Sunday, August 1, 2021

கனவில் நினையாத…(2)

 


2021 யூலை 03

நாமிருந்த அறைக்குள் நுழைந்த அந்த மருத்துவத் தாதியைக் கண்டதும் ஒரு நொடி எனக்குக் கீழே நிலம் வழுவுவதாய் உணர்ந்தேன். உடனேயே யாழவன் படுத்திருந்த கட்டிலில் கையூன்றி என்னை நிலைப்படுத்திக் கொண்டேன்.

அடித்துச் சொல்லலாம் அது ஊர்மிளா தான் என்று. அன்று பார்த்தது போல், இருபத்தாறு ஆண்டுகள் கழிந்துவிட்ட பின்பும் இன்றும் அப்படியே எவ்வித மாற்றமும் இன்றி இருக்கிறாள். தலைமுடிகள் கூட அன்று பார்த்த அதே மினுமினுப்புடன் கருங்கூந்தலாய்…

ச்சே என்னைப் பாரேன். தலைமயிர் தொடங்கி தாடிமுடி வரை எல்லா இடங்களிலும் நரைமுடிகள் எட்டிஎட்டித் தம் தலைகளைக் காட்டிக்கொண்டிருக்கின்றன. தொந்தியும் வேறு இப்போது தொங்கத் தொடங்கியிருந்தது.

அவளையே வைத்தகண் வாங்காமல் பார்க்கின்றேன். என்னைப் பார்த்துக் குறுநகையொன்றை உதிர்த்துவிட்டு யாழவனின் வெப்பநிலையைப் பரிசோதிக்கின்றாள்.

என்ன இது? இவளுக்கு என்னைத் துளிகூடத் தெரியவில்லையா? அல்லது தெரியாதது மாதிரி நடிக்கிறாளா?

யாழவனைப் பரிசோதித்துவிட்டு அவள் அறையைவிட்டு வெளியேற முயல,

”Excuse me, நீங்க. . . நீங்க, உங்கட பெயர் ஊர்மிளா தானே?”

”ஓ! நீங்க தமிழா? I’m sorry. நான் ஊர்மிளா இல்லை. எதுக்கு நீங்க ஊர்மிளாவா எண்டு கேக்கிறீங்க”?

”Sorry. நீங்க தப்பா நினைச்சுக் கொள்ளாதீங்க. உங்களைப் பார்க்க அப்பிடியே அச்சு அசலா ஊர்மிளா மாதிரி இருந்திச்சு. அதுதான் கேட்டனான். I’m sorry”

“It’s OK. No worries. நீங்க சொல்லுற ஊர்மிளாவுக்கு எத்தினை வயசிருக்கும்? ஏனெண்டா என்ரை அம்மாக்கும் ஊர்மிளாதான் பெயர். நானும் அவாவை மாதிரித்தான் இருக்கிறன் எண்டு எல்லோரும் சொல்லுறவை.”

கடவுளே! ஒருவேளை நான் தேடும் ஊர்மிளாதான் இவளின் தாயாக இருந்தால் ….

”ஓ!  Sorry, sorry. நான் உங்களிட்டைத் பிழையாக் கேட்டிட்டன். நான் சொன்ன ஊர்மிளாவுக்கு கொஞ்ச வயசு தான்.”

மனதைத் திடப்படுத்திக்கொண்டு பொய்யுரைத்தேன். ஊர்மிளாவிற்குத் திருமணமாகி இத்தனை வயதில் ஒரு பெம்பிளைப்பிள்ளை இருக்கும் போது இப்போது வந்து பழைய கதைகளைக் கிளறுவது அர்த்தமில்லாதது.

”ஓ! It’s really interesting. நானும் அப்பிடியே அம்மாவைப் போல இருக்கிறன் எண்டு மற்றாக்கள் சொல்லேக்குள்ள, ஓராளப் போல ஏழுபேர் இந்த உலகத்தில இருப்பினம் எண்டு அம்மா சொல்லுறவா. இப்ப நான் மூண்டாவது ஆளைப் பற்றிக் கேள்விப்படுகிறன். அதுசரி நீங்க சொல்லுற ஊர்மிளாவும், இங்க கனடாவிலதான் இருக்கிறாவோ?”

”எனக்கு அவா இப்ப எங்க இருக்கிறா எண்டு தெரியாது. முந்தி ஊரில இருக்கேக்குள்ளதான் தெரியும். அதுகும் கொஞ்சநாள்த்தான் பழக்கம்.”

