கலாச்சாரங்கள் கொண்டவர்களைத் தன்னகத்தே கொண்டுள்ள கனடாவானது, இங்கே வாழ்பவர்களை அவர்களது கலாச்சாரங்களுடன் ஏற்றுக் கொண்டிருப்பதையும், பல்கலாச்சாரங்களைப் பேணி ஊக்குவிப்பதையும் பார்க்கையில், அதிலும் தை மாதத்தினை தமிழர் மரபுடைமைத் திங்களாக அங்கீகரித்திருப்பதையும் நோக்குகையில், தமிழ்மொழியினைக் கனடாவில் வாழும்மொழியாக நிலைபெறச்செய்வதற்காக, எமது அடுத்த சந்ததியினரிடம் உரிய முறையில் தமிழ்மொழியைக் கையளிப்பது இன்றைய சந்ததியினரின் கைகளில்தான் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாகத் தெரிகிறது. ஆயினும் அதற்கான போதிய தயார்ப்படுத்தல்கள் எம்மிடம் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. இனிமேலும் அவ்வாறான தயார்ப்படுத்தல்களை நாம் செய்யாது விடுவோமேயானால் எமது அடுத்த தலைமுறையைத்தாண்டித் தமிழ்மொழி வாழாது போகலாம்.

'ஒரு மனிதன் உண்மையில் இறந்துபோவது அவன் பற்றிய நினைவுகளை மக்கள் முற்றாக மறந்து போகையில் தான்'

இக்கூற்று மனிதனுக்கு மட்டுமல்ல, அவன் பேசும் மொழிக்கும் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. எனவே தமிழ்மொழி கனடாவில் மறக்கப்படாமல் தொடர்ந்தும் உயிர்ப்புடன் வாழ்வதற்கு தமிழ்மொழியின் தொன்மையையும், அதன் சிறப்பையும், அதைக் கற்பதனால் உண்டாகும் நன்மைகளையும், தமிழின் முக்கியத்துவத்தையும் எம் இளந்தலைமுறையினர் ஏற்றுக்கொள்ளும் வகையில் எடுத்துரைத்தல் வேண்டும்.

தமிழ்மொழி உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று. உலகின் அங்கீகரிக்கப்பட்ட செம்மொழிகளில், வாழும்மொழிகளில் ஒன்றாக விளங்குவது அதன் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது. இதனையிட்டுத் தமிழராகப் பிறந்ததில் எம் அடுத்த சந்ததி பெருமைப்படவேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்துதல் வேண்டும்.

ஒரு இனத்தின் தொன்மையை, அதன் வரலாற்றை நாம் அறிந்துகொள்வதற்கு மூலாதாரமாக விளங்குபவை அம்மொழியில் உருவாக்கப்பட்டிருக்கும் இலக்கியங்களாகும். 'இலக்கியம் காலத்தைக்காட்டும் கண்ணாடி' என்பார்கள். அந்த வகையில் தமிழின் தொன்மைக்கு சான்றாக இன்று எம்மிடம் இருப்பவை தொல்காப்பியம் என்னும் இலக்கணநூலும், சங்க இலக்கியங்களாகிய தொகை நூல்கள் எட்டும், பத்துத் தனிப்பெரும் பாடல்களான பத்துப்பாட்டும் ஆகும். இவை தவிரவும் தொன்மைக் கதைகளாகவும், குறிப்புக்களாகவும், கர்ணபரப்புரைக் கதைகளாகவும், தொல்காப்பியத்திலும் காலப்பழமை வாய்ந்ததான அகத்தியம் என்னும் இலக்கணநூல்பற்றியும் மற்றும் முதற்சங்க, இடைச்சங்க காலங்களில் பற்பல நூல்கள் இருந்தன என்பதுபற்றியும் அறியக் கிடைத்தாலும் அவை இப்போது எம்மிடையே இல்லாததால் அவற்றைத் தமிழின் தொன்மைக்கு விஞ்ஞானரீதியிலான ஆதாரமாகக் கொள்ள முடியாது.

ஆயினும் தொல்காப்பியர், தொல்காப்பியத்தின் பல இடங்களிலும், 'என்ப', 'என்மனார் புலவர்', 'மொழிப' போன்ற பதங்களின் ஊடாக தனக்கு முற்பட்ட அறிஞர்களைப் பெயர் சுட்டாமற் குறிப்பிட்டிருப்பதால், தொல்காப்பியத்திற்கு முன்னரேயே பல இலக்கணநூல்கள் இருந்திருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் வகுத்தலே முறை. எனவே தொல்காப்பியத்திற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே தமிழிலக்கியங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்பதும் அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே. அதுமட்டுமன்றி உலகப் பொதுமறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள திருக்குறளைத் தந்ததும் தமிழ்மொழியே. எனவே, எமது அடுத்த தலைமுறைக்கு தமிழின் தொன்மையையும் அதன் பெருமையையும் எடுத்துக்கூற வேண்டியது இன்றைய தலைமுறையினரான எமது தலையாய கடமையாகும். அதை எமது பிள்ளைகள் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் கூறவேண்டியது மிகமிக இன்றியமையாததாகும்.

பொதுவாக எல்லோருக்குமே இலக்கணத்தைக் கற்பதிலும் பார்க்க இலக்கியத்தைச் சுவைப்பதில் மிக்க ஆர்வம் இருப்பது இயல்பு. எனவே எம்தமிழ் இலக்கியங்களில் காணப்படும் இலக்கியச் செழுமையையும், கற்பனை வளங்களைம் நுகர்வதற்கு இளைய தலைமுறையினரை வழிப்படுத்துதல் வேண்டும். அதற்கு, தெரிந்தெடுக்கப்பட்ட இக்கால இலக்கியங்களில் தொடங்கிப் படிப்படியாக இலகுவான சங்ககால இலக்கியப் பாடல்கள் வரை அவர்களைச் சுவைக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்வோமேயானால் அதன்பின் அவர்களாகவே தமிழிலுள்ள எல்லா இலக்கியங்களைத் தேடி வாசிக்கத் தொடங்கிவிடுவார்கள். அப்படியான ஒருநிலையை அவர்கள் அடைந்தால் தமிழ் மொழியின் தொன்மையையும் அது கொண்டுள்ள இலக்கியச் செழுமைகளையும் அக்காலங்களில் வாழ்ந்த தமிழரின் பண்பாட்டு விழுமியங்களையும் நாகரிகச்சிறப்புகளையும், காதல், வீரம் கொடை போன்றவற்றில் எல்லாம் தமிழர்கள் பெற்றிருந்த சிறப்பினையும் உணர்ந்துவிடுவார்கள். அப்படி உணரும்பட்சத்தில், தாம் தமிழர் என்பதிலும், தமது தாய்மொழி தமிழ் என்பதில் நிச்சயம் பெருமிதம் கொள்வார்கள். எதனை நாங்கள் உயர்வாக பெருமையாக நினைக்கின்றோமோ அதனை இயல்பாகவே நாம் மதிக்கத் தொடங்கிவிடுவதுடன் எமது பிள்ளைகளுக்கும் அதனை வழங்க முயற்சிப்போம். அந்த வகையில், தாங்கள் தமிழராய்ப் பிறந்ததில் பெருமையையும் தமிழ்மொழியின் உயர்வினையும் உணர்ந்து கொண்ட இளையவர்கள் தாமாகவே தமிழ்மொழியை அவர்களுக்கு அடுத்துவரும் தலைமுறைக்கு கடத்தும் பணியினை செம்மையாகச் செய்வார்கள்.

'சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்'

என்று கூறிய வள்ளுவப் பெருந்தகையே,

'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்'

என்றும் சொல்லியிருக்கிறார். எனவே எம் இளம் சந்ததியினர் தமிழ்மொழியினை விரும்பிக் கற்பதற்கு, முதற்படியாக நாம் ஒவ்வொருவரும் எங்கள் எங்கள் வீடுகளிலிருந்தே அதனை ஆரம்பிக்க வேண்டும். வீடுகளில் எம் குழந்தைகளுடன் தமிழ்மொழியில் மட்டுமே உரையாடுதல் வேண்டும். இதற்கு தளராத மனவுறுதி மிகவும் இன்றியமையாததாகும்.

சிறுவயதுப் பிள்ளைகள் கைக்கணினிகளில் அதிக நேரத்தைச் செலவு செய்ய அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதிப்பது அவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எங்களை எமது பிள்ளைகள் தொந்தரவு செய்யாமலிருப்பதற்காகவே நாங்கள் எம் பிள்ளைகளைக் கைக்கணினிகளில் அதிகநேரம் செலுவிடுவதை எமது வசதிக்காக அனுமதித்து விடுகிறோம். அது தவறு என்பதை நாம் உணர்ந்து கொண்டால், பிள்ளைகளுடன் எங்கள் நேரத்தை அதிகம் செலவிடுவோம். அப்போது எமது பிள்ளைகளுடன் தமிழறிவை வளர்க்கும் விளையாட்டுக்களை விளையாடலாம்.

எடுத்துக்காட்டாக விடுகதைகள் கேட்டல் (நொடி அவிழ்த்தல்), புதிர்க்கதைகள் கூறுதல் என்பவற்றைக் கூறலாம். அல்லது எங்கள் சிறுவயதுகளில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகளில் ஒன்றான, ஒரு எழுத்தைக் கூறி அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர், பொருள், இடம், படம் என்பவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதவேண்டும் என்று கூறலாம். இதன் மூலம் பிள்ளைகள் விரைவாகத் தமிழில் எழுதத் தேர்ச்சி பெறுவதுடன் அதிகளவிலான தமிழ்ச்சொற்களையும் அறிந்து கொள்வார்கள். அண்மையில் கனடாவில் உள்ள தமிழ் வானொலியொன்றிலும் இவ்வாறான நேயர் போட்டியொன்றைக் கேட்க நேர்ந்தது. ஆயினும் தொலைபேசியூடான அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர்கூட இளைய தலைமுறையைச் சார்ந்தவர் இல்லை என்பது மனவருத்தத்தைத் தந்தது. சிறு பிள்ளைகளுக்கு ஆர்வமூட்டும் சில விளையாட்டான தமிழ்ப்பாடல்களைச் சொல்லிக் கொடுக்கலாம்.

'அக்கா வீட்ட போனேன். 
அரிசிப்பொதி தந்தா. 

வேண்டாமெண்டு வந்தேன். 
வழியெல்லாம் பாம்பு. 

பாம்படிக்கத் தடிக்குப் போனேன். 
தடியெல்லாம் தேன். 

தேன் எடுக்க சட்டிக்குப் போனேன். 
சட்டியெல்லாம் ஊத்தை. 

ஊத்தை கழுவத் தண்ணிக்குப் போனேன். 
தண்ணியெல்லாம் மீன். 

மீன் பிடிக்க வலைக்குப் போனேன். 
வலையெல்லாம் ஓட்டை. 

ஓட்டை தைக்க ஊசிக்குப் போனேன். 
ஊசியெல்லாம் வெள்ளி. 

வெள்ளியடி வெள்ளி. 
உன்ரை கையில கிள்ளி'

என்று சொல்லி இறுதியில் பிள்ளையின் கையில் மெதுவாகக் கிள்ளினால் அப்பிள்ளை ஆர்வமுடன் தானும் இதைத் தனது நண்பர்களுடன் விளையாட ஆரம்பிக்கும்.

'என்ன வேணும்?' 
'பழம் வேணும்.
'என்ன பழம்?' 
'வாழைப்பழம்.
'என்ன வாழை?' 
'கப்பல் வாழை.
'என்ன கப்பல்?' 
'பாய்க்கப்பல்.
'என்ன பாய்?' 
'ஓலைப்பாய்.
'என்ன ஓலை?' 
'பனையோலை.
'என்ன பனை?' 
'கட்டைப் பனை.
'என்ன கட்டை?' 
'மரக்கட்டை.
'என்ன மரம்?' 
'பூமரம்
'என்ன பூ?' 
'மல்லிகைப் பூ
'என்ன மல்லிகை?' '
கொடி மல்லிகை
'என்ன கொடி?'

என்றவாறு கேட்டுக்கொண்டே போகலாம். விரும்பினால் 'என்ன கொடி?' என்று கேட்கையில் பழக்கொடி என்று சொல்லி மீண்டும் 'என்ன பழம்?' என்று சுற்றிச்சுற்றி வரலாம். இல்லையேல் வேறேதாவது சொல்லி விளையாடலாம் என்று இந்த விளையாட்டுகளைச் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் ஆர்வமுடன் விளையாடுவார்கள். கைக்கணினிகளில் நிமிடத்திற்கு நிமிடம் புதுப்புது விளையாட்டுகள் உலாவரும் இன்றைய வேகமான உலகில் பிள்ளைகள் ஒரே விளையாட்டைத் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு விளையாட மாட்டார்கள். எனவே அதற்கு ஏற்றவாறு புதுப்புது தமிழ்மொழிமூல விளையாட்டுக்களை நாம் தேடியறிந்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

பிறந்தநாள்விழாக்களை மிகுந்த செலவில் கொண்டாடும் நாங்கள், பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்களைக்கூடத் தமிழில் பாடுவதில்லை. வாழ்த்துகளைக்கூடத் தமிமிற் சொல்வதில்லை. அங்கே குழந்தைகளுக்கு வைக்கப்படும் எந்தவொரு போட்டியிலும் தமிழ்மொழி பாவிக்கப்படுவதுமில்லை. இத்தவறு முற்றுமுழுதாக பெற்றோரையே சாரும். அவர்கள் நினைத்தால் குறைந்தபட்சம் தமிழிலும் பிறந்தநாள் வாழ்த்தைக் கூறச் செய்யலாம். ஓரிரு போட்டிகளிலாவது தமிழ்மொழியை இடம்பெறச் செய்யலாம். இளையோரிடையே தமிழ்மொழியை ஊக்குவிக்க விரும்புவோர், தனித்தமிழில் இலகுவான கேள்வி-பதில் போட்டியை, சிறப்புப்போட்டியாக வைத்து வெற்றிபெறுபவர்களுக்கு அவ்விழாவில் கொடுக்கப்படும் பரிசுகள் அனைத்திலும் பெறுமதி மிக்கதான சிறந்த பரிசினைக் கொடுக்கலாம். இதன் மூலம் பிள்ளைகளிடையேயும் அவர்களின் பெற்றோர்களிடையேயும் தமிழ் மீதான ஆர்வத்தை நிச்சயமாக அதிகரிக்கச் செய்யலாம். இப்படியான போட்டிகள் ஒவ்வொரு பிறந்தநாள்க் கொண்டாட்டங்களிலும் வைக்கப்படுமெனின், பெற்றோரும் பிள்ளைகளும் மிகவும் விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் தங்களை அப்போட்டிக்குத் தயார்ப்படுத்திக்கொண்டு வருவார்கள்.

தாயகத்தில் மட்டுமன்றி சங்ககால வசிப்பிடங்களில் ஒன்றெனக் கருதப்படும் கீழடி அகழாய்வு மையம், மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் போன்றவற்றிலும், தமிழரின் வரலாறுகள் மறைக்கப்படுகின்றன, மாற்றப்படுகின்றன என்று புலம்பித் திரியாமல், எங்களுக்குத் தெரிந்த எங்கள் வரலாறுகளை, எம்மவரின் வரலாறுகளை எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லித்தரலாம். ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பிள்ளைகளுக்குத் தங்கள் தங்கள் வராலாறுகளை, தாங்கள் கடந்துவந்த பாதைகளைக் கூறலாம். தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் மாமாக்களின், சித்திகளின், சித்தப்பாக்களின், பெரியப்பாக்களின் மற்றும் அத்தைகளின் கதைகளைக் கூறலாம். அதனூடாக சங்க இலக்கியங்களில் காணப்படும் புறநானூற்றுக்கதைகளை அறிவதற்கான ஆர்வத்தினைக்கூட அவர்களிடைய தூண்டலாம். அதன்மூலம், எதிர்காலத் தொழில்நுட்பங்களை அவர்கள் தங்கள் காலத்தில் பயன்படுத்தி வரலாறுகளை மீட்டெடுக்கக்கூடியதாக இருப்பதுடன் அவர்களுக்கும் தமிழினத்தின் உண்மை வரலாற்றை அறிவதில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம்.

இவற்றிற்கெல்லாம் பொறுமையும் நீண்டகால அர்ப்பணிப்பும் தேவை. வீட்டில் அதைச் செய்வதற்குத் தாயின் பங்கே மிகமிக அத்தியாவசியமானதாகும். தாய்மொழியென்றே நாம் அழைக்கின்றோம். தமிழரான எமக்குத் தமிழே தாய்மொழி. ஆரம்பத்திலிருந்து எம்மை மிக அணுக்கமாகப் பேணி வருபவர் அன்னையே. குழந்தையைத் தூங்க வைப்பதற்காகத் தமிழ்த் தாலாட்டுப் பாடல்களைப் பாடலாம் அல்லத தமிழ்த் தாலாட்டுப் பாடல்களை இசைக்கவிடலாம். குழந்தைகள் காரட்டூன் பார்க்க அடம் பிடிக்கையில் தமிழ்மொழி மூலமான கார்ட்டூன்களையும் பார்க்கச்சொல்லி ஊக்கப்படுத்தலாம். ஏராளமான தமிழ்மொழி மூலமான கார்ட்டூன்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட கார்ட்டூன்களும் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன.

