Thursday, November 8, 2012

ஒரு பயணமும் சோஷலிஸமும்


யாழ்நகரிலிருந்து வன்னிப்பெருநிலப்பரப்பிற்குச் செல்லும் தனியார் பேரூந்து நிலையத்தையடைந்து வவுனியாவிற்கான பேரூந்தில் ஏறுகையில் மணி மாலை நான்கைத் தாண்டிவிட்டிருந்தது. 

“ச்சே! கொஞ்சம் முந்திவந்திருந்தா நாலு மணி bus இனைப் பிடிச்சிருக்கலாம்” என்றவனிடம் திரும்பினேன்.

“don't worry மச்சான். எங்களுக்குத் தாராளமா நேரமிருக்கு. கொழும்பு trIain பத்து மணிக்குத்தான்.”

“இல்லையடாப்பா.. நேரத்துக்குப் போனா வவுனியாவில வடிவாச் சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்.....” இழுத்தான்.

“மச்சான் இனிச் சோஷலிசத்துக்குள்ள தேவையான சாப்பாடு எண்டும் கொண்டுவரவேணுமடாப்பா”

“அம்மாணா சும்மா விசரக் கிளப்பாத. எப்பப்பாரு எதுக்கெடுத்தாலும் சோஷலிஸமும் கத்தரிக்காயும் எண்டு. வடிவா AC bus-இல கொழும்பு போக இருந்த என்னை சுரண்டல் அது இதெண்டு மண்டையைக் கழுவி வவுனியா bus இல ஏத்திப் போட்டு....”

“இல்லை மச்சான். உனக்கு இன்னும் சோஷலிஸத்தைப்பற்றி வடிவா விளங்கேல்லை. திருப்பிச் சொல்லுறன் வடிவாக் கேள்”

“திறமைக்கேற்ற வேலை. தேவைக்கேற்ற ஊதியம். இதைத்தானே சொல்லப்போற. கேட்டுக்கேட்டுக் காது புளிச்சுப் போச்சடாப்பா. கொஞ்ச நேரம் சத்தம் போடாம இரடாப்பா”

“இல்ல மச்சான் நீ ஒருக்காக் கேளன்”

“அம்மாண நான் பிறகு நான் பொல்லாதவனாகிடுவன். பிறகு நீ சந்தானம் கருணாஸ் மாதிரி ஆயிருவ”

காதுக்குள் “மச்சான் நீ கேளேன் மச்சான் நீ கேளேன்” என்று கருணாஸ் கெஞ்சுவது கேட்கவே அமைதியானாலும் அதே feelings எனக்குள்ளும். எப்படி இப்படி மாறினேன்? இப்போதெல்லாம் எதைப் பார்த்தாலும் கார்ல் மார்க்ஸ்ஸின் கொம்மியூனிஸக் கோட்பாடுகளும் அதன் அடுத்த கட்டமான சோஷலிஸமுமே மண்டையைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. எந்த வியாபார நிறுவனங்களைப் பார்த்தாலும் அது தேசிய முதலாளித்துவத்தைச் சார்ந்ததா அல்லது தரகு முதலாளித்துவத்தைச் சார்ந்ததா? எப்படியெல்லாம் அவைகள் சாதாரண மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றன என்பவற்றை யோசித்து மூளையைக் குழப்புவதிலேயே காலம் கழிந்து கொண்டிருந்தது. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாகி என்றைக்கு அது பாட்டாளி மக்களின் புரட்சியுடன் முடிவுக்கு வரும் இதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமா?

“சகோதரர்களே எனக்கு இரண்டு கையும் இல்லை. உங்களிடம் உதவிகேட்டு வந்திருக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்”