”அவாவுக்கு கொஞ்ச வயசெண்டு சொல்லுறீங்கள். ஆனா ஊரில இருக்கேக்குள்ளதான் தெரியுமெண்டா, இப்ப அவாக்குமு் கன வயசாகிருக்குமே? ஒருவேளை நீங்க என்ரை அம்மாவைத்தான் சொல்லுறீங்களோ?”

எதற்குத் தேவையில்லாத வம்பு? உடனேயே அவளை மறுதலித்தேன்.

”இல்லையில்லை. அது உங்கட அம்மாவா இருக்கேலாது.”

என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்ததவள்,

”என்னெண்டு அவ்வளவு உறுதியாகச் சொல்லுறீங்க?”

அவள் நான் உண்மையை மறைக்கின்றேனோ என்று சந்தேகப்படுகிறாள் என்பது புரிந்தது. கடவுளே! ஏற்கனவே எனது ஊர்மிளாவிற்கு நான் இழைத்த அநீதிக்கு, ஒருவேளை இவளது தாயாரும் அதே ஊர்மிளாவாய் இருந்துவிட்டால், கடவுளே! இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் அவள் வாழ்வில் ஒரு குழப்பத்தை நான் ஏற்படுத்திவிடக்கூடாது.

இதுவரை நேரமும் அவள் கண்பார்த்துப் பேசிய நான் இப்போது அவள் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் எனது பார்வையினைத் தரை மேல் தவழவிட்டேன்.

”இல்ல. நான் முள்ளிவாய்க்கால் சண்டைக்குள்ளை அவாவைக் கண்டிருக்கிறேன். அப்ப அவா கல்யாணம் கட்டேல்லை. அதுக்குப் பிறகு அவா கல்யாணம் செய்திருந்தாலும் உங்கட வயசில அவாவுக்குப் பிள்ளை இருக்காதுதானே. அதாலதான் உறுதியாச் சொல்லுறன்.”

”ஓ! அப்ப நீங்க 2009 இற்குப் பிறகு தான் இஞ்சை வந்திருக்கிறீங்கள் என? அம்மாவை தொண்ணூற்றைஞ்சு யாழ்ப்பாண இடப்பெயர்வோட கொழும்புக்கு வந்து இஞ்சால வந்திற்றினம். அம்மா சொன்னவா, தான் தொண்ணூற்றைஞ்சில அருந் தப்பில உயிர் தப்பினதெண்டு. அம்மாவின்ரை பெரியம்மாவையோட அம்மாவும் நவாலிச் சேர்ச்சுக்குள்ள இருந்தவாவாம். பிறகு ஐடென்ரிக்கார்ட்டை வீட்டை விட்டிட்டு வந்திற்றா எண்டு திரும்பிப் போய்ற்று வாறதுக்குள்ளை பிளேன் வந்து குண்டு போட்டு அங்கையிருந்த ஆக்கள் எல்லாரும் சரியாம்”

என்ர கடவுளே! இவளது தாய்தான் நான் தேடிக்கொண்டிருக்கும் ஊர்மிளா. எப்பிடியெண்டாலும் அவள் நல்லாயிருந்தால் சரி. அவளது வாழ்க்கையில் இனி நான் வந்து பழைய நினைவுகளைக் கிளறுவது கேவலமானது. அவளது நினைவுகளை இனி நான் மூட்டைகட்டிவைத்துவிட வேண்டும்.

”ஓ! அப்பிடியா? சரி இனி நீங்க இதுகளைப் பற்றியெல்லாம் உங்கடை அம்மாவிட்டைப் போய்க் கேட்டு அவாவையும் குழப்பாதீங்க. என.”

”ஓமோம்! நீங்க சொல்லுறதும் சரிதான். By the by என்ரை பேர் சிந்து. உங்கடை பெயரைக் கேக்க மறந்திற்றன். சரி விடுங்கோ நான் அங்கை றெக்கோர்ட்டில பார்க்கிறன். கதையில கனநேரம் நிண்டிட்டன். உங்கடை மகனுக்கும் இப்ப ரெம்பரேச்சர் நோர்மலாத் தான் இருக்கு. நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை எண்டபடியால டொக்ரர் இனித் திங்கட்கிழமைதான் வருவேர். வந்து பார்த்திற்று அநேகமா நாளண்டைக்கு வீட்ட விட்டிருவினம் எண்டு. நினைக்கிறன். சரி நான் அப்ப, பிறகு வந்து பார்க்கிறன்.”

அவள் அறையை விட்டு வெளியேற என்மனமும் வெறுமையாகிப் போனது. யாழவனைப் பார்க்கிறேன். ஆறு வயதுப் பிஞ்சு. ஆழ்ந்த உறக்கத்திலும் முகத்தில் முறுவலிப்புடன். அவன் முகத்தைப் பார்க்கையில்தான் என் மனக்கவலைகளை நான் மறப்பதுண்டு.


2021 யூலை 04
 

ஏனோ தெரியவில்லை. என் மனம் அமைதியிழந்து தவித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை சிந்து இதைப்பற்றி ஊர்மிளாவுடன் கதைத்திருப்பாளோ? அப்படிக் கதைத்திருந்தால் ஊர்மிளா என்ன சொல்லியிருப்பாள்?

காலையிலிருந்தே சிந்துவின் வரவை என் மனம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவளது கடமை நேரத்திலும் வேறொரு தாதியே வந்து யாழவனுக்கு மருந்துகளைக் கொடுத்துவிட்டுப் போயிருந்தாள்.

ஒருவேளை ஊர்மிளா என்னைப் பற்றிச் சொல்லி என் முகத்தில் விழிக்கவே விருப்பப்படாமல் சிந்து இருக்கின்றாளோ? ச்சே! நான் செய்தது எவ்வளவு பெரிய பிழை. பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஊர்மிளா என்னிடம் எவ்வளவு கெஞ்சினாள். எவ்வளவு தூரம் அழுதாள். நான்தான் அந்த நேரத்து உணர்ச்சியால்…இப்போதுகூட நான்  அப்படிச் செயற்பட்டது சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனாலும் ஈற்றில் அவளும் என் முடிவுக்குச் சம்மதம் தெரிவித்ததால் தானே இந்த நிலை ஏற்பட்டது. இன்னவென்று விபரிக்க முடியாத உணர்ச்சிகளின் சிக்கலுக்குள் நான் ஆழ்ந்து கொண்டிருந்தேன்.

மாலை 8.00 மணியளவில் சிந்து எங்கள் அறைக்குள் நுழைந்த போதுதான் மனது கொஞ்சம் இலேசாகியது. உள்ளே வந்தவள் சிறு புன்னகையை உதிர்த்து விட்டு யாழவனைப் பரிசோதித்தாள். பின் என்னிடம் திரும்பி,

”இண்டைக்கு அம்மாக்குத் திடீரெண்டு கொஞசம் ஏலாம வந்திற்றுது. அதுதான் காலமை அவாவை டொக்ரரிட்டைக் கூட்டிக்கொண்டுபோய்க் காட்டிற்று night shift இற்கு வந்தனான். நான் உங்களோடை கொஞ்சம் ஆறுதலாக் கதைக்க வேணும். இப்ப போய் மற்றப் பேஷன்ற்சையும் பார்த்திற்றுப் பிறகு வந்து கதைக்கிறன் என”

என்றாள்.

எனக்கு நெஞ்சுக்குள் திக்கென்றது. இவளது கதையைப் பர்த்தால் நிச்சயம் எமது நேற்றைய உரையாடலைப்பற்றித் தன் தாயிடம் கூறியிருப்பாள் என்றே தெரிகிறது. அதன் விளைவால்தான் ஊர்மிளாவிற்கு வருத்தம் வந்திருக்கவேண்டும். இதைப்பற்றி அவளது கணவனும் அறிந்திருப்பானோ? கடவுளே. ஒரு குருவிக்கூட்டைக் கல்லெறிந்து கலைத்து விட்டேனோ? மனதிற்குள் குற்றவுணர்ச்சிகள் வந்து குந்திக்கொண்டு என்னைப் பாடாய்ப்படுத்தின. அவள் காதலை ஏற்றுக்கொண்டுவிட்டுப், பின் மனதை மாற்றிக் கொண்டது எவ்வளவு பெரிய தப்பு.

ஆனாலும் இன்றுவரை நாமிருவரும் பெருமைப்படக்கூடிய ஒரேயொரு நல்ல விடயம், நாங்கள் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எமது பண்பாட்டை மீறாமல் நடந்துகொண்டதே.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சிந்து அறைக்குள் நுழைவதைக்கண்டு என்மனம் பதைபதைத்தது.

”நீங்க எனக்கு உண்மையைச் சொல்லவேணும். நீங்க கேட்டது என்ரை அம்மாவைத் தானே?”

