Friday, November 25, 2011

வேரென நீயிருந்தாய்...(41)

“ஜெயந்தன் டேய்! இரவைக்கு நான் வீட்ட வருவன். எனக்கு நாளைக்கு faculty-ல course completion letter எடுக்க வேணும். அம்மாட்ட எனக்கும் சேர்த்துச் சமைக்கச் சொல்லு. என”

“தீபன் டேய்! அம்மாவை emergency ward - இல admit பண்ணியிருக்கடா. திடீரெண்டு வீசிங் கூடி சுவாசிக்கச் சரியாக் கஷ்ரப் படுகிறா. கொண்டு வந்த உடனே ஒருக்காப் புகைப்பிடிச்சவங்கள். இன்னும் சரி வரேல்லைடா. பயமாயிருக்கு”.

“பயப்படாத மச்சான் ஒண்டும் நடக்காது. எப்பிடியும் இரவுக்கு நான் அங்க வந்திருவன். தைரியமாயிரு. எந்த ஆஸ்பத்திரி? உதவிக்கு ஆரும் இருக்கினமோ?"

“கண்டி பெரியாஸ்பத்திரியிலதான் admit பண்ணியிருக்கு. நான் தனியத்தான்ரா நிக்கிறன். கொஞ்சம் சரிவந்தா ward-இற்கு மாத்திறது எண்டு கதைச்சவை. பெம்பிளைகளின்ரை ward-க்கு விட்டால் பிறகு நிக்கேலாது. உதவிக்கும் ஒருத்தரும் இல்லை. என்ன செய்யிறதெண்டும் தெரியேல்லையடா”

“கவலைப்படாத மச்சான். எல்லாம் ஒழுங்கு செய்யலாம். எனக்குத் தெரிஞ்ச டொக்ரர் ஒருத்தரும் கண்டி பெரியாஸ்பத்திரியிலதான் house officer-ஆ இருக்கிறேர். நான் அவரோடு கதைச்சு ஒழுங்கு படுத்திறன். அப்பிடியில்லையெண்டாலும் ஆரும் எங்கட faculty பெட்டைகளிட்டக் கேட்டுப் பார்க்கலாம். அந்த அலுவல் எல்லாம் நான் பார்க்கிறன். நீ பயப்பிடாம இரு. நான் இன்னும் அஞ்சு மணித்தியாலத்தில அங்க வந்திருவன்”

அழைப்பைத் துண்டித்தான் தீபன். நெஞ்சுக்குக் கொஞ்சம் நிம்மதியாயிருந்தது. Emergency ward-இன் வெளியே வைக்கப்பட்டிருந்த bench-இல் அமர்ந்தேன். என்னைப் போலவே வேறும் சிலரும் தங்கள் உறவுகளை emergency ward-இனுள் அனுமதித்துவிட்டு வெளியே தவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரை மருத்துவத்தாதி வந்து அழைத்து ஏதோ சொல்ல அவரும் சந்தோஷமாக உள்ளே சென்றார். சிறிது நேரத்தில் அவரது நோயாளி உறவினரை ward-இற்கு மாற்றினர். நான் எனக்கான அழைப்பிற்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். இன்னும் சிறிது நேரத்தில் வேறொருவரை உள்ளே அழைத்தனர். உள்ளே சென்றவர் கத்திக்குழறியவாறே வெளியே வருகையிலேயே புரிந்து விட்டது.

ச்சே! என்ன வாழ்க்கை இது? நேற்றிருந்தார் இன்றில்லையெனும் பெருமையல்ல. சற்றுமுன் இருந்தவர்கூட இப்போதில்லையெனும் பெருமைக்குச் சொந்தமானதுதான் இந்தப் பூமி. ஆழ்ந்து சிந்திக்க, வாழ்வின் நிரந்தரமின்மை புரிந்தது. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் வைத்தியசாலைகளின் Emergency ward மற்றும் intencive care unit களின் முன்னால் சிலநாட்கள் அமர்ந்து கவனித்தாலே போதுமானது. போர்க்களத்தைத் தவிர்த்து வாழ்க்கையின் நிலையாமையை உணர வைத்தியசாலையைத்தவிர வேறு சிறந்த இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

“Mrs. சுந்தரலிங்கம்-கே கட்டி கவுத?" (Mrs. சுந்தரலிங்கத்தின்ரை ஆள் ஆரு?)

'அய்? மமத் தமாய்” (ஏன்? நான்தான்)

“எயாவ ward-எக்க மாறுகரகண்டஓன. அத்துலங் எண்ட.” (அவர ward-க்கு மாத்த வேணும். உள்ளுக்க வாங்க)

அம்மாவை normal ward -இற்கு மாற்றுகையில் மணி ஆறரையைத் தாண்டி விட்டிருந்தது. அதன் பின்னர் பெண்கள் ward-இற்குள் நிற்க ஆண்களுக்கு அனுமதியில்லையாதலால் நான் வெளியே வரவேண்டியதாயிற்று. அம்மாவின் அலைபேசியை அவரிடம் கொடுத்தேன். அம்மா இப்போது கொஞ்சம் Normal-ஆய் இருந்தார்.

“ஜெயந்தன் நீ வீட்டை போ. வீட்டில எல்லாம் போட்டது போட்டபடியே அப்பிடியே கிடக்கு. எனக்கு ஒண்டுமில்லை. என்னை நாளைக்கே வீட்டைபோகச் சொல்லி விட்டிருவினம். ஏதும் தேவையெண்டால் நான் உனக்கு போன் பண்ணுறன்”

“சாப்பாடு வேண்டிக் கொண்டுவாறன்.”

“இனி நீ உள்ள வரேலாது. அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுவன். சாப்பாடு கொண்டுவந்துதர எல்லாம் எனக்கு ஆக்கள் இருக்கினம். நீ கவனமா வீட்டை போய்ச் சேர். ஒழுங்காச் சாப்பிடு. என?”

“விசிற்றர்ஸ் ஒக்கம எலியன்ட யண்ட. வெலாவ இவறாய்” (visitors எல்லாம் வெளியால போங்க. நேரம் முடிஞ்சுது).

மருத்துவத்தாதி விரட்ட வெளியேறி வீட்டினை அடைந்தேன். அம்மா இல்லாத வீடு வெறுமையாய் இருந்தது. தனிமை சூழ்ந்து கொண்டது..

“ஜெயந்தன்”

தீபனின் குரல் கேட்டதும் நெஞ்சுக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. கதவைத் திறந்தேன்.

“அம்மாக்கு இப்ப என்ன மாதிரி?”

“ward-இற்கு மாத்தியாச்சு. இனி நாளைக்குக் காலமை தான் போய்ப் பார்க்கலாம்”.

“சரி நீ சாப்பிட்டியா? நீ எங்க சாப்பிட்டிருக்கப்போற? வா போய் குருந்துவத்தைச் சந்தியில சாப்பிட்டு வரலாம்”..

தீபனின் வற்புறத்தலின் பேரில் போய் சாப்பி்ட்டு வந்து படுத்துக் கொண்டோம். உறக்கம் வர மறுத்தது. பிரண்டு பிரண்டு படுத்துக்கொண்டேயிருந்தேன். திடீரென தீபனின் போன் அலறியது.

“ஹலோ? ஆரு? என்ன?...ஓ அப்பிடியா? என்னெண்டு எப்ப நடந்தது? சரிசரி நாங்க வாறம்”

“தீபன் டேய் என்னடா? ஆரு இந்த நேரத்தில? என்ன நேரம் இப்ப?”

நேரத்தைப் பார்த்தேன். அதிகாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. தீபன் எழுந்து அருகில் வந்தான். கையை இறுகப்பிடித்துக் கொண்டான்.

“ஜெயந்தன் நீ இனித் தைரியமாயிருக்கவேணும்”

“என்ரை அம்மோய்ய்ய்.............................”

நரம்பெல்லாம் ஓடிச்சிலிர்த்தது. உள்மனதிற்கு புரிந்துவிட்டது. எது நடக்கக்கூடாது என்று விரும்பியிருந்தேனோ அது நடந்தே விட்டது. தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. தீபன் என்னைத் தாங்குவது மங்கலாகத் தெரிந்தது.

தாயெனும் கோவிலைக் காக்க மறந்திட்ட பாவியடி கிளியே...............

“ஜேன்! எழும்படாப்பு! கவலைப்படாதையப்பன்”

“அக்க்க்கா” கேவினேன்.

தலையினை அக்கா வாஞ்சையுடன் தடவிவிட்டாள்.

“ஆம்பிளைப்பிள்ளை அழக்கூடாதடா. நீ அழுதா அம்மாக்கு மனசு தாங்காது. நீ என்ன சின்னப்பிள்ளையா? இப்ப நீ ஒரு இஞ்சினியர். அழாமத் தைரியமாயிருக்க வேணும். எழும்பி இனி நடக்க வேண்டியதுகளைக் கவனி”

“நீயும்தானே என்னை விட்டிட்டுப் போய்ற்ற..”

“உன்னைவிட்டிட்டு நான் ஒரு இடமும் போகமாட்டன். நான் இனியும் உன்னோடதான் இருப்பன். நீ தைரியமாயிரு. என்னடா பெம்பிளைப்பிள்ளைகள் மாதிரி சும்மா அழுது கொண்டு. எழும்பு. எழும்பி அம்மாவின் அலுவல்களைக் கவனி”

அழுவதனால் துயரங்கள் கழுவப்படுகின்றன. மனம் இலேசாகின்றது. ஆனால் இந்த சமூகம் ஆண்களை அழுவதற்கு அனுமதிப்பதில்லை. அழும் ஆண்களை பலவீனமானவர்களாகப் பார்க்கிறது. அந்த வரட்டுக் கௌரவத்திற்காகவே அத்தனை ஆண்களும் தங்கள் கண்ணீரை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. மீன்களின் கண்ணீரை கடல் மட்டுமே அறிவதைப்போல் ஆண்களின் கண்ணீரைத் தலையணை மட்டுமே அறியும்.

“ஜெயந்தன் டேய்! என்னடா செய்யுது உனக்கு? நீ OK-யா?”.

யாரோ என்னை உலுக்குவது தெரிந்து விழிக்க தீபன் நின்றிருந்தான். அயலிலிருக்கின்ற சில மாணவர்களும் வந்திருந்தனர். என்னைச்சுற்றி என்ன நடக்கின்றது என்பதை உணர முடியா நிலையில் நானிருந்தேன். தீபன்தான் எல்லா ஒழுங்குகளையும் செய்து கொண்டிருந்தான். காலை ஒன்பது மணியளவில் அம்மாவின் உடல் வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. குளித்து வேட்டி உடுத்திவர ஐயர் ஆயத்தமாயிருந்தார்.

முத்துநல் தாழம்பூ மாலை தூக்கி.....

திருப்பொற்சுண்ணம் ஆரம்பிக்க அடிவயிற்றுக்குள் ஓலம் கிளம்பியது. மாட்டேன். நான் அழமாட்டேன். நான் அழுவது அம்மாவுக்கு பிடிக்காது. அம்மா! உனக்குப்பிடிக்காததை நான் செய்யமாட்டேன். மேற்பற்களால் கீழுதட்டைக் கடித்துக் கொண்டேன்.

வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி....

நெஞ்சுக்கூட்டுக்குள் எதுவோ உடைந்து நொருங்கியது. ஐயோ! அம்மா! என்னால தாங்கமுடியுதில்லையே...... அழமாட்டன். அழமா இருக்க என்னால ஏலும். ஆட்களைப் பார்ப்பதைத் தவிர்த்து அண்ணாந்து கொண்டேன். கண்களில் வழியவந்த கண்ணீரைக் கண்களுக்குள்ளேயே தேக்கிக்கொண்டேன்.

வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி
மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதரு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.

உலக்கை தூக்கி உரலை இடிக்க கட்டுப்படுத்த முடியாமல் இரு கண்ணீர்த்திவலைகள் உரலுக்குள் சிந்தின.

முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆடஆட...

”ஜேன் please அழாதேடா...."

“என்னால முடியுதில்லையே அக்கா....”

பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட..

டேய் ஜேன்! அம்மா சிம்மராசி மக நட்சத்திரிக்காரியடா. அவளுக்கு அடுத்த பிறப்பெண்டு இனி ஒண்டுமில்லை. பிறகேன் சும்மா அழுது அம்மாவின்ரை ஆத்மாக்கு கஷ்ரம் குடுக்கிற? அவாவுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைக் கவனமாய்ச் செய்”

ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
நாடற் கரிய நலத்தை நந்தாத்
தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்...

கீழுதட்டில் வலியை உணர்ந்தேன். பற்கள் கடித்து உதிரம் இலேசாய் கசியத் தொடங்கியிருந்தது.

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதிய மாய் இருள் ஆயினார்க்குத்
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே.

அம்மாவின் உடலை மூடி பிரேத ஊர்தியில் ஏற்றி மயானத்தை நோக்கி நகர்ந்தோம்.

வீடுவரை உறவு. வீதிவரை மனைவி. காடுவரை பிள்ளை. கடைசிவரை யாரோ????


Thursday, November 24, 2011

வேரென நீயிருந்தாய்...(40)

அடுத்தநாள் சனிக்கிழமை மதியச்சாப்பாடு முடிந்ததும் அம்மா ஆரம்பித்தார்.

“தம்பி பின்னேரம் போல ஒருக்கா கண்டி ரவுணுக்குப் போய்ற்று வருவமா?”

ஆச்சரியமாயிருந்தது. இதுநாள் வரையும் கேட்காதவர் இன்றைக்குக் கேட்பது அதிசயமாய்ப் பட்டது.

“OK அம்மா. உங்களுக்கு என்ன வேண்டவேணும்”

“நீ வாவன். நான் அங்கை எனக்குத் தேவையானதிருந்தா பாத்திற்றுச் சொல்லுறன்”.

718 இல் ஏறி கண்டி நகரினை அடைகையில் மாலை ஐந்து மணியாகி விட்டிருந்தது. கடைகளைப் பார்த்தபடியே வந்தவர் திடீரென ஒரு நகைக்கடைக்குள் நுழைந்ததும் அதிசயித்துப் போனேன். என்னாயிற்று அம்மாவுக்கு.. எனக்குத் தெரிந்து முதல்தடவையாக நகைக்கடைக்குள் நுழைகிறாள். நீண்ட தேடுதலின் பின் சங்கிலி ஒன்றைத் தேர்ந்தெடுத்தவள் அதை வாங்கித்தரும்படி என்னிடம் கேட்டதும் நம்மமுடியாமல் திகைத்தேன். அம்மாவும் ஒரு பெண்தானே. நகைகளை வீரும்ஷபாத பெண்களும் இருக்க முடியுமா என்ன? இத்தனை காலமாய் கவலையில் இருந்தவர் இப்போதுதான் சந்தோசத்தை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் சந்தோஷத்திற்காகவே கல்யாணம் கட்டிக் கொள்ளலாம். ஒரு மகனாய் நான் அவருக்குத் தரக்கூடிய சந்தோஷம் அதுவாகத்தானிருக்க முடியும்.

மறுநாளும் அம்மாவின் கழுத்து வழமை மாதிரியிருக்கவே ஆச்சரியத்துடன்,

”ஏனம்மா வேண்டின சங்கிலியை இன்னும் போடேல்லை?”

“அட பேய்க்கந்தா! அது நான்போட வேண்டினதில்லையடா?”

“அப்ப?”

“நீ என்ன லூசா? இந்த வயதில இந்தக் கிழவிக்கு சங்கிலி இல்லாதது ஒண்டுதான் குறையெண்டு நினைச்சியா?”

“அப்ப ஆருக்கு வேண்டின்னீங்கள்?”

“அது எனக்கு வரப்போற மருமகளுக்கு.” சொல்லிவிட்டுக் கிண்டலுடன் என்னைப் பார்த்தார். ம்.... தலையிடித்துக் கொண்டேன்.

“என்ன ஒண்டுமே சொல்லாம இருக்கிறாய்?” அம்மா என்னைச் சீண்டத் தொடங்கினார்.

“நீங்களாச்சு உங்கட மருமகளாச்சு. என்னையேன் இதுக்குள்ள இழுக்கிறியள்?”

“உன்னையிழுக்காம இதுக்குள்ள எனக்கு எப்பிடி மருமகள் வருவா?”

விட்டால் இன்றைக்கு முழுவதுமே அம்மா சீண்டிக் கொண்டிருப்பாள் என்றே பட்டது.

“எண்டாலும் அம்பம்மாக்கு வாய்ச்ச மருமகள் மாதிரி உங்களுக்கு வாய்க்குமோ தெரியாது?”

“இருந்துபார். என்ரை மருமகள் உன்ரை கொப்பம்மாவின்ரை மருமகளிலும் விடத் திறமோ இல்லையோ எண்டு” விஷமமாய்ச் சிரித்தாள்.

கடவுளே! அம்மா இவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறதைப் பார்க்க அக்கா இல்லையே. அவள் பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்.

“சரியம்மா. அதையதை அப்பப்ப பார்க்கலாம். இப்ப என்னை விடுங்கோ”.

* * * * *

அடுத்தநாள் காலை வளாகத்திற்குள் நுழைந்தேன்.

“Good morning ஜேந்தன்” ஆச்சரியமாயிருந்தது நதீஷாவின் செயல்.

இத்தனை நாளும் நான் நெருங்கிப்போக நினைக்கையில் விலகிச் சென்றவள் இப்போது தானாய் வலிய வருவது வியப்பையே தந்தது.

“Good morning. நதீஷா. எப்பிடியிருக்கிறீங்க?”

“நான் நல்ல சந்தோஷமா இருக்கிறன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க?”

“அது உங்கட குரலிலயே தெரியுது. நானும் நல்லாத்தான் இருக்கிறன்.”

“எனக்கு உங்கட help ஒண்டு தேவையாயிருக்கு. செய்வீங்களா?”

“சொல்லுங்க. என்ன செய்ய வேணும்?”

“இல்லை. என்ரை அவருக்கு குடுக்கிறது ஏதாவது things வாங்க வேணும். ஆனா என்ன வேண்டுறது எண்டுதான் தெரியேல்லை. அதுதான் boys-இற்கு என்ன பிடிக்கும் எண்டு உங்களிட்டக் கேக்கிறன்.”

நெஞ்சில நெருஞ்சியால தேய்ச்சது மாதிரி இருந்தது. ம்...விதி. அது எப்பிடியெல்லாம் விளையாடுகிறது? மனசு நொந்தது. அவளைப் பார்த்தேன். அதே விஷமச்சிரிப்பு. ச்சே! என்ன பெண்ணிவள்? இதே இவள்தான் சில மாதங்களுக்கு முன்பு நான்தான் தன்னுடைய வாழ்க்கை என்று வாய்கிழியப் பேசினவள். இண்டைக்குத் தன்ரை புருஷனுக்கு என்ன வாங்கிக் குடுக்கிறது எண்டு என்னட்டையே வந்து கேட்கிறாள்? ஒருவேளை வேண்டுமென்றே என்னைப் பழி வாங்குவதற்காய் வெறுப்பேற்றுகிறாளோ?. மனதுக்குள் பல்வேறு எண்ணங்களும் ஓடலாயிற்று.

நான் மட்டும் திறமா என்ன? இதோ இவளை மனதிற்குள் வைத்து மருகிக் கொண்டு அம்மாவின் சந்தோஷத்திற்காக இன்னொருத்தியை மணம்முடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையா? அல்லது நான்தான் இவளுடன் நேர்மையாகப் பழகியிருக்கின்றேனா? இத்தனை காலமாகியும் இன்னமும் அக்காவைப்பற்றி உருவார்த்தைகூட இவளிடம் சொன்னதில்லையே. கடைசியில் farewell partyயில தண்ணியடிச்சதுக்குத் தான்தான் காரணமெண்டு நினைச்சுத்தானே என்னை விட்டு விலகினவள். பிறகு எப்படி அவளைப்பற்றி இழிவாக நினைக்க முடியும். நான் இப்போது படுகின்ற இதே அவஸ்தைகளைத்தானே இவளும் அப்போது அனுபவித்திருப்பாள். வினை விதைத்தவன் அதை அறுவடை செய்கின்ற காலமிது. அனுபவித்தேயாக வேண்டும். இப்போதுகூட அவள் மனதிற்குள் என்னென்ன அவஸ்தைகளோ? அதை மறைத்துதான் சந்தோஷமாய் இருப்பதாய்க் காட்டிக் கொள்ளத்தான் இப்படியெல்லாம் கேட்கின்றாளோ?. நெஞ்சு கனத்துப் போனது.

* * * * *

நாட்கள் சில கழிந்தன. இப்போதெல்லாம் அம்மா ஆஸ்மாவைப்பற்றிக் கவலைப்படாமல் ஓடியாடித் திரிந்தார். அடிக்கடி என்னைச் சீண்டிக்கொண்டிருப்பதும் இல்லையெனில் யாருடனோ தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பதுமாய் ஒரே சந்தோஷமாக இருந்தார். அவர் தன் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படுவதாய்த் தெரியவில்லை. எனக்கென்றால் அவர் பலவீனமாகிக் கொண்டு போவதாய்ப்பட்டது.

அதுவொரு வியாழன் மாலை நேரத்துடன் வீட்டிற்கு வந்திருந்தேன், வீடெல்லாம் தூசி தட்டிப் போட்டு வந்த அம்மாவுக்கு திடீரென வீசிங் தொடங்கியது. இழுப்பு அதிகமாகியது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தேன். ஆட்டோவொன்றினைப் பிடித்து அம்மாவை ஏற்றிக்கொண்டு கண்டி பெரியாஸ்பத்திரிக்கு விரைந்தேன். அம்மா Emergency ward- இல் அனுமதிக்கப்பட்டார். என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப்போய் நிற்கையில் தொலைபேசி சிணுங்கியது.



Wednesday, November 23, 2011

வேரென நீயிருந்தாய்...(39)

அதுவொரு வெள்ளிக்கிழமை. மதிய உணவிற்காக வீட்டிற்குச் சென்றிருந்தேன். வழக்கத்திற்கு மாறாக வீடு பளிச்சென்றிருந்தது ஆச்சரியமாயிருந்தது. அம்மாமேல் ஆத்திரமாய் வந்தது. மனிசியால ஏலாது. ஏற்கனவே ஆஸ்மா வேற இழுத்துக் கொண்டிருக்குது. இந்த வள்ளலில தூசுதட்டியிருக்கிறா. இனி உழைச்சுப்போட்டுக் கிடக்கப் போறா.

“அம்மோய்......என்ன செய்யுறீங்க?”

“கொஞ்சம் பொறு வாறன்.” -குசினிக்குள்ளிருந்து குரல் வந்தது.

சிறிது நேரத்தின் பின் சிரித்தபடியே வெளியே வருகையில், கையில் மதிய உணவையும் தட்டுடன் எடுத்து வந்திருந்தாள்.

”ஏனம்மா சமைச்சனீங்க?. இதில குருந்துவத்தைச் சந்தி ராஜா கடையில எடுத்திருக்கலாமெல்லா? வருத்தத்தோட ஏன் கஷ்ரப்படுறீங்க?”

“நீ சாப்பிட்டிட்டுச் சொல்லு. மிச்சத்தைப் பிறகு கதைப்பம்”

நான்கு மரக்கறிகளுடன், வடையும், அப்பளமும் அமிர்தமாய் இருந்தன. அம்மாவின் சமையல் இன்றைக்கு வித்தியாசமாய் இருந்தது. ருசித்துச் சாப்பிட்டேன்.

“எப்பிடிச் சாப்பாடு? ருசியா இருந்துதா? பிடிச்சிருக்கா?”

“நல்லா ரேஸ்ற்றா இருக்கம்மா? என்னெண்டு சமைச்சனீங்க? வழமையிலும் விட இண்டைக்கு வித்தியாசமாயும் நல்லாயும் இருந்துது.”

“அப்பாடா! இப்ப நல்ல நிம்மதியா இருக்கு. எங்கை உனக்குப் பிடிக்காமப் போயிருமோ எண்டு பயந்து கொண்டிருந்தன்”

“நீங்க சமைச்சு எப்ப ருசியில்லாம இருந்தது? கொஞ்ச நாளா கடைச் சாப்பாடு சாப்பிட்டதாலயோ என்னவோ இண்டைக்கு இன்னும் நல்லா இருந்துது.”

என்னைப் பார்த்து அம்மா சிரித்தாள். அவளின் சிரிப்பு வித்தியாசமாய்ப் பட்டது.

“ஏனம்மா சிரிக்கிறீங்க?”

“சும்மாதான்” மழுப்பினாள்

“ஆ! உனக்குச் சொல்ல மறந்து போனன். காலமை புறோக்கர் அங்கையிருந்து போன் பண்ணினவர். ரெண்டு பெட்டையளின்ரை குறிப்பு உன்ரையோட பொருந்தியிருக்காம். நான் இன்னும் ரெண்டு கிழமையில அங்க வந்து நேரில பார்த்திற்று முடிவு சொல்லுறன் எண்டு சொன்னனான். நீயும் வாவன்.”

நெஞ்சுக்குள் எதுவோ வந்து அடைத்துக் கொண்டது. என்னுடைய முகத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை அம்மா அவதானிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காய் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

“என்ன கேட்டகேள்விக்குப் பதில் சொல்லாமல் திரும்புறாய்?”

“உங்களுக்கு என்ன சொன்னனான்?”

“நீ ஓமெண்டு சொன்னபடியாலதானே புறோக்கரிட்டைக் குறிப்பைக் குடுத்தனான்.”

“அப்பப் பிறகென்ன? உங்களைத்தானே முடிவெடுக்கச் சொன்னான். நான் இதொண்டிலையுமு் தலையிடயில்லை. எனக்கு லீவும் எடுக்கேலாது”

“ஆனா உன்ரை குரல் ஒரு மாதிரியிருக்கே.”

“அதெல்லாம் ஒண்டுமில்லை. நீங்க சந்தோஷமாயிருந்தாச் சரி.”

“தம்பி. இது உன்ரை வாழ்க்கை. என்ரை காலம் இன்னும் கொஞ்சநாள் தான். அதுக்குப்பிறகு வாழப்போறது நீதான். அதால நீதான் முடிவெடுக்கவேணும்.”

“எனக்கு எது நல்லதெண்டு என்னிலும் விட உங்களுக்குத்தான் கூடத்தெரியும்.”

“ஆனா நடக்கிறதுகளைப் பார்த்தா அப்பிடித் தெரியேல்லையே”

“ஏன் இப்ப என்ன நடந்தது?”

“இல்லை. ஒண்டுமே நடக்க இல்லை. உனக்கேன் கோபம் வருகுது?”

“நான் எங்க கோவப்பட்டனான்?”

“ம்ம்ம்..... எல்லாம் காலம். சரியான கல்லுளி மங்கனடா நீ”

“இப்ப என்ன சொல்ல வாறீங்க?”

“ஒண்டுமே தெரியாதாம். நான்தான் அவருக்குச் சொல்ல வேணுமாம்”.

அம்மா என்னைச் சீண்டுவதாய்ப்பட்டது. இந்தச் சீண்டலை அவரிடம் பார்த்து எத்தனை நாளாயிற்று. அவள் நல்ல சந்தோஷமாய் இருக்கின்றார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

“தெரியாமக் கதைச்சுப் போட்டன். என்னை விட்டிடுங்கம்மா. நான் திரும்பி faculty-க்குப் போகவேணும்.”

ஆய்வுகூடத்தினை அடைகையில் நதீஷா என்னைப் பார்த்துச் சிரித்தாள் இந்தச் சிரிப்பில் விஷமம் கலந்திருப்பதாயப் பட்டது. என்னிடம் தான் ஏதேனும் தவறோ? வீட்டில் அம்மாவோ எனககுப் பெண் பார்ப்பதற்காய் ஊருக்குப் போகின்ற சந்தோஷத்தில் என்னைப் போட்டு அறுத்திருந்தார். இங்கே இவளின் பார்வையோ விஷமமாய்ப் படுகிறது. நான்தான் குழம்பிப் போயிருக்கிறேன்.

“ஜேந்தன்! Morning நான் வரேல்லை எண்டு sir ஏதும் சொன்னவரா?”

“இல்லை. என்னோடை ஒண்டும் கதைக்கேல்லை. நீங்க காலமை வரேல்லையெண்டதே இப்பத்தான் எனக்குத் தெரியுது.”

“ஓ! ok. ok. Morning கொஞ்சம் வேலை இருந்தது. எனக்குப் wedding proposal ஒண்டு வந்தது. கிட்டத்தட்ட சரி வந்த மாதிரித்தான். அதுதான் வரேல்லாமப் போயிற்றுது.”

“ஓ! Congratulations!. அப்ப எப்ப wedding?"

'Thanks. wedding எப்ப வைக்கிறது எண்டதைப்பற்றி இன்னும் decide பண்ணேல்லை”.

நெஞ்சுக்கூடு வெறுமையாகிப் போனதானவொரு உணர்வு வந்து மனதினைச் சூழ்ந்து கொண்டது. எல்லாமே என்னை ஏகாந்தமாய் விட்டுவிட்டுத் தங்கள்தங்கள் பாட்டில் செல்வதாய் பட்டது. இன்னதென்று புரிந்து கொள்ள முடியாதவாறு எல்லவற்றின் மீதும் சினம் கிளம்பியது. வாழ்க்கையே சூனியமாகிப் போவதைப் போன்று உணர்ந்தேன்.


Tuesday, November 22, 2011

வேரென நீயிருந்தாய்...(38)

27 டிசம்பர் 2001 வியாழக்கிழமை, அம்மாவையும் வற்புறுத்தி அழைத்துக் கொண்டு னொழும்பு நோக்கிய விமானப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன். கடும்மழை கொட்டிக் கொண்டிருந்ததால் விமானம் இரத்மலானையில் தரையிறங்க முடியாமல் 15 நிமிடங்கள் வரை வானில் வட்டமிட்டுப் பின் கட்டுநாயக்கா சர்வதேச விமனநிலைய ஓடுபாதையில் தன் சக்கரங்களைப் பதித்தது. இரத்மலானையில் காத்திருந்த தீபனை புறக்கோட்டைக்கு வரச் சொல்லி அங்கே பேரூந்து நிலையத்தில் சந்தித்துப் பேராதனைக்குப் பயணமானோம். குருந்துவத்தையைில் ஏற்கனவே ஒழுங்குபடுத்தியிருந்த வீட்டினை அடைகையில் மணி இரவு ஒன்பதைத் தாண்டி விட்டிருந்தது.

மறுநாள் மீண்டும் வளாகத்துக்குள் நுழைந்தேன் மாணவனாக அல்லாமல். தற்காலிக போதனாசிரியராக எனது கடமையை ஏற்றுக் கொண்டு ஆய்வுகூடத்திற்குள் நுழைகையில் நதீஷா ஏற்கனவே வந்து விட்டிருப்பது தெரிந்தது. எனக்காக ஒரு புன்னகையை விரயம் செய்துவிட்டு தன்வேலைகளில் மூழ்கிப் போனாள் அவள். அவளை என்னால் புரிந்து கொள்ளமுடியாமல் இருந்தது. நான் நெருங்கிச் செல்கையில் அவள் விலகிப் போவது மனதுக்குக் கஷ்ரமாய் இருந்தது. நானும் விலகிச் செல்வதென முடிவெடுத்தேன். அவள் வீட்டில் சாப்பிட்ட கடனையும் அடைத்துவிடுவது நல்லதெனப்பட்டது. ஒரு சனிக்கிழமை தீபனையும் அவளையும் வேறு சிலரையும் வீட்டுக்கு உணவருந்த அழைத்தேன். வந்து கலகலத்துவிட்டுப் போனார்கள். அம்மாவும் சந்தோஷமாய் இருந்தாள்.

மாதங்கள் சில உருண்டோடின. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. கிளிநொச்சி உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. கண்டியில் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் ஆரம்பிக்க அம்மாவிற்கு ஆஸ்மா அலுப்புக் கொடுக்கத் தொடங்கியது. அவர் படும் கஷ்டங்களைப் பார்த்து அவரை மீண்டும் ஊருக்கே அனுப்பிவிடுவதெனத் தீர்மானித்து அவரிடம் சொன்னேன்.

“உன்ரை கலியாணத்தோடதான் இனி ஊருக்குப் போறது.”

“என்னம்மா திடீரெண்டு கலியாணத்தைப் பற்றிக் கதைக்கிறியள். இப்ப அதுக்கு என்ன அவசரம்?”

“நான் இன்னும் எவ்வளவு காலம் உயிரோட இருப்பனோ தெரியாது. அதுக்குள்ள உனக்கொரு நல்ல விசயம் நடந்திற்றுதெண்டால் நானும் சந்தோஷமாப் போய்ச் சேர்ந்திருவன்.”

“உங்களுக்கென்ன விசரா? ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க?”

“ஏன்? இப்ப உனக்கு என்ன வயசு? உன்ரை வயசுக் காரர் எத்தினை பேர் பிள்ளைகூட்டிகளோட இருக்குதுகள். அதுவுமில்லாம என்னைவிட்டா இனி உனக்கெண்டு ஆரு இருக்கினம். கொப்பரைப் பற்றியும் ஒணு்டும் தெரியாது. கொக்காவும் போய்ச் சேர்ந்திற்றாள். நானும் போய்ச் சேர்ந்திற்றனெண்டால்?”

அதிர்ந்தேன். அக்காவின் வீரச்சாவினைப் பற்றி முதல்தடவை என்னுடன் பேசுகிறாள். ஆனால் அதை எவ்வளவு சாதாரணமாகச் சொல்லுகிறாள்?

“அக்கா வீரச்சாவெண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“பேப்பரில படிச்சுத்தான்”

“அப்பையேன் இதைப்பற்றி நீங்கள் முந்தி என்னோடை கதைக்கேல்லை?”

“நீயேன் கதைக்கேல்லை?”

“ஏன் உங்களைக் கவலைப்படுத்துவான் எண்டுதான்.”

“அப்பிடித்தான் நானும். சரி அதைவிடு. முடிஞ்சதுகளைக் கதைச்சு பிரியோசனமில்லை. இப்ப விசயத்துக்கு வா. அங்க புரோக்கரிட்டை உன்ரை குறிப்பைக் குடுக்கட்டே? ரெண்டு மூண்டு பேர் உன்ரை குறிப்புக் கேட்டு வந்தவை. நான்தான் குடுக்கேல்லை. நீ இஞ்சனேக்கை ஆரையும் பார்தது வைச்சிருந்தாலும் எண்டிட்டுத்தான் குடுக்கேல்லை. அப்பிடி ஆரையும் விரும்பியிருந்தாச் சொல்லு. எனக்கும் பிரச்சினையில்லை.”

“கொஞ்சம் சும்மா இருக்கிறீங்களா? இப்பத்தான் படிப்பே முடிஞ்சிருக்கு. அதுக்குள் கல்யாணமெண்டுகொண்டு...”

“அப்பன் அதையதை அந்தந்தக் காலத்தில செய்து போடவேணும். நீ ஒருத்தரையும் விரும்பியிருக்காட்டிச் சொல்லு. நான் புரோக்கருக்கு உன்ரை குறிப்பை அனுப்பிறன்.”

“நீங்க குறிப்பும் அனுப்ப வேண்டாம். கல்யாணமும் பேச வேண்டாம். கொஞ்சக்காலம் சும்மா இருங்கோ.” குரலை உயர்த்தினேன்.

“உன்னோடை கதைச்சுப் பிரயோசனமில்லை. எனக்குத் தெரியும் என்ன செய்ய வேணுமெண்டு.”

“சரி! அப்ப இந்தக்கதையை இதோட நிப்பாட்டுவமா?”

மறுநாள் வளாகத்தில் இருக்கையில் தீபன் அழைப்பெடுத்தான்.

“ஏன்ரா ஜேந்தன் கல்யாணம் கட்ட மாட்டனெண்டு சொல்லுறியாம்? அம்மா சொல்லிக் கவலைப் படுறாடா?”

“அதுக்குள்ளை உனக்கெடுத்திற்றாவா?”

“ஏன் கல்யாணம் கட்டமாட்டனெண்டுற? அப்ப உண்மையிலயே நதீஷாவை லவ் பண்ணுறியா?”

“பேய்ப்... அம்மாண நல்லா வருகுது வாயில. அவளோடை இப்ப கதைக்கிறதே இல்லை.”

“அப்பையேன் கல்யாணம் கட்டமாட்டனெண்டுற?”

“எனக்கு இப்ப கலியாணத்தில விருப்பமில்ல. நாலைஞ்சு வருஷம் போனதுக்குப்பிறகு யோசிக்கலாம்”

“ம்ம்ம்.. அவனவன் எப்பையடா கல்யாணம் கட்டலாம் எண்டு தவியாய்தவிக்கிறானுகள். உனக்குக் கொழுப்படா.”

“சரி, நீ இந்த weekend இற்கு வீட்ட வாறியா?”

“நல்லாக் கதையை மாத்திற. வேலையில சரியான busyயடா வரேல்லாது”

சில வாரங்கள் ஓடிமறைந்தன. அம்மாவிற்கு ஏலாமல் வந்துவிட்டிருந்தது. ஊருக்குப் போகச் சொன்னால்ஈ கலியாணத்திற்குத்தான் போவேன் என்று அடம் பிடிக்கத் தொடங்கியிருந்தார். மனதுக்குக் கஷ்டமாயிருந்தது.

“சரியம்மா. உங்களுக்குப் பிடிச்ச பெம்பிளையாப் பாருங்கோ. உங்களுக்கு OK யெண்டால் எனக்கும் OK. நீங்க இப்ப ஊருக்குப் போங்கோ. பெம்பிளையைப் பார்தது கல்யாணத்தை முற்றாக்கிப் போட்டு எனக்கு அறிவியுங்கோ. போட்டோ ஒண்டும் அனுப்பத் தேவையில்லை. சரியே?”

Friday, November 4, 2011

வேரென நீயிருந்தாய்...(37)

26 நவம்பர் 2001. படைத்துறை மேலாண்மையினைப் பறைசாற்றிவிட்டிருந்த தமிழர் தேசத்தின் குரலை, அது சொல்லப் போகும் சேதியை உலகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள். எங்கள் பல்கலைக்கழக வாழ்க்கையிலும் முக்கியமான நாள். விடுகை வருடத்தின் இறுதிப்பரீட்சையும் முடிவுற்ற நாள். பல்கலைக்கழக மாணவ வாழ்க்கையின் இறுதி நாள். வரவுகளின்றி செலவுகள் செய்து மகிழ்ந்திருந்த வாழ்வின் இறுதி நாள். எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? என்கின்ற பிரிதலின் வலியை உணர்த்திய நாள். பசுமை நிறைந்த
நினைவுகளைச் சுமந்து கொண்டு பிரிந்த நாள்.


பரீட்சைகள் முடிவுற்றதும் பெரும்பாலான மாணவர்கள் அக்பரினை விட்டு வெளியேறுவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சிலர் குழுக்களாக இணைந்து புகைப்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் காட்டினர். மாலை மயங்குகையில் குழுக்களாகச் சேர்ந்து பல்கலைக்கழக வாழ்வின் இறுதித் தினத்தினைக் கொண்டாடுவதில் முனைந்தனர்.


தீபனும் நானும் இன்னும் சிலரும் ஒன்றாக டெவன்-சிற்குள் நுழைந்தோம். தலதா மாளிகைக்கு அண்மையில் அமைந்திருக்கும் Devens மற்றும் கண்டி ஏரிக்கு முன்னால் அமைந்திருக்கும் Lake Front போன்ற பிரத்தியேக உணவகங்களில் சக மாணவர்களின் கூட்டம் அதிகமாய்க் காணப்பட்டது. அது சிரேஷ்ட மாணவர்களின் பட்டமளிப்பு விழாவின் போதான cap collection-இனை நினைவிற்கு கொண்டு வந்தது. cap collection dayள எங்களால் இலகுவில் மறக்க முடியாத ஒன்று. பட்டமளிப்பு முடிந்து வரும் ஒவ்வொரு மாணவர்களிடமும் குழுக்களாகச் சென்று கைகுலுக்கி அவர்களை வாழ்த்திவிட்டு தொப்பியை நீட்ட நூறு ரூபாயிலிருந்து ஐநூறு ரூபாய் வரை ஒவ்வொருவரும் தொப்பியினுள் இடுவார்கள். எங்கள் சேகரிப்பு முடிந்ததும், அன்றைய இரவே கண்டி நகருக்குள் இருக்கும் பிரத்தியேக உணவகங்களுக்குள் சென்று விடுவோம். தண்ணியடிப்பவர்கள் lake front -இற்கும் மற்றவர்கள் devens -இற்கும் செல்வது வழமை. சேர்த்த காசை அன்றைக்கே செலவு செய்துவிட வேண்டும். அதுவம் தின்பண்டங்களுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்த வேண்டுமென்கின்ற எழுதப்படாத விதியிற்கேற்ப விரும்பிய அனைத்து வகை உணவுகளையும் ருசி பார்த்து விட்டு இனி எதுவும் முடியாது என்கின்ற நிலையிலும் கையில் காசு மிச்சமிருக்கும். பின் நொறுக்குத் தீனிகளையும் வாங்கிக்கொண்டு van-உம் பிடித்துக் கொண்டு விடுதிகளுக்குத் திரும்புகையில், எங்களுக்கு பணமளித்த பட்டமளிப்பு நடைபெற்ற மாணவர்களில் சிலர் பேரூந்திற்கு காத்திருப்பதையும் காணக்கூடியதாகவிருக்கும்.


Devens Special இனை முடித்துவிட்டு விடுதி திரும்புகையில் நெஞ்சு கனத்துப் போய்க் கிடந்தது. அடுத்து என்ன என்கின்ற கேள்வி எழுந்தது. “தம்பி என்ன செய்கிறீங்க?” என்கின்ற பெரிசுகளின் கேள்விகளுக்கு இதுநாள் வரையில் “இஞ்சினியருக்குப் படிச்சுக் கொண்டிருக்கிறன்” எண்டு பெருமையாச் சொன்னதை இனிச் சொல்லேலாது. உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். வேலையொண்டு எடுக்கும் வரைக்கும் இப்பிடியான கேள்விகளை எதிர்கொள்வதன் தர்மசங்கடத்தினை இனித்தான் உணரப் போகின்றோம். பெரும்பாலான ஆய்வுகூடங்களில் தற்காலிக போதானாசரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பட்ட மேற்படிப்பை மேற்கொள்வதற்கு விரும்பியிருந்த மாணவர்களே அவற்றிற்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டியிருந்தனர். ஏனையோர் வேலை தேடுவதில் ஈடுபட்டிருந்தனர். தீபனுக்கு கொழும்பில் Site Engineer வேலை ஏற்கனவே ஏற்பாடாகியிருந்தது. மேற்படிப்பில் ஈடுபடுவதா அல்லது வேலை தேடுவதா என்கின்ற குழப்பத்தில் என்னால் எந்த முடிவினையும் எடுக்க முடியாமலிருந்தது.


இனிமேலும் அம்மாவைத் தனியே விட முடியாது. அவள் பாவம். வயதான காலத்தில் தனியே விடுவதில் எனக்கும் இஷ்டமில்லை. Site Engineer-ஆகப் போய் கொழும்பில் வேலை செய்தால் கிடைக்கும் வருமானத்தில் அம்மாவையும் கொழும்பில் கொண்டு வந்து வைத்திருக்க முடியாது. நாட்டு நிலைமைகள் விரைவில் சீர்படும் அறிகுறிகள் தென்பட்டன. அப்படியொரு நிலை உருவாகின் civil Engineers இற்கு வடகிழக்கில் நல்ல demand ஏற்படும். நிறைய NGO-களில் வேலைவாய்ப்புகள் உண்டாகும் என்கின்ற பரவாலான அனுமானத்தால் அதுவரை காலமும் தற்காலிக போதனாசிரியராக வேலை செய்யலாம் என்கின்ற எண்ணத்தில் நானும் அதற்கு விண்ணப்பித்து விட்டிருந்தேன்.


இரு தினங்களின் பின்னர் Fluid Lab- இற்காக நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் நதீஷாவையும் அங்கே காணக்கூடியதாக இருந்தது. farewell party-யின் பின்னர் அவள் என்னிடமிருந்து விலகியிருப்பதாகவே பட்டது. என்னுடனான சந்திப்புகளை அவள் தவிர்பபதை என்னால் அவதானிக்கமுடிந்தது. விலகியிருக்கையில் நெருங்கி வந்தவள், நெருங்கி வருகையில் விலகிச் செல்வது மனதிற்கு கஷ்டமாய் இருந்தது. வலியப் போய் அவளுடன் உரையாடுவதற்கு என்னுடைய ஈகோ இடம் கொடுக்கவில்லை. அத்துடன் அக்காவைப் பற்றிய உண்மையை அவளிடம் இனிமேலும் மறைப்பது சிரமமாயிருக்கும் என்பதால் முன்னர் இது பற்றித் தீபனிடம் கேட்டதற்கு அவன் என்னைத் திட்டித் தீர்த்திருந்தான்.


இதெல்லாம் சும்மா Infatuation. இன்னும் கொஞ்ச நாளில கம்பஸ் முடிஞ்சு நாங்களெல்லாம் பிரிஞ்சிருவம். அதுக்குப் பிறகு நீங்க ரெண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் மறந்திருவீங்க. கண்டி மழையையும் கம்பஸ் காதலையும் நம்பேலாது எண்டு சொல்லுறது உனக்குத் தெரியாதா?




Monday, October 31, 2011

வேரென நீயிருந்தாய்...(36)

“மச்சான் இண்டைக்கு எல்லாரும் தண்ணியடிக்கத்தான் வேணும். குடிக்க மாட்டன் எண்டிறவைக்கெல்லாம் இண்டைக்குப் பருக்கிறதுதான்.”

நிகழ்காலத்திற்கு வந்தேன்.

“மச்சான் டேய்! நீ ஊத்து. டேய் நீ இஞ்ச வந்து இவனைப்பிடி. நான் பருக்கிறன். ஒருத்தரும் இண்டைக்குத் தப்பேலாது..”

கிட்ட வந்து மடக்கினார்கள். மிண்டினேன்.

“ஜெயந்தன்! இதுதான் கடைசியா அடிக்கிறது. எங்கட friendship உனக்கு இனி வேண்டாமெண்டா விட்டிட்டுப் போ”

மற்றவர்களும் அதை ஆமோதிக்கவே என்நிலை சங்கடத்திற்குள்ளானது.

“நான் மட்டுமா அடிக்காம நிக்கிறன்? அங்க உள்ளுக்குள்ளையும் நிக்கிறாங்கள் தானே. அவங்கள் எல்லாரும் குடிச்சா நானும் குடிக்கிறன்”

“இண்டைக்கு ஒருத்தரும் தப்பேலாது. அவங்களையும் ஒவ்வொருத்தரா இழுத்துக் கொண்டு வரத்தான்போறம். இப்ப நீ அடி”

நட்புக்களை முறிக்காமல் இதிலிருந்து தப்ப முடியாது என்பது விளங்கியது. ‎"If friendship is your weakest point then you are the strongest person in the world" என்கின்ற வாக்கியம் நினைவினில் வந்தது. அக்காவும் மனதினுள் வந்து போனாள். welcome party-யின் பின் குடிப்பதில்லையென்று அக்காமேல் மனதிற்குள் சத்தியம் செய்ததும் நினைவினில் வந்து தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. அக்காதான் இப்போது உயிரோடு இல்லையே. மனம் சாயத்தொடங்கியது. பருக்க வந்ததைத் தடுத்து நானே வாங்கி அருந்தினேன். மற்றவர்கள் உற்சாகப் படுத்த மீண்டும் பருகிவிட்டு அப்படியே எழுந்து நடக்க, குறிஞ்சித்தென்றல் உடலைத் தழுவி சிலீரிட வைக்க, அப்பா! என்னெவொரு சுகானுபவம்?. சொர்க்கம் தெரிந்தது. காலடியில் தரை ஆடுவதாய் பட்டது. கட்டடங்களும் ஆடத்டெதாடங்க தள்ளாட்டமாய் உணர்ந்தேன். அப்படியே மெதுவாய் நடந்து farewell party நடந்து கொண்டிருக்கும் drawing room-இன் வெளிப்புறச் சுவரருகே சென்று சுவரைப் பிடித்துக் கொண்டேன். தலை பாரமாய் இருந்தது. அப்படியே படுக்கவேண்டும் போல் இருந்தது. என்னையறியாமலேயே கால்கள் வழுவி மெதுவாய் நிலத்தில் சரிந்து விழுந்தேன்.

***

“அங்க பாரடி! ஜெயந்தனும் தண்ணியடிச்சிற்று அதிலப் படுத்துக் கிடக்கிறான்”

“ஓமடி! vomit பண்ணீற்று அதுக்கு மேலயே படுத்துக்கிடக்குது”

யாரோ பெண்கள் சிலர் உரையாடிக் கொண்டு செல்வது மயக்கத்தில் கேட்டது. எழுந்து பார்க்க முடியாதவாறு தலைவலி என்னை முடிக்கிப் போட்டது. சற்று நேரம் கழித்து இருவர் என்னை நோக்கி வருவதைக் காலடியோசையில் இருந்து அனுமானித்தாலும் எழுந்து பார்க்கச் சக்தியற்று அப்படியே கிடந்தேன்.

“ஓயா அறப் பத்த அல்லண்ட, ஆ! ஏகமத் தமாய்! ஜேந்தன் நகிடிண்ட” (நீங்க அந்தப் பக்கம் பிடியுங்க. ஆ! அப்பிடித்தான். ஜேந்தன் எழும்புங்கோ)

இது... இந்தக்குரல் நதீஷா. அவமானமாய் உணர்ந்தேன். அவள் தனது தோழியையும் அழைத்து வந்து என்னை எழுப்பிக் கொண்டு போய் ESU room இறகுள் கொண்டு சென்றாள். அங்கே இருந்த bench-இல் கிடத்திவிட்டு தன்னுடன் வந்திருந்த தோழியிடம், என்னை அக்பரில் கொண்டு சென்று விடுவதற்காய் வேறு மாணவர்களை அழைத்துவரச் சொன்னாள். சுறறுமுற்றும் பார்த்தேன் farewell party முடிந்து மாணவர்கள் கிளம்பத் தொடங்கியிருந்தார்கள். என்மேல் எனக்கே வெறுப்பாய் வந்தது. எவ்வளவு நேரமாய் வெறுந்தரையில் மப்பில் படுத்துக் கிடந்திருக்கிறேன் ஒரு பூனா மகனும் என்னைத் தூக்கிக் கொண்டு போய் அக்பரில விடேல்லை. பெரிய புடுங்கிகள் மாதிரி friendship-ஐப் பற்றிக் கதைசசு என்னை தண்ணியடிக்க வைச்சிற்று நடுறோட்டில விட்டிட்டுப் போய்ற்றாங்கள். இவங்களையெல்லாம் friends எண்டு நினைச்சு நான் தான் ஏமாந்து போய்ற்றன். தீபன் வன்னியிலயிருந்து சொந்தக்காரர் வந்திருக்கினம் எண்டு அவையைப் பார்ரக் வவுனியாவிற்குப் போயிருந்தது நினைவிற்கு வந்தது. அவன் இருந்திருந்தால் இந்தளவிற்கு வந்திருக்காது. உண்மையான நட்பு ஒருபோதும் தப்பான வழியில் எம்மைச் செல்ல வைக்காது. தப்பான வழிக்கு எம்மை இழுத்து விடுவது உண்மையான நட்பாக இருக்முடியாது. நான் தான் உண்மையான நட்புக்களை அடையாளம் காணத் தவறியிருக்கின்றேன்.

நதீஷாவைப் பார்த்தேன். எதுவும் நடவாதது போல் வாசலையே பார்த்தக் கொண்டிருந்தாள். இவள் மனதை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறேன். அதையெல்லாம் மறந்து விட்டு இப்போதும் இங்கே எனக்காய்... இவள் மட்டும் தமிழிச்சியாய் இருந்திருந்தால்? மனம் மருகியது.

“அன்னத்தைத் தொட்ட கைகளினால் மதுக் கிண்ணத்தை இனிநான் தொட மாட்டேன்.”

“ஜேந்தன்! ஏன் அழுகிறீங்க? நான் உங்களை disturb பண்ணீற்றனா? அதாலதான் குடிச்சீங்களா? sorry ஜேந்தன் என்னால இனி உங்களுக்கு எந்த disturbance-உம் வராது. promise. Please இனிமேல் குடிக்காதீங்க. உங்களை மட்டும் நம்பித்தான் உங்கட அம்மா இருக்கிறா. அவாக்கு நல்ல மகனா இருங்கோ. நீங்க நிறைய கொள்கைகளோட இருக்கிறனீங்க. அதுகளையும் ஞாபகம் வைச்சிருங்கோ. திரும்பவும் சொல்லுறன். promise-ஆ நான் இனி உங்களை disturb பண்ண மாட்டன். நீங்க உங்கட அம்மாவைச் சந்தோஷமா வைச்சிருங்கோ. இதை நான் ஒரு friend-ஆகத்தான் உங்களிட்டக் கேக்கிறன். உங்களை நான் முந்தி disturb பண்ணினதுக்கு என்னை மன்னியுங்கோ. நீங்க சொன்ன மாதிரி நாங்க friends ஆகவே இருப்பம். உங்கட நல்ல குணத்துக்கு உங்களுக்கும் உங்கட அம்மாக்கும் பிடிச்ச மாதிரி நல்ல பொம்பிளை கிடைப்பா. Wedding-இற்கு எனக்கும் invitation அனுப்புங்கோ”

அவள் சொல்லச் சொல்ல எனக்குள் அவள்மேல் காதல் பெருகியது. அவளை உற்றுப் பார்த்தேன்.கண்கள் கலங்கியிருந்தன.

“உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்”

நதீஷாவின் தோழியுடன் வேறும் இரு சிங்கள மாணவர்கள் எங்களை நோக்கி வந்தார்கள்.

“OK. you can go with them. they will take you to your room. bye”


Monday, September 19, 2011

வேரென நீயிருந்தாய்...(35)

“உங்களுக்கு love பண்ணுறதுக்கு எத்தினை வருஷம் தேவையெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு? சொன்னா நம்புவீங்களா? முதன்முதல் உங்கள postal course class-இல கண்ட அண்டையில இருந்தே எனக்குத் தெரிஞ்சிற்றுது நீங்கதான் என்ரை வாழ்க்கை எண்டு.”

உடம்பு ஒருமுறை ஆடியது. இவள் என்ன சொல்கிறாள்? இவளை நான் முதன்முதல் பார்த்த அன்றைய அதே தினத்தில் நானும் குழம்பிப் போயிருந்தேன். இவளுடன் நன்கு பழகியிருப்பதாக உள்மனம் சொல்லிக்கொண்டேயிருந்தாலும் அதற்கான எந்தவொரு சாத்தியக்கூறுமே இருந்திருக்கவில்லையாதலால் பின்வந்த நாட்களில் அந்த உள்ளுணர்வு மறைந்து போயிருந்தது. ஆனால் இப்போது இவள் சொல்வதைப் பார்க்கையில்...

“உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் பார்த்த அண்டைக்கு நானாகத்தானே உங்களோட வந்து கதைச்சன். நீங்க தமிழெண்டு சொன்னதும் என்னால நம்பேலாம இருந்துது. உங்களோட கனகாலம் பழகினது போல எனக்கு இருந்திச்சு. எனக்கே ஏன் அப்பிடியெல்லாம் இருந்தது எண்டு இப்ப வரைக்கும் தெரியாது. ஆனா இதையே யோசிச்சு எத்தினை நாள் நித்திரை கொள்ளாம இருந்தனான் தெரியுமா? இது போன ஜென்மத் தொடர்புதான். இதெல்லாம் உங்களுக்கு விளங்காது.”

