Thursday, June 2, 2011

வேரென நீயிருந்தாய்...(30)


“Next weekend நீங்க free-ஆ இருப்பீங்களா?”

“ஏன் கேக்கிறீங்க?”

“சொல்லுங்களன் please...”

”free-ஆத் தான் இருப்பன் எண்டு நினைக்கிறன்”

“அப்ப! எங்கட வீட்டுக்கு வாறீங்களா?”

“என்னத்துக்கு?”

“ச்சும்மா தான்”

“ஏனெண்டு சொல்லுங்கவன்.”

“ஆ! பொம்பிளை பார்க்கிறதுக்குத்தான்... வரச்சொல்லிக் கேட்டா வாறதை விட்டிட்டு ஆயிரம் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீங்க?”

“அய்! ஒயாட்ட மொனவத பிசுத?” (ஏன்? உங்களுக்கு என்ன விசரா?)
-கடுப்பானேன்.

“ஹலோ ஹலோ! ஏன் இப்ப ரென்ஷனாகிறீங்க? எங்கட அப்பாட்ட உங்களைப் பற்றிச் சொன்னனான். அவர் உங்களோட கதைக்க வேணுமெண்டு சொன்னவர். அப்பாக்கு இப்ப 'நிவாடு' (விடுமுறை).அதுதான் வரச்சொல்லிக் கேட்டனான். பரவாயில்லை. நான் அவரை உங்கள அக்பரில வந்து கதைக்கச் சொல்லுறன்.”


அவளது தந்தை சிறிலங்கா காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றுவது ஞாபகத்திற்கு வந்தது. மனதிற்குள் பல்வேறு வகையான சிந்தனைகளும் ஒரே நேரத்தில் வந்து போயின. கூடவே பயமும் வந்து சேர்ந்து கொண்டது. என்ன இளவடா? வம்பை விலை கொடுத்து வாங்கீற்றேனோ என்கின்ற பச்சாதாபம் மேலிட்டது.


“என்னத்தைப் பற்றிக் கதைக்க வேணுமாம்?”
குரலில் ஏற்பட்ட நடுக்கத்தை மறைப்பது கடினமாகப்பட்டது.

“நான் சொல்ல மாட்டன். அது surprise!”

“அப்ப நானும் உங்கட அப்பாவை சந்திக்க மாட்டன்.”

“Please ஜேந்தன்! சத்தியமா உங்களுககு விருப்பமில்லாத ஒண்டும் அப்பா கதைக்க மாடடேர். என்னில உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? please இந்த saturday evening வீட்டுக்கு வாங்க. நீங்க மட்டும் தான் வரவேணும். வேறை ஒருத்தரையும் கூட்டிக்கொண்டு வராதீங்க.. please....."

என்ன செய்வதென்று புரியாமல் மனது தவித்தாலும், நதீஷா எந்தவிதமான தீங்கும் யாருக்கும் செய்யமாட்டாள் என்கின்ற ஆழ்மன நம்பிக்கையில் வருவதாய் ஒப்புக் கொண்டேன்.

***********

“எங்க மச்சான் வெளிக்கிடுற?”

தீபனிடம் என்னவென்று சொல்வது. தடுமாறினேன்.

“போய்ற்று வந்து சொல்லுறன்ரா. இப்ப என்னெட்ட ஒண்டும் கேக்காத.”

நதீஷாவின் வீட்டினை அடைகையில், என் வரவிற்காக அவளும் தந்தையும் காத்திருப்பது தெரிந்தது.

“எண்ட புத்தா அத்துலட்ட எண்டக்கோ” (வாங்க மகன் உள்ளுக்குள்ள வாங்கோ)

கண்களால் என்னை அளவெடுப்பது புரிந்தது. அவருக்கும் தமிழ் ஓரளவிற்கு தெரிந்திருந்தது. அவர் 83 இற்கு முன்னர் ஊர்காவற்றுறையிலும் அதற்கும் முன்னர் காங்கேசன்துறையிலும் பணியாற்றியிருந்ததாய்க் குறிப்பிட்டார்.

“உம்மட father-ஐப் பற்றி மகள் சொன்னது. அவற்றை details-களைத் தாரும். நான் என்னால முடிஞ்ச அளவுக்கு தேடிப்பார்க்கிறன்.”

அடிவயிற்றிலிருந்து ஏதோவொன்று உருண்டு வந்து நெஞ்சை அடைப்பதாய் உணர்ந்தேன். கண்கள் கலங்கியது. நதீஷாவைப் பார்த்தேன். புன்னகைத்தாள். அப்பளுக்கில்லாத வதனம். வரம் நல்கிவிட்டு நகும் தேவதையாய்த் தெரிந்தாள். எப்படி அவளுக்கு நன்றி சொல்வதென்று தெரியாமல் திணறினேன்.

“ஜேந்தன்! ஒயாட்ட மொணவத தே-த? நத்தங் கோபி-த? (உங்களுக்கு என்ன tea-ஆ அல்லது கோப்பியா?)

“மொணவத ஹரி கெனண்ட” (என்னெண்டாலும் கொண்டுவாங்கோ)

அவள் உள்ளே சென்றதும் அப்பாவின் details-ஐ தனது நாட்குறிப்பில் குறித்துக்கொண்டார் எங்களுக்கிடையிலான மன இறுக்கம் இப்போது தளரடவடைந்திருந்தது. பல்வேறு விடயங்களைப் பற்றியும் உரையாடினோம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தான ஏற்றுக்கொள்ளல்கள் அவரிடம் காணப்பட்டன. அவர் பெளத்த கொள்கைகளை பெரிதும் பின்பற்றுபவராகவே தெரிந்தார். புத்தரின் மறுபிறப்புக் கொள்கைகளைப் பெரிதும் நம்புபவராகக் காணப்பட்டார். சிறிலங்காப் படையில் இருந்துகொண்டு இப்பிடியொருவரா என வியப்பு மேலிட்டது. உரையாடல்களைத் தொடரமுடியாமல் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பினை அடுத்து அவர் வெளியே செல்லவேண்டியிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன்.

அம்மாவிடம் இதைப்பற்றிச் சொல்லலாமா? மனதிற்குள் பல்வேறு சிந்தனைகளும் உண்டாயிற்று. வேண்டாம்! ஒருவேளை இவராலும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், அல்லது அப்பா உயிருடன் இல்லை என்பது உறுதியாகிவிட்டால்? வேண்டாம். அம்மாவின் நம்பிக்கைகளைக் குலைக்க வேண்டாம். அவரின் பதிலைப் பெற்றதன் பின்னர் இதைப்பற்றி யோசிக்கலாம்.

*************

சிலவாரங்கள் கழிந்து விட்டிருந்தது. அதுவொரு புதன்கிழமை பெப்ரவரி 14, 2001. அதற்கும் சில வருடங்களுக்கு முன்னர்தான் சிறிலங்காவிலும் காதலர்தினம் அறிமுகமாகியிருந்தது. அன்றைய ஆய்வுகூடச் செயன்முறைகளைச் சீக்கிரமே இருவரும் முடித்துவிட்டிருந்தோம்.

“ஜேந்தன்! இண்டைக்கு என்ன விஷேசம் எண்டு தெரியுமா?”

“ம்ம்ம்.. valentines day”

“அப்ப celebrate பண்ணேல்லையா?”

“ம்.....அது லவ்வேர்ஸ்தான் celebrate பண்ணுறது”

“அவைக்கு எப்பிடித் தெரியும் தாங்க லவ்வேர்ஸ் தான் எண்டு? எல்லா லவ்வேர்ஸ்சும் என்ன I love you சொல்லீற்றா லவ் பண்ணுகினம்?” - சிரித்தாள்.

நெஞ்சு திக்கென்றது.

“அதை அவையிட்டத்தான் கேக்கவேணும்.”

“சரி அப்ப இப்ப சொல்லுங்கோ”

“what? what do you mean?"

கடைசியில் தீபன் சொன்னதுதான் சரியாக இருக்கப் போகின்றது போல. அவளை உற்றுப் பார்த்தேன். அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் திடீரெனக் காணாமல் போனதாய்ப் பட்டது.

“இல்ல....... what do you think about love?"

