Saturday, April 11, 2009

கடவுள் pass-ஆ fail-ஆ?

நேற்று முன்தினம் வியாழக்கிழமை அந்தி்ப் பொழுதில் அலுவல் ஒன்றிற்காக Little India விற்கு செல்ல நேர்ந்தது. சென்ற இடத்திற்கு அண்மையில்தான் செரங்கூன் வீதியில் வீரமாகாளி அம்மன் ஆலயம் இருக்கிறது. அன்று ஏதோ விஷேசம் போல, கூட்டம் சற்றே அதிகமாய் அலைமோதியது. வழமையாக எனது நண்பனொருவனுடன் அந்த வழியால் செல்லும் போது கோவிலுக்குள்ளும் செல்வது வழக்கம். அவனது நோக்கம் பற்றி எனக்குத்
தெரியாது. ஆனால் எனது பிரதான நோக்கம் உண்பதற்கு அங்கே ஏதாவது இருக்கும் என்பதாகும். இங்கே வந்தபிறகு கோவில்களுக்கு செல்வதே இரண்டு நோக்கங்களுக்காக. ஒன்று ஊர் நண்பர்களைச் சந்திக்கலாம். மற்றது ஊர்ச் சாப்பாடு. மற்றம்படிக்கு எனக்கும் கடவுளுக்கும் (அப்படி ஒருவர் இருந்தால்) ஒட்டுமில்லை உறவுமில்லை.

அன்றைக்கும் ஒரு பிடிபிடிக்கலாம் என்ற நோக்கத்துடன் உள்ளே சென்றேன். பின்பக்கம் சென்றதும் புரிந்துவிட்டது இன்றைக்கு நல்ல வேட்டையென்று. ஆம்! எனக்கு பிடித்தமான உணவு அங்கே வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. உண்மையிலேயே மிளகு கலந்த அந்த சாதத்தின் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனாலும் ஈராண்டுகட்கு முன்னர் அதை முதன்முதலில் பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ருசித்ததில் இருந்து அந்த உணவு எனக்குப் பிடித்துக் கொண்டு விட்டது. உணவை உண்டு முடித்ததும் இன்னும் கொஞ்சம் என்றது நாக்கு, வயிறல்ல. இன்னொருமுறை எடுத்தால் மிகமிக அதிகமாகி விடும். எனவே நாக்கை கட்டுப்படுத்திக்கொண்டு முன்னால் வந்தேன்.

வள்ளி தெய்வானை சகிதமாக வெள்ளி மயிலேறி முருகப் பெருமான் உலாத்தலுக்கு ஆயத்தமாயிருந்தார். அவரைக் காவுவதற்காக நான்கு பக்கமும் தலா ஐந்து பேராக மொத்தம் இருபது பேர்.

கடவுள் இருக்கிறார் என்பது உண்மையோ பொய்யோ இருப்பதாகச் சொல்லப்படும் கடவுள்களில் எனக்குப் பிடித்த கடவுள் இந்தக் கந்தன் தான். என் பால்யவயதுச் சிநேகிதன் அவன். ஏனோ தெரியவில்லை சின்ன வயதில் அவனை எனது ஒரு நெருங்கிய சிநேகிதனாகவே நினைத்து வைத்திருந்தேன். எனக்கும் அவனுக்கும் ஏராளமான கொடுக்கல் வாங்கல்களும் அப்போதிருந்தன. அந்த நேரத்தில் ஊரில் எங்கள் வீட்டிற்கு அணமையில் அமைந்திருந்தது அவனின் ஆலயமாய் இருந்ததினாலோ அல்லது இருக்கின்றதாய்ச் சொல்லப்படுகின்ற கடவுளரிடையே அவன்தான் வயதில் குறைந்தவனாய் இருந்ததினால் ஏற்பட்ட பிரியத்தினாலோ, இல்லை நானும் அவனது பெயரைக் கொண்டிருந்ததாலோ அல்லது இவை எல்லாவற்றினாலுமாகவோ, அவனை நான் எனது சிறுபிராயத்தில் எனது ஒரு நண்பனாக வரித்துக்கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கோவில் திருவிழா ஒவ்வொரு மாதமும் வாராதா என்கின்ற ஏக்கம் இருக்கும். சுவாமி காவுவதற்கு என்வயதொத்த நண்பர்களிடையே போட்டியிருக்கும். நாங்கள் சிறுவர்களென்பதால் சண்டேசுவரர் தான் எங்களிடம் சரணடைவார். முருகா! எப்படா நான் வளர்ந்து எப்படா உன்னைத் தூக்கிறது என்று நினைப்பேன். ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான இடப்பெயர்வுகளும் வாசித்து உட்கொள்ளப்பட்ட கருத்துக்களும் விதண்டாவாதம் கதைப்பதனால் அறிவை வளர்த்ததாய் எண்ணி வளர்த்து வைத்திருக்கும் ஆணவமும் எங்களுக்கிடையிலான உறவினைத் துண்டித்துவிட்டிருந்தன. ஏனோ தெரியவில்லை அந்த நேரத்தில் என் சிறுவயது நினைவுக்ள மனதில் அலைமோதின. சிரித்துக் கொண்டேன்.

