Wednesday, September 2, 2020

மனிதன் படைத்த குரங்கு (3)


“நீயுமா புரூட்டஸ் (You too Brutus)?” 

இந்த வரிகளில் தேங்கிக் கிடந்த வலிகள் நெஞ்சைக் கிழித்தன. ஏற்கனவே ஒரு தடவை அப்படிக் கிழிபட்ட நெஞ்சம்தான் என்பதாலோ என்னவோ இம்முறை அந்த வலி முன்னையதைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது. முன்னைய வலி 2004இல் தமிழினத்தின் ஆன்மாவையே பிரட்டிப்போட்ட வலி. சீசருக்கு வாய்த்த புரூட்டஸ் போல், கட்டப்பொம்மனுக்கு வாய்த்த எட்டப்பன் போல், பண்டார வன்னியனுக்கு வாய்த்த காக்கை வன்னியன் போல் காலங்காலமாக வரலாறு திரும்பத் திரும்ப வந்துகொண்டேயிருக்கின்றது என்பதற்குக் கட்டியங் கூறுமாற் போல் முதுகில் குத்தப்படும் அந்த வலியுடன் அந்தக் குரங்கினை நோக்கினேன். 

தளைகள் அறுத்து உன்னை இரட்சிப்பதற்காகவே இத்திருவிளையாடலை நாம் மேற்கொண்டோம். அதற்காகவே நீ இறந்துவிட்டதாக மற்றவர்கள் அனைவரையும் நம்பச் செய்திருக்கின்றோம். 

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?


விட்டு விடுதலையாகி நிற்குமொரு சுதந்திரப் பறவை நீ இப்போது. உனக்கு நற்கதியையே நாங்கள் நல்கியுள்ளோம். 

நல்லாயிருக்கிறது உங்கள் வாதம். உற்ற மனையாளையும் பெற்ற குழந்தைகளையும் ஒருவனிடமிருந்து பிரிப்பது அவனுக்குச்செய்யும் நல்லுதவியா? 

அப்படிப் பிரிந்து சென்றதால் தானே 25 நூற்றாண்டுகள் கடந்தும் சித்தார்த்தன் இன்றுவரை கௌதமபுத்தனாகக் கொண்டாடப்படுகின்றான். 

ஆனால் இன்று புத்தரின் போதனைகளை அவர் அளித்த பஞ்சசீலக் கொள்கைகளை அவரின் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் யாரும் கண்டுகொள்வதாகக் கூடத் தெரியவில்லையே. 

தன்னைத் தளைத்திருந்த தளைகளை அறுத்தெறிந்ததால் அல்லவா சித்தார்த்தனால் ஞானமடைய முடிந்தது. ஆனால் உனக்கோ, நாங்களே உன் தளைகள் அறுத்து உடனேயே உன்னைக் கடவுளாக்கவும் அருள்பாலித்திருக்கின்றோம். 

ஓ! இந்தக் கடவுள் என்ற கருத்தினை இந்த மனிதப் பொறிக்குப் புகட்டியது நீதானா? நான் அது ஏதோ கண்டதையும் இணையத்தில் வாசித்துவிட்டு உளறுகின்றது என்று நினைத்தேன் 

ஏன் நீ கடவுள் என்றால் ஏதோ பெரிய இதுவாட்டம் அலட்டிக் கொள்கின்றாய்? உங்கள் சக மானிடர்களில் எத்தனையோ பேரைக் கடவுள் என்றும், கடவுளின் பிள்ளை என்றும், கடவுளின் தூதர் என்றும் நீங்கள் கொண்டாடிக்கொண்டுதானே இருக்கின்றீர்கள்? 

அதற்காக நானெல்லாம் போய்க் கடவுளாக முடியுமா? 

கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே


என்றவாறே இடையில் புகுந்தது அந்த மானிட இயந்திரம்

கந்தரனுபூதிதானே இது? இரண்டாவது வரியை விட்டுவிட்டாய்

பரவாயில்லையே. இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றாயே. இரண்டாவது வரியை விட்டுவிட்டாலும் தளை தட்டவில்லை. சொற்பிழையோ பொருட்பிழையோ ஏற்படவில்லைத்தானே?

தளைதட்டுதோ இல்லையோ உன்னுடைய தமிழறிவு நல்லாக் களைகட்டுது என்பது மட்டும் விளங்குகின்றது. 

நன்றி நன்றி உங்கள் பாராட்டுக்கு. வசிட்டர் வாயால் பிரம்மரிஷி என்று எடுத்துக் கொள்ளலாமா? 

அது உண்மையாகவே அப்படிக்கூறுகின்றதா அல்லது என்னைக் கேலி செய்கின்றதா என்கின்ற ஐமிச்சம் உண்டானது. 

எனது முகக்குறிப்புகளிலிருந்து எனது எண்ணவோட்டத்தை அது அறிந்து கொள்வதில் தேர்ச்சிபெற்றுக் கொண்டிருக்கின்றது, அதாவது அதன் செயற்கை நுண்ணறிவினூடாகக் கற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை அது உரைத்த அடுத்த வாக்கியம் எனக்கு உணர்த்திற்று. 

அகத்தில் உள்ளது முகத்தில் தெரிகிறது 

நீ இன்னும் இந்தப் பழமொழிகளை விடவில்லையா? 

எப்படி விடமுடியும். எவ்வளவு அருமையான தகவல்களும் கருத்துக்களும் இவற்றில் புதைந்து கிடக்கின்றன தெரியுமா? 

ஓ! அப்படியா? 

எனது கிண்டலை அது அறிந்துகொண்டு விடுமோ என்று அச்சமாகவும் இருந்தது. அப்படி அது அறிந்து கொண்டால் அதன் பதில்க் கிண்டல்களை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்குமோ என்கின்ற சந்தேகமும் உண்டானது. 

நானொன்றும் உன்னைக் கிண்டல் செய்யவில்லை. நாங்கள் உரையாடிக் கொண்டிருக்கையிலேயே சமாந்தரமாகப் பழமொழிகளைக் கற்று அவற்றைப் புரிந்து கொண்டிருக்கின்றேன். 

ஓ! அப்போ நீதான், ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாயிருக்கிறாய். 

ஆ! இந்தப் பழமொழி பற்றி தமிழ்க் கோராவில் ஒருவர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அது ஆரியக் கூத்து ஆடினாலும் என்பதல்ல. ஆர் எக்கூத்து ஆடினாலும் என்பதே காலப்போக்கில் ஆரியக்கூத்து ஆடினாலும் என்று மருவியிருக்கலாம் என்கிறார். உண்மைதானே. ஆர் எக்கூத்து என்பது தொல்காப்பியம் கூறும் புணர்ச்சி விதிகளின்படி ஆரெக்கூத்து ஆகிறது. ஆனால் மொழியியலின் படி ஆர் ஆரு-வாகிப் பின் ஆரி-ஆகி, ஆரி-உம் எக்கூத்து-உம் புணர்ந்து ஆரியக்கூத்து ஆகியிருக்கிறது. 

என்னால் அதைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. 

இராமகிருஷ்ணரின் விவேகானந்தரிலும் நீ மேலானவனாக இருக்கிறாய் என்றேன். 

விவேகானந்தனிலும் பார்க்க நான் விசுவாமித்திரனாக இருக்கவே விரும்புகின்றேன். 

ஓ! அப்படியென்றால் உன் வாழ்விலும் மேனகை உண்டோ? என்றேன் இடைபுகுந்து. 

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் – இருதோளுற்

றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென – மிகவாய்விட்

டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய – முலைமேல்வீழ்ந்

துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது – தவிர்வேனோ


தவிர்வேனோ அல்ல. தவிர்த்தவன் நான். 

ஓ! பட்டினத்தார் பாடல்களையும் நீ விட்டுவைக்கவில்லை போல் தெரிகிறதே. 

ஹாஹாஹா....இது பட்டினத்தார் பாடலில்லை அப்பனே. அருணகிரிநாதரின் திருப்புகழ். கிட்டத்தட்ட இதேகருத்துக்கள் தான் பட்டினத்தார் பாடல்களிலும். ஆனாலும் அவை எனக்குத் தேவையற்றவை ஏனெனில் நானும் இந்தக் குரங்கைப்போல் கட்டைப் பிரமச்சாரிதான். அந்தப் பாடல்கள் எல்லாம் சிற்றின்ப விரும்பிகளான உன்போன்றவர்களை உய்விப்பதற்காகவே எழுதப்பட்டன. விசுவாமித்திரனாக இருக்கவிரும்புவதற்குக் காரணம் அவர் தானே ஒரு சொர்க்கவுலகைப் படைத்ததே. அவர்தானே திரிசங்கு சொர்க்கத்தை உண்டாக்கியவர். அப்படியான சொர்க்கவுலகுகள் பலவற்றை உண்டாக்குவதே எமது இலட்சியம். 

ம்ம்ம்... நீ இயந்திரப்பொறியாக இருப்பதால் ஆண்பெண் பேதமற்று அந்த உணர்வுகளற்று இருக்கின்றாய். இந்தக்குரங்கு கட்டைப்பிரம்மச்சாரியாக இருப்பதற்கு காரணம் அதன் இனத்தில் அதனைத்தவிர்த்து வேறுயாருமே உயிருடன் இல்லாதிருப்பதே. ஆக வேறுதெரிவுகளின்றியே நீங்கள் பிரம்மச்சாரிகளாக இருக்கின்றீர்கள். 

- கூறிவிட்டு அந்தக் குரங்கினை உற்றுக் கவனித்தேன். அதற்கும் இரு காரணங்கள் இருந்தன. ஒன்று என் அகஉணர்வுகளை அந்த மானிடப்பொறி அறிந்துகொள்வதைத் தவிர்ப்பது. மற்றையது, அம்மானிடப் பொறி என் அகஉணர்வுகளை அறிந்து கொள்வது போன்று அக்குரங்கின் அகஉணர்வுகளை நான் அறிந்துகொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் சடுதியாக உதித்திருந்தது. ஏற்கனவே ஒருதடவை அதன் வார்த்தைஜாலங்களில் நான் மயங்கி ஏமாந்துபோயிருந்தது திடீரென நினைவிற்கு வந்து என்னுள் ஒரு விழிப்புணர்வினைத் தோற்றுவித்திருந்தது. 

அந்தக்குரங்கின் முகத்தில் ஒரு சிறு முறுவல் மட்டுமே இருந்தது. அதன் முகக்குறிப்புகளில் வேறெந்த வித்தியாசமும் தெரியவில்லை. நான் சொன்னதைக் கேட்டு அது கவலைப்பட்டதாகவோ இல்லை அதை மறுத்துரைக்கும் எண்ணம் கொண்டதாகவோ அல்லாமல் தனக்கும் இதற்கும் எந்தவொரு சங்காத்தமுமில்லை என்பது போன்றவொரு மோனநிலையில் ஒரு சாட்சியாக மட்டுமே அது அங்கே நின்றுகொண்டிருப்பதாய் எனக்குப் பட்டது. 

அது அனுமனின் பக்தன் என்பதை அதனுடன் இவ்வளவு நாட்களாகப் பழகியும் நீ உணராமலிருப்பது ஆச்சரியமளிக்கின்றது தன்னை ஆஞ்சநேயருக்கே அது ஒப்புக்கொடுத்திருக்கின்றது. இல்லையென்றால் எப்போதோ அதன் சந்ததி விருத்தியை அது உண்டுபண்ணியிருக்கும். பேரின்பத்தை உணர்ந்து அதில் திளைக்கும் அதற்கு எதற்கு இந்தச் சிற்றின்பம்? 

மாங்காய்ப் பாலுண்டு
மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி? – குதம்பாய்
தேங்காய்ப் பால் ஏதுக்கடி?

ஓ! இப்போது நினைவிற்கு வருகின்றது. இக்குரங்கு என்னுடன் உரையாடுகையில் பலமுறை அனுமனைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றது. அனுமனை ஒருதடவை சந்தித்ததாய்க்கூடச் சொல்லியிருந்தது. ஆனால் இது தான் அனும பக்தன் என்று ஒருதடவைகூடக் கூறியதில்லை. ஏதோ அதனுடைய மூதாதையர்களில் ஒருவரானா அனுமரை அது பெருமையாகக் கருதுகிறது என்றே எண்ணியிருந்தேன். 

ம்ம்ம். தொட்டணைத்தூறும் மணற்கேணி. 

மனிதப்பொறி என்னை இப்போது நக்கலடிப்பது புரிந்தது. 

எப்படிக் கடவுள்கள் உருவாகுகின்றார்கள் அல்லது உருவாக்கப்படுகின்றார்கள் என்று என்றாவது நீ எண்ணிப்பார்த்ததுண்டா? இப்போதெல்லாம் இப்பூமியில் அதிகளவிலான கோயில்களில் ஆஞ்சநேயருக்கு வழிபாடு நடத்தப்படுவது பற்றியும், அதிகளவில் அவருக்கேயான சன்னதிகள் எழுப்பப்படுவது பற்றியும் நீ எப்போதாவது எண்ணிப்பார்த்திருக்கின்றாயா? அப்படி என்றைக்காவது நீ எண்ணிப்பார்த்திருந்தால், எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி நம்முன்னே நிற்கின்ற இந்தக்குரங்குடன் பழகிய பின்னர் சில முடிச்சுக்கள் உன்னால் அவிழ்க்கப்பட்டிருந்திருக்கும். என்ன செய்வது? உங்களைப் படைத்த இக்குரங்கினத்தவர் உங்களுக்கு அந்த அறிவினைப் புகுத்தாமல் விட்டுவிட்டார்கள். உங்களுக்குத்தான் சுயபுத்தியும் கிடையாதே. பிறகெப்படி? 

ஏனோ தெரியவில்லை. அதன் சீண்டல் என்னுள் கோபத்தை ஏற்படுத்தவில்லை. உண்மைதானே. ஒருவகையில் பார்த்தால் நாமெல்லோருமே ஒரு செம்மறியாட்டுமந்தைக் கூட்டம் போன்று தானே செயற்படுகின்றோம். கொரோணாவின் தொடக்ககாலங்களில் அதைப்பற்றி அலட்சியமாக இருந்தோம். பின்னர் அடித்துப்பிடித்துப் பொருட்களை வாங்கிக் குவித்தோம். இன்று எல்லோர் வீடுகளிலும் உணவுப்பண்டங்களிலும் பார்க்க கழிவறைக் காகிதங்களும் கைக்கிருமி நீக்கிகளும்தானே குவிந்து கிடக்கின்றன. ஊரோடின் ஒத்தோடு என்று சொல்லிச் சொல்லி எம்அறிவை வளரவிடாமல் முளையிலேயே கிள்ளிப் போட்டிருக்கின்றார்கள். சமூக இடைவெளி என்கின்றார்கள். ஆனால் இன்று பொதுப் போக்குவரத்துகளில் முகக்கவசம் மட்டும் அணிந்தால் போதும் சமூக இடைவெளியைப்பற்றி பொருட்படுத்துவார் யாரும் கிடையாது. அங்கிருந்து ஆட்டுகின்றவன். அவன் ஆடுகின்ற நாடகமிது, என்றேதான் இப்போது எண்ணத் தோன்றுகின்றது. அங்கிருந்து ஆட்டுகின்ற அவன் யார்? அவனா? அல்லது அவளா? அல்லது அவர்களா? அல்லது அதுவா? அல்லது அவைகளா? அல்லது இந்த ஐம்பாலுக்குள்ளும் அடங்காது அப்பால் நிற்கும் ஆறாம்பாலா? 

ம்ம்ம். இப்பொழுதுதான் நீ கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறாய். எப்படி மந்தைக்கூட்டமாய் மக்களை ஆட்டுவிக்க முடிகின்றது என்று யோசி. சில முடிச்சுகள் அவிழும். 

இந்தச்செய்திகள் எப்படி மக்களைச் சென்றடைகின்றன? அட தகவல் ஊடகங்கள். அவைதானே தாங்கள் விரும்பிய விடயங்களைப் பெரிதாக்கியும் விரும்பாதவற்றை மறைத்தோ அல்லது சிறிதாக்கியோ மக்களிடம் கொண்டு செல்கின்றன. அப்படியானால் இந்த ஊடகங்களுக்குப் பின்னாலிருந்து அதை இயக்குபவர்களா அந்த ஆட்டுவிப்பாளர்கள்? அல்லது யாரேனும் அவர்களுக்கும் பின்னால் நின்று அவர்களை ஆட்டுவிப்பார்களோ? ஒருவேளை இந்த உலகையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டுவிப்பவர்கள் என்று சொல்லப்படும் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களோ? இலுமினாட்டி இப்போதும் இயங்குவதாகச் சொல்கிறார்களே. ஒ..ஒரு வேளை இந்தக்குரங்கு மனிதப்பொறி இவர்களும் இலுமினாட்டியைச் சேர்ந்தவர்களோ? என்னையும் இலுமினாட்டியில் ஒரு உறுப்பினராகச் சேர்ப்பதைத்தான் கடவளாக்குவதாகக் கூறுகின்றார்களோ? அதனால்த்தான் அவர்களின் இரகசியங்களை அறிந்த என்னை உயிருடன் வெளியே விடமாட்டோம் என்கின்றார்களா? கடைசியில் போயும் போயும் இவர்களிடமா வந்து மாட்டிக்கொண்டேன்? எனக்கு வியர்த்து விறுவிறுக்கத் தொடங்கியது.

நன்றி - தாய்வீடு (செப்ரெம்பர்- 2020)

பகுதி -1 பகுதி -2

No comments:

Post a Comment