இனியும் கதையை வளர்த்து வீணான கற்பனைகளுக்கு இடங்கொடுப்பது தவறெனப் பட்டது.

“எனக்கு ஏற்கனவே ஒரு லவ்வர் கொழும்பில இருக்கிறா. எங்கட Training period-இல றொலெக்ஸ்ஸில சாப்பிட வந்து பழக்கமாகி பிறகு அப்பிடியே அது லவ் ஆகீற்றுது”.





Wednesday, June 1, 2011

வேரென நீயிருந்தாய்... (29)

எங்களது இறுதியாண்டு ஆரம்பாகி சில மாதங்கள் சென்று விட்டிருந்த நிலையில், அது நடந்து விட்டிருந்தது. இலக்கை முற்றாக நெருங்கமுடியாமல் தடுக்கப்பட்டவொரு தற்கொடைத் தாக்குதலில் நதீஷாவின் தந்தையும் கொல்லப்பட்டிருந்தார். அக்பரில் சக சிங்கள மாணவர்களின் முகங்களில் விரோதம் கொப்பளிப்பது தெரிந்தது.

“ஜெயந்தன் டேய்! செத்தவீட்டுக்குப் போகப்போறியா?” -வினவினான் தீபன்.

“அதான் யோசிக்கிறன். ஆனா, என்ன செய்யிறதெண்டுதான் தெரியேல்லை.”

“நாலு வருஷமா உன்ரை குறூப்மேற்றா இருக்கிறாளடா. சரியில்லை நீ போகத்தான் வேணும்.”

“என்னெண்டெடா அங்க போறது? அங்க நிக்கிற சிங்கள ஆக்கள் நான் தமிழெண்டிட்டு ஏதும் அலுப்பெடுக்கிறாங்களோ?”

“நீயேன் body எடுக்கும் மட்டும் நிக்கிற? body எடுத்தாப்பிறகுதான் ஏதும் பிரச்சனை தொடங்கிறதெண்டால் தொடங்குவாங்கள். அதுக்கு முதல் போய்ற்று வா”

“என்னெடா?”
செத்த வீட்டிற்குப் போனால் என்ன நடக்குமோ என்கின்ற பயமாயிருந்தாலும் என்னையுமறியாமல் அடிமனதில் அங்கு சென்றேதான் ஆகவேண்டும் என்கின்ற எண்ணம் வியாபித்துக் கொண்டிருந்தது.

“டேய்! நீ போய் அவளின்ர வீட்டில சாப்பிட்டிருக்கிறியடா. சரியில்ல நீ போகத்தான் வேணும்.”

“ஏன் நீயும் தானே சாப்பிட்டனி. அப்ப நீயும் வா.”

“அட பேயா! நான் ஒருக்காத்தான், அதுவும் first year-ல தான். அதெல்லாம் இப்ப அவள் மறந்து போயிருப்பாள்.”

“நான் மட்டும் என்ன கனதரமே போய்ச் சாப்பிட்டனான்?

“நீ கிட்டடியில அவளின்ரை கொப்பரைப் போய்ச் சந்திச்சுக் கதைச்சனிதானே! அப்ப சாப்பிடேல்லையோ?”

“அம்மாண! நல்லா வாயில வருகுது. ஆனா அதுக்குப் பிறகு தான் அவளோட பிசகியாச்சே”

“செத்தவீட்டுக்கு இதெல்லாம் பாக்கக்கூடாது. இப்ப நீ போகப் போறியோ இல்லையோ?”

“அப்ப நீயும் வா! ரெண்டுபேருமாப் போவம்.”

கட்டுகஸ்தோட்டையை அடைந்து அவளது வீட்டை அண்மிக்கையில், வீதியெங்கும் வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.

வீட்டினுள் நுழைந்தோம்!

எங்களைக் கண்டதும்,

“அணே! மகே தாத்தா....”

வீச்செடுத்துக் கதறத் தொடங்கியவள், சில வினாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டு அடங்கினாலும், இடையிடையே விம்மல்கள் வெடித்துக் கொண்டேயிருந்தன. தேற்றுவாரின்றித் தேம்பும் அவளைப் பார்க்க மனதிற்குள் ஏதோ இளகியது. தோளில் சாய்த்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது. கூடாது! இப்போதுதான் அவள் என்னை விட்டு விலகத் தொடங்கியிருக்கிறாள். அதுதான் இருவருக்கும் நல்லது. அதைக் குளப்பக்கூடாது. அவளிடம் ஆறுதலாக ஏதாவது சொல்லலாம் எனவெழுந்த எண்ணத்தையும் அடக்கிக் கொண்டேன்.

என்னையும், தன் தந்தையின் உடலையும் மாறிமாறிப் பார்த்து ஏதேதோ சொல்லத் துடிப்பதாய்ப் பட்டது. அவள் உணர்வுகள் எனக்குப் புரிந்து விட்டிருந்தது. அவள் என்ன சொல்லத் துடிக்கின்றாள் என்பதும் தெரிந்துவிட்டிருந்தது. அவள் அதைச் சொல்லிவிடக் கூடாது என்று மனத்திற்குள் பிரார்த்திக்கத் தொடங்கினேன்.

******

எங்களின் தொழில்சார் பயிற்சி முடிவடைந்து இறுதியாண்டு வகுப்புக்கள் ஆரம்பித்த முதலாவது கிழமை (வாரம்). ஆய்வுகூடத்தில் இணைந்திருந்தோம்.

“ஜேந்தன்! (அவள் இப்போதெல்லாம் ஜெயந்தனை ஜேந்தன் என்றே சற்றுச் சுருக்கி அழைக்கத் தொடங்கியிருந்தாள்) எப்பிடி training? மூண்டு மாசம்தான்! ஆனா எனக்கெண்டா கனகாலம் போல இருந்திச்சு.”

“ம்... நல்லாப் போச்சுது. உங்களுக்கு எப்பிடி?”

“சரியான boring....ஆ! உங்களிட்ட ஒண்டு சொல்ல வேணும்மெண்டு கனநாளா நினைச்சுக் கொண்டிருந்தனான். அது என்னெண்டு சொல்லுங்க பாப்பம்?”

“என்ன விளையாடுறீங்களா? நீங்க என்ன நினைச்சீங்கெண்டு எனக்கெப்பிடித் தெரியும்?”

“ம் good question, but it is related to you. just guess..."

'அடிச்சுச் சொல்லுறன் கம்பஸ் முடியிறதுக்குள்ள அவள் உன்னட்ட வந்து propose பண்ணுவாள்.' - மனதிற்குள் தீபன் வந்து போனான்



Tuesday, April 26, 2011

வேரென நீயிருந்தாய்...(28)

அது 2000ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டு. மூன்றாம் வருட நிறைவின் பின்னான தொழில்சார் பயிற்சிநெறி (Industrial Training) எங்களுக்கு ஆரம்பித்து விட்டிருந்தது. நானும் தீபனும் கொழும்பில் அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தில் எங்களுக்கான தொழில்சார் பயிற்சியினை மேற்கொண்டிருந்தோம். இப்போதும் இருவரும் ஒன்றாகவே ஒரே அறையில் தெஹிவளையில் தங்கியிருந்தோம். வார விடுமுறை நாட்களில் மதிய உணவிற்காக றொலெக்ஸ் அல்லது மயூரி-க்குச் செல்வது எங்களது வாடிக்கையாகிப் போனது.

“ஜேன் டேய்! அப்பிடியே சும்மா திரும்பிற மாதிரி பின்னால திரும்படா. உடனே திரும்பாத. மெதுவா”

வாயில் வைக்கக் கொண்டுபோன சிக்கன் லெக்பீஸை வைத்துவிட்டுத் திரும்ப,

“விடு மச்சான். miss-ஆகிற்றுது”

என்னடா நீ? திரும்பச் சொல்லுற. பிறகு miss-ஆகிற்றுது எண்டுற. என்ன நடக்குது?