அவள் சொல்லச் சொல்ல எனக்கு மண்டை விறைக்கத் தொடங்கியது. நான் அனுபவித்த அதே உணர்வுகளை அவளும் அனுபவித்திருக்கிறாள். ஆனால் அவையெவற்றையுமே இத்தனை காலமாய் வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறாள். ஒருவேளை இது ஜென்மாந்திரத் தொடர்புதானோ? நம்ப மறுத்தது மனது. சரி. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இன்றைய சூழ்நிலையில் இது சரிவருமா? அதுவும் இவளது தந்தையின் மரணத்திற்கு எனது அக்காதான் காரணமென்பது தெரியவந்தால் இவளது உணர்வுகள் எப்படியிருக்கும். மனைவியென்றானபின் இவளிடமிருந்து இவையெல்லாவற்றையும் மறைக்க முடியுமா? இதுவரைகாலமும் எனக்கு வேறு உடன்பிறப்புகளே இல்லை என்று நான் சொன்னதெல்லாம் பொய் என்கின்ன உண்மை தெரியவருகையில் என்மேல் அவள் வைத்திருக்கின்ற நம்பிக்கைகள் உடைந்து சிதறாதா? அதன்பின் எங்கள் வாழ்க்கை நரகமாகிப் போய்விடாதா? இல்லை அம்மாதான் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிப்பாளா? அல்லது ஏற்கனவே அவள் தனது மருமகளாய் யாரையேனும் வரித்துக் கொண்டிருப்பாளோ? வாக்குக்கூடக் கொடுத்திருப்பாளோ. அப்பாவைப் பறிகொடுத்து அக்காவை இழந்து இப்போது எனக்காய் மட்டும் ஜீவிக்கும் அவள் வாழ்க்கையில் என்ன சந்தோஷத்தை அனுபவித்திருப்பாள். அவளுக்கு மகனாய் நான் கொடுக்கக்கூடிய சந்தோஷம் அவளையே தனது மருமகளைத் தீர்மானிக்க விடுவதுதான். தாயும் மனைவியும் உத்துப் போனால்தான் ஒரு ஆணால் தன் குடும்பத்தை சந்தோஷமாகக் கொண்டு செல்லமுடியும். காதலில் தோற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோற்றா போய்விட்டார்கள்? காதலில் வெற்றிபெற்ற எத்தனையோபேர் மணவாழ்க்கையில் தோற்றுப்போயிருக்கிறார்களே. காதலிக்கையில் கண்ணுக்கு மறைந்துகிடக்கின்ற எத்தனையோ விடயங்கள் மணமானதும் விசாலமாகி வாழ்ககையையே நரகமாக்கி விடுகிறதே. இப்போது நான் இவள் காதலை ஏற்றுக் கொண்டாலும் இவளை என்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியுமா? என்னுடன் வாழ்வதால் தான் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதால்தானே என்னைக் காதலிக்கின்றாள். அவளது காதலை ஏற்றுக்கொண்டுவிட்டு பின் அவளை சந்தோஷமாக வைத்திருக்க முடியாவிட்டால் என்னை வெறுத்து ஒதுக்க மாட்டாளா? இவளை மணமுடிப்பதால் என் இனத்திலிருந்து நானும் அவள் இனத்திலிருந்து அவளும் ஒதுக்கப்பட்டவர்களாக மாட்டோமா? இரு இனங்களினாலும் நாங்கள் சந்தேகிக்கப்பட மாட்டோமா?

“நீங்க உண்மையைச் சொல்லுங்க. எதுக்காகப் பயப்படுறீங்க?”

“ஏன் நான் என்னத்துக்குப் பயப்பிட வேணும்?”

“அப்பப்பிறகேன் உண்மையை ஒத்துக்கொள்ளத் தயங்கிறீங்க?”

“சரி உண்மையெண்டே வைச்சுக் கொண்டாலும் எங்கடை வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. யோசிச்சுப் பாருங்க. உங்கட இடத்தில நான் இருந்தா ஏதும் பிரச்சினை வரேக்குள்ளை உடனே பக்கத்தில இருக்கிற சனமெல்லாம் நான் இயக்கம் சொல்லி பொலிசிட்டையோ ஆமியிட்டையோ பிடிச்சுக் குடுத்துப் போடுவினம். அதேபோல நீங்க எங்கட ஊருக்கு வந்தாலும் உங்கள ஒரு உளவாளியாத் தான் அங்கை இருக்கிறவை பாப்பினம். இதெல்லாம் இப்ப உங்களுக்கு விளங்காது. பிறகு அனுபவிக்கேக்குள்ள ஏன்ரா இவனைப் போய் லவ் பண்ணினன் எண்டு யோசிப்பீங்க. இதெல்லாம் தேவையா? நாங்க friends-ஆவே இருப்பம்.”

“ஏன் உங்கடை காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன்ரை wife-உம் ஒரு சிங்கள பெம்பிளை தானே. ஆமிக்காரரில எத்தினை பெரியாக்கள் தமிழ்ப் பெம்பிளைகளை marry பண்ணியிருக்கினம் எண்டு உங்களுக்குத் தெரியுமா?”

“அதெல்லாம் பிரச்சினை பெரிசா வரமுதல் நடந்தது. ஆனா இப்ப சரிவராது”

“சரி அப்ப நாங்க இப்ப புதுசாத் தொடங்கி வைப்பம். இப்பிடியாவது இந்த நாட்டில பிரச்சனை இல்லாமப் போகுதா எண்டு பார்ப்பம்”

“நதீஷா! நீங்களும் இந்தப் போரால பாதிக்கப்பட்டிருக்கிறீங்கதான். நான் மறுக்கேல்லை. ஆனா எப்பையுமே உங்கட இனம் அதிகாரம் செலுத்திற ஆக்களாககும் ஆக்கிரமிக்கிற ஆக்களாகவும் இருக்கிறதாலதான் அந்தப் பாதிப்புகள் உங்களுக்கு வருகுது. ஆனா எங்களுக்கு சண்டை நடக்கேக்ககையும் பாதிப்புத்தான் அதுக்கு முதலும் பாதிப்புத்தான். அதாலதான் சண்டையே வந்தது. இப்பிடி கலப்பினக் கல்யாணம் செய்யிறதால தமிழனம்தான் அழிஞ்சு போகுமேயொழிய சமாதானம் வராது. எண்டைக்கு அதிகாரம் எல்லாஇன மக்களுக்கும் சமமாக கிடைக்குதோ, அதுக்குப் பிறகு வேணுமெண்டா நீங்க சொல்லுறது சரியா இருக்கலாம். இப்பத்தைய நிலையில தமிழரிட்டை அடிவாங்கின வலிதான் அதிகமாயிருக்கு. அதுக்குப் பரிகாரம் செய்யாம வேற என்னதான் செய்தாலும், அந்தவலி திரும்பித்திரும்பி வந்துகொண்டேயிருக்கும்.”

“OK. தெரிஞ்சோ தெரியாமலோ தமிழாக்களின்ரை வலிகளுக்கு என்ரை குடும்பமும் காரணமாயிருந்திருக்கு. அதுக்குப் பரிகாரம் செய்யிறதுக்கு நான் ரெடி. என்ன செய்யவேணுமெண்டு சொல்லுங்கோ. நான் செய்யிறன்.”

“அதெல்லாம் சரிவராது”

”காதலன் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து... தெரியும்தானே. எல்லாம் சரிவரும்”

”போற பாதையே தெரியாதாம். சும்மா பிடிவாதம் பிடிக்காம உங்கடை அலுவல்களைப் பாருங்கோ”

“புது வெள்ளம் சேரும்போது வழியென்ன பாதையென்ன? காத்தாகி வீசும்போது திசையென்ன தேசம் என்ன?”
சிரித்தாள்.

ஆச்சரியாமாயிருந்தது. எப்படி இவளுக்கு இந்தப்பாடல்களெல்லாம் தெரிய வந்திருக்கும்?

“மனசத் தாழ்போட்டு மயிலே நீ போ.. வேணாம் விளையாட்டு”

“பரவாயில்லை. கடைசில சரியா நடந்தாச் சரி”

“சும்மா வீணான கற்பனைகளை வளர்க்காதீங்க. இதுக்குமேல உங்களோட நான் இதைப்பற்றிக் கதைக்க மாட்டன். இது சத்தியம்.”

அவள் வதனம் சுருங்கிப் போனது.

“OK. நானும் இனி இதைப்பற்றி உங்களோடை கதைக்க மாட்டன்”

இருவருக்குமிடையில் மௌனம் வந்து குந்திக்கொண்டது.