கம்பீரமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். யாசகன் ஒருவன் பேரூந்தினுள் ஏறி சாரதியின் இருக்கைக்கு அண்மையில் நின்றுகொண்டு பயணிகளை நோக்கிக் கூறிக்கொண்டிருந்தான். ஏற்கனவே ஒருகால் அகற்றப்பட்ட முதியவர் ஒருவரும் அவரைத் தொடர்ந்து வயதான பெண்மணியுடன் ஒரு சிறுவனும் பேரூந்தினுள் ஏறி யாசித்து விட்டுச் சென்றிருந்தனர். இப்போது பேரூந்து ஓரளவிற்குப் பயணிகளால் நிறைந்திருந்தது. என் முன்னாலிருந்தவர்களில் பலர் ஒரே இடத்தில் வேலை பார்ப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இங்கே ஒரு கூட்டத்திற்கு வந்துவிட்டு மீண்டும் வவுனியாவிற்குத் திரும்பிவதற்காக வந்திரக்கிறார்கள் என்பது அவர்களின் உரையாடல்களிலிருந்து புரிந்தது. தான் மிகவும் கஷ்ரப்பட்டுத் தகவல்கள் சேகரித்துச் செய்த presentation ஒன்றினை வேறொருவர் தான் செய்ததாகக் கூறிப் பெயர் பெற்றுக்கொண்டதை உள்ளக்குமுறலுடன் அவர் தனக்கருகிலிருந்தவரிடம் கூறிக்கொண்டிருந்தார். இப்போது அந்த யாசகன் பயணிகளிடம் யாசிப்பதற்காக வந்துகொண்டிருந்தான். பலர் அந்த யாசகனைப் பார்த்துவிட்டு உதட்டைப்பிதுக்கிக் கொண்டிருக்க, தன் மனக்குமுறலைப் பகிர்ந்து கொண்டிருந்தவரும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தவரும் முன்னைய யாசகர்களுக்குச் செய்தது போலவே இந்த யாசகனையும் கணக்கிலெடுக்காமல் தங்கள் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் வந்த யாசகன் ஆடாது அசையாது அவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான். அவர்களோ அவனைச் சட்டைசெய்யாது தங்கள் உரையாடலில் தீவிரமாயிருப்பதாய்க் காட்டி்க கொண்டிருந்தனர்.

“Execuse me. I'm an unable man. Can you please help me?”

தமிழில் உரையாடிக் கொண்டிருந்த அந்தப் பயணிகள் தங்கள் பாசாங்கில் தீவிரமாயிருந்தனர்.

“மட்ட அத்த தெக்கக் ந. மட்ட பொடி உதவுகரண்ட புழுவன்த?”

அந்தப் பயணிகளிடம் எந்தச் சலனமுமில்லை.

“மூண்டு மொழியிலையும் கேட்டுப் பாத்திற்றன். எனக்கு எல்லா மொழியும் தெரியும். தெலுங்கு தெரியும். ஹிந்தி தெரியும்”

அந்தப் பயணிகள் இப்போது அமைதியாகி விட்டிருந்தனர்.

“மச்சான் ஆளைப்பார்.இவனைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியாத் தெரியுது?”

“ஓமடா நானும் அப்பவே யோசிச்சனான். நல்ல கட்ஸ்ஸான ஆளா smartஆ இருக்கிறான். அவனைப் பார்த்தா பிச்சை எடுக்க வந்ததாத் தெரியேல்லை. இவனுக்கு இவ்வளவு திமிர் இருக்குமெண்டால் ஆரு இவனுக்குப் பிச்சை போடுவினம்?”

உணமைதானே! நாமெல்லாம் எம்மிடம் இரந்து வாழ்பவர்களுக்கு சூடு சுரணை மானம் எண்டு ஒண்டும் இருக்கக்கூடாது எண்டுதானே எதிர்பார்க்கிறம். அப்ப எங்கட முதலாளிமாரும் அப்பிடித்தானே எங்களிடம் எதிர்பார்ப்பார்கள். ஏதோ புரிபடுவது மாதிரி இருந்தது. இதை வச்சே இண்டைக்கு இவனுக்குக் கொம்மியூனிசத்தைப் பற்றி ஒரு குப்பி எடுத்து விடலாம். மனதுக்குள் நான் கார்ல் மார்க்ஸாக மாறிக்கொண்டிருப்பதாய் ஒரு புழுகம். அருச்சுனனுக்கு கண்ணன் தேர் சாரதியா வந்து பகவத்கீதை அருளிய மாதிரி எனக்கும் வாகன சாரதிக்கு பக்கத்து இருக்கையில் அமர இடம் கிடைத்த ஒரு பயணத்தில் அந்த சாரதியிடம் கற்றுக் கொண்ட மார்க்ஸிஸ சித்தாந்தம் இடதுசாரிக் கொள்கைகள், புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டால் அதைப்பற்றித் தம்பட்டமடிக்கும் குறைகுட மனித இயல்பிற்கு நான்மட்டும் என்ன விதிவிலக்கா?

