ஏகாந்த வெளிகளில்
தனித்திருக்கும்
நிசப்த இரவுகளில்
வானத்தில் கண் சிமிட்டும்
நட்சத்திரங்களுடன்
நட்பாய்ச் சிரித்தவாறே. . .
இணையத் துடிக்கும்
இமைகள் இரண்டினதும்
தவிப்புகளைத் தவிர்த்தவாறே. . .
தாயகக் கனவினை நெஞ்சினிலும்
கயவர் வரவினை விழிகளிலும்
ஏந்தியவாறே. . .
தேச சேவையில்
தேக தேவை மறந்து
காப்பரணுள்
காவலுக்கிருக்கையில்
பௌர்ணமி கடந்த
பத்தாம் நாள் நிலவாய்
மெலிதாயுன் நினைவுகளும்
மனதினுள் படரப் பார்க்கும்
உன் ஸ்பரிசங்களின்
சிலிர்ப்புகளாய் பனிக்காற்றின்
சில்லிடல்கள்
தாய்தந்த யாக்கையிலும்
தாயகத்தின் இருப்பை
அதிகமாய் நேசிக்கும்
உனக்கும் எனக்கும்
விடுதலையின் வாசிப்பே
சுவாசிப்பாக. . .
அன்பின் யாசிப்பு
இரண்டாம் பட்சமென்பதில்
இரண்டற்ற கருத்து.
என்னைப் போலவே
எம் தேசத்தின்
இன்னோர் மூலையில்
சென்றிக்கு நிற்கும்
என்னுயிரே, என்னவளே!
என் தோள்களில்
உன்கர மாலையாக
ஏ.கே.யின் தாங்குபட்டி.
என் நெஞ்சழுத்தும்
உன்மார்புக் கச்சைகளாய்
ஹோல்சர்கள்,
உறக்கங்களில் கூட
இணைபிரியாமல்.
அய்யர் மாரிலும்
அதிகமாய்
அருந்ததி நட்சத்திரம்
உனக்கும் எனக்குமே
பழக்கப் பட்டிருக்கும்.
தென் துருவத்துடன்
முப்பது பாகையில்
சாய்ந்து கிடக்கும்
தென்சிலுவை-யாய். . .
நெஞ்சுக்கூடு தழுவியாடும்
நஞ்சுக்கூடாய்
தேசநினைவுகளுடன்
உன்ஞாபகங்கள் என்னில்
பிணைந்து விட்டிருக்கின்றன.
என்னுயிரானவளே!
என்னைப் போலவே
தனித்திருக்கும் வேளைகளில்
உனக்குள்ளும் என் நினைவுகள்
இனித்திருக். . .
ஓ!
சற்றுப் பொறு பெண்ணே!
இரவின் நிசப்தத்தைக்
குலைத்துக் கொண்டு
சரக் சரக் சப்திப்பு.
கரங்களில் றைபிள் இறுக,
சட்டெனக் குனிந்து
உருண்டு தவழ்ந்து
பதுங்கி நிலையெடுத்து
சுடுகலனை மேலுயர்த்தி
சுட்டுவிரல் ட்ரிகர் பதித்து
இருதயத்துடிப்பின்
இருநூறு ஹேட்ஸ் அதிர்வுடன்
உற்றுப் பார்க்கையில். . .
அடச்சே!
மந்தை விட்டு
மாறிவந்த மாடொன்று.
ம்!,
இனியென்ன?
மறுபடியும் விடியும்வரை
நட்சத்திரங்களுடன்
நட்பாய்ச் சிரித்தவாறே. . .
எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..
அழகிய கவிதை.....பொருத்தப் பாடற்ற காலப்பகுதியில் ......(? )
ReplyDeleteகாப்பரண்களையும் காவலுக்கிருந்தவர்களையும் கருப் பொருள் ஆக்கியமைக்கு நன்றி!!!