Friday, May 8, 2009

புத்தனின் புதிய ஞானம்ஆசைகளைத் துறக்கச்சொல்லி,
கௌதம புத்தனாய்
பரிநிர்வாணமடைந்த
போதிசத்வருக்கும்
ஆசை வந்தது
மீண்டும் அவதரிக்க.

ஆரம்பப் பிறப்பு
அமிபா-வாய் இருந்தபோது்ம்
இறுதிப் பிறப்பின்
அரச சுகபோகமும்
சித்தார்த்தன் சிந்தையில்
தித்திப்பாய் இருந்தது.

சிந்தித்தார் புத்தர்.

யுத்தம் வெறுத்து
அசோகனைப் பௌத்தனாக்கியது
கலிங்கத்துப் பரணி
இன்றோ அசோகச் சக்கரம்
வழிநடத்த புத்தனின் பக்தரால்
ஈழத்துப் பரணி!

கண்கள் கலங்கியது
கௌதமனுக்கு.
கருவாய் உருவாகிக்
காலத்தைக் கடத்த
காருண்ய உள்ளம்
தடை விதித்தது.

இறங்கி வந்தார்
இலங்கைக்கு,
சமாதான தூதுவனாய்.

அரசனைக் கண்டு
ஆலோசனை சொல்ல
ஆசையும் வந்தது.
தகவல் அனுப்பி,
காத்திருந்தார்.

ஆணவம் பூசிய
சேதி வந்தது!
போர்நிறுத்தம் பற்றிப்
பேசுவதென்றால்
நாடுகடத்தப் படலாம்,
கேடகவொரு
நாதியில்லையெனில்
கைதியாக்கப்பட்டு
காணாமல் ஆக்கப்படலாம்.

போதிசத்வர் பொறுமையிழந்தார்
தன்னை யாரென அறிவித்தார்.
அகிம்சைக்குத் திரும்புமாறு
அறிவுறுத்தத் தொடங்கினார்.

பௌத்த பிக்குகள்
புத்தரின் சிலைகளை
அடித்து நொறுக்கினர்.
புத்தரைக் கொல்லச் சொல்லி
ஆர்ப்பாட்டமும் செய்தனர்

அரசகுழாம்,
அந்தரங்க மாநாடு நடத்தி
பேச்சுக்கு அழைத்தது.

சமரசப் பேச்சும்
நடந்து முடிந்தது.

போதிசத்வருக்கு நன்றாய்ப்
‘போதிக்க’ப்பட்டது.
ஆசைகளைத் துறந்தவருக்கு,
ஆசையூட்டப்பட்டது.
நாடாளுமன்றப் பதவியும்
நவநாகரிக மங்கையரும்
கௌதம புத்தரைச் சித்தார்த்தன் ஆக்கின.

இத்தனை இன்பங்களையும்
ஏன் நான் துறந்தேன்?
பெண்ணின்பப் பேரின்பத்தைவிட்டு
வேறின்பத்தைத் தேடி
பேடியாய் அலைந்தேனே.
யசோதரை சரியில்லையோ?
சித்தார்த்தனுக்கு சாடையாய்
சந்தேகம் வந்தது.

அதிகார மமகாரம்
தரும் போதை
எந்தத் தியானம் தரும்?

அன்னப்பறவையின் வழக்கின் பின்
மைத்துனன் சூழ்ச்சி செய்திருப்பானோ?
தேவதத்தனின் கையாளோ என் தேரோட்டி?
சந்தேகநோய் மனப் பிரதேசமெங்கும்
பன்றிக் காய்ச்சலாய் பரவத்தொடங்கியது.

‘மென்டிஸ்’ ரெண்டு பெக்
உள்ளே செல்ல, துறந்தவை
அத்தனைக்கும் ஆசைப்பட்டான்.
அனுபவிக்கத் துடித்தான்.

இம்சித்தல், பெண்களை
இச்சித்தல்,
துய்த்தல், பின்
இரத்தத்தில் தோய்த்தல்.

எங்கே கிடைக்கும்?

சிந்திக்க சிந்திக்க
சித்தார்த்தனுக்கு
மீண்டும் “ஞானம்” பிறந்தது.

புதிய புத்தன் புறப்பட்டான்!
போர்க்களம் நோக்கி,
கூரிய நகங்களுடனும்,
கடைவாய்வரை நீண்ட
கோரப் பற்களுடனும்.