“மச்சான் இவனை வச்சே இப்ப உனக்கு கொம்மியூனிசத்தை விளங்கப்படுத்திறன் பார்”

“நீ ஒண்டும் புடுங்க வேண்டாம். அவனப் பார்த்தா றோக்காரன் மாதிரிக்கிடக்கு”

“ஓமடா நானும் அப்பிடித்தான் நினைச்சனான். அவற்றை செடிலும் திமிரும். தெலுங்கு ஹிந்தியெல்லாம் தெரியுதெண்டுறான்.”

“சரி அப்ப சத்தம் போடாம அமத்திக்கொண்டிரு“

மணி 4.30 ஆக சாரதி பேரூந்தில் வந்து ஏறி அதை start பண்ணிவிட்டு பின் 4.45 இற்கு பயணத்தை ஆரம்பித்தார். பேருந்து மின்சார நிலையவீதிக்கு வந்து வைரவர் கோயில் வீதியால் திரும்பி ஆஸ்பத்திரி வீதியில் ஏறிப்பின் ஆறாம் குறுக்குத் தெருவால் திரும்பி பிரதானவீதியை அடைந்து கண்டி A9 வீதியில் ஏறுகையில் நடத்துனர் பயணிகளிடம் பணம் வசூலிக்க ஆரம்பித்து விட்டிருந்தார்.

“அண்ணை வவுனிய எவ்வளவு?”

“நுாற்றியெண்பது”

ஆயிரம் ரூபாய்த்தாளை நீட்டினேன். வாங்கிவிட்டு சிட்டையைத் தந்தார்.

“மிச்சக் காசு?”

“ரிக்கற்றுக்குப் பின்னால எழுதியிருக்குப் பிறகு தாறன்”

 Ticket இனைப் பார்த்தேன். 177/= என்று போடப்பட்டிருந்தது. பின்பக்கத்தில் 820/= எழுதப்பட்டிருந்தது.

“பாத்தி்யா மச்சான் எங்களிட்ட எப்பிடிச் சுரண்டுறாங்களெண்டு? உண்மையா 177 ரூபா ஆனா வேண்டுறது 180 ரூபா. ஒரு trip இல எப்பிடியும் 55 பேரெண் பார்த்தாலும் சும்மா சுளையா 165 ரூபா சுட்டிடுறாஙகள். இவங்களைச் சும்மா விடக்கூடாது”

“கொஞ்ச நேரம் சத்தம் போடாம இரடாப்பா”

எல்லோரிடமும் பணம் வசூலித்துவிட்டு வந்த நடத்துனரிடம் ரிக்கற்றைக் கொடுத்தேன.

“என்ன?”

“மிச்சக்காசு தரவேணும்”

“மிச்சக்காசு ஓமந்தைக்கு அங்காலதான் தரலாம். இடையில ஏறின ஆக்களெல்லாம் ரிக்கற் எடுங்கோ”

என்னை அலட்சியப்படுத்திவிட்டு நடத்துநர் முன்னுக்கு விரைந்தான்.

ஆத்திரமாய் வந்தது. நடத்துநரிடம் தாராளமான சில்லறைகளும் சின்னத்தாள்களும் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. திரும்பி வரட்டும் மனதுக்குள் கறுவிக் கொண்டேன்.

பேரூந்து சாவகச்சேரி பேரூந்து நிலையத்தை அடைகையில் மணி ஆறைத் தாண்டி விட்டிருந்தது. இடையிலே வீதி திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பயணம் தாமதமாகிக் கொண்டிருந்தது. இப்போது பேரூந்திற்குள் இடம்கொள்ளமுடியாத அளவில் பயணிகள் நிறைந்துவிட்டிருந்தார்கள். 

பேரூந்தும் முக்கிமுனகிக் கொண்டு புறப்பட்டது.

“என்னடா இவங்கள் short service bus மாதிரி எல்லா இடத்திலையும் நிண்டு ஆக்களை ஏத்திக்கொண்டு போறாங்கள். நெரிஞ்சு கொண்டு. எல்லாம் உன்னாலதான் வந்தது. நான் என்பாட்டுக்கு சிவனேயெண்டு நிம்மதியா AC bus இல சாய்ஞ்சு படுத்துக் கொண்டு போயிருப்பன்.”

