Wednesday, January 27, 2010

அறிந்தும் அறியாமலும் - ஆயிரத்தில் ஒருவன்

நான் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. அதனால் அவை பற்றிய அறிவும் மிகக் குறைவு. அப்படியானவொரு நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் பற்றிய எனது விமர்சனத்தினை ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். அத்துடன் அப்படம் சம்பந்தமான வேறுசில விமர்சனங்களையும் எனக்கு அனுப்பியிருந்தார். அந்த விமர்சகர்களைப் போன்று பிறமொழித் திரைப்படங்கள் பற்றிய அறிவோ மிகமிகக் குறைவு. இல்லையென்றே சொல்லலாம். அப்படியென்றால் எப்படி விமர்சிப்பது? எதனுடன் ஒப்பிடுவது? ஒப்பீடு இல்லாமல் ஒரு விமர்சனம் அமைய முடியுமா? ஆகவே இதனை ஒரு விமர்சனமாகவே கொள்ளமுடியாது என்பது எனக்கும் தெரிந்திருக்கிறது. ஆயினும் மேடை நாடகங்களுடன் இடையிடைப்பட்ட காலங்களில் உண்டான சிறிய பரிச்சயங்களின் அடிப்படையில் எனது பார்வையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.


என்னுடன் பணியிடத்தில் ஒன்றாக வேலை செய்பவர்களில் சிலர் முதலிலேயே பார்த்து விட்டு வந்து, “படம் சுத்த மோசம், எதுவுமே புரியவில்லை. லாஜிக்கே இல்லாத படம்” என்றனர். இடைவேளைக்குப் பின்னர் வரும் காட்சிகளில் வரும் தமிழிலான உரையாடல்கள் எதுவுமே புரியவில்லை என்றும், அது ஈழத்தமிழர்கள் பயன்படுத்தும் தமிழாக இருக்கலாம் என்றும் அபிப்பிராயப்பட்டனர். குடும்பத்தினருடன் அமர்ந்திருந்து இரசிக்கமுடியாத வகையில் பச்சையாகவே உரையாடல்கள் அமைந்திருந்ததாகவும் வருத்தப்பட்டனர். எனினும் என்னுடைய வேறுசில நண்பர்களின் அழைப்பின் பேரில் திரையரங்கினுள் அவர்களுடன் நுழைந்திருந்தேன்.


பரம்பரைப் பகைதீர்க்க ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பாண்டிய வம்சத்தவர்கள் சோழவம்சத்தின் பரம்பரையினரைத் தேடி அலைவதும், அவர்களின் இருப்பிடங்களை அடைவதில் உண்டாகும் தடைகளைத் தாண்டிப் பின் அவர்கள் அனைவரையும் வஞ்சித்துக் கொல்வதாயும் படம் அமைந்திருந்தாலும், சோழ இராச்சியத்தின் புலிக்கொடியினையும் பின் மன்னன் கைதிலிருந்து தப்பித்துக் கடற்கரையருகே, கப்பல்படை வருகின்ற கனவுடன் வீழ்ந்து இறப்பதையும் பார்க்கையில் பலருக்கும் அது கடந்தவருட மே மாதத்தின் நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டுவந்து விடுகின்றது. ஆயினும் மற்றைய பல விடயங்களுடன் ஒப்பிடுகையில் பல முரண்பாடுகள் இருப்பதை எற்கனவே பணியிடத்து நண்பர்கள் கூறியிருந்தனர். அதனால் தான் 'லாஜிக் இல்லாத படம்' என்று கூறியிருந்தனர். என்னைப் பொறுத்தவரை “ஆயிரத்தில் ஒருவன்” ஒரு குறியீட்டுப் படம். 'குறியீட்டுப் படம்' என்று திரைப்படங்களில் ஒருவகை இருக்கின்றதா என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆயினும் நானறிந்தவரையில் மேடைநாடகங்களில் 'குறியீட்டு நாடகம்' என்று ஒருவகை இருக்கிறது. சில விடயங்களை நேரடியாகச் சொல்வதில் இருக்கின்ற தயக்கங்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இவ்வகை நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. விடயம் தெரியாதவர்களுக்கு அந்த நாடகம் புரிபடாமலும், அர்த்தங்கள் அற்றதாகவுமே காணப்படும். சில வேளைகளில் எதிர்த்தரப்பினால் விசாரணைகள் எவையேனும் மேற்கொள்ளப்படுமிடத்து அவர்களைச் சமாளிப்பதற்காய் சில விடயங்களை மறைத்து விடுவதுடன், அவர்களுக்குச் சார்பானதாகவும் கருவினைத் திரித்துக் கூறுவதற்கு ஏற்ற வகையிலும் 'குறியீட்டு நாடகங்களை' அமைத்து விடுவதுண்டு. அந்த வகையில் 'ஆயிரத்தில் ஒருவன்' என்கின்ற திரைப்படமும் ஒரு குறியீட்டுப் படமே! (குறியீட்டுப்படம் என்கின்ற ஒருவகை, தமிழ்த்திரைப்படங்களில் இல்லையெனின், இப்போது அப்படியொரு புதிய புரட்சிக்கு வித்திட்டிருக்கின்ற இயக்குனர் செல்வராகவனுக்கு எனது தலைசாய்ந்த வணக்கங்களும் பாராட்டுக்களும்)


