Saturday, March 21, 2009

நன்றி கூறினால் பதிலுக்கு என்ன சொல்வது?

ஆங்கில மொழியினில் “Thank you” என்று ஒருவர் நாம் செய்த உதவிக்கு தனது நன்றியை கூறினால், அதை ஏற்றுக் கொள்ளும் முகமாக பதிலுக்கு நாம் “you are welcome” என்று சொல்கிறோம். ஆனால் தமிழில் “நன்றி” என்று கூறினால் பதிலுக்கு என்ன கூறுவது?
“நீங்கள் வரவேற்கப் படுகிறீர்கள்” என்று சொல்வது சரியாகுமா?

கடந்த வாரம் கனடாவில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். அந்த அழைப்பிற்கு பதிலளித்தவர் ஒரு இளைஞர். அவர் கொழும்பில் பிறந்து வளர்ந்ததுடன் சர்வதேசபாடசாலை (international school) ஒன்றினில் தனது கல்வியை மேற்கொண்டு பின் பட்டப்படிப்பிற்காக வெளிநாடு சென்றவர். தனது விடுமுறையினைக் கழிப்பதற்காக கனடா சென்றிருந்தார். அவருக்கு பெரிதாய் தமிழ் தெரிந்திருக்காது என்கின்ற எண்ணத்தில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்து உரையாடினேன்.

என்ன ஆச்சரியம்! அவர் தூய தமிழில் என்னுடன் உரையாடினார். ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட அவர் பிரயோகிக்கவில்லை. சாதாரணமாக எங்கள் பேச்சு வழக்கில் கலந்த விட்ட “sure”, “thanks” போன்ற வார்த்தைகட்குகூட அவர் “நிச்சயம்”,“நன்றி” போன்ற வார்த்தைகளையே பிரயோகித்து எனக்கு அதிர்ச்சியளித்தார்.
இத்தனைக்கும் அதுதான் அவருடனான எனது முதல் உரையாடல்.

இந்த உரையாடலுக்கு முதல்நாள் மாலை நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது ஒரு நண்பர் கூறினார், நாளையிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு (பங்குனி 14 முதல் பங்குனி 18 வரை), செண்பக விநாயகர் ஆலயத்தில் கம்பன் கழகத்தைச் சேர்ந்த கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் கம்பராமாயண சொற்பொழிவு நடைபெற இருப்பதாக. (“நாடு கெட்ட கேட்டுக்கு நரிக்கு உழுந்து வடை கேட்டிச்சாம்.”).

தொடர்ந்த உரையாடலில், ஜெயராஜ் அவர்களால் “வாராதே வரவல்லாய்” என்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களைக் கேவலப் படுத்தி, அவர்களை மீண்டும் தாயகத்திற்கு வரவேண்டாம் என்று வலியுறுத்தி சமாதான காலத்தில் எழுதப்பட்ட கட்டுரையும், அதற்குப் பதிலளிக்கும் முகமாக பிரான்ஸில் இருந்து கி.பி.அரவிந்தன் அவர்களால் எழுதப்பட்ட “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்” என்கின்ற கட்டுரையும் அலசப்பட்டன.

ஜெயராஜ் அவர்களினால் முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று புலம் பெயர்ந்த தமிழர்களால் தமிழ்மொழி புறக்கணி்க்கப்படுகின்றது என்பதாகும். எனக்குத் தெரிந்த வரையில் இதுவரையில் யாரும் என்னுடன் நான் மேலே குறிப்பிட்ட நபரைப் போன்று தூய தமிழில் உரையாடியதில்லை. அப்படி வேறுயாரும் உரையாடியும் நான் பார்த்ததில்லை. எனவே கம்பராமாயணத்துடன் சேர்த்து ஜெயராஜ் அவர்களின் இந்த் கருத்துடனும் என்னால் உடன்பட முடியவில்லை.