20 comments:

 1. //
  பௌத்த பிக்குகள்
  புத்தனின் சிலைகளை
  அடித்து நொறுக்கினர்.
  புத்தனைக் கொல்லச் சொல்லி
  ஆர்ப்பாட்டமும் செய்தனர்
  //
  nice....:-)

  ReplyDelete
 2. கௌதமனுக்கு புத்தி மட்டு. அரசனுக்கு சரிவராதுவிட்டால் (பி--(ரபா)) ஆண்டிக்காவது போதித்து பார்த்திருக்கலாம். அதைவிடுத்து மறுபடியும் சித்தார்த்தனாகி ஏன் சீரழியிரார்?

  ReplyDelete
 3. இன்றைய சூழல் புத்தனையும் சித்தார்த்தன் ஆக்கத்தான் செய்யும்..!!!

  ReplyDelete
 4. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி “அறிவே தெய்வம்”

  ReplyDelete
 5. புத்தருக்கே இந்த நிலைமையா? பரிதாபம்தான்.

  வித்தியாசமான சிந்தனை.

  ReplyDelete
 6. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி “அறிவிலி”.
  நிலைமையை உன்னிப்பாக அவதானித்தால் அப்படித்தான் தோன்றுகிறது

  ReplyDelete
 7. இதுவரை நான் எங்கும் படித்திராத எதிர்மறைத் தியானம்!
  புத்தனின் ஞானத்தை ’ரிவர்ஸில்’அணுகிய விதமும், அதன் மூலம் வெளிப்படுத்திய ஈழத்தின் அவலங்களும் முற்றிலும் புதிய கோணம் வலசு-வேலணை.
  உங்கள் புதிய கற்பனைக்கும்,கண்ணோட்டத்துக்கும் எனது பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 8. வரவிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஷண்முகப்ரியன்

  ReplyDelete
 9. //
  யுத்தம் வெறுத்து
  அசோகனைப் பௌத்தனாக்கியது
  கலிங்கத்துப் பரணி
  இன்றோ அசோகச் சக்கரம்
  வழிநடத்த புத்தனின் பக்தரால்
  ஈழத்துப் பரணி!
  //

  நன்றாயிருக்கிறது.

  ReplyDelete
 10. புத்தனுக்கே இம்சித்தல், பெண்களை
  இச்சித்தல்,துய்த்தல், பின் இரத்தத்தில் தோய்த்தல் சிந்திக்க சிந்திக்க சித்தார்த்தனுக்கு “ஞானம்” மீண்டும் பிறந்தது போர்களத்திற்கு செல்ல ஆசை வந்தது என்றால் படிப்பறிவில்லாத பட்டினி காரணமாக இராணுவத்தில் சேர்ந்த சிங்கள இளைஞர்களிடம் எப்படி ஒழுக்கங்களை எதிர்ப்பாக்கமுடியும்..??? அதற்காக நீங்கள் வருத்தப்பட்டு இப்பகுதியில் எழுதுவதை விட எத்தனையோ செய்யலாம். உங்களுக்கு நல்ல புத்தி இருப்பது பல முறை இந்த இணையத்தளம் மூலமாக நிரூபிக்கப்பட்டுவிட்டதே
  ..?? அதற்கு பிறகும் ஏன் மீண்டும் மீண்டும் புகழுக்கு அலைகிறீர்கள்..???

  We need a Action Man....!!!

  அன்புடன் ஆரூரன்

  ReplyDelete
 11. வரவிற்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி ஆரூரன்

  ReplyDelete
 12. அண்ணா
  அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
  ஜனனம் = ஜென்மம்

  ReplyDelete
 13. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி ‘இது நம்ம ஆளு’

  ReplyDelete
 14. அழகாக‌
  அருமையாக இயம்பி உள்ளீர்கள்

  வாழ்த்துகள்

  ReplyDelete
 15. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி sakthi

  ReplyDelete
 16. //யுத்தம் வெறுத்து
  அசோகனைப் பௌத்தனாக்கியது
  கலிங்கத்துப் பரணி
  இன்றோ அசோகச் சக்கரம்
  வழிநடத்த புத்தனின் பக்தரால்
  ஈழத்துப் பரணி!

  அருமையான ஒப்பீடு ...

  ReplyDelete
 17. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி சுபானு

  ReplyDelete
 18. யுத்தத்தை வெறுத்தது அப்ப இருந்த பௌத்தம். யுத்தத்தின் மூலம் இரத்தம் குடிப்பது இப்ப உள்ள பௌத்தம். அருமை......!!!

  ReplyDelete
 19. வரவிற்கும் கருத்திற்கும் நன்றி தமிழ்விரும்பி

  ReplyDelete