முருகா நீ உண்மையிலேயே இருக்கின்றாயா? அப்படியானால் ஏன் இத்தனை இடர்கள்?தேவர்கள் துயர்தீர்க்கவென்று அவதரித்ததாய்ச் சொல்லப்படுபவனே! எங்கே நீ? நெற்றிக் கண்ணிருந்து வந்தவனே! அரக்கர்களிடமிருந்து அடியவரைக் காப்பதற்காய் முப்புரங்களை எரித்ததாய்ச் சொல்லப்படும் உன் அப்பன் எங்கே? அரக்கர்களும் அந்நிய அரக்கியும் கிழக்கோட்டான்களும் குஞ்சுகுரும்பான்களுடன் என் உறவுகளை அழித்துக் கொண்டிருக்கையில் தமிழ்க்கடவுள் என்று சொல்லப்படுகின்ற நீ, அந்த அப்பாவித் தமிழரைக் காக்காமல் என்ன செய்கிறாய்? நீயெல்லாம் ஒரு கடவுள். உனக்கெல்லாம் ஒரு கோயில். என் அறியாப்பருவத்தில் உன்னைப் போய்க் காவ நினைத்தேனே. சரி நீ இருப்பது உண்மையானால் இப்போது உன்னைக் காவச் செய் பார்க்கலாம்.

பராசக்தி மைந்தனுக்குப் பரீடசையை வைத்துவிட்டு காவுபவர்களைப் பார்த்தேன். சிலர் வேட்டியுடனும் பெரும்பாலானோர் நீளக்காற்சட்டையுடனும் மேலங்கியுடனுமே இருந்தனர்.

வீதிஉலா (உள்வீதி தான்) ஆரம்பித்தது. பின்கம்பில் இரண்டாவதாக நின்றவர் எனக்கு கையசைத்து அருகில் வருமாறு அழைத்தார். அங்கு நின்ற ஐவரிலும் அவர் சற்று உயரமாக இருந்தார். அவரை வேறெங்கும் பார்த்ததாய் நினைவில்லை. இருந்தும் அருகில் சென்றேன். இதைச் சற்றுப் பிடியுங்கள் என்றவாறே என்தோளினைக் காவுகம்பின் அருகில் இழுத்துவிட்டு அவர் விலகினார். திகைப்பிலிருந்து விடுபட்டு அவரைத் தேடினேன். காணமுடியவில்லை கூட்டத்துடன் கலந்து விட்டார்.

வேலைய்யா! இது உன் வேலையா? மெய்சிலிர்க்க மயிர்ககால்கள் குத்திட்டன.
என்பக்கத்தில் நின்றவர்களில் நான் சற்று உயரமாயிருந்ததால், அதிகபாரம் என் தோள்களில். உனக்கு சவால் விட்டதற்காய் அதிகம் சுமக்க வைக்கிறாயா சுப்பிரமணியா?

வீதியுலா முடித்து வீடுவந்து சேர்ந்த போதும் நடந்ததை நம்ப மனது மறுத்தது.

முகம் அலம்புவதற்காய் குளியலறைககுச் சென்றேன். அலம்பிவிட்டு முகம் பார்க்கும் கண்ணாடியை நோக்கினேன்.

“சரியான ஈனா வாவன்னாடா நீ!” என்றது தளவாடியில் தெரிந்த எனது விம்பம்.

“ஏன்? ” என்றேன்.

“பின் எனன? உன்னை அழைத்தவனும் அதிக பாரம் தாங்கமாட்டாமல் தான்
உன்னிடம் சுமத்தியிருப்பான்.”

“பலர் நிற்க என்னை எதற்காக அழைக்க வேண்டும்?” தடுமாறினேன்.

“உன்னைப் பார்த்த உடனேயே எல்லோருக்குமே தெரிந்துவிடுமே நீயொரு இளிச்ச வாயன் என்பது.”

அப்படியென்றால் இது சும்மா ஒரு coincidence தானா?

அதுதானே கடவுள் என்று ஒன்று இருந்தால் இப்படியெல்லாம் அநியாயம் நடக்குமா? அதுவும் நச்சுவாயு அடிக்கவும் அந்த நமச்சிவாயம் பார்த்துக் கொண்டிருககுமா? ஆலகால நஞ்சருந்திய நீலகண்டன் என்றல்லவா அது அழைக்கப்படுகிறது.

28 comments:

 1. //அதுதானே கடவுள் என்று ஒன்று இருந்தால் இப்படியெல்லாம் அநியாயம் நடக்குமா? அதுவும் நச்சுவாயு அடிக்கவும் அந்த நமச்சிவாயம் பார்த்துக் கொண்டிருககுமா//

  இப்படி பல விடயங்கள் சொல்லலாம்
  உங்கள் ஆதங்கம் புரிகின்றது.... தீர்வுதான் தெரியவில்லை

  ReplyDelete
 2. உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
  கடவுள் எங்கும் இருக்கிறார் எல்லாத்திலும் இருக்கிறார் என்று தானே படித்தோம் ( புராணங்கள் ஊடாக )( புராணங்கள் உண்மையா பொய்யா என்று ஒரு வாதம் வைக்கலாம் போல இருக்கு இப்போ பார்க்க போனால்)
  ஆனாலும் கடவுளும் ஒரு நாள் பதில் சொல்லத்தான் வேணும் இது எல்லாத்துக்கும்.

  ReplyDelete
 3. //
  எனக்கும் அவனுக்கும் ஏராளமான கொடுக்கல் வாங்கல்களும் அப்போதிருந்தன.
  //

  என்னது...கொடுக்கல் வாங்கலா?? நீங்க கொடுத்திருப்பீங்க...உண்டியல்ல காசு போட்ருப்பிங்க, அர்ச்சனைக்கு தேங்காய் பழம் கொடுத்திருப்பீங்க, அபிஷேகத்துக்கு பால் கொடுத்திருப்பீங்க...காணிக்கைன்னு முடிய கொடுத்திருப்பீங்க....

  ஆனா எதாவது வாங்கியிருக்கீங்களா?? அப்புறம் என்ன கொடுக்கல் வாங்கல்?? :0))

  ReplyDelete
 4. \\“பலர் நிற்க என்னை எதற்காக அழைக்க வேண்டும்?” தடுமாறினேன்.\\

  நண்பரைத்தானே உரிமையுடன் அழைக்க முடியும்...

