Wednesday, January 31, 2018

இன்றைய தமிழ்ச்சொற்பிழைதிருத்திகளில் தொல்காப்பியத்தின் பயன்பாடு - ஓர் ஆய்வு

முன்னுரை:

இன்றைய கணினி உலகில் ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அம்மொழிக்குரிய சொற்பிழைதிருத்திகளும் இன்றியமையாதவையாக விளங்குகின்றன. அந்தவகையில்  தமிழ்மொழியில் சொற்பிழைகளைத் திருத்துவதற்காக சில சொற்பிழைதிருத்திகள் உருவாக்கப்பட்டிருப்பினும் அவை இன்னமும் முழுமைப்படுத்தப்பட வேண்டியவையாகவும் வினைத்திறன் மிக்கதாக மாற்றப்பட வேண்டியவையாகவுமே காணப்படுகின்றன. இச்சொற்பிழைதிருத்திகளில் தொல்காப்பியத்தின் பங்கு, ஏன் மற்றும் எவ்வாறு அமையலாம் என்பதை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.


தொல்காப்பியம்:

தமிழ்மொழியின் மிகப்பண்டைய இலக்கணநூலாக இன்று எமக்குக் கிடைத்திருப்பது தொல்காப்பியரால் பொது நூற்றாண்டிற்கு 700 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் தொல்காப்பியம் ஆகும். இத்தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என முப்பெரும் அதிகாரங்களைகளைக் கொண்டதாய் விளங்குகின்றது. எழுத்ததிகாரத்தில் தனி எழுத்துகள் பற்றியும், ஒரு சொல்லில் அவைபெறும் இடம்/நிலை பற்றியும் அடுத்தடுத்துவரும் எழுத்துகள் எவ்வாறு அமையும்/மயங்கும் என்பதும், சொற்கள் புணரும் போது எவ்வாறான மாற்றங்கள் உருவாகும்,எப்படியான உருபுகளை ஏற்கும் போன்றவையெல்லாம் விதிகளாகச் சூத்திரங்களினால் சொல்லப்பட்டிருக்கின்றன. சொல்லதிகாரத்தில் திணை, பால், எண், இடம் போன்றவையும், வேற்றுமை விளக்கங்களும், பெயர், வினை, இடை, உரி போன்ற சொற்களின் வகைகளும் அன்ன பிறவும் விதிகளாக எடுத்தோதப்பட்டிருக்கின்றன. எழுத்து, சொல் ஆகிய இவ்விரண்டு அதிகாரங்களில் காணப்படும் விதிகளைக் கொண்டு தூயதமிழ்ச் சொற்களுக்கான சொற்பிழைதிருத்தியையும் இலக்கணப்பிழைதிருத்தியையும் உருவாக்கிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 

சொற்பிழைதிருத்தியில் தொல்காப்பியத்தின் பங்கு பற்றி ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாதலால் இலக்கணப்பிழைதிருத்தி பற்றிய விபரங்கள் மேற்கொண்டு இங்கே இடம்பெறுவது தவிர்க்கப்படுகிறது.


இன்றைய நடைமுறைத்தமிழும் தொல்காப்பியமும்:

இன்றைய நடைமுறைத்தமிழிற்கு தொல்காப்பிய விதிமுறைகள் பொருந்துமா? என்பது பலரிடமும் உள்ள கேள்வி. எடுத்துக்காட்டாக 'ச' என்கின்ற எழுத்து, ஒருசொல்லின் முதலெழுத்தாக வராது என்கிறது தொல்காப்பியம். ஆனால்  இன்றைய நடைமுறைத்தமிழில் சங்கம், சந்தை, சரி என்று ஏராளமான சொற்கள் உள்ளன.  தொல்காப்பியத்திலும் அதையொட்டிய காலப்பகுதியில் உருவான சங்கஇலக்கியங்களிலும் காணப்படும் சொற்களில் பலவும் இன்றைய நடைமுறைத் தமிழில் பாவனையில் இல்லை. அவற்றிற்கான பொருளையும் நாம் உரையாசிரியர்களின் உதவியின்றியோ அல்லது அகராதி/நிகண்டு போன்றவற்றின் துணையுமின்றியோ அறிந்துகொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றோம். 

மேலும் பிற்காலத்தில் வடமொழிச் சொற்களின் உச்சரிப்புக்களுக்காக கிரந்த எழுத்துக்களும் உள்வாங்கப்பட்டுத் தமிழெழுத்துகளுடன் கலந்து எழுதப்படுகின்றன. அத்துடன் ஆங்கிலமொழியினதும் ஏனைய மேலைநாட்டு மொழிகளினதும் ஆதிக்கமும் தமிழ்மொழிமேல் காணப்படுவதுடன் அவ்வாறான திசைச்சொற்கள் இன்றைய நடைமுறைத்தமிழில் மிகச்சரளமாக பாவனையிலும் வந்துவிட்டன. தூயதமிழ்ச்சொற்களிலான ஒரு கட்டுரையினைத் தமிழில் இன்று காண்பது அரிதினும் அரிதாகி விட்டிருக்கிறது. அப்படியானவொரு சூழலில் தமிழ்ச்சொற்பிழைதிருத்தியினில் தொல்காப்பியத்தின் பங்கு தேவையற்றது என்கின்ற வாதம் எழுவதும் தவிர்க்க முடியாததே


ஏன் தொல்காப்பியம்?

தொல்காப்பியத்திற்கு ஏறத்தாழ  1900 ஆண்டுகளுக்குப் பின்னர், பொதுநூற்றாண்டின் பின்னான 13ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட நன்னூல், இன்றைய நடைமுறைத் தமிழிற்கு தொல்காப்பியத்திலும் விட மிக நெருக்கமானதாக இருக்க, எதற்காகத் தொல்காப்பியத்தை இன்னும் பின்பற்றவேண்டும் என்கின்ற கேள்வியும் பொருத்தமானதாகவே தோன்றும்.

தமிழ்மொழியின் தொன்மைக்குச் சான்றாக விளங்குவதுடன் இன்றுவரை தமிழ்மொழியினைச் சிதைவடையாமல் பாதுகாத்துவருகின்ற அரியவொரு சொத்தாகவும் விளங்குவது தொல்காப்பியமாகும். மொழிக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் இலக்கணம் (பொருளதிகாரத்தில்) கூறியிருக்கும் ஒரேயொரு இலக்கணநூல் தொல்காப்பியமே. பண்டைத் தமிழரின் சீரிய வாழ்வியல் நெறிகளும் முறைகளும் தொகுக்கப்பட்ட ஒரு வரலாற்று ஆதார நூலாக விளங்குவதும் தொல்காப்பியமாகும்.

எனவே தொல்காப்பியத்தைப் புறந்தள்ளுவோமேயானால் தமிழ்மொழியின் தொன்மையை நாம் இழந்துவிடுவோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அது மட்டுமே காரணமாயிருப்பின் 'பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வழுவல' என்பதற்கேற்ப என்றைக்கோ தொல்காப்பியத்தை நாம் கைகழுவிவிட்டிருப்போம்.  தொல்காப்பியத்தின் சிறப்பே 2700 ஆண்டுகள் கழிந்த பின்னரும்,  இன்றைய கணினி யுகத்திலும் பொருந்தும்படியாக, தூயதமிழ்ச் சொற்பிழைதிருத்தி ஒன்றினை வினைத்திறன் மிக்கதாக உருவாக்குவதற்குரிய விதிகள் சொல்லப்பட்டிருப்பதாகும்.


தொல்காப்பியமும் தூயதமிழ்ச் சொற்பிழைதிருத்தியும்:

வினைத்திறன்மிக்க ஒரு சொற்பிழைதிருத்தியானது, சரிபார்க்கும் சொல்லைத் தரவுகளத்தினுள் (Database)  உள்ள சொற்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முன்னரேயே, பிழையான சொற்களை அடையாளங்காணக்கூடியதாய் இருக்கவேண்டும். அதன் பின்பே தனது தரவுத்தளத்தினுள் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் சொற்களுடன் சரிபார்க்கவேண்டும். பிழையான சொற்களை அடையாளங்காண்பதற்குரிய விதிகளைத் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் கூறப்பட்டிருக்கின்ற நூற்பாக்களிலிருந்து இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

ஒரேயொரு எழுத்தால் ஆன சொற்கள் பின்வருமாறு வரையறைசெய்யப்பட்டிருக்கிறது.

“நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி.”

“குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே.”

நெட்டெழுத்துக்கள் மட்டுமே ஓரெழுத்தாலான சொற்களாக அமையும். எனவே அவை தவிர்ந்த ஏனைய எழுத்துக்களில் ஓரெழுத்தாலான தனிச் சொற்கள் வரின் அவை பிழையான சொற்களாகும்.

சொற்களில் முதலிலும் இறுதியிலும் வரக்கூடிய எழுத்துகள் எவையென எழுத்ததிகாரத்தின் ஐம்பத்தொன்பதாவது நூற்பாவிலிருந்து எண்பத்திரண்டுவரையான நூற்பாக்களில் தரப்பட்டிருக்கின்றன. இரண்டு ஒற்றெழுத்துகள் எப்படியான சந்தர்ப்பங்களில் அடுத்தடுத்து வரலாமெனவும் கூறப்படுகிறது.

மேலும் இரு சொற்கள் புணர்கையில் நிலைமொழியின் ஈற்றுப்பகுதியும் வருமொழியின் முற்பகுதியும் எவ்வாறான மாற்றங்களுக்கு உட்படுமெனவும் விரிவாகவும் தெளிவாகவும் விதிகளாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனால் புணர்த்தியெழுதப்படும் சொற்களைத் தரவுதளத்தினுள் சேமிக்கவேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது. அவ்வாறே சொற்கள் ஏற்கும் உருபுகளும் அவை பற்றிய விதிகளும் தொல்காப்பியத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதால், உருபுகளேற்ற சொற்களையும் தரவுதளத்தினுள் சேமிக்கவேண்டியதில்லை.  

எனவே பிழையான சொற்களை முதலிலேயே அடையாளம் கண்பதுடன் தரவுதளத்தின் அளவைச் சிறிதாகப் பேணிக்கொள்வதாலும் வினைத்திறன் மிக்கவொரு தூயதமிழ்ச் சொற்பிழைதிருத்தியினை உருவாக்கிக்கொள்ள முடியும்.


நடைமுறைத் தமிழ்ச் சொற்பிழைதிருத்தி:

இன்றைய நடைமுறைத் தமிழில் தொல்காப்பிய விதிகளுக்கு உட்படாத ஏராளமான சொற்கள் பாவனையில் உள்ளன.  எனவே நடைமுறைத் தமிழிற்கு தூயதமிழ்ச் சொற்பிழைதிருத்தி மட்டும் போதுமானதன்று. ஆகவே, தொல்காப்பிய விதிகளுக்கு அமையாத சரியான சொற்களையும் நடைமுறைத் தமிழ்ச் சொற்பிழைதிருத்தியானது சரியானதாகவே அடையாளங்காட்ட வேண்டும். எனவே அதற்குரிய விதிகளையும் இணைத்தே ஒரு சொற்பிழைதிருத்தியானது உருவாக்கப்பட வேண்டும்.

தொல்காப்பிய விதிகளையும் இணைத்துக் கொண்டு நடைமுறைத்தமிழ்ச் சொற்பிழைதிருத்திஒன்றினை உருவாக்குவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. தொல்காப்பிய விதிகளின் மூலம் பிழையான சொல்லாக அடையாளப்படுத்தப்படும் ஒருசொல் நடைமுறைத்தமிழில் சரியான சொல்லாக இருக்கலாம். நடைமுறைத் தமிழ்ச் சொற்பிழைதிருத்தியினால் அச்சொல் சரியான சொல்லாகவே அடையாளப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் அச்சொற்பிழைதிருத்தியானது புறக்கணிக்கப்பட்டுவிடும்.


நடைமுறைத் தமிழ்ச் சொற்பிழைதிருத்தியில் தொல்காப்பியம்:

நடைமுறைத் தமிழ்ச் சொற்பிழைதிருத்தி ஒன்றின் பிழையான சொற்களை அடையாளங் காணும் செயன்முறையில் முதலில் தொல்காப்பிய விதிகளை உள்ளிடலாம். அங்கே அச்சொல் பிழையான சொல்லாக அடையாளப்படுத்தப்படின் அதற்கு ஒரு குறியீட்டினை இட்டுவிட்டு தொடர்ந்தும் அச்சொல்லினை நடைமுறைத் தமிழ்ச் சொற்களினை அடையாளங் காண்பதற்குரிய விதிமுறைகளுடன் ஒப்பிடலாம். அதில் அச்சொல் பிழையான சொல்லாக அடையாளப்படுத்தப்படாவிடின்  அச்சொல்லினைத் தரவுதளத்தினுள் உள்ள சொற்களுடன் சரி பார்க்கலாம். அச் சொல்லானது;

i) நடைமுறைத் தமிழில் பிழையான சொல்லாக அமைந்தால் சிவப்பு நிறத்தினால் பிழையான சொல்லென அடையாளப்படுத்தலாம்.

ii) நடைமுறைத் தமிழில் சரியான சொல்லாகவும் தொல்காப்பிய விதிகளிற்கேற்ப பிழையான சொல்லாகவும் அமைந்தால் அச்சொல்லினை பிறிதொரு வர்ணத்தினால் அடையாளப்படுத்தலாம்.


முடிவு:

வினைத்திறன்மிக்க ஒரு தூயதமிழ்ச்  சொற்பிழைதிருத்தியொன்றினை தொல்காப்பியத்தின் உதவியுடன் அமைத்துக் கொள்ளக்கூடியதாகவிருப்பினும் இன்றைய நடைமுறைத் தமிழினைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவொரு சொற்பிழைதிருத்தியினையே உருவாக்கவேண்டியிருக்கிறது. ஆயினும் நடைமுறைத் தமிழ்ச் சொற்பிழைதிருத்தியின் செயன்முறையினுள் தொல்காப்பிய விதிகளையும் உள்ளீடு செய்வதனூடாகவும், நடைமுறைத் தமிழிலுள்ள தூயதமிழ்ச்சொற்கள் அல்லாதவற்றை வேறுவர்ணத்தினால் அடையாளப்படுத்துவதன்  மூலமாகவும் நடைமுறைத் தமிழ்ச் சொற்பிழைதிருத்தியொன்றினை உருவாக்கிக்கொள்ளலாம். 

இதனால் இச்சொற்பிழைதிருத்தியின் பயனர்கள் சொற்களின் தன்மை அதிகம் பற்றி அறிந்துகொள்வதுடன் இச்சொற்பிழைதிருத்தியினையும் விரும்பி உபயோகப்படுத்துவார்கள். அதுமட்டுமன்றி தொல்காப்பியம் இதுவரை காலமும் காத்து வந்த தமிழின் தொன்மையும் தொடர்ந்து பேணப்படும்.


குறிப்புகள் (உசாவல்):
1) தொல்காப்பியம். உரையாசிரியர்களின் உரைகளுடன் (தமிழ் இணையக் கல்விக்கழகம்) (http://tamilvu.org/library/libindex.htm)
2) http://vaani.neechalkaran.com/



நன்றி: தாய்வீடு (டிசம்பர் 2017)

5 comments:

  1. நல்ல தகவல். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. தூயதமிழ்ச் சொற்பிழைதிருத்தியுடன் தொலகாப்பிய விதிகளுக்குள் அமையாத சரியான சொற்களையும் சரியாக அடையாளம் காட்டகூடியதான ஒரு சொற்பிழைதிருத்தியை பரிந்துரைப்பது தங்களின் யதார்த்த பார்வையை காட்டுகிறது.

    வருங்கால கணினி தமிழின் வளர்ச்சிக்கு பயனுள்ள பதிவு.

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
    http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete
  3. அற்புதமான கட்டுரை.... தமிழ் வளர நல்லுர மாய் உள்ளது

    ReplyDelete