Tuesday, February 23, 2010

தேடல்

எதற்காக அழுகிறது குழந்தை
என்பதை அறியாது தவிக்கும்
தந்தையாய்....

எதற்காகத் தேடல்
அல்லது
எதற்கான தேடல்?

எதையென்று தேடுவது?
எதற்காகத் தேடுவது?
சலித்துப் போகிறது மனசு.

ஈர்ப்பின்றிய தேடல்களா?
தேவையற்ற தேடல்களா?
எஞ்சுகின்றன கேள்விகள்.

சலித்துத் தேடிப், பின்
தேடலைத் தேடி...
தேடிச் சலிக்கிறது நெஞ்சு.

இருந்தும்,
ஓடிக்கொண்டிருக்கிற காலநதியில்
தேடிக் கொண்டுதானிருக்கிறது
பாழாய்ப்போன மனசு.

Monday, February 15, 2010

வேரென நீயிருந்தாய்... (8)

அன்று வெள்ளிக்கிழமை மாலை. தாமதமாகவே இருப்பிடத்தினை வந்தடைந்திருந்தேன். இப்போதெல்லாம் ஆங்கில வகுப்புகள் முடிவடைந்ததும், பனிதெனியாவிற்குள்ளால் இறங்கி கண்டிக்குச்செல்லும் பேருந்தில்ஏறி கலகாச்சந்தியில் இறங்கியோ அல்லது கண்டிநகருக்கோ சென்று நாவலப்பிட்டிப்பேருந்தினை பிடித்து ஹெலிஓயாவிலோ அல்லது கம்பளையிலோ இறங்கிப்பின் மீண்டும் அங்குணாவலையிற்கு வருவதினூடாக பேருந்துகளுக்குள் சிரேஷ்ட மாணவர்களின் பார்வையில் படுவதினை பெருமளவிற்கு தவிர்க்கத்தொடங்கியிருந்தோம். அறைக்குள் சென்றதும் பக்கத்து அறை நண்பன் வந்து சொன்ன சேதி வயிற்றில் புளியைக் கரைத்தது.

சிலவாரங்களுக்கு முன்னர் ஒரு சிரேஷ்ட மாணவனால் எனக்கென வழங்கப்பட்ட course work, dead line முடிவடைந்தும் இன்னமும் என்னால் சமர்ப்பிக்கப்படாதிருந்தது. நாளை காலைக்கிடையில் அதனைச் சமர்ப்பிக்காவிட்டால் விளைவுகள் விபரீதமாகலாம் என்கின்ற அச்சத்தினால் உடனடியாக அந்த சிரேஷ்ட மாணவனைச்சந்திப்பதே எனக்கும் அவனுக்கும் நல்லதாகப் பட்டது. ஏற்கனவே வேறும்சில மாணவர்களிடம் அதே course work இற்கான தகவல்களைப்பெற்றிருந்ததால் அவற்றைப்பார்த்து எழுமாற்றாகச் சில தகவல்களை மாற்றிப்பிரதி பண்ணிக்கொண்டு உடனேயே புறப்பட்டேன்.

“வாடா மாப்பிள”
வரவேற்பு பலமாக இருக்கவே நெஞ்சு திக்கென்றது.

“உன்ன எப்ப submit பண்ணச் சொன்னான்? பெரிய விஐபி ஆகிட்டீங்களோ நீங்கள்?”

“இல்லையண்ண. வேறை சீனியர்ஸ் பிடிச்சுக்கொண்டு போனதால வரேல்லாமப் போய்ற்றுதண்ண.“

“டேய்! ஆருக்குச் சுத்துற? நாங்களும் யூனியர்ஸ்ஸா இருந்துதான் வந்தனாங்கள். உன்னப்போல எத்தினபேர பாத்திருப்பம்? பாவமெண்டு கொஞ்சம் விட்டால் தலைக்குமேல ஏறிருவியள் என?”

“அப்பிடியில்லயண்ண....”

“சரிசரி. இப்ப course work நீயாச் செய்தனியோ அல்லது வேறையாற்ரையையும் copy பண்ணிக் கொண்டந்தனியோ?”

“இல்லையண்ண. நானாத்தான் செய்தனான்.”

“சரி. அப்ப மொத்தமா எத்தின பேர்?”

“பதினைஞ்சு பேர்.”

“அப்ப மெலிசா?”

“.....”

“எல்லாம் 'தானா'-க்களா?”

“இல்லை. ஒராள் முஸ்லீம்”

“சரி அப்ப எல்லாருக்கும் marks போட்டிட்ட?”

“ம்...” -தலையசைத்தேன்.

“சரி! ஆருக்கு highest marks?”

அவசரமாகக் கொண்டு சென்றிருந்த தாளினைப் பிரித்தேன்.
“கஸ்தூரி“

“ம்... எவ்வளவு?”

“78“

“எது எதுக்கு எவ்வளவு போட்டிருக்கிற?”

ஙே! விழித்தேன்.

“என்னடா முழிக்கிற? நீதானே marks போட்டனி?”

“ஓம்!”

“என்னண்டு marks போட்டனி?”

“ஆளப்பாத்து”

“சரி அப்ப கண்ணுக்கு எவ்வளவு? காதுக்கு எவ்வளவு எண்டு ஒவ்வொண்டாச் சொல்லு.”

“இல்லையண்ண. அப்பிடிப் போடேல்ல“

“பேய்ப்... அப்ப என்னெண்டு marks போட்டனி?”

“சும்மா ஆளப் பாத்து...”

“சரி. அப்ப ஆர reference-ஆ வச்சு marks போட்டனி?”

“ல்ல... ஒருத்தரையும் இல்ல...”

“அப்ப அவளிலும் விட வடிவான பெட்டைக்கு எண்டால் நூறுக்கும் மேல marks போடுவியோடா?”

“ல்ல......”

“அம்மாண வாற ஆத்திரத்துக்கு... பேய்ப்... Engineering படிக்கவெண்டு வெளிக்கிட்டு வந்திட்டியள். இன்னும் reference எண்டா என்னெண்டு ஒரு கோதாரியும் தெரியாது. என்னெண்டுதான் lab-இல தாற course work எல்லாம் செய்யப் போறியளோ...”

“....”

“மவனே சுத்தாம உண்மையச் சொல்லு! நீ கஸ்தூரிய பாத்திருக்கிறியா? இஞ்ச என்னட்ட மற்றப் பெடியள் போட்டுத்தந்த marks list-உம் கிடக்கு. இப்ப compare பண்ணிப்பாத்து நீ சுத்துறாயெண்டு பிடிச்சால் பிறகு உனக்கு physical தான்.”

விடயம் விபரீதமாக மாறுவதற்கு முன் உண்மையை ஒப்புக்கொள்வது நல்லதென மனதுக்குப்பட்டது.

“ஓமண்ணே, நான் உண்மையைச் சொல்லுறன். ஆள நான் பார்க்கேல்ல. வேற பெடியள் எழுதி வைச்சிருந்ததை வேண்டி marks-ஐக் கொஞ்சம் மாத்திப்போட்டுக் கொண்டு வந்தனான்”

“நீயொரு லெப்பையடா. போயும் போயும் அவளுக்கு போய் 78 marks போட்டுக் கொண்டு வந்திருக்கிறியே. மற்ற எல்லாரும் அவளுக்குத் தான்ரா குறையப் போட்டிருக்கிறாங்கள். கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம்.”

“....”

“எடேய்! இப்ப ராகிங்கப்பாத்துப் பயப்பிடுறியள். பிறகு கன விசயங்கள miss பண்ணீற்றமே எண்ட கவலைப்படுவியளடா. ஊரில A/L படிக்கேக்க ஆரும் பெட்டையளோட கதைச்சுப்பழகியிருப்பியளோ? இஞ்சையும் ராகிங் முடிஞ்சுதெண்டால் பிறகு உங்கட batch பெட்டைகள் உங்களோட கதைக்கவே level காட்டுங்களுடா. சும்மா கதைக்கப்போனாலும் வாளி வைக்கிறதுக்கு வழியிறான் எண்டுங்கள். அதுக்காகத்தான் இப்பவே உங்கள ராக்கிங்கச் சாட்டிக்கதைக்கப் பழக்கிறது. அத விட்டிட்டு, சும்மா எங்களுக்குச் சுத்திக்கொண்டிருக்கிறியள். போடா! இனிமே இந்தப்பக்கமே நீ வரக்கூடாது.”

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று எண்ணியவாறே இருப்பிடத்தை அடைந்தாலும் பகிடிவதைக்கு இன்னொரு பக்கமும் இருப்பதை உணரத் தொடங்கினேன்.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7

Saturday, January 30, 2010

என் பிரசவங்களும் நானும்.




பிரசவித்தல் எனக்கிப்போ
நரக வேதனை.

விலைமகள் வீட்டு
வெற்றிலைப் பெட்டியாய்,
யாரோவெல்லாம், ஏன்,
எதுவெல்லாமோ கூட
என்னுடன் கூடிக்களிக்கிறது,
என் மறுப்பையும்
பொருட்படுத்தாமல்...

பேடு துரத்திப் பின்
ஏறி மிதித்துச் செல்லும்
சேவலாய்ச்
சில கணங்களிலும்

நட்டநடு வீதிகளில்
கொழுவி இழுபட்டுத்
திரியும் நாய்களாய்
நாகரிகமற்ற நிலைகளிலும்

நடுநிசிப் பொழுதுகளின்
நிசப்தம் குலைத்து
வெருண்டு புணரும் பூனைகளாய்
நாட்கணக்கிலும்

காலங்களும் அதன்
கோலங்களும்
என்மன யோனியில்
புணர்ந்து தள்ளுகின்றன.

கருக் கட்டல்களினதும்
கருச் சிதைவுகளினதும்
கலவரத்தில் தவித்தாலும்
கலவிவிடுகிறது இயற்கை.

கூடிக்கழித்த களிப்பில்
குறுகுறுத்துப் போகிற மனசின்
கருப்பைத் தொட்டிக்குள்ளிருந்து
கரையேறுகின்றன கவிதைகள்.

Wednesday, January 27, 2010

அறிந்தும் அறியாமலும் - ஆயிரத்தில் ஒருவன்

நான் திரைப்படங்கள் பார்ப்பது குறைவு. அதனால் அவை பற்றிய அறிவும் மிகக் குறைவு. அப்படியானவொரு நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் பற்றிய எனது விமர்சனத்தினை ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். அத்துடன் அப்படம் சம்பந்தமான வேறுசில விமர்சனங்களையும் எனக்கு அனுப்பியிருந்தார். அந்த விமர்சகர்களைப் போன்று பிறமொழித் திரைப்படங்கள் பற்றிய அறிவோ மிகமிகக் குறைவு. இல்லையென்றே சொல்லலாம். அப்படியென்றால் எப்படி விமர்சிப்பது? எதனுடன் ஒப்பிடுவது? ஒப்பீடு இல்லாமல் ஒரு விமர்சனம் அமைய முடியுமா? ஆகவே இதனை ஒரு விமர்சனமாகவே கொள்ளமுடியாது என்பது எனக்கும் தெரிந்திருக்கிறது. ஆயினும் மேடை நாடகங்களுடன் இடையிடைப்பட்ட காலங்களில் உண்டான சிறிய பரிச்சயங்களின் அடிப்படையில் எனது பார்வையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.


என்னுடன் பணியிடத்தில் ஒன்றாக வேலை செய்பவர்களில் சிலர் முதலிலேயே பார்த்து விட்டு வந்து, “படம் சுத்த மோசம், எதுவுமே புரியவில்லை. லாஜிக்கே இல்லாத படம்” என்றனர். இடைவேளைக்குப் பின்னர் வரும் காட்சிகளில் வரும் தமிழிலான உரையாடல்கள் எதுவுமே புரியவில்லை என்றும், அது ஈழத்தமிழர்கள் பயன்படுத்தும் தமிழாக இருக்கலாம் என்றும் அபிப்பிராயப்பட்டனர். குடும்பத்தினருடன் அமர்ந்திருந்து இரசிக்கமுடியாத வகையில் பச்சையாகவே உரையாடல்கள் அமைந்திருந்ததாகவும் வருத்தப்பட்டனர். எனினும் என்னுடைய வேறுசில நண்பர்களின் அழைப்பின் பேரில் திரையரங்கினுள் அவர்களுடன் நுழைந்திருந்தேன்.


பரம்பரைப் பகைதீர்க்க ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பாண்டிய வம்சத்தவர்கள் சோழவம்சத்தின் பரம்பரையினரைத் தேடி அலைவதும், அவர்களின் இருப்பிடங்களை அடைவதில் உண்டாகும் தடைகளைத் தாண்டிப் பின் அவர்கள் அனைவரையும் வஞ்சித்துக் கொல்வதாயும் படம் அமைந்திருந்தாலும், சோழ இராச்சியத்தின் புலிக்கொடியினையும் பின் மன்னன் கைதிலிருந்து தப்பித்துக் கடற்கரையருகே, கப்பல்படை வருகின்ற கனவுடன் வீழ்ந்து இறப்பதையும் பார்க்கையில் பலருக்கும் அது கடந்தவருட மே மாதத்தின் நிகழ்வுகளை நினைவிற்கு கொண்டுவந்து விடுகின்றது. ஆயினும் மற்றைய பல விடயங்களுடன் ஒப்பிடுகையில் பல முரண்பாடுகள் இருப்பதை எற்கனவே பணியிடத்து நண்பர்கள் கூறியிருந்தனர். அதனால் தான் 'லாஜிக் இல்லாத படம்' என்று கூறியிருந்தனர். என்னைப் பொறுத்தவரை “ஆயிரத்தில் ஒருவன்” ஒரு குறியீட்டுப் படம். 'குறியீட்டுப் படம்' என்று திரைப்படங்களில் ஒருவகை இருக்கின்றதா என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆயினும் நானறிந்தவரையில் மேடைநாடகங்களில் 'குறியீட்டு நாடகம்' என்று ஒருவகை இருக்கிறது. சில விடயங்களை நேரடியாகச் சொல்வதில் இருக்கின்ற தயக்கங்கள் மற்றும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இவ்வகை நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. விடயம் தெரியாதவர்களுக்கு அந்த நாடகம் புரிபடாமலும், அர்த்தங்கள் அற்றதாகவுமே காணப்படும். சில வேளைகளில் எதிர்த்தரப்பினால் விசாரணைகள் எவையேனும் மேற்கொள்ளப்படுமிடத்து அவர்களைச் சமாளிப்பதற்காய் சில விடயங்களை மறைத்து விடுவதுடன், அவர்களுக்குச் சார்பானதாகவும் கருவினைத் திரித்துக் கூறுவதற்கு ஏற்ற வகையிலும் 'குறியீட்டு நாடகங்களை' அமைத்து விடுவதுண்டு. அந்த வகையில் 'ஆயிரத்தில் ஒருவன்' என்கின்ற திரைப்படமும் ஒரு குறியீட்டுப் படமே! (குறியீட்டுப்படம் என்கின்ற ஒருவகை, தமிழ்த்திரைப்படங்களில் இல்லையெனின், இப்போது அப்படியொரு புதிய புரட்சிக்கு வித்திட்டிருக்கின்ற இயக்குனர் செல்வராகவனுக்கு எனது தலைசாய்ந்த வணக்கங்களும் பாராட்டுக்களும்)


படத்தில் ஏழு வகையான தடுப்புப் பொறிகள் வருகின்றன. சிலவற்றை ஏனைய விமர்சகர்கள் அமானுஷ்ய சக்திகள் என்று எழுதியிருந்தனர். ஆயினும் கடந்த இருவருட வன்னி நிகழ்வுகளை மட்டும் அவதானித்திருந்தாலே அந்த அமானுஷ்ய சக்திகளின் சூட்சுமம் புலப்பட்டிருக்கும். கடலினுள் செந்நிற ஒளிப் படலங்கள் குறிப்பிட்ட பிரதேசங்களைத் தாண்டுகையில் அதனூடாகச் செல்பவர்களைத் தாக்குகின்றன. அவை மிதிவெடிகளைக் குறிப்பதாய் எனக்குப் பட்டது. பின் பொறிக்கிடங்குகளைக் கடப்பதற்காய் நடராஜர் சிலையின் நிழலினூடாக ஓடிச் செல்கிறார்கள். வடமுனைக் களத்தினூடாக முன்னேறுவதற்கு எத்தனையோ தடவைகள் முயன்றும் முகமாலைக் காப்பரணைக் காத்து வைத்திருந்தவை அங்கு அமைக்கப்பட்டிருந்த பொறிக்கிடங்குகளே! பல டாங்கிகள் இப்படியான பொறிக்கிடங்குகளில் மாட்டுப்பட்டுச் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த தகவல்கள் செய்திகளாய் வந்திருக்கின்றன. இறுதியாக வினோத ஒலிகளினால் மூவரும் பைத்தியம் பிடித்ததைப் போல் நடந்து கொண்டது எனக்கு ஒரு சில மணி நேரங்களில் முடிவடைந்த உண்ணாவிரதத்தினை நினைவிற்குக் கொண்டுவந்தது. அந்த ஒலிகளோ முத்துக்குமாரின் தியாகத்தின் பின் ஏற்பட்ட சலசலப்பினை ஞாபகப்படுத்தியது. ஏனையவை பற்றி மற்றைய விமர்சகர்கள் ஓரளவிற்கு ஊகித்து எழுதியிருப்பதாலும். அவைபற்றிய புரிந்துகொள்ளல்கள் அவ்வளவு கடினமானதாக எனக்குப்படவில்லை என்பதாலும் அவற்றைத் தவிர்த்து விடுகின்றேன்.


சோழ வம்சத்தினரின் இருப்பிடத்தைச் சென்றடைந்த வயதான ஆராய்ச்சியாளர் நோர்வே-யினையும், அவரது மகளாக ரீமா சென் மற்றும் கார்த்திக்குடன் இணைந்துவரும் ஆண்ட்ரியா இணைத்தலைமை நாடுகள் மற்றும் மேற்கத்தைய நாடுகளினதும் குறியீடாகின்றார். படத்தின் பிரதான பாத்திரமான வில்லத்தனத்தின் உச்சபட்ச நடிப்பைக் காட்டும் ரீமாசென் எனது பார்வையில் மூன்று விடயங்களின் குறியீடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றார். சோழவாரிசுகளின் முற்றுமுழுதான அழிவினை வேண்டி நிற்கையில் அது சிங்களத்தின் குறியீடாகின்றார், சோழமன்னனுடன் உறவாடி உள்ளக இரகசியங்கள் அறிந்து சோழமன்னனின் படைவலிமை குறைப்பதற்காய் குடிதண்ணீரில் நஞ்சு கலந்து பின் படைகளுடன் இணைந்து கொள்கின்ற அந்தத் துரோகத்தனம் எதை அல்லது யாரைக்குறிக்கின்றது என்பது வெளிப்படையானது. இந்த இரண்டு காரணிகள் பற்றிக் குறிப்பிடுவதற்கு செல்வராகவன் இப்படியொரு குறியீட்டுப்படம் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. அவரது வாழ்க்கைச் சூழலில் இவை பற்றி வௌளிப்படையாகக் கூறினால்கூட எந்தவொரு பாதிப்பிற்கோ அன்றி அச்சுறுத்தல்களுக்கோ அவர் முகங்கொடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அந்த மூன்றாவது குறியீடாக, ஆரம்ப கட்டங்களில் தனது கொடூர முகத்தினைக்காட்டாது காய்களை நகர்த்துவதிலும் பின் தனது வெளிப்படையான முகத்தி்னைக் காட்டுவதிலும், அதிலும் குறிப்பாக சோழமன்னின் இடத்திலிருந்து தப்பி படைநடத்தி வருகையில், அது வரையில் (சோழ அரண்மனை தவிர்த்து) நாகரீக உடையணிந்து (shirt & trouser) காணப்பட்ட ரீமாசென் முதன்முதலாக பாரதப்பண்பாட்டின் சேலையணிந்து, அதே சேலைத்தலைப்பால் தன் தலை மீது இழுத்துப் போர்த்திக் காட்சியளிக்கையில் அப்படியே ஒரு இத்தாலியப் பெண்மணியே கண்களுக்குத் தெரிந்தார். வயிற்றுப் பிழைப்பிற்காய் வேலைதேடி ரீமாசென் கூட்டணியுடன் இணைந்து அலைந்து, ரீமாசென்னில் வெறுப்புற்றும் ஆண்ட்ரியாவின் மேல் காதலுடனும் தனக்கும் நடக்கும் போராட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமுமில்லாமல் இருக்கும் கார்த்திக், தானும் சோழவாரிசுதான் என்பதை உணர்ந்து கொள்வதுவும், பின் சோழப்படைகளுடன் இணைந்து அவர்களைக் காப்பாற்றப் போரிடுவதும், அது தோல்வியில் முடிவடைய, பின் சோழவாரிசைக் காப்பாற்றி அழைத்துச் செல்வதுவும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களைக் (போராட்டங்களின் இறுதி மாதங்களில் தாங்கள் வசிக்கும் நாடுகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதையும், பின் இப்போதும் நாடுகடந்த அரசொன்றை நிறுவி, தாயக விடுதலையிற்கான முயற்சியின் அடுத்த கட்டத்தினை நோக்கிய நகர்வில் இருப்பதையும்) குறிக்கின்றது.


ஒரு குறியீட்டுப் படமாக எனது பார்வையில் அலசுவதாலும், பதிவு நீண்டுவிடும் என்பதினாலும் படத்தின் ஏனைய அம்சங்கள் பற்றிய எனது பார்வையினைத் தவிர்த்து விடுகின்றேன். ஆயினும் “இது முழுக்க முழுக்க கற்பனையே” என்று படத்தின் ஆரம்பத்திலேயே குறிப்பிடப்படுவதால் எதற்காகப் பாண்டிய வம்மசத்துடன் இந்தக் கதையை முடிச்சுப்போட வேண்டும் என்கின்ற நியாயமான கேள்வியும் நிச்சயம் ஏற்படு்ம். தான் இருக்கும் சூழ்நிலையினையும் தனக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களையும் கருத்தில் கொண்டிருக்கக் கூடிய ஒரு இயக்குனர், ஒரு குறியீட்டுப்படத்தில் தான் சார்ந்து கதைசொல்ல வரும் பாத்திரங்களுக்கு எதிரானவர்களின் சார்பாகவும் கதையைத் திரிக்கக் கூடியதாகவே படத்தினை அமைத்திருப்பார். விரும்பியோ விரும்பாமலோ இங்கேதான் பாண்டிய நாட்டுக்கதை இழுத்துவிடப்பட வேண்டிய தேவை எழுந்து விட்டிருக்கின்றது. பாண்டிய இராச்சியம் என்றவுடன் மதுரை நினைவிற்கு வருகிறது. மதுரையுடன் சேர்ந்து கூடவே கண்ணகியும் நினைவிற்கு வந்து விடுகின்றாள். தன் கணவனைக் கொன்றவனையும் அவன் குடிகளையும், ஏன் மொத்த மதுரையையுமே பின்னாளில் அவள் எரித்து விடுகின்றாள். ஆயினும் தான் சொல்ல வந்த விடயம் திரிபடையாமல் இருப்பதற்காய், ஆயிரமாண்டுகாலப் பழிதீர்க்க வரும் ரீமாசென் சோழமன்னனனை கூடுவதற்கு அழைப்பதாய்க்காட்டி அவளுக்கும் கண்ணகிக்கும் சம்பந்தமில்லை என்றும் காட்டிவிடுகின்ற இயக்குனரின் திறமை வியக்கத்தக்கதே.


“இந்தக்காலத்தில இன்னொருநாட்டில் இருப்பவர்கள் மீது எப்படிச் சென்று போர் தொடுக்க முடியும்? ரொம்பத்தான் காதுல பூச்சுத்தியிருக்காரு செல்வராகவன்” என்றுதான் பலரும் சொல்கின்றார்கள். அவர்கள் கல்மடுக்குள அணை உடைப்பு சம்பந்தமாக அந்தக்காலப்பகுதியில் வெளிவந்த செய்திகளை மீண்டும் ஒருதடவை இணையத்தில் தேடிப்பிடித்து படித்துக் கொள்வார்களாக.


படம் பார்த்துவிட்டு வந்தபின்பும் “நெல்லாடிய நிலமெங்கே...” நெஞ்சைப் பிழிய வைத்துக்கொண்டிருந்தது.


Saturday, January 16, 2010

பரத்தை பத்தினியானாள். பத்தினி பகவதியானாள்.

மாதவி இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று (16 ஜனவரி 2010) மாலை வள்ளல் பொ.கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்ற, “தமிழர் திருநாள்” விழாவிற்குச் சென்றிருந்தோம். விழாவின் பிரதம விருந்தினராக சிங்கப்பூர் சட்ட மற்றும் இரண்டாம் உள்துறை அமைச்சர் திரு சண்முகம் அவர்களும் சிறப்பு விருந்தினராக சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்திருந்தனர்.

மாலை 6.00 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா ஆரம்பமாகியது. தமிழ்த்தாய் வாழ்த்து என்றவுடன் பாரதியாரின், “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே...” தான் நினைவிற்கு வந்து விடுகின்றது. இலங்கையில் நடைபெறுகின்ற தமிழ் விழாக்களிலெல்லாம் “...தொல்லை வினை தரு தொல்லையகன்று சுடர்க தமிழ்நாடே...” (தயவு செய்து இதில் உள்குத்து ஏதும் இருப்பதாகக் கருத வேண்டாம்) என்று தான் தமிழ்த்தாய் வாழ்த்து இன்னமும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்து அவரவர்கள் இயற்றியே படிக்கிறார்கள். ஒவ்வொரு விழாக்களிலும் புதியபுதிய தமிழ்த்தாய் வாழ்த்துக்களைக் கேட்கக்கூடியதாய் இருக்கின்றது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழ்ப்புகழ் பாடிய வாயால்

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் யாங்கணமே பிறந்த தில்லைஉண்மை வெறும் புகழ்ச்சியில்லை

என்று தமிழ்ப்புலவர்களின் பெருமையும் கூறியவன் பாரதி.

மாதவி இலக்கிய மன்றத்தின் இவ்விழாவில் சிறப்புரை ஆற்றிய சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் உரையிலும் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் இளையோடியிருந்தது. மாதவி இலக்கிய மன்றத்தினாரால் பள்ளி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற சிறார்களின் உரைகளும், பாடல்களும், ஆடல்களும், மாறுவேடங்களும் நன்றாகவே இருந்தன். ஆயினும் அவற்றில் விஜய் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சிகளின் பாதிப்பு இருந்ததை அவதானிக்க முடிந்தது.

மேளதாளங்களுடனும் மயிலாட்டம் மற்றும் கரகாட்டம் எனபவற்றுடனும் நிகழ்ச்சியின் நடுவே பிரதம விருந்தினர் விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார். தமிழ் மொழி பற்றி உரையாற்றிய மாணவி பல அரிய தகவல்களையும் சிங்கையில் இருந்து தமிழ்மொழி அழிந்து போகக்கூடிