Saturday, May 8, 2010

வேரென நீயிருந்தாய்... (12)


அதுவொரு வெள்ளி இரவு. குறிஞ்சிக்குமரன் கோவிலிலிருந்து எங்களில் சிலரையும் அழைத்துக்கொண்டு இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

என்னருகில் வந்த ஒருவன்,

எனக்குப் பின்னால என்னோட வா” என்று சொல்ல சரியென்று தலையாட்டினேன்.


பள்ளிவாசல் அருகிலிருந்த பள்ளத்தாக்கின் ஒற்றையடிப் பாதையினூடக இறங்கி, படிக்கட்டினை அடைகையில்,

டேய்! எத்தனை படிக்கட்டு எண்டு எண்ணிக்கொண்டு வாறாய். கீழ வந்ததும் சரியாச்சொல்ல வேணும். இல்லையெண்டால் திரும்பவும் மேல ஏறி எண்ணிக்கொண்டு வரவேணும் சரியா?”

படிக்கட்டுகளை எண்ணிக் கொண்டே அவர்களுடன் இறங்கத் தொடங்கினேன்.

என்னடா உன்ரை பெயர்?

“திடுக்கிட்ட தீவான்”

இப்ப உனக்கு என்ன ராக்கிங்கே நடக்குது? card name-ஐச் சொல்லு

“ஜெயந்தன்”

அப்பன் இல்லையோடா உனக்கு?

“சுந்தரலிங்கம் ஜெயந்தன்”

எந்த இடம்?

“வேலணை.”

கொப்பர் என்ன வேலை பாக்கிறேர்?

அமைதியாயிருந்தேன்.

கேட்டது விளங்கேல்லையா?

“இல்லை. விளங்கினது”

அப்ப ஏன் பதில் சொல்லேல்லை?

அப்பா உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதே தெரியாத நிலையில் என்னவென்று சொல்வது? மீண்டும் மௌனமாயிருந்தேன்.

என்னடா? அப்பா செத்துப்போய்ற்ரேரா?

மீண்டும் பதிலளிக்காதிருந்தேன்.

சரி வீட்டிலை எத்தினை பேர்?

“ரெண்டு பேர்.”

ஆராரு?

“நானும் அம்மாவும்”

கூடப்பிறந்த ஆக்கள் ஒருத்தரும் இல்லையோ?

அக்காவைப்பற்றி இங்கே இருக்கும் சூழ்நிலையில் எப்படி சொல்ல முடியும்? மௌனமாயிருந்தேன்.

என்ன? ஒழுங்காக் கேட்டால் பதில் சொல்லமாட்டியளோ? ராக்கிங் குடுத்தாத் தான் சொல்லுவியளோ?

“இல்லை என்னோட கூடப்பிறந்த ஆக்கள் ஒருத்தரும் இல்லை.”

சரி! இது வரைக்கும் எத்தினை படி இறங்கியிருக்கிறம்?

“எண்ணேல்லை”

ஏன்?

“உங்களோடை கதைச்சுக் கொண்டு வந்ததில எண்ண மறந்திற்றன்”

ஏன்ரா? ஒரே நேரத்தில ரெண்டையும் செய்ய உனக்குத் தெரியாதா? multi tasking எண்டு கேள்விப்படேல்லையா?

மௌனமாயிருந்தேன்.

உனக்கு இறங்க முதல் என்ன சொன்னான்? போ! மேல ஏறிப்போய் திரும்ப எண்ணிக்கொண்டு வா!

மேலே ஏற,

உன்னோட கனக்கக் கதைக்க வேணும். கீழ வந்து என்னைச் சந்திக்க வேணும். சரியா?

சரி என்று சொல்லியவாறே மேலே ஏறினேன். இருபது படிகள் வரை ஏறியிருப்பேன். எதிரே வந்தவர்களில் ஒருத்தன்,

அண்ணை எங்க மேல போறாய். வாடா எங்களோட”.

அவர்களுடன் சேர்ந்து கீழே இறங்கி நடக்கலானேன்.

டேய்! உன்னை என்னோடையெல்லா வரச்சொன்னான்.

அவன் எங்களோடைதான் வருவான்.

அவங்களோடை போனால் நீ பிறகு என்னட்டைச் செத்தாய் மவனே.

என் நிலை இருதலைக்கொள்ளி எறும்பானது. இப்போது எந்தப் பக்கம் போனாலும் மற்றப் பக்கத்தினரின் ஆத்திரத்திற்கு உள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம். முன்னவருடன் சென்றால் பின்னால் வந்த மூவரினதும் கோபத்திற்கு ஆளாகவேண்டும். இவர்களுடன் சென்றால் அவர் ஒருவரின் கோபத்திற்கு மட்டுமே ஆளாகவேண்டும். எனவே பின்னால் வந்தவர்களுடன் இணைந்து செல்லலானேன். அவர்களுடனேயே 'ஐடியல்' இல் இரவுணவை முடித்துவிட்டு வெளியே வந்தேன்.

ஏன்ரா அவனை விட்டிட்டு எங்களோட வந்தனி? நீ அவனோடையெல்லா போயிருக்கோணும். அவனிட்டத் துலையப்போற

என்று அவர்கள் சொன்னதும் பகீர் என்றது.

சரி சரி. இண்டைக்கு எங்களோட எங்கட றூமுக்கு வா!

அக்பர் விடுதிக்குச் செல்லலாம் என்ற நினைப்பில் மண் வீழ்ந்தது.

அவர்களின் இருப்பிடத்தை அடைந்ததும்,

இன்னும் கொஞ்சநேரத்தில அவன் வந்திருவான். உன்னைக் கண்டான் எண்டால் துலைப்பான். அறைக்குள்ள போய்ப்படுத்து நித்திரையைக் கொள்ளு

அட! அவர்கள் எல்லோருமே ஒரே வீட்டில்தான் தங்கியிருக்கிறார்களா? நெஞ்சம் படபடக்க அறையினுள் சென்று படுத்துக்கொண்டே, காதைத் தீட்டி வைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் அவனின் குரல் கேட்டது.

மச்சான்! உன்னட்டை ஒரு விசிற்றர் வந்திருக்கிறேரடாப்பா.

என்னைத்தான் போட்டுக்கொடுக்கிறார்கள் என்பது விளங்கியது.

ஆரடா?

றூமுக்குள்ள படுத்துக்கிடக்கிறான். போய்ப்பார்”.

அறையின் மின்குமிழ் ஒளிர்ந்தது.

அட பேய்ப்....எழும்பி வெளியால வாடா

அட்ரீனலினின் அதிஉச்ச சுரப்புடன் வெளியே வந்தேன்.

அடியடா ரிப்ஸ். சொல்லும்மட்டும் நிப்பாட்டக்கூடாது.

சொல்லி விட்டு அறையினுள் நுழைய, நான் ரிப்ஸ் (தண்டால்) அடித்துக் கொண்டிருந்தேன்.

டேய் என்ன செய்யிறாய்?
அப்போதுதான் வீட்டினுள் நுழைந்திருந்த வேறொருவன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

நிப்பாட்டீற்று எழும்பு!

எழுந்தேன்.

என்னடா பேர்?

“சுந்தரலிங்கம் ஜெயந்தன்”

எந்த இடம்?

“யாழ்ப்பாணம்”

யாழ்ப்பாணம் எவ்விடம்?

”வேலணை”

வேலணை எங்க? அந்தப் பிள்ளையார் கோயிலுக்கு என்ன பேர்? மறந்து போச்சு. அதுக்குக் கிட்டவா?

யாழ்ப்பாணத்தில் எல்லா ஊர்களிலும் கோயில்கள் இருக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு யாழ்ப்பாணமே தெரியாதவர்கள் எல்லாம் அந்தப் பிள்ளையார் கோயிலுக்குக் கிட்டவா வீடு என்றோ அல்லது இந்த வைரவர் கோயிலுக்குக் கிட்டவா வீடு என்று கேட்டு ஏதோ தானும் அந்த இடத்தைச் சேர்ந்தவன்தான் என்று காட்டிக் கொள்வதைப் பலமுறை அனுபவத்தில் கண்டிருந்ததால் எரிச்சல் வந்தது.

டேய்! உன்னை என்ன சொல்லீற்றுப் போனான்? ஏன் எழும்பினனீ? அடியடா ரிப்ஸ்

கொஞ்சம் பொறு மச்சான். நான் இவனோடை கொஞ்சம் கதைக்க வேண்டியிருக்கு

நீ எவ்வளவு நேரமெண்டாலும் கதை. இவன் இண்டைக்கு இஞ்சதான் இருக்கப்போறான். இண்டைக்குத்தான் இவனுக்கு என்னைப்பற்றித் தெரியப் போகுது.

வேலணை எவ்விடம்?

“மணியாறன் வீட்டடி.”

மணியாறன் வீட்டடியோ?

“ஓம்!”

அப்பர் என்ன வேலை?

மௌனமாயிருந்தேன்.

அப்பர் இல்லையே? செத்திற்றேரே?

சரிசரி. எல்லாரும் ஒருநாள் சாகிறதுதான். என்ன வேலை செய்தவர்?

“கடை வைச்சிருந்தவர்”

எங்கை?

“வங்களாவடியில”

ஓ! அப்ப நீ, வேலணை சென்றலில படிச்சனியா?

“ஓம்”

எத்தனையாம் ஆண்டு வரைக்கும் படிச்சனி?

“91 இல முழுசா இடம்பெயருற வரைக்கும் படிச்சனான்”

அப்ப பள்ளிக்கூடத்தில என்னைக் காணேல்லையா?

“கண்டது போலதான் இருக்கு. சரியா ஞாபகமில்லை”
சும்மா சடைந்தேன்.

ம்ம்ம்... நீ மணியாறன் வீட்டடி எண்டு சொன்னனி என. ஆ! உனக்கு ஜெயந்தினியைத் தெரியுமா?

நெஞ்சு திக்கென்றது. அங்க இங்க சுத்திக் கடைசியா அடிமடியில கையை வைச்சிட்டானே.

“எந்த ஜெயந்தினி?”

90 ஆம் ஆண்டு எந்த வகுப்பில படிச்சனீ?

“8ம் வகுப்பு”

அவள் அப்ப என்னோட O/L படிச்சுக் கொண்டிருந்தவள். அவளும் மணியாறன் வீட்டடிதான்.

“தெரியேல்லை”.

வடிவா யோசிச்சுப்பார். ஒரு நீலக்கலர் லேடீஸ் சைக்கிளில வாறவள்.

ஆரையடா விசாரிக்கிறாய்?” - இடையில் புகுந்தான் அவன்.

ஜெயந்தினி எண்டு ஒரு சுப்பர் சரக்கு மச்சான். என்னோட படிச்சவள். 90 ஆம் ஆண்டு பிரச்சனைக்குப் பிறகு அவளைக் காணக்கிடைக்கேல்ல.

இஞ்ச வா! உனக்கு அவளத் தெரியாதோ? உங்கட வீட்டுக்குக் கிட்டத்தான் அவளும் இருந்திருக்க வேணும்.

“ஞாபகம் இல்லை அண்ணே!”

அவளின்ர அப்பர் வங்களாவடிச் சந்தியில கடை வைச்சிருந்தவர். நல்லா யோசிச்சுப்பார். அவளுக்குத் தம்பியும் ஒருத்தன் இருந்தவன். உங்களோட தான் படிச்சிருப்பான் எண்டு நினைக்கிறன்.

“எனக்கு நினைவில்லை அண்ணே!”

பொய் சொல்வதென்று முடிவெடுத்த பின் அதில் தளம்பக்கூடாது என்பதை கடந்தகால பகிடிவதை அனுபவங்களிலிருந்து உணர்ந்திருந்ததால் பொய்யுரைத்தேன்.

நீ சுத்துறாய்

“இல்லையண்ணே!”

உன்ரை அப்பரும் வங்களாவடியில தானே கடை வச்சிருந்தவர்?

தயக்கத்துடன் தலையசைத்தேன். பிடி கொடுத்து விட்டேன் என்கின்ற பயம் வயிற்றைக் கலக்கியது.

மச்சான்! நீ செமையாச் சுத்துற. ஆனா இன்னொரு வேலணையானுக்குச் சுத்துப்பாக்கிறாய் எண்டது உனக்கு விளங்கேல்ல. ஜெயந்தினி, ஜெயந்தன் பேர்களைப் பார்க்க விளங்கேல்லை? டேய் நீ அவளின்ர தம்பி தானே. உண்மையைச் சொல்லு அவள் இப்ப என்ன செய்யிறாள்?

ஆட்களை அறியாமல் அக்காவைப் பற்றி எப்படிச் சொல்ல முடியும்? நாக்குக் கூசினாலும் எனக்கு அப்பிடியொரு அக்காவே இல்லை என்றேன்.

மச்சான் டேய்! இவன் செமச்சுத்துச் சுத்துறான் மச்சான். இவனோட இனிக் கதைச்சு வேலையில்ல. நீயே கவனிச்சுக் கொள்ளு

சொல்லிவிட்டு என்னை விட்டுவிட்டு விலகினான்.

அண்ணை நீ ரிப்ஸை அடிக்கத் தொடங்கு

50 இற்கு மேல் தாண்ட முடியவில்லை. pushup பண்ண முடியாமல் அப்படியே படுத்து விட,

என்ன களைச்சுப் போயிற்றியே? எத்தனை ரிப்ஸ் அடிச்சனீ?

“அம்பது”

சரி எழும்பித் தோப்புக்கரணம் போடு. அஞ்ஞூறு (500) தோப்புப் போட வேணும்.

மண்டை விறைத்தது. என்னால் அவ்வளவு போட முடியாது என்பது புரிந்தது. எதுவும் செய்யாமல் அப்படியே நின்றேன்.

என்னடா முறாய்க்கிறாய்? போடச் சொன்னால் போட மாட்டியா?

அமைதியாய் இருந்தேன்.

சரி! அப்ப நீ வெளியால போ. நீ அன்ரி ராக்கர் எண்டு நான் மற்றாக்களுக்கு inform பண்ணி விடுகிறன். நீ இனி ஒருத்தரிட்டையுமே ராக்கிங் வாங்கத் தேவையில்லை.

அதற்கும் அமைதியாயிருந்தேன்.

போடா வெளிய. அன்ரி ராக்கர் எல்லாம் இஞ்சை வரக்கூடாது.

