Wednesday, January 13, 2010

பொங்கல் அவசியமா?


உழவர் திருநாள், தைப்பொங்கல், தைத்திருநாள், தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு என்று இன்றைய தேதியில் அழைக்கப்படுகின்ற இந்த நாள் அல்லது பண்டிகை கொண்டாடப்படுவது தற்போதைய சூழ்நிலையில் அவசியமா?

விவசாயிகளால் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்டதாக இந்தப் பண்டிகை பற்றிய கதைகள் இருக்கின்ற போதினில் இன்றைய நிலையில் மற்றையவர்களும் அதனைக் கொண்டாட வேண்டிய தேவையின் அவசியம் தான் என்ன?

சரி. இப்போது தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்த் திங்கள் தை முதலாம் நாள் அறிவிக்கப்பட்டிருப்பதால் புத்தாண்டினைப் புது நம்பிக்கைகளுடனும் புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் திட்டங்களுடனும் ஆரம்பிப்பதற்காக அதனைக் கொண்டாடலாம். பன்னிரெண்டாம் இராசியான மீனத்திலிருந்து முதலாம் இராசியான மேடத்திற்கு சூரியன் இடம்பெயர்வது தமிழ்த்திங்கள் சித்திரை ஒன்றிலாக இருப்பதனால், தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்த்திங்கள் தை முதலாம் நாளைக் கொள்வதா அன்றி தமிழ்த்திங்கள் சித்திரை முதலாம் நாளைக் கொள்வதா என்கின்ற சந்தேகம் இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக சோதிடத்தினை நம்புகின்றவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். இப்படியான சந்தேகங்களுக்குமப்பால், இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டியது அவசியம் தானா? பாரிய இன அழிப்பு மற்றும் இன்னல்களால் பாதிப்படைந்திருக்கும் நிலையில் இதனைக் கொண்டாட வேண்டியதற்கான காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா...?” என்றார் பாரதிதாசன்.
துன்பத்தில் துவண்டு போயிருக்கும் எவருக்குமே ஆறுதலளித்து நம்பிக்கை கொடுத்து இன்பம் ஊட்டவேண்டுமேயன்றி, அந்தத் துன்பியல் நிகழ்வுகளையே தொடர்ந்து நினைத்து வேதனைப்பட்டுக் கொணடிருப்பதால் பயனேதுமில்லை. ஏற்படுத்தப்பட்ட இழப்புகளை, உறவுகளை மறந்து விடுவதல்ல அதன் அர்த்தம். வேதனைகளையும் இழப்புக்களையும் உரமாக்கிக் கொண்டு மீண்டும் எழ வேண்டும். தனிமனிதனுக்கும் சரி, ஒரு இனத்திற்கும் சரி, இது பொருந்தும். விழவிழ எழுந்தவர்கள் தமிழர்கள். இனியும் எழுவோம். சென்றடைய வேண்டிய இடம் பற்றிய தெரிவு தெளிவானால் பாதைகள் பற்றிய கவலைகள் வேண்டியதில்லை. பாதைகள் மாறியேனும் பயணம் முடிவிடத்தை அடைந்து விடும். அந்த நம்பிக்கையை ஊட்ட வேண்டிய தருணம் இது.

பேய் சரிப்பட்டுவராது என்பது உறுதியாகத் தெரிந்த பின்னர், வேறு தெரிவுகளற்ற நிலையில் பிசாசை முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. எய்தவனை விடுத்து அம்பினை நோவதில் அர்த்தமுமில்லை. எம்விதியை மாற்றியவர்களின் விதியை மாற்றும் வாய்ப்பு இப்போது எம் கைகளில். மாற்றம் ஒன்று தான் மாறாதது. அந்த நம்பிக்கையை மனங்களில் விதைத்து பன்னிரெண்டாம் நாளில் அறுவடை செய்யவேனும் இந்தப் புத்தாண்டினைக் கொண்டாட வேண்டியது அவசியமே.


உங்கள் எல்லோருக்கும் என் உளப்பூர்வமான தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

3 comments:

 1. நினைச்சன். உங்கட புத்தியும் உப்புடி குறுக்கதான் இழுக்குமெண்டு. தெரியாத பேயுடன் கூட்டு வைச்சிருக்கறவை நல்லா தெரிஞ்ச பேய்கள் தானே? இன்னும் 2 ,3 வருசத்தில இன்னொரு புள்ளடி போட ஆசையோ? திரும்பவும் பழைய குருடி தானேகதவைத் திறக்கவேணும்.

  ReplyDelete
 2. பொங்கலோ பொங்கல்…

  ReplyDelete
 3. பொங்கலை தமிழ் புத்தாண்டாக அரசு அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.தமிழ் நாட்டு
  கருணா செய்த ஒரே நல்ல செயல் இது தான்.

  சித்திரை 1 ,வைணவ புத்தாண்டு.
  ஒரு நாள் நாரதன் தன்க்கு மனைவி இல்லை என்று பெருமாளிடம் கூறினானாம்.அதற்கு பெருமாள் பெண் உருவம் பூண்டு நாரதனுடன் 600 ஆண்டுகள் புணர்ந்து,60 குட்டிகளை போட்டானாம்.அந்த அறுபது குட்டிகளுக்கும் 60 வடமொழி பெயர்கள்

  அந்த வடமொழி பெயர்களை ஆண்டுகளுக்கு வைத்து அவற்றை தமிழ் ஆண்டுகள் என்கிறனர்.அந்த ஆண்டுகளை வரலாற்றை பதிவு செய்ய பயன்படுத்த முடியாது.ஏன் என்றால் 60 ஆண்டுகள் கழித்து முன்பு வந்த ஆண்டே மீண்டும் வரும்.ஆகையால் எந்தனையாவது பார்த்திப ஆண்டிலோ ,விரோதி ஆண்டிலோ ஒரு நிகழ் நிகழ்ந்தது என்று பழைய ஆவணங்களை பார்த்து கூற இயலாது. மேலும் பண்டைய தமிழர்கள் சைவம்,வைணவம் ,சமணம்,பௌத்தம் என்று பல சமயங்களை பின்பற்றினர்.ஆகையால் அந்த காலத்தில் மற்ற சமயத்தினர் எப்படி இந்த வைணவ புத்தாண்டை கொண்டாடி இருப்பர்? ஆகியால் திருவள்ளுவரின் பிறப்பை அடிப்படையாக கொண்ட தொடர் ஆண்டுகளை உடைய ஒரு நாள் காட்டியாக தமிழ் நாட்டு அரசு ஏற்று இருக்கிறது.பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்து இருக்கிறது.இப்போது நாம் தமிழ் ஆண்டு ௨0௪௧ [2041] இல் இருக்கிறோம்

  ReplyDelete