படத்தில் ஏழு வகையான தடுப்புப் பொறிகள் வருகின்றன. சிலவற்றை ஏனைய விமர்சகர்கள் அமானுஷ்ய சக்திகள் என்று எழுதியிருந்தனர். ஆயினும் கடந்த இருவருட வன்னி நிகழ்வுகளை மட்டும் அவதானித்திருந்தாலே அந்த அமானுஷ்ய சக்திகளின் சூட்சுமம் புலப்பட்டிருக்கும். கடலினுள் செந்நிற ஒளிப் படலங்கள் குறிப்பிட்ட பிரதேசங்களைத் தாண்டுகையில் அதனூடாகச் செல்பவர்களைத் தாக்குகின்றன. அவை மிதிவெடிகளைக் குறிப்பதாய் எனக்குப் பட்டது. பின் பொறிக்கிடங்குகளைக் கடப்பதற்காய் நடராஜர் சிலையின் நிழலினூடாக ஓடிச் செல்கிறார்கள். வடமுனைக் களத்தினூடாக முன்னேறுவதற்கு எத்தனையோ தடவைகள் முயன்றும் முகமாலைக் காப்பரணைக் காத்து வைத்திருந்தவை அங்கு அமைக்கப்பட்டிருந்த பொறிக்கிடங்குகளே! பல டாங்கிகள் இப்படியான பொறிக்கிடங்குகளில் மாட்டுப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த தகவல்கள் செய்திகளாய் வந்திருக்கின்றன. இறுதியாக வினோத ஒலிகளினால் மூவரும் பைத்தியம் பிடித்ததைப் போல் நடந்து கொண்டது எனக்கு ஒரு சில மணி நேரங்களில் முடிவடைந்த உண்ணாவிரதத்தினை நினைவிற்குக் கொண்டுவந்தது. அந்த ஒலிகளோ முத்துக்குமாரின் தியாகத்தின் பின் ஏற்பட்ட சலசலப்பினை ஞாபகப்படுத்தியது. ஏனையவை பற்றி மற்றைய விமர்சகர்கள் ஓரளவிற்கு ஊகித்து எழுதியிருப்பதாலும். அவைபற்றிய புரிந்துகொள்ளல்கள் அவ்வளவு கடினமானதாக எனக்குப்படவில்லை என்பதாலும் அவற்றைத் தவிர்த்து விடுகின்றேன்.


சோழ வம்சத்தினரின் இருப்பிடத்தைச் சென்றடைந்த வயதான ஆராய்ச்சியாளர் நோர்வே-யினையும், அவரது மகளாக ரீமா சென் மற்றும் கார்த்திக்குடன் இணைந்துவரும் ஆண்ட்ரியா இணைத்தலைமை நாடுகள் மற்றும் மேற்கத்தைய நாடுகளினதும் குறியீடாகின்றார். படத்தின் பிரதான பாத்திரமான வில்லத்தனத்தின் உச்சபட்ச நடிப்பைக் காட்டும் ரீமாசென் எனது பார்வையில் மூன்று விடயங்களின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார். சோழவாரிசுகளின் முற்றுமுழுதான அழிவினை வேண்டி நிற்கையில் அது சிங்களத்தின் குறியீடாகின்றார், சோழமன்னனுடன் உறவாடி உள்ளக இரகசியங்கள் அறிந்து சோழமன்னனின் படைவலிமை குறைப்பதற்காய் குடிதண்ணீரில் நஞ்சு கலந்து பின் படைகளுடன் இணைந்து கொள்கின்ற அந்தத் துரோகத்தனம் எதை அல்லது யாரைக்குறிக்கின்றது என்பது வெளிப்படையானது. இந்த இரண்டு காரணிகள் பற்றிக் குறிப்பிடுவதற்கு செல்வராகவன் இப்படியொரு குறியீட்டுப்படம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அவரது வாழ்க்கைச் சூழலில் இவை பற்றி வௌளிப்படையாகக் கூறினால்கூட எந்தவொரு பாதிப்பிற்கோ அன்றி அச்சுறுத்தல்களுக்கோ அவர் முகங்கொடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அந்த மூன்றாவது குறியீடாக, ஆரம்ப கட்டங்களில் தனது கொடூர முகத்தினைக்காட்டாது காய்களை நகர்த்துவதிலும் பின் தனது வெளிப்படையான முகத்தி்னைக் காட்டுவதிலும், அதிலும் குறிப்பாக சோழமன்னின் இடத்திலிருந்து தப்பி படைநடத்தி வருகையில், அது வரையில் (சோழ அரண்மனை தவிர்த்து) நாகரீக உடையணிந்து (shirt & trouser) காணப்பட்ட ரீமாசென் முதன்முதலாக பாரதப்பண்பாட்டின் சேலையணிந்து, அதே சேலைத்தலைப்பால் தன் தலை மீது இழுத்துப் போர்த்திக் காட்சியளிக்கையில் அப்படியே ஒரு இத்தாலியப் பெண்மணியே கண்களுக்குத் தெரிந்தார். வயிற்றுப் பிழைப்பிற்காய் வேலைதேடி ரீமாசென் கூட்டணியுடன் இணைந்து அலைந்து, ரீமாசென்னில் வெறுப்புற்றும் ஆண்ட்ரியாவின் மேல் காதலுடனும் தனக்கும் நடக்கும் போராட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லாமல் இருக்கும் கார்த்திக், தானும் சோழவாரிசுதான் என்பதை உணர்ந்து கொள்வதுவும், பின் சோழப்படைகளுடன் இணைந்து அவர்களைக் காப்பாற்றப் போரிடுவதும், அது தோல்வியில் முடிவடைய, பின் சோழவாரிசைக் காப்பாற்றி அழைத்துச் செல்வதுவும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைக் (போராட்டங்களின் இறுதி மாதங்களில் தாங்கள் வசிக்கும் நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதையும், பின் இப்போதும் நாடுகடந்த அரசொன்றை நிறுவி, தாயக விடுதலையிற்கான முயற்சியின் அடுத்த கட்டத்தினை நோக்கிய நகர்வில் இருப்பதையும்) குறிக்கின்றது.


ஒரு குறியீட்டுப் படமாக எனது பார்வையில் அலசுவதாலும், பதிவு நீண்டுவிடும் என்பதினாலும் படத்தின் ஏனைய அம்சங்கள் பற்றிய எனது பார்வையினைத் தவிர்த்து விடுகின்றேன். ஆயினும் “இது முழுக்க முழுக்க கற்பனையே” என்று படத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்படுவதால் எதற்காகப் பாண்டிய வம்மசத்துடன் இந்தக் கதையை முடிச்சுப்போட வேண்டும் என்கின்ற நியாயமான கேள்வியும் நிச்சயம் ஏற்படு்ம். தான் இருக்கும் சூழ்நிலையினையும் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் கருத்தில் கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்குனர், ஒரு குறியீட்டுப்படத்தில் தான் சார்ந்து கதைசொல்ல வரும் பாத்திரங்களுக்கு எதிரானவர்களின் சார்பாகவும் கதையைத் திரிக்கக் கூடியதாகவே படத்தினை அமைத்திருப்பார். விரும்பியோ விரும்பாமலோ இங்கேதான் பாண்டிய நாட்டுக்கதை இழுத்துவிடப்பட வேண்டிய தேவை எழுந்து விட்டிருக்கின்றது. பாண்டிய இராச்சியம் என்றவுடன் மதுரை நினைவிற்கு வருகிறது. மதுரையுடன் சேர்ந்து கூடவே கண்ணகியும் நினைவிற்கு வந்து விடுகின்றாள். தன் கணவனைக் கொன்றவனையும் அவன் குடிகளையும், ஏன் மொத்த மதுரையையுமே பின்னாளில் அவள் எரித்து விடுகின்றாள். ஆயினும் தான் சொல்ல வந்த விடயம் திரிபடையாமல் இருப்பதற்காய், ஆயிரமாண்டுகாலப் பழிதீர்க்க வரும் ரீமாசென் சோழமன்னனனை கூடுவதற்கு அழைப்பதாய்க்காட்டி அவளுக்கும் கண்ணகிக்கும் சம்பந்தமில்லை என்றும் காட்டிவிடுகின்ற இயக்குனரின் திறமை வியக்கத்தக்கதே.


“இந்தக்காலத்தில இன்னொருநாட்டில் இருப்பவர்கள் மீது எப்படிச் சென்று போர் தொடுக்க முடியும்? ரொம்பத்தான் காதுல பூச்சுத்தியிருக்காரு செல்வராகவன்” என்றுதான் பலரும் சொல்கின்றார்கள். அவர்கள் கல்மடுக்குள அணை உடைப்பு சம்பந்தமாக அந்தக்காலப்பகுதியில் வெளிவந்த செய்திகளை மீண்டும் ஒருதடவை இணையத்தில் தேடிப்பிடித்து படித்துக் கொள்வார்களாக.


படம் பார்த்துவிட்டு வந்தபின்பும் “நெல்லாடிய நிலமெங்கே...” நெஞ்சைப் பிழிய வைத்துக்கொண்டிருந்தது.


3 comments:

  1. வித்தயாசமான மற்றும் அருமையான பதிவு நண்பரே, தொடருங்கள்.

    ReplyDelete
  2. படத்தை நானும் பார்த்தேன்; உங்களளவிற்கு ஒன்றித்து உணரவோ, தொடர்பு படுத்தவோ தவறிவிட்டேன்...அத்தனை குரியேடுகளையும் செல்வறாகவன் நினத்தாரோ இல்லையோ, படத்தின் கீழ் பதிந்து பேணப்படவேண்டியவை.
    மேலும் எதிர் பார்க்கிறோம்..

    ReplyDelete