அன்ரி ராக்கர் ஆக மாறி விட்டால் பிறகு instructors-மாரிடம் சொல்லி course works எல்லாம் fail-ஆக்கிப் போடுவாங்கள். ஒரு நிகழ்ச்சிகளுக்கும் போக விடமாட்டாங்கள். எல்லாரும் ஒருமாதிரித்தான் பார்ப்பார்கள். படிப்பை முடிச்சு வெளியால வாறதே சரியான கஷ்டம் எனப் பரவியிருந்த பலவிதமான வதந்திகளையும் உண்மையென நம்பியதன் விளைவாக தன்னிச்சையாக வெளியே செல்ல முயன்ற கால்களை மூளை தடுத்து நிறுத்தியது.

“நான் தோப்புக் கரணம் போடுறன் அண்ணே!”

அப்பிடியெண்டால் ஆயிரம் தோப்புக்கரணம் போடவேணும். போடு

ஆரம்பித்தேன். சிறிது நேரத்தின் பின்னர்,

எத்தின போட்டிட்டாய்?

“நூற்றிமுப்பத்தெட்டு”

ம்... தொடர்ந்து அடி

அடித்துக் கொண்டேயிருந்தேன்.

மீண்டும் சிறிது நேரத்தின் பின்,

இப்ப எத்தின?

“முன்னூற்றிப்பன்னிரெண்டு”

அதுக்குள்ள முன்னூற்றிப்பன்னிரெண்டு அடிச்சிற்றியோ? சிலோவாப் (slow) பண்ணு. பிறகு உடம்புக்கு ஏதாவது ஆகீரும்

ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. ஆடு நனையுதெண்டு ஓநாய் அழுதிச்சாம். மனதிற்குள் வன்மம் பிறந்தது. கடவுளே எனக்கு ஏதாவது ஆக வேண்டும். அதன் பழி இவன் மீது விழவேண்டும். எல்லோரும் இவனைக் கேவலமாய்ப் பார்க்க வேண்டும். நான் செத்தாலும் பரவாயில்லை. இவன் பழிவாங்கப்படவேண்டும் என்கின்ற விபரீத எண்ணம் ஆற்றாமையின் உச்சக்கட்டத்தில் வந்து நின்றது. மிக மிக வேகமாக தோப்பக்கரணம் போடத் தொடங்கினேன்.

இப்ப எத்தினை?

“அறுநூற்றியெழுபத்தெட்டு”

காணும் நிப்பாட்டு

“நீங்கதானே ஆயிரம் போடச் சொன்னீஙங்க!”

அது அப்ப. இப்ப சொல்லுறன், காணும் நிப்பாட்டு

நிறுத்தாமல் அடித்துக் கொண்டிருந்தேன்.

நீ என்ன அன்ரி ராக்கரா?

“இல்லை”

அப்ப சொல்லுறது கேக்க வேணும். நிப்பாட்டு எண்டால் நிப்பாட்ட வேணும்

மதம் கொண்ட யானையின் நெற்றியில் அங்குசத்தால் குத்துகையில் எப்படி அதன் வெறி தணிகிறதோ, அப்படியே அன்ரி ராக்கர் என்கின்ற மந்திரச் சொல்லுக்கு என் மனமும் ஏனோ பணிந்து விட்டது.

களைச்சுப் போனாய். இந்தா ரீ-யைக் குடி

விசர் விசராய்க் கிளம்பியது. குடிக்க மறுத்தேன்.

இதுவும் ராக்கிங்தான். குடிக்க விருப்பமில்லையெண்டால் அன்ரி ராக்கர் எண்டு சொல்லீற்று வெளிய போ!

தந்த தேனீரைக் குடித்தேன்.

சரி! அக்பருக்கு இப்ப போகப் பயமெண்டால் இங்கையே படுத்திற்று விடிய எழும்பிப் போ!

“இல்லை நான் அக்பருக்கே போறன்”

அதுவும் நல்லம் தான். விடியேக்க ஆரும் கண்டாங்கள் எண்டால் பிறகு பிடிச்சுக் கொண்டு போயிருவாங்கள். ரோச்லைட் வேணுமா நேரம் ஒரு மணியாகப் போகுது

”வேண்டாம்”

தனியப் போகப் பயமெண்டால் றோட்டுவரைக்கும் வரவா?

சிரிப்பாய் வந்தது. அங்குணாவலையில் இருக்கையில் ராக்கிங் முடிந்து நடுச்சாமம் 12 மணிக்குப் பின்னரும் கூட சுடுகாட்டினைக் கடந்து இருப்பிடத்திற்குச் சென்றிருக்கிறேன். அந்தளவிற்கு பகிடிவதை பற்றிய பயம் பேய்கள் பிசாசுகள் பற்றிய பயத்தினை விரட்டி விட்டருந்தது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக இங்கிருந்து நகரச் சொல்லி மனம் கூறியது.

“இல்ல நான் போயிருவன்” கூறிவிட்டு, விரைவாக நடக்க முடியாமல் கால்தொடைகளுக்குள் பிடித்துக் கொண்டதால் மெதுவாக நடந்து 15 நிமிடங்களில் அடைய வேண்டிய அக்பர் விடுதியினை 40 நிமிடங்களில் சென்று சேர்ந்து எனது அறையினை அடைந்தேன்.

என்னடா? இப்பத்தான் வாறியா? ஆரு பிடிச்சுக் கொண்டு போனவங்கள்?
அறைக்கதவைத் திறக்கையில் எழுந்த சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்டு கேட்டான் அறை நண்பன் தீபன்.

“மச்சான்! இவ்வளவு நாளும் நான் ஒருத்தருக்கும் ராக்கிங் குடுக்கிறதில்லையெண்டுதான் இருந்தனான். இப்ப சொல்லுறன் மச்சான். அடுத்த batch-இல ஆராவது அந்தப் பேய்ப்....... தெரியுமெண்டு சொன்னாங்களோ அவங்கள் எல்லாரும் என்னட்டச் செத்தாங்கள் மச்சான்”

என்னை வியப்புடன் பார்த்த தீபன் எழுந்து விளக்கைப் போட்டான்.

என்னடா நடந்தது? இவ்வளவு நாளும் நாங்க தூஷணம் கதைச்சால் எங்களைப் பேசுறநீ, இண்டைக்கு நீயே தூஷணம் கதைக்கிற?

“அந்தப் பேய்ப்....யை வேற என்னெண்டு சொல்லுறது? எனக்கு மச்சான் தோப்படிச்சதோ இல்லாட்டி கறண்ட் வேண்டினதோ வலிக்கேல்லை மச்சான். தோப்படிக்கேக்க அந்தப் ... சொன்னான் மச்சான் மெதுவா அடி. இல்லாட்டி உடம்புக்கு ஏதாவது ஆகிருமாம். அதைத்தான் மச்சான் என்னால தாங்கேலாமக் கிடக்கு”

சரிசரி இதெல்லாம் சகஜமெடாப்பா? ராக்கிங் முடிய இன்னும் ஒருமாதம் தானே கிடக்கு. விண்டோஜின் வேணுமெண்டால் அந்த மேசை லாச்சிக்க கிடக்கு. எடுத்துப் பூசிற்றுப் படுடாப்பா

விளக்கை அணைத்து விட்டு தீபன் படுத்துக் கொண்டான்.

அவன் மீதான ஆத்திரம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அடுத்த batch-இல் அவனைத் தெரியுமென்று யாரெல்லாம் சொல்கிறார்களோ அவர்களை வதைத்தெடுப்பதாய்த் தீர்மானித்துக் கொண்டதன் பின்தான் மனக் கொந்தளிப்பு ஓரளவிற்கு அடங்கியது.

***********

ஜேன்....! வலிக்குதாடா...?

“அக்கா..... நீ எப்படி இஞ்ச?”

எனக்கெல்லாம் தெரியும். உன்னைப்பற்றி நான் எவ்வளவோ நினைச்சு வைச்சிருக்கிறேன். அதையெல்லாம் கலைச்சுப்போடாதே

“நீ என்ன சொல்லுறாய்? எனக்கொண்டும் விளங்கேல்லை”

நீயும் இண்டைக்கு ஒரு பெம்பிளையை அதுவும் ஒரு தாயைக் கேவலமாய்ப் பேசிப்போட்டாய்தானே!.

“என்ன சொல்லுற நீ?”

தீபனிடம் உன்னை ராக் பண்ணினவனைப்பற்றி நீ தூஷணத்தால் பேசினனீ தானே. அவன் செய்த பிழைக்கு எப்படி நீ அவன்ர அம்மாவைப் பழிக்கலாம்?

அடடா! அகராதிகளில் அடங்காத செந்தமிழ் வார்த்தைகள் எல்லாமே பிறப்புறுப்புகளையும் பிறப்பித்தவளையும் பற்றிமல்லவா இருக்கின்றன. எதற்காக ஒருவனை ஏசுவதற்காக அவன் தாயைப் பழிக்க வேண்டும்? இதுவும் பெண்ணடிமைத்தனத்தின் மீதான ஆணாதிக்கத்தின் ஒரு வகை வெளிப்படா? உண்மையிலேயே ஒவ்வொரு ஆணின் தப்பிற்கும் அவன் தாய்தான் காரணமா? அப்படியானால் தந்தைக்கு அதில் எந்தப் பங்கும் கிடையாதா? “தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி யிருப்பச் செயல்” என்றாரே வள்ளுவர். பின் எதற்காக எனது தமிழ் சமூகம் ஒரு ஆணைத் திட்டுவதற்காய் அவன் தாயைக் கேவலப்படுத்துகிறது?. எல்லா சமூகங்களிலும் எதிராளியைத் திட்டுவதற்காய், எதிராளியின் அன்னை இழுக்கப்படுகிறாளா? குழப்பமாயிருந்தது. “எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே...” பாடல் நினைவினில் வந்து போனது. அக்காவைப் பார்த்தேன். சிரித்தாள்.

எங்கடை அம்மாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்? அப்பா இருக்கேக்கையும் சரி, ஆமி பிடிச்சுக்கொண்டு போனாப்பிறகும் சரி. உன்னைப் பிழையாவா வளர்த்திருக்கிறா?

“ஐயோ! என்ன கதைக்கிற நீ! எங்கட அம்மா, அவவை எதுக்கு இப்ப இதுக்குள்ள கொண்டு வாறாய். அவா என்ன பிழை செய்தவா?”

அடுத்த batch-இல உன்னட்ட ராக்கிங் வாங்கப் போறவனும் உன்னைத் திட்டுறன் எண்டு எங்கடை அம்மாவைத்தானே பழிக்கப்போறான்

நெற்றிப்பொட்டில் அறைந்தாற் போல் வலித்தது.

இன்று என்னை பகிடிவதைக்கு உட்படுத்தியவனுக்கும் அவனது பகிடிவதைக் காலத்தில் இப்படித்தான் வலித்திருக்குமோ? அவனது சீனியர் மேல் எழுந்த வன்மத்தை என்னிடம் பழி தீர்த்திருக்கிறான். நான் எனது ஜூனியர்களிடம் பழிதீர்க்க நினைத்திருக்கிறேன். இப்படியே தலைமுறை தலைமுறையாய் இந்த வினை கைமாறிக் கொண்டேயிருக்கப் போகின்றதா? இதுவும் இந்திய தமிழ்த்திரைகளில் வருகின்ற மாமியார் மருமகள் கொடுமை போன்றது தானா?

“அக்கா!” - கேவலுடன் எழுந்தேன்

அட! எல்லாமே கனவுதானா?

தொடைகளில் வலி பரவி வருவது தெரிந்தது. எழுந்து விண்டோஜினை எடுத்துத் தேய்த்துக் கொண்டேன். சற்று நேரத்திலேயே வலி குறைந்தது. நெஞ்சை அழுத்திப் பிடித்து வைத்திருந்த பாரம் ஒன்று விலகிச் செல்வதையும் உணர்ந்தேன். கனவில் வந்து என் மன வலிகளுக்கு களிம்பு தடவி களைந்து விட்டுச் சென்றிருக்கிறாள். எவ்வளவு நாசூக்காக நான் பண்ணவிருந்த தப்பினை உணர்த்திவிட்டிருக்கிறாள்? இப்படியொரு அக்கா கிடைக்க, நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? இனியெடுக்கும் எல்லாப்பிறப்பிலும் இந்தப் பந்தம் தொடரவேண்டும். இறையே! நீ இருப்பது உண்மையோ பொய்யோ நானறியேன். ஆனாலும் உன்னிடம் எனக்கொரு வரம் வேண்டுமென்றால். என் எல்லாப் பிறப்பிலும் இநதப் பந்தங்களைத் தொடரச் செய்வாயாக!

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11

Thursday, May 6, 2010

வேரென நீயிருந்தாய்... (11)


அது முதலாண்டிற்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகி இரு தினங்கள் கழிந்து வந்த முதலாவது புதன் கிழமை. செவ்வாய்க்கிழமை முழுதும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட விரிவுரைகளை விளங்கிக்கொள்ள முடியாமலிருந்ததால் தூக்கக்கலக்கத்தில் நாள் கழிந்திருந்தது. புதன் காலை Elect lab-இல் practical வகுப்பிற்குள் நுழைந்தேன். A2-6 குழுவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த மேசையை அடைந்துவிட்டிருக்கையில் வேறு யாரும் வந்து விட்டிருக்கவில்லை. மற்றைய குழுக்களில் அனேகமாக எல்லோருமே வந்து விட்டிருந்தனர். மூவர் கொண்ட குழுவில் நான் மட்டுமே தனித்திருந்தேன். என்னுடைய குழுவிற்கு வரவேண்டிய மற்றைய இருவரும் யாரெனவும் தெரியவில்லை. ஜெயக்கொடியும் என்னுடைய குழுவில்தான் இருப்பதாகத்தெரிந்திருந்தாலும் அவளை Surveying-இலோ அல்லது Drawing-இலோ காணக்கிடைக்கவில்லை. ஆய்வுகூடங்களில் என்னுடைய குழுவில் வருகின்ற உறுப்பினர்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தாலும் அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்திருக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து எனது மேசையை நாடி நதீஷா அரக்கப்பரக்க ஓடி வருவது தெரிந்தது. அட! Elect lab-இலும் இவள் எனது group mate தானா? அவள் வரவும் போதனாசிரியர் எமது மேசைக்கு வரவும் நேரம் சரியாயிருந்தது.

“Only 2 ppl? where is the other one?”

போதனாசிரியரின் வினாவிற்கு மௌனமாயிருந்தோம்.

“Do you know who is your other group mate?”

என்னை நோக்கிக் கேள்வியை வீசினார். தெரியாது என்பதற்கு அடையாளமாய் தலையசைத்தேன்.

“You?”
அவளும் பதிலுக்கு உதட்டைப் பிதுக்கினாள்.

“OK. Let me check the name list”

பெயர் நிரலைப் பார்த்து விட்டு “Are you Jeyarajan?” என்றவருக்கு


“No, I'm Jeyanthan” என்றேன்.

“Oh! OK, then he is the one abscent”

என்று சொன்னதைக் கேட்டதும் திகைப்பாயிருந்தது.

அப்படியானால் ஜெயக்கொடி? நான் அன்றைக்குப் பார்த்தபோது எனது பெயருக்கு முன்னால் ஜெயக்கொடி என்று இருந்ததே. தப்பாய்ப் பார்த்து விட்டேனா? இல்லை அப்படிக்கனவேதும் கண்டேனா? குழப்பமாயிருந்தது. ச்சே! இப்படி ஒருபோதும் குழம்பியதில்லை. எல்லாம் பகிடிவதை செய்கின்ற வேலைதான். அறை நண்பன் கடிக்கப்போகின்றான். அவனுக்கு எந்தவொரு குழுவிலும் பெண்கள் இல்லையென்பதை வைத்து அவனை வேறு, நன்றாக வெறுப்பேற்றியிருந்தேன்.

“OK, Show me your practical book's cover page.”

இருவரும் போதனாசிரியரிடம் எங்களது கொப்பிகளைக் கொடுத்தோம். வாங்கி அவற்றைச் சரிபார்த்தவர் மீண்டும் எங்களிடமே திருப்பித் தந்தார். என்னிடம் தந்ததை வாங்கி மேசையில் வைக்கையில் எதேச்சையாய் பார்த்தேன்.

Name: Miss. N. Jeyakkody
Group: A2-6
.....

அதிர்ச்சியாயிருந்தது. அப்படியானால் இவள்தான் ஜெயக்கொடியா? Surveying-இல் தன் பெயர் நதீஷா என்றாளே!. ஓ! நதீஷா ஜெயக்கொடி. அப்படியானால் ஜெயக்கொடி என்பது இவளின் முதற்பெயர். ச்சே! என்னவொரு மடத்தனம்! சிங்களத்தில் ஜெயக்கொடி என்பது ஆணின் பெயர் என்பது தெரிந்திருந்தும் இத்தனை நாளும் ஜெயக்கொடியை ஒரு தமிழ்ப்பெண்ணாக அல்லவா நினைத்துக் கொண்டிருந்திருக்கின்றேன். எனது குழுவில் ஒரு பெண்தான் என்பது தெரிந்திருந்தும், இவள் தனது பெயர் நதீஷா என்று சொல்கையில் 'J' வரிசையில் இருக்கும் பெயர்களுக்கிடையில் 'N' வரிசையைச் சேர்ந்த இவள் எப்படி வரமுடியும் என்பதை யோசித்துப்பார்க்கத் தவறியிருக்கிறேன். எப்படி என்னால் இந்த வட்டத்தை விட்டு வெளியே சிந்திக்க முடியாமல் போனது?

Miss. N.Jeyakkody என்கின்ற பெயரைப் பார்த்ததும், அந்தப் பெண்ணின் பெயர்தான் ஜெயக்கொடி என்று என் மனம் எதேச்சையாய் நம்பியிருக்கிறது. ஆகவே அவள் தமிழ்ப் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று அது முடிவு செய்து விட்டிருக்கிறது. அந்த முடிவினை என்மனமும் ரசித்திருக்கிறது. ஆகவே அந்த முடிவினை உண்மையென்று அது நம்பத் தொடங்கியிருக்கிறது.

ச்சே! என்ன ஒரு முட்டாள்தனமான மனம்! அது ஒன்றினை விரும்பி, அதை நம்பத் தொடங்கிவிட்டால், அதன் பின்னர் அதுதான் உண்மையென்று அடம்பிடிக்கத் தொடங்கி விடுகிறது. அது சரியா தவறா என்கின்ற ஆராய்ச்சியில் அது இறங்குவதில்லை. தனது நம்பிக்கைக்கு வெளியே வந்து சிந்தித்துப் பார்ப்பதில் அது ஆர்வம் காட்டுவதில்லை. அல்லது காட்டமுடியாதபடி மூளையை மழுங்கடித்துவிடுகின்றது.

'Think out of the box' என்பார்கள். ஒரு பெட்டிக்குள் அல்லது வட்டத்திற்குள் மாட்டுப்பட்டு நிற்பவர்களால் பலதையும் சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. மனித உறவுகளுக்குள் ஏற்படுகின்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கும் விரிசல்களுக்கும் இதுதானே மூலகாரணமாய் அமைகிறது. தங்களைச் சுற்றி ஒரு வேலியை வரித்துக்கொண்டு அதற்கு அப்பாலிருக்கின்றவை பற்றிய சிந்தனைகளின்றிப் போவதால் நான் சொல்வதுதான் சரி, நான் செய்வதுதான் சரி என்கின்ற பிரக்ஞையில் மற்றவர்கள் பக்கமிருக்கின்ற நியாயத்தன்மைகளை மறுக்கும் எண்ணம் மனதிற்குள் புரையோடிப்போய் விடுகிறது. இந்த மறுதலிப்பும் அதை வெளிக்காட்டும் பாங்கும் உறவுகளுக்குள் விரிசல்களை ஏற்படுத்தி விடுகிறது.

”என்ன அதுக்குள்ள டூயட்டா?”

-காதோரமாகக் கிசுகிசுத்த குரல் சிந்தனையைக் கலைத்தது. போதனாசிரியரின் நக்கல்ப் பார்வையைத் தவிர்ப்தற்காய் தலையைக் குனிந்து கொண்டேன்.

“அவளின்ர கொப்பியை அவளிட்டக் குடுத்திற்று உன்ரைய வாங்கு” என்றவர்

“OK. please go through the instruction and connect the circuit. Don't switch on the power. Once you connected it, first show it to me. OK?”

கூறிவிட்டு அடுத்த குழுவை நோக்கி நகர்ந்தார்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10

Tuesday, May 4, 2010

வேரென நீயிருந்தாய்...(10)


பொறியியற் கற்கைநெறியின் முதலாம்நாள், அக்பர் விடுதிக்குள் குடியேறி இரண்டு நாட்களே கழிந்திருந்தன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எமக்கென தரப்பட்டிருந்த அறைகளைச் சுத்தம்செய்து ஒழுங்கு படுத்துவதிலேயே கழிந்து விட்டிருந்தது. காலை 8.00 மணிக்கு விரிவுரை மண்டபம் 8 இல் ஆரம்பித்த முதலாவது விரிவுரை 9.00 மணிக்கு முடிவுற Surveying Lab இற்கு விரைந்தேன். A2.4 குழுவிற்கான இடத்தினைத் தேடிக்கொண்டிருக்கையில், அட! அது அவளேதான். postal course வகுப்பில் முதற்தடவை சந்தித்ததன் பின்னர் இன்றுதான் அவளைக்காண்கின்றேன். அன்றைய அந்த வகுப்பின் பின்னர் அவள் வேறு வகுப்பிற்கு மாற்றப்பட்டிருந்திருக்கலாம். பகிடிவதை எல்லாவற்றையுமே மறக்கச் செய்திருந்தது. உண்மையில் நாம் சந்தித்த எவையுமே எமது நினைவுகளிலிருந்து அழிந்து விடுவதில்லை. மாறாக எம்மால் அவற்றைச் சரியான தருணங்களில் நினைவுபடுத்திக்கொள்ள முடிவதில்லை. சரியான தூண்டல்கள் கிடைக்கும் போது அனைத்துமே மறுபடியும் நினைவிற்கு வந்து விடுகின்றன. இல்லையெனில், மனோவியலாளர்களால் தம்மிடம் வருவோரை ஆழ்நிலை உறக்கத்திற்கு அழைத்துச்சென்று அவர்களின் பிரச்சனைகளைக் கேட்டறிய முடியாமல் போய்விடுமே!

என்பக்கமாய் பார்த்து அவள் புன்னகைப்பது தெரிந்தது. அட! என்னை நினைவினில் வைத்திருக்கின்றாளே என்று மனத்திற்குள் எழுந்த மகிழ்ச்சி மறுநொடியே காணாமல் போனது.

“ஒயாத் ஏரூ-த?” (நீங்களும் A2 வா?)
-என் பின்னாலிருந்து கேட்டவொரு பெண்குரலுக்கு,

“ஓவ்! மம ஏரூ-போர். ஒயா?” (ஓம்! நான் A2.4. நீங்க?)
-என்கின்ற அவளின் பதிலைக் கேட்டதும், அட இவளும் என்னுடைய குறூப் தான் எனத்தெரிந்தது. அவளின் இடத்தை அடைகையில் மேலும் இரண்டு ஆண்களும் வந்து விட்டிருந்தனர். எங்கள் குழுவிற்கான போதனாசிரியர் வந்ததும்,

“Where is the other one?”
-ஐவர் இருக்க வேண்டிய குழுவினில் ஒருவரைக் காணவில்லையென்பதை அறிந்து கேட்டார் போதனாசிரியர்.

அட! ஆமாம், ஜெயக்கொடியை இன்னும் காணவில்லையே? எங்கே போய்த்தொலைந்தாள்? எப்படியிருப்பாளோ? மனதிற்குள் வினாக்கள் எழுந்தன.

“OK. let me know your names. you are...?”

“I'm Jeyaweera from Matara”

“You...?”

“I'm Jeyasundra from Kegale”

“You...?”

“I'm Jeyanthan from Jaffna”

“And you...?”

“I'm Nadheesha from Kandy”

“OK. Please take all the things and follow me”

எமது குழுவிற்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த உபகரணங்களை எடுத்துக் கொண்டு அவரின் பின்னால் விரைந்தோம். ஜெயக்கொடிக்கு என்ன நேர்ந்திருக்கும் என மனம் யோசித்துக் கொண்டிருந்தாலும் ஏதோ ஒன்று விசித்திரமாயப் பட்டது. எனது முதல்நாள் ஆங்கில வகுப்பில் இவளை, என்ன பெயர் சொன்னவள்? ஆ! நதீஷா எப்போதோ கண்டிருப்பதாகவும், அவளுடன் நன்றாகப்பழகியிருப்பதாகவும் மனதிற்குத்தோன்றியிருந்தது. ஆனால் அதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் இருந்திருக்கவில்லை. ஆனால் இப்போது surveying lab இல், அவள் எனது groupmate ஆக வந்துசேர்ந்திருக்கிறாள். அப்படியானால், அதுவும் ஒருவகை தீர்க்கதரிசனம் தானோ? வேறு ஏதேனும் ஆய்வுகூடங்களிலும் இவள் என்னுடன் groupmate ஆக இருக்கின்றாளா என்று பார்க்க வேண்டும். அன்றைக்கு ஜெயக்கொடியின் பெயரைப் பார்த்ததில் மற்றவர்களில் கவனம் செலுத்தவில்லை என்பது மூளையில் உறைத்தது.

'மனமே மனமே! தடுமாறும் மனமே!
உள்ளுக்குள்ளிருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணைப் பார்க்கும் போது நீயும் சிறகை விரிக்காதே. . .
'

உள்மனதிற்குள் பாடல் ஓடியது.

'ஜேன்! தப்புப் பண்ணுகிறாய். தேவையற்ற எண்ணங்களை உதறிவிட்டு வந்த வேலையைப்பார். உனக்கான இலக்குகள் வேறு' மனதின் வேறொரு மூலைக்குள்ளிருந்து அக்காவின் குரல் கேட்டதும் நினைவுகளை உதறிவிட்டு chain-ஐ எறிந்தேன்.

Wednesday, April 28, 2010

அப்பா என்றால் என்ன அம்மா?



அப்பா எண்டால் என்ன அம்மா?

பாடசாலையால் வந்திருந்த பள்ளிச் சிறுமி செல்வி. சுதந்திரி சிந்தனா விண்மினி தன் தாய்களில் ஒருத்தியான சிந்தனாவிடம் கேள்வியெழுப்பினாள்.

எதற்காக கேட்கிறாய் விண்?

விண்மினியை விண் என்று சுருக்கிக் கூப்பிடுவது சிந்தனாவின் வழக்கம். சுதந்திரிக்கோ விண்மினி எப்போதுமே மினி தான். இந்த விடயத்தில் ஏனோ சுதந்திரியும் சிந்தனாவும் முரண்பட்டுக் கொண்டாலும், கடந்த எட்டுவருட இல்வாழ்க்கையில் அவர்களுக்கிடையே வேறு பெரிதாக எந்தவொரு கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்ததில்லை. ஆயினும் சிந்தனாவிற்கு இப்போது சுதந்திரியின் போக்கில் சாடையான சந்தேகம் ஒன்று துளிர்விட ஆரம்பித்திருந்தது. ஒருவேளை விண்மினியின் இந்தக் கேள்விக்கு சுதந்திரி தான் காரணமாக இருப்பாளோ? சந்தேகம் என்பதும் கணினிக்கான ஒரு வைரஸ் போன்றதே. அது மூளையின் நினைவடுக்குகளினுள் நுழைந்து விட்டால் போதும். வெறும் சாதாரண விடயங்களுக்கெல்லாம் சந்தேகப்படும் விடயத்துடன் முடிச்சுப் போட்டு முழு மனதையுமே முடிந்து விட்டு விடும். அது சுயபுத்தியினை வேலை செய்ய விடாது.

சுதந்திரி அம்மா ஏதும் சொன்னாளா?

விண்மினியிடம் வினவினாள் சிந்தனா.

இல்லையம்மா!

அப்ப எதுக்கு அப்பாவைப் பற்றிக் கேட்கிறாய்?

இண்டைக்கு பள்ளிக்கூடத்திற்கு புதுசா வந்த பிள்ளை ஒண்டு தனக்கு அப்பா இருக்கு எண்டு சொன்னது. எனக்கு அப்பா எண்டால் என்னெண்டு விளங்கேல்ல என்ர பிறண்ட்ஸ்சிலையும் ஒருத்தருக்கும் அப்பா எண்டால் என்னெண்டு தெரியாதாம். அதுதான் கேட்டனான். அப்பா எண்டால் என்னம்மா?

ச்சே! அநியாயமாய் சுதந்திரியைச் சந்தேகித்து விட்டேன். தன்னையே நொந்து கொண்டாள் சிந்தனா.

தொடர்புபட்ட செய்தி: (நன்றி http://www.globaltamilnews.net/)


இருநூறு ஆண்டு காலமாக நீடித்து நிலைத்து நின்ற மரபை அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது அண்மையில் இங்கிலாந்தில் நடந்தவொரு சம்பவம்.

குழந்தை பிறந்தால் அதன் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் தாயினுடையதும் தந்தையுடையதும் பெயரைப் பதிவு செய்யும் மரபு 170 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது.

ஆனால் பிரிட்டனில் அண்மையில் கொண்டு வரப்பட்ட ஒரு (Human Fertilisation and Embryology Act 2008) சட்டம் ஒரு பால் உறவுப் பெற்றோரை பெற்றாரின் இடத்தில் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிட வகை செய்கிறது.

இதன்படி கடந்த வருடம் ஏப்ரல் 1இற்குப் பின்னர் கருக் கொண்ட குழந்தைகளுடைய ஒருபால் உறவுப் பெற்றோர் பிறக்கும் குழந்தையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் தாய் மற்றும் தந்தை என்பதற்குப் பதிலாக தாய் மற்றும் பெற்றோர் என்று தனது ஒரு பால் உறவு இணையைக் குறிப்பிட இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இச்சட்டத்தின் கீழ் பிரிட்டனில் பிறந்து முதல் குழந்தை லில்லி மே. லில்லி மே கடந்த மார்ச் 31ஆம் திகதி பிறந்தாள். அவளுடைய தாய்மார்கள் நடாலி வூட்ஸ்(38) மற்றும் பெற்றி நொவெல்ஸ்(47) ஆவார்.


நடாலி வூட்ஸ்உம் பெற்றி நொவெல்ஸ்உம் 16 வருடங்களாக ஒரு பாலுறவுக்காரர்களாக இருந்து வருகிறார்கள். நடாலி வூட்ஸ் ஆண் ஒரு பாலுறவு மற்றும் பெண் ஒருபாலுறவு குறித்த மருத்துவ ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். பெற்றி நொவல்ஸ் விநியோகச் சாரதியாகப் பணியாற்றுகிறார்.

16 வருடங்களாக இருவரும் இணைந்து வாழ்ந்தாலும் எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் அவர்களுக்கு ஒரு குழந்தை தேவை என்று உணர்ந்தார்கள்.

நாங்கள் இருவருமே தாயாராக விரும்பினோம். நடாலி வூட்ஸ் தான் தாயாராவது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். இதனால் இலகுவாக எமக்கு முடிவெடுக்க முடிந்தது. அதேநேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டம் நாம் இருவருமே சட்டப்படி பெற்றாராக இருக்க அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. அது பெற்றாராக வர விரும்பியிருந்த எம் இருவருக்குமே ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

என்கிறார் பெற்றி நொவெல்ஸ்.

குழந்தை பெறுவதாக முடிவு செய்ததுமே நடாலி வூட்ஸ் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். குழந்தை பெறுவதற்காக விந்து தானம் செய்யும் விந்து வங்கியூடாக விந்தைப் பெற்று கருத்தரித்தார்.

விளைவாக கடந்த மார்ச் 31இல் அழகான பெண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். முன்னைய சட்டங்களின்படி பெற்றாராக நடாலி வூட்ஸின் பெயர் மட்டுமே பிறப்புச்சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்திருக்கும். ஆனால் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி ஒரு பால் உறவினைக் கொண்ட இருவருமே சமமாக குழந்தையின் பெற்றாராக கணிக்கப்படுவர் என்பதால் இருவரது பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நாங்கள் இருவருமே பெற்றாராக பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் கையொப்பமிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. நான் மட்டுமே சட்டரீதியான பெற்றார் என்ற கவலையிலிருந்து இது என்னை விடுவித்திருக்கிறது. என்கிறார் நடாலி வூட்ஸ்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த எங்கள் இருவரது பெயர்களுமே பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதானது எங்களைப் போன்ற ஒருபாலுறவுக் குடும்பங்களுக்கு மேலும் அங்கீகாரம் வழங்குவதாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு வரலாற்று முன்னுதாரணத்தை நாங்கள்; உருவாக்க விரும்பினோம் என்றும் வூட்ஸ். வலியுறுத்துகிறார்.


பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் 170 வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த தாய் தந்தையரின் பெயரைக் குறிப்பிடும் வழக்கத்தை இது மாற்றி இருக்கிறது. தற்போதைய பிறப்புச் சாட்சிப்பத்திரமோ தந்தையுடைய பெயரை அதிலிருந்து விடுவித்து இருக்கிறது.

பிரிட்டனின் பிறிஜ்ரன் என்ற இடத்தைச் சேர்ந்த பிறப்புச் சாட்சிப் பத்திரப் பதிவு அலுவலகமோ புதிய சட்டத்தின் கீழான முதலாவது பதிவு இதுவெனச் சொல்கிறது.

ஆம், அந்த ஒருபாலுறவுத் தம்பதியின்ர் ஒரு வரலாற்று முன்னுதாரணத்தைத் தான் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

குழந்தை லில்லி வளர்ந்ததும் நடாலி வூட்ஸை அம்மா என்று அழைப்பாள். பெற்றி நொவெல்ஸை அம்மா பி என்று அழைப்பாள். ஆனால், அப்பா என்று அவள் யாரையும் அழைக்கப் போவதில்லை.

லில்லிக்கு அப்பா என்றொருவர் இல்லாதது பற்றி நாங்கள் உரையாடினோம். ஆனால் ஒரு அப்பா ஒரு அம்மா என்பதை விட இதில் பல விடயங்கள் இருக்கின்றன. ஒரு குழந்தைக்கு அவசியமானது எந்த நிபந்தனைகளுமில்லாத அளவற்ற அன்பு. பெற்றியாலும் என்னாலும் அந்த அளவற்ற அன்பை லில்லிக்குக் கொடுக்க முடியும் என்கிறார் நடாலி வூட்ஸ்.

குழந்தைக்குத் தேவையானது பரிபூரணமான அன்பு. அதனை எங்கள் இருவராலும் கொடுக்க முடியும். ஆனால் துயரார்ந்த வகையில் சிலருக்கு இதனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தேவையற்ற பல அபிப்பிராயங்களை இங்கொன்றும் அங்கொன்றுமாக அவர்கள் உதிர்த்து விட்டிருக்கிறார்கள். எனது பெற்றார் எனது பாலியல் தேர்வு காரணமாக என்னுடன் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். அவர்கள் ஒரு அற்புதமான அழகான குழந்தையின்பத்தை இழக்கிறார்கள் என்றும் சொல்கிறார் நடாலி வூட்ஸ்.

இந்த நிலைமையால் குழந்தைக்கு பாட்டா பாட்டிமாருடைய உறவும் கிடைக்கப் போவதில்லை. துரதிர்ஷ்டவசமாக பெற்றி நொவெல்ஸ்இன் பெற்றோரும் ஏற்கெனவே இறந்து விட்டார்கள்.

சமூகம் மாறி வருகிறது. குடும்பங்கள் மாறிவருகின்றன. பெற்றாராக ஆகலாமா என நம்பிக்கையற்றிருந்த மக்கள் இப்போது ஆகி வருகிறார்கள். ஒரு வகையில் இப்போது நாங்கள் விளையாட்டு மைதானத்தைச் சமப்படுத்தி வருகிறோம் என்று இச்சட்டத்தை வரவேற்கிறார் பேராசிரியையான லிஸா ஜர்டின். தற்போது எல்லாப் பெற்றோரும் தங்களுடைய பாலினம் குறித்தோ அந்தஸ்து குறித்தோ கவலைப்படாமல் பெற்றோராக தமது குழந்தையின் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் பெயரிட முடிகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இவர்கள் இச்சட்டத்தை வரவேற்றாலும், இவற்றை விமர்சிப்பவர்களும் இல்லாமல் இல்லை.

பிறப்புச் சாட்சிப்பத்திரம் குழந்தை எப்படி உருவாகியது என்பதை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறானால் உண்மையான தாயுடையதும் தந்தையுடையதும் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் இனப்பெருக்க ஒழுக்கவியல் தொடர்பாகப் பணிபுரியும் ஜோசப்பின் குவான்ரவெளி.

பிறப்புச்சாட்சிப் பத்திரங்கள் இவ்வாறே வருமெனில் நாங்கள் கலாசாரத்தின் அனைத்து அம்சங்களையும் மறந்தவர்களாகி விடுவோம். அது மட்டுமல்லாமல் கலைச் சொற்களுடன் நாம் விளையாடுபவராகி விடுவோம். ஒரு நாள் குழந்தை தனது தகப்பன் யார் என வினவும் போதும், குழந்தை எவ்வாறு பிறந்தது என்றும் உயிரியல் விளக்கும். அதற்கான வாய்ப்பு இங்கு இல்லாமற் போய்விடுகிறது என்றும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

ஓவ்வொரு குழந்தைக்கும் தனது தந்தையை அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது. இந்தச் சட்டம் முதல் தடவையாக குழந்தைகள் தந்தை இல்லாமல் பிறக்க வகையேற்படுத்துகிறது. ஒரு தந்தை குழந்தையின் வாழ்வில் முக்கிய பாத்திரத்தை ஆற்றுகிறார். அதேபோல் குடும்பத்திலும் தந்தை ஒரு முக்கியமான பாத்திரத்தை ஆற்றுகிறார் என்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும். அது மட்டுமல்லாமல் சிறுவர்களுக்கு தமது உயிரியல் ரீதியான தந்தை யாரென அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

தந்தையின் பெயரைக் குறிப்பிடாமலே ஒரே பாலினத்தைச் கொண்ட இருவர் பிறப்புச் சாட்சிப் பத்திரத்தில் ஒப்பமிடுவதை சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் பரோனிஸ் டெச் வெளிப்படையாகவே கண்டிக்கிறார், குழந்தை தனது அடையாளத்தை அறிந்து கொள்ளும் உரிமையை இது பறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இது உண்மைத் தகவல்களை மறைக்கிறது. உயிரியல் சார்ந்த பெற்றோர் யார் என்று இனம் காண முடியாமல் குழப்பமடைய வைக்கிறது. அதுமட்டுமல்லாமல் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தவறான தகவல்களை இது வழங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் இந்தச் சட்டங்களும் ஒழுங்கு முறைகளும் வெறுமனே இரண்டு நூற்றாண்டு காலத்துக்குட்பட்டவை தானே என்று வாதிடுகிறார் விக்ரம். சமூக வரலாறென்பது தாய் வழித்துடையானதாகவே மிக நீண்டகாலம் இருந்து வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டின் இறுதியிலும்கூட தமிழகத்தின் சில பகுதிகளில் தாய் வழி மரபு இருந்து வந்திருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். தவிரவும் மரபணு சோதனை அறிமுகமாவதற்கு முன்னர் தாய் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை எனச் சொல்கிறாளோ அதனை நம்புவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார் அவர்.

எவ்வாறாயினும் இந்தச் சம்பவம் குழந்தையின் பிறப்புச்சாட்சிப் பத்திரத்தில் அவர்களுடைய பிறப்புக்கு உயிரியல் ரீதியாகக் காரணமான இருவரது பெயர்களும் மிகச்சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும் எனக் குரலெழுப்பும் அழுத்தக் குழுக்களிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் ஆண், பெண். ஒருபாலுறவு மற்றும் இருபாலுறவு தொடர்பான அமையத்தைச் சேர்ந்த ஸ்ரோன்வால் சட்டத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தினை வரவேற்றிருக்கிறார். ஒரு பாலுறவுக்காரர்களுக்கு மிகவும் அவசியமாக இருந்த ஒரு சட்டமும் இது தான் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் கிளார்க் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஒரு பகுதியான பேர்க் பெக் கல்லூரி நடாத்திய ஆய்வில் ஆண் பெண் பெற்றாரை விட ஒரே பாலினத்தைச் சேர்ந்த தம்பதிகள் சிறந்த பெற்றாராகத் திகழ்வது தெரிய வந்துள்ளது. இதற்கு அடிப்படையான காரணம் என்னவென்றால் அவர்கள் தற்செயலாக குழந்தையைப் பெற்றெடுப்பதில்லை. குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க விரும்பினால் அது தொடர்பாக தெளிவான திட்டவட்டமான முடிவை அவர்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதன் பின் அதற்காக விந்து வழங்குனர் ஒருவரையும் கண்டடைய வேண்டியிருக்கிறது என்று குறிப்பிடுகிறது.

இது தவிர மூன்றிலொரு பங்கு பிரிட்டிஷ் மக்கள் ஆண் பெண் தம்பதிகளை விட ஒரேபாலினத்தைச் சேர்ந்த பெற்றோர் சிறப்பானவர்கள் என்று நம்புவதாக பிரிட்டிஸ் சமூக நடத்தைகள் தொடர்பான வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவையெல்லாம் நடாலி வூட்ஸ்க்கும் பெற்றி நொவெல்ஸ்க்கும் ஆறுதல் தரக் கூடியவை.

குழந்தை தான் எவ்வாறு உருவாகினேன் என அறிய விரும்புவது அதனுடைய அடிப்படை உரிமை. இப்புதிய சட்டம் அதனை மறுக்கிறது என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கும் இச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் லில்லிக்கு 18 வயதானதும் அவள் விரும்பினால் அவள் உருவாகக் காரணமான விந்தை யார் தானம் செய்தார்கள் என்று அறியும் உரிமை அவளுக்கு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், அவர் அவர் விந்தை தானம் செய்த ஒருவர் என்பதற்கப்பால் நாங்கள் அவரைத் தந்தையாக நினைக்கவில்லை. அவர் அப்பா அல்ல. விந்து தானம் செய்த ஒருவர் அவ்வளவு மட்டுமே என்றும் அழுத்துகிறார் வூட்ஸ்.

Friday, April 23, 2010

ஆண்கள் அனைவருமே முட்டாள்கள் - பிரபஞ்சன்

சிங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்மொழி மாத நிகழ்வுகளை ஒட்டி தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான திரு. பிரபஞ்சன் அவர்களும், இசை விமர்சகர் திரு. ஷாஜி அவர்களும் கலந்து சிறப்பிக்க சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் நிகழ்த்திய 'ஒரு கோப்பைத் தேநீர்' கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று மாலை 6.30 தொடக்கம் இரவு 9.00 வரை சிங்கப்பூர் தேசிய நூலக அரங்கில் நடைபெற்றது.

வேலைத்தளத்திலிருந்து புறப்படவே மாலை 6.30 இனைத்தாண்டி விட்டிருந்தது. மழையும் சேர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவே அரங்கினைச் சென்றடைகையில் இரவு 8.00 மணியாகி விட்டிருந்தது. திரு. பிரபஞ்சன் அவர்கள் தமதுரையினை ஆற்றிக்கொண்டிருந்தார். படைமுகத்திலும் அறிமுகம் பெரிதென்பர். அரங்கத்தினுள் நுழைகையிலேயே உணவினையும் எடுத்துக்கொண்டு இருக்கையில் சென்று அமருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளினையும்(?) ஏற்றுக்கொண்டு என்னுடன் வந்திருந்த பணியிடத்து நண்பரும் நானும் இருக்கைகளில் அமர்ந்தோம்.

மிதமான குரலில் திரு. பிரபஞ்சன் அவர்கள் நல்ல பல கருத்துக்களை அளித்துக் கொண்டிருந்தார். தமிழ் மொழி செம்மொழியாகத் தகுதி உள்ளது தானா? தமிழ்மொழி தன்னை மேலும் வளர்த்துக் கொள்வதற்கு எவையெவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்கின்ற தன்னுடைய கருத்துக்களையும் ஆதங்கங்களையும் அவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்கையிலேயே, அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைவதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கவே, தமிழ்மொழியின் செம்மொழித் தகுதிக்கு ஆதாரமாக ஒரு சிறிய கதையுடன் தனதுரையை நிறைவு செய்வதாக கூறிய திரு. பிரபஞ்சன் அவர்கள் “ஆண்கள் அனைவருமே முட்டாள்கள்” என்றார்.

நட்பு முதிர்ந்து காதலாக மாறிக்கொண்டிருக்கும் ஒரு இளம் ஜோடி, நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பெண்ணின் வீடு அண்மிப்பதை உணர்ந்தவர்கள் அருகில் எங்கேனும் உட்கார்ந்து உரையாடலாம் என்கின்ற எண்ணத்தில் அவன் அவளை ஒரு புன்னை மரத்தினைக் காட்டி அதன்கீழ் அமர்ந்து பேச வருமாறு அழைக்கின்றான். அதற்கு அவள் மறுத்து, அந்தப் புன்னை மரத்தினைத் தாண்டி நிற்கும் வேறொரு மரத்திற்கு செல்லலாம் என்கின்றாள். உடனே அவன் ஏன் என்கின்றான். இங்கே தான் ஆண்கள் அனைவருமே முட்டாள்கள். ஆமாம் இப்படியான சந்தர்ப்பங்களில் பெண்களின் முன்னால் ஆண்கள் எல்லோருமே முட்டாள்கள் தான். உடனேயே அவள் அதற்கான காரணத்தைக் கூறுகின்றாள்.

குழந்தைப்பருவத்தில் தான் விளையாடிய புன்னைமர விதையே பின்னாளில் முளைத்து மரமாக வளர்ந்ததாகவும், தன் பால்ய வயதினில் உணவுண்ண மறுத்து அடம்பிடிக்கும் வேளைகளில்லாம், தன் தாய் அந்தப் புன்னை மரத்தைக் காட்டி, “பார்! உனக்குப் பின் பிறந்த அந்தப் புன்னைமரக் கன்று எவ்வளவு சமத்தாக ஊற்றுகின்ற நீரையும் நிலத்துப் பசளையினும் எடுத்துக் கொண்டு வளருகின்றது. நீயும் இருக்கின்றாயே” என்று ஏசியே தன்னை உணவு உட்கொள்ள வைப்பார்களென்றும், அதைக் கேட்டுக்கேட்டு வளர்ந்த தான் அந்தப் புன்னை மரத்தினைத் தன் தங்கையாவே வரித்துக்கொண்டு விட்டதாகவும், தங்கைக்கு முன்னால் நின்று கொண்டு உங்களுடன் உரையாடுவதற்குத் தனக்கு வெட்கமாக உள்ளதாகவும் கூறினாள்.

இந்தக் கதையின் மூலம் தமிழர்களின் பண்பாடு சிறப்பாக வெளிக்கொணரப்படுகின்றது. தமிழர்களின் சிறப்பு, அவர்தம் மொழியான தமிழ்மொழிக்கும் உண்டு என்று கூறி தனதுரையினை நிறைவு செய்தார். பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் கேள்வி பதில் நிகழ்ச்சியினுாடாக, திரு. பிரபஞ்சன் அவர்களிடமிருந்து ஒரு எழுத்தாளனின் சமூகப்பொறுப்புக்கள் பற்றிய பல தகவல்களையும் அறிந்து கொள்ள முடிந்தது. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு, பல விடயங்கள் பற்றிய விழிப்புணர்வுகளினை மக்களிடையே ஏற்படுத்துவதில் எழுத்தாளனும் ஒரு போராளியே. பல மனிதர்களின் வாழ்வியல் எண்ண மேம்பாட்டிற்கு திரு. பிரபஞ்சன் அவர்களின் ஆக்கங்கள் எத்துணை உதவி புரிந்திருக்கின்றன என்பதை அப்படியானவர்கள் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டதைக் கேட்கையில் மகிழ்ச்சியாக இருந்தது.

திரு. பிரபஞ்சன் அவர்களால் எழுதப்பட்டு ஆனந்தவிகடனில் பிரசுரமான கட்டுரை காதல்வயப்பட்ட ஜோடிகளுக்காக.


**************************

காதல் வயப்பட்ட ஜோடிகளுக்கு . . .

அன்பார்ந்த விவேக், வைணவி உங்கள் இருவரின் கடிதமும் கிடைத்தது. நீங்கள் காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் எழுதி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. ரொம்ப மகிழ்ச்சி.

இல்லற வாழ்க்கைக்குள் பிரவேசிக்கப் போகிற 'எங்களுக்கு ஏதேனும் சொல்லுங்கள்' என்று கேட்டிருக்கிறீர்கள். உலகத்திலேயே ரொம்ப சுலபமானது, பிறருக்கு அறிவுரை சொல்வதுதான். மீறப்படுவதற்கென்றே போடப்படும் சட்டங்களைப் போல, புறக்கணிக்கப்படுவதற்கென்றே சொல்லப்படுகிற வார்த்தைகளே அறிவுரைகள் அல்லது போதனைகள்.

ஆகவே, நான் உங்களுக்கு அறிவுரை சொல்லப் போவது இல்லை. வயதில் மூத்தவன் என்கிற தகுதியை (இது தகுதிதானா?) முன்வைத்தும், நிறைய காதல் வயப்பட்டவன் என்கிற அனுபவங்களை முன்வைத்தும், உங்களுக்கு உபயோகப்படலாம் என்று நான் நம்புகிற சிலதைச் சொல்லலாம் என்று நினைக்கின்றேன்.

உங்கள் காதல் புனிதமானது என்கிறீர்கள். உலகத்தில் புனிதமானது என்று எதுவும் இல்லை. அதேபோல் உலகத்தில் அசிங்கமானது என்று எதுவும் இல்லை. காதல் இயல்பானது என்பதே உண்மை. அது, இரண்டு உயிர்கள் சங்கமம் ஆகிற தவிர்க்க முடியாத நியதி. ஆரோக்கியமான உயிரும் உடம்பும் அவாவுகிற தீனி. உயிர் வாழக்கை, பிராண வாயுவை உட்கொள்வதால் மட்டுமே சாத்தியம் என்பது போல, மானுட வாழ்க்கை காதலினாலேயே சாத்தியமாகின்றது.

என் அன்பார்ந்த விவேக், வைணவி . . .
உங்கள் நேசம், அல்லது காதல் எப்படித் தோன்றி எப்படி வளர்ந்தது என்கிற தகவல் உங்கள் கடிதத்தில் இல்லை. என்றாலும் என்ன? பொது உலக அனுபவங்களை முன்வைத்தே காதலின் ஜனன விசித்திரத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எத்தனையோ பேரை தெருவில், வேலை செய்யும் இடத்தில், படிக்கும் இடத்தில் பார்க்க நேர்கிறது. சில முகங்கள்தான் பச்சை கொடி காட்டும் ரயில் ஊழியர் போல நமக்கு அனுமதி கொடுக்கின்றன. சில முகங்கள்தான் பேசத் தகுந்த முகங்கள், பழகத் தகுந்த முகங்கள் என்று நம் உள்மனம் நமக்கு உத்தரவிடுகிறது. நாம் அவரில் பழக்கம் ஆகிறது. பழக்கம், அந்நியோன்னியத்தில் கொண்டு சேர்க்கிறது. தினம், தினம் அடிக்கடி அவர் குரலைக் கேட்க வேணும், பார்க்க வேணும் என்கிற அவஸ்தை உருவாகிறது.

மதுரை மணியின் அருமையான ஒரு கல்பனையைக் கேட்கையில், மாலியின் ஒரு சுழற்றலில், ரகுமானின் ஒரு சுழிப்பில், பர்வீன் சுல்தானாவை, அல்லது உங்கள் ரசனைக்கேற்றபடி ஒருவரைக் கேட்கையில், 'அடடா, இப்போது அவன/அவள் என் அருகில் இல்லையே' என்று ஏங்க வைக்கிற மனசு உங்களுக்குச் சிந்தித்துவிட்டதா? துணிக்கடைப் பொம்மைகள் போட்டிருக்கும் ஆடைகளை, உங்கள் துணைக்கு அணிவித்து அழகு பார்க்கிறதா, உங்கள் மனசு? நீங்கள் காதல் வசப்பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம். இது தொடக்கம்தான். காதல் எழுதுவது வேறு - இசைவு படுவது வேறு. காதலின் ஜீவன், அவனும் அவளும் இசைவுபடுவதிலேயே இருக்கிறது. இசைவுபடுதல் என்பது என்ன? சுவையும் நோக்கமும் ஒன்றுபடுதல். அந்த இரண்டு பேரில் ஒருவருக்கு, ஒவியம் ஓர் உன்னதம். ஒருவருக்கு 'இது என்ன வர்ணமெழுகல்' என்கிற புத்தி. ஒருவருக்குச் சங்கீதம் உன்னதம். ஒருவருக்கு, 'இது என்ன விலை' என்கிற வியப்பு. ஒருவருக்குப் புத்தகம் உயிர். ஒருவருக்கு 'இது என்ன காசைக் கரியாக்கிக் கொண்டு' என்கிற பணப் பிரக்ஞை. காதலின் பிள்ளையார் சுழியே இதுதான். ஓருத்தரின் சுவை அந்த இன்னொருத்தரின் சுவையும் குறைந்தபட்சம் முரணாகக் கூடாது. அவனும் அவளும் ஒரு துறையைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. அவன் ஒரு அறையில் கதை எழுதினால், இவள் ஒரு அறையில் கட்டுரை எழுத வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இதெல்லாம் சாத்தியமும் இல்லை. 'என்ன பெரிய கதையும் கிதையும்? அந்த நேரத்தில், இந்த முருங்கைக் கீரையை ஆஞ்சி கொடுத்தாலாவது பிரயோஜனமாக இருக்கும்' என்று அவளோ, 'நீ பெரிய இவள் . . . கட்டுரை எழுதுகிறாயாக்கும் . . . இந்தச் சட்டையைத் துவைச்சுப் போட்டால் என்ன?' என்று இவனோ கேட்பது கேட்பது அசுவை அல்லது அவமரியாதை.