அவள் இப்படி நேரிடையாக வந்து என்னிடம் கேட்பாள் என்று நான் கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை. 2001 இல தீச்சுவாலை முறியடிப்புச் சண்டையில நாங்க இருந்த காப்பரணுக்கு திடீரெண்டு வந்த ஐஞ்சு டாங்கிகள் சுத்தி நிண்டு பொழியேக்க கூட நான் இப்படித் திடுக்கிட்டதில்லை.

”Please, என்னைப் பிழையா விளங்காதீங்கோ! நான் உங்களோடை கதைச்சிற்று நேற்றுப் போய் அம்மாவிட்டை சும்மா கேட்டனான், அவாக்கு, ஜெயந்தன் எண்ட பேரில, அதுதானே உங்கட பெயர், ஆரையும் தெரியுமா எண்டு. அவா உடனேயே ரென்ஷனாகி, அவாக்குப் பிரஷர் எல்லாம் கூடித் தலைச்சுத்தும் வந்திற்றுது. அதுதான் அவாவை இண்டைக்கு family doctor-ட்டைக் கூட்டிக் கொண்டு போனனான். அவர் செக் பண்ணிப் பாத்திற்று, உடம்பில ஒரு பிரச்சினையும் இல்லை. மனசுக்குத்தான் ஏதோ அதிர்ச்சி நடந்திருக்கெண்டு சொன்னவர். அம்மா தனக்கு ஒரு மனப்பிரச்சினையும் இல்லை எண்டு மழுப்புறா. அதுதான் உங்களிட்டைக் கேக்கிறன்”

அவள் சொல்லச் சொல்ல எனக்குள் ஏதோவெல்லாம் செய்தது.

”இல்லையில்லை. நான்தான் நேற்றே எல்லாத்தையும் சொல்லீற்றனே. அம்மாக்கு ஏதும் பிரச்சினையெண்டா நீங்க உங்கட அப்பாட்டையோ அல்லது உங்கட மற்ற சகோதரங்களிட்டை ஏதும் கேட்டுப் பாத்திருக்கலாமே”

ஊர்மிளாவின் குடும்பத்தைப்பற்றியும் அவளின் கணவரைப்பற்றியும் அறியும் ஆவலில் கதையைப் போட்டுப்பார்த்தேன்.

அவள் கண்கள் கலங்கின.

”எனக்கு அப்பாவும் இல்லை, வேற சகோதரங்களும் இல்லை.”

அவள் குரல் கரகரத்தது.

”ஓ! I’m so sorry.”

”It’s OK. என்ரை அப்பா, அம்மா, அப்பம்மா எல்லாரும் நான் ஒரு வயதாயிருக்கேக்குள்ளையே கார் அக்சிடன்ற் ஒண்டில செத்துப்போய்ற்றினம்”

”ஓ! கேக்கவே கஷ்ரமாயிருக்கு. அப்ப நீங்க அம்மா எண்டிறது?”

”என்ரை அம்மாவைத்தான். Sorry. உண்மையில அவா என்ரை அத்தை. அப்பாவின்ரை தங்கச்சி. ஆனா நான் சின்னனிலயிருந்தே அவாவ அம்மா எண்டு கூப்பிட்டு அப்பிடியே பழகீற்றுது. அவா என்ரை அம்மா இல்லையெண்டிறதே என்ரை மனசுக்குத் தெரியிறேல்லை.”

”ஓ! நான் நினைச்சன். கனடாவில இருக்கிற ஆக்கள் எல்லாம் ஒரு கவலையுமில்லாம இருக்கினம் எண்டு. வீட்டுக்கு வீடு வாசல்படிதான்”

”ஓம். அம்மாவும் சரியான பாவம். இத்தன வருசத்தில ஒரு பங்ஷனுக்கு அவா போய், நான் பார்த்ததில்லை. நல்லநாள் பெருநாள் எண்டா கோயிலுக்கு மட்டும் போவா. பாவம் எனக்காக கல்யாணமும் செய்து கொள்ளாம இப்பிடிச் சாமியார் மாதிரி வாழுறாவே எண்டு நானும் எத்தினியோ தரம் அவாவ இடங்களைச் சுத்திப்பாக்கக் கூட்டிக்கொண்டு போறதுக்கு try பண்ணிப் பாத்திற்றன். அவா ஒண்டுக்கும் அசையமாட்டணெண்டுறா. அதே மாதிரி ஆரு அவாவைப்பற்றி என்ன சொன்னாலும் மனிசி கொஞ்சமும் கிறுங்காது. ஆனா நேற்று உங்கடை பேரைக் கேட்டாப்பிறகு அவாவில பெரிய ஒரு change-ஐ நான் பார்த்தன். அதுதான் please உண்மையைச் சொல்லுங்கோ”

”நீங்க இவ்வளவும் சொன்னாப்பிறகும் என்னால உண்மையைச் சொல்லாம இருக்கேலாது. எங்களுக்கு ஆளையாள் தெரியும்.”

