Wednesday, January 26, 2011

வேரென நீயிருந்தாய்...(23)


1999 ஆம் ஆண்டு தமிழர் திருநாள். வழமை போன்று பேராதனை குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் இம்முறையும் சிறப்பாகப் பொங்கல்விழா நடைபெற்றிருந்தது. தீபன் காலையிலேயே எழுந்து கோவிலுக்குச் சென்று விட்டிருந்தான். காலைக் குளிருக்கு படுக்கையை விட்டு எழும்பும் பஞ்சியில் கிடந்தவெனக்கு பசிக்க ஆரம்பித்தது. எழுந்து குளித்துவிட்டு வழமையாகச் செல்லும் அங்குணாவலை 'நாணா' கடையை அடைந்தேன்.

பற்றீஸ்ஸுகள் கடும் மரமஞ்சள் நிறத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் சலிப்பு வந்தது. இதுகால வரையிலான நாணா கடையின் வாடிக்கையாளர் அனுபவத்தில் பற்றீஸின் நிறத்தை வைத்தே அதன் தயாரிப்பு தினத்தை அறிந்துவிடும் வல்லமையை நாங்கள் எல்லோருமே பெற்றிருந்தோம். எப்படியும் இந்தப் பற்றீஸ் நான்கு தினங்களுக்கு முன்னர்தான் தயாரித்ததாக இருக்க வேண்டும். முதல்நாளில் இளமஞ்சள் நிறத்தில் காணப்படும் பற்றீஸ்ஸுகள் விற்றுத்தீராவிட்டால் அடுத்துவரும் நாட்களில் மீண்டும்மீண்டும் அப்படியே எண்ணெய்ச்சட்டிக்குள் போய்வர அதன் நிறம் கொஞ்சமாக மாறத் தொடங்கிப் பின் கடும் மரமஞ்சள் நிறத்தினை அடைந்துவிடும்.

“நாணா! இது இண்டைக்கு செய்த பற்றீஸா? நிறம் ஒருமாரி இரிக்கே (ஒருமாதிரி இருக்கே)”
என்கின்ற எங்களின் ஆரம்பகாலக் கேள்விகளுக்கு இப்போதும் அவரின் பதில்

“ஆ! இன்னிக்குத்தான் செஞ்ச. மிச்சம் கரிகிப் போய்ச்சி” (இன்றைக்குத்தான் செய்தது. நல்லாக் கருகிப் போய்விட்டது)

அறியாதவர்கள் ஒருவாய் கடித்ததும் உள்ளிருக்கும் ஊசிப்போன கறியின் புளிப்புத்தன்மையை உணர்ந்து அதை அப்படியே துப்பி விடுவார்கள்.

“நாணா! பாண் பாகயாயும் மீன் ஆணமும் குடுங்க” (பாண் அரை றாத்தலும் மீன் குழம்பும்)

நாணா கடையில் உணவருந்திவிட்டு வீட்டினை அடைகையில் தீபன் வந்திருந்தான்.

“என்னடாப்பா! இண்டைக்கும் நாணாகடை தானா?”

“ஓமடா! எப்பிடிப் போச்சு பொங்கலெல்லாம்?”

“ம்.. நல்லா இருந்துது. நீதான் கன விசயங்களை மிஸ் பண்ணீற்றாய்”
சொல்லிவிட்டு அவன் என்னைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரிப்பதாய்ப் பட்டது.

“மச்சான் மச்சமில்லாமல் எனக்குச் சாப்பாடு இறங்காதெண்டு உனக்குத் தெரியும்
தானேடா. பிறகேன் வாயைக் கிளறுறாய்?”

“அம்மாண நீயொரு லெப்பையடா நான் என்ன, நீ புக்கையை மிஸ் பண்ணீற்றியெண்டா சொன்னான்? ஆனா மச்சான் அடுத்த தைப்பொங்கலுக்கு நான் கோயிலுக்குப் போறனோ இல்லையோ நீ கட்டாயம் போவியடா. எவ்வளவு பந்தயம் வேணுமெண்டாலும் நான் பிடிக்கிறன்.”

“சரியடாப்பா! அண்டைக்குச் சூரியன் மேற்கால உதிக்குமெண்டால் வேறென்ன செய்யேலும்.”

“சூரியன் மேற்கால உதிக்குதோ கிழக்கால உதிக்குதோ எனக்குத் தெரியாது. ஆனா இனி உனக்குத் தெற்காலதான் உதிக்கும்.”

“அது எங்கையெண்டாலும் உதிக்கட்டும். உதிக்கேக்குள்ள அதைப் பாப்பம். இப்ப நீ பொங்கல் கொண்டாந்தனியே (கொண்டு வந்தனியோ) இல்லையோ?”

“இனி நான் ஏன்ராப்பா உனக்குப் புக்கை கொண்டு வரோணும். அதுக்குத்தான் வேறையாக்கள் வந்திற்றினமே. இனி நாங்க கொண்டந்தாலும் நீங்க சாப்பிட அவை விடுவினமா?”

“இஞ்சை வா! இப்ப என்ன கதைக்கிறாய் நீ?”

“நான் கதைக்கிறது மட்டும்தான் மச்சான். எண்டாலும் நீ காய்தான்ரா! கியல வெடக் ந (சொல்லி வேலையில்லை) மச்சான். அது சரியடாப்பா! பிறகு வீட்டில பொங்கேக்குள்ள சர்க்கரைப் பொங்கல் பொங்குவீங்களா இல்லாட்டி கிரிபத் (பாற்சோறு) தானா?”

இவன் என்னத்தைப் பற்றிக் கதைக்கிறான்? எனக்கு மண்டை காயத் தொடங்கியது.

“அம்மாண வாற ஆத்திரத்துக்கு, இப்ப என்னத்தைப் பற்றி நீ கதைக்கிறாய்?”

“இப்பையேன் நீ என்னோட ஏறுறாய்?”

“நீதானே என்னோட சும்மா சொறிஞ்சு கொண்டிருக்கிறாய்?”

“உன்ரை ஊரில வைச்சு நானெல்லாம் உன்னோட இனி சொறியேலுமாடாப்பா?”

“இப்ப நீ என்ன சொல்ல வாறாயெண்டு விளங்குது. அம்மாண, மகனே உனக்கு எத்தின தரம் சொல்லிப்போட்டன், இப்பிடியெல்லாம் கதைக்காதை எண்டு. பிறகென்னத்துக்குப் புடுங்கிக் கொண்டு நிக்கிறாய்?”

“இல்லை மச்சான், எனக்கெண்டா அவள் உன்னில சரியா மனப்படுகிறாள் போல இருக்கடா. இண்டைக்கு எங்கட batch தமிழ்ச் சரக்குகளோட அவளும் கோயிலுக்கு வந்தவளடா”

“பேய்ப்... அவள் வந்தா அதுக்கு நான் என்ன செய்யிறது? என்னோட இனிமேல் இதைப் பற்றிக் கதைச்சியெண்டால் பிறகு அம்மாண நான் நானா இருக்கமாட்டன். சொல்லிப்போட்டன்.”

அதன் பின்னர் ஆய்வுகூடங்களுக்கு செய்முறை வகுப்பகளுக்குச் செல்வது வெறுப்பைத் தர ஆரம்பித்திருந்தது. கடவுளே third year-ஆவது இவள் வேற field-இற்குப் போய்விட வேண்டுமென மனம் அங்கலாய்க்கத் தொடங்கியது. இயன்ற வரைக்கும் ஆய்வகூடங்களில் நதீஷாவுடனான உரையாடல்களை, அவை பாடசம்பந்தமாக இருப்பினும் கூட, தவிர்க்க ஆரம்பித்திருந்தேன்.

அடுத்து வந்த சில வாரங்களில் எங்கள் பிரிவிற்கான ஆண்டுச் சுற்றுலா வந்திருந்தது. இம்முறை அது நுவரேலியாவில் உள்ள உலகின் முடிவிடத்தை (world's end) நோக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நதீஷாவும் இதில் பங்குபற்றினால் சிலவேளைகளில் தேவையில்லாத கிசுகிசுக்களுக்கு ஆளாகவேண்டிவருமோ என்கின்ற தயக்கம் இருந்தாலும், நுவரெலியாவின் குளிரை அனுபவிக்கவும் உலகின் முடிவிடம் என்று சொல்லப்படுகின்ற அந்தப் பிரதேசத்தைச் சென்று பார்க்கும் ஆவலிலும் சுற்றுலாவிற்குச் செல்ல இணங்கியிருந்தேன்.


இம்முறைச் சுற்றுலாவில் நதீஷா பங்குபற்றவில்லை என்பதை அறிநததும் மனதிற்குள் நிம்மதி வந்தது. காலை உணவினை நுவரெலியாவில் முடித்து விட்டுப் பின்னர் உலகின் முடிவிடத்தை நோக்கி எங்கள் பயணம் குதூகலமாக ஆரம்பித்தது. இதற்கு மேல் பேரூந்தில் செல்ல முடியாது என்று சொல்லி எங்களை நடந்து போகச் சொன்னார்கள். அனைவரும் பேரூந்துகளிலிருந்து இறங்கி சிறுசிறு குழுக்களாக உலகின் முடிவிடம் என்று சொல்லப் படுகின்ற பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். இடையிடையே பலரும் குழுக்கள் குழுக்களாக புகைப்படம் எடுத்துக் கொள்வதைப் பார்க்கையில் ஏனோ தெரியவில்லை நதீஷாவின் நினைவு மனதிற்குள் வந்து போனது. யார் வரவில்லை என்று ஆரம்பத்தில் சந்தோஷப் பட்டிருந்தேனோ, இப்போது அவள் வரவில்லை என்பதற்காய் என்மனம் ஏங்குகின்றதோ என்கின்ற சந்தேகம் எழுந்தது.

அவள் வந்திருந்தால் எப்படியும் ஒரு புகைப்படமாவது எடுப்பதற்கு அவள் அழைத்திருப்பாள். இப்போது அழைப்பதற்கு யாருமேயில்லாததால் தான் தனிமையாய் உணர்கிறேன். அதனால் தான் அவளைப்பற்றி நினைக்கின்றேன் என்பதை என்மனது ஏற்பதாய்த் தெரியவில்லை. அதையும் மீறி ஏதோவோர் ஈர்ப்பு அவளிடம் ஏற்பட்டிருக்கின்றதோ என்கின்ற சந்தேகம் மனவுளைச்சலைக் கொடுத்தது.

சந்தேகக் கோடு அது சந்தோஷக் கேடு என்பது போல் இப்போது, ஆரம்பத்திலிருந்த மகிழ்ச்சி மறைந்து விட்டிருந்தது. எனக்குள் காதல்பூ முகிழ்க்கத் தொடங்குகின்றதோ என்கின்ற சந்தேகம் மிகுந்த மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. இதெல்லாம் உனக்குச் சரிவராது அப்படியிருந்தால் அதை முளையிலேயே கிள்ளியெறிந்து விடவேண்டுமென அடிமனம் ஆணையிடத் தொடங்கியது. எப்படி எனக்கு காதல், அதுவும் இவளிடம் வரமுடியும்? அப்படியிருந்தாலும் இது வெறுமனே இனக்கவர்ச்சியாகத்தான் இருக்குமேயன்றி ஆத்மார்த்த காதலாக இருக்க முடியாது. இவ்வளவு நாள் பக்கத்திலிருந்து பழகிய பழக்கதோஷம், இப்போது அவள் இல்லையென்றவுடன் மனதில் சிறு ஏக்கத்தைக் கொடுத்திருக்கின்றது. அவ்வளவு தான். இனிமேல் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டேன்.



Thursday, December 23, 2010

வேரென நீயிருந்தாய்...(22)

அன்றைய விளக்கத்தின் பின்னர் நதீஷா பெரிதும் மாறிப் போயிருந்தாள். இயன்றவரையிலும் ஆங்கிலத்தில் உரையாடுவதைத் தவிர்த்து தமிழிலேயே என்னிடம் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் எனக்குள் அவள் மீதான அச்சம் முற்றுமுழுதாக விலகியிருக்கவில்லை. எதற்காக இவள் தமிழில் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றாள் என்கின்ற சந்தேகம் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

“உங்கள் நண்பரின் நண்பன் உளவாளியாக இருக்கலாம்.” என்கின்ற வாசகங்களை 95 இற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணக்கூடியதாக இருந்திருந்தது. அக்காலப்பகுதியில் உளவாளிகள் அதிக அளவில் ஊடுருவியிருப்பதாக தெரிய வந்திருந்தது. 1991 இல் ஆனையிறவுப் படைத்தளத்தின் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்திருக்கையில் யாழ்குடா நாட்டிற்கும் வன்னிப்பெருநிலப்பரப்பிற்குமான போக்குவரத்துத் தொடர்பு ஆட்டம் கண்டிருந்தாலும், பின்னர் கட்டைக்காடு வெற்றிலைக்கேணி தொடக்கம் ஆனையிறவு வரை நீண்டு அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவ வேலிகளை பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அது அகற்றி விட்டிருந்தது. ஆயினும் ஆனையிறவுத்தளம் மீதான முற்றுகையை உடைப்பதற்காய் தரையிறக்கப்பட்டிருந்த படையினர் கட்டைக்காடு வெற்றிலைக்கேணிப் பிரதேசங்களில் நிரந்தரப் படைத்தளங்களை அமைத்துக் கொண்டு விட்டிருந்ததால் இப்போது ஊரியான் கொம்படியூடான சேற்று நிலப் பகுதியே வன்னியையும் யாழ்குடாவையும் இணைக்கும் போக்குவரத்துப் பாதையாக மாறிவிட்டிருந்தது. பொதுமக்கள் பயணம் செல்லும் அந்தப் பாதையில் ஒரு வெடிகுண்டுத்தாக்குதலைத் தன்னுடைய உளவாளிகைளைக் கொண்டு நடாத்தி அதன்மூலம் மக்களைப் பேரச்சத்துக்குள் தள்ள முயன்ற சிறிலங்காப் படைகளின் முயற்சி பிசுபிசுத்துப் போயிருந்ததை அடுத்து, மக்களிடையே உளவாளிகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவே அவ்வாறான வாசகங்கள் யாழ்குடாவெங்கும் பரவலாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. “எல்லாவற்றையும் சந்தேகி” என்கின்ற மனநிலையை அந்தச் சூழ்நிலை உண்டாக்கி விட்டிருந்தது. ஆதலினால் இப்போது நதீஷா மீதும் இலேசான சந்தேகம் துளிர்விட ஆரம்பித்திருந்தது.

சிலநாட்களி்ன் பின்னர் வந்துபோன மாவீரர்தின இறுதிநாள் நிகழ்ச்சிக்கு வான்புலிகள் உலங்குவானூர்தியிலிருந்து முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் மீது பூக்களைத் தூவியதை அடுத்து வான்புலிகளின் உதயம் பற்றி முதன்முறையாக விடுதலைப்புலிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குச் சிலகாலங்களுக்கு முன்னரும் ஒரு உலங்குவானூர்தி வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களின் மீது நீண்ட நேரமாகத் தாழப்பறந்து கொண்டிருந்ததை அவதானித்த மக்கள் அது விடுதலைப்புலிகளின் வானூர்தியென்றே எண்ணியிருந்தனராயினும், அன்றைய சம்பவத்தினை ரத்வத்தையும் பிரபாகரனும் தங்கள் வாழ்வில் மறக்கவே மாட்டார்களென்று பின்னர் தினமுரசில் அதன் ஆசிரியர் அற்புதன் அவர்கள் விபரித்திருந்தார். அந்த உலங்குவானூர்தியில் சிறிலங்காவின் பாதுகாப்பு இணையமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை அவர்கள் உட்பட சிறிலங்காப்படைகளின் முக்கிய படையதிகாரிகளும் பயணித்திருந்தனர். உலங்குவானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்றடைய வேண்டிய இடத்தினைக் கண்டடைவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அது தாழ்ந்து பறந்துகொண்டே முடிவிடத்தினைத் தேடிக்கொண்டிருக்க, கீழே அதை வேடிக்கை பார்த்தவர்கள் அதை வான்புலிகளின் உலங்குவானூர்தியென்றே எண்ணியிருந்தனர். பின் அந்த உலங்குவானூர்தி சூனியப் பிரதேசத்திற்குள் தரையிறங்கி அதிலிருந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பாக தங்கள் இடங்களை அடைந்து விட்டிருந்தனர். அப்படியானவொரு சம்பவத்தினைக் கனவிலும் எண்ணிப்பார்த்திருக்க முடியாத விடுதலைப்போராளிகளும் அந்த உலங்குவானூர்தி தங்களதே என்கின்ற எண்ணத்தில் அந்த அரிய சந்தர்ப்பத்தினைக் கோட்டைவிட்டிருந்தனர்.

1997 மே 13 இல் பெருமெடுப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த வெற்றி நிச்சயம் படைநடவடிக்கை பதினெட்டு மாதங்களைக் கடந்த தொடர்ந்து கொண்டிருக்கையில் திடீரென 1998 டிசம்பர் 04ஆம் திகதியன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. சூரிய சக்தி (ரிவிபல) நடவடிக்கை மூலம் அது ஒட்டுசுட்டான் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக அறிவித்ததனூடாக வெற்றி நிச்சயம் (ஜெய சிக்குறு) நடிவடிக்கை அறிவிக்கப்பட்ட அதன் இலக்கை அடையாமலேயே முடிவுக்கு வந்ததனை மறைமுகமாக அறிவித்திருந்தது.

பின்வந்த சில நாட்களில் எங்களின் முதலாண்டுப் பரீட்சையின் விரிவான பெறுபேறுகள் வெளியாயிருந்தன. அதைத் தொடர்ந்து நாங்கள் தொடர விரும்பும் பொறியியில் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனக்கும் நதீஷாவிற்கும் விரும்பிய கற்கைநெறியைத் தொடர்வதற்கு ஏற்புடையதான பெறுபேறுகளே வெளியாகியிருந்தது.

“நீங்க என்ன Engineering செய்யப் போறீங்க?”
நதீஷா தான் ஆரம்பித்தாள்.

“நீங்க என்ன decide பண்ணியிருக்கிறீங்க?”

“நான்தான் முதல் கேட்டது. அப்ப நீங்கதான் முதல் சொல்லவேணும். சரிதானே?” - சிரித்தாள்.

“நான் இன்னும் decide பண்ணேல்ல.”

“ஏன்?”

“இல்லை, இனித்தான் decide பண்ணவேணும்.”

“உங்களுக்கு elect செய்ய விருப்பமா?”

நான் ஏற்கனவே Civil Engineering செய்வதாகத் தீர்மானித்து அதற்கான விண்ணப்பத்தினையும் நிரப்பி அனுப்பி விட்டிருந்தேனாயினும், இவள் எதற்காக நான் செய்யவிருக்கும் துறையினைப்பற்றி அக்கறை காட்ட வேண்டும்? என்னை எதற்காகவேனும் ஒரு பகடைக்காயாக மாற்ற நினைக்கின்றாளா? அவளது நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததால்,

“ஏன் கேக்கிறீங்க?” - என்றேன்

“இல்ல, உங்களுக்கு elect செய்யிறதுக்கு result காணும் தானே. அதுதான் கேட்டன். நான் இன்னும் decide பண்ணேல்ல. அதுதான் உங்களுக்கு எது விருப்பமெண்டு கேட்டனான்.”

“உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்க.”
அவளிடமிருந்து விலகவேண்டும் போலிருந்தது.

“நீங்க என்ன செய்யப் போறீங்க எண்டு சொல்லுங்களன். please....”

“நான் என்ன செய்யப் போறன் எண்டதைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படுகிறீங்க? உங்களுக்கும் elect செய்யுறதுக்கு result காணும்தானே. அப்ப உங்களுக்கு எது விருப்பமோ அதுக்கு apply பண்ணுங்கோ.”
சற்று முறைப்பாகவே நான் சொன்னதைக் கேட்டதும் அவள் முகத்தில் சோகம் படர்வதைக் காணக்கூடியதாயிருந்தது. பார்க்கப் பாவமாயிருக்கவே,

“நான் civil தான் செய்யப் போறன். அதுக்கு apply-யும் பண்ணீற்றன்.”
கூறிவிட்டு அங்கிருக்கப் பிடிக்காமல் இருக்கவே அங்கிருந்து விலகி நடந்தேன்.







Saturday, November 27, 2010

வேரென நீயிருந்தாய்...(21)

இரண்டாம் வருட முதல்நாள் சம்பவத்தின் பின்னர் நதிஷாவுடனான சந்திப்புக்களை இயலுமானவரை தவிர்க்கத் தொடங்கியிருந்தேன் ஏதோ ஒரு வேகத்தில் அப்போதைக்குப் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காய் பின்னர் விரிவாக உரையாடலாம் என்று கூறியிருந்தாலும் அவளது உணர்ச்சி வீச்சினைக் கண்டு அரண்டு போயிருந்தேன். அவளுக்கு விளக்கமளிக்கப்போய் அதிலே ஏற்படும் தர்க்கத்தில் கோபமாகி நான் ஏதாவது உளறப்போய் கடைசியில் என்னைச் சிறிலங்கா காவல்துறையிடம் மாட்டி விடுவாளோ என்கின்ற சந்தேகம் வேறு அரித்துக் கொண்டிருந்தது. ஆகையினால் ஆய்வுகூட வகுப்புகளுக்கு நேரம் பிந்திப் போகத் தொடங்கியிருந்தேன்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. 20 நவம்பர் 1998. அன்றைய காலை நேர ஆய்வுகூட வகுப்பு முடிவடைகையில்,

“ஜேந்தன்! இண்று நானு நீங்க கதைக்கிற. சரியா?”

நதிஷா அப்படிச் சொன்னது கட்டளையா அல்லது வேண்டுகோளா என்கின்ற சந்தேகம் எழுந்து என் ஈகோவைத் தாக்கியது.

“ஈவினிங் பிறக்ரிகல் இல்லத் தானே. கன்ரீனுக்குப் பின்ன ESU றூம் இருக்கிறது தானே. சாப்டு முடிஞ்சு நீங்க அங்க வாறது. நான் உங்களப் பாத்திக்கொண்டிருக்கிறது. சரியா?”

அவளது கொச்சைத் தமிழ் இப்பொழுது ஓரளவிற்கு விளங்கத் தொடங்கியிருந்தது. இவளிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்கின்ற எண்ணம் எழுந்தது. அவளை எதிர்கொள்ள அச்சமாயிருந்தது. குழம்பினேன். மனதுக்குள் பல்வேறு சிந்தனைகளும் ஓடிற்று. எவ்வளவு நாளைக்கென்று பிரச்சனைகளைக் கண்டு ஓடிஒளிவது? பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. தள்ளிப் போடுவதால் ஒரு தற்காலிக நிம்மதி மட்டுமே கிடைக்கிறது. ஆயினும் அதை எண்ணித் தினம்தினம் அஞ்சி நடுங்க வேண்டியிருக்கிறது. இப்படிப் பயந்து கொண்டே வாழ்வதை விட அவளை எதிர் கொள்வது மேலென்பது புரிந்தது. பெரும்பாலும் நாமெல்லாம் தேவையற்ற கற்பனைகளை எண்ணி சாதாரண விடயங்களையே சில வேளைகளில் பெரிய பிரச்சனைகளாக உருவகித்துக் கொள்கின்றோம். அதைக்கடந்து வந்த பின்னர், “அட! இதுக்குப் போயா இப்படிப் பயந்தேன்” என்கின்ற எண்ணமும் எழுவதுண்டு. ஆகவே மாலை நதீஷாவைச் சந்திப்பதாய்த் தீர்மானித்துக் கொண்டேன். மனதுக்குள் இருந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவடைகையில் சந்தோஷமாக இருந்தது.

ESU அறையினுள் நுழைகையில் நதிஷா ஏற்கனவே காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளிற்கு முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்து அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். அவளது மனநிலையை ஊகிக்க முடியாமல் இருந்தது. அவள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி விட்டிருப்பது தெரிந்தது. அவளாகச் சொன்னாலொழிய அவள் மனத்தில் இருப்பதை அறிய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். பொதுவாகவே பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று அனுபவஸ்தர்களே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். “ம்... என்னத்தைக் கதைக்கப் போறாளோ?” மனதுக்குள் அலுத்துக் கொண்டேன்.

“Thanks Jeyanthan for your coming!”

இவள் எப்போது தமிழில் கதைப்பாள் எப்போது ஆங்கிலத்தில் கதைப்பாள்? இப்போது இவளுடன் தமிழில் கதைப்பதா அல்லது ஆங்கிலத்தில் கதைப்பதா? அவள் ஆங்கிலத்தில் கதைத்ததால்

“You are welcome!”

வலிந்து புன்னகையை வருவித்துக் கொண்டேன்.

“பிரபாகரண் செய்யுறது சரியா? நீங்க தமிழ தானே. நீங்களே சொல்லுங்க!”

“I didn't understand your question clearly?”

“பரவால்ல. நீங்க தமிழ கதைக்கிறது. எனக்கு தமிழ் விளங்கும். நான் தமிழ் படிக்கிறது”

முதல்வருட நிறைவுவரை இவள் ஒரு தமிழ் வார்த்தை பேசி நான் கேட்டதில்லை. இந்த நாலரை மாத இடைவெளியில் அவள் கற்றிருக்கும் தமிழ் இந்த உரையாடலுக்குப் போதுமானதாயிருக்குமென நான் நம்பவில்லையாயினும் வேதாளம் மீண்டும் முருங்கையேறி விடுமோ என்கின்ற அச்சத்தில்,

“நீங்க எதைப்பற்றிக் கேக்கிறீங்க?”

“எல்ரீரீ சண்டை பிடிக்கிறது சரியா? அவங்க ஏன் சிங்களிசைக் கொல்லுறது? நாங்கெல்லாம் ஒருநாடு தானே”

“நான் சொல்லுறது இருக்கட்டும். நீங்க என்ன நிகை்கிறீங்க?”

“பிரபாகரன் தான் அதுக்கு றீசன். அவர் வேற ஆக்கள நல்லா brain wash பண்றது. அதால சும்மா சண்டை. அவங்க சூசைட் அற்றாக் எல்லாம் பண்றது. அவங்க பாவம் தானே”

“சரி ஏன் அப்பிடிச் செய்கிறேர் எண்டு நினைக்கிறீங்க?”

“அவருக்கு தான் ஆள வேணுமெண்டு ஹரி ஆசாவ (ஹரி ஆசாவ - சரியான ஆசை) அதுக்கு தெமிழ பெடியள சிங்கள ஆக்களோட சண்ட பிடிக்க வைக்கிறது.”

“அப்ப தமிழ் சிங்களப் பிரச்சனை பிரபாகரனால தான் வந்தது எண்டுறீங்களா?”

“ஆ!. eighty three-யில தா?னே பிரச்சன வந்தது. அவங்கதானே யாழ்ப்பாணத்தில thirteen ஆமியைச் சுட்டது. அதுக்கு முதல் பிரச்சனையே இல்லத் தானே.”

நான் எதிர்பார்திருந்ததை விட அவளுக்கு பல தகவல்கள் தெரிந்திருந்தது ஆச்சரியமாயிருந்தது. பெரும்பாலான சிங்களவர்களைப் போலவே இவளுக்கும் இந்தப் பிரச்சனையின் ஆணிவேர் பற்றிய அறிவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அதனால் இந்தப் பிரச்சனையின் தாற்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாயிருக்கிறாள். ஆகவே இவள் ஆபத்தானவளாக இருக்க முடியாது. இவளுடன் துணிந்து உரையாடலாம்.

“சரி பதின்மூன்று ஆமியைச் சுட்டதுக்கு எதற்காக சிங்கள இடங்களில் வாழ்ந்த எல்லாத் தமிழரையும் கொலை செய்தும் அடித்தும் கடைசியில் அங்கிருந்து கலைத்து வடக்கு கிழக்கிற்கு அனுப்பினீர்கள்”

“அது எல்ரீரீ செய்ததுக்குப் பழிக்குப்பழி”

“அவர்கள் எல்லோரும் எல்ரீரீஈ-யா?”

பதில் தெரியாமல் திணறுவதை உணரமுடிந்தது.

“இல்ல, ஆனா அவங்க எல்லாம் எல்ரீரீ சப்போட் தானே!”

“எண்பத்தி மூன்றாம் ஆண்டில எத்தின தமிழாக்களுக்கு எல்ரீரீஈ-யைத் தெரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறீங்க?”

“ம்ம்ம்... ஆ! ஆனா அப்பவும் many தமிழர நாங்க காப்பாத்தினது தானே”

“சரி! பிறகு எதுக்கு அவங்கள வடக்கு கிழக்குக்கு அனுப்பி வைச்சீங்க?”

“இங்க இருக்கிறது அவங்களுக்கு safe இல்லையெண்டு.”

“அப்ப வடக்கு கிழக்கு தமிழரின்ர இடம் எண்டது உங்களுக்கே தெரியுது தானே.”

“ம்ம்ம்.......ஆனா?”

“சொல்லுங்க. ”

“ஆனா எல்ரீரீ எங்கட leaders எல்லாம் கொல்லுறது தானே. ரஞ்சன் விஜேயரத்ன..”

“ரஞ்சன் விஜேரத்ன வந்து பாதுகாப்பு இணை அமைச்சரா இருந்தவர். ஆனா அவர் செத்ததை எத்தனை சிங்கள ஆக்கள் கொழும்பில வெடி கொழுத்திக் கொண்டாடினவை எண்டு தெரியுமா? 'ரயர்மாமா கியா' (tyre-மாமா போய்ற்றேர்) எண்டு எத்தனை சிங்கள ஆக்கள் சந்தோஷப்பட்டவை எண்டு தெரியுமா?”

“ம் தெரியும்! அது ஜேவிபி. அப்ப அவர் நிறைய சிங்கள ஆக்களையும் ஜேவிபி எண்டு ரயர் போட்டுக் கொழுத்தினது. சரி ஆனா பிறகு லலித் அத்துலத் முதலி, பிறகு பிரேமதாசா அவர்தான் எல்ரீரீக்கு இந்திய ஆமியோட சண்டைபிடிக்க ஆயுதமே குடுத்தது. அவங்களையெல்லாம் ஏன் செத்தச் செய்தது?”

83 இற்குப்பின்னர் நடந்த சம்பவங்கள் யாவுமே இவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது.

“சரி பண்டாரநாயக்காவை யாரு சுட்டது?”

அவள் முகத்தில் குழப்பம் பரவுவதை உணரமுடிந்தது.

“சரியாத் தெரியா. ஆனா ஒரு பிக்கு தான் சுட்டது எண்டு I heared"

“ஏன் சுட்டது?”

“தெரியா?”

“பண்டா-செல்வா memorandum, டட்லி-செல்வா memorandum பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீங்களா?”

“இல்லை.”

“fifty-six-இல fifty-eight-இல seventy-seven-இல எல்லாம் தமிழருக்கு எதிரா நடந்த riots-அ பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கறீங்களா?

“அப்பிடியெல்லாம் நடந்ததா?”

“eighty-one-இல யாழ்ப்பாண லைபிரறியை எரிச்சதாவது தெரியுமா?”

“அது I heared”

“அப்ப எப்படி சொல்லுறீங்க eighty-three-இல எல்ரீரீ பதின்மூன்று ஆமியைச் சுட்டதாலதான் இந்தப் பிரச்சனை வந்தது எண்டு?”

இப்போது அவள் முகம் மிகவும் குழம்பிக் காணப்பட்டது.

“ஆனா பிரபாகரண் சூசைட் அற்றாக் எல்லாம் செய்யுறது. வைபோசா படிக்கிற பிள்ளைகளைப் பிடிக்கிறது. அவங்க பாவம் தானே!”

“சரி. உங்கட அண்ணா ஏன் ஆமிக்குப் போனவர்?”

“அது அவற்ற வேலை.”

“நீங்க ஏன் ஆமிக்குப் போகேல்ல?”

“நான் படிச்சு Engineering கிடைச்சது. அப்ப போற தேவை இல்ல தானே.”

“அப்ப உங்கட அண்ணாக்கு வேற நல்ல வேலை கிடைக்காததாலதான் ஆமிக்குப் போனவர்”

“ம்ம்ம்... இல்ல. சரி...”

“ஆமி என்ன செய்யுது? அவங்க ஆக்களை கொல்லுறதில்லையா?”

“அவங்க நாட்டைக் காக்கிறதுக்குத் தானே கொல்லுறது”

“தமிழர்களுக்கும் இந்த நாட்டில உரிமை இருக்குத்தானே”

“ஓ”

“அப்ப ஏன் அவங்கள eighty-three யில சிங்கள ஆக்கள் கொலை செய்யேக்குள்ள இந்த அரசாங்கம் அவையைக் காப்பாற்றவில்லை? ஒரு அமைச்சர் let them to taste it என்று சொல்லி police-காரர்களையெல்லாம் ஒரு நடவடிக்கையும் எடுக்க விடாமச் செய்தது தானே”

“ம்ம்ம... எனக்கு இது தெரியாது. ஆனா பிரபாகரண் இல்லையெண்டா இவ்வளவு பெரிய சண்டை வந்திருக்காது தானே?”

எல்ரீரீஈ மட்டுமா சண்டை பிடிச்சது? வேற இயக்கங்கள் சண்டை பிடிக்கேல்லையா?”

“ஆ.. ஆனா எல்ரீரீஈ அவங்க எல்லாரையும் சுட்டது தானே. அது எப்பிடி? அவங்க தமிழ் தானே?”

இதற்கு என்ன பதில் சொல்வது? சகோதர யுத்தத்தை என்னவென்று சொல்வது? பாரததேசம் தன் சுயநலனுக்காய் புற்றீசல்கள் போன்று ஏராளமான தலைமைகளையும் இயக்கங்களையும் உருவாக்கி விட்டிருந்தது. அது எப்போதுமே தனி தமிழ் தேசம் என்று ஒன்று உருவாகிவிடாமல் இருப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தது. இந்தியாவில் திராவிடம் என்கின்ற பெயரில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் தனித்தமிழ்நாடு என்கின்ற போராட்டத்திலும் தமிழகம் இருந்த காலம். இந்திய-சீன யுத்தத்தில் இந்தியா தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த நேரம், தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையை அடுத்து சிறை செய்ப்பட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை செய்யப்பட்டு வெளியேவந்து தனது முதலாவது உரையில் “தனிநாட்டுக் கோரிக்கைக்கான அனைத்துக் காரணங்களும் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. ஆயினும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிமாக அதைப் பின்போடுகின்றோம் என்றார்.”. அதன் பின்னர் அந்தக் கோரிக்கைக்கான காரணங்கள் பற்றிய விழிப்புணர்வு தமிழகத் தமிழர்களிடம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வதில் மிகுந்த ஜாக்கிரதையாக அது இருக்கிறது என்பதே உண்மை.

சகோதர யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிங்களப்படை ஏனைய இயக்க உறுப்பினர்களைத் தம்மிடம் வந்து சரணடையுமாறும். அவ்வாறு சரணடைபவர்களை அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் அடிக்கடி அறிவித்துக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சிறிலங்காப் படைகளிடம் சென்று சரணடைந்திருக்கவில்லை. மாறாக அவர்கள் இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்குமே தப்பியோடியிருந்தார்கள். அதன்பின் இந்தியப்படையின் துணையுடன் மீண்டும் வந்திருந்தனர். பின் இந்தியப் படைகள் வெளியேற்றப்படுகையில் அவர்கள் சிறிலங்காப் படைகளுடன் இணைந்துகொண்டனர்.

“honestly, எனக்கும் அது பற்றிப் போதிய தெளியவில்லை. ஆனா சிலவேளையில அவை தங்கடை கொள்கையிலயிருந்து விலகியிருக்கலாம். அதோட மற்ற இயக்கங்களுக்குள்ளை நிறைய உள்ப்பிரச்சனைகள் இருந்தது. ஆயுதத்தோட இருக்கிறவை தங்களுக்குள்ளயே அடிபட வெளிக்கிட்டினமெண்டால் ஒருத்தரும் மிஞசேலாது. அவை வந்து ஒரு தலைமைக்குக் கீழதான் இருக்க வேணும். அரசியல் கட்சிகளெண்டால் ஜனநாயக ரீதியில எத்தினை கட்சிகள் வேணுமெண்டாலும் இருக்கலாம். அதால பெரிசா பிரச்சனை வராது. அப்படி வந்தாலும் அதால பெரிய பாதிப்பு மக்களுக்கு வராது. ஆனா ஆயுதம் தூக்கினாக்களுக்குள்ள பிரச்சனை வந்தா அதால எத்தினை பேர் கொல்லப்படுவினம்? சிலவேளை இதுகளை நினைச்சுத்தான் பிரபாகரன் ஆரம்பத்திலையே இப்படிச் செய்திருக்கலாம் எண்டு நான் நினைக்கிறன்.”

”அப்ப அமிர்தலிங்கத்தை ஏன் சுட்டது? அவர் சும்மா ஆள்தானே?”

என்னடா இவள்? ஏதோ என்னைக் கேட்டிட்டுப் போய்ச் சுட்டது போல எல்லாத்தையும் என்னட்டைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்? யோசித்தேன்.

“honestly I too don't know.”

“I know you don't know. I'm just asking your openion.” - சிரித்தாள்.

உண்மையிலேயே எனக்கு நடந்து முடிந்த சம்பவங்களுக்கு விளக்கம்/விமர்சனம் சொல்லுபவர்களைக் கண்டாலே பிடிக்காது. அவர்கள் சொல்லுவதைப் பார்க்கும்போது ஏதோ தங்களைக்கேட்டுத்தான் எல்லாம் நடத்திமுடிக்கப்பட்டது போலவும். அதுதான் சரி என்பது போலவும் மேதாவித்தனமாகச் சொல்லுவார்கள். உண்மையிலேயே சரி தப்பு என்று எதுவும் கிடையாது. அவை அனைத்துமே நாங்கள் எங்களை அடையாளப் படுத்திக் கொள்பவற்றிற்குத் தகுந்தால்போலவே பார்க்கப்படுகின்றது. நான் என்னை ஒரு சிங்களவனாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தால் பிரபாகரன் செய்வது தப்பாகவும் சந்திரிக்காவும் ரத்வத்தையும் செய்வது சரியாகவும் தோன்றியிருக்கும். நாவற்குழியில் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கிருஷாந்தியோ அன்றி திருகோணமலையில் வன்புணர்ச்சியின் பின் பிறப்புறுப்பிற்குள் குண்டு வைத்துக் கொல்லப்பட்ட கோணேஸ்வரியோ என்னைப் பாதித்திருக்க மாட்டார்கள். மாறாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருக்கையில் நடந்த குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் படைத்தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிசின் சாவிற்கு ஆத்திரப்பட்டிருந்திருப்பேன்.

அது 11 செப்ரம்பர் 1998. எங்கள் Engineering training period. site-இலிருந்து மதியம் நேரத்துடன் திரும்பியிருந்தோம். நண்பர்களுடன் சென்று நல்லூர் பின் வீதியில் உள்ள RIO-வில் மீகுளிர்களி (ஐஸ்கிறீம்) அருந்தி விட்டு அவர்கள் பருத்தித்துறைப் பேரூந்தில் ஏறிக்கொள்ள நாங்கள் மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிய சற்று நேரத்தில் பாரிய குண்டுச் சத்தம். சில மணி நேரங்களிலேயே நல்லூர் மாநகரசபைக் கூட்டத்தினுள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் விபரங்கள் வாய்வழியாகப் பரவிக்கொண்டிருந்தன.

“Hey! I asked your openion"

நதீஷா என்னை விடுவதாகத் தெரியவில்லை.

“ம்ம்ம்....Did you heared about lord Krishna?”

“ஓ. தெரியும். நீங்க தமிழில சொல்லுறது. எனக்கு விளங்கும்”

நான் விளங்கின மாதிரித்தான். இவளுக்கு இண்டைக்குத் தீத்துறதுதான். முடிவெடுத்தேன்.

விமர்சனங்களே ஒருவகைக் கருத்துத் திணிப்புத்தானே. நடந்து முடிந்த சம்பவங்களை எங்கள் விருப்புவெறுப்பிற்கேற்ப திரித்துச் சொல்வதுதானே. வாடி வா!

**“பாரதச்சண்டை தொடங்க இருக்கேக்குள்ள அருச்சுனனுக்கு கவலை வந்திற்றுது. எதிரில் நிற்பவர்கள் அவனுடைய குருவும் பிதாமகனும் மற்றும் பாசத்திற்கும் மதிப்பிற்குமுரிய பல பெரியோர்களுமே. அவர்களைக் கொல்ல வேண்டி வருமே என்கின்ற கவலையில் சண்டையைத் தவிர்த்து மீண்டும் காட்டுக்குப் போய்விடப் போவதாகச் சொல்கிறான். அப்போது கிருஷ்ணன் அவனைத் தடுத்து விளக்கமளித்து அவனை மீண்டும் ஆயுதம் ஏந்த வைக்கின்றான். அப்பிடிப் பார்த்தால் கிருஷ்ணனிலும் பார்க்க அருச்சுனன் தானே நல்லவன்?”

“Yes of course”

**“பிறகு எதுக்கு கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்டாட வேண்டும்?”

தலையைச் சொறிந்தாள்.

**“அருச்சுனன் அவர்களைக் கொல்ல மறுத்ததால் நல்லவன் என்று ஆகிவிட முடியாது. அவனுக்குக் கொல்வது பிரச்சனையல்ல. அவனது பிரச்சனை எதிரில் நிற்கும் ஒரு சிலரே. பீஷ்மரையும், துரோணரையும் இன்னும் சிலரையும் அந்தக் களத்தில் இருந்து அகற்றிவிட்டால் மற்றவர்களைக் கொல்வதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் கிருஷ்ணனோ தான் கட்டிக்காத்த தன் முழுப்படையையுமே எதிர்த்தரப்பிற்காகக் கொடுத்து விட்டுத் தனது படையினரையும் சேர்த்து அளிப்பதற்கு அருச்சுனனுடன் சேர்ந்து நிற்கின்றான். இலக்கைத் தீர்மானித்த பின்னர் அதற்குத் தடையாக வருபவர்களைக் கொல்வதில் கிருஷ்ணனுக்கு எந்தப்பாரபட்சமும் கிடையாது. அதனால்தான் அவன் மேலானவனாகப் போற்றப்படுகின்றான். நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதா?”

தலையை ஆட்டினாள்.

“ஆனா பிரபாகரன் பிள்ளைகளைப் பிடிச்சு brain wash பண்ணித்தானே சண்டைக்கு அனுப்புறது தானே.”

“உங்கட அண்ணியின்ர அண்ணாவும் அங்கிளும் செத்ததைக் கேட்ட உடனே உங்களுக்கு எப்பிடி இருந்தது?”

“எல்ரீரீ எல்லாத்தையும் அடிச்சுக் கொல்ல வேணும் போல”

“சரி எல்ரீரீ உங்கட வீட்டவந்து உங்கட சொந்தக்காரரையெல்லாம் பிடிச்சு சுட்டா என்ன செய்வீங்கள்?”

“என்ன செய்வனா? கையில கிடைக்கிறதால எடுத்து அவங்களை அடிப்பன். என்னெட்டத் துவக்கு இருக்குமெண்டா அவங்கள் எல்லாரையும் சுட்டுத்தள்ளிப்போடுவன்”

“அப்ப உங்களுக்கொரு நியாயம் மற்றாக்களுக்கு ஒரு நியாயமா?”

“என்ன சொல்லுறீங்க?”

“இதைத் தானே உங்கட ஆமியும் எங்கட இடத்தில செய்யுது? அப்ப அதை நேர கண்ணுக்கு முன்னால பாக்கிறவங்கள் சும்மா இருப்பாங்களா?”

அவள் முகம் முற்றிலுமாய் மாறிப் போயிருந்தது.

======================
** மூலம் : சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உரையிலிருந்து

Thursday, November 25, 2010

வேரென நீயிருந்தாய்...(20)

முதல்நாள் practical session ஆதலால் விரைவிலேயே முடித்து விட்டிருந்தோம்.

“How is Jaffna?” இதுவரை நேரமும் அமைதியாயிருந்தவள் திடீரென வினவினாள்.

“It's OK. as usual”

“But we are not usual”

அவள் நோர்மலாக இல்லை என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தாலும் அதைப்பற்றி அவளிடம் கேட்பதற்கான தயக்கத்தில் இருந்த அமைதியைக் கலைத்து,

“Why? what happenned?” -வினவினேன்.

“நீங்கட ஆக்க தாண்”

“what?”
-வாயிலிருந்து வார்த்தைகள் வெளியேறிய பின்னர்தான் உறைத்தது அவள் ஆங்கிலமும் சிங்களமும் இல்லாதவொரு மொழியில் கதைத்தது.

“தெமிலிலதாண் சொல்றது. விலங்கேல்ல?”

இப்ப இவள் என்னதான் சொல்லவாறாள்? எனக்கு மண்டை காயத்தொடங்கியது.

“Sorry, I couldn't understand”

“நீங்கலுக்கெல்லாம் விலங்காது. நாங்க தெமில் கதைக்கிற. நீங்க இங்கிரிசு கத்தாகரணவா. சொறிசொறி இங்கிரிசு கதைக்கிற”

“இப்ப என்ன சொல்ல வாறீங்க?” எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டே கேட்டேன்.

“நான் வாற இல்ல. போறது.”

இவளுக்கேதும் விசர்பிடித்து விட்டதோ? மனதுக்குள் சந்தேகம் எழுந்தது.

“I'm really sorry. I couldn't understand what you are talking. I don't like to talk anymore.”
சற்றுக் காட்டமாகவே கூறினேன்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வெளியே குதித்தோடுவதற்குத் தயாராய் இருப்பது தெரிந்தது. பார்க்கப் பாவமாய்த் தெரிந்தாலும் அடியும் தெரியாது நுனியும் தெரியாது அவளுடன் கதைத்தால் எனக்கும் விசர் பிடித்துவிடும் போல் இருந்தது. ஆயினும் அடிமனதினுள்ளே அவள்மேல் அனுதாபமும் உண்டாயிற்று. பெண்ணென்றால் பேயுமிரங்குமாமே.

“Hey Natheesha! See, if you didn't tell the things clearly, then what can I do?. Honestly I couldn't understand your Tamil. Please tell me it in English. Then only I can help you.”

அவள் நக்கலாய்ச் சிரிப்பதாய்ப் பட்டது.

“You can't help us. Not only you, even Prabhakaran comes, he can't do anything.”

அதிர்ந்தேன். நான் என்னவோ கதைத்துக் கொண்டிருக்கும் போது இவள் என்னவோ கதைக்கிறாளே.

“What do you mean by?”

“I meant even he can't give the live for the people he killed.”

“What?”

“I told it in English. Did you Understand atleast that?”

அவள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுத் தெரிந்தாள். எனக்குள் பயம் உருவாகத் தொடங்கியிருந்தது. ஒரு பெண், அதுவும் சிங்களத்தி, அதிலும் அவர்களது இடத்தில் வைத்து என்னிடம் நாட்டில் நடக்கின்ற சண்டையை பற்றி உணர்ச்சிவசப்பட்டு விவாதித்துக் கொண்டிருப்பதை வேறு யாரேனும் சிங்களப் பெடியங்கள் பார்த்தால், மனதுக்குள் நான் கம்பிகளை எண்ணத் தொடங்கியிருந்தேன்.

“Natheesha! please...”
குரலைத் தாழ்த்திக் கெஞ்சும் என்னைப் பார்க்க எனக்கே கேவலமாய் இருந்தது. என்ன இழவுக்கு இவள் எனக்கு குறூப்மேற்றாக வந்து சேர்ந்தாளோ? மனது அங்கலாய்த்தது. இந்த வருஷம் எப்பிடித்தான் practical எல்லாம் போகப் போகுதோ? ஏக்கமாய் வந்தது. அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிற ஆம்பிளைகளும் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுற பொம்பிளைகளும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் கிடையாது என்கின்ற சூப்பர்ஸ்டாரின் பன்ச் டயலாக் ஞாபகத்தில் வந்து சென்றது.

அவளைப் பார்த்தேன்! இன்னமும் உணர்ச்சிகள் அடங்காதவளாகவே தெரிந்தாள். உதடுகள் துடிப்பது தெரிந்தது. கோபத்தில் முகம் சிவந்திருப்பது அவளது அழகைக் குறைப்பதாய்ப்பட்டது. காடு பத்தி எரியேக்க கரடி காவோலை இழுத்திச்சாம். என் இருப்பே கேள்விக்குறியாக ஆகிக் கொண்டிருக்கையில் அவள் அழகைப்பற்றி எழுந்த சிந்தனையை இன்னொரு மனம் கண்டித்தது. ஆழ்ந்து உற்றுக் கவனித்தால் சிந்தனைகள் யாவும் ஒரு புள்ளியிலிருந்து எழுவதாய்த் தெரியவில்லை. அவை பல்வேறு இடங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் வெவ்வேறு எண்ணக்குமிழ்களாய் முகிழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருவகையில் அவைகூட நீர்க்குமிழிகள் போல்தான் சில எண்ணக்குமிழ்கள் சிலநொடிகள் கடந்தும் தொடர்ந்து வளர்ந்து பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. சில குமிழ்கள் உருவாக ஆரம்பிக்கையிலேயே காணாமல் போய்விடுகின்றன. சில குமிழ்கள் நொடிப்பொழுதுகளில் உடைந்து விடுகின்றன.

ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்னர் நானிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. எந்தப்பெண்ணையும் ஏறெடுத்தும் பாராமல் நானுண்டு என்பாடுண்டு என்றிருந்தவன் இன்றைக்கு என்னவென்றே தெரியாதவொரு காரணத்திற்காய் அவதிப்பொழுதில் மண்டியிடும் நிலையில். என்றைக்கு இவளை முதன்முறையாய்ப் பார்த்தேனோ அன்றைக்கே பட்டினத்தாரும் கண்ணதாசனும் என்னைக் கைகழுவி விட்டிருந்தனர். பெண்கள் என்றாலே எப்போதும் சண்டைதானா? எப்போதோ படித்த பழைய பாடல் விவேக சிந்தமணியென நினைக்கிறேன், நினைவினில் வந்தது.

வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும்
தண்டமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி இருந்திடின் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையே.

அவள் மேல் வைத்திருந்த மரியாதை மடமடவென சரியத் தொடங்கியது. அவளை உறுத்துப்பார்த்தவிட்டுத் திரும்பிக் கொண்டேன்.

“Jeyanthan! I'm sorry, really really sorry!, I was so upset for last few weeks. That's what I behaved like this. I'm extremely sorry.”

மனதிற்குள் ஏதோ இளகியது

“It's OK. Leave it."

“Thanks Jeyanthan! You know one of my uncle and my syster-in-laws brother have been killed recently in Kilinochci. My sister-in-law is so upset. Nobody can console her. Now she hates all Tamils. Yesterday she scolded me too”

“mmm.... Now I can understand your feelings! Yah! her feeling is accceptable”

“For what the hell the LTTE is fighting for?”

இவளுக்கு எப்படிப் புரியவைப்பது?

“You see! It's all because of LTTE”
என்ன சொல்லி இவளுக்கு விளங்கப்படுத்துவது. சொன்னாலும் இவளால் விளங்கிக்கொள்ளத்தான் முடியுமா? என்னைத் தப்பாக எடுத்துக் கொண்டு பொலிஸில் மாட்டிவிட்டு விடுவாளோ? சந்தேகங்கள் மனதைக் குடைந்தன.

“Natheesha! I guess as per your current situation, it's difficult to you to understand the things. at any cost we can't change the things which have happenned already. I hope you know the story about the mother of the dead boy and the lord Budhdha. if you want, we can talk about it after some times?”

“Of course! Thank you. Thank you so much. Now I feel so comportable. Definetly we will talk about it soon.”

நீண்ட நேரமாக நாம் விவாதித்தக்கொண்டிருப்பதைத் தூரத்திலிருந்து அவதானித்த போதனாசிரியர் எங்களை நோக்கி வருவது தெரிந்தது.

“if you have you finished the things, you can submit your reports and leave the lab now”



பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19

Wednesday, November 24, 2010

வேரென நீயிருந்தாய்...(19)

யாழிலிருந்து வெளியிடங்களுக்கான போக்குவரத்துத் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டு ஏறத்தாழ மூன்று வாரங்கள் கடந்து விட்டிருந்தன. இரண்டாம் ஆண்டிற்கான எமது கற்கை நெறிகள் 26 ஒக்ரோபர் 1998 அன்று ஆரம்பிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் எமது பிரிவைச் சேர்ந்த சுமார் 40 மாணவர்களும் எப்படிச் செல்வதென்று தெரியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாலும் கணிசமான அளவு மாணவர்கள் இங்கே இருப்பதனால் பல்கலைக்கழகம் எங்களுக்கு ஏதாவது உரிய நடவடிக்கை எடுக்கும் என்கின்ற நம்பிக்கையும் இருந்தது. யாழ்ப்பாணத்தின் இதுவரைகால வரலாற்றிலேயே பெருமளவிலான மாணவர்கள் பொறியியற் பீடங்களுக்கு தெரிவான பெருமை உயர்தரம் 1995 (A/L 1995) இனையே சாரும். அதற்குப் பின்னர் யாழ்ப்பாணம் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பிற்பாடு மின்சார வசதிகள் இருந்தும் கூட பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகுவோரின் விகிதாசாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமையை உயர்தரம் 1995 பெறுவதற்குக் காரணமாயிருந்தவர்கள்? பரீட்சை நெருங்குகையில் எத்தனையோ இடப்பெயர்வுகள், சொத்தழிவுகள், உயிரிழப்புக்கள். பரீட்சை நடைபெறுமா என்பது கூட பரீட்சை மண்டபத்தில் வினாத்தாளினைக் கையில் பெறும்வரை சந்தேகமாய்த்தானிருந்தது. பரீட்சைகள் யாவும் முடிவடையும் வரையிலும் பரீட்சைகள் தொடர்ந்து நடக்குமா என்கின்ற நம்பிக்கையீனம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. பரீட்சைகள் யாவும் முடிந்த சில தினங்களுக்குள்ளேயே ஒக்ரோபர் 30 இல் ஒட்டுமொத்த வலிகாமமும் இடம்பெயர்ந்து விட்டது. அதுவரை காலமும் அந்த இடப்பெயர்விற்கான அவசியத்தினைத் தாமதப்படுத்தி விட்டிருந்தவர்களை நினைக்கையில் நெஞ்சு நெகிழ்கிறது.

22 ஒக்ரோபர் 1998 அன்று அந்த உறுதிப்படுத்தப்பட்ட செய்தி எங்களை வந்தடைந்திருந்தது. மறுநாள் யாழிலிருந்து திருமலை செல்வதற்கான கப்பல் ஆயத்தமாகவிருப்பதால் மறுநாள் அதிகாலையில் யாழ் புகையிரத நிலையத்திற்கு வருகை தருமாறு அறிவித்திருந்தார்கள். யாழிலிருந்து வெளியே செல்வதற்காக பெருமளவிலானோர் அந்தரித்துக் கொண்டிருந்தனர். கடந்த 25 நாட்களாக யாழிலிருந்தான வெளியிடங்களுக்கான போக்குவரத்துத் துண்டிக்கப்ட்டிருந்தது. 1200 பயணிகள் வரை இந்தக் கப்பலில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு மக்களுக்கு கப்பலில் செல்வதற்கான பயணச்சீட்டுக்களும் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட முதல் இரண்டு பேரூந்துகளுக்குள் நாங்கள் திணிக்கப்பட்டுதட தெல்லிப்பழையில் இறக்கிவிடப்பட்டோம். மாலை மூன்று மணியளவில் மேலும் சில பேரூந்துகளில் பயணிகள் வந்து சேர்ந்திருந்தனர். 1200 பயணிகளில் பாதிப்போர் கூட வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள். திடீரென சில பச்சைநிறப் பேரூந்துகள் காங்கேசன்துறைப் பக்கமாகவிருந்து வந்து சேர்ந்தன. அவற்றின் யன்னல் கண்ணாடிகள் யாவும் கறுப்புவர்ணம் பூசப்பட்டு வெளியால் எதையுமே பார்க்க முடியாதவாறு இருந்தது. அவசரஅவசரமாக வந்திருந்த பயணிகள் யாவரையும் அந்தப் பேரூந்துகளில் அள்ளி அடைத்துக் கொண்டு காங்கேசன்துறை துறைமுகத்தை அடைகையில் மாலை நான்கரை கடந்து விட்டிருந்தது. எங்கள் அனைவரையும் பேரூந்துகளில் இருந்து இறக்கி உடனடியாகவே கப்பலின் அடித்தட்டுக்கு முந்திய தளத்தி்ற்குள் செலுத்திக் கொண்டிருந்தார்கள். உள்ளே புழுங்கி அவிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கப்பல் புறப்படுவதற்கான அறிகுறிகளைக் காணோம். அந்தத் தளத்தை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதி எங்களுக்கு மறுக்கப்பட்டிருக்க வெக்கையால் ஏற்பட்ட வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தோம்.

சில மணிநேரங்களின் பின்னர் கப்பல் நகரத் தொடங்குவதை உணர முடிந்தது. பின் மறுநாள் காலையிலேயே திருமலைத் துறைமுகத்தைச் சென்றடைந்திருந்தாலும் கப்பலைக் கரைக்கு நகர்த்தாமல் சிறுசிறு வள்ளங்கள் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். எங்கள் முறை வந்ததும் மேல்தளத்துக்கு வந்து ஆசுவாசமாக வெளிக்காற்றைச் சுவாசித்தோம். வள்ள்தில் பயணிக்கையில் அருகிலிருந்தவன் “அங்க பாருங்கடா” எனச் சொல்லவே அவன் காட்டிய திசையில் பார்த்தோம். நாங்கள் வந்த அதே கப்பலிலிருந்து மற்றப்பக்கமாக கடற்படைக் கலங்களினூடாக நீலச்சீருடை தரித்த கடற்படையினரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். 1200 பொதுமக்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எங்களுடன் வந்திருந்த பயணிகளின் எண்ணிக்கை 500 இலும் குறைவானதாக இருந்ததற்கான காரணம் வெளிப்படலாயிற்று.

அன்றைய இரவே அக்பர் விடுதியை அடைந்து சிரேஷ்ட மாணவர்களின் அறைகளில் 'கஜே' அடித்து விட்டு (இலவசமாக விடுதிச் சட்டத்திற்கு முரணான வகையில் தங்குதல்) மறுநாள் வெளியிடங்களில் அறைகளைத் தேடியலைந்து அன்றைய இரவே புதிய இடங்களுக்குக் குடியேறினோம். தொடர்ச்சியான பயணக்களைப்பும் அலைச்சலும் காலை தாண்டியும் எங்களை உறக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. இரண்டாம் வருடத்தின் முதல் நாளிலேயே காலை வேளை விரிவுரைகளைத் தவறவிட்டிருந்தோம். மதிய உணவை முடித்துவிட்டு வந்து ஆய்வுகூடங்களை அலசியதில் அன்றைக்கே Elect lab-இல் செய்முறை வகுப்பு இருந்தது தெரிய வந்தது. இந்தவருடத்தில் இருவர் கொண்ட குழுக்கள். இந்தவருடமும் நதீஷா தான் குறூப்மேற். அம்மாவுடன் இருந்த இத்தனை காலமும் நதீஷா என்கின்ற ஒருத்தி என் நண்பியாகி விட்டிருந்ததை மறந்தே போயிருந்தேன். அம்மாவுடன் இருந்த ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமாகக் கழிந்திருந்தன. சில நாட்களில் மிக்க மகிழ்ச்சியாகக் கழிந்திருந்தது. விதம்விதமாக சமைத்துப் போட சப்புக்கொட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அனேக நாட்களில் இரவில் வெள்ளைப்பி்ட்டுடன் கயல்மீன் பால்சொதியும் அல்லது மணக்கமணக்க நண்டுக் கறியும் வெழுத்துவாங்கியிருந்தேன். காலை வேளைகளில் பாலப்பம், உழுத்தங்கழி, தேசையென என்னை அசத்தியிருந்தார் அம்மா. எங்காவது சண்டை ஆரம்பித்து விட்டால் அம்மாவின் முகத்தில் கவலைகள் கவிந்து கொள்ளும். சமைக்கவும் மறந்து சாப்பிடவும் மறந்து ஆழ்ந்த சிந்தனையுடன் கடவுளைப் பிரார்த்தித்தபடியே இருப்பது அவரின் வாடிக்கையாகிவிடும். என்னைப் பொறுத்த வரையில் அக்காவுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்கின்ற உணர்வே ஏற்பட்டிருந்தது. மணலாற்றில் 1993 இல் இயக்கம் பெயரிட்டு நடாத்திய முதலாவது தாக்குதலான இதயபூமி-1 இனைக் கேட்ட நாளிலிருந்து அண்மையில் நடந்துமுடிந்த ஓயாத அலைகள்-2 வரை ஒவ்வொரு சண்டைப் பொழுதுகளிலும் அம்மா அக்காவிற்காகப் பிரார்த்திப்பதைப் பார்த்துப் பார்த்து அக்காவிற்கு மரணமே கிடையாது என்கின்ற எண்ணம் ஊறிப் போயிருந்தது.

Elect lab - இற்குள் நுழைந்து எங்கள் குழுவிற்கான இருப்பிடத்தைத் தேடுகையில் நதீஷா ஏற்கனவே வந்து விட்டிருப்பது தெரிந்தது.

“Hi! how was your training and holiday? how is your mum?"

“Thanks! it was good, my mother is also fine. what about you?”

“It's OK”
அவள் சிரிக்க முயற்சித்துத் தோற்பது தெரிந்தது. வழமையாகப் புன்னகையைத் தவழவிட்டுக் கொண்டிருக்கும் அவள் வதனத்தில் சோகம் சூழ்ந்திருப்பது தெரிந்தது.

“Anything wrong?. It seems like you are not happy”
பற்களால் உதடுகளைக் கடித்து சோகத்தை அடக்குவது தெரிந்தது. என்னிடம் சொல்லலாமா விடலாமா என்கின்ற தயக்கமும் குழப்பமும் அவள் மனத்திற்குள் ஓடுவதை முகம் காட்டிக்கொண்டிருந்தது. எம்மை நோக்கிப் போதனாசிரியர் வருவது தெரியவே அன்றைய செய்முறைக்காக வைக்கப்பட்டிருந்த குறிப்பினில் பார்வையைத் திருப்பினோம்.