என் அன்புக்குரிய விவேக், வைணவி,
ஒரு காதல் கதை சொல்லட்டுமா? தஞ்சாவூரில் எனக்கு ஒரு சிநேகிதி இருந்தாள். பன்னிரண்டு வயசில் இவள் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. தஞ்சாவூர் தாண்டி, சென்னை மியூஸிக் அகாடாமி வாசல் வரை இவள் புகழ் நீண்டு பரவியது. அந்தச் சமயத்தில்தான், அந்த சிநேகிதி - ராதா - ஒரு வலையில் விழுந்தாள். வேறு என்ன . . . அதுதான்! அவஸ்தை! யாரோ ஒரு மிராசுதரர் பையன். அவனும் குட்டி மிராசுதான். காதலித்துக் கொண்டார்கள். அல்லது அப்படி நம்பினார்கள். மூன்று நாள் கல்யாணம். ஊரடைத்துப் பந்தல். ஆயிரக்கணக்கில் இலை விழுந்தது. எல்லாம், எப்போதும் இன்பமயமாக ஆவதில்லையே . . . 'வீட்டு மருமகள் ஆடுவதாவது' என்றார்கள் மிராசு வீட்டில். பையனின், அதுவரையிலும் ஒளித்து வைக்கப்பட்ட நிஜமுகம், தெரியத் தொடங்கியது. காமத்தை வெறிச்சிட்ட கண்கள். கோரைப் பல் நீண்ட வாய். விரலின் நீளத்துக்கு நீண்ட நகங்கள். ராதா, ஆட்டத்தை தன் ஜீவிக்கும் நியாயமாகக் கருதியவள். என்றாலும், அவள் நூற்றாண்டுப் 'பத்தினி' அல்லவா? புராண காலத்துப் பதிவிரதைகள் பட்டியலில் சேர வேண்டும் அல்லவா? இவள் 'பெய்' என்றால், மழை பெய்து காவிரி 'ரொம்ப' வேண்டும் அல்லவா? ஆகவே, கணவனைக் கைவிடாத அவள், கலையைக் கைவிட்டாள். கவனிக்கப்பட வேண்டியது, என்னவெனில், 'ஏண்டா நாயே . . . என்னைக் கல்யாணம் பண்ணும் முன்பும் நான் ஆடிக் கொண்டுதானே இருந்தேன் . . . அப்போ, இதைப் பற்றிப் பேசவில்லையே . . .? எனக்கு, என் கலையையும் விரும்புகிற புருஷன் கிடைப்பான். கிடைக்காமல் போனாலும் அக்கறை இல்லை. என் கலை எனக்கு உசத்தி . . . ' என்று சொல்லி இருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை . . . நான் அவளிடம் கேட்டேன். தரையைப் பார்த்தாள். கொஞ்சம் கண்ணீர் சிந்தினாள். அப்புறம், 'என்ன இருந்தாலும் புருஷன் அல்லவா?' என்றாள். இந்தத் தேசத்தில்தான் தாலி கட்டிவிட்ட ஒரே தகுதியில், கழுதை குதிரை, மாடு, வெளவால், சிலந்தி, எலி எல்லாம் புருஷர்களாகி விடுகின்றன. கழுத்தை நீட்டிவிட்ட பாவத்துக்காகப் பெண்கள், 'பதுமை'களாகவே இருக்கிறார்கள். ராதா அறிவற்றவள் இல்லை . . . ஒரு அர்த்தத்தில். இன்னொரு அர்த்தத்தில் அவள் மூடம்தான். காதலின் முடிச்சு, மனசுக்குள் விழும்போதே, பரஸ்பரம் புரிதலில் அவள் ஆர்வம் காட்டி இருக்க வேண்டும். ராதா என்கிற ஸ்த்ரீ, காரசாரமாக வற்றல் குழம்பு வைக்கிறவள் மட்டுமல்ல . . . குழந்தைத் தொழிற்சாலை மட்டுமல்ல . . . எல்லாவற்றுக்கும் மேலாக, கலைஞர் சிருஷ்டிகரம் கொண்டவள். தன் சிருஷ்டிகரத்துக்கு, தன் ஆளுமைக்கு, தன் இயற்கைக்கு ஹானி ஏற்படாமல் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டியவள் அவள். அதை மையப்படுத்தியே அவள் தன் காதல் மாளிகையைக் கட்டி எழுப்பி இருக்க வேண்டும். அம்பாரியாகக் களத்து நெல் குவிந்து கிடைக்கையில், ராதா வீதி நெல்லை வேகவைத்துத் தின்றதுதான், அவள் பிரச்சினை. புரிதல் . . . பரஸ்பரம் புரிதலும், புரிந்து கொள்ளுதலுமே காதல். மிராசு, தண்ணீரிலும் தரையிலும் தாவுகிற தவளை. ராதா, மேலே பறக்க இறக்கைகள் கொண்ட வானம்பாடி. தவளையும் வானம்பாடியும், ஒரு மஞ்சள் கயிற்றிலான இணைய முடியும்?

என் அன்பான இளம் சிநேகிதர்களே,
பெரும்பாலான காதல், இருட்டைத் தேடுகிறது. தனிமையில், கடற்கரைத் தோணி மறைவில் வளர்கிறது. அல்லது சினிமாக் கொட்டகை இருட்டில் கைகோக்கிறது. உடல் ஸ்பரிசம் சந்தோஷம்தான் என்றாலும், காதல் மேல் படரும் நூலாம்படையை அது சுத்தம் செய்துவிடுமா, என்ன? காதலர்கள் தாங்கள் ஏற்படுத்திக் கொண்ட தனிமையில் நிறைய பேச வேண்டும். இதயம் வெளியே வந்து விழும் வரைக்கும் பேசவேண்டும். மேலை நாடுகளில், காதலர்கள் பேசவும் பழகவும் வாய்ப்பு அதிகம். அந்தத் தொடக்கத்தை அந்தச் சமூகம் அங்கீகரிக்கிறது. உண்மையில், இந்தியாவில் காதலிக்க, காதலருக்கு இடமில்லை. இது ஒரு பிரச்சினை. வீட்டுக்குள் அவர்கள் சந்தித்து உறவாடக்கூடாது. வீடுகளில் பூகம்பம் உருவாக இது போதும். ஆகவே, கள்ளம் தோன்ற காதலர்கள் மறைவிடத்தை நாடுகிறார்கள். தெருக்களில் உறவுக்கார ஜனம் பார்க்கும். கடற்கரையில் பொலீஸ்காரன் தொந்தரவு. கள்ளத்தால் விளையும் பழக்கம், வாழ்க்கைக்கு வெளிச்சம் தருவது இல்லை. காதலர்கள் பாவனை செய்வார்கள்தான். தன் இனிய பகுதியை மட்டுமே அடுத்தவருக்குக் காட்டுவார்கள். அழகிய வரவேற்பறை மட்டுமே வீடு ஆகாதே . . . குளியல் அறை, சமையல் அறை பின்கட்டு இந்த லட்சணங்களை மற்றவர் பார்க்க நாம் அனுமதிப்போமா, சட்டென்று? இந்த ஜாக்கிரதை உணர்வு காதலர்க்கு ஜாஸ்தியாகவே இருக்கும். தலை கலையாத முகம். இஸ்திரி கலையாத சட்டை. துடைத்துப் பவுடர் போட்டுப் பதப்படுத்திய முகம். அவர்கள் சொந்த முகத்தை முதுகில் வைத்திருப்பார்கள். தொடர்ந்து பேச்சு, தொடர்ந்த பழக்கம். அசல் முகத்தை வெளிக் கொண்டு வந்து விடும். கல்யாணம் ஆகாத ஆணையும் பெண்ணையும் பழக விடுவதாவது? ஏதாவது தப்புத் தண்டா நடந்து விட்டால்? எங்களைப் போன்ற மூத்த தலைமுறையின் தலையில் உள்ள கசடுகள் இவை. அழுக்கு மனம்தான், தன் பிள்ளைகளைப் பற்றி அழுக்காக நினைக்கும்.

சரி . . . எல்லாம் மீறி ஏதாவது நடந்துவிட்டால்? நடந்துவிட்டால் . . . இமயமலை இடம் மாறிவிடாது. இந்து மகாசமுத்திரம் வற்றிப் போகாது. பெண்கள், சம்பாதிக்க வெளியே போவதாவது என்று சொன்னவர்கள் போன இடம் எங்கே? பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்? என்ன கெட்டுப் போயிற்று? காதலை மனத்தளத்தில் வளர்க்க முடியாமைக்கு, முதல் குற்றவாளி சமூகம்தான். உலகம் எங்கும் குழந்தைகள், குழந்தைகளாகவே பிறக்கிறார்கள். இந்தியாவில் மட்டும்தான் குழந்தைகள், ஆண் குழந்தைகள் என்றும் பெண் குழந்தைகள் என்றும் தனித் தனியாகப் பிறக்கிறார்கள். வகுப்புகளில், பஸ்ஸில், கோயில்களில், ஆண்கள் இடம் வேறு . . . பெண்கள் இடம் வேறு. பத்து பன்னிரண்டு வயசுக்கு மேல் ஆண் பெண் குழந்தைகள் சேர்ந்து விளையாடக் கூடாது. பெண்ணையும் ஆணையும் பிரித்தே வளர்க்கிறோம். பெண் வயதுக்கு வந்ததுமே, நம் தாய்மார்கள், வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொள்கிறார்கள். அவள் மேல் அந்நிய ஆடவரின் மூச்சுக் காற்றும் பட்டுவிடாமல் பாதுகாக்கிறார்கள். பையன்களுக்குப் பெண்கள் கனவுகள். பெண்களுக்குப் பையன்கள் விபரீதங்கள். இயன்றவரை பையன்களும் பெண்களும் பிரிக்கப்பட்டே வளர்க்கப்படுவதால், ஒரு தீராத கவர்ச்சி இருபாலார்க்கும் கெட்டி தட்டிப் போகிறது. ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் இங்கு அரிதாக, சுலபத்தில் விழாத 'லாட்டரி டிக்கெட்டு'களாக இருக்கிறார்கள். அதனாலேயே, பரஸ்பரம் அவர்கள் ஆச்சரியங்களின் பொட்டலமாக இருக்கிறார்கள். பொட்டலத்தைப் பிரித்து பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? இந்தப் பிரித்துப் பார்த்தலே, இங்கு பெரும்பாலும் காதலாகிறது. திருமணத்துக்கு முன்பாகவே, இந்த நிகழ்ச்சி நடக்கும் சூழ்நிலை இங்கு நிலவுமாகில், பெரும்பாலான காதலர்கள், கல்யாணம் செய்து கொள்வதைத் தவிர்த்துவிடுவார்கள் என்பது கசப்பான ஓர் உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு பையன், பெண் கதையை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். சிறுவன் பாலு, பெண் காயத்ரி. ஒன்பது, பத்து வகுப்பிலேயே அவர்கள் காதலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ப்ளஸ் ஒன் வகுப்புக்கு வருகிற போது காதல் உச்சம். எப்படி இவர்கள் காதல் ஜனித்தது? அவள் இவனைப் பார்த்து, 'கெமிஸ்ட்ரி நோட்ஸ் இருக்கா' என்றாளாம். இவன் கிளுகிளுத்துப் போனான். அவள் அவளைப் பார்த்து 'டைம் என்ன' என்றானாம். அவள் ஆடிப்போனாள். கெமிஸ்ட்ரி நோட்ஸையும் டைமையும் காதல் தூது என்று புரிந்து கொண்டார்கள் இருவரும். எதிர்ப்பாலோடு பேச மாட்டாமோ என்று அடக்கி வைக்கப்பட்ட, மறித்து வைக்கப்பட்ட ஆசை . . . அணையைப் பெயர்த்துக் கொண்டது. தெருமுனையில், கடைகளின் வாசல் நிழல்களில், வகுப்பறையின் உள்ளேயும் வெளியேயும் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். கண் திருஷ்டியில் கர்ப்பம் தரிக்குமாம் ஒரு பறவை. காதல், கண்ணாலா கெட்டிப் படும்? இவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். இதயம் வரைந்து, அதன் குறுக்காக அம்பு பாய்ச்சி, காதல் கடிதம் எழுதிக் கொண்டார்கள். ஒரு நாள், இந்த வீட்டுச் சிறையில் இருந்து தப்பிக் எண்ணி, வெளியேறினார்கள். வானத்தில் பறப்பதாக எண்ணி, ஒரு மூன்றாந்தர லாட்ஜில் அடைக்கலம் தேடினார்கள். போலீஸ், 'ரெய்டில்' அவர்களை வளைத்தது. அதிகம் சொல்வானேன் . . . அந்தப் பெண் குழந்தை கடித்துக் குதறப்பட்டது பலரால். கடைசியில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பை சிவப்புவிளக்குப் பகுதியில் இருந்து அந்தப் பெண் மீட்டெடுக்கப்பட்டாள். அந்தப் பெண்ணின், பையனின் தவறு என்ன? இது சமூகம் செய்த தவறு. நம் மகனையோ, மகளையோ தேடி வரும் நண்பர்களை வரவேற்பு அறையில் அமர்த்தி பேசச் சொல்வோம். அவர்களுக்கு 'டீ' தந்து உபசரிப்போம். பெரும்பாலான தப்புகள் தவிர்க்கப்படும்தானே? இளைஞர்களும் யுவதிகளும் சந்தித்துப் பேசப் பேசத்தான் அவர்கள் மனிதர்கள் ஆகிறார்கள் என்பதை நாம் மறந்து விடுகிறோம். சரிதானே? பேசப் பேச மனசுக்குள் நட்பு வளரும், கவர்ச்சி போகும், மரியாதை கூடும். அப்புறமும் அவர்கள் ஓடுவார்களா என்ன? அப்புறமும் ஒடுபவர்களை எவர்தான் தடுத்து நிறுத்த முடியும்? சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்?

அன்பான விவேக், வைணவி,
மனம் நிறைய மண்டிய அழுக்கு கொண்ட ஒரு சமுதாயம், அழுக்கற்ற மனிதர்களை எங்கனம் உற்பத்தி செய்ய முடியும்? வளர்ந்தவர்கள் அழுக்காக இருக்கிற சமுதாயத்தில், வளர்கிறவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? விடலைத் தனத்தை, பால் கவர்ச்சியைக் காதல் என்று நம்புகிற அசட்டுத்தனம், தனியாக நேர்ந்துள்ள துரதிருஷ்டம் அல்ல! ஓட்டுமொத்த சமுதாயக் குறைகளில் ஒன்றாகத்தான் இதையும் நாம் காணவேண்டும். நமது தமிழ் சினிமாவில் பத்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைகள் காதலிப்பதாகக் காட்டுவது எதை உணர்த்துகிறது? விபசாரம் செய்ய நேர்ந்து பிடிபட்ட பெண்களை நம் பத்திரிகைகள் 'அழகி' என்று சொல்வதன் தத்துவார்த்தம் என்ன? கழிப்பறையில் கரிக்கட்டி கொண்டு எழுதப்படும் 'வக்கிர' வடிவங்களைத் தூண்டும் அரக்கன் யார்? கல்லூரி அல்லது அலுவலகப் பெண்களை கேலி செய்கிற அசிங்கம் எங்கே பிறந்தது? இப்படி எத்தனையோ கேடுகளில் ஒன்றாகத்தான் காதலைக் காதல் என்று புரிந்து கொள்ளும் போக்கும். பெண்-ஆண் உறவை ஆரோக்கியமாகப் பார்க்காத சமூகத்தில், காதல் மட்டும் கறைபடியாது எங்கனம் இருக்கும்? ஆகவே, கணவன் மனைவியாக ஆன பிறகும்கூட நீங்கள் காதலர்களாகவே இருக்க வேண்டும் என்பதே என் அவா. ஏனெனில், இங்கே தாலியோடு காதல் வைதவ்யம் பெற்று விடுகிறது என்பது சோகம். நிறைய பேசிப் பேசி, அப்புறம் மௌனமாகவும் நீங்கள் உரையாடிக் கொள்ள வேண்டும். பெண்ணை மரியாதை செய்க. ஆணையும் மரியாதை செய்க. வாழ்ந்து காதலை வாழவையுங்கள். காதல் வாழ்ந்தால் மட்டுமே இல்லறம் சிறக்கும்.

வாழ்த்துக்கள்.
பிரபஞ்சன்.

நன்றி:
ஆனந்தவிகடன் 01-08-99

Saturday, February 27, 2010

கடவுளின் வரத்தைப் புறக்கணித்தவன்


அது அவனுக்குள் நிகழ்ந்த போது அவன் பால்ய வயதிற்குள் போயிருந்தான். பதின்மம் வராத பருவம் அது. வீட்டு முற்றத்தில் அதே பருவத்தைச் சேர்ந்தவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அது வேறு பாடசாலைகளில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். ஆதலினால் அயல் வீட்டுச் சிறுவர்களும் இணைந்து தங்களுக்குள் அவர்கள் பிரிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். உயரம் பாய்தல் அவனுக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. பாடசாலையில் படிக்கும் வேறொரு மாணவனின் திறமையைப் பற்றிய சிலாகிப்பு வந்தது. அப்படியே காற்றில் பறந்து மிதந்து வருவது போன்றான அவனின் ஸ்ரைல் வியப்பூட்டுவதாய் இருந்தது. அது அவனுக்கு ஒரு கோழியினை நினைப்பூட்டியது.

சில வருடங்களுக்கு முன்னர் அந்த நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அப்போது அவனது வீட்டில் கோழிமுட்டை அடைவைத்திருந்தார்கள். ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் முன்னும் பள்ளியால் வந்த உடனேயும் ஓடிச்சென்று குஞ்சு பொரித்து விட்டதா என்று பார்ப்பதே அவன் வாடிக்கை. குஞ்சுகள் ஒவ்வொன்றாய்க் கோதுடைப்பதைக் காண்கையில் அவனுக்குள் ஒரு ஆனந்தப் பரவசம். கைகளையும் கால்களையும் உதறிக் குதித்துக் குதூகலிப்பது அவனது ஆனந்தத் தாண்டவம். சில நாட்களிலேயே அந்தக் குஞ்சுகளைக் கைகளால் அளைவதும் அவற்றை அள்ளிக் கன்னத்தோடு வைத்துக் கொஞ்சுவதும் அவனுக்குள் இன்ப ஊற்றுக்களைக் கிளறிவிடும் சுகானுபவங்கள். ஒரு மதியம் தாண்டிய வேளையில் அவன் வெளியிலிருந்து உணவருந்திக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

கோழிக்குஞ்சுகள் சற்றே வளர்ந்திருந்ததால் அவற்றினை காகங்களால் தங்களின் அலகுகளால் கொத்திக் காவிச்செல்ல முடியாத காரணத்தினால் அந்தக் குஞ்சுகள் தாய்க்கோழியுடன் சுதந்திரமாக உலவிக்கொண்டிருந்தன. எங்கிருந்தோ சட்டென காற்றை சிலாவிக்கொண்டு வந்த பருந்தொன்று தன் கால்களினால் ஒருகுஞ்சினைப் பற்றிக் கொண்டு பறக்க எத்தனித்த போதுதான் தாய்க்கோழி தாவிப்பாய்ந்து பருந்தைத் தாக்கியது. எதிர்பாராது ஏற்பட்ட அமளியில் அங்கே நின்றிருந்த நாயும் பருந்தின் மீது பாயவே பருந்து பயந்து போயிருக்க வேண்டும். கால்களிலிருந்து குஞ்சினை நழுவவிட்டுவிட்டுத் தப்பித்துக் கொண்டது. இருந்தும் கோழி விடுவதாயில்லை. தன் சிறகுகளை அடித்தடித்துப் பறந்து பறந்து பருந்தினை அந்த இடத்தை விட்டுத் துரத்துவதிலேயே குறியாய் இருந்தது. அதற்கு முன்னர் கோழிகள் அவ்வளவு உயரத்திற்குப் பறந்து அவன் பார்த்ததில்லை. இரவில் கோழிகளை வாதனாராணி மரத்தின் கிளைகளில் படுக்க விடுவதற்கே அவை ஒவ்வொரு கிளைகளாய் தாவித் தாவி ஏறுவதை வேடிக்கை பார்த்திருக்கிறான்.

அந்தக் கோழிபோல் தன்னாலும் பறக்க முடிந்தால் எப்படியிருக்கும்? அவனது நினைப்பை மற்றைய பையன்களின் கூக்குரல் கலைத்தது.

“டேய் உன்ர முறை. ஓடி வந்து பாய்.”

“இவனால இந்த உயரத்தைப் பாய ஏலாது.”

அவன் உயரம் பாய்வதற்காக கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றினைப் பார்த்தான். அவனால் அதைத்தாண்ட முடியாது என்றே அவனும் நினைத்துக் கொண்டான். இதற்கு முதல் இதிலும் சற்றுக் குறைந்த உயரங்களையே அவனால் தாண்ட முடிந்ததில்லை. ஆகவே அதைத் தாண்டுவதற்கு தான் தகுதியற்றவன் என்றும் அவன் நம்பத் தொடங்கினான்.

“நான் வரேல்ல. நீங்க விளாடுங்கோ” - அவன் பின்வாங்கி வீட்டீற்குள் நுழைய முற்பட்டான்.

மற்றவர்கள் கேலிபண்ணத் தொடங்கினார்கள்.

“அந்தக் கதைப்புத்தகத்தில வந்த முனிவரைப் (சித்தரை) போல நீயும் தவம் செய்து பறக்கிற வரம் வாங்கிக் கொண்டு வந்தாத்தான் இனி எங்களோட உன்னைய விளாடச் சே(ர்)ப்பம்”.

அவனுக்கு அழுகைஅழுகையாக வந்தது. அந்தப்புத்தகத்தில் வந்த முனிவரைப் போல தன்னால் காற்றில் நடந்து பறந்து திரிய முடியாதா? தவிப்பாயிருந்தது. மனதின் ஒரு மூலைக்குள் உன்னாலும் முடியும் என்றொரு குரல் கேட்டது. வீட்டிற்குள் நுழைந்தவன். திரும்பி வந்தான்

“இஞ்ச விடுங்கோ! நானும் பாய்வன்.”

அவன் ஓடிவந்து ஒரு காலை உயர்த்தினான். அவன் அப்படித்தான். இரண்டுகால்களையும் ஒரே நேரத்தில் ஒன்றாக உயர்த்திப் பாய்வதை அவன் கற்றிருக்கவில்லை. உயர்த்தி வைத்தகாலினை அப்படியே அந்தரத்தில் வேறோ எதுவொன்று தாங்கிப்பிடிப்பதாய் அவன் உணர்ந்தான். படியில் ஏறுவது போல் அவன் மற்றைய காலையும் தூக்கி இன்னும் ஒருபடி உயரே வைத்தான். மற்றவர்கள் அவனை விப்புடன் பார்ப்தை அவனால் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

ஆம். இப்போது அவனால் காற்றுவெளியில் ஏறிச்செல்லக்கூடியதாகவிருந்தது. அவன் இன்னுமொருபடி மேலே ஏற, மற்றையவர்கள் “ஐயோ! பேய்ய்........” என்று அலறியடித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கூக்குரலைக் கேட்டதும் அவனுக்குள்ளும் அச்சம் துளிர்விடத் தொடங்கியது. அவன் இறங்குவற்கு எத்தனித்தான். முடியவில்லை. அவனால் கால்களால் நிலத்தை நோக்கி இறக்கமுடியவில்லை. அவன் எத்தனிக்கும் ஒவ்வொரு முறையும் அவன் மேலே மேலே போய்க்கொண்டிருந்தான்.

அவன் மிகவும் பயந்து விட்டான். ஏதோவொன்று அவனை மேல்நோக்கி ஈர்த்துக் கொண்டிருந்தது. இப்போது அவன் வீட்டின் சீலிங்கின் உயரத்தை அடைந்து விட்டிருந்தான். அவன் அலறினான் யாரையாவது உதவிக்கு வரும்படி. யாரையும் காணோம். அவன் ஒருவாறாக தன்னைச் சமாளித்துக் கொண்டு வெளியே நீட்டிக்கொண்டிருந்த சீலிங்கிற்கும் கூரைக்குமிடையில் தன்னை நுழைத்துக் கொண்டான். தான் ஒருவாறாக தப்பிவிட்டதாக அவனுக்குள் எழுந்த நினைப்பினைப் பொய்யாக்கி கூரை உடைந்து விடுமாற் போல் ஆடிக்கொண்டிருந்தது. கூரையின் மீதான நம்பிக்கையினை இழந்து விட்டதன் பின்னர் அவன் வேறொரு பலமான ஒரு பொருளைத் தேடத் தொடங்கினான். சற்றுத் தள்ளியிருந்த முற்றத்து வேம்பு கண்ணில் பட்டது. அந்த வேம்பில் ஊஞ்சல் கட்டி ஆடுவது அவன் நினைவிற்கு வந்தது. ஊஞ்சல் ஆடுவது அவனுக்கு மிகவும் பிடித்த செயல். அதில் அவன் தன்னை மறப்பதுண்டு. ஊஞ்சல் ஆடும் அந்த வேப்பமரத்துக் கிளை மிகவும் பலமானதென்று பெரியவர்கள் சொல்ல அவன் கேள்விப்பட்டிருக்கின்றான். காலினைப் பக்கவாட்டில் உதைத்துத் தாவி அவன் அந்த வேப்பமரக் கிளையினைப பற்றிக் கொண்டான். அங்கிருந்த புறாக்கள் வெருண்டு விர்ரென்று சிறகடித்து சற்றுத் தூரத்திலிருந்த தென்னைமரங்களில் அமர்ந்து கொண்டன. அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆயினும் மேல்நோக்கிய ஈர்ப்பு விசை அதிகரிக்கத் தொடங்கியது. அவனுக்குள் பீதி கிளம்பியது. உதவிக்கு யாரையும் காணவில்லை. அங்கும் இங்குமாய்த் தலையைத் திருப்பிப்பார்த்தான். தென்கிழக்கு மூலையில் முருகன் கோவிலின் விமானம் தெரிந்தது. அவன் முருகனின் நாமத்தை உச்சரிக்கத் தொடங்கினான். மறுபடி மறுபடி ஓம் முருகா என்று உச்சரித்துக் கொண்டிருக்கையில் அவன் நாக்குகுழறத் தொடங்கியிருந்தது. இப்போது அந்த உச்சரிப்பு 'ம்...கா' என்று மருவியிருப்பதை அவன் உணர்ந்தான். அதைத் திருத்த முயற்சிக்க 'கா' 'வா'-வாகி விட்டிருந்தது. அந்த 'ம்...வா' இப்போது 'ம்...ச்வா' வாக மாறி மருவிப் பின் 'சிவா'-வாவி விட்டிருந்ததை அவன் உணர்கையில் அந்தக்குரல் அவனுக்குள் ஒலித்தது.

“நான் கடவுள் வந்திருக்கின்றேன். உனக்கென்ன வரம் வேண்டுமோ கேள்'

அவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவன் கடவுளை அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை. அத்துடன் அவனால் அந்தக் குரலையும் நம்பமுடியாதிருந்தது. தன்னை மீண்டும் ஒருமுறை பார்த்துக் கொண்டான். இப்போது இவன் சிறு பராயத்தினன் அல்ல. அவன் தன் தற்போதைய நிலையை அடைந்திருந்தான். ஆயினும் வேப்பமரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். எப்போது அந்த மாற்றம் நிகழ்ந்தது என்பதை அவன் உணரத் தவறியிருந்தான். இப்போது அவன் கடவுளை அலட்சிப்படுத்தத் தொடங்கினான். அந்தக் குரல் அவன் செவிக்குள் மீண்டும் ஒலித்தது. தான் கேலி செய்யப்படுவதாய் அவனுக்குள் சினம் கிளர்ந்தது. “உன்ர வரமும் பூனாவும். என்னைக் கீழே போகவிடு”.

“உன்னை விடுவதாயில்லை. நன்றாக யோசித்துவிட்டுச் சொல்”. இப்போது தன்னருகிலிருந்து ஏதோவொன்று விலகுவதை அவனால் உணரமுடிந்தது. அவனைத் தாங்கியிருந்த அந்த வேப்பங்கிளை மரத்தை விட்டு அவனுடன் சேர்ந்து மேலே கிளம்பத் தொடங்கியிருந்தது.

இப்போது என்ன வரம் கேட்கலாம் என்கின்ற சிந்தனை அவனுக்குள் எழுந்தது. தனக்கு எதுவும் தேவையில்லை. அப்படிக் கேட்பது சுயநலம் என்று எண்ணிக்கொண்டான். தன் உறவுகளுக்காகக் கேட்பதும் சுயநலமே என்றது மனது. நட்புக்களுக்காகக் கேட்கலாமா? அப்படியானால் எந்த நட்புக்காக் கேட்கலாம் என்று குழம்பிய மனது அதுவும் சுயநலத்துடன் சம்பந்தப்பட்டதே என்றது. சரி. என் இனத்திற்காக கேட்கலாமா? ஒரே வரத்தில் என்னினம் மீட்சிபெறமுடியுமாறு கடவுளை மடக்க முடியுமா? அவன் தன் வரத்தினூடாக கடவுளை மடக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.

எது என் இனம்? அவனுக்குள் குழப்பம் உண்டாயிற்று. என்னினம் தனக்குள்ளேயே அடிபடுகிறதே, என்று கவலைப்படுகையில் சற்றே கீழே குனிந்து பார்த்தான். இப்போது அவன் மிக உயரத்திற்கு வந்துவிட்டிருந்தான். தன்னினம் பற்றிய நினைப்பு மறந்து உலகத்தைப்பற்றிய நினைப்பு உண்டாயிற்று. போரற்ற, வறுமையற்ற, அமைதியான, சந்தோசமான உலகை அவன் நினைக்கத் தொடங்கினான். பூரிப்பாயிருந்தது. தான் சார்ந்த உலகிற்கு தன்னால் ஏதாவது செய்ய முடியும் என்று பரவிய சந்தோசம் சற்று நேரத்திலேயே கலைந்தது. இப்போது பூமிப்பந்து ஒரு கால்பந்தளவில் அவன் கண்களுக்குத் தெரிய அவன் மேலும் மேலும் மேலே போய்க் கொண்டிருந்தான்.

இப்போது பிரபஞ்சம் பற்றிய நினைப்பு அவனுக்குள் எழுந்தது. அவன் வசித்துவந்த பூமிப்பந்து ஒரு புள்ளியாய்த் தெரிய அவனுக்கான உலகில் அவன் விரிந்து கொண்டேயிருந்தான். ஒரு நிலையில் அவனுக்கு எல்லாமே மங்கலாகி மண்ணிறமானவொரு மலைப்பாங்கான பிரதேசம் தென்பட்டது. யாரும் ஏன் எதுவுமே தென்படவில்லை. மரங்களில்லை புற்களில்லை. அதுவொரு சுடுகாடாய்த் இருக்கக்கூடுமென அவன் ஊகிக்கத் தொடங்கினான். எரிந்த பிணங்களின் எஞ்சிய எலும்புத்துண்டுகள் ஆங்காங்கே பரவிக்கிடப்பதாய் உணர்ந்தான். தன்னுடலைப் பார்த்தான். காணவில்லை.

உண்மையாய்த்தான். அவனால் அவன் உடலைக்காண முடியவில்லை. இப்போது அவன் உருவற்றிருந்தான். தான் எங்கிருக்கின்றேன் என்றே அவனால் உணரமுடியவில்லை. இப்போது அவனுக்குப் பயம் வரவில்லை. ஏன்? பதட்டம் கூட வரவில்லை. அப்போதுதான் தான் உணர்வகளும் இழந்திருப்பதாக அவனுக்குப்பட்டது. மகிழ்ச்சியில்லை. வெறுப்பில்லை. சலிப்பில்லை. காதலில்லை. காமமில்லை. ஏன்? இதுவரை காலமும் அவன் அனுபவித்த எந்தவொரு உணர்வுகளுமின்றி அவன் சும்மாயிருந்தான். இப்போது அவன் தன்னைத் தேடத் தோடங்கினான். அவனால் அவனைக்காண முடியவில்லை.

அங்கிருக்கும் ஒவ்வோர் அணுக்களிலும் அவன் இருப்பதாயும் இல்லாமலிருப்பதாயும் ஒரே சமயத்தில் அவன் உணர்ந்தான். தன்னைத் தேடுவதைத் தவிர்த்து அப்படியே சும்மாவிருக்கத் தொடங்கினான். எவ்வளவு நேரம் அப்படியேயிருந்தான் என்பது அவனுக்கச் சரியாகத் தெரியவில்லை. அதுவொரு கணப்பொழுதாகவும் இருந்திருக்கலாம். இல்லை பலகோடி யுகங்களாகவும் இருந்திருக்கலாம். அதைப்பற்றி இப்போதும் அவனால் சரியாகச் அனுமானிக்க முடியவில்லை. ஆயினும் அவன் விழித்த போது அந்த வேப்பமரத்து ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்ததாய் நினைவிற்கு வந்தது. கடவுளின் வரம் பற்றிய சிந்தனைகள் எதுவும் அவனிடம் காணப்படுவதாய்த் தெரியவில்லை.

Thursday, February 25, 2010

வேரென நீயிருந்தாய்... (9)

அன்றும் ஒரு வெள்ளி மாலை. தீவிர ஆங்கில வகுப்புகள் (Intensive English course) முடிவதற்கு ஒரு வாரமே எஞ்சியிருந்தது. முதலாமாண்டிற்கான ஆய்வுகூடங்களுக்கு மாணவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய நிரல் ஆய்வுகூடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வரவே, யார்யார் எங்கள் group mates ஆக வரப்போகின்றார்கள் என்கின்ற ஆவலுடன் ஆய்வுகூடங்களுக்கு விரைந்தோம்.

Miss. N. Jeyakody
Mr. S. Jeyanthan

அனைத்து ஆய்வுகூடங்களிலும் என்னுடன் ஒரு தமிழ்ப்பெண்ணின் பெயரும் சேர்ந்தே இருப்பது தெரிந்ததும் மனதுக்குள் பரவசம் ஒன்று புகுந்து கொண்டது. யாரந்த ஜெயக்கொடி என்பதை அறிவதற்கு ஆவல்பட்டது நெஞ்சு.

இருப்பிடத்திற்கு திரும்பலாம் என்று நினைக்கையில், தோளில் ஒரு கை விழுந்தது. திரும்பினேன். வரப்பிரகாஸ் நின்றிருந்தான்.

“எப்பிடி இருக்கிறீங்க ஜெயந்தன்? கண்டு கனகாலம் ஆச்சு.”

“இருக்கிறன். நீங்க எப்பிடி இருக்கிறீங்க வரப்ஸ்?”

இருவரும் உயர்தர வகுப்புகளில் ஒன்றாகவே இருந்து படித்திருந்தாலும் எங்களுக்கிடையிலான உரையாடல்கள் நீங்கள், நாங்கள் என்ற வகையிலேயே இருந்து வந்தது. பொதுவாக என்னுடன் நீங்கள் என்று சொல்லி உரையாடும் சமவயதுக்காரர்களை நானும் நீங்கள் என்று சொல்லிக் கதைப்பதையே வாடிக்கையாகக்கொண்டிருந்ததாலும், வரப்பிரகாஸிற்கும் எனக்குமிடையில் நெருங்கிய சினேகிதம் ஏற்படாதிருந்த காரணத்தினாலும் நீங்கள், நாங்கள் என்றவாறே எங்களிற்கிடையிலான உரையாடல்கள் இருந்து வந்தன. ஏறத்தாழ இரு வருடங்களின் பின் முதல்தடவையாக இன்றே அவனைச் சந்திக்கின்றேன். ஆள் ஊரில் இருந்ததிற்கு ஒரு சுற்றுப் பெருத்திருந்தான்.

“என்ன மாதிரி ராகிங்? கஸ்ரமா?”
-என்றான்.

“என்ன இப்ப வந்து இப்பிடிக்கேக்கிறீங்க?”
-அவனை ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“இல்ல. நான் இன்னும் றூம் ராக்கிங் ஒருத்தரிட்டையும் வாங்கேல்ல. கனபேர் வரச் சொல்லியிருக்கிறாங்கள். போக நேரம் கிடைக்கேல்லை.”

மனதின் ஒரு மூலைக்குள் தாழ்வு எண்ணம் ஒன்று வந்து குந்துவதை உணரமுடிந்தது. நாங்கள் எல்லாம் இவ்வளவு நாளா ராக்கிங் வேண்டி எவ்வளவு கஸ்ரப்படுகிறம். எங்களைப் போல ராக்கிங் வேண்டவேண்டிய இவன் இன்னும் ஒருத்தரிட்டையும் றூம்ராக்கிங் வேண்டவில்லை என்று சொல்வதைக்கேட்கையில் மனத்தி்ற்குள் பொறாமை வந்தது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நினைக்கத்தெரியாத வயது அது. வயது மட்டுமல்ல அந்த சூழ்நிலையும் அப்படியாய்த்தானிருந்தது. எங்கள் மனக்கிடக்கைகளை இன்னொருவரிடம் பகிர்வதனூடாக மனத்தை அழுத்திப் பிடித்துவைத்திருக்கும் விடயங்களிலிருந்து வெளிவருவதற்கான சாத்தியங்கள் அற்று பெரும்பாலானோர் வீடுகளிலிருந்து வெகுதூரம் விலகியிருந்தோம். எங்கள் மனவேதனைகளை பகிர்ந்துகொண்டிருந்த நட்புகள் எல்லாம் ஏறத்தாழ ஒத்த நிலையிலேயேவிருந்ததால் மற்றவர்களின் இன்னல்களுடன் எங்கள் இன்னல்களை ஒப்பிட்டே ஆறுதலடைந்து கொண்டிருந்தோம். ஆக நான் பெற்ற எந்தத்துன்பமும் இவன் பெறவில்லை என்றதும் இயல்பாகவே மனத்திற்குள் அவன் மீது பொறாமை எழுந்தது. ஆயினும் அதை வெளிக்காட்டாமல் நடிக்கத் தொடங்கினேன்.

படிப்பு எங்களுக்கு நிறையவே நடிக்கக்கற்றுத்தந்திருக்கிறது. அதற்குவேறு, நாகரிகம் என்றும் பெயர் சூட்டி விட்டிருக்கிறது. யார் நன்றாக நடிக்கின்றானோ/ளோ அவனே/ளே நல்லவன்/ள் என்று நம்பவும் வைத்திருக்கிறது. அவன்/ள் அப்படி நடந்து கொண்டால் தான் நல்லவன்/ள் என்றும் எமக்கு சொல்லித் தந்திருக்கிறது. புத்தகப்படிப்பு வெறும் அறிதலைத் தருகின்றதே அன்றி புரிதலைத்தருவதில்லை. அறிதல் வேறு, புரிதல் வேறு. யாரோ சொல்வதை அல்லது எழுதி வைத்ததை நம்புவது அல்லது பின்பற்றுவது அறிதல். புரிதல் நாமாக உணர்ந்து கொள்ளுதல். அறிதல் எமக்கு வெளியில் இருந்து எம்மால் பெறப்படுகிறது. புரிதல் எமக்குள் எம்மால் உணரப்படுகிறது. இயல்பாக நடக்கும் ஒரு உளவியல் மாற்றம் அது. அதுவும் ஒருவகை ஞானம் தான். அந்த ஞானம் ஒருசிலருக்கு மட்டும் இயல்பாகவே வந்து விடுகிறது. மற்றையவர்களுக்கு அனுபவம் அதை கற்பித்துத்தருகின்றது. அந்தப் புரிதல் ஏற்பட நிறையவே அனுபவப்படவேண்டியிருக்கிறது. அல்லது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் விழிப்புணர்வுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 21 வயதினில் யாரால் அப்படியானவொரு விழிப்புணர்வுடன் இருக்கமுடிகிறது? அப்படியொரு விழிப்புணர்வினைப் பெற்றிருந்தால் அது வரம். அந்த வரம் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? ஆனால் அந்த வயதும், பழகிவந்த சூழ்நிலையும் இயல்பாகவே உள்ளத்து உணர்வுகளை மறைக்க கற்றுத்தந்திருந்தது.

“எப்பிடி இன்னும் ஒருத்தற்றையும் றூமுக்குப் போகாமத் தப்பியிருக்கிறீங்க? நீங்க என்ன, அன்ரி-றாக்கரா?” - வியப்புடன் கேட்டேன்.

“இல்லையில்ல. நான் அன்ரிறாக்கர் இல்ல.எனக்கு கிட்டடியில CIMA final exam வருகுது. அதால நான் week-end-க்கெல்லாம் கொழும்புக்கு போயிருவன். ஆரும் வரச் சொன்னாலும் போறதில்லை. அதுதான் பயமாயிருக்கு. அம்பிட்டால் கொண்டுபோய் முறிமுறியெண்டு முறிப்பாங்கள் எண்டுதான் நினைக்கிறன்.” கவலையுடன் சொன்னான்.

அவன் கவலைப்படுவதைப் பார்த்ததும் மனத்திற்குள் ஏதோ இளகியது.

“நீங்க பயப்படுற மாதிரியெல்லாம் இருக்காது வரப்ஸ். என்ன மக்சிமம் ஐநூறு அல்லது ஆயிரம் தோப்படிக்கச்சொல்லுவாங்கள். ரிப்சும் அடிக்க வேண்டியிருக்கும். நீங்க எதுக்கும் வீட்டில இருக்கேக்க தோப்பு அடிச்சுப் பழகினீங்க எண்டால் பிறகு அடிக்கேக்க காலுக்குள்ள பிடிக்காது. சும்மா ஆக்களுக்கெண்டால் முதல் தரம் நூறு அல்லது இருநூறுதான் அடிக்கச் சொல்லுவாங்கள். உங்கள எப்பிடியும் கனக்கத்தான் அடிக்கச் சொல்லுவாங்கள். நீங்கள் அடிச்சுப் பழகிறது நல்லது.”

“அடிக்க எங்க நேரம் கிடைக்குது. சரி. நான் வெளிக்கிடுகிறன். இங்கினேக்க கண்டாங்கள் எண்டால் பிறகு அலுப்பாயிரும்.”
-என்றவாறே வரப்பிரகாஸ் விலகினான்.

இருப்பிடத்தினை நேரத்துடனே அடைந்துவிட்டிருந்தேன். மற்றையவர்களும் வந்து விடவே இரவுணவினை முடித்ததன் பின்னர் கார்ட்ஸ் விளையாட்டுடன் கொன்-னும் ஆரம்பித்தது.

“மச்சான் உனக்கு ஆராரடா குறூப்மேற்ஸ்? எனக்கு எல்லாத்திலையும் கடுவன்கள் தான்”
- என்றான் ஒருவன்.

“எனக்கும் தான்ராப்பா?”
-என்றான் கவலையுடன் மற்றொருவன்.

“எனக்கு ஒண்டுக்கு ரெண்டு மச்சான்.”
-என்றான் இன்னொருவன்.

“அடி சக்கை. அப்ப workshop-ல மூண்டு மடங்கு வேலை செய்யவேணுமெண்டு சொல்லு.”

“Surveying-ஐ விட்டிட்டாய் மச்சான். அப்ப தியோடலைற் போல் (pole) எல்லாத்தையும் அண்ணைதான் காவவேணும்.”

“உங்களுக்குப் பொறாமையடா. அதுதான் இப்பிடிக் கதைக்கிறீங்கள். மவனே ஆரெண்டாலும் சும்மா என்னோட கதைக்கிறதெண்டு சாட்டிக் கொண்டு lab-க்குள்ள வாளிவைக்க வாங்கோ அப்பத் தெரியும்.”

“ஜெயந்தன்! உனக்கு ஆரடா குறுப்மேற்ஸ்?”

மௌனமாயிருந்த என்னையும் கலாய்க்கத் தொடங்கினார்கள்.

“ஆள் பம்மிறதைப் பாத்தால் விளங்கேல்லையே.”

“ஆரடா? தமிழா விசிறியா?”

“தமிழ்“

“ஆராள்?”

“ஆரெண்டு தெரியேல்லை. ஆனா பேர் ஜெயக்கொடி எண்டு கிடக்கு”.

“ஜெயக்கொடியா? கேள்விப்பட்ட பேராத் தெரியேல்ல. எடுறா அந்த லிஸ்ர. எல்லாத் 'தானா'-ப்பெட்டைகளின்ர டீரெய்ல்சும் இருக்குத்தானே.”

list எடுத்துத் தேடினோம்.

“இவள் சுத்திப்போட்டாள் மச்சான். இவளின்ர டீரெய்ல்ஸ் எங்களிட்ட இல்லை.”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8