இவ்வளவு முயற்சிகள் நாம் மேற்கொண்டாலும், எமது இன்றைய சூழ்நிலையை நாம் கருதினால், கனடாவில் இங்கிருக்கின்ற எமது இளம் தலைமுறையினருக்கு அவர்களிடையேயான தொடர்பாடல் மொழியாக ஆங்கிலமே அமையப்போகின்றது. அதையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். ஏனெனில் அவர்கள் பாடசாலைகளில் பல்வேறு மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டவர்களுடன் ஒன்றாகப் படிப்பதாலும், கற்பித்தல் மொழி ஆங்கிலமொழியாக இருப்பதாலும் பாடசாலைகளில் அவர்களின் தொடர்பாடல்கள் அனைத்துமே ஆங்கிலமொழியிலேயே அமைகின்றன. எனவே பழக்கதோசத்தில் இயல்பாகவே அவர்கள் ஏனைய தமிழ்ப்பிள்ளைகளுடனும் ஆங்கிலத்திலேயே தொடர்பாடலை மேற்கொள்வார்கள். அதுமட்டுமன்றி அவர்களுக்குத் தங்களை வளர்த்துக் கொள்வதற்கு ஆங்கில மொழியறிவு மிகவும் அத்தியாவசியமானதும் கூட. ஆங்கிலமொழியறிவு இல்லாமல் இங்கு வாழ்வது கடினம். எனவே அவர்களுக்கு அவர்களின் தாய்மொழியான தமிழ்மொழி இரண்டாம் மொழியாகத்தான் இருக்கப் போகின்றது. அந்த இரண்டாம் மொழியிலும் அவர்கள் தேர்ச்சியுடையவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாம் பாடுபடுகின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், எமது உறவுகள் உலகின் பலபாகங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள். அவர்களின் பிள்ளைகள் அந்தந்த நாட்டு மொழிகளையே தமது முதல்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். எனவே இவ்வாறு பரந்து வாழும் எங்கள் உறவுகளின் பிள்ளைகளுக்கான பொதுமொழியாகத் தமிழ்மொழியே இருப்பதால் எமது பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி அவசியம் என்பதையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அதுமட்டுமன்றி கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களும் அரசுசாரா நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்குத் தமிழ்மொழி தெரிந்திருப்பதை விரும்புவதையும் காணக்கூடியதாக உள்ளது. எனவே கனடாவில் தமிழர் செறிந்து வாழும் இடங்களில் வேலைவாய்ப்பிலும் தமிழ்மொழியறிவு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதையும் நாங்கள் உணர்ந்து எங்கள் பிள்ளைகளுக்குப் புரியவைத்தல் வேண்டும்.

முப்பது நாப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவில் தமிழ்ப் பாடசாலைகள் அமையும் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இன்றைய நிலை? இன்று கனடாவில் சில வைத்தியசாலைகளிலும், வைப்பகங்களிலும் கூட தமிழ்மொழியிலான அறிவுப்புகள் மற்றும் சேவைகள் வழங்கப்படுகின்றன. வருங்காலம் எப்படி அமையும் என்று யாருக்கும் தெரியாது. ஒரு மரத்தை நடுபவன் அந்த மரம் தனக்கு உபயோகப்படும் என்று நினைத்து நடுவதிலும் பார்க்க தன் சந்ததி, அந்த மரத்தால் அதிக பயனடையும் என்று நினைத்தே நடுகின்றான். எனவே நாமும் பலனை எதிர்பாராது எம் கடமையினைச் செய்வோம். எமது இளம் தலைமுறை விரும்பியேற்கும் வகையில் அவர்களுக்குத் தமிழ்மொழி அறிவை ஊட்டுவோம். அவர்கள் தங்களது இளம் சந்ததிக்கு ஏற்ற முறையில் தமிழ்மொழியறிவைக் கொடுப்பார்கள் என்று நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்க்கை. காலம் பதில் சொல்லட்டும்.


நன்றி: தாய்வீடு (மே 2018)

1 comment: