Sunday, October 14, 2012

'புதிய பண்பாட்டுத்தளம்' - பத்தோடு பதினொன்றாகுமா?


இன்றைய காலத்தின் தேவை(?) கருதி புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பொன்று, “புதிய பண்பாட்டுத்தளம்” என்கின்ற பெயருடன் தனது அங்குரார்ப்பண நிகழ்வினை கடந்த சனிக்கிழமை (13-10-2012) ஹற்றன் நகரில் நடாத்தியிருந்தது. பல்வேறுபட்ட தமிழ் அமைப்புக்களைச் (அரசியல் கட்சிகள் உட்பட) சேர்ந்தவர்களுடன் கலை இலக்கியத்துறையைச் சார்ந்த சிலரும் இந்நிகழ்வின் பங்காளிகளாய் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர். பல்வேறு கலை இலக்கிய விழாக்களில் பார்வையாளனாய் பங்கேற்றிருந்தாலும், இதுபோன்ற கொள்கை அடிப்படையிலான அமைப்பொன்றின் நிகழ்வினை நேரடியாகப் பார்க்கக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும்.
 
“புதிய பண்பாட்டுத்தளம்” என்கின்ற அமைப்பின் கொள்கைகள் குறித்த அவர்களின் உரைகள், விமர்சனங்கள் மற்றும் பங்கேற்பாளரின் கருத்துரைகள் என்பவற்றிலிருந்து மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனூடாக சமுதாய மாற்றத்தினை உண்டுபண்ணுவதும், பல்வேறு அமைப்புக்களிலிருந்தும் விலகியவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு தளத்தினை உருவாக்குவதுடன் சமூக மேம்பாட்டிற்காக அனைத்து அமைப்புகளையும் இயன்றவரையில் ஒன்றிணைக்கும் ஒரு களமாகவும் இது அமையலாம் எனப்புரிந்தது. அதன் அமைப்பாளர்கள் இடதுசாரி அமைப்புக்களைச் சேர்ந்தவர்களாய் இருப்பதால், ஜனநாயகக் கட்சிகளையும் தம்முடன் இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தயாராயிருப்பதாய் கூறியிருந்தனராயினும, அவர்கள் மார்க்சிச கொள்கைகளுக்கு அமைவாகவே தங்கள் செயற்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மார்க்சிசம் பற்றிய அல்லது கொம்மியூனிசம், சோசலிசம் போன்றவை பற்றிய தெளிவின்மை காரணமாக சம்பந்தப்பட்ட சிலருடன் உரையாடிய பின்னர் இணைய உதவியுடன் சில புரிதல்கள் என்னுள் ஏற்பட்டனவாயினும், இன்றைய சூழலில் இங்கே முதலாளித்துவத்தை ஒழித்து கொம்மியூனிசம் சாத்தியமா என்பது எனக்கு மிகப்பெரிய கேள்வியாகவே தெரிகிறது.
 
இது ஒரு நாடு தழுவிய வெகுஜன அமைப்பாக இருக்கப் போவதாலும், ஒற்றைத் தலைமைக்குப் பதில் கூட்டுத்தலைமையைக் கொண்டிருக்கப் போவதாக அதன் அமைப்பாளர்கள் தெரிவித்ததாலும், எனது அறிவிற்கெட்டிய இலங்கை தமிழ் அமைப்புக்களின் (அரசியற்கட்சிகளுட்பட) வரலாறுகளினாலும் சில கேள்விகள் எழுகின்றன. இந்த அமைப்பும் காலவோட்டத்தில் ஒரு அரசியற்கட்சியாக மாறி வாக்குக் கேட்க வந்து நிற்குமா? கூட்டுத்தலைமைக்குள் கொள்கை முரண்பாட்டாலோ அல்லது மற்றைய கட்சிகளைப்போல் அதிகார மோகத்தாலோ பிரிவினை தோன்றினால் என்ன நடக்கும்? (ஒற்றைத் தலைமையுள்ள அமைப்புக்குள் இந்தச் சிக்கல் குறைவு என்றே நினைக்கின்றேன்)
 
அப்படியான ஒரு நோக்கத்தில் உருவாக்கப்படும் ஒரு அமைப்பிற்கான தேவை இன்றைய சூழ்நிலையில் இல்லை என்பதால், அதன் அமைப்பாளர்கள் நேரடி அரசியலில் இறங்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன். மாறாக, மார்க்சிச கொள்கைகளை வைத்து எப்படிக் கொம்மியூனிசம், சோசலிசம் போன்றவை உருவாக்கப்பட்டதோ அதேபோல் சமூக விடுதலை சார்ந்த அரசியலுக்கான ஒரு அடிப்படையாக (framework) மக்களிடையே சமூகத்தளைகளினையறுக்கும்  விழிப்புணர்வினை உண்டுபண்ணும் தோற்றுவாயாக, இந்த வெகுஜன அமைப்பு மிளிரட்டும். மக்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை அனைத்துக் கட்சிகளையும் கூட்டிவைத்து ஆராயட்டும். ஒத்துப் போகும் அமைப்புகளை அணைத்துக்கொண்டு அந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கட்டும்.
 
இல்லையெனில் இதுவும் பத்தோடு பதினொன்றாய்.........

No comments:

Post a Comment