அன்றைய தினம் மதிய உணவிற்காக றொலெக்ஸ்ஸில் சென்று இருக்கையில் அமர்கையில்,
”ஜெயந்தன் டேய்! நீ இண்டைக்கு இந்தப் பக்கமா வந்து இரு. அப்பத்தான் அவளைப் பார்க்கலாம்.”
அமர்ந்தேன். உணவருந்திய பின்னும் நீண்ட நேரமாகியும் யாரும் வரக் காணோம்.
“அம்மாண உனக்கு விசரடா!”
“சத்தியமாடா. அவள் உனக்கு எறியத்தான் வாறவள். ஆனா என்னெண்டு தெரியேல்லை. ஆளா இண்டைக்குக் காணேல்லை. ஒருவேளை இண்டைக்கு நீ றோட்டுப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறதைக் கண்டிட்டு ஒளிச்சிற்றாளோ தெரியேல்ல. வா! நாங்க மயூரிப் பக்கமா நிண்டு பாப்பம்.”
”போடாங்! நீ நிண்ட பார். நான் றூமுக்குப் போறன்”
”நீ போ மச்சான்! இண்டைக்கு நான் இதுக்கொரு முடிவு கண்டிட்டுத்தான் வருவன். அப்பிடியில்லையெண்டால் என்ரை பேரை மாத்து.”
“சரிசரி! றூமுக்குப் போய் நான் உனக்கு வேற பேர் யோசிக்கிறன்”.
தீபனை விட்டுவிட்டு கிளம்பி அறைக்கு வந்த சிலமணி நேரங்களில் தீபன் வந்தான். அவன் முகத்தில் பதட்டம் தெரிந்தது. அவன் சட்டைப் பையினுள் கடிதம் ஒன்று இருப்பதும் தெரிந்தது.
“என்ன மச்சான்? அப்ப இனிப்புதுப் பேரால கூப்பிடலாமா?”
”பேய்ப்..! நான் அவவைக் கண்டு கதைச்சிற்றுத்தான் வாறன்!”
“ஓ! அப்ப அவள் இப்ப உனக்கு அவாவாகிற்றாவோ? அவள் மச்சான் உனக்காகத்தான் வந்திருக்கிறாள். இண்டைக்கு நானும் றோட்டுப்பக்கம் பாத“துக் கொண்டிருக்கிறதைப் பார்த்திற்று ஒளிஞ்சு நிண்டிருக்கிறாள். அது உனக்கும் தெரிஞ்சு என்னைக் காய்வெட்டி விட்டிட்டு நீ நிண்டு கதைச்சுப் போட்டு வந்திருக்கிறாய் என! அதுக்குள்ள லவ் லெட்டர் கூட கிடைச்சிற்றுது போல. அப்ப எப்ப மச்சான் கிச் பார்ட்டி?”
“காடு பத்தியெரியுதெண்டு கரடி காவெடியெடுத்து ஆடிச்சாம். விஷயம் தெரியாம சும்மா அலம்பிக் கொண்டிருக்கிற. இந்தக் கடிதம் உனக்குத்தான்!”
“விட்டா நல்லா தீத்துவேடா! சரி எனக்கு வந்த கடிதம் தானே கொண்டா! உடைச்சு வாசிப்பம்”
-எட்டித் தீபனின் சட்டைப்பையிலிருந்த கடிதத்தை எடுத்தேன்.
“அம்மாண கடிதத்தை இப்ப உடைச்சுப் பார்க்காத!”
“இது எனக்கு வந்த கடிதம் தானே! அப்ப நான் உடைச்சுப் பார்க்கலாம் தானே!”
-அவசரமாக கடிதத்தை உடைக்க வெளிக்கிட, தீபன் அதைப் பறிக்க எத்தனித்தான். முடியாமல் போகவே,
“உன்ர அக்கா மேல சத்தியமா, அதை உடைக்காத!”
”பேய்ப்..! என்ன பேய்க்காட்டுறியா? நீங்க லவ் பண்ணுறது. கண்ட சரக்குகளுக்கும் லவ் லெற்றர்ஸ் குடுக்கிறது வாங்கிறது. ஆனா கேட்டா ஏதோ நாங்கதான் சரக்குப் பார்த்துக்கொண்டு திரியிறமெண்டு கதைகட்டிறது. நீயும் உன்ர கடிதமும். இந்தா பிடி”
தீபன் மௌனமாயிருந்தான்.
***************
“ஏன் ஜேந்தன் சும்மா பொய் சொல்லுறீங்க?”
“நான் எப்ப பொய் சொன்னனான்?” -தலை தானாகவே கவிழ்ந்து கொண்டது.
“அது உங்களுக்கே தெரியும்தானே!.”
“என்ன நீங்க?”
“அப்ப என்ர கண்ணைப் பார்த்துச் சொல்லுங்க பார்ப்பம்?”
“என்ன சொல்ல வேணும்?”
“இப்ப நீங்க சொன்ன பொய்யை என்ர கண்ணைப்பார்த்துச் சொல்லுங்க பார்ப்பம்!”
“நான் என்ன பொய் சொன்னனான்?”
”ஏன்? நீங்க என்ன பொய் சொன்னீங்க எண்டு உங்களுக்கு மறந்து போய்ற்றுதா?”
**************
ஜனக மகாரஜாவின் அரசவை! வேதம் கற்றுணர்ந்த ஞானிகளும் பண்டிதர்களும் விவாதங்களில் களைத்துப்போக மைத்ரேயியும் யாக்ஞ வல்கியரும் தங்கள் விவாதத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
பார்வையாளர்கள் விஷயஞானமின்றி அவர்கள் இருவரினதும் விவாதங்களை வேடிக்கை பார்க்கலாயினர். ஒரு கட்டத்தில் மைத்ரேயியின் வினாவிற்கு விடையளிக்க முடியாமல் திண்டாடினான் யாக்ஞ வல்கியன். ஒரு பெண்ணிடம் தோற்பதா? ஆண் என்கின்ற ஆணவம் கண்ணை மறைக்க விவாதம் மறந்தது, விவாதம் நடக்கும் சபை மறந்தது. தன் நிலை மறந்தது.
“இதற்கு மேலும் நீ கேள்வி கேட்பாயானால் நின் சிரசு சுக்குநுாறாய் வெடித்துச் சிதறட்டும்.”
************
“நீங்க உங்கட லிமிற்றைத் தாண்டி ஓவராப் போறீங்க நதீஷா!. இதுக்கு மேல உங்களோட கதைக்க எனக்கு விருப்பமில்லை.”
இருவருக்குமிடையில் மௌனம் வந்து அமர்ந்து கொண்டது.
************
அன்று ஞாயிற்றுக்கிழமை. சனிக்கிழமை கொன் (அரட்டை) அடித்துவிட்டுப் படுக்கப் பிந்தியிருந்ததால் வழமை போன்று அன்றும் பிந்தியே எழும்பியிருந்தேன். என்றுமில்லாதவாறு அன்றைய வீரகேசரி
வாரமலர் எனது கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. நான் எழுந்ததைக் கண்டதும். அறைக்கதவை இறுகத் தாழிட்டுவிட்டு அருகில் வந்தமர்ந்தான் தீபன். வியப்பாயிருந்தது.
“என்னடா?“
“இவ்வளவு நாளும் உனக்கு சொல்லாம மறைச்ச ஒரு உண்மையை இப்ப சொல்ல வேணும்.”
“என்ன மச்சான் என்னெண்டு சொல்லன்”
“வெள்ளைவத்தை றொலெக்ஸ்ஸில ஒரு பெம்பிளைப்பிள்ளையைக் காணுறனான். அவா உனக்கு ஒரு கடிதம் தந்தவா என்று சொன்னன். ஞாபகமிருக்கா?”
“இப்ப ஏன் அதைத் திரும்பவும் தொடங்கிற?”
“இந்தா அந்தக் கடிதம். இப்ப அதை நீ வாசிக்கலாம்.”
பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30
No comments:
Post a Comment