26 நவம்பர் 2001. படைத்துறை மேலாண்மையினைப் பறைசாற்றிவிட்டிருந்த தமிழர் தேசத்தின் குரலை, அது சொல்லப் போகும் சேதியை உலகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள். எங்கள் பல்கலைக்கழக வாழ்க்கையிலும் முக்கியமான நாள். விடுகை வருடத்தின் இறுதிப்பரீட்சையும் முடிவுற்ற நாள். பல்கலைக்கழக மாணவ வாழ்க்கையின் இறுதி நாள். வரவுகளின்றி செலவுகள் செய்து மகிழ்ந்திருந்த வாழ்வின் இறுதி நாள். எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? என்கின்ற பிரிதலின் வலியை உணர்த்திய நாள். பசுமை நிறைந்த
நினைவுகளைச் சுமந்து கொண்டு பிரிந்த நாள்.
நினைவுகளைச் சுமந்து கொண்டு பிரிந்த நாள்.
பரீட்சைகள் முடிவுற்றதும் பெரும்பாலான மாணவர்கள் அக்பரினை விட்டு வெளியேறுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிலர் குழுக்களாக இணைந்து புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் காட்டினர். மாலை மயங்குகையில் குழுக்களாகச் சேர்ந்து பல்கலைக்கழக வாழ்வின் இறுதித் தினத்தினைக் கொண்டாடுவதில் முனைந்தனர்.
தீபனும் நானும் இன்னும் சிலரும் ஒன்றாக டெவன்-சிற்குள் நுழைந்தோம். தலதா மாளிகைக்கு அண்மையில் அமைந்திருக்கும் Devens மற்றும் கண்டி ஏரிக்கு முன்னால் அமைந்திருக்கும் Lake Front போன்ற பிரத்தியேக உணவகங்களில் சக மாணவர்களின் கூட்டம் அதிகமாய்க் காணப்பட்டது. அது சிரேஷ்ட மாணவர்களின் பட்டமளிப்பு விழாவின் போதான cap collection-இனை நினைவிற்கு கொண்டு வந்தது. cap collection dayள எங்களால் இலகுவில் மறக்க முடியாத ஒன்று. பட்டமளிப்பு முடிந்து வரும் ஒவ்வொரு மாணவர்களிடமும் குழுக்களாகச் சென்று கைகுலுக்கி அவர்களை வாழ்த்திவிட்டு தொப்பியை நீட்ட நூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய் வரை ஒவ்வொருவரும் தொப்பியினுள் இடுவார்கள். எங்கள் சேகரிப்பு முடிந்ததும், அன்றைய இரவே கண்டி நகருக்குள் இருக்கும் பிரத்தியேக உணவகங்களுக்குள் சென்று விடுவோம். தண்ணியடிப்பவர்கள் lake front -இற்கும் மற்றவர்கள் devens -இற்கும் செல்வது வழமை. சேர்த்த காசை அன்றைக்கே செலவு செய்துவிட வேண்டும். அதுவம் தின்பண்டங்களுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமென்கின்ற எழுதப்படாத விதியிற்கேற்ப விரும்பிய அனைத்து வகை உணவுகளையும் ருசி பார்த்து விட்டு இனி எதுவும் முடியாது என்கின்ற நிலையிலும் கையில் காசு மிச்சமிருக்கும். பின் நொறுக்குத் தீனிகளையும் வாங்கிக்கொண்டு van-உம் பிடித்துக் கொண்டு விடுதிகளுக்குத் திரும்புகையில், எங்களுக்கு பணமளித்த பட்டமளிப்பு நடைபெற்ற மாணவர்களில் சிலர் பேரூந்திற்கு காத்திருப்பதையும் காணக்கூடியதாகவிருக்கும்.
Devens Special இனை முடித்துவிட்டு விடுதி திரும்புகையில் நெஞ்சு கனத்துப் போய்க் கிடந்தது. அடுத்து என்ன என்கின்ற கேள்வி எழுந்தது. “தம்பி என்ன செய்கிறீங்க?” என்கின்ற பெரிசுகளின் கேள்விகளுக்கு இதுநாள் வரையில் “இஞ்சினியருக்குப் படிச்சுக் கொண்டிருக்கிறன்” எண்டு பெருமையாச் சொன்னதை இனிச் சொல்லேலாது. உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். வேலையொண்டு எடுக்கும் வரைக்கும் இப்பிடியான கேள்விகளை எதிர்கொள்வதன் தர்மசங்கடத்தினை இனித்தான் உணரப் போகின்றோம். பெரும்பாலான ஆய்வுகூடங்களில் தற்காலிக போதானாசரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பட்ட மேற்படிப்பை மேற்கொள்வதற்கு விரும்பியிருந்த மாணவர்களே அவற்றிற்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டியிருந்தனர். ஏனையோர் வேலை தேடுவதில் ஈடுபட்டிருந்தனர். தீபனுக்கு கொழும்பில் Site Engineer வேலை ஏற்கனவே ஏற்பாடாகியிருந்தது. மேற்படிப்பில் ஈடுபடுவதா அல்லது வேலை தேடுவதா என்கின்ற குழப்பத்தில் என்னால் எந்த முடிவினையும் எடுக்க முடியாமலிருந்தது.
இனிமேலும் அம்மாவைத் தனியே விட முடியாது. அவள் பாவம். வயதான காலத்தில் தனியே விடுவதில் எனக்கும் இஷ்டமில்லை. Site Engineer-ஆகப் போய் கொழும்பில் வேலை செய்தால் கிடைக்கும் வருமானத்தில் அம்மாவையும் கொழும்பில் கொண்டு வந்து வைத்திருக்க முடியாது. நாட்டு நிலைமைகள் விரைவில் சீர்படும் அறிகுறிகள் தென்பட்டன. அப்படியொரு நிலை உருவாகின் civil Engineers இற்கு வடகிழக்கில் நல்ல demand ஏற்படும். நிறைய NGO-களில் வேலைவாய்ப்புகள் உண்டாகும் என்கின்ற பரவாலான அனுமானத்தால் அதுவரை காலமும் தற்காலிக போதனாசிரியராக வேலை செய்யலாம் என்கின்ற எண்ணத்தில் நானும் அதற்கு விண்ணப்பித்து விட்டிருந்தேன்.
இரு தினங்களின் பின்னர் Fluid Lab- இற்காக நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் நதீஷாவையும் அங்கே காணக்கூடியதாக இருந்தது. farewell party-யின் பின்னர் அவள் என்னிடமிருந்து விலகியிருப்பதாகவே பட்டது. என்னுடனான சந்திப்புகளை அவள் தவிர்பபதை என்னால் அவதானிக்கமுடிந்தது. விலகியிருக்கையில் நெருங்கி வந்தவள், நெருங்கி வருகையில் விலகிச் செல்வது மனதிற்கு கஷ்டமாய் இருந்தது. வலியப் போய் அவளுடன் உரையாடுவதற்கு என்னுடைய ஈகோ இடம் கொடுக்கவில்லை. அத்துடன் அக்காவைப் பற்றிய உண்மையை அவளிடம் இனிமேலும் மறைப்பது சிரமமாயிருக்கும் என்பதால் முன்னர் இது பற்றித் தீபனிடம் கேட்டதற்கு அவன் என்னைத் திட்டித் தீர்த்திருந்தான்.
இதெல்லாம் சும்மா Infatuation. இன்னும் கொஞ்ச நாளில கம்பஸ் முடிஞ்சு நாங்களெல்லாம் பிரிஞ்சிருவம். அதுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் மறந்திருவீங்க. கண்டி மழையையும் கம்பஸ் காதலையும் நம்பேலாது எண்டு சொல்லுறது உனக்குத் தெரியாதா?
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36
>கண்டி மழையையும் கம்பஸ் காதலையும் நம்பேலாது எண்டு சொல்லுறது உனக்குத் தெரியாதா?
ReplyDeleteஉப்பிடி என்ரை bath இல் இருந்த ஒரு வேலணைக்காரனும் அடிக்கடி சொல்லுறவன். அவனுக்கும் ஏதோ ஒரு அனுபவம் இருந்துதோ தெரியவில்லை பாவம். எல்லாம் அந்தப் பிள்ளையாருக்கே புண்ணியம்.
ungal thodar mudivai nerungukirathu pool therigirathu. unmaiyil mana kanakkirathu.
ReplyDelete