”எப்பிடித் தெரியும்?”

”உங்கட அம்மா தொண்ணூற்றைஞ்சில அருந் தப்பில உயிர் தப்பினவா எண்டு சொன்னீங்களெல்லா? அதில அவாவோட சேர்ந்து தப்பினது நானுந்தான். நானும் உங்கட அம்மாவும்தான் அவாவின்ரை ஐடென்ரிக் கார்ட்டை எடுக்கிறதுக்காக அவான்ரை வீட்டை போனாங்க. நாங்க அங்கை நிக்கேக்குள்ள ஆமி வந்திற்றுது. ரெண்டு நாள் அங்கையே ஆமிக்குத் தெரியாமா ஒளிச்சிருந்திற்றுப் பிறகு ஒருமாதிரித் தப்பி வந்திற்றம். அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுது நவாலிச் சேர்ச்சுக்குள்ளயிருந்த அவ்வளவு சனமும் புக்காரா போட்ட குண்டில செத்தும் காயப்பட்டும் போய்ற்றுதுகள் எண்டது. பிறகு 14ம் திகதி இயக்கம் புலிப்பாய்ச்சல் நடத்தி ஆமியைக் கலைச்சிற்றுது. அதோட நானும் இயக்கத்துக் போய்ற்றன். ஊர்மிளா அவாவின்ரை யாரையோ சொந்தக்காரர் வீட்டில நிண்டிட்டு பிறகு அவாவின்ரை அம்மாவோட கனடாக்குப் போறதுக்குக் கொழும்புக்குப் போய்ற்றா எண்டு கேள்விப்பட்டன்”

”ஓ! அப்பையேன் நேற்றுத் தெரியாதெண்டு சொன்னனீங்க?”

”நீங்க ஊர்மிளா உங்கடை அம்மா எண்டு சொன்னதும் நான் நினைச்சன் அவா கல்யாணம் கட்டிச் சந்தோஷமா இருக்கிறா, பிறகேன் நான் இடையில வந்து அவாவின்ரை சந்தோஷத்தைக் கெடுப்பான் எண்டு. அவா எனக்குச் சொன்ன மாதிரியே இன்னமும் ஒருத்தரையும் கல்யாணம் கட்டாமலே இருக்கிறா எண்டு எனக்குத் தெரியாது?”

”ஓ! அப்ப நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணின்னீங்களா?”

”நான் நினைக்கிறன் இப்பயும் ரெண்டுபேரும் மற்றாள் இருக்கினமா இல்லையா எண்டு தெரியாமலே லவ் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறம்.”

”அப்ப இவர்?”

கட்டிலில் உறக்கத்தில் கிடந்த யாழவனைச் சுட்டிக் காட்டினாள்.

”ஓ! யாழவன் என்ரை தங்கைச்சியின்ர மகன். தங்கச்சி, வீட்டில மற்றப் பிள்ளைகளைப் பார்க்க வேணும். மச்சானுக்கு வேலையில சரியான busy. கொரோனாவால எனக்கு இப்ப வேலையில்லை. அதுதான் நான் இவனோட வந்து நிக்கிறன்.”

”வாவ்! சூப்பர்! உங்கடை இந்தக் கதையக் கேக்க எனக்கே புல்லரிக்குது. இவ்வளவு நாளும் வீட்டில அம்மா என்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி ஒரே நச்சரிப்பு. ஆனா இனிக் கெதியில எங்கட வீட்டில ஒரு கல்யாணம் நடந்திரும் எண்டு நினைக்கிறன். என்ன? அதுக்குள்ள புதுமாப்பிள்ளைக்கு வெக்கமும் வருகுது போல”

கனவில் நினையாத காலம் இடைவந்து பிரிப்பது மட்டுமல்ல இணைக்கவும் செய்யும்.

(முற்றும்)

நன்றி: தாய்வீடு ஓகஸ்ட் 2021

1 comment: