
இன்றைய மதிய நேரம். ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையிலான நீண்ட தொடரூந்துப் பயணம். ஆரம்பத்தில் பயணிகள் அதிகம் இல்லையாயினும் பயணத்தூரம் செல்லச்செல்ல இருக்கைகள் நிரம்பி, நின்று கொண்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. தொடரூந்து நிலக்கீழ்ச் சுரங்கத்திற்குள் நுழைய அலைபேசியின் வானொலி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. சுற்றிவர நோட்டமிட்டேன். வழமை போன்றே ஒவ்வொரு பயணிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதது போல் தங்கள் தங்கள் உலகில் ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். அநேகமானோர் காதுகள் iPod-உடனேயே இணைக்கப்பட்டிருந்தன. சிலர் PSP (PlayStation Portable) யில் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.
அடுத்த தரிப்பிடத்தில் இறங்குவதற்காய், எனக்கருகிலிருந்தவர் எழ, அந்த இருக்கையைக் குறிவைத்து ஒரு சீன இளம்பெண் வந்தாள். அங்கங்கே அங்கங்கள் காட்டும் ஆடையுடன் மதர்ப்பாயிருந்தாள். வாளிப்பாய், வனப்பை அள்ளிக்குவித்து வைத்தது போல் கவர்ச்சியாய் இருந்தாள். அருகில் அமர்ந்ததும் உள்ளம் கிளுகிளுப்பாவதை உணர்ந்தேன்.
அடுத்து வந்த தரிப்பிடத்தில் எனக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருந்தவர் எழ, அப்போதுதான் உள்ளே நுழைந்த இன்னோர் சீன மூதாட்டி அதில் வந்தமர்ந்தாள். உற்று நோக்கினேன். கூன்விழுந்து உடல் தளர்ந்து நரைதிரை கண்ட பெண். கைகளில் முகத்தில் ஆங்காங்கே பட்டைபட்டையாய் தோல் உரிந்தும் சில இடங்களில் புண்ணாகியும்...அருவருப்பாய் உணர்ந்தேன்.
எனக்குள் பார்த்தேன். ஒருபுறம் தேவதை மறுபுறம் தேவாங்கு என்று எழுந்த எண்ணம் மறுகணமே அடங்கிப்போனது. இப்போது என்னால் அருவருப்பாய்ப் பார்க்கப்படுகின்ற இந்த முதிய பெண்ணும் பல ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு தேவதையாய் இருந்திருக்கக்கூடும். யார் கண்டது, எத்தனை இளைஞர்கள் இவள் பின்னால் அலைந்தார்களோ? இதோ இப்போது என்மறுபக்கத்தில் சுண்டி இழுக்கும் கவர்ச்சியுடன் காணப்படும் இந்த இளம்பெண் இன்னும் பல ஆண்டுகள் கழித்து, அப்போது வரும் இளைஞர்களால் அருவருப்பாய்ப் நோக்கப்படக்கூடும்.
அழகு, நிரந்தரமற்றதெனினும் முதற்பார்வையில், நாம் அழகாய் தெரிபவற்றின் மேல் கவரப்படவும் அசிங்கமாய் தெரிபவற்றின் மேல் வெறுப்புறவும் தானே செய்கிறோம். வாழ்வின் இருகோடி அந்தங்களும் என் இருபுறமும் இப்போது இருப்பதாய் எனக்குப்பட்டது. அழகைக் கண்டு ரசிப்பதா? அல்லது அசிங்கத்தைப் பார்த்து வெறுப்பதா? உணர்வுகள் திண்டாடின.
சரி! இந்த மூதாட்டியை எல்லோருமே அருவருப்பாய்த்தான் பார்ப்பார்களா? மீண்டும் அந்த மூதாட்டி பக்கம் திரம்பினேன். அட! அவருக்கு மறுபுறம் அவரை ஆதுரமாய் அணைத்தவாறே ஒரு வயோதிகர், அவரின் கணவராய் இருக்க வேண்டும். இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருந்தனர்.
என்னால் அருவருப்பாய் வெறுக்கப்பட்ட அதே பெண், இன்னொருவருக்கு விருப்புக்குரியவராய் அழகானவராய்த் தெரிகிறார். “காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு” என்கின்ற பழமொழி ஞாபகத்தில் வந்து போனது. ஆக அவர் அருவருப்பாய் எனக்குத் தெரிவது எனது பிரச்சனையே அன்றி அந்த மூதாட்டியின் பிரச்சனையல்ல. அப்படியானால் எனக்கு அழகாய்த் தெரியும் மறுபுறம் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணும் வேறு யாராலும் வெறுக்கப்படக் கூடுமா? என்கின்ற கேள்வி எழுந்தது. இருக்கலாம், யாருக்குத் தெரியும்? “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம்”. பொதுவாக அழகான பெண்களிடம் காணப்படும் அகங்காரத்தினால் எத்தனையோ பேரை இவள் கேவலமாக நடத்தியிருக்கக்கூடும். சிலவேளைகளில் இவள் அகங்காரமற்றவளாய், எல்லோருடனும் அன்பாய் பழகுவளாய்க்கூட இருக்கலாம். இல்லை வேறுவிதமான இரசனை கொண்டவர்களுக்கு சிலவேளை இவள் அசிங்கமாய்க்கூடத் தெரியலாம். ஆக இவள் எனக்கு அழகாய்த் தெரிவதும் எனது பிரச்சனையே அன்றி அவளுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. ஒரு தெருநாய்க்கு ஒரு குட்டை போட்ட பெட்டைநாய் தான் அழகாய் கவர்ச்சியாய்த் தெரியுமேயன்றி ஐஸ்வர்யாராய் அல்ல.
அழகுகூட ஒரு ஒப்பீடே என்றது உள்மனது. உண்மைதான் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இன்னொருபொருள் கிடைக்காத போதுதான் நாம் ஒன்றை அப்படியே அது உள்ளவாறே ஏற்றுகொள்வோம். ஆனால் அப்படி, ஒப்பிடமுடியாத ஒரு பொருள் என்று எதுவும் எம்மிடையே உள்ளதா?
உண்மையைச் சொல்லுங்கள். இந்தக் கேள்வியை வாசித்ததும் உங்களுக்குள் ஒரு ஒப்பீடு நடந்ததா? இல்லையா? இதுதான், இந்த ஒப்பீடுதான் எமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ஆனால் இதே ஒப்பீடுதான் இன்றைய விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக நாம் பிரச்சனைகள் என்று எண்ணுபவற்றிற்கு காரணம் நாம் ஒப்பிடும் பொருட்கள் அல்ல, மாறாக நாம்தான் எமது பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது புரிந்தது.
இப்போது அந்த அழகிய இளம்பெண் பக்கம் திரும்ப அவள் எனக்கு இளம்பெண்ணாக (அழகிய விடுபட்டுப் போனது) தெரிந்தாள். மறுபுறம் திரும்ப அசிங்கமாய்த் தெரிந்த மூதாட்டி, வயதான பெண்ணாக (அசிங்கம் விடுபட்டுப் போனது) தெரிந்தார். ஏதோ புரிபட்டதாய் உணர்ந்தேன். இன்னும் ஒப்பீடு இருப்பதாகவே தெரிந்தது. நேரம் செல்லச்செல்ல இருவரும் பெண்களானார்கள் (இளமை/முதுமை என்பது விடுபட்டுப் போனது). மேலும் சில கணங்கள் கழிய இருவருமே சக மனிதர்களானார்கள் (பெண்கள் என்பது விடுபட்டுப்போனது). மேலும் சில கணங்கள் கடக்கையில்... நான் இறங்கவேண்டிய தரிப்பிடம் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட சிந்தனை கலைந்து வெளியே வந்தேன்.
வெளியே வானொலிக்கான சமிக்ஞைகள் இல்லாததால் iPod-இனை அணிந்து கொண்டேன்.
“...எறும்புத்தோலை உரித்துப் பார்த்தேன், யானை வந்ததடா. -நான்
இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா...”
கண்ணதாசனின் பாடல்வரிகள் அர்த்தத்துடன் செவிகளை வந்தடைந்து கொண்டிருந்தன.