Friday, October 23, 2009

'தனி' குறும்படமும் தனிமையும்.

நேற்று மாலை அங்மோக்கியோ பொதுநூலகத்தில் 'தனி' குறும்பட நிகழவிற்கு நண்பன் ஒருவனுடன் சென்றிருந்தேன். சிங்கையில் நடைபெறும் வழமையான நிகழ்வுகள் போன்றே சிற்றுண்டி வழங்கலின் பின் நிகழ்வுகள் மாலை 06.30 அளவில் ஆரம்பமாயின. செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கும் கொஞ்சம் ஈயப்படும் என்றார் வள்ளுவர். ஆயினும் இங்கே சிங்கையில் நடைபெறும் அநேக நிகழ்வுகளிலும் வயிற்றிற்கு உணவளித்த பின்பே செவிகட்கும் விழிகட்கும் விருந்தளிக்கப்படகின்றன. ஒருவேளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எல்லோருமே பசி வந்திடப் பத்தும் பறந்துபோம் என்கின்ற ஔவையாரின் கருத்துக்களுடன் உடன்பட்டிருக்கக்கூடும்.


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் முயற்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த கொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.


என்று நல்வழிப் படுத்தி என் போன்றவர்களின் வயிற்றில் பால்வார்த்த ஔவைப்பாட்டிக்கும் நன்றி. பின் பாலப்பம் போன்ற தின்பண்டம் தந்த கவிமாலைப் பொழுதின் ஔவைப்பாட்டிக்கும் நன்றி. “வடை சூப்பரா இருக்கண்ணா.” என்ற கூடவந்த நண்பன் தங்கள் ஊரில் (விழுப்புரத்தில்) கையேந்திபவனில் சாப்பிட்ட தருணங்களை நினைவுகூர்ந்தான். உண்மையிலேயே வடையும் அன்னாசியில் செய்யப்பட்ட கேசரியும் அருமையாவே இருந்தன். 'அடு' எடுத்துச் சாப்பிட்டோம்.


தொடர்ந்து வழமைபோன்று தலைமையுரை, வரவேற்புரை என்பவற்றின் பின் குறும்படங்களின் வரலாறு பற்றிய ஒரு உரையினையும் அடுத்து 'இன்று' என்கின்ற குறும்படமும் பின் அதனைத் தொடர்ந்து 'தனி' குறும்படம் பற்றிய மதிப்புரைகளும் இடம்பெற்றன. 'தனி' மற்றும் 'தனிமை' என்கின்ற சொற்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் மிக அழகாக எடுத்துரைக்கப்பட்டன. ஒவ்வொருவர் பார்வையிலும் 'தனி' குறும்படத்தின் குறியீட்டுப் படிமங்கள் மாறுபட்டிருந்ததனை அவதானிக்கக்கூடியதாயிருந்தது. கவிஞர் பேராசிரியர் அப்துல் ரகுமான் அவர்கள் தனது நூலொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். ஒரு இலக்கியப் படைப்பானது வாசகரின் பார்வைக்கு ஏற்ப பல்வேறு கருத்துக்களையும் தரக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஒரே வாசகனுக்குக் கூட அது சிலவேளைகளில் வெவ்வேறு கருத்துக்களைத் தரக்கூடியதாக அமையவும் வேண்டும் என்றார். அவர் ஒருமுறை இரட்டை அர்த்தத்தில் திருக்குறளின் மூன்றாம் பிரிவாகிய காமத்துப்பால் பற்றி எழுதிய,


கடைப்பால்
எனவே
கலப்புப்பால்


என்கின்ற கவிதை வரிகளுக்கு வாசகர்கள் மூன்றாவது அர்த்தம் கூறித் தன்னை வியப்பில் ஆழ்த்தியதை விபரித்திருந்தார். ஆக 'தனி' குறும்படத்திற்கு அதுவும் வசனங்கள் எதுவும் அற்றவொரு குறியீட்டுப் படத்திற்கு அவரவர்கள் தங்கள்தங்கள் புரிதலுக்கு ஏற்றவாறு மதிப்பீடுகள் வழங்கியது ஏற்றுக் கொள்ளக்கூடியதே.


ஞானி ஓஷோ அவர்கள் ஏற்கனவே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தனித்தனித் தீவுகளே என்று கூறியிருக்கிறார்.ஒரு குடும்பமாகட்டும் அல்லது ஒரு சமூகமாகட்டும். அங்கே இருப்பவர்கள் எல்லோருமே எல்லா விதத்திலும் ஒத்த எண்ணங்களையும் விருப்பு வெறுப்புகளையும் கொண்டிருப்பதில்லை. அந்த வகையில் அவர்களின் உலகங்கள் வேறானவை. ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகளிலேயே அதாவது தங்கள் தங்கள் எண்ணங்களிலேயே வசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயினும் அந்தத் தீவுகளுக்கிடையே ஏற்படுத்தப் பட்டிருக்கும் பாலங்களே உறவுகள் என அழைக்கப்படுகின்றன. தேவைப்படும் பொழுதுகளில் அந்த உறவுப்பாலங்களில் அவர்கள் சந்தித்துக் கொள்கின்றனர். மற்றம்படிக்கு தங்களின் தனித்தனித் தீவுகளுக்குள் மட்டுமே அவர்களின் எண்ணங்கள்/வாழ்க்கை. இப்படியான உறவுப்பாலங்கள் யாவுமே துண்டிக்கப்பட்டவர்களையே நாம் தனிமையில் வாழ்கின்றவர்கள் என்கின்றோம். சிலர் தாமாக விரும்பி இவ்வாறான உறவுப்பாலங்களைத் துண்டித்துக் கொள்கின்றனர். இவர்கள் கீதையில் சொல்லப்படுவதைப் போல், தனிமையில் கூட்டத்தில் இருப்பதைப் போலவும் கூட்டத்தில் தனிமையில் இருப்பதைப் போலவும் உணரும் வல்லமை படைத்த ஞானிகள். சிலரோ ஏனையவர்களால் துண்டித்துக் கொள்ளப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களே வேதனைக்குரியவர்கள். தனிமையில் வாடித் தவிப்பவர்கள். பரிதாபத்திற்குரியவர்கள்.


சி்ஙகையில் வசிக்கும் இளைஞர்களான பாண்டித்துரை மற்றும் அறிவுநிதி ஆகியோரின் தயாரிப்பில், கவிஞர் அய்யப்பமாதவன் அவர்களின் நெறியாள்கையில் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் 'தனி' குறும்படம் தனிமையில் வாடித் தவிக்கும் ஒருவனின் நிலையை வெளிக்கொணர்வதாக அமைந்திருக்கிறது. தனியாக தனிமையில் வசிக்கும் ஆடவன் ஒருவனின் அன்றாட வாழ்க்கையினை ஏறத்தாழ பத்து நிமிடங்களிற்குள் சித்திரிக்கும் இக்குறும்படத்தினை மூன்று தடவைகள் பார்த்த பின்னரேயே மதிப்பீடு வழங்கியவர்களின் புரிதல்களை ஓரளவிற்காவது உணர்ந்து கொள்ள முடிந்தது. (இக்குறும்படம் ஏற்கனவே இந்தியாவில் திரையிடப்பட்டு http://youthful.vikatan.com/youth/documant28072009.asp என்கின்ற தளத்தில் பார்வையிடக் கூடியதாக இருப்பதை ஏற்கனவே என்னுடன் வந்திருந்த நண்பன் கூறியிருந்தான்.) கதையின் பாத்திரமான ஆடவனுடன் சில செக்கன்களே காட்டப்படும் பெண்ணும் ஒரு பூனையுமே இக்குறும்படத்தில் இடம்பெற்ற உயிருள்ள பாத்திரங்கள்.


குறும்பட வெளியீட்டினை நடாத்திய பின் தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களின் உரையும் அதைத் தொடர்ந்து அவருடனான கலந்துரையாடல் என்கின்ற பெயரில் கேள்வி பதில் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. சில வாரங்களுக்கு முன்னர் இதே தமிழ் திரையுலகிலிருந்து இயக்குனர் சேரன் அவர்களின் உரையும் அவருடனான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது. அன்றைய நிகழ்வில் பார்வையாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இயக்குனர் சேரன் அவர்கள் முதலெழுத்து (initial) இல்லாமல் வெறுமனே சேரன் என்றே தனது பெயரினைப் பாவிப்பதைத் தவறென்று ஏற்றுக் கொண்டாலும் இனிமேலும் அதை மாற்றுவதற்கில்லை என்று வெளிப்படையாகச் சொல்லிய பாங்கு அவர் மீதான மரியாதையை என்னுள் அதிகரிக்கச் செய்திருந்தது. ஆயினும் தரமான, குடும்பத்துடன் அமர்ந்திருந்து இரசிக்கக் கூடிய தமிழ்த் திரைப்படங்களைத் தரமுடியாதிருப்பதற்கான பிரதான காரணமாக இருப்பது தமிழ் இரசிகர்களே என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குத்துப் பாடல்களையும் அங்கங்கள் அனைத்தையும் அரைகுறையாகக் காட்டும் விதமாக ஆடையணிந்து வரும் நடிகைகளையும் கொண்டிருக்கும் படங்களுமே வெற்றி பெறுவதாகவும். கலாச்சார விழுமியங்களைப் பேணியவாறு வரும் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நட்டத்தினையே ஏற்படுத்துவதால் எந்தவொரு தயாரிப்பாளருமே அவ்வாறான படங்களில் முதலீடு செய்வதற்கு தயாராயில்லை என்பதுவே யதார்த்தம் என்றார். ஆயினும் விதிவிலக்காகவே அவரின் ஆட்டோகிராப் படம் வெற்றியீட்டியது என்றும் பொக்கிஷம் படம் நட்டத்தையே ஏற்படுத்தியதாகவும் கூறி, தமிழ் இரசிகர்கள் மீதே அதற்கான பழியினைச் சுமத்தியிருந்தார்.


ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் பல்வேறு இரசனைகள் வக்கிரங்கள் இருந்தாலும் சமூகம் என்று வருகின்ற போது அவர்களுக்குள் தங்களது தனிமனித வக்கிர எண்ணங்களை மறைத்துக் கொண்டு தன் சமூகம் தன் குடும்பம் என்கின்ற எண்ணமே மேலெழுகின்றது. குத்துப் பாடல்களையும் அரைகுறை ஆடை அழகிகளையும் இரசிக்கும் ஒவ்வொரு மனிதனும் தன்னை அல்லது தன் குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் அவ்வாறு ஆடையணிவதையோ அல்லது அவ்வாறான படங்களைத் தன் குடும்பத்தவருடன் சேர்ந்திருந்து பார்ப்பதையோ விரும்புவது கிடையாது. தனிமனித விருப்பம் வேறு. அதே தனிமனிதர்கள் பலர் ஒன்று சேர்ந்து உருவாக்கியிருக்கும் சமூகம் என்பது வேறு. 'தாவணிக் கனவுகள்' என்கின்ற பாக்கியராஜ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படத்தில்கூட இவ்வாறானவொரு காட்சியமைப்பு இருக்கிறது. திரையரங்கிற்கு தன் தங்கைகளுடன் செல்லும் ஏழைக் கதாநாயகன், படத்தில் ஆண்பெண் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வரும் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னிடமிருக்கும் நாணயங்களைக் கீழே போட்டுவிட்டு தன் தங்கைகளைக் கீழே குனிந்து அவற்றைத் தேடுமாறு கூறுவார். இறுதியில் அப்படியான ஒரு காட்சி வரும்போது கீழே போடுவதற்கு அவரிடம் பணமிருக்காது. அப்போது அவரின் குட்டித் தங்கை ”அண்ணா காசு கீழே போடவில்லையா?” என்று கேட்பது, படம் பார்த்து பல வருடங்கள் கழிந்த பின்பும் இன்னமும் மனதில் நிற்கிறது. ஆக திரையுலகத்தில் உள்ளவர்களுக்கும் இப்படியான உண்மைகள் தெரிந்திருந்தும், அவர்கள் இன்னமும் தனிமனித வக்கிரங்களைத் தீர்க்கும் வகையிலான படங்களை எடுத்துத் தங்கள் கல்லாப்பெட்டிகளை நிரப்பிக் கொள்கின்றார்கள் என்பதே உண்மை. அவர்கள் ஒரு சமுதாயத்தின் விருப்பிற்கேற்ப படமெடுக்கவில்லை. மாறாக நீங்கள் விரும்பிப் பார்ப்பதையே நாங்கள் தருகின்றோம் என்றுகூறித் தம்மை நியாயப் படுத்திக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


இயக்குனர் சேரனும் சரி, ஒளிப்பதிவாளர் செழியனும் சரி, தமிழ்த்திரையுலகில் காணப்படும் குறைகளை அவர்கள் அந்தத் துறையில் இருந்தாலும் வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் திரு. செழியன் அவர்கள் மேலும் ஒருபடி மேலே போய் பிற மொழிகளில் காணப்படும் தரமான திரைப்படங்களைச் சிலாகித்தும் அவற்றையும் தமிழ் இரசிகர்கள் பார்வையிட வேண்டும் என்று சொன்னதுடன் மட்டுமல்லாது அவ்வாறான தரமான பிறமொழிப் படங்கள் பதினைந்தினை தான் பாண்டித்துரை அவர்களிடம் கொடுத்திருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் அவற்றைப் பிரதி பண்ணி வீட்டில் சென்று பார்வையிடுமாறும் கூறினார்.


எப்படி ஒரு ஒளிப்படக் கருவியானது தான் காண்பவற்றை எந்தவித உணர்ச்சி வெளிப்பாடுகளுமின்றி அப்படியே பதிவு செய்து கொள்கிறதோ, அவ்வாறே ஒளிப்பதிவாளர் செழியனும் தனது உரையின் போதும், பின் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதும் ஏற்றவிறக்கமின்றிய உணர்ச்சிவசப்படாத ஒரே குரலிலேயே பதிலளித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் நான் மிகவும் இரசித்த 'மறைபொருள்' என்னும் தலைப்பிலான குறும்படம் கீழே உங்கள் பார்வைக்காக.

3 comments:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பா,... காணோளி முன்பே பார்த்துள்ளேன்...

    ReplyDelete
  2. தவறவிட்டு விட்டேன் என்ற வருத்தத்தோடு...நன்றாக விபரித்துள்ளீர்கள்...சேரனோடு எனக்கும் திரைப்படம் தொடர்பாக அவர் தெரிவிக்கும் சில கருத்துக்களோடு முரன்பாடு இருக்கிறது. தான் எடுத்த படம் எப்போதும் நன்றாகவே இருக்கும் என்று அடிமுட்டாள்தனமாக வாதிடுவார். மாயக்கண்ணாடி, பொக்கிஷம் இரண்டும் அவரின் தோல்விப்பட வரிசையில்...அதை அவரால் ஏற்க முடியவில்லை....!

    ReplyDelete
  3. the film was simple to the point. title of the film is very apt.

    ReplyDelete