கம்பன் அபரபிரம்மன் என்பதிலோ அல்லது கம்பனின் தமிழ்ப் புலமையிலோ எனக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் வான்மீகியின் இராமாயணத்தையே தான் தமிழில் மொழிபெயர்ப்பதாகக் கூறி கம்பன் செய்த வம்(ப்)புகளை, கம்பனின் பக்கச் சார்பான தன்மைகளைப் பற்றி (கம்பராமாயணத்தை உண்மையென்று எண்ணி அதையே வரலாறாக நினைப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது) எழுதுவதென்றால் அது இன்னுமொரு இதிகாசத் தொடராக மாறிவிடக் கூடும். அது இந்தப் பதிவின் நோக்கமும் அல்ல.

சரி, “நன்றி” என்று ஒருவர் கூறினால் அதை ஏற்றுக்கொள்ளும் முகமாக பதிலுக்கு தமிழில் என்ன கூறுவது?
அந்த நபருடனான உரையாடலில் நான் “நன்றி” கூறியபோது பதிலுக்கு அவர் “நல்லது” என்று கூறினார்.

இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே.....

20 comments:

 1. If we are deserve to that THANKS, just tell PARAVAAYILLAI or give a smile.

  ReplyDelete
 2. நாடு கெட்ட கேட்டுக்கு நரிக்கு உழுந்து வடை கேட்டிச்சாம்.. :)

  சும்மா

  ReplyDelete
 3. நன்றி rav,
  “பரவாயில்லை” என்று கூறுவது “you are welcome” என்று ஆங்கிலத்தில் கூறுவதன் அர்த்தத்தை சரியாகப் பிரதிபலிக்குமா என்பதில் எனக்கு இன்னமும் குழப்பம் உள்ளது

  ReplyDelete
 4. உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சுபானு.

  ReplyDelete
 5. “மகிழ்ச்சி” என்று கூறலாமா?

  ReplyDelete
 6. "பரவாயில்லைங்க", "சரி இருக்கட்டுங்க", "நல்லதுங்க", "பரவாயில்லைங்க இருக்கட்டுங்க, நீங்க வேற இதுக்கெல்லாம் போய் ந‌ன்றி கின்றிங்ற‌ பெரியபெரிய வார்த்தைகள சொல்லிகிட்டு, நல்லதுங்க" என அனைத்தையும் ஒரேயடியாக உரைத்து ஒரு இக்கட்டான மன நெகிழ்ச்சி அல்லது உணர்ச்சிகளின் சங்கடத்திலிருந்து விடுபட்டு பேச்சு பறிமாற்றலை சகஜ நிலைக்கு கொண்டுவரலாம். ஆங்கிலத்தில் கூறும் பதிலானது பேச்சுப் பறிமாற்றலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு வாக்கியம். தமிழில் 'நன்றி' என்கிற வார்த்தைக்கு பிறகுதான் நன் மனதில் தோன்றும் நல்லுணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் பல வார்த்தைகள் கொண்டு 'இவர் எனக்கு நன்றி கூறியதற்காக நான் தலைகனம் பிடித்தவன் ஆகிவடவில்லை, இவருக்கு நான் உயர்ந்தவன் ஆகிவிடவில்லை, தானும் இவரை போன்ற ஒரு சாதா மனிதனே, தன்னால் முடிந்த ஏதோ ஒரு சிறு காரித்தையே தான் செய்கிறேன்' என்பன போன்ற பலவற்றை கூறி நம் 'நட்பு' எனும் பிம்பத்திற்கு பழுதேதும் வராமலிருக்க ப‌ல நல்ல வார்த்தைகளை கொட்டி நட்பிற்கு பாதுகாப்பு சுவர் எழுப்புகிறோம் . உள்வியல்படி பார்த்தொமேயானால் : நமக்கு நன்றி கூறுபவர் ஒருவர் பண்பாடறிந்த ஒழுக்கமுள்ள ஒரு "நல்ல மனிதர்" என்கிற உன்னத பிம்பத்தை நம் ஆதிக்கத்திற்கும் மீறி உள்மனதில் ஆழபதியவைக்கிறோம். இந்த கனத்தில், நன்றியை பெருபவரைவிட நன்றி கூறியவரே மிக உயர்ந்து்ம் கனந்தும் நிற்கிறார். அந்த உயர்ந்த மனிதரின் (நாம் எதிர்பார்த்து எதிர்பார்க்காத) பண்பாட்டு வெளிப்பாட்டின் அழுத்தம், நல்லொழுக்கத்தின் அழுத்தம் காரணமாக நம் மனதிலிருந்து குபீரென வெளிப்படும் உணர்ச்சி பொங்களிலிருந்து விடுபடவே சில சமயங்களில் பிதற்றவும் செய்கிறோம் அல்லது செய்வதறியாமல் திகைத்தும் நிற்கிறோம்.

