Saturday, August 14, 2010

வெற்றிக்கான தோல்வி (Lose to win)


இன்றைய நடுநிசியை அண்டிய பயணம். தூக்கக் கலக்கம் வேறு. வழமையாக நீண்ட நேரப் பயணங்களுக்கு (இங்கே சிங்கப்பூரில் ஒரு மணி நேரப்பயணம் என்பது நீண்ட நேரம் தான்) IPod தான் எனக்கு வழித்துணையாக இருப்பது வழக்கம். ஆனால் காலையில் புறப்படுகின்ற அவசரத்தில் IPod இனை மறந்து விட்டிருந்தேன். இரவு நேரப் பயணங்களில் பழைய பாடல்களைக் கேட்டவாறே கண்மூடிப்பயணிப்பது ஒரு சுகானுபவம். கடைசியாக கடந்த மாத இறுதியில் அந்த இனிமையை இரசித்திருந்தேன். அதிலும் பழைய பாடல்களை என் சிறுவயதில் மனனம் செய்து கொள்வதற்கு காரணமாக இருந்தவரும் அருகிலிருந்து பாடல்களை மீட்டியவாறு வந்த அந்த கொழும்பு-யாழ் இரவுப் பேருந்துப் பயணம் ரம்மியமானது. பழைய இனிய நினைவுகள் எப்போதுமே உற்சாகத்தைத் தருபவையே.

பேருந்திற்குக் காத்திருக்கையில் நேரத்தைக் கடத்துவது சிரமமாயிருந்தது. சகபயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவேயிருந்தது. செவிக்கு உணவில்லாதவிடத்து வயிற்றுக்கும் கொஞ்சம் ஈயப்படும் என்றார் வள்ளுவர். வயிறு ஏற்கனவே நிரம்பிவிட்டிருந்ததால் கண்கள் அலைபாயத் தொடங்கின. எங்கள் புலன்கள் யாவுமே இப்படித்தானே, சும்மாயிராமல் எப்போதும் எங்கேயாவது அலைபாய்ந்து கொண்டுதானே இருக்கின்றன. சும்மா இருப்பது எவ்வளவு கடினமானது என்பது புரிந்தது. வாசிப்பதற்கும் எதுவும் என்னிடம் இருக்கவில்லை.

பார்வை வீச்சுக்குள் சில பயணிகள் வந்தார்கள் போனார்கள். சில பெண்கள் வாசகங்கள் பதித்த மேலாடைகளுடன் வந்தார்கள். “அறிவு எங்கே இருக்கிறது?” என்கின்ற கேள்விக்கு “பெண்களின் மார்பகங்களின் நடுவே” என்றான் தெய்வீகப்புலவன் காளிதாசன். ஆயினும் பெண்களின் ஆடைகளின் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகங்களைப் படித்து அறிவினை வளர்த்துக்(?) கொள்வதில் உள்ள இயல்பான தயக்கம் கண்களைக் கீழே தாழவைத்து விடுகிறது. தாய்ப்பால் அருந்திய சிசு அதனின்றும் விடுபடுகையில் அறிவினைப் பெறத் தொடங்குகின்றான். பின் மணவாழ்வில் இணைந்து மனைவியின் மார்பில் முயங்கத் தொடங்குவதனுடன் அவனது அறிவு விருத்தி நின்று விடுகின்றது. காளிதாசன் காலத்தில் அதுதான் வாழ்க்கையை முறையாகவும் இருந்தது. குருகுலவாசத்தில் அறிவைத் தேடிக்கொண்டு பிரம்மச்சரியம் முடித்து கிருகஸ்தத்தில் இறங்கிவிடுவதே அக்கால வழமை. எதேச்சையாய் நிமிர்கையில்,

“LOSE TO WIN'

ஓர் ஆணின் சட்டையின் முதுகுப்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் கவனத்தை ஈர்த்தது.

Lose to win. வெல்வதற்காகத் தோற்பது. அதன் அர்த்தம் என்ன? வெற்றி என்றால் என்ன? தோல்வி என்றால் என்ன? நாம் விரும்பியதை அடைவதை வெற்றி என்று கூறலாமா? அப்படியானால் தோல்வி என்பது நாம் விரும்பியதை அடையமுடியாமல் இருப்பது என்றுதானே அர்த்தப்படமுடியும். அல்லது நாம் விரும்பாததைப் பெற்றுக்கொள்வது என்றும் கூறலாம். ஏனெனில் ஒன்றை அடையமுடியவில்லையென்பதன் அர்த்தம் வேறொன்றை அடைந்து விட்டோம் என்பதுதானே. அப்படியானால் வெல்வதற்காகத் தோற்பது என்பது என்ன அர்த்தத்தைக் கொடுக்க முடியும்? சரி. எதற்காக வெற்றியடைய விரும்புகின்றோம்? அந்த வெற்றி எமக்கு மகிழ்ச்சியைத் தருவதனால்தானே? தோல்வி துன்பத்தைத் தருவதனால்தானே அதைத் தவிர்க்க விரும்புகின்றோம்.

ஊடலில் தோற்றவரே வென்றவர் ஆவார் என்பார்கள். அப்படியானால் வேறொன்றைப் பெறுவதற்காக இன்னொன்றை இழப்பதனையா/கொடுப்பதனையா இது குறிக்கின்றது? ஆக பெறுவது மட்டுமே வெற்றியா? கொடுப்பது தோல்வியா? பொதுவாகவே வெற்றியடைய வேண்டுமென விரும்பும் நாமெல்லோருமே மற்றவர்களிடம் ஏதோவொன்றை பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றோமா? கொடுப்பதிலே மகிழ்ச்சி இல்லையா? அங்கேயும் இருக்கிறது. எம்முடைய எதிரிக்கு நல்லவொரு அடி கொடுக்கையில் மகிழ்ச்சியடைகின்றோம் வென்று விட்டதாய்ப் பெருமிதம் அடைகின்றோம். இல்லையா? அதே வேளையில் அடிவாங்கியவர் துன்பமடைகின்றார். அப்படியானால் கொடுப்பதில் நாங்களும் மகிழ்ச்சியடைந்து அதைப் பெறுபவரையும் மகிழ்ச்சியடைய வைக்கமுடியாதா? ஒரு காதலனோ/காதலியோ தனது காதலிக்கோ/காதலனுக்கு முத்தத்தினை வழங்குகையில் இருவருமே மகிழ்ச்சியடைகிறார்களே. அப்படியானால் அங்கே யார் வெற்றிபெறுகிறார்? எவர் தோல்வியடைகிறார்? இதைத்தான் இணைந்து வெல்லுதல் (Win together) என்பதா?

'தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா யார்கொலோ சதுரர்?' என்று கடவுள் என்று தான் நம்பும் சங்கரனைப் பார்த்துக் கேட்கின்றார் மாணிக்கவாசகர். 'அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றதொன்றென்பால்?' என்கின்ற அவர் வெளிப்படையாகவே தானே அந்த சூதாட்டத்தில் வென்றவர் என்றும் பறைசாற்றுகின்றார். ஆக வாழ்க்கையே வெறும் சூதாட்டம் தானா?

இங்கே உள்ள காணொலியினைப் பார்க்கையில் என்ன நினைக்கத் தோன்றுகிறது?

“முருகா நீ ரெண்டுதாரம் கட்டிக்கிட்டுச் சிரிக்கிற...” என்றெல்லாம் இனி அந்தத் தமிழ்த் திரையிசைப்பாடலைப் பாட இந்த மூன்றாவது மனைவி விடுவாரா?
:-)


6 comments:

 1. அய்யா.....வணக்கம்....!! வழமை போல சிந்திக்கத்தூண்டும் கருத்துக்கள். தொடரட்டும்...!!

  ReplyDelete
 2. Anna, What is the correct Tamil word for IPod?

  ReplyDelete
 3. மங்காத்தா படபிடிப்புக்காக சிங்கப்பூர் வந்த அஜித்தை, வலசு எதொச்சையாக கண்டு குசலம் விசாரித்து பின்னர் புகைப்படம் எடுத்தாக தகவல்......!!!!! அஜித்தின் தோல்விகளுக்கான மருந்து தடவல் தான் இந்த "தோல்விக்கான வெற்றியின் ரகசியம்"...........?????

  நன்றி
  மங்காத்தா படபிடிப்பு குழுவினர்

  ReplyDelete
 4. "தல"யின் சட்டையின் முதுகுப்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம்(“LOSE TO WIN") கவனத்தை ஈர்த்து தல உடனான அறிமுகம் கிடைத்தமையினால் உன் தல மட்டும் வலசு அல்ல........!!!!!!

  நன்றி
  $$$$$.....சிங்கப்பூர் அஜித் ரசிகர் மன்றம்.....$$$$$

  ReplyDelete
 5. கொடுப்பதில் உள்ள சுகம், ஆத்ம திருப்தி, பெறுவதில் உள்ள சுகத்திலும் பல மடங்கு. (அடி மட்டுமல்ல அன்பும் தான்)

  அது நிற்க்க, Ipod இற்க்கு தமிழ், ஐ-பொட். அது ஒரு கருவிக்கு அதன் தயாரிப்பாளர் வைத்த பெயர். இது Obaamaa வுக்கு என்ன தமிழ் என்று கேட்பதற்க்கு ஒப்பானது,

  முரளி - இங்கிலாந்து.

  ReplyDelete
 6. ஆங்கிலப்பெயர்~~ முரளி-இங்கிலாந்து
  தமிழ்ப்பெயர்~~முரளி-தாய்லாந்து

  புரிகிறதா மிஸ்டர் விதண்டாவாத மூர்த்தி...........???????

  ReplyDelete