Monday, September 19, 2011

வேரென நீயிருந்தாய்...(35)

“உங்களுக்கு love பண்ணுறதுக்கு எத்தினை வருஷம் தேவையெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு? சொன்னா நம்புவீங்களா? முதன்முதல் உங்கள postal course class-இல கண்ட அண்டையில இருந்தே எனக்குத் தெரிஞ்சிற்றுது நீங்கதான் என்ரை வாழ்க்கை எண்டு.”

உடம்பு ஒருமுறை ஆடியது. இவள் என்ன சொல்கிறாள்? இவளை நான் முதன்முதல் பார்த்த அன்றைய அதே தினத்தில் நானும் குழம்பிப் போயிருந்தேன். இவளுடன் நன்கு பழகியிருப்பதாக உள்மனம் சொல்லிக்கொண்டேயிருந்தாலும் அதற்கான எந்தவொரு சாத்தியக்கூறுமே இருந்திருக்கவில்லையாதலால் பின்வந்த நாட்களில் அந்த உள்ளுணர்வு மறைந்து போயிருந்தது. ஆனால் இப்போது இவள் சொல்வதைப் பார்க்கையில்...

“உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் பார்த்த அண்டைக்கு நானாகத்தானே உங்களோட வந்து கதைச்சன். நீங்க தமிழெண்டு சொன்னதும் என்னால நம்பேலாம இருந்துது. உங்களோட கனகாலம் பழகினது போல எனக்கு இருந்திச்சு. எனக்கே ஏன் அப்பிடியெல்லாம் இருந்தது எண்டு இப்ப வரைக்கும் தெரியாது. ஆனா இதையே யோசிச்சு எத்தினை நாள் நித்திரை கொள்ளாம இருந்தனான் தெரியுமா? இது போன ஜென்மத் தொடர்புதான். இதெல்லாம் உங்களுக்கு விளங்காது.”

அவள் சொல்லச் சொல்ல எனக்கு மண்டை விறைக்கத் தொடங்கியது. நான் அனுபவித்த அதே உணர்வுகளை அவளும் அனுபவித்திருக்கிறாள். ஆனால் அவையெவற்றையுமே இத்தனை காலமாய் வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறாள். ஒருவேளை இது ஜென்மாந்திரத் தொடர்புதானோ? நம்ப மறுத்தது மனது. சரி. இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இன்றைய சூழ்நிலையில் இது சரிவருமா? அதுவும் இவளது தந்தையின் மரணத்திற்கு எனது அக்காதான் காரணமென்பது தெரியவந்தால் இவளது உணர்வுகள் எப்படியிருக்கும். மனைவியென்றானபின் இவளிடமிருந்து இவையெல்லாவற்றையும் மறைக்க முடியுமா? இதுவரைகாலமும் எனக்கு வேறு உடன்பிறப்புகளே இல்லை என்று நான் சொன்னதெல்லாம் பொய் என்கின்ன உண்மை தெரியவருகையில் என்மேல் அவள் வைத்திருக்கின்ற நம்பிக்கைகள் உடைந்து சிதறாதா? அதன்பின் எங்கள் வாழ்க்கை நரகமாகிப் போய்விடாதா? இல்லை அம்மாதான் இதற்கு மனப்பூர்வமாகச் சம்மதிப்பாளா? அல்லது ஏற்கனவே அவள் தனது மருமகளாய் யாரையேனும் வரித்துக் கொண்டிருப்பாளோ? வாக்குக்கூடக் கொடுத்திருப்பாளோ. அப்பாவைப் பறிகொடுத்து அக்காவை இழந்து இப்போது எனக்காய் மட்டும் ஜீவிக்கும் அவள் வாழ்க்கையில் என்ன சந்தோஷத்தை அனுபவித்திருப்பாள். அவளுக்கு மகனாய் நான் கொடுக்கக்கூடிய சந்தோஷம் அவளையே தனது மருமகளைத் தீர்மானிக்க விடுவதுதான். தாயும் மனைவியும் உத்துப் போனால்தான் ஒரு ஆணால் தன் குடும்பத்தை சந்தோஷமாகக் கொண்டு செல்லமுடியும். காதலில் தோற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையில் தோற்றா போய்விட்டார்கள்? காதலில் வெற்றிபெற்ற எத்தனையோபேர் மணவாழ்க்கையில் தோற்றுப்போயிருக்கிறார்களே. காதலிக்கையில் கண்ணுக்கு மறைந்துகிடக்கின்ற எத்தனையோ விடயங்கள் மணமானதும் விசாலமாகி வாழ்ககையையே நரகமாக்கி விடுகிறதே. இப்போது நான் இவள் காதலை ஏற்றுக் கொண்டாலும் இவளை என்னால் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியுமா? என்னுடன் வாழ்வதால் தான் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்பதால்தானே என்னைக் காதலிக்கின்றாள். அவளது காதலை ஏற்றுக்கொண்டுவிட்டு பின் அவளை சந்தோஷமாக வைத்திருக்க முடியாவிட்டால் என்னை வெறுத்து ஒதுக்க மாட்டாளா? இவளை மணமுடிப்பதால் என் இனத்திலிருந்து நானும் அவள் இனத்திலிருந்து அவளும் ஒதுக்கப்பட்டவர்களாக மாட்டோமா? இரு இனங்களினாலும் நாங்கள் சந்தேகிக்கப்பட மாட்டோமா?

“நீங்க உண்மையைச் சொல்லுங்க. எதுக்காகப் பயப்படுறீங்க?”

“ஏன் நான் என்னத்துக்குப் பயப்பிட வேணும்?”

“அப்பப்பிறகேன் உண்மையை ஒத்துக்கொள்ளத் தயங்கிறீங்க?”

“சரி உண்மையெண்டே வைச்சுக் கொண்டாலும் எங்கடை வாழ்க்கை சந்தோஷமா இருக்காது. யோசிச்சுப் பாருங்க. உங்கட இடத்தில நான் இருந்தா ஏதும் பிரச்சினை வரேக்குள்ளை உடனே பக்கத்தில இருக்கிற சனமெல்லாம் நான் இயக்கம் சொல்லி பொலிசிட்டையோ ஆமியிட்டையோ பிடிச்சுக் குடுத்துப் போடுவினம். அதேபோல நீங்க எங்கட ஊருக்கு வந்தாலும் உங்கள ஒரு உளவாளியாத் தான் அங்கை இருக்கிறவை பாப்பினம். இதெல்லாம் இப்ப உங்களுக்கு விளங்காது. பிறகு அனுபவிக்கேக்குள்ள ஏன்ரா இவனைப் போய் லவ் பண்ணினன் எண்டு யோசிப்பீங்க. இதெல்லாம் தேவையா? நாங்க friends-ஆவே இருப்பம்.”

“ஏன் உங்கடை காவல்துறைப் பொறுப்பாளர் நடேசன்ரை wife-உம் ஒரு சிங்கள பெம்பிளை தானே. ஆமிக்காரரில எத்தினை பெரியாக்கள் தமிழ்ப் பெம்பிளைகளை marry பண்ணியிருக்கினம் எண்டு உங்களுக்குத் தெரியுமா?”

“அதெல்லாம் பிரச்சினை பெரிசா வரமுதல் நடந்தது. ஆனா இப்ப சரிவராது”

“சரி அப்ப நாங்க இப்ப புதுசாத் தொடங்கி வைப்பம். இப்பிடியாவது இந்த நாட்டில பிரச்சனை இல்லாமப் போகுதா எண்டு பார்ப்பம்”

“நதீஷா! நீங்களும் இந்தப் போரால பாதிக்கப்பட்டிருக்கிறீங்கதான். நான் மறுக்கேல்லை. ஆனா எப்பையுமே உங்கட இனம் அதிகாரம் செலுத்திற ஆக்களாககும் ஆக்கிரமிக்கிற ஆக்களாகவும் இருக்கிறதாலதான் அந்தப் பாதிப்புகள் உங்களுக்கு வருகுது. ஆனா எங்களுக்கு சண்டை நடக்கேக்ககையும் பாதிப்புத்தான் அதுக்கு முதலும் பாதிப்புத்தான். அதாலதான் சண்டையே வந்தது. இப்பிடி கலப்பினக் கல்யாணம் செய்யிறதால தமிழனம்தான் அழிஞ்சு போகுமேயொழிய சமாதானம் வராது. எண்டைக்கு அதிகாரம் எல்லாஇன மக்களுக்கும் சமமாக கிடைக்குதோ, அதுக்குப் பிறகு வேணுமெண்டா நீங்க சொல்லுறது சரியா இருக்கலாம். இப்பத்தைய நிலையில தமிழரிட்டை அடிவாங்கின வலிதான் அதிகமாயிருக்கு. அதுக்குப் பரிகாரம் செய்யாம வேற என்னதான் செய்தாலும், அந்தவலி திரும்பித்திரும்பி வந்துகொண்டேயிருக்கும்.”

“OK. தெரிஞ்சோ தெரியாமலோ தமிழாக்களின்ரை வலிகளுக்கு என்ரை குடும்பமும் காரணமாயிருந்திருக்கு. அதுக்குப் பரிகாரம் செய்யிறதுக்கு நான் ரெடி. என்ன செய்யவேணுமெண்டு சொல்லுங்கோ. நான் செய்யிறன்.”

“அதெல்லாம் சரிவராது”

”காதலன் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து... தெரியும்தானே. எல்லாம் சரிவரும்”

”போற பாதையே தெரியாதாம். சும்மா பிடிவாதம் பிடிக்காம உங்கடை அலுவல்களைப் பாருங்கோ”

“புது வெள்ளம் சேரும்போது வழியென்ன பாதையென்ன? காத்தாகி வீசும்போது திசையென்ன தேசம் என்ன?”
சிரித்தாள்.

ஆச்சரியாமாயிருந்தது. எப்படி இவளுக்கு இந்தப்பாடல்களெல்லாம் தெரிய வந்திருக்கும்?

“மனசத் தாழ்போட்டு மயிலே நீ போ.. வேணாம் விளையாட்டு”

“பரவாயில்லை. கடைசில சரியா நடந்தாச் சரி”

“சும்மா வீணான கற்பனைகளை வளர்க்காதீங்க. இதுக்குமேல உங்களோட நான் இதைப்பற்றிக் கதைக்க மாட்டன். இது சத்தியம்.”

அவள் வதனம் சுருங்கிப் போனது.

“OK. நானும் இனி இதைப்பற்றி உங்களோடை கதைக்க மாட்டன்”

இருவருக்குமிடையில் மௌனம் வந்து குந்திக்கொண்டது.



Friday, September 16, 2011

வேரென நீயிருந்தாய்...(34)

“ஒயாட்டத் தண்ணுவத, ஒயாத்தமாய் மகே ஜீவிதய?”

காலடியில் நிலம் வழுவுவதாய் உணர்ந்தேன். கடைசியில் தீபனின் கணிப்பு சரியாகி விட்டது. எதிர்பார்த்திராத நேரத்தில் அவள் வெளிப்படுத்திய வார்த்தைகள் திகைபை்பையே உண்டு பண்ணியது. வாயடைத்துப்போய் நின்றேன். எதையும் முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்பது எவ்வளவு உண்மையானது! தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்து நிற்பதாய்ப் பட்டது. ஆயினும் அடிமனதிற்குள் அவள் வார்த்தைகள் ஒருவித சந்தோஷத்தைப் பிரசவிப்பதையும் என்னால் உணரமுடிந்தது. இது ஒருபோதுமே சரிப்பட்டு வராது. என்ன செய்யலாம்? எப்படி இவள் மனதைக் காயப்படுத்தாமல் இதிலிருந்து வெளிவரலாம்? சிந்தனைகள் ஓடத் தொடங்கின.

“ஏன் திடீரெண்டு silent ஆகிற்றீங்க?”

நதீஷாவின் வினா சிந்தனைகளை அறுத்தது. இப்போதுகூட எதுவும் ஆகிவிடவில்லை. இவளுக்குப் புரியும்படி எடுத்துக் கூறினாள் புரிந்துகொண்டு விலகிவிடுவாள் என்கின்ற நம்பிக்கை துளிர்விட்டது.

“என்ன நீங்க? என்னெல்லாமோ சொல்லுறீங்க. உங்களுக்கு என்ன நடந்தது?”

“ஏன் நான் சொன்னது உங்களுக்கு விளங்கேல்லையா? You are my life ஜேந்தன்”

“Please நதீஷா. இதெல்லாம் சரிப்பட்டு வராது. ஏன் வீணா உங்கடை மனதை அலைய விடுறீங்க?”

“ஏன் அப்படிச் சொல்லுறீங்க. love பண்ணுறது பிழையா?”

“love பண்ணுறது பிழையில்லத்தான். ஆனா அந்த love-ஆல பல பிரச்சினைகள் வருமெண்டால், அதைத் தவிர்க்கிறது நல்லதுதானே”

“ஏன்? பிரச்சினைகளை face பண்ண உங்களுக்குப் பயமா?”

“அஞ்சுவது அஞ்சாமை பேதமை. எண்டு வள்ளுவரே சொல்லியிருக்கிறேர். love பண்ணினா marry பண்ண வேணும். நாங்க ரெண்டுபேரும் marry பண்ணிறதெண்டா சும்மாவா? அதுவும் நாடு இப்ப இருக்கிற நிலையில நரிக்கு உழுந்து வடை கேட்ட மாதிரி. இதெல்லாம் சரிப்பட்டு வராது.”

“அதுதான் ஏனெண்டு கேக்கிறன்”

“நீங்க சிங்களம். நான் தமிழ். நாங்க சேர்ந்து வாழுறது சரிப்பட்டுவராது.”

“சும்மா சும்மா தமிழ் சிங்களம் எண்டுசொல்லி மழுப்பாதீங்க. உங்களுக்கு என்னைப் பிடிக்கேல்லையா?”

“ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க? ஒரு friend-ஆ உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. ஆனா அதுக்கு மேல love எல்லாம் வேண்டாம்..”

“உங்கட நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க உங்களுக்கு என்னில love இல்லையெண்டு?”

“எதை நீங்க love எண்டு சொல்லுறீங்க?”

“dictionary கொண்டுவந்து தரவா?”

“இஞ்ச வாங்க! உங்களுக்கு எப்ப இருந்து என்னைத் தெரியும்? கம்பசுக்கு வந்தாப் பிறகுதானே! அதுவும் நாங்க group mates-ஆ இருந்ததாலதானே பழகினம். சிலவேளை நாங்க ரெண்டுபோரும் group mates-ஆ வந்திருக்காட்டி சும்மாதானே இருந்திருப்பம். சிலவேளை எங்கட பெயர்கள்கூட ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சிருக்காது. அப்பப் பிறகென்ன? இதெல்லம் சும்மா உடம்பு செய்கிற வேலை”

“ஹலோ சேர்! கொஞ்சம் அமத்தி வாசிக்கிறீங்களா? விட்டா ஏதோ நான் அலையிற மாதிரிக் கதைச்சுக்கொண்டே போறீங்க?”

“sorry நான் அப்பிடி mean பண்ணேல்லை. ஆனா...”

“என்ன ஆனா ஆவென்னா எண்டுகொண்டு? உங்களுக்கும் என்னில love இருக்கு. ஆனா உங்கட Ego அதைச் சொல்ல விடாமத் தடுக்குது. அவ்வளவு தான்”

“நான் என்ன சொல்ல வாறனெண்டா, love எண்டு ஒண்டில்லை. இதெல்லாம் ஓமோன்களின்ரை அட்டகாசம். அவ்வளவுதான். அதை விளங்கிக்கொண்டால் சரி”

“சும்மா சும்மா விதண்டாவாதம் கதைக்காதீங்க. love வந்து மனசு சம்பந்தப்பட்டது. நான் love-ஐப்பற்றிக் கதைக்கிறன். நீங்க lust-ஐப்பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறீங்க. வருகுது...”

“lust இல்லாம love இல்லை”

“உங்களுக்கு வேணுமெண்டால் அப்பிடியிருக்கலாம்”
அவள் முகம் சுழிக்கத் தொடங்கியது. மீண்டும் பிரச்சனை பெரிதாகி விடுமோ என்கின்ற பயம் எழுந்தது.

“சரி OK. இதைப்பற்றிக் கதைக்க வெளிக்கிட்டா எப்பையும் பிரச்சனைதான் வருகுது. அதால இந்த விஷயத்தைப் பற்றிக் கதைக்கிறதை இனி நிப்பாட்டுவமா?”

“நான் சொல்ல வேண்டியதை உங்களுக்குச் சொல்லிப் போட்டன். you are my life அதில மாற்றம் இல்லை.”

“என்ன நீங்க? சும்மா சும்மா அதையே சொல்லிக்கொண்டு. ஒரு நாலு வருஷமாத் தான் என்னோட பழகிறீங்க. அதுக்குள்ள உங்களுக்கு என்னைப் பற்றி என்ன தெரியுமெண்டு love பண்ணுறீங்க?”

“உங்களுக்கு love பண்ணுறதுக்கு எத்தினை வருஷம் தேவையெண்டு எனக்குத் தெரியாது. ஆனா எனக்கு? சொன்னா நம்புவீங்களா? முதன்முதல் உங்கள postal course class-இல கண்ட அண்டையில இருந்தே எனக்குத் தெரிஞ்சிற்றுது நீங்கதான் என்ரை வாழ்க்கை எண்டு.”


Friday, August 19, 2011

வேரென நீயிருந்தாய்...(33)

அதுவொரு சனிக்கிழமை, மாலைச்சூரியன் தன்னை மறைத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான். இறுதியாண்டு விரிவுரைகள் முடிவடைவதற்கு சில வாரங்களே எஞ்சியிருக்கையில் எமது கனிஷ்ட மாணவர்களால் எங்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சி Drawing hall இற்குள் நடாத்தப்பட்டுக் கொண்டிருந்தது. எமது பல்கலைக்கழக வாழ்வின் இறுதி நிகழ்ச்சி அது.

இப்போதுதான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததது போல் இருக்கிறது. ஆனால் அதற்குள் நான்கு வருடங்கள் ஓடி மறைந்து விட்டிருந்தன. காலம் வெகுவேகமாகக் கரைந்து கொண்டிருப்பது புரிந்தது. இந்தக் காலச் சுழலில் தான் எத்தனை மாற்றங்கள்?

சிறிலங்காவின் பொருளாதாரம் ஜூலை 24ம் திகதி கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கியழிப்பு நடவடிக்கையுடன் ஆட்டம் காணத்தொடங்கியிருந்தது. தமிழர்தரப்பு தன் படைத்துறை மேலாண்மையைப் பறைசாற்றியிருப்பதால் விரைவில் வெளிநாடுகளின் தலையீட்டுடனான சமாதான நடவடிக்கைகள் ஏற்படலாம் என்கின்ற எதிர்பார்ப்புகள் பலமாகக் காணப்பட்டன. 2001 ஏப்ரல் 25இல் சிறிலங்காப் படையினரின் பலத்த எதிர்பார்ப்புடன் ஆனையிறவை மீளக் கைப்பற்றுவதற்கென ஆரம்பிக்கப்பட்ட தீச்சுவாலை படைநடவடிக்கை மூன்று நாட்களில் முற்றாக முறியடிக்கப்பட்டிருந்த நிலையில் யுத்தகளம் பெரும்பாலும் அமைதியாகவே காணப்பட்டாலும், அமைதிக்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் எவையும் பெரிதாக எடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிந்திருக்கவில்லை. 2000ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணம் தமிழர் படையிடம் வீழ்ச்சியடையும் நிலையிலிருந்தது. ஆயினும் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீட்டைத் தவிர்ப்பதற்காக அது பின்வாங்க வேண்டியிருந்ததுடன், ஒருதலைப் பட்சமாக யுத்த நிறுத்தத்தையும் அறிவித்திருந்தது. அந்த அவகாசத்தைப் பயன்படுத்திய சிறிலங்காப்படைகள் புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட அதிநவீன ஆயுதங்களின் உதவியுடன் யாழ்குடாநாட்டிலிருந்து தமிழர்படைகளை பின்வாங்கச்செய்வதில் வெற்றியும் கண்டிருந்தன. அந்த மமதையில் தான் மூன்று நாட்களில் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை மூலம் தமிழர் படை வென்றெடுத்த ஆனையிறவை மீளக் கைப்பற்றப் போவதாக அறைகூவல் விடுத்து தீச்சுவாலை நடவடிக்கையை ஆரம்பித்துத் தோல்வி கண்டிருந்தது.

“ஜெயந்தன் டேய்! வாடா ESU றூமுக்குப் பின்னால. எல்லாரும் அங்கதான் நிக்கிறாங்கள்”
சகமாணவனொருவன் வந்து கையைப்பிடித்து இழுத்தான். சிந்தனை கலைய அவனுடன் சென்றேன்.

“மள்ச்சான்! இழ்துதான் நான் கழ்சியா அழ்க்கிறது. இனி நான் குடிக்க மாட்டன்” மப்பேறிய நிலையில் ஒருவன் உளறினான்.

“ஜெயந்தன்! இந்தா நீயும் குடி!. இது தான் கம்பசில எங்கட கடைசிப்பார்ட்டி”

“இல்லை. எனக்கு வேண்டாம்.”

“பேய்ப்... அடியடா!. welcome party அண்டைக்கு அடிச்சனிதானே! பிறகென்ன? farewel party-க்கும் அடி!”

Welcome party-யின் நினைவுகள் நெஞ்சினில் வந்து மோதின.

அக்கா! துக்கம் தொண்டையை அடைத்தது. அந்த நிகழ்வின் பின் அக்கா மானசீகமாக என்னிடம் வந்ததில்லை. இப்போது அவளுமில்லை. அவள் இல்லாமல் போனதை இன்னமும் அம்மாவிடம் தெரிவிக்கவுமில்லை. சிலவேளை அம்மாவும் அவளின் வீரச்சாவை பத்திரிகை வாயிலாக அறிந்திருக்கலாம். ஆயினும் அவள் அதைத் தெரிந்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை. அக்காவைப் பற்றிய உரையாடல்கள் எழுவதைத் தவிர்ப்பதைப் பார்க்கையில் நானும் அம்மாவும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பதாய்த்தான் இப்போது படுகிறது.

மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிரும் போது அது பெருகுகின்றது. துக்கத்தை மற்றவர்களுடன் பகிர்கையில் அது குறைவடைகின்றது என்பதை உணர்ந்திருந்தாலும், அக்காவின் இழப்பால் ஏற்பட்ட துக்கத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியாத நிலையில் நானிருந்தேன். எந்தக்காயத்தையும் காலம் ஆற்றிவிடும் என்கின்ற நம்பிக்கையைப் பொய்யாக்கி அக்காவின் நினைவுகள் அடக்கமுடியாமல் என்னுள் பிரவாகிக்கத் தொடங்க கண்கள் கலங்கியது.

“மச்சான் ஒண்டுக்கும் கவலைப்படாத! இந்தா இதை அடி! எல்லாக் கவலையும் மறந்து போயிரும்!”

மறுத்தேன்.

“அட பேய்ப்...! இன்னும் கொஞ்ச நாளில இஞ்சினியர்ஸ் எண்டு சொல்லி எத்தினை official meeting-குகள் நடக்கும். அங்கையெல்லாம் போய் தண்ணியடிக்காம இருந்தா மரியாதையில்லை. அதுக்கு இப்ப இஞ்சையே பழகீற்றா நல்லது தானே! அங்க போய்க் குடிக்கத் தொடங்கினா, பிறகு அளவு தெரியாமக் குடிச்சு நோண்டியாகாம.... வாடா வந்து சும்மா அடி!”

“ஜெயந்தன் டேய் நாங்க எல்லாரும் தானே அடிக்கிறம். இண்டைக்கு விட்டாப் பிறகு எப்ப நாங்க எல்லாரும் இப்பிடி ஒண்டா இருக்கப் போறம்?”

“மச்சான்! நீ உண்மையா friendship-ஐ மதிக்கிற ஆளெண்டா இப்ப எங்களோட இருந்து தண்ணியடிக்கவேணும். இல்லையெண்டா போ. அங்கனேக்க எங்கையும் நதீஷா நிப்பாள். போயிருந்து அவளுக்கு வாளி வை. சும்மா இதில நிண்டு எங்களுக்கு விசரைக் கிளப்பாதை.”
-எல்லாருமாச் சேர்ந்து அலுப்படிக்கத் தொடங்கினார்கள்.

நதீஷாவை இழுக்காம இவங்களால இருக்கேலாது போல. - மனது சலித்தது.

அக்காவின் வீரச்சாவை அறிந்ததன் பின் நதீஷாவுடன் என்னால் சகஜமாக உரையாட முடியாமலிருந்தது. அப்பாவைக் கண்டுபிடித்துத் தருவதாகக் கூறியிருந்த அவளின் தந்தையின் மரணத்திற்கு அக்காவே காரணமாகியிருந்தது மனதைப் பிசைந்துகொண்டிருந்தது. அக்காவைப் பற்றி அவளுக்கு தெரிந்திருக்காது என்றாலும் அவளைக் காண்கையில் எனக்குள் குற்ற உணர்வொன்று வந்து உறுத்திக்கொண்டேயிருந்தது. அவளோ தந்தையின் மரணத்தின் பின்னர் என்னுடன் இன்னும் நெருங்கத் தொடங்கியிருந்தாள்.

“நீங்க இப்ப எப்படி இருக்கிறீங்க? வீட்டில எல்லாரும் OK-யா?”

“ofcourse. ஏன் கேட்கிறீங்க?”

“அப்பிடியெண்டா நாங்க கொஞ்சம் distance வைச்சுப் பழகுவா?”

“ஏன்? ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“இல்ல. நாங்க கொஞ்சம் கூட close ஆப் பழகிற மாதிரியிருக்கு? பாக்கிற ஆக்களும் வித்தியாசமாக் கதைப்பினம். அதுதான்”

“உங்களுக்கு என்னோட இப்பிடிப் பழகிறது பிடிக்கேல்லையா?”
அவள் முகத்தில் சோகம் பரவுவது தெரிந்தது.

“அப்பிடியெண்டில்லை.”

“அப்பப் பிறகேன் நீங்க மற்றவையைப் பற்றிக் கவலைப்படுறீங்க?”

“அப்பிடியில்லை. பிறகு அது உங்கட life-ஐயும் affect பண்ணலாம்”.

“ஒயாட்ட தண்ணுவத? ஒயாத்தமாய் மகே ஜீவிதயே...”


Thursday, June 9, 2011

வேரென நீயிருந்தாய்...(32)

அன்புள்ள ஜேன்குட்டிக்கு!

நீ இதை வாசிக்கும் இந்தக் கணத்தில் நான் உங்களை விட்டு, எங்கள் நாட்டை விட்டு, எங்கள் நாட்டின் விடியலுக்காக இவ்வுலகை விட்டே பிரிந்திருக்கக்கூடும். கவலைப் படாதேடா. எப்படியும் அடுத்த பிறப்பிலும் உன்னுடனேயே இருப்பேன். விளங்கும் என நினைக்கிறேன். மானுட ஆன்மா மரணம் எய்தாது என்றான் கண்ணன். நாங்கள் எல்லோருமே ஏதோவொரு வகையில் அருச்சுனர்களே. இந்த வாழ்க்கையும் ஒரு குருஷேத்திரம் தான். எல்லாம் எப்பவோ தீர்மானிக்கப்பட்டாயிற்று. அதை நிறைவேற்றும் நாங்கள் வெறும் கருவிகளே. ஒருவகையில் நானும் இப்போது கீதாவுபதேசம் பெற்ற விஜயன்தான். வரித்துக்கொண்ட கடமையைச் செய்வதில், அதையும் நிறைவாகச் செய்யவேண்டும் என்பதில் அதிக அக்கறை இருக்கின்றது. உன்னை நேரில் சந்தித்தால் என்மனவுறுதி ஆட்டம் கண்டுவிடலாம் என்கின்ற அச்சமும் நிரம்பவே உண்டு. ஆதலால்தான் உன்னோடான சந்திப்புகளைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றேன். இன்றுடன் நான் இடம் மாறுகின்றேன். இப்பிறப்பில் இனிமேல் உன்னைச் சந்திக்க முடியும் என்கின்ற நம்பிக்கை எனக்கில்லை. ஆனால் நிச்சயம் அடுத்த பிறப்பிலும் உன்னோடுதானிருப்பேன். உன்னை நினைத்து எனக்குப் பெருமையாக இருக்கிறது. அப்பாவின் கனவை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி. அம்மா இனி உனது பொறுப்பு. அவா கஷ்ரப்பட்டது காணும். இனி அவாவை நீதான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேணும். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அம்மாவையும் கவலைப் பட விடாதே. இழப்புகள் எங்களுக்குப் புதியவையல்ல. இந்தக் கடிதத்தை நீயாக உடைத்து வாசிக்காமல் தீபனே உன்னிடம் தந்து வாசிக்கச் சொல்லியிருந்தால் நான் உங்களை விட்டுப் பிரிந்து விட்டேனென்று அர்த்தம்....................

மண்டை விறைக்க கையினிலிருந்த கடிதம் நழுவிக் கீழே விழுந்தது. கண்கள் இருண்டு கொண்டு செல்வது புரிகையில் தீபன் என்னை உலுக்க ஆரம்பிப்பது புரிந்தது.

“ஏன்ரா அக்காவைக் கண்டத என்னட்டச் சொல்லாம மறைச்சனி?”

“இல்லையடா! அவாதான் உன்னட்டச் சொல்லக்கூடாதெண்டு promise பண்ணச் சொல்லிக் கேட்டவா. அதாலதான் நான் ஒண்டுமே சொல்லேல்லை.”

“அடச்சீ! எவ்வளவு காலமடா அக்காவைப் பார்த்து? இனி எங்கையடா பார்க்கேலும்?”

அடிவயிற்றிலிருந்து ஏதோவொன்று வெடித்துக் கிளம்புவதாய் உணர்ந்தேன். அப்பா காணாமல் போனபோதுகூட இவ்வளவு தூரத்திற்கு அந்தக் கவலை என்னை வாட்டியிருக்கவில்லை. அக்காவிற்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்றே எண்ணியிருந்தேன். அந்த நினைப்பு இப்போது சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருந்தது. வாழ்ககையில் எதுவுமே நிரந்தரமில்லை என்பது அறிவுக்குத் தெரிந்திருந்தாலும் அதை ஏற்க முடியாமல் மனது கிடந்து தவியாய்த் தவித்தது. உலகமே வெறுமையாய் சூனியமாகிப் போனதான உணர்வு நெஞ்சினை ஆக்கிரமிக்கத் தொடங்க தனியனாக உணரத் தொடங்கினேன். கண்களில் நீரருவிகள் ஏற்கனவே ஊற்றுப் பெருக்கத் தொடங்கியிருந்தன.

“ஜேயந்தன் டேய்! control yourself-டா. விசிறிகள் ஆருக்கும் விசயம் தெரிஞ்சுதெண்டால் பிறகு பிரச்சனையாகீரும்.”

“உனக்கு எப்பிடித் தெரியும் அக்கா வீரச்சவெண்டு?”

“இந்தா பேப்பரில கிடக்குது பாரன்.”

வீரகேசரியினைப் பிரட்டினேன்.

..... அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத்தாக்குலை மேற்கொண்டவர் ஒரு பெண் தற்கொலைக்குண்டுதாரியெனத் தெரிய வந்திருக்கின்றது. அத்துடன் அங்கே கண்டெடுக்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் பிரகாரம் அவரது பெயர் சுந்தரலிங்கம் ஜெயந்தினி என்றும், வவுனியாவை முகவரியாகக் கொண்டிருந்தாலும் அவரது சொந்த இடம் வேலணை என்பதும் இரகசியப் பொலிசாரின் விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது...

“மச்சான் எனக்குத் தலை வெடிக்குதடா... என்னடா நடக்குது? அப்ப, அக்காவின்ரை குண்டுவெடிப்பிலதான் நதீஷாவின்ரை அப்பாவும் செத்திருக்கிறேர். ரெண்டு பேருமே ஒண்டாச் செத்திருக்கினம் பாரன். அவற்றை செத்த வீட்டுக்கு நாங்களும் போய்ற்று வந்திருக்கிறம். ஆனா அக்காவின்ரை?”

உங்களுக்கு மட்டும் எங்கள் உணர்வுகள் புரியும்.
ஊமைகளாய் நாமிருக்கும் காரணம் தெரியும்.
பொங்கும் மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்.
போனபின்னே நாமழுவோம் யாரறிவீர்கள்?

“ஜெயந்தன்! நீ இதைப்பற்றி ஒருத்தருக்கும் ஒண்டும் கதைக்காதை. பேசாம அவாவுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளை மட்டும் செய்வம் என?. அம்மாவுக்கும் இப்போதைக்கு இதைப்பற்றி ஒண்டும் சொல்ல வேண்டாம் சரியா?



Wednesday, June 8, 2011

வேரென நீயிருந்தாய்...(31)

அன்றைய தினம் மதிய உணவிற்காக றொலெக்ஸ்ஸில் சென்று இருக்கையில் அமர்கையில்,

”ஜெயந்தன் டேய்! நீ இண்டைக்கு இந்தப் பக்கமா வந்து இரு. அப்பத்தான் அவளைப் பார்க்கலாம்.”

அமர்ந்தேன். உணவருந்திய பின்னும் நீண்ட நேரமாகியும் யாரும் வரக் காணோம்.

“அம்மாண உனக்கு விசரடா!”

“சத்தியமாடா. அவள் உனக்கு எறியத்தான் வாறவள். ஆனா என்னெண்டு தெரியேல்லை. ஆளா இண்டைக்குக் காணேல்லை. ஒருவேளை இண்டைக்கு நீ றோட்டுப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறதைக் கண்டிட்டு ஒளிச்சிற்றாளோ தெரியேல்ல. வா! நாங்க மயூரிப் பக்கமா நிண்டு பாப்பம்.”

”போடாங்! நீ நிண்ட பார். நான் றூமுக்குப் போறன்”

”நீ போ மச்சான்! இண்டைக்கு நான் இதுக்கொரு முடிவு கண்டிட்டுத்தான் வருவன். அப்பிடியில்லையெண்டால் என்ரை பேரை மாத்து.”

“சரிசரி! றூமுக்குப் போய் நான் உனக்கு வேற பேர் யோசிக்கிறன்”.
தீபனை விட்டுவிட்டு கிளம்பி அறைக்கு வந்த சிலமணி நேரங்களில் தீபன் வந்தான். அவன் முகத்தில் பதட்டம் தெரிந்தது. அவன் சட்டைப் பையினுள் கடிதம் ஒன்று இருப்பதும் தெரிந்தது.

“என்ன மச்சான்? அப்ப இனிப்புதுப் பேரால கூப்பிடலாமா?”

”பேய்ப்..! நான் அவவைக் கண்டு கதைச்சிற்றுத்தான் வாறன்!”

“ஓ! அப்ப அவள் இப்ப உனக்கு அவாவாகிற்றாவோ? அவள் மச்சான் உனக்காகத்தான் வந்திருக்கிறாள். இண்டைக்கு நானும் றோட்டுப்பக்கம் பாத“துக் கொண்டிருக்கிறதைப் பார்த்திற்று ஒளிஞ்சு நிண்டிருக்கிறாள். அது உனக்கும் தெரிஞ்சு என்னைக் காய்வெட்டி விட்டிட்டு நீ நிண்டு கதைச்சுப் போட்டு வந்திருக்கிறாய் என! அதுக்குள்ள லவ் லெட்டர் கூட கிடைச்சிற்றுது போல. அப்ப எப்ப மச்சான் கிச் பார்ட்டி?”

“காடு பத்தியெரியுதெண்டு கரடி காவெடியெடுத்து ஆடிச்சாம். விஷயம் தெரியாம சும்மா அலம்பிக் கொண்டிருக்கிற. இந்தக் கடிதம் உனக்குத்தான்!”

“விட்டா நல்லா தீத்துவேடா! சரி எனக்கு வந்த கடிதம் தானே கொண்டா! உடைச்சு வாசிப்பம்”
-எட்டித் தீபனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தை எடுத்தேன்.

“அம்மாண கடிதத்தை இப்ப உடைச்சுப் பார்க்காத!”

“இது எனக்கு வந்த கடிதம் தானே! அப்ப நான் உடைச்சுப் பார்க்கலாம் தானே!”
-அவசரமாக கடிதத்தை உடைக்க வெளிக்கிட, தீபன் அதைப் பறிக்க எத்தனித்தான். முடியாமல் போகவே,

“உன்ர அக்கா மேல சத்தியமா, அதை உடைக்காத!”

”பேய்ப்..! என்ன பேய்க்காட்டுறியா? நீங்க லவ் பண்ணுறது. கண்ட சரக்குகளுக்கும் லவ் லெற்றர்ஸ் குடுக்கிறது வாங்கிறது. ஆனா கேட்டா ஏதோ நாங்கதான் சரக்குப் பார்த்துக்கொண்டு திரியிறமெண்டு கதைகட்டிறது. நீயும் உன்ர கடிதமும். இந்தா பிடி”

தீபன் மௌனமாயிருந்தான்.

***************

“ஏன் ஜேந்தன் சும்மா பொய் சொல்லுறீங்க?”

“நான் எப்ப பொய் சொன்னனான்?” -தலை தானாகவே கவிழ்ந்து கொண்டது.

“அது உங்களுக்கே தெரியும்தானே!.”

“என்ன நீங்க?”

“அப்ப என்ர கண்ணைப் பார்த்துச் சொல்லுங்க பார்ப்பம்?”

“என்ன சொல்ல வேணும்?”

“இப்ப நீங்க சொன்ன பொய்யை என்ர கண்ணைப்பார்த்துச் சொல்லுங்க பார்ப்பம்!”

“நான் என்ன பொய் சொன்னனான்?”

”ஏன்? நீங்க என்ன பொய் சொன்னீங்க எண்டு உங்களுக்கு மறந்து போய்ற்றுதா?”

**************

ஜனக மகாரஜாவின் அரசவை! வேதம் கற்றுணர்ந்த ஞானிகளும் பண்டிதர்களும் விவாதங்களில் களைத்துப்போக மைத்ரேயியும் யாக்ஞ வல்கியரும் தங்கள் விவாதத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.

பார்வையாளர்கள் விஷயஞானமின்றி அவர்கள் இருவரினதும் விவாதங்களை வேடிக்கை பார்க்கலாயினர். ஒரு கட்டத்தில் மைத்ரேயியின் வினாவிற்கு விடையளிக்க முடியாமல் திண்டாடினான் யாக்ஞ வல்கியன். ஒரு பெண்ணிடம் தோற்பதா? ஆண் என்கின்ற ஆணவம் கண்ணை மறைக்க விவாதம் மறந்தது, விவாதம் நடக்கும் சபை மறந்தது. தன் நிலை மறந்தது.

“இதற்கு மேலும் நீ கேள்வி கேட்பாயானால் நின் சிரசு சுக்குநுாறாய் வெடித்துச் சிதறட்டும்.”

************

“நீங்க உங்கட லிமிற்றைத் தாண்டி ஓவராப் போறீங்க நதீஷா!. இதுக்கு மேல உங்களோட கதைக்க எனக்கு விருப்பமில்லை.”

இருவருக்குமிடையில் மௌனம் வந்து அமர்ந்து கொண்டது.

************

அன்று ஞாயிற்றுக்கிழமை. சனிக்கிழமை கொன் (அரட்டை) அடித்துவிட்டுப் படுக்கப் பிந்தியிருந்ததால் வழமை போன்று அன்றும் பிந்தியே எழும்பியிருந்தேன். என்றுமில்லாதவாறு அன்றைய வீரகேசரி

வாரமலர் எனது கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. நான் எழுந்ததைக் கண்டதும். அறைக்கதவை இறுகத் தாழிட்டுவிட்டு அருகில் வந்தமர்ந்தான் தீபன். வியப்பாயிருந்தது.

“என்னடா?“

“இவ்வளவு நாளும் உனக்கு சொல்லாம மறைச்ச ஒரு உண்மையை இப்ப சொல்ல வேணும்.”

“என்ன மச்சான் என்னெண்டு சொல்லன்”

“வெள்ளைவத்தை றொலெக்ஸ்ஸில ஒரு பெம்பிளைப்பிள்ளையைக் காணுறனான். அவா உனக்கு ஒரு கடிதம் தந்தவா என்று சொன்னன். ஞாபகமிருக்கா?”

“இப்ப ஏன் அதைத் திரும்பவும் தொடங்கிற?”

“இந்தா அந்தக் கடிதம். இப்ப அதை நீ வாசிக்கலாம்.”



Thursday, June 2, 2011

வேரென நீயிருந்தாய்...(30)


“Next weekend நீங்க free-ஆ இருப்பீங்களா?”

“ஏன் கேக்கிறீங்க?”

“சொல்லுங்களன் please...”

”free-ஆத் தான் இருப்பன் எண்டு நினைக்கிறன்”

“அப்ப! எங்கட வீட்டுக்கு வாறீங்களா?”

“என்னத்துக்கு?”

“ச்சும்மா தான்”

“ஏனெண்டு சொல்லுங்கவன்.”

“ஆ! பொம்பிளை பார்க்கிறதுக்குத்தான்... வரச்சொல்லிக் கேட்டா வாறதை விட்டிட்டு ஆயிரம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?”

“அய்! ஒயாட்ட மொனவத பிசுத?” (ஏன்? உங்களுக்கு என்ன விசரா?)
-கடுப்பானேன்.

“ஹலோ ஹலோ! ஏன் இப்ப ரென்ஷனாகிறீங்க? எங்கட அப்பாட்ட உங்களைப் பற்றிச் சொன்னனான். அவர் உங்களோட கதைக்க வேணுமெண்டு சொன்னவர். அப்பாக்கு இப்ப 'நிவாடு' (விடுமுறை).அதுதான் வரச்சொல்லிக் கேட்டனான். பரவாயில்லை. நான் அவரை உங்கள அக்பரில வந்து கதைக்கச் சொல்லுறன்.”


அவளது தந்தை சிறிலங்கா காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றுவது ஞாபகத்திற்கு வந்தது. மனதிற்குள் பல்வேறு வகையான சிந்தனைகளும் ஒரே நேரத்தில் வந்து போயின. கூடவே பயமும் வந்து சேர்ந்து கொண்டது. என்ன இளவடா? வம்பை விலை கொடுத்து வாங்கீற்றேனோ என்கின்ற பச்சாதாபம் மேலிட்டது.


“என்னத்தைப் பற்றிக் கதைக்க வேணுமாம்?”
குரலில் ஏற்பட்ட நடுக்கத்தை மறைப்பது கடினமாகப்பட்டது.

“நான் சொல்ல மாட்டன். அது surprise!”

“அப்ப நானும் உங்கட அப்பாவை சந்திக்க மாட்டன்.”

“Please ஜேந்தன்! சத்தியமா உங்களுககு விருப்பமில்லாத ஒண்டும் அப்பா கதைக்க மாடடேர். என்னில உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? please இந்த saturday evening வீட்டுக்கு வாங்க. நீங்க மட்டும் தான் வரவேணும். வேறை ஒருத்தரையும் கூட்டிக்கொண்டு வராதீங்க.. please....."

என்ன செய்வதென்று புரியாமல் மனது தவித்தாலும், நதீஷா எந்தவிதமான தீங்கும் யாருக்கும் செய்யமாட்டாள் என்கின்ற ஆழ்மன நம்பிக்கையில் வருவதாய் ஒப்புக் கொண்டேன்.

***********

“எங்க மச்சான் வெளிக்கிடுற?”

தீபனிடம் என்னவென்று சொல்வது. தடுமாறினேன்.

“போய்ற்று வந்து சொல்லுறன்ரா. இப்ப என்னெட்ட ஒண்டும் கேக்காத.”

நதீஷாவின் வீட்டினை அடைகையில், என் வரவிற்காக அவளும் தந்தையும் காத்திருப்பது தெரிந்தது.

“எண்ட புத்தா அத்துலட்ட எண்டக்கோ” (வாங்க மகன் உள்ளுக்குள்ள வாங்கோ)

கண்களால் என்னை அளவெடுப்பது புரிந்தது. அவருக்கும் தமிழ் ஓரளவிற்கு தெரிந்திருந்தது. அவர் 83 இற்கு முன்னர் ஊர்காவற்றுறையிலும் அதற்கும் முன்னர் காங்கேசன்துறையிலும் பணியாற்றியிருந்ததாய்க் குறிப்பிட்டார்.

“உம்மட father-ஐப் பற்றி மகள் சொன்னது. அவற்றை details-களைத் தாரும். நான் என்னால முடிஞ்ச அளவுக்கு தேடிப்பார்க்கிறன்.”

அடிவயிற்றிலிருந்து ஏதோவொன்று உருண்டு வந்து நெஞ்சை அடைப்பதாய் உணர்ந்தேன். கண்கள் கலங்கியது. நதீஷாவைப் பார்த்தேன். புன்னகைத்தாள். அப்பளுக்கில்லாத வதனம். வரம் நல்கிவிட்டு நகும் தேவதையாய்த் தெரிந்தாள். எப்படி அவளுக்கு நன்றி சொல்வதென்று தெரியாமல் திணறினேன்.

“ஜேந்தன்! ஒயாட்ட மொணவத தே-த? நத்தங் கோபி-த? (உங்களுக்கு என்ன tea-ஆ அல்லது கோப்பியா?)

“மொணவத ஹரி கெனண்ட” (என்னெண்டாலும் கொண்டுவாங்கோ)

அவள் உள்ளே சென்றதும் அப்பாவின் details-ஐ தனது நாட்குறிப்பில் குறித்துக்கொண்டார் எங்களுக்கிடையிலான மன இறுக்கம் இப்போது தளரடவடைந்திருந்தது. பல்வேறு விடயங்களைப் பற்றியும் உரையாடினோம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தான ஏற்றுக்கொள்ளல்கள் அவரிடம் காணப்பட்டன. அவர் பெளத்த கொள்கைகளை பெரிதும் பின்பற்றுபவராகவே தெரிந்தார். புத்தரின் மறுபிறப்புக் கொள்கைகளைப் பெரிதும் நம்புபவராகக் காணப்பட்டார். சிறிலங்காப் படையில் இருந்துகொண்டு இப்பிடியொருவரா என வியப்பு மேலிட்டது. உரையாடல்களைத் தொடரமுடியாமல் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பினை அடுத்து அவர் வெளியே செல்லவேண்டியிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன்.

அம்மாவிடம் இதைப்பற்றிச் சொல்லலாமா? மனதிற்குள் பல்வேறு சிந்தனைகளும் உண்டாயிற்று. வேண்டாம்! ஒருவேளை இவராலும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், அல்லது அப்பா உயிருடன் இல்லை என்பது உறுதியாகிவிட்டால்? வேண்டாம். அம்மாவின் நம்பிக்கைகளைக் குலைக்க வேண்டாம். அவரின் பதிலைப் பெற்றதன் பின்னர் இதைப்பற்றி யோசிக்கலாம்.

*************

சிலவாரங்கள் கழிந்து விட்டிருந்தது. அதுவொரு புதன்கிழமை பெப்ரவரி 14, 2001. அதற்கும் சில வருடங்களுக்கு முன்னர்தான் சிறிலங்காவிலும் காதலர்தினம் அறிமுகமாகியிருந்தது. அன்றைய ஆய்வுகூடச் செயன்முறைகளைச் சீக்கிரமே இருவரும் முடித்துவிட்டிருந்தோம்.

“ஜேந்தன்! இண்டைக்கு என்ன விஷேசம் எண்டு தெரியுமா?”

“ம்ம்ம்.. valentines day”

“அப்ப celebrate பண்ணேல்லையா?”

“ம்.....அது லவ்வேர்ஸ்தான் celebrate பண்ணுறது”

“அவைக்கு எப்பிடித் தெரியும் தாங்க லவ்வேர்ஸ் தான் எண்டு? எல்லா லவ்வேர்ஸ்சும் என்ன I love you சொல்லீற்றா லவ் பண்ணுகினம்?” - சிரித்தாள்.

நெஞ்சு திக்கென்றது.

“அதை அவையிட்டத்தான் கேக்கவேணும்.”

“சரி அப்ப இப்ப சொல்லுங்கோ”

“what? what do you mean?"

கடைசியில் தீபன் சொன்னதுதான் சரியாக இருக்கப் போகின்றது போல. அவளை உற்றுப் பார்த்தேன். அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் திடீரெனக் காணாமல் போனதாய்ப் பட்டது.

“இல்ல....... what do you think about love?"

இனியும் கதையை வளர்த்து வீணான கற்பனைகளுக்கு இடங்கொடுப்பது தவறெனப் பட்டது.

“எனக்கு ஏற்கனவே ஒரு லவ்வர் கொழும்பில இருக்கிறா. எங்கட Training period-இல றொலெக்ஸ்ஸில சாப்பிட வந்து பழக்கமாகி பிறகு அப்பிடியே அது லவ் ஆகீற்றுது”.





Wednesday, June 1, 2011

வேரென நீயிருந்தாய்... (29)

எங்களது இறுதியாண்டு ஆரம்பாகி சில மாதங்கள் சென்று விட்டிருந்த நிலையில், அது நடந்து விட்டிருந்தது. இலக்கை முற்றாக நெருங்கமுடியாமல் தடுக்கப்பட்டவொரு தற்கொடைத் தாக்குதலில் நதீஷாவின் தந்தையும் கொல்லப்பட்டிருந்தார். அக்பரில் சக சிங்கள மாணவர்களின் முகங்களில் விரோதம் கொப்பளிப்பது தெரிந்தது.

“ஜெயந்தன் டேய்! செத்தவீட்டுக்குப் போகப்போறியா?” -வினவினான் தீபன்.

“அதான் யோசிக்கிறன். ஆனா, என்ன செய்யிறதெண்டுதான் தெரியேல்லை.”

“நாலு வருஷமா உன்ரை குறூப்மேற்றா இருக்கிறாளடா. சரியில்லை நீ போகத்தான் வேணும்.”

“என்னெண்டெடா அங்க போறது? அங்க நிக்கிற சிங்கள ஆக்கள் நான் தமிழெண்டிட்டு ஏதும் அலுப்பெடுக்கிறாங்களோ?”

“நீயேன் body எடுக்கும் மட்டும் நிக்கிற? body எடுத்தாப்பிறகுதான் ஏதும் பிரச்சனை தொடங்கிறதெண்டால் தொடங்குவாங்கள். அதுக்கு முதல் போய்ற்று வா”

“என்னெடா?”
செத்த வீட்டிற்குப் போனால் என்ன நடக்குமோ என்கின்ற பயமாயிருந்தாலும் என்னையுமறியாமல் அடிமனதில் அங்கு சென்றேதான் ஆகவேண்டும் என்கின்ற எண்ணம் வியாபித்துக் கொண்டிருந்தது.

“டேய்! நீ போய் அவளின்ர வீட்டில சாப்பிட்டிருக்கிறியடா. சரியில்ல நீ போகத்தான் வேணும்.”

“ஏன் நீயும் தானே சாப்பிட்டனி. அப்ப நீயும் வா.”

“அட பேயா! நான் ஒருக்காத்தான், அதுவும் first year-ல தான். அதெல்லாம் இப்ப அவள் மறந்து போயிருப்பாள்.”

“நான் மட்டும் என்ன கனதரமே போய்ச் சாப்பிட்டனான்?

“நீ கிட்டடியில அவளின்ரை கொப்பரைப் போய்ச் சந்திச்சுக் கதைச்சனிதானே! அப்ப சாப்பிடேல்லையோ?”

“அம்மாண! நல்லா வாயில வருகுது. ஆனா அதுக்குப் பிறகு தான் அவளோட பிசகியாச்சே”

“செத்தவீட்டுக்கு இதெல்லாம் பாக்கக்கூடாது. இப்ப நீ போகப் போறியோ இல்லையோ?”

“அப்ப நீயும் வா! ரெண்டுபேருமாப் போவம்.”

கட்டுகஸ்தோட்டையை அடைந்து அவளது வீட்டை அண்மிக்கையில், வீதியெங்கும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

வீட்டினுள் நுழைந்தோம்!

எங்களைக் கண்டதும்,

“அணே! மகே தாத்தா....”

வீச்செடுத்துக் கதறத் தொடங்கியவள், சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு அடங்கினாலும், இடையிடையே விம்மல்கள் வெடித்துக் கொண்டேயிருந்தன. தேற்றுவாரின்றித் தேம்பும் அவளைப் பார்க்க மனதிற்குள் ஏதோ இளகியது. தோளில் சாய்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது. கூடாது! இப்போதுதான் அவள் என்னை விட்டு விலகத் தொடங்கியிருக்கிறாள். அதுதான் இருவருக்கும் நல்லது. அதைக் குளப்பக்கூடாது. அவளிடம் ஆறுதலாக ஏதாவது சொல்லலாம் எனவெழுந்த எண்ணத்தையும் அடக்கிக் கொண்டேன்.

என்னையும், தன் தந்தையின் உடலையும் மாறிமாறிப் பார்த்து ஏதேதோ சொல்லத் துடிப்பதாய்ப் பட்டது. அவள் உணர்வுகள் எனக்குப் புரிந்து விட்டிருந்தது. அவள் என்ன சொல்லத் துடிக்கின்றாள் என்பதும் தெரிந்துவிட்டிருந்தது. அவள் அதைச் சொல்லிவிடக் கூடாது என்று மனத்திற்குள் பிரார்த்திக்கத் தொடங்கினேன்.

******

எங்களின் தொழில்சார் பயிற்சி முடிவடைந்து இறுதியாண்டு வகுப்புக்கள் ஆரம்பித்த முதலாவது கிழமை (வாரம்). ஆய்வுகூடத்தில் இணைந்திருந்தோம்.

“ஜேந்தன்! (அவள் இப்போதெல்லாம் ஜெயந்தனை ஜேந்தன் என்றே சற்றுச் சுருக்கி அழைக்கத் தொடங்கியிருந்தாள்) எப்பிடி training? மூண்டு மாசம்தான்! ஆனா எனக்கெண்டா கனகாலம் போல இருந்திச்சு.”

“ம்... நல்லாப் போச்சுது. உங்களுக்கு எப்பிடி?”

“சரியான boring....ஆ! உங்களிட்ட ஒண்டு சொல்ல வேணும்மெண்டு கனநாளா நினைச்சுக் கொண்டிருந்தனான். அது என்னெண்டு சொல்லுங்க பாப்பம்?”

“என்ன விளையாடுறீங்களா? நீங்க என்ன நினைச்சீங்கெண்டு எனக்கெப்பிடித் தெரியும்?”

“ம் good question, but it is related to you. just guess..."

'அடிச்சுச் சொல்லுறன் கம்பஸ் முடியிறதுக்குள்ள அவள் உன்னட்ட வந்து propose பண்ணுவாள்.' - மனதிற்குள் தீபன் வந்து போனான்