“இல்லை மச்சான். இவங்கள் எங்களை மட்டுமில்லை. short service bus காரரையும் சுரண்டுறாங்களடாப்பா. இந்தச்சனமெல்லாம் உண்மையா கொடிகாமம் இல்லாட்டி கிளிநொச்சி bus இலதான் போகவேணும். அவங்கட உழைப்பிலையும் இவங்கள் மண்ணள்ளிப் போடுறாங்கள்.”

பேரூந்து இப்போது பளையை அடைந்து விட்டிருக்க சிலர் இறங்க, பல இளைஞர்கள் ஒன்றாக ஏறினார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடைகளிலிருந்து அவர்கள் ஒன்றாக எங்கோ ஏதோ ஒரு நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது ஒரே நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்களின் உரையாடலிலிருந்து அவர்கள் வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழர்களல்ல என்பது புரிந்தது. அவர்களால் இப்போது பேரூந்து கலகலப்பாகி விட்டிருந்தது. கண்கள் சுழற்றியது. விழித்துப் பார்க்கையில் ஆனையிறவைத் தாண்டிவிட்டிருப்பது புரிந்தது. சன நெருசலில் எனக்கருகில் நின்றவனைப் பார்த்தேன். அதே கூட்டத்தைச் சேர்ந்தாலும் அவன் அமைதியாக வேறெங்கோ பார்த்தவண்ணமிருந்தான். தோள்மூட்டருகில் ஏதோ அழுத்துவதாய் வித்தியாசமாய் உணர்ந்தேன். திரும்பினேன். ஆத்திரமாய் வந்தது. தோளை முன்னுக்குக் கொண்டுவந்து நிமிர்ந்து அருகில் நின்றவனை முறைத்தேன். விபரீதத்தை உணர்ந்தவன் சடாரென மறுபுறமாய்த் திரும்பி நின்று கொண்டான். அவனையே தொடர்ந்து பார்க்க அதைப் புரிந்துகொண்ட அவன் சன நெரிசலுக்குள் புகுந்து என் பார்வையினின்றும் மறைந்து கொண்டான். ச்சே! எப்படித்தான் பெண்கள் இந்த பேரூந்துகளில் பயணம் செய்ய முடிகிறதோ?

கிளிநொச்சியை அடைந்ததும் பலர் இறங்கிக்கொண்டனராயினும் ஏறிக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதனிலும் அதிகமாயிருந்தது. இப்போது நடத்துநர் அந்த இளைஞர்களையும் முன்னால் நின்ற எல்லோரையும் மிகமிக நெருக்கமாக பனங்கிழங்கு அடுக்குவதுபோல் அடுக்கிக் கொண்டிருந்தான். அருகில் வந்ததும் ரிக்கற்றினை அவனிடம் கொடுத்தேன்.

“மிச்சக்காசு?”

“மிச்சக்காசெல்லாம் ஓமந்தை தாண்டினாப் பிறகுதான் தரலாம்”

“இல்லை எனக்கு அதுக்கு முதல் வேணும்?”

“அதுக்குமுதல் என்னத்துக்குத் தேவை?”

“என்ரை காசைத்தான் நான் கேக்கிறன்”

“தரமாட்டனெண்டா சொன்னான்? இப்ப தந்தா எல்லாரும் கேப்பினம். அதெல்லாம் இப்ப கரைச்சல்”

“bus நிப்பாட்டேக்க சாப்பிடுறதுக்கு என்னெட்ட வேற காசில்லை”

“இந்த bus ஒரிடத்திலையும் சாப்பாட்டுக்கு நிக்காது”

“ஓமந்தை check point இல நிக்கும் தானே”

புறுபுறுத்தவாறே ரிக்கற்றினை வாங்கினான். 800 ரூபாயை நீட்டினான். 

இவற்றை சுரண்டலுக்கு விடுறதில்லை.

”மிச்சம் 20 ரூபா?”

“அந்த ரிக்கற்றைத் தாங்க”

வாங்கி அதில் 20/= என்று எழுதித்தற்துவிட்டு 

“ஓமந்தைக்கு அங்கால வாங்குங்க”

“மச்சான் ஏன்ரா சும்மா சண்டைபிடிச்சுக்கொண்டு? சனமெல்லாம் எங்களையே பாக்குது பார்”

“இது! இதுதான் மச்சான் பிழை. இதில என்னத்துக்கு வெக்கப்படவேணும். படிச்ச மனிசர் நாங்களே இப்பிடி வெக்கப்பட்டா எல்லாரும் எல்லாத்தையும் சுரண்டிக்கொண்டு போயிருவாங்கள். கோவணமுமில்லாமப் பிறகு வெறுங்குண்டியோடதான் நிக்கவேண்டிவரும்”

“நீ முந்தி நல்லாத்தானே இருந்தனீ. பிறகென்னெண்டு உனக்கு இப்பிடி வந்தது?”

“நான் சீரியசாக் கதைக்கிறன். நீ பகிடிவிட்டுக்கொண்டு இருக்கிறாய். இப்பிடி விட்டுவிட்டுத்தான் இண்டைக்க இந்த நிலையில இருக்கிறம். உண்மையா மச்சான் இண்டைக்கு எங்களுக்கு எவ்வளவோ பிரச்சினையிருக்கு. எங்களுக்கு மட்டுமில்ல உலகத்திலை எத்தனையோ விதமா மக்கள் கஷ்ரப்படுகிறாங்கள். அதுக்கெல்லாம் காரணம் முதலாளித்துவம் தான். எப்ப எல்லா நாடும் சோஷலிஸத்துக்குப் போகுதோ அப்ப ஒரு நாட்டிலையும் ஒரு பிரச்சனையும் இருக்காது”

“சும்மா விசர்க்கதை கதைக்கிறாய். சோவியத் யூனியனுக்கு என்ன நடந்தது எண்டு தெரியாதா?”

அடடா! இவனுக்கும் கொஞ்சம் விசயம் தெரியும் போல. இனி ஆளோட கொஞ்சம் கவனமாத்தான் கதைக்க வேணும். அதுசரி சோவியத்யூனியன் ஏன் உடைஞ்சுது? ஒருநாள் குப்பியில கொம்மியூனிஸமும் சோஷலிஸமும் தரோவா விளங்கீற்றுது எண்டு நினைச்சது பிழையோ?

“இல்லை மச்சான். நான் என்ன சொல்ல வாறனெண்டா?”

“இஞ்சைவா! சோஷலிசத்தைப்பற்றிக் கனக்கக்கதைக்கிறாயல்லா? நீதானே சொன்னீ சோஷலிஸத்தில தேவைக்கேற்ற ஊதியம் எண்டு. அப்ப அங்க பார் அந்த ஐயாவ. அவர் இந்தச் சனத்துக்குள்ள எவ்வளவுக்கு நெரிபடுகிறேர் எண்டு. உன்னிலும் விட அவருக்குத்தான் இந்த சீற் தேவை. அப்ப நீ எழும்பி அவருக்கு இந்த இடத்தை விட்டுக்குடுக்கலாம் தானே”

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி. முதலுக்கே மோசம் வந்திரும் போல இருக்கு.

“அப்பிடியில்ல மச்சான். எடுத்த உடனே சோஷலிஸத்தைக் கொண்டு வந்திரேலாது. அதுக்கு முதலில கொம்மியூனிசம் வரவேணும். அது என்ன சொல்லுதெண்டா திறமைக்கேற்ற வேலை. வேலைக்கேற்ற ஊதியம். So, அப்பிடிப் பாக்கேக்குள்ளை...”

“சும்மா சடையாத”

“இல்லையடா முதலில உனக்கு மார்க்ஸிஸம் தெரிய வேணும். அது என்ன சொல்லுதெண்டா....”

“ஒண்டும் சொல்ல வேண்டாம். நீ சும்மாயிரு”

அப்பாடா ஒரு மாதிரி இவனுக்குத் தெரியாத விசயங்களை இழுத்துவிட்டு, ஆள அமத்தியாச்சு. இல்லையெண்டா?

“மாத்தயா! பொட்டக் அற பத்த யண்டப் புழுவன்த?”

“இந்தாப்பாரன். தமிழ் ஆக்களுக்கு எவ்வளவு பேச்சுப் பேசி நெருக்கி நிக்க வைச்சிருக்கிறான் இந்தக் கொண்டக்ரர். ஆனா சிங்கள ஆக்களோடை எவ்வளவு பவ்வியமாய்க் கதைக்கிறான். அப்ப தமிழெண்டா தமிழனுக்கே இழப்பமா?”

“இப்பிடி வீரம் கதைக்கப் போய்த்தான் இண்டைக்கு இந்த நிலையில நிக்கிறம்”

“இல்லை மச்சான்.நாங்க அடக்குமுறைக்கு எதிரா எல்லா இனத்தையும் சேர்த்துப் போராடுறதை விட்டிட்டு தனிநாடெண்டு போராடினதுதான் பிழை. எங்களுக்குள்ளயும் எவ்வளவு அடக்குமுறைகள் இருந்தது. எல்லாரும் மனிசர்தானே. பிறகேன் ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சட்டமெண்டு..”

“இப்ப நீ என்ன சொல்ல வாறாய்? ஆருக்கு என்ன சட்டம் இருந்தது?”

“இல்லை மச்சான் சாதி அது இதெண்டு எத்தினை இருந்தது. குறைஞ்ச சாதி ஆக்களை கும்பிடுறதுக்கு கோயிலுக்குக்கூடப் போக விடாம..”

“இப்ப சாதிப்பிரச்சினை இருக்கா? ஆராவது கோயிலுக்குள்ளை போகேலாம இருக்கினமா?”

“ஆனா கல்யாணமெண்டு வரேக்கை”

“அதுக்கும் சாதீய அடக்குமுறைக்கும் என்ன சம்பந்தம். அவனவன் தனக்குத் தனக்கு ஏத்த இடத்தில கட்டிக்கொண்டு போறான். கல்யாணமெண்டுறது அவையவையின்ரை தனிப்பட்ட விருப்பம். ஏன் ஒரே சாதியா இருந்தாக்கூட கல்யாணம் கட்டிக்குடுத்திருவினமா? அந்தஸ்து அது இதெண்து ஆயிரத்தெட்டுப் பொருத்தம் பார்க்கிறதில்லை?”

கொய்யால! இவன் கனக்கக் கதைக்கிறான். விடக்கூடாது.

“அது தான்ரா நான் எனன் சொல்லுறனெண்டா மார்க்ஸ் சொல்லுறேர்...”

“ஆரு? பாட்ஷாவில வாற மார்க் அன்ரனியா?”

“உனக்குச் சொல்லவந்தன் பாரு..”  

அப்பாடா ஒருமாதிரி கதையை நிப்பாட்டியாச்சு. அவன் மார்க்ஸ் என்ன சொல்லுறேர் எண்டு கேட்டிருந்தா கொம்மியூனிஸம் சோஷலிஸம் எண்டு அவனைக் குழப்பி நானும் குழம்பியிருக்கவேணும். ஆள இந்த அளவுக்கு மேல போகவிடாம வைச்சிருந்தாத்தான் எனக்கு ஏதோ கனக்கத் தெரியுமெண்டு ஒரு மரியாதையோட இருப்பான்.

“பின்னால நிக்கிற ஆக்கள் முன்னுக்குப் போங்கோ. எவ்வளவு இடம் கிடக்கு. பின்னால ஆக்கள் ஏற இடமில்லாம நிக்கினம்” 

“கொண்டக்ரருக்கு வேற வேலையில்லை. முன்னுக்கு எங்கையாம் இடம் கிடக்கு?”

“கொஞ்சம் வழிவிடுங்கோ TATA ஒண்டு வருகுது”

அந்த இளைஞர்கள் கலாய்த்தார்கள். திரும்பினேன். பெரிய உருவம் Tata lorry போல். நெருக்கிக்கிருக்கி எனக்குமுன்னால் வந்தது. தன் தொப்பையின் ஒரு பக்கத்தை முன் இருக்கையிலும் மற்றப்பக்கத்தை என் தோளிலும் பொறுக்க வைத்துவிட்டு அது stand போட்டு நின்று கொண்டது. அசையா முடியாத சனநெரிசல். நண்பன் முறைத்துக் கொண்டான்.

ஓமந்தையை அடைகையில் மணி எட்டரையைத் தொட்டுவிட்டிருந்தது. இறங்கி சோதனைச்சாவடியில் வரிசையில் நின்று சோதனைகளை முடித்துவிட்டுக் காத்திருந்து பேரூந்தில் ஏறிக்கொள்ள ஒன்பதாகியிருந்தது. நடத்துநரைக் கண்ணில் காணவில்லை.

“மச்சான் கொண்டக்கரரிட்டை இண்டைக்கு மிச்சக்காசு வேண்டாம விடுறதில்லை”

“train க்கு சரியான நேரத்துக்குள்ள போயிருவமாடா?”

“அடேய் train க்கு 3rd class sleeperets ஏற்கனவே book பண்ணயாச்சு. பத்து மணியெண்டாலும் அது எப்பிடியும் பத்தரைக்குப்பிறகு தான் வெளிக்கிடும். பிறகேன் பயப்பிடுறாய்?”

“இல்லை மச்சான். வழமையா நான் AC bus இலதான் போறனான். அதில போனா பெரிசாக் களைப்பும் தெரியாது?”

“அதுக்கு ஆயிரத்தி முன்னூறு ரூபாய் குடுப்பாய். இது இப்ப எவ்வளவு? வவுனியா bus க்கு 180 ம் கொழும்பு train க்கு 270ம், ரோற்றலா 450 தானே. அதோட bus எண்டா ஒரு இடத்திலதான் நிப்பாட்டுவான். ஒண்டுக்கு ரெண்டுக்குப் போறதெண்டாலும் கரைச்சல். இது train க்குள்ள நீ விரும்பின நேரம் மூத்திரம் பெய்யலாம். கக்கூசுக்கும் இருக்கலாம். நித்திரை வராட்டி நடந்தும் திரியலாம். bus காரர் எவ்வளவு சுரண்டுறாங்கள் எண்டுறது இன்னும் உனக்கு வடிவா விளங்கேல்லையடாப்பா. எங்கட நாட்டை உண்மையான சோஷலிஸ நாடா மாத்தவேணுமடாப்பா.

“காணும் மச்சான் அறுக்காத நிப்பாட்டு”

வேகமெடுத்திருந்த பேரூந்த திடீரென நிறுத்தப்பட்டது. 

“Traffic police மறிச்சிற்றாங்கள். over speed ஆம்.”

பயணம் ஐந்து நிமிடம் தாமதமாகி வவுனியா பேரூந்து நிலையத்தை அடைகையில் மணி ஒன்பதரையைத் தாண்டி விட்டிருந்தது.. பயணிகளில் சிலர் தங்கள் தொடர் பயண அவசரத்தினைக் கருத்தில் கொண்டு மீதிக்காசை வாங்க மறந்தோ என்னவோ வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தனர். 

“மச்சான் வாடாப்பா ஒன்பதே முக்காலாகுது. பிறகு train ஐ மிஸ் பண்ணீருவம்”

“train பத்தரைக்குத்தான் வெளிக்கிடும். இவங்கட schedule தெரியாதே? அதோட கொழும்பு train வந்து அரை மணித்தியாலத்துக்குப் பிறகுதான் இங்கை நிக்கிற train வெளிக்கிடும். இண்டைக்கு மிச்சக் காச கொண்டக்ரரிட்டை இருந்து வாங்காம விடுறதில்லை. ஓமந்தைக்கு அங்கால தாறன் எண்டு சுத்திப்போட்டு ஆள் foot board இலயே நிண்டிட்டான். உனக்கும் இருபது ரூபாய் மிச்சம் தரவேணுமெல்லா. நிண்டு வேண்டிப் போட்டுத்தான் அடுத்த வேலை”

இறங்கி வெளியே வர நடத்துநரைச் சுற்றி 25 பேர் வரையிலானோர் நின்றிருந்தனர். தன்னிடம் நூறு ரூபாய்க்குக் குறைந்த தாள்கள் இல்லை என்பதால் பெரும்பாலானோருக்கும் இருபது ரூபாயைக் கழித்துக் கொண்டே மீதிப்பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். மற்றவர்களுக்கு கடையில் சென்று காசு மாற்றிவிட்டு தருவதாகச் சொல்லவே பலரும் விலகிவிட நானும் அவனுமே எஞ்சினோம்.