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18

Tuesday, November 23, 2010

வேரென நீயிருந்தாய்...(18)

இரத்மலானை விமானப்படைத் தளத்திற்குள் நுழைந்திருந்தோம். முதன்முதலாக வான்வழிப் பயணம். துள்ளிக்குதித்த மனதுக்கு நடைபெற்ற பாதுகாப்புக் கெடுபிடிகளும் சோதனைகளும் பெரிதாகத் தெரியவில்லை. பேரூந்தில் சென்று விமானத்தை அடைந்தோம். வாழ்வில் முதல் தடவையாக ஒரு விமானத்தினை அருகே நின்று கண்களால் பார்க்கின்றேன். Lion Air என்கின்ற பெயருடன் அந்த இயந்திரப்பறவை தன் சிறகை விரித்தவாறே நீட்டி நிமர்த்தி நின்றிருந்தது. வானத்தில் பறந்து செல்கின்ற விமானங்களை அண்ணாந்து பார்க்கின்ற ஒவ்வொரு தடவையும் அவை கீழே விழுந்து நொறுங்காதா என்று ஏக்கங்களே இதுவரை என்னுள் எழுந்திருக்கின்றன. இதுவரைகால எனது வாழ்வில் விமானங்கள், அத்தனையும் போர் விமானங்களே, தந்தவிட்டிருந்த எனது அனுபவங்களே அந்த ஆதங்கத்தை என்னுள் உண்டு பண்ணி விட்டிருந்தன. இப்போது நானே இந்த விமானத்தில் பயணிக்கப் போகின்றேன். இப்போது இந்த விமானம் விழவேண்டும் என்கின்ற ஆதங்கம் உண்டாகுமா? எண்ணிப் பார்க்க சிரிப்பாய் வந்தது. தனக்குத் தனக்கெண்டால் சுளகு படக்குப்படக்கெண்டுமாம் என்று சும்மாவா சொன்னார்கள்? உள்ளே ஏறுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணிப்படிகள் வழியே ஏறி இருக்கையில் அமர்ந்து முன்னே வைக்கப்பட்டிருந்த தகவல் குறிப்பின் பிரகாரம் ஆசனப்பட்டியை அணிந்து கொண்டேன். விமானம் தரையில் ஓடி, வேகத்தை அதிகரித்து பின் வேகத்தைக் குறைத்து 180 பாகையில் திரும்பித் தரித்து நின்று உறுமியது. பின் மீண்டும் ஓடவாரம்பித்து வேகத்தைக்கூட்டிக் கூட்டி, சாளரங்களின் வழியே கீழே பார்க்கையில் தரை வழுவிக் கொண்டிருக்க சட்டென அடிவயிற்றில் மேல்நோக்கிய விசையொன்றினை உணர்கையில் விமானம் தன் நாசியினை மேலே உயர்த்தியிருந்தது.

முகில்களைத் துளைத்துச் சென்று கொண்டிருந்தது விமானம். தரையில் மட்டுமல்ல வானிலும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உண்டு. ஆயினும் அவை கணப் பொழுதுகளில் மாறிக் கொண்டிருப்பவை. இப்போது என்னால் முகில்களின் இன்னோர் பரிமாணத்தையும் பார்க்கக் கூடியதாகவிருந்தது. பயணங்கள் எங்கள் மனப்பரப்பை விரிக்கின்றன. கீழிருந்து பார்க்கையில் புரியாத அல்லது தெரிந்திராத காட்சிகளையெல்லாம் இப்போது காணக்கூடியதாகவிருந்தது. கண்ணால் காண்பவையெல்லாம் எபப்போதுமே உண்மையல்ல என்பது புரிந்தது. இலங்கையின் மேற்குக்கரை வழியே பயணிக்கும் விமானத்தினூடாக இலங்கைத்தீவின் கரையோர நெழிவு சுழிவுகளைப் பார்ப்பது ரம்மியமாயிருந்தது. புத்தளம் தாண்டி மன்னாரை அண்மிக்கையில் இராமர் அணை எனச் சொல்லப்படும் மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான பாக்கு நீரிணையில் மிகத் தெளிவாகத் தெரிந்தன. ஏறத்தாழ ஒருவருடத்தின் பின் தாயக மண்ணில் கால் பதிக்கப் போவதான உணர்வே நெஞ்சுக்குள் பரவசத்தை ஏற்படுத்தியது. விமானம் தாழப்பதிந்து கடலின் மேல் அரைவட்டமடித்துப் பின் பலாலி விமான தளத்திற்குள் இறங்கத் தொடங்கியது.

யாழ்நகரினை பேரூந்தில் வந்தடைந்து பின் முச்சக்கர வண்டியில் வீட்டினை அடைகையில் அம்மா வாசலில் நின்றிருந்தார். அவர் மிகவும் இளைத்திருந்ததாய்த் தெரிந்தது. ஓட்டோவிலிருந்து இறங்கியதும் கட்டிணயைத்து முத்தமிட்டவர்,
“என்னடா நல்லா வயக்கெட்டுப் போனாய். சாப்பாடு ஒத்து வரேல்லையா?”

சிரிப்பாய் வந்தது. இங்கிருந்து போகையில் 28 ஆயிருந்த இடுப்பளவு இப்போது 30 ஆகியிருந்தது. எல்லா அம்மாமாருக்குமே தங்கள் பிள்ளைகள் தங்களை விட்டு விலகியிருக்கையில் உணவிற்கு என்ன செய்கின்றார்களோ? எப்படிச் சமாளிக்கின்றார்களோ என்கின்ற ஏக்கங்கள் இருக்கத்தானே செய்கின்றன. தாயோடு அறுசுவை போம் என்று சும்மாவா சொன்னார்கள்?

நாட்கள் வேகமாக ஓடின. 1998 செப்டம்பர் 26. தியாகி திலீபனின் பதினோராவது நினைவு தினத்தையொட்டி யாழ்நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அன்றைய தினம் சனிக்கிழமையாதலால் வெளியே செல்லவேண்டிய தேவையேதும் இருக்கவில்லை. அன்றைய தினமும் அமைதியாகவே கழிந்திருந்தது. மறுநாள் மதியமளவில் அந்தச் சேதி பரவத் தொடங்கியிருந்தது. அதை உர்ஜிதம் செய்யுமாற்போல் அம்புலன்ஸ் வண்டிகள் அபாய சமிக்ஞைகளை அலற விட்டவாறே கண்டி ஏ9 வீதிவழியே வந்து பலாலியை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. கிளிநொச்சியில் கடும் சண்டை நடைபெறத்தொடங்கியிருந்தது. வெற்றிநிச்சயம் என்று சொல்லி வவுனியாவிலிருந்து புறப்பட்ட சிங்களப்படை புளியங்குளத்தில் முக்கி முனகி மாங்குளத்திற்கு அண்மையில் திணறித் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் மாங்குளத்தை ஏலவே கைப்பற்றி விட்டதாக இராணுவம் அறிவித்து விட்டிருந்தது. விரைவில் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு தரைவழிப் பாதையைத் திறந்துவிடப்போவதாக ஜெனரல் அனுருத்த ரத்வத்த அவர்கள் சூழுரைத்திருந்தார்கள். ஆகையினால் மாங்குளத்தில் போக்குக் காட்டிவிட்டு இப்போது கிளிநொச்சியிலிருந்து முன்னேறத் தொடங்கியிருக்கின்றது சிறிலங்காப்படைகள் என்றே ஆரம்பத்தில் எல்லோரும் பேசிக் கொண்டனர். ஆயினும் அன்றைய இரவிற்குள்ளேயே இயக்கம்தான் கிளிநொச்சியைப்பிடிப்பதற்கான சண்டையைத் தொடங்கியிருப்பதாக வானொலியூடாக அறியக் கிடைத்திருந்தது. அம்மா அந்தரிக்கத் தொடங்கியிருந்தார். ஆண்டவனிடம் அக்காவையும் அவளைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றுமாறு பிரார்த்தித்தபடியே இருந்தார். Welcome party-யில் நடந்த சம்பவத்தின் பின்னர் மானசீகமாய் அக்கா என்னிடம் வருவது நின்று போயிருந்தது.

கடவுள் இருக்கு இல்லை என்கின்ற விவாதம் எனக்கு இப்போதைய நிலையில் அர்த்தமற்றதாய்ப் பட்டது. எனக்கு என்னுடைய அக்கா வேண்டும். எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் கை தானாகவே கூப்பியது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். அதன் பொய்மெய்களுக்கப்பால் அதை நம்பிப் பிரார்த்திப்பதே இப்போதைக்கு நெஞ்சுக்கு நிம்மதி தரக்கூடிதொன்றாக இருந்தது. மறுநாள் கிளிநொச்சி வெற்றிகொள்ளப்பட்ட சேதி களிப்பினைத் தந்தாலும் அக்காவின் நிலைமை தெரியாமல் நானும் அம்மாவும் கலங்கிக் கொண்டிருந்தோம்.

அடுத்தநாள் 29 செப்ரம்பர் 1998 திங்கட்கிழமை. இப்படியே அம்மாவை விட்டுவிட்டு வெளியே செல்ல ஒருமாதிரி இருந்ததால் நானும் Training site -இற்குப் போகவில்லை மாலை நெருங்குகையில் தீபன் வந்தான்.
“மச்சான் மத்தியானம் வெளிக்கிட்ட lion-air plane -ஐக் காணேல்லையாமடாப்பா”

“என்னடா சொல்லுற?”

“ஓமடாப்பா! செக்கண்ட் பிளைற் சனம்தான் அதில போனதுகள். ஆரும் தெரிஞ்ச ஆக்களும் போச்சினமோ எண்டும் தெரியேல்லை”

அடுத்தநாள் தினசரிகள் 48 பயணிகள் உட்டபட 54 பேர் விமானத்துடன் காணமல்போன செய்திகளை உறுதிப்படுத்தியிருந்தன. அதன்பின்னர் யாழ்-கொழும்பு விமான சேவைகள் காலவரையறையின்றி

நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் யாழ் திருமலை கப்பல் பயணமும் இடைநிறுத்தப்பட மக்களுக்கான வெளியிடப் போக்குவரத்துத் தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டன.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17