  நன்றி

  மாசிலா

  ReplyDelete
 7. நன்றி மாசிலா உங்கள் வரவிற்கும் விரிவான விளக்கத்திற்கும்.

  இப்படி ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற “you are welcome” போன்று ஒரு வாக்கியமாய் இல்லாமல் அந்தக்கணத்தினில் மனதில் தோன்றுவதைக் கூறுவதாக இருப்பது தமிழ் மொழியின் பலமாகக் கொள்ளலாமா? இல்லை அது தமிழ் மொழியின் பலவீனமா?

  ReplyDelete
 8. ----------------
  Anonymous said...
  “மகிழ்ச்சி” என்று கூறலாமா?
  ----------------

  மகிழ்ச்சி என்றும் கூறலாம். வேறு ஏதாவது மிகவும் பொருத்தமான வாக்கியங்கள் கிடையாதா?

  ReplyDelete
 9. சிறு புன்னகை போதுமே..

  ReplyDelete
 10. நன்றி சுபானு, நேரில் உரையாடும் போது புன்னகைக்கலாம். தொலைபேசியில் உரையாடும் போது என்ன செய்வது?

  ReplyDelete
 11. Thank you என்பதற்கு Don't mention it என்ற எதிர்வினையும் இருக்கு. ஆனா அதைத் தமிழில் சொல்லணும்ன்னா 'அதைக் குறிப்பிட வேண்டாம்'ன்னு சொல்ல வேண்டியிருக்கும். பொருந்தி வருவது போல் இருந்தாலும், கொஞ்சம் எதிர்மறையா ஒலிக்கக் கூடிய வாய்ப்பிருக்கு. ஆகவே, you're welcome என்பதையே 'நல்வரவு'ன்னு தமிழில் சொல்லலாம்ன்னு நினைக்கறேன்.

  ReplyDelete
 12. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி Voice on Wings.

  “நல்வரவு” என்று சொல்வது தமிழில் பொதுவாக ஒருவர் நமது வீட்டிற்கு வரும்போது, வருபவரை வரவேற்கும் முகமாகக் கூறப்படுகிறது. இதே வார்த்தையை நன்றிக்குப் பதிலாகவும் கூறலாமா?

  ReplyDelete
 13. நீங்கள் சொல்வது உண்மைதான். ஆங்கிலத்தில் The pleasure is mine போன்ற எதிர்வினைகளும் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய பொருள் வரும் வகையில் 'மகிழ்ச்சி', 'மிக்க மகிழ்ச்சி', அல்லது 'கடமைப் பட்டிருக்கிறேன்' போன்ற சொற்றடர்களைப் பயன்படுத்தாலாமோ என்னவோ.

  ReplyDelete
 14. நான் பள்ளியில் படிக்கும் சமயம் என் ஆசிரியர் இதை பற்றி சொன்னார். நன்றிக்கு மறுமொழியாக ‘நல்வரவாகட்டும்’ எனும் சொல்லை பயன்படுத்துவது நலம் என சொல்லிக் கொடுத்தார். இதை இன்றும் தேவைப்படும் இடங்களில் சொல்லி வருகிறேன்.

  அதே போல் காலை வணக்கம், மாலை வணக்கம் என்பதற்கு பதிலாக இனிய காலையாட்டும், இனிய மாலையாகட்டும், இனிய இரவாகட்டும், இனிய நாளாகுக என சொல்வதும் தகும் என்பது என் கருத்து.

  ReplyDelete
 15. 'சிந்தித்துப் பார்த்ததில், உங்களுக்கு என் நன்றியுணர்வைத் தெரிவிக்கத் தோன்றுகிறது' என்கிற அளவுக்கு இதற்கு அர்த்தம் உண்டு. 'தேங்க்' என்பதிலிருந்துதான் பிற்பாடு ஆங்கில வார்த்தையான 'திங்க்' (think) வந்தது. பைபிளில் (மாத்யூ) இந்த வார்த்தை வருகிறது. 12-ம் நூற்றாண்டில்தான் சிம்பிளாக நன்றி சொல்ல, 'thank'ஐப் பயன்படுத்தத் துவங்கினார்கள். 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அதற்கு 's' சேர்த்து 'thanks' என்றார்கள். அதற்கு 100 ஆண்டுகள் கழித்து, 'you'


  Thank you sir...!


  யாழ்பாணம் இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டபோது, கம்பன் கழக கட்டிடம் புலிகளின் தலைவர் கரும்புலிகளுடன் போட்டோ எடுக்கும் முகாம் என செய்தியாக அரச ஊடகங்களின் வெளியான போது எற்பட்ட அதிர்ச்சி கலந்த உண்மையை அனுபவித்தவர் என்ற வகையில் ஜெயராஜ் சொல்வதில் சிறிது உண்மை இருக்கத்தான் செய்கிறது by the way இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் கம்பராமாயண சொற்பொழிவுகளை நடத்தி காலம் தள்ளுவது,அடுத்த படியான சினிமா பாடல்களை எழுதுவதற்கு எப்போது போவது?அப்படியே ஈழ்த்தமிழனின் வலியை அதில் பதிவு செய்வது...எப்போ???

  ReplyDelete
 16. நன்றி 'Voice on Wings' உங்கள் கருத்துக்கு!

  ReplyDelete
 17. உங்கள் வரவிற்கும், கருத்திற்கும் மற்றும் மேலதிக தகவல்களுக்கும் நன்றி VIKNESHWARAN.

  ReplyDelete
 18. வரவிற்கும் தகவல்களிற்கும் நன்றி ஆரூரன்.

  ஜெயராஜ் அவர்கள் எழுதிய “வாராதே வரவல்லாய்” என்ற கட்டுரையில் பெருமளவிலான உண்மைகளும் இருக்கின்றன. அதையே தான் கி.பி.அரவிந்தன் அவர்கள் “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்” என்று குறிப்பிட்டிருந்தார். நான் வலியுறுத்த விரும்பியது புலம் பெயர்ந்த தமிழர்களால் தமிழ் புறக்கணிக்கப் படுகின்றது என்ற ஜெயராஜ் அவர்களின் கருத்து தவறாகும் என்பதையே.

  ReplyDelete
 19. நன்றி என்றவுடன் உங்களுக்கு உள்ளூர வரும் உணர்வு என்ன?மகிழ்ச்சிதானே.அந்த மகிழ்ச்சி நீஙக்ள் ஒருவருக்கு நல்லது செய்ததற்காகவும் அத்னை மற்றவர் ஒப்புக் கொண்ட தருணத்திற்காகவும்.எனவே மகிழ்ச்சி என்பது சாலச் சரியே என்று நான் கருதுகிறேன்.

  ReplyDelete
 20. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திரு. ஷண்முகப்ரியன்

  ReplyDelete