“மச்சான் விட்டிட்டு வாடாப்பா. வேணுமெண்டா நான் அந்த இருபது ரூபாயைத் தாறன். இருபது ரூபாயைப் பார்த்து பிறகு நீ இருநூற்றியெழுபது ரூபா train ஐ விடப் போற”

“சத்தம் கேட்டனி தானே. இப்பத்தான் கொழும்பு train வருகுது. இன்னும் அரை மணித்தியாலம் கிடக்கு இஞ்சையிருந்து போற train வெளிக்கிட. இவர் மற்றாக்களுக்குச் சுத்தின மாதிரி எனக்கும் சுத்தப் பாக்கிறேர். முந்தியெண்டா விட்டிருப்பன். இப்ப மார்க்ஸ்ஸிஸம் தெரிஞ்சாப்பிறகு இந்தச் சுரண்டலையெல்லாம் என்னால விடேலாது மச்சான்.”

கடைக்குச் சென்று காசுமாற்றி இருவருக்குமான மீதிப்பணம் நாற்பது ரூபாவையும் பெற்றுக்கொண்டு திரும்புகையில் ஏதோ சாதித்து விட்டாற்போல் இருந்தது.

“மச்சான் ஓட்டோ பிடிச்சுப் போவமடா லேற்றாகீற்றுது”

“இப்பத்தான்ரா பத்து மணி. இன்னும் அரை மணித்தியாலம் கிடக்கு. அஞ்சு நிமிசத்தில நடந்தே போயிரலாம். இதுக்குப்போய் ஓட்டோக்காரனுக்கு நூறு ரூபாய் குடுக்கோணுமா?”

அவனின் பதற்றம் எனக்குச் சந்தோசத்தைத் தருவதாய்த் தோன்றியது.

“ஏன் மச்சான் ரென்ஷனாகிற. என்னைப் போல சும்மா கூலா வா. பாத்தியா மார்க்ஸிஸம் தெரிஞ்சதால இண்டைக்கு ஒரு சுரண்டல தடுத்திருக்கிறம்”.

அவன் அமைதியாகவே வந்தான். புகையிரத நிலையத்தை அடைகையில் புகையிரதம் கிளம்பிக்கொண்டிருந்தது. அதைப் பிடிக்க எத்தனித்த முயற்சிகள் தோல்வியடைந்து விட்டிருந்தன.

அவனைப் பார்ப்பதைத் தவிர்க்கத் தொடங்கினேன்.

“train இல்லாட்டி என்ன? ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ஒருக்கா bus இருக்குத்தானே. பொறு போய் ticket-ஐக் குடுத்துக் காசைத் திருப்பிக் கேப்பம்”

புகையிரத அலுவலகத்தில் ticket-இனைக் கொடுத்துக் காசைத் திருப்பிக் கேட்டபோது Not refundable என்று கூறி மறுத்து விடவே தோல்வியுடன் அவனிடம் வந்தேன். 

“மச்சான் refund தர மாட்டனெண்டுறாங்கள். Democratic Socialist Republic of Sri Lanka எண்டு பேரை வைச்சுக்கொண்டு Government ம் எங்களைச் சுரண்டுறாங்கள். Government office-இலயே சோஷலிஸம் இல்லையடாப்பா. நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதா?”

“சோஷலிஸமும் பு. . . .ம் சத்தம் போடாம வாறியா”





4 comments:

  1. உந்த சோசலிசகாரரின் தொல்லை தாங்கமுடியவில்லை ....வலசு

    ReplyDelete
  2. உந்த ஷோஷலிசக்காரர் ஒருபுறம், அதி நவீன தலித்தியர் (பிரெஞ்சு மற்றும் அ.ம்மண மார்க்ஸ்) என்று தொல்லை தாங்கமுடியவில்லையப்பா...

    ReplyDelete
  3. இது எனது பழைய அனுபவம், உப்புப் புளி சேர்த்து..

    http://www.ssakthivel.com/2011/12/blog-post_27.html

    ReplyDelete
  4. எனக்கும் சோசலிச கொள்கையில ஈடுபாடு இருந்தது. அதுக்கு கரணம் நமூர் சோஷலிசவாதி. சோஷலிச தத்துவத்தை நடைமுறை உதாரணத்துடன் விளங்கபடுத்துவார்.
    ஆனா அவரை கிட்டடியில சந்திச்சன். கனடாவில இருந்து வந்திருந்தார். ஆளே மாரிபோயிருந்தார். கனடிய materialistic வாழ்க்கையின் மொத்த உருவமாக.

    ReplyDelete