Wednesday, April 13, 2011

வேரென நீயிருந்தாய்...(25)

கப்பல் பயணத்தின் அலுப்புத்தீர்வதற்கு இரு நாட்கள் எடுத்திருந்தது. மறுநாள் மாலை பிளேன்ரீ-யுடன் வறுத்த கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம்மா அருகில் வந்து அமர்ந்தார். சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு,

“ஜேன்! இந்தா! இந்தக்கடிதத்தை வாசி!

அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“அக்காட்ட இருந்து வந்தது. நீ ஆறுதலா இருக்கேக்க வாசிக்கட்டும் எண்டுதான் இவ்வளவுநாளும் தராம இப்பதாறன்.

எங்களை விட்டுப் பிரிந்ததன் பின்னர் அக்காவிடமிருந்து வந்த முதல் கடிதம் அது. ஆவலுடன் வாசிக்கலானேன். எப்படியோ அவள் என்னைப்பற்றி அறிந்து விட்டிருக்கிறாள். தன்னுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவே அந்தக்கடிதம். காடுகளில் நாவற்பழங்களைக் காணும் நேரங்களில் என் நினைவுகள் தன்னுள் துளிர்த்தெழுவதை அவளால் தடுக்க முடியாமலிருக்கிறது.

அது இந்திய படையினரின் ஆக்கிரமிப்புக்கு சிலவருடங்கள் முற்பட்ட சரஸ்வதிபூசைக் காலம். வங்களாவடியில் இருக்கும் சரஸ்வதி வித்தியாலயத்திலேயே அக்காவும் நானும் கல்வி கற்றுக் கொண்டிருந்தோம். சரஸ்வதி பூசைக்காலங்களில்தான் நாவற்பழங்களும் மரங்களில் காய்த்துக் குலுங்கும். நாவற்பழம் கிரந்தி என்று சொல்லி வீட்டில் சாப்பிட விடமாட்டார்கள். ஆனால் அக்காவிற்கோ நாவற்பழங்களின் மேல் அப்படியொரு கொள்ளைப்பிரியம். அதிலும் ஔவைப்பாட்டியின் சுட்டபழம் சுடாதபழம் கதையைப் பாடப்புத்தகத்தில் படித்த பின்னர் அவளுக்கு சுட்டபழம் வேணும், ஆனா அது சுடாம இருக்க வேணும். அதுக்கு அவளுக்கு நான் வேணும்.

நாங்கள் பாடசாலை செல்லும் வழியில்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ. இரத்தினம் அவர்களின் வீடு இருக்கிறது. அந்த வீட்டிற்குப் பின்னால் உள்ள காணியொன்றில் பெரிய நாவல் மரமொன்று இருந்தது. அதன் பழங்கள் திராட்சைப்பழ அளவில் இருக்கும். அதன் சுவையும் தனித்துவமானது. பாடசாலை விட்டு அவ்விடத்திற்கு வந்ததும், அக்கா என்னை மரத்தில் ஏறி தனக்கு நல்ல பழுத்த பழங்களாகப் பறித்துத் தரும்படி கெஞ்சுவாள். அவளுக்கு நிலத்தில் விழுந்த பழங்களை உண்பதற்குப் பிடிக்காது. ஒருமுறை இப்படித்தான் ஏறிக் கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்து, நல்ல வேளையாக காலெல்லாம் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பித்துக் கொண்டேன். பொதுவாக, நாவல் மரங்களிலிருந்து விழும் ஆண்பிள்ளைகள் தப்பித்துக் கொள்வது அரிது என்று ஊரில் சொல்வார்கள். அது நாவல் மரத்திற்கேயுரிய நாணம் என்று சொல்லி ஆண்பிள்ளைகளை நாவல்மரங்களில் ஏறவிடுவதில்லை. அந்நிகழ்ச்சியில் அம்மாவிடம் வேண்டிக் கொண்ட அர்ச்சனையின் பின் அந்த வருடத்திற்கு அக்காவின் நாவற்பழ ஆசை அடங்கிப்போயிருந்தது. அடுத்த வந்த வருடம் கா.பொ.இ வீட்டில் இயக்கக்காரர்கள் வந்து முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். ஐச் சார்ந்தவர்கள் ஊரவர்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது அந்த வீட்டின் முன்னே ஒரு பீரங்கிக்குழல் நீண்டிருக்கும். அதன் வாய் சாக்குப் போட்டு மூடப்பட்டிருக்கும். பாடசாலை செல்லும் போதும் வரும்போதும் அந்த பீரங்கிக்குழலை வேடிக்கை பார்ப்பது எங்களுக்கு வாடிக்கையாகிப் போனது.

பின் வந்த சில நாட்களில் ஈ.பி.ஆர்.டில்.எப் இனர் அந்த வீட்டினை விட்டு வெளியேற வேறொரு இயக்கத்தினர் அந்தவீட்டினை தங்களின் தங்ககமாக மாற்றிவிட்டிருந்தனர். அந்தக் காலங்களில் ஊரில் ஈறோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ரெலா, ரைகர்ஸ், புளொட் என அறுபத்தெட்டு இயக்கங்கள் இருந்தனவாயினும் ரெலோ, ரைகர்ஸ், ஈ.பி. (ஈ.பி.ஆர்.எல்.எப்) புளொட் என்பனவே ஆயுத ரீதியில் பலம் மிக்கவையாக மக்களிடையே பிரபல்யமாகத் தொடங்கியிருந்தன. படித்தவர்கள் மத்தியில் ஈறோஸ் செல்வாக்குப் பெற்றிருந்தது. மற்ற இயக்கங்களைப் போலன்றி புளொட் பொதுமக்களிடமே தங்களுக்கான உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டிருந்ததுடன் இராணுவ ரீதியிலான தாக்குதல்களை அது பெருமளவிற்கு நடத்தியிருந்ததாகவும் தெரியவில்லை.

'காத்தடிக்குது புயலடிக்குது காரைநகரில ஈ.பி அடிக்குது போறவழியில ரெலோ அடிக்குது வாற வழியில ரைகர் அடிக்குது வயிறு முட்ட புளொட் அடிக்குது'

என மக்களிடையே அதன் செல்வாக்கும் குறையத் தொடங்கியிருந்தாலும் கோட்டையில இருந்து சிறிலங்காப் படையினர் எறிகணைகளை ஏவும் நேரங்களைக் கணக்கிட்டு அபாய ஒலி எழுப்பி யாழ்நகர் மக்களை எச்சரிக்கை செய்யும் பணியை அது செவ்வனே செய்து கொண்டிருந்ததுடன் யாழ் சத்திரச் சந்திக்கு அண்மையில் மணல்மூட்டைகளால் காப்பரண் அமைத்து, அந்த வழியே யாழ் கோட்டையிலிருந்து வரும் துப்பாக்கிச் சூடுகளையும் ஏவுகணைகளையும் அது தடுத்துக் கொண்டிருந்தது. அந்தக்காலத்தில் காரைநகர் கடைற்படை முகாமே ஈ.பி.ஆர்.எல்.எப். இனரின் பிரதான இலக்காக இருந்தது. அடிக்கடி அங்கே சென்று சொறிவதை அவர்கள் வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தனர்.

திடீரென் ஒருநாள் மதியம் போல் அப்பா கடையை மூடிவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்தவர்,

“பெடியள் தங்களுக்குள்ளையே அடிபட வெளிக்கிட்டிட்டாங்களாம். இண்டைக்கு இஞ்சையும் ரெலோவும் ரைகர்ஸ்சும் சண்டை பிடிக்கப் போறாங்களாமெண்டு கேள்வி. ஒருத்தரும் ஒருஇடமும் போகாம வீட்டுக்குள்ளேயே இருங்கோ” என்றார்.

மாலை மூன்று மணியளவில் சடசடக்கத் தொடங்கிய துப்பாக்கி வேட்டுக்கள் மாலை ஏழு மணியின் பின்னரே ஓய்விற்கு வந்தன. அன்றைய சண்டையில் தபால் கந்தோரடியில் நின்று விடுப்புப்பார்த்த ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

ஒரு பிள்ளை ரைகர்ஸ்ஸிலும் இன்னொருபிள்ளை வேறொரு இயக்கத்திலும் இருந்த குடும்பத்தவர்கள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள். சில தினங்களில் வடக்கு கிழக்கு ரைகர்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வர ஏனைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காய் தப்பி வெளி நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.



2 comments:

  1. காத்தடிக்குது புயலடிக்குது காரைநகரை ஈப்ஸ் அடிக்குது வாற வழியிலை ரெலோ அடிக்குது பாய்ஞ்சு பாய்ஞ்சு புலி அடிக்குது சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது இப்படித்தான் எங்கடை ஊர்ப்பக்கம் பாடுவது.

    ReplyDelete
  2. "அன்றைய சண்டையில் தபால் கந்தோரடியில் நின்று விடுப்புப்பார்த்த ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்."


    பழைய நினைவுகளை மீட்டதுக்கு நன்றி. ரெலோவும் ரைகர்ஸ் பிடித்த சண்டைக்கு நடுவில நானும் மாட்டுபட்டு , கரண்ட கம்பி அறுந்து விழுந்து, எரிந்து கொண்டிருந்த வேலிக்கு மேலால் பாய்ந்து ஓடியிருக்கிறேன். அன்று தபால் கந்தோரடியில் கொல்லபட்டவர் கூட என் நண்பனின் சகோதரர் தான்.

    ReplyDelete