  ReplyDelete
 5. எமது புலன்களுக்கு புலப்பட்டால் அந்த கடவுள் கடவுள் இல்லை என்று சொல்லமாட்டேன் ஆனால் கடவுளை pass-ஆ fail-ஆ?
  என்று பைனரியாக அலசுதை ஏற்று கொள்ளமாட்டேன் என்னைப்பொறுத்தவரை இப்போதைய என் கடவுள் சோனியா காந்தி அல்லது ஒபாமா இந்த சிவன் சக்தி கொடுத்த நஞ்சை இலங்கையிடம் இருந்து உள்வாங்கி
  நஞ்சருந்திய ஒபாகண்டன் என்று பெயர் எடுப்பது எப்போது என்பதை சிந்திக்கிறேன்,அத்துடன் எனது நண்பர் தனக்கும் முருகனுக்குமான தொடர்பு பல்வேறு காரணங்களால் குறைந்துவிட்டது என்றார், ஆனால் அவருக்கு வள்ளி தெய்வனை போல் இரு காதலிகள் இருப்பதை கடவுள் செயல் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

  நன்றி
  க.ஆரூரன்

  ReplyDelete
 6. பலர் நிற்க உங்களை அழைத்தன் காரணம் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பிரசாதம் வாங்கி வாட்ட சாட்டமாக இருந்திருக்கலாம் இல்லையா? coincidence இதில் எப்படி வந்தது?

  ReplyDelete
 7. புத்தன் பாதி சிங்கம் பாதி கலந்து செய்த கலவை நான்..!!
  உள்ளே புத்தன் வெளியே சிங்கம் விளங்க முடியாக்கவிதை நான்..... தொடர்ந்து பாடி முடிக்கவும் பிளீஸ்...!!!
  ஆளாவந்தான் இலங்கையை ஒரே குடைக்குள் கீழ் ஆளாவந்தான்

  ReplyDelete
 8. எமது பின்னுட்டங்கள் நேரடியாக update செயப்படாமல் இணையத்தில் உனது approval காக காத்திருக்கும் நிலையும் ஒருவித கடவுள் நிலை தான் நீ கட்டுரை "படைக்கிறாய்" எங்கள் comments அழிக்கிறாய் அப்படியே மற்றங்களும் செய்கிறாய் சொல்லபோனால் சிவனின் ஜந்தொழிலையும் இணையம் வாயிலாக செய்கிறாய் அப்போ நீ கடவுளா? அல்லது இணையத்தை கண்டுபிடித்தவன் கடவுளா? .......... அப்படியே எல்லா கூறுகளையும் கடவுளா கடவுளா என்று கேட்டு கொண்டே செல்லவும் இறுதியில் கடவுள் தெரிவார்...!!! "அய்யோ கடவுளே" ஆளைவிடு சாமி..!!!
  மீண்டும் க.ஆரூரன்

  ReplyDelete
 9. ஒரு தந்தையின் மைந்தா நீ நமசிவாயன் பையனுக்கு பரீட்சை வைக்கிறீயா? இது கடவுளின் எளிமையை உன் முலம் http://chummaah.blogspot.com வாயிலாக எம்மை வந்தடைகின்றதை கடவுள் செயல் என்போமா அல்லது விஞ்ஞான விளக்கம் கொடுக்க முயற்சிப்போமா?விஞ்ஞான விளக்கம் காண முனைந்தால் தமிழர்களும் தமது அறிவுதிறனை கூட்டி இரயான ஆயுதம் என்ன அணுகுண்டே சொந்தமாக தயாரித்து சொந்த காலில் நிற்க வேண்டும் அல்லது கடவுளை கூப்பிடுவதை தவிர்க்க முடியாது

  நன்றி க.ஆரூரன்

  ReplyDelete
 10. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆ.ஞானசேகரன்

  ReplyDelete
 11. நன்றி Priyan, உங்கள் வருகைக்கம் கருத்திற்கும்.

  ReplyDelete
 12. தங்களின் வருகைக்கும் தகவல்களிற்கும் நன்றி Sharepoint the Great. உங்கள் தளத்திற்கும் சென்று வந்தேன். மீண்டும் நன்றி

  ReplyDelete
 13. நன்றி “அது சரி” உங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
  //
  என்னது...கொடுக்கல் வாங்கலா?? நீங்க கொடுத்திருப்பீங்க...உண்டியல்ல காசு போட்ருப்பிங்க, அர்ச்சனைக்கு தேங்காய் பழம் கொடுத்திருப்பீங்க, அபிஷேகத்துக்கு பால் கொடுத்திருப்பீங்க...காணிக்கைன்னு முடிய கொடுத்திருப்பீங்க....

  ஆனா எதாவது வாங்கியிருக்கீங்களா?? அப்புறம் என்ன கொடுக்கல் வாங்கல்?? :0))
  //

  அந்த வயசில அதெல்லாம் சகஜமுங்கோ :-)

  ReplyDelete
 14. உங்கள் வருகைக்கு நன்றி “அறிவே தெய்வம்”.
  //
  நண்பரைத்தானே உரிமையுடன் அழைக்க முடியும்...
  //
  உண்மைதான், ஆனால் அழைத்தவரை எனக்கு முன்னப்பின்ன தெரியாதே. அப்பறம் எப்படி?

  ReplyDelete
 15. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆரூரன்.
  //
  இந்த சிவன் சக்தி கொடுத்த நஞ்சை இலங்கையிடம் இருந்து உள்வாங்கி
  நஞ்சருந்திய ஒபாகண்டன் என்று பெயர் எடுப்பது எப்போது என்பதை சிந்திக்கிறேன்
  //
  சிவனுக்கு எங்கே சக்தி நஞ்சு கொடுத்தாள்? அவள் நஞ்சு இறங்குதைத் தடுத்தாள்...

  //
  எமது பின்னுட்டங்கள் நேரடியாக update செயப்படாமல் இணையத்தில் உனது approval காக காத்திருக்கும் நிலையும் ஒருவித கடவுள் நிலை தான் நீ கட்டுரை "படைக்கிறாய்" எங்கள் comments அழிக்கிறாய்
  //
  காரணகர்த்தாவே நீதானே வெண்ணை நல்லூரா (ஆரூரன் ஆரூரில் அச்சோவிற்காவே)

  ReplyDelete
 16. கடவுள்,நடப்பு வேதனை,நகைச்சுவை மூன்றையும் கலந்த விதம் அருமை நண்பரே.

  ReplyDelete
 17. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஷண்முகப்ரியன.

  ReplyDelete
 18. ஒரு flow விற்காக பழையகதையில் சிறு மாற்றம் செய்தாலும் வரிந்து கட்டிக்கொண்டு எதிர்க்கும் குணத்தினால் நீ வேலணை வலசு தான் என்பது மறுபடி நிரூபிக்கப்படுகின்றது
  ஸாரி இந்த நீங்கள் வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் ரசிகைகளின் மனம் புண்பட கூடாது

  இப்படிக்கு
  வெண்ணை உண்டகண்டன் ஆரூரன்

  ReplyDelete
 19. சிவனுக்கு எங்கே சக்தி நஞ்சு கொடுத்தாள்? அவள் நஞ்சு இறங்குதைத் தடுத்தாள்...
  இதுவும் coincidence தானா..??

  ReplyDelete
 20. மீள்வரவிற்கும் உங்களின் கருத்துகளுக்கும் நன்றி ஆரூரன்.
  coincidence எல்லாம் coincidence தான். coincidence அல்லாதவை எல்லாம் coincidence அல்ல. :-)

  ReplyDelete
 21. இப்போ coincidence எல்லாம் coincide ஆகி இருக்கின்றது என்று செல்ல வர்றியளா..???

  ReplyDelete
 22. மிக நன்று , மேலும் தொடர வாழ்த்துகள் ...

  ReplyDelete
 23. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி kirrukkan

  ReplyDelete
 24. அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.

  நானும் சிங்கையில் தான் இருக்கிறேன்.

  ReplyDelete
 25. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கோவி.கண்ணன்

  சந்தர்ப்பம் வாய்த்தால் சந்திப்போம்

  ReplyDelete
 26. சும்மானு சொல்லிட்டு சூப்பரா எழ்ழுதியுள்ளீர்
  நானும் சிங்கைதான்

  அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி பிரியமுடன் பிரபு.

  சந்தர்ப்பம் வந்தால் சந்திப்போம்

  ReplyDelete