“இல்லையடா! ஒரு சரக்கொண்டு உனக்கு எறிஞ்சு கொண்டிருந்தது. அதுதான் உனக்குத் தெரிஞ்ச ஆளா எண்டு பார்க்கத்தான். ப்ச்! அதுக்குள்ள அவள் நழுவீற்றாள்”

“நீ என்ன லூசாடா? எப்பப் பார் சரக்குகளின்ர கதைதான்”

“இல்ல மச்சான்! உண்மையிலயே நீ மச்சக்காரன் தான்ரா. அங்க 'பெரா'வில அவள் விடுறாளில்ல. இஞ்ச கொழும்புக்கு வந்து ரெண்டு மாசம்கூட ஆகேல்ல. அதுக்குள்ள இன்னொண்டு. குடுத்து வச்சனியடா”

“அம்மாண! பேய்ப்.. உனக்கு வேறைவேலையில்ல. சும்மா கதை கட்டிக்கொண்டு திரி.”

“இஞ்ச வா! நான் என்ன சும்மாவா கதை கட்டுறன். உள்ளதைத் தானே சொல்லுறன். சத்தியமாடா. நான் நாலைஞ்சு தரம் நோட் பண்ணீற்றன். நாங்க சாப்பிட வாற நேரத்தில இவளும் வந்து உனக்கு எறிஞ்சு கொண்டிருக்கிறாள். நம்பாட்டி நாளைக்கு நீ வந்து இந்தப் பக்கமா இருந்து சாப்பிடு. அப்ப தெரியும் அவள் ஆரப் பார்க்க வாறாள் எண்டு.”

“வேறை வேலையில்ல. ஆரு கண்டது? அவள் உன்னைப் பார்க்கத்தான் வாறாளோ?”

“பேய்ப்... சொன்னா நம்படாப்பா. இப்பிடித்தான் அவள் நதீஷாவையும் சொல்லேக்க நீ நம்பேல்லத்தானே.”

“இஞ்ச வா! இப்ப என்ன கதைக்கிறாய் நீ?”

“முதல் நான் சொல்லேக்க நீ அவள் சும்மா friendly-யாத் தானே பழகிறாள் எண்டு சொன்னீ.”

“ஓ! இப்பையும் அவள் friendly-யாத்தானே பழகிறாள். அவள் என்ன, என்னை லவ் பண்ணுறன் எண்டா சொன்னவள்?”

“அப்ப ஏன் நீ அவளை காய்வெட்ட ஐடியா கேட்டனீ?”

“எனக்கு அவள் கூட close ஆப் பழகிறது uncomfortable-ஆ இருந்துது. அதாலதான் கேட்டன்.”

“அடிச்சுச் சொல்லுறன். இருந்துபார்! கம்பஸ் முடியிறதுக்குள்ள உன்னட்ட வந்து அவள் propose பண்ணுவாள்.”

“எங்க பார்ப்பம். நான் சொல்லுறன் அப்பிடியெல்லாம் ஒண்டும் நடக்காது.”

“எனக்கு மட்டும் என்ன, அப்பிடி நடக்க வேணுமெண்டா விருப்பம்? ஆனா உன்ர குடும்ப நிலை தெரியும்தானே. அதால எதுக்கும் நீ alert-ஆ இருக்கிறது நல்லது.”

றொலெக்ஸை விட்டுக் கிளம்பி அறைக்கு வந்து சேர்ந்த பின்னும் தீபனின் வார்த்தைகள் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

*** *** ***

“நான் serious-ஆத் தான் கேட்கிற. உங்கட life style-ஐப் பற்றிச் சொல்லுங்க”

“அது ஏன் உங்களுக்கு?”

“சும்மா ஒரு GK-க்குத்தான். இப்பொல்லாம் சிங்கள ஆக்களுக்குள்ள arranged marriage நடக்கிறது நல்லாக் குறைஞ்சு போச்சு.”

“தமிழ் ஆக்கள் அப்பிடியில்ல. அனேகமா எல்லாமே arranged marriage தான்”

“அப்ப நீங்களும் arranged marriage தானா?”

“ஏன் கேட்கிறீங்க?”

“கேட்ட கேள்விக்கு answer பண்ணுங்களன் please"

"கல்யாணத்தைப் பற்றியெல்லாம் நான் ஒண்டும் யோசிக்கேல்லை. அப்பிடி நடந்தாலும் அது arranged marriage -ஆத்தான் இருக்கும்.”

“ம்ம்ம்....ஒயாத் typical தெமிழ கட்டி தமாய்” (நீங்களும் typical தமிழ் ஆள் தான்).

”ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க?”

“தமிழ் girls சொல்லுறவை, dowry வாங்கிறதுக்காகத்தான் தமிழ் ஆக்கள் love marriage பண்ணாம arranged marriage பண்ணுறவை எண்டு. நான் நினைச்சன் நீங்க different-ஆ இருப்பீங்க எண்டு. ஆனா இப்ப விளங்குது நீங்களும் dowry வாங்கிறதுக்காகத்தானே லவ் பண்ணாம இருக்கிறீங்க?”

“ஹலோ மேடம்! arranged marriage-இலயும் சீதனம் வாங்காமக் கட்டலாம்.”

“அப்ப நீங்க சீதனம் வாங்க மாட்டீங்களா?”

கடவுளே! இவளை என்ன செய்யுறது? சுத்திச்சுத்தி அங்கதான் வரப்போறாளோ? மனது வெறுத்தது.

“ஏன் கேட்கிறீங்க,? எனக்கு என்னத்துக்கு சீதனம் தேவை?”

“வாங்குவீங்களா? மாட்டீங்களா?”

“அதையேன் உங்களுக்கு?”

“இல்லை. சீதனம் வாங்குவீங்களெண்டால் உங்களுக்கு நானே ஒரு கல்யாணத்தை arrange பண்ணி broker காசு வாங்கலாம் எண்டுதான்”

“உங்களுக்கென்ன நட்டுக் கழண்டிட்டுதா?” எழுந்த கடுப்பை அடக்கமுடியவில்லை.”

சிரித்தாள்.

“சும்மா joke-க்குத்தான். ஏன் serious-ஆ எடுக்கிறீங்க?”

“உங்களுக்கு வேணுமெண்டா எல்லாம் joke-ஆ இருக்கலாம்.”

“ஏன் திரும்பவும் ரென்சனாகிறீங்க? நீங்க சிரிச்சா எவ்வளவு வடிவா இருக்கிறீங்க தெரியுமா?”

“நாடு கெட்ட கேட்டுக்கு நரிக்கு உழுந்துவடை கேட்டிச்சாம்.”

“உங்களுக்கு உண்மையா என்ன பிரச்சனை? ஏன் எப்பவுமே உம்மெண்டு கொண்டு இருக்கிறீங்க? எப்பிடிச் சிரிக்கிதெண்டு உங்கட அம்மா சொல்லித்தரேல்லையா?”

“mind your words. இப்ப எதுக்குத் தேவையில்லாம இதுக்குள்ள என்ரை அம்மாவை இழுக்கிறீங்க?”

எழுந்த கோபத்தை அடக்க முடியாமல் வெளிக்காட்டினேன்

“Sorry sorry! நான் சும்மா joke-ஆத் தான் கேட்டனான். please cool down. I'm really sorry Jeyanthan. உங்களைச் சிரிக்க செய்யுறதுக்காகத்தான் நான் அப்பிடிக் கேட்டது. please Jeyanthan, please forgive me"

அவள் கெஞ்சுவதைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. அவள் முகத்தில் சோகம் கவிந்து கொண்டது அப்பட்டமாய்த் தெரிந்தது.

“உங்களுக்கு எங்கட அம்மாவைப் பற்றித் தெரியாது. அதாலதான் இப்பிடிக் கதைக்கிறீங்கள்”

அமைதியாயிருந்தாள்.

“எங்கட தமிழ்ப் பெம்பிளைகளுக்கு தாலி எவ்வளவு முக்கியமெண்டு உங்களுக்குத் தெரியுமா? புருஷன் செத்து தாலி இழந்த விதவைகளாயிருக்கிறவையின்ர நிலைமை தெரியுமா? அதைவிடக் கொடுமை தாலியை வைச்சுக்கொண்டு அதைப் போடுறதா விடுறதா எண்டு தவிக்கிறது. உங்கட ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு போன அப்பா உயிரோட இருக்கிறேரா இல்லையா எண்டு தெரியாம, தாலியைக் கழட்டுறதா போட்டுக் கொண்டிருக்கிறதா எண்டுற குழப்பம். குங்குமப் பொட்டு வைக்கிறதா விடுறதா எண்டுற சிக்கல். அதுக்குள்ள ஊர்ச்சனத்தின்ர நக்கல் ஒரு பக்கம். குங்குமம் வைச்சுக் கொண்டு போனா, அவர் உயிரோடை இருக்கிறேர் எண்டு ஆரும் சொன்னவையோ, ஆமிக்காரர் பிடிச்சுக்கொண்டு போன எல்லாரையும் சாக்காட்டிப் போட்டாங்கள். அந்த மனிசனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளையாவது செய்யுங்களன் எண்டுறவையும். குங்குமம் வைக்காமப் போனா, ஆமிக்காரர் பிடிச்சுக் கொண்டு போன ஆக்களில கனபேரை இன்னும் கொழும்பில அறிவிக்காம வைச்சிருக்கிறாங்களாம். பிறகேன் நீங்க இப்பிடித் திரியுறீங்க எண்டுறவையும். இதெல்லாம் சொல்லி விளங்காது. ஆள் செத்திற்றுது எண்டு தெரிஞ்சா கொஞ்ச நாளைக்கு அழுது போட்டு மனசைத் தேற்றிக் கொள்ளலாம். ஆனா எங்கட நிலைமை? இப்பவும், காணாமப் போன அப்பாவை தேடித்தரச்சொல்லி அம்மா அலைஞ்சு கொண்டுதான் இருக்கிறா. அதெல்லாம் அனுபவிச்சாத்தான் அந்த வலி விளங்கும்.”

இதுவரைகாலமும் அடக்கிவைத்திருந்த ஆத்திரத்தில் மனம் குமுறி அடங்கியது.

நதீஷா வெலவெலத்துப் போயிருந்தாள்.


Tuesday, April 19, 2011

வேரென நீயிருந்தாய்...(27)

எங்களுக்கு பொறியியற் கற்கை நெறியின் மூன்றாம் கல்வியாண்டு தொடங்கிவிட்டிருந்தது. மூன்றாம் வருடத்திலும் எல்லா ஆய்வுகூடங்களிலும் அவள் எனது group mate ஆக வந்துவிடுவாளோ என்று முன்னர் பயந்திருந்ததற்கு மாறாக surveying இல் மட்டுமே அவள் எனது group mate ஆக வந்திருப்பது மனதுக்கு நிம்மதியைத் தந்திருந்தது.

அது 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் இரண்டாம் நாள். அன்று மதியளவில் அந்தத் துக்கச் சேதியைக் கேள்விப்பட்டபோது நம்பமுடியவில்லை. தினமுரசு வாரப் பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் காலை 10.30 மணியளவில் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். அப்போதைய காலகட்டத்தில் தினமுரசு பத்திரிகை ஒன்றே எந்தத்தரப்பினருக்கும் பயப்படாமல் உண்மைச் செய்திகளை வெளியிட்டு வந்து கொண்டிருந்தது. அப்போதெல்லாம் தினமுரசு பத்திரிகைக்கு பெரும் கிராக்கி. கடைகளுக்கு வந்த ஒருசில மணித்துளிகளிலேயே அனைத்துப் பத்திரிகைகளும் விற்றுத்தீர்ந்து விடும். சிலவேளைகளில் விரிவுரைகளுக்குச் செல்லாமல்கூட தினமுரசு பத்திரிகை வாங்குவதற்குச் செல்வதுண்டு. அடிபாடு நடக்கும் காலப்பகுதிகளில் பேராதனைச் சந்தியில் தினமுரசு வாங்குவது கடினம் என்று கெலிஓயா-விற்குச் சென்று அந்தப் பத்திரிகையை வாங்குவதுண்டு. அத்தனைதூரத்திற்கு வாசகர்களைத் தன்பக்கம் கவர்ந்து வைத்திருந்த தினமுரசின் ஆணிவேரான அதன் ஆசிரியர் அற்புதன் அவர்களின் இழப்பு எங்கள் எல்லோருக்குமே பெரும் கவலையைத் தந்தது. அந்த மரணத்திற்குச் சரியாக இருமாதங்களுக்கு முன்னர் 02 செப்ரெம்பர் 1999 அன்று, புளொட்டின் இராணுவப் பொறுப்பாளராகவிருந்த மாணிக்கதாசன் அவர்கள் வவுனியாவில் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டிருந்தார். அப்போது வவுனியா புளொட்டின் கோட்டையாகவிருந்தது. அந்தக்குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குச் சில நாட்களுக்கு முன்பே அவர் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் புலிகள் அழிந்து விட்டார்கள். அடுத்த கட்டப் போராட்டத்தைத் தாங்களே தலைமையேற்று நடாத்தப்போவதாகத் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டிருந்தார். அதற்கும் நான்கு மாதங்களுக்கு முன்னர் 1999 மே 29ஆந் திகதி அன்று ராசிக்குழுவின் தலைவர் அவர்கள் மட்டக்களப்பில் வைத்துக் கொல்லப்பட்டிருந்தார். இந்த இருவரினதும் கொல்லப்பட்ட சேதிகளைத் தொகுத்துத் தந்திருந்த ஈ.பி.டி.பி. யைச் சேர்ந்த அற்புதன் அவர்கள் இப்போது கொல்லப்பட்டிருக்கிறார். அவரின் மரணத்தையடுத்து வந்த தினமுரசு, அற்புதன் உள்வீட்டுச்சதிக்குப் பலியாகியிருக்கலாம் என்கின்ற சந்தேகத்தை எழுப்பிவிட்டிருந்தது. அதன்பின் தினமுரசு வாரமலரும் பொலிவிழந்து கவனிப்பார் யாருமற்றுப் போனது.

எப்போதுமில்லாதவாறு இப்போதுதான் அற்புதனின் தாக்கம் அதிமாக உணரப்பட்டது. அவரின் மரணத்திற்கு முதல்நாளான 01 நவம்பர் 199 அன்று ஓயாத அலைகள் - 3 ஆரம்பமாகி விட்டிருந்தது. அக்காவைப்பற்றி எந்தவொரு சேதியும் அறியக் கிடைக்கவில்லை. அதனால் அந்த வருடத்திற்கான வருடாந்தச் சுற்றுலாவில் கலந்து கொள்வதை நான் தவிர்த்திருந்தேன். சுற்றுலா முடிந்து வந்த முதலாவது Surveying இல்,

“ஏன் நீங்க batch trip இற்கு வந்து இல்ல?” -வினவினாள் நதீஷா.

“சும்மா தான்.”

“இல்ல நீங்க பொய் சொல்லுறது.”

சிரித்தேன்.

“என்னால தானே நீங்க வந்தது இல்ல?”

“ஏன்? நீங்க என்ன செய்தனீங்க?”

“அப்ப ஏன் நீங்க வந்து இல்ல?. நீங்க இப்ப என்னோட சரியா கதைக்கிறது இல்லத்தானே?”

“ஏன் அப்பிடிச் சொல்லுறீங்க? எனக்கு trip-க்கு வரவேணும் போல இருக்கேல்ல அதால தான் வரேல்ல.”

“அப்ப ஏன் நீங்க வந்து என்னோட இப்ப நிறையக் கதைக்கிறேல்ல? முந்தி நீங்க கதைக்கிறது தானே?”

“என்ன நீங்க? முந்தி எல்லா lab-இலயும் நாங்க ரெண்டுபேரும் group mates ஆ இருந்ததால கதைச்சம். இப்ப surveying lab இல மட்டும்தானே ரெண்டுபேரும் group mate. அப்ப முந்திமாதிரிக் கதைக்கேலாது தானே”

அவள் முகம் விகசித்தது.

“அப்ப உங்களுக்கு நானில கோபமில்லத் தானே? என்னோட இனி கதைப்பீங்க தானே?” - புன்னகையுடன் கேட்டாள்.

கள்ளங்கபடமற்ற குழந்தைத்தனமான முகத்துடன் கேட்கையில் எப்படி மறுக்க முடியும்? சிரித்தேன்.

பின்வந்த நாட்களில் அடிக்கடி என்னுடன் வந்து கதைக்கத் தொடங்கினாள். அவளது கதைகள் நட்பைத் தாண்டியும் செல்வதாய்ப் பட்டது. தனது குடும்பக் கதைகளைத் தானாகவே பகிர்ந்து கொண்டாள். தனது தந்தையினதும் தாயினதும் காதலைப்பற்றி, அண்ணனினதும் அண்ணியினதும் காதலைப்பற்றி, தாயின் மரணத்தைப்பற்றி, தான் சந்தித்த சந்தோஷ தருணங்கள், சோகச் சம்பவங்கள் எல்லாவற்றையுமே விருப்புடன் பகிர்ந்து கொண்டாள். அவள் சொல்வதைக்காட்டிலும் அந்தத் தருணங்களில் அவள் வெளிப்படுத்தும் முகபாவங்களும், கண்ணசைவுகளும் ஒரு குழந்தைப்பிள்ளையின் குதூகலிப்பை நினைவூட்டின. திடீரென ஒருநாள்,

“நீங்க ஏன் உங்களைப்பற்றி ஒண்டும் சொல்லுற இல்ல?”

“என்னைப் பற்றிச் சொல்லுறதுக்கு விஷேசமா ஒண்டும் இல்ல.”

“ம்ம்ம்ம்........... உங்கட அப்பாவும் அம்மாவும் லவ் பண்ணியா marry பண்ணினவங்க?”

நெஞ்சு திக்கென்றது. இவள் எங்கு வருகிறாள்? உள்ளம் உஷாரானது.

“இல்லை. அவையின்ர arranged marriage தான்”

“அப்ப உங்கட சொந்தக்காரர் ஒருத்தரும் love பண்ணி marry பண்ண இல்லையா?”

“இல்லை. என்ர சொந்தக்காரர் எல்லாருக்கும் arranged marriage தான்” சற்று கறாராகவே கூறினேன்.

“லவ் marriage ஐப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?“

சுத்திச்சுத்தி அங்கதான் வரப்போறாளோ? சந்தேகம் அதிகமாகியது.
“இதெல்லாம் இப்ப எதுக்குக் கேக்கிறீங்க?”

“சும்மாதான்”

“எனக்கு இந்த topic கதைக்கிறதில interest இல்ல”

“ஏன்?”

“ஏனெண்டெல்லாம் தெரியாது. எனக்குப் பிடிக்காது. அவ்வளவுதான்.” குரலில் கடுமைகாட்டினேன்

“ஏன் நீங்க கோபப்படுறீங்க? நீங்க ஆரையும் லவ் பண்ணினீங்களா?”

பேய்ப்.... இதுவே வேறையாரும் பெடியளாயிருந்திருந்தால் வாயில வந்திருக்கும்.

“உங்களைப் போல இல்ல எங்கட வாழ்க்கை. உங்களுக்கு எங்கட வாழ்க்கை எப்பிடியெண்டும் தெரியாது. அதாலதான் லவ்கிவ்-வெண்டு கதைக்கிறியள்”


“சரி அப்ப உங்கட life-style பற்றிச் சொல்லுங்களன்”

“என்ன விளையாடுறீங்களா?” கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது


Saturday, April 16, 2011

வேரென நீயிருந்தாய்...(26)

1987ஆம் ஆண்டு பிறந்து விட்டிருந்தது. பாடசாவைக் கல்வித்திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டுவரப் பட்டிருந்தன. அதுவரை ஆறாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கும் பெரிய பாடசாலைகள் இப்போது ஐந்தாம் வகுப்பிற்குரிய மாணவர்களையும் உள்வாங்கத் தொடங்கியிருந்தனர். வகுப்புகள் என அழைக்கப்பட்டவை ஆண்டுகள் என அழைக்கப்படலாயிற்று. ஐந்தாம் வகுப்பு ஆறாம் ஆண்டாயிற்று. O/L சோதனை எடுக்கும் பத்தாம் வகுப்பு பதினொராம் ஆண்டென மாற்றியழைக்கப்பட்டது. பொதுவாக ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வைத்தே பெரிய பள்ளிக்கூடங்களுக்கான அனுமதிகள் தீர்மானிக்கப்படும். இப்போது நிலைமை மாற்றமடைந்ததால் பெரிய பாடசாலைகள் எல்லாமே ஆறாம் ஆண்டிற்கான நுழைவுத் தேர்வை நடாத்தி மாணவர்களுக்கான அனுமதியை வழங்கிக்கொண்டிருந்தன.

ஜனவரி 1987 இல் சரஸ்வதி வித்தியாலயத்தில் இருந்து யா/வேலணை சேர் வைத்தியலிங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம் என்கின்ற மிக நீண்ட பெயரால் அழைக்கப்படுகின்ற வேலணை மத்திய கல்லூரிக்கு மாறியிருந்தேன். இடைப்பட்ட ஒரு நாள் மாலைநேரம் உலங்கு வானூர்தி ஒன்றும், பொம்மர்கள் என்று அழைக்கப்படுகின்ற சியாமாசெட்டி ரக குண்டு வீச்சு விமானங்கள் இரண்டும் வந்து கா.பொ.இரத்தினம் அவர்கள் வீட்டின் மேல் தாக்குதலை நடாத்தி விட்டுச் சென்றிருந்தன. அதுதான் தீவகத்தில் நடாத்தப்பட்ட இரண்டாவது வான் தாக்குதல் (மதலாவது வான் தாக்குதல் 1986 ஆம் ஆண்டில் சுருவில் பகுதியில் நடாத்தப் பட்டிருந்தது). அந்தத் தாக்குதலில் இயக்கத்தால் வளர்க்கப்பட்ட இரண்டு குதிரைகள் கொல்லப்பட்டிருந்தன. அப்போதைய நாட்களில் குண்டு வீச்சு விமானிகள் தங்களுக்குள் உரையாடிக் கொள்வதை வானொலிகளின் பண்பலை (FM) அலைவரிசைகளில் எங்களால் செவிமடுக்கக் கூடியதாகவிருந்தது. யாழ்ப்பாணத்திற்கும் வேலணைக்குமான பயணத் தொடர்புகள் அராலிக் கடலினூடாகவும் தம்பாட்டிக் கடலினுாடகவுமே நடைபெற்றுக் கொண்டிருந்தன.

1987 மே மாத இறுதியளவில் யாழ்குடாநாட்டை கைப்பற்றும் வகையில் 'ஒப்பரேஷன் லிபரேஷன்' படை நடவடிக்கையினை பிரிகேடியர் டென்சில் கொப்பேகடுவ தலைமையிலான சிறிலங்காப் படைகள் மூர்க்கமாய் ஆரம்பித்திருந்தன. பலாலி படைத்தளத்திலிருந்து புறப்பட்ட படைகள் விமான மற்றும் கடற்படைத் தாக்குதல்களின் உதவியுடன் தொண்டைமானாறுப் பகுதியூடாக முன்னேறி வல்வெட்டித்துறையைக் கைப்பற்றி மேலும் முன்னேறி நெல்லியடி வரை வந்திருந்தனர். வடமராட்சி மக்கள் பெருமளவிலான உயிர் உடமை இழப்புகளுடன் யாழ் நகரின் ஏனைய இடங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். மொத்தக் குடாநாட்டிற்குமான ஆனையிறவினுாடான உணவுப் பொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் அகதிகளாகி வள்ளங்களினூடாக பாக்கு நீரிணையைக் கடந்து இந்தியாவில் தஞ்சமடையத் தொடங்கினர்.

ஈழத் தமிழ் மக்கள் தங்களுடைய மீட்பர்களாக இந்தியாவை நம்பிக் கொண்டிருந்தனர். இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு பங்களாதேஷிற்கு உதவியது போன்று இலங்கையிலும் தமிழீழம் மலர்வதற்கு இந்தியா தன் படைகளை அனுப்பி உதவி செய்யும் என்கின்ற அதீத நம்பிக்கை ஈழத்தமிழர்களிடையே நிலவி வந்தது. தூரதிர்ஷ்ட வசமாக 1984 ஒக்ரோபர் 31 இல் இந்திரா காந்தி அம்மையார் கொல்லப்பட தமிழர்களிடையே அந்த நம்பிக்கை சற்றுக் குறைந்து விட்டிருந்தாலும், எந்தக் காலத்திலும் இந்தியா தங்களைக் கைவிடாது என்கின்ற அசையா நம்பிக்கை அவர்களிடையே இருந்தது. இப்போதும் இந்தியா தங்கள் உதவிக்கு வரும் என்று காத்திருக்கத் தொடங்கினர். ஆனாலும் ராஜீவ் காந்தி அவர்கள் தலைமையிலான இந்திய நடுவண் அரசு, இந்திராகாந்தி அம்மையாரைப் போன்று தமிழர்கள் மீது அதிக கரிசனை கொண்டிருந்ததாகத் தெரியவில்லையாயினும், யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களுக்காய்த் தவிக்கும் மக்களுக்கான உணவுப்பண்டங்களை கப்பல் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மக்கள் எல்லோரும் இந்தி உணவுக் கப்பல்களின் வருகையை ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்திருக்கத் தொடங்கினர். கப்பல் புறப்பட்டு விட்டதாக சேதிவர பாடசாலைகளில் எல்லாம் எங்களிடையே மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது. ஆயினும் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியும் தங்கள் இறையாண்மைக் கடலுக்குள் இந்தியக் கப்பல்கள் நுழைவதை தமது கடற்படை அனுமாதிக்காது என்று அறிவித்திருந்ததால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போர் மூண்டு பாகிஸ்தான் போன்று இலங்கையும் இரண்டாகப் பிரிந்து விடும் என்று அரசியல் அறிவில்லாத பெரும்மாலான மக்கள் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கினர்.

ஆயினும் இந்தியாவின் உண்மை முகத்தை ஏற்கனவே அறிந்திருந்த தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) 1982 ஆம் ஆண்டளவிலேயே இது பற்றிய எச்சரிக்கையினை 'வங்கம் தந்த பாடம்' - நூலினூடாக வெளிப்படுத்தியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் போலவே புளொட்டின் தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களும் இந்தியா பற்றிய சரியான தீர்க்கதரிசனத்தினை வெளிப்படுத்தியிருந்தார். புளொட் தனது படைபலத் தேவைகளுக்கு இந்தியாவை மட்டுமே நம்பியிராமல் முதன்முதலாக பிறநாடுகளில் போராயுதங்களைக் கொள்வனவு செய்து அவற்றைக் கப்பல் மூலமாக இலங்கைக்கு கடத்தி வரும் வழியில் அந்த ஆயுதக்கப்பலை இந்தியா இடைமறித்துத் தன்வசப்படுத்தியிருந்தது. இந்திய ஆளும் வர்க்கம் எப்போதுமே அயல்நாடுகளின் பிரச்சனையைத் தனது சுயலாபத்திற்காகவே பயன்படுத்தி வந்திருக்கிறது. இது பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்களிடையே ஏற்படுத்துவதற்காக 1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் யாழ் பல்கலைக் கழகத்தினரால் 'மாயமான்' என்கின்ற வீதி நாடகமும் அரங்கற்றப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆனாலும் தமிழ் மக்களிடம் இந்திய நடுவண் அரசு பற்றிய மாயையினைக் களையக் கூடியதாக இருக்கவில்லை. அந்தளவிற்கு இந்தியா எங்களின் மீட்பர் என்கின்ற மயக்கம் தமிழர்களிடையே புரையோடிப்போய்க் கிடந்தது.

1987 ஜூன் 4ம் திகதி மதியம் எங்கள் நம்பிக்கைகளைப் பொய்யாக்குமாற் போல் அந்த சேதி வந்தது. இந்திய உணவுக்கப்பல்கள், இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு இலங்கைக் கடற்படையினால் அவை திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. மக்கள் மனங்களில் ஏக்கங்கள் குடிகொண்டன. அன்றைய மாலை யாழ்மக்கள் வித்தியாசமான இரைச்சல்களுடன் அதற்குமுன் என்றுமே பார்த்திராத போர்விமானங்கள் யாழ்வான்பரப்பினுள் சீறிப் பாய்ந்து தாழப்பறந்து வந்தன. கிலிகொண்டு மக்கள் பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொண்டனர். ஆயினும் எந்தவொரு குண்டு வெடிப்பு ஓசையையும் கேட்க முடியவில்லை. தூரத்தில் இருந்தவர்கள் அந்த விமானங்களிலிருந்து பொதிகள் வீசப்படுவதை அவதானித்திருந்தனர். விமானங்கள் யாழ் வான்பரப்பை விட்டு வெளியேறியதும் மக்கள் விமானங்கள் பொதிகள் வீசிய இடங்களைச் சென்று பார்த்தபோது அவையெல்லாம் உணவுப் பொதிகளாய்க் காணப்பட்டன. அன்றைய இரவு இந்தியச் செய்தி, அது இந்தியாவின் மனிதாபிமான நடவடிக்கையான 'ஒப்பரேஷன் பூமாலை' என்பதாக அறிவித்தது.

சண்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்களிடம் விடுதலைப் புலிகளின் படைபலம் பற்றியும் ஏனைய இயக்கங்களை தடை செய்தமை பற்றிய விமர்சனங்கள் எழலாயிற்று. அவர்களால்தான் தமிழர் படைபலம் குன்றிப் போய் இந்நிலை ஏற்பட்டதாகக் கதைக்கத் தலைப்பட்டார்கள். மாதம் ஒன்று ஓடி மறைந்து ஜூலை ஐந்தாம் தேதியும் வந்தது. அது ஈழப் போராட்ட வரலாற்றில் மிகமுக்கிமான நாளாகவும் அமைந்துவிட்டிருந்தது.

முதன்முதலாக தற்கொடைப் போராளி கப்டன் மில்லர் ஈழவிடுதலைப் போரில் புதியவொரு அத்தியாயத்தைத் தொடக்கி வைக்க மக்கள் மனதில் விடுதலைப் போர் வெற்றிபெறும் என்கின்ற நம்பிக்கை மறுபடியும் உண்டாயிற்று. அன்றைய தற்கொடைத் தாக்குதலில் நெல்லியடியில் அமைந்திருந்த இராணுவமுகாம் அழிக்கப்பட்டு பெருமளவிலான சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். பின் வந்த நாட்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிராபகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்காக வருமாறு இந்தியா அழைப்பு விடுத்தது. 24 ஜூலை 1987 இல் பிரபாகரன் அவர்கள் இந்தியா பயணமாக மக்கள் விடுதலை கிட்டிவிட்டதான மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். இந்தியாவிற்கு பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு ஏறத்தாழ கைதியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், 1987 ஜூலை 29 இல், சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், அப்போதைய இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அதைத் தொடர்ந்து இந்தியப் படையினர், அமைதி காக்கும் படையினராக வட கிழக்கு மாகாணங்களில் வந்திறங்கினர். பின் இந்தியாவின் தீர்வுத்திட்டம் திணிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் திரும்பிய பிரபாகரன் அவர்கள் 04 ஓகஸ்ற் 1987 இல் சுதுமலைப் பிரகடனத்தை வெளியிட்டு, இந்தியாவிடம் ஆயுதக் கையளிப்பதற்கு இணங்குவதாக அறிவித்தார்.

போர் நின்றுவிட்ட சூழ்நிலையில் எங்கள் காவலர்களாக இந்திய அமைதி காக்கும் படையினர் உலாவர, அவர்கள் செல்லும் வழிகள் எங்கணும் தமிழ் மக்கள் ஆராத்தி எடுத்து வரவேற்று தங்கள் பிரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிக்காட்டினர்.




Wednesday, April 13, 2011

வேரென நீயிருந்தாய்...(25)

கப்பல் பயணத்தின் அலுப்புத்தீர்வதற்கு இரு நாட்கள் எடுத்திருந்தது. மறுநாள் மாலை பிளேன்ரீ-யுடன் வறுத்த கச்சான் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம்மா அருகில் வந்து அமர்ந்தார். சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு,

“ஜேன்! இந்தா! இந்தக்கடிதத்தை வாசி!

அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“அக்காட்ட இருந்து வந்தது. நீ ஆறுதலா இருக்கேக்க வாசிக்கட்டும் எண்டுதான் இவ்வளவுநாளும் தராம இப்பதாறன்.

எங்களை விட்டுப் பிரிந்ததன் பின்னர் அக்காவிடமிருந்து வந்த முதல் கடிதம் அது. ஆவலுடன் வாசிக்கலானேன். எப்படியோ அவள் என்னைப்பற்றி அறிந்து விட்டிருக்கிறாள். தன்னுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவே அந்தக்கடிதம். காடுகளில் நாவற்பழங்களைக் காணும் நேரங்களில் என் நினைவுகள் தன்னுள் துளிர்த்தெழுவதை அவளால் தடுக்க முடியாமலிருக்கிறது.

அது இந்திய படையினரின் ஆக்கிரமிப்புக்கு சிலவருடங்கள் முற்பட்ட சரஸ்வதிபூசைக் காலம். வங்களாவடியில் இருக்கும் சரஸ்வதி வித்தியாலயத்திலேயே அக்காவும் நானும் கல்வி கற்றுக் கொண்டிருந்தோம். சரஸ்வதி பூசைக்காலங்களில்தான் நாவற்பழங்களும் மரங்களில் காய்த்துக் குலுங்கும். நாவற்பழம் கிரந்தி என்று சொல்லி வீட்டில் சாப்பிட விடமாட்டார்கள். ஆனால் அக்காவிற்கோ நாவற்பழங்களின் மேல் அப்படியொரு கொள்ளைப்பிரியம். அதிலும் ஔவைப்பாட்டியின் சுட்டபழம் சுடாதபழம் கதையைப் பாடப்புத்தகத்தில் படித்த பின்னர் அவளுக்கு சுட்டபழம் வேணும், ஆனா அது சுடாம இருக்க வேணும். அதுக்கு அவளுக்கு நான் வேணும்.

நாங்கள் பாடசாலை செல்லும் வழியில்தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ. இரத்தினம் அவர்களின் வீடு இருக்கிறது. அந்த வீட்டிற்குப் பின்னால் உள்ள காணியொன்றில் பெரிய நாவல் மரமொன்று இருந்தது. அதன் பழங்கள் திராட்சைப்பழ அளவில் இருக்கும். அதன் சுவையும் தனித்துவமானது. பாடசாலை விட்டு அவ்விடத்திற்கு வந்ததும், அக்கா என்னை மரத்தில் ஏறி தனக்கு நல்ல பழுத்த பழங்களாகப் பறித்துத் தரும்படி கெஞ்சுவாள். அவளுக்கு நிலத்தில் விழுந்த பழங்களை உண்பதற்குப் பிடிக்காது. ஒருமுறை இப்படித்தான் ஏறிக் கொண்டிருக்கும் பொழுது தவறி விழுந்து, நல்ல வேளையாக காலெல்லாம் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பித்துக் கொண்டேன். பொதுவாக, நாவல் மரங்களிலிருந்து விழும் ஆண்பிள்ளைகள் தப்பித்துக் கொள்வது அரிது என்று ஊரில் சொல்வார்கள். அது நாவல் மரத்திற்கேயுரிய நாணம் என்று சொல்லி ஆண்பிள்ளைகளை நாவல்மரங்களில் ஏறவிடுவதில்லை. அந்நிகழ்ச்சியில் அம்மாவிடம் வேண்டிக் கொண்ட அர்ச்சனையின் பின் அந்த வருடத்திற்கு அக்காவின் நாவற்பழ ஆசை அடங்கிப்போயிருந்தது. அடுத்த வந்த வருடம் கா.பொ.இ வீட்டில் இயக்கக்காரர்கள் வந்து முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப். ஐச் சார்ந்தவர்கள் ஊரவர்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது அந்த வீட்டின் முன்னே ஒரு பீரங்கிக்குழல் நீண்டிருக்கும். அதன் வாய் சாக்குப் போட்டு மூடப்பட்டிருக்கும். பாடசாலை செல்லும் போதும் வரும்போதும் அந்த பீரங்கிக்குழலை வேடிக்கை பார்ப்பது எங்களுக்கு வாடிக்கையாகிப் போனது.

பின் வந்த சில நாட்களில் ஈ.பி.ஆர்.டில்.எப் இனர் அந்த வீட்டினை விட்டு வெளியேற வேறொரு இயக்கத்தினர் அந்தவீட்டினை தங்களின் தங்ககமாக மாற்றிவிட்டிருந்தனர். அந்தக் காலங்களில் ஊரில் ஈறோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ரெலா, ரைகர்ஸ், புளொட் என அறுபத்தெட்டு இயக்கங்கள் இருந்தனவாயினும் ரெலோ, ரைகர்ஸ், ஈ.பி. (ஈ.பி.ஆர்.எல்.எப்) புளொட் என்பனவே ஆயுத ரீதியில் பலம் மிக்கவையாக மக்களிடையே பிரபல்யமாகத் தொடங்கியிருந்தன. படித்தவர்கள் மத்தியில் ஈறோஸ் செல்வாக்குப் பெற்றிருந்தது. மற்ற இயக்கங்களைப் போலன்றி புளொட் பொதுமக்களிடமே தங்களுக்கான உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்டிருந்ததுடன் இராணுவ ரீதியிலான தாக்குதல்களை அது பெருமளவிற்கு நடத்தியிருந்ததாகவும் தெரியவில்லை.

'காத்தடிக்குது புயலடிக்குது காரைநகரில ஈ.பி அடிக்குது போறவழியில ரெலோ அடிக்குது வாற வழியில ரைகர் அடிக்குது வயிறு முட்ட புளொட் அடிக்குது'

என மக்களிடையே அதன் செல்வாக்கும் குறையத் தொடங்கியிருந்தாலும் கோட்டையில இருந்து சிறிலங்காப் படையினர் எறிகணைகளை ஏவும் நேரங்களைக் கணக்கிட்டு அபாய ஒலி எழுப்பி யாழ்நகர் மக்களை எச்சரிக்கை செய்யும் பணியை அது செவ்வனே செய்து கொண்டிருந்ததுடன் யாழ் சத்திரச் சந்திக்கு அண்மையில் மணல்மூட்டைகளால் காப்பரண் அமைத்து, அந்த வழியே யாழ் கோட்டையிலிருந்து வரும் துப்பாக்கிச் சூடுகளையும் ஏவுகணைகளையும் அது தடுத்துக் கொண்டிருந்தது. அந்தக்காலத்தில் காரைநகர் கடைற்படை முகாமே ஈ.பி.ஆர்.எல்.எப். இனரின் பிரதான இலக்காக இருந்தது. அடிக்கடி அங்கே சென்று சொறிவதை அவர்கள் வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தனர்.

திடீரென் ஒருநாள் மதியம் போல் அப்பா கடையை மூடிவிட்டு வேகமாக வீட்டுக்கு வந்தவர்,

“பெடியள் தங்களுக்குள்ளையே அடிபட வெளிக்கிட்டிட்டாங்களாம். இண்டைக்கு இஞ்சையும் ரெலோவும் ரைகர்ஸ்சும் சண்டை பிடிக்கப் போறாங்களாமெண்டு கேள்வி. ஒருத்தரும் ஒருஇடமும் போகாம வீட்டுக்குள்ளேயே இருங்கோ” என்றார்.

மாலை மூன்று மணியளவில் சடசடக்கத் தொடங்கிய துப்பாக்கி வேட்டுக்கள் மாலை ஏழு மணியின் பின்னரே ஓய்விற்கு வந்தன. அன்றைய சண்டையில் தபால் கந்தோரடியில் நின்று விடுப்புப்பார்த்த ஒருவர் கொல்லப்பட்டிருந்தார்.

ஒரு பிள்ளை ரைகர்ஸ்ஸிலும் இன்னொருபிள்ளை வேறொரு இயக்கத்திலும் இருந்த குடும்பத்தவர்கள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார்கள். சில தினங்களில் வடக்கு கிழக்கு ரைகர்ஸின் கட்டுப்பாட்டுக்குள் வர ஏனைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காய் தப்பி வெளி நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.



Thursday, March 31, 2011

வேரென நீயிருந்தாய்...(24)

பொறியியற் கற்கைநெறியின் இரண்டாம் வருடத்தின் இறுதித் தவணைக்காலம் நெருங்கிக் கொண்டிருக்கையில், நாங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள எந்திரிவியற் பிரிவுகளின் விபரங்கள் அறிவிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இயலுமானவரை நதீஷாவிற்கும் எனக்குமான இடைவெளியினை அதிகரித்திருந்தேன். அவளிடமிருந்து விலகியிருக்க நான் விரும்புவதை அவள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அவளது மனதை நோகடிக்காத வண்ணம் இந்த கற்கையாண்டின் இறுதியுடன் அது தானாகவே நடந்துவிடும் என்கின்ற திடமான நம்பிக்கையும் எனக்கு இருந்ததால் நானும் அதைப்பற்றிப் பின்னர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. எப்படியும் அவள் மின்னியல்சார் எந்திரவியலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாள் என்றே எண்ணியிருந்தேன். இந்தக் கற்கையாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் நாங்கள் எமக்கு விருப்பமான கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்திருந்ததை குறிப்பிட்டு அதை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டிருந்த நிரலில் அவள் மின்னியல் துறைக்கே விண்ணப்பித்திருந்தாள். அந்த விபரம் வெளியான அன்றே என்னிடம் வந்து,

“நீங்க உண்மையிலேயே சிவிலா செய்யப் போறீங்க?” - ஆச்சரியமாய்க் கேட்டாள்.

“ஓம்!”

“ஏன்? உங்களுக்கு elect செய்ய விருப்பமில்லையா?”

“இல்லை. எனக்கு civil தான் செய்ய விருப்பம்.”

“ஓ! நீங்க முந்தி சொன்னது தான். but நான் நம்பேல்லை. நீங்க பொய் சொலலுறது எண்டுதான் நான் நம்பினது.” - அவள் முகத்தில் இலேசான கவலைக்கீற்றுகள் வந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாகவிருந்ததாயினும் அதைப் பற்றிய எண்ணங்கள் தொடர்ந்து விரிவதை அனுமதிக்காமல் அதை அப்படியே விட்டுவிட்டிருந்தேன்.


அன்றைய மாலை நாங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் கற்கைநெறிகளுக்கான இறுதி செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நதீஷாவும் குடிசார் எந்திரிவியலுக்கே (Civil Engineering) விண்ணப்பித்திருப்பதும் அத்துறைக்கே அவள் தெரிவு செய்யப்பட்டிருப்பதும் வியப்புடனான அதிர்ச்சியாயிருந்தது. இன்னும் இருக்கும் இரண்டு வருடங்களுக்கும் மீண்டும் அவளுடன்தான் ஆய்வுகூடங்களில் செலவிடவேண்டியிருக்கப் போகின்றதே என்கின்ற ஏக்கம் வந்தது. எதற்காக இவள் civil-ற்கு வந்திருப்பாள்? எனக்காகவா? அப்படியானால் அவள் என்னைக் காதலிக்கின்றாளா?

சந்தேகம் வலுக்கத் தொடங்கியிருந்தது. இதுவரை காலமும் சாடையாக அந்தச் சந்தேகம் இருந்திருந்தாலும், அவள் friendly-யாகப் பழகுவதை நான்தான் தப்பாக அர்த்தப்படுத்திக் கொள்கின்றேனோ என்கின்ற எண்ணமே மிகையாகவிருந்தது. இப்போது மனது குழம்பத் தொடங்கியது. பல்வேறு சிந்தனைகளும் மனதிற்குள் ஓடின. ஒருவேளை என்னைப் போலவே அவளுக்கும் நான் தன்னைக் காதலிக்கின்றேனோ என்கின்ற சந்தேகம் இருந்து, என்னிடமிருந்து விலகியிருக்க விருப்பப்பட்டு அதனால் என்னை elect செய்யச் செய்வதற்காக இப்படி நாடகமாடியிருக்கவும்கூடுமோ. ச்சே! ஏன் இப்படியெல்லாம் என்மனம் கேவலமாய்ச் சிந்தனையைச் சிதற விடுகின்றது?

என்னைப் போலவே அவளும் குடிசார் எந்திரவியல் கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறாள். இந்தக்கணத்தில் அது மட்டுமே ஆதார உண்மை. ஏனையவையெல்லாம் அதற்கான காரணத்தைச் சிருஷ்டிக்கும் என்னுடைய மனப் பிரமைகளே! உள்மனம் விழிப்படைய சிந்தனை கலைந்தது.

எமக்கு விடப்பட்டிருந்த ஒருமாத கற்கை விடுமுறை கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மேலுமொரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்ட்டிருந்தது. பரீட்சைகள் யாவும் முடிவடைய கிடைத்த ஒருமாதகால விடுமுறையைக் கழிக்க ஊருக்குப் புறப்பட ஆயத்தமானோம்.

இன்னமும் யாழ்குடாநாட்டிற்கும் ஏனைய பிரதேசங்களுக்கமான போக்குவரத்து சீராக்கப்பட்டிருக்கவில்லை. திருகோணமலைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பற்போக்குவரத்துக்கூட இடையிடையேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கப்பல் யாழ் செல்லும் சரியான திகதி தெரியாதிருந்தாலும் யாழ் செல்லும் மாணவர்கள் யாவரும் இணைந்து கப்பலில் செல்வதென்று முடிவாகி ஒருசில இடைவெளிகளில் திருகோணமலையினை நோக்கி எங்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தோம்.

திருகோணமலைக்குள் செல்வதற்கு ஐந்து இடங்களில் சோதனைச் சாவடிகளில் ஏறியிறங்கிச் செல்கின்ற காலம் அது. அப்போதெல்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒன்றுகூடல்களில் யாரேனும் elect செய்யும் மாணவர்களைக் கடிப்பதற்கு இந்தத் திருமலைப் பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். “சிவில் கட்ட ஒக்கம பயிண்ட” (civil ஆக்கள் எல்லாரும் இறங்குங்க) எண்டு check point-ல ஆமிக்காரன் சொல்ல இவர் bus-ஐ விட்ட இறங்கயில்லை. பிறகு ஆமிக்காரன் வந்து “அய்? ஒயா கமுதாவத?” (ஏன்? நீங்க படையினனா?) எண்டு கேக்க “ந, ந, மம elect கரணவா” (இல்லை இல்லை. நான் elect செய்யிறன்) எண்டு சொன்னேராம்”. இப்போது அந்த சோதனைச்சாவடிகளை நாங்களும் அடைந்திருந்தோம். எங்களுடன் வந்திருந்த ஒரு மாணவன் நிறையப் பொருட்களை வைத்திருந்ததால் அவற்றைச் சோதனைக்குக் காட்டுவதற்காக நானும் அவனுடனேயே நின்றிருந்தேன்.

“ஒயா மொணவத கரண்ணே?” (நீங்க என்ன செய்யுறீங்க?)

“மம இஞ்சினேருட்ட இகணகன்னவா” (நான் இஞ்சினியருக்குப் படிக்கிறன்)

“ஐசியெக்கத் தெண்ட” (அடையாள அட்டையைத் தாருங்கள்)
-கொடுத்தான்.

“மே மொணவத?” (இது என்ன?)

”மே இங்குறு” (இது இஞ்சி)

“மேக்க?” (இது?)

”மேக்கத் இங்குறு” (இதுவும் இஞ்சி)

“அற bag-க்கெக்க மொணவத தியன்னே?” (அந்த bag-க்குக்குள்ள என்ன இருக்குது?)

“அற bag-க்கெக்கத் இங்குறுதட தமாய்த் தியன்னே” (அந்த bag-க்குக்குள்ளயும் இஞ்சிதான் இருக்குது)

“ஒயா இஞ்சினேருட்ட இகணகன்னவாத நத்தங் இங்குறு business கரணவாத?” (நீங்க இஞ்சினியருக்குப் படிக்கிறீங்களா அல்லது இஞ்சி வியாபாரம் செய்யிறீங்களா?)
-நக்கலடித்தான் அந்தப் படையினன்.

அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ளி இஞ்சி போன்றவைக்குப் பெருந்தட்டுப்பாடாக இருந்தது. சீரற்ற போக்குவரத்துக் காரணமாக திருகோணமலையில் ஐம்பது ரூபாவாக விற்கும் ஒரு கிலோ இஞ்சியின் விலை யாழ்ப்பாணத்தில் இரண்டாயிரம் ரூபாவைத் தொட்டிருந்தது. ஆயினும் நாங்கள் பயணித்த அந்தக் கப்பல் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்ததன் பிற்பாடு இஞ்சி ஒருகிலோ அறுநுாறு ரூபாயாகக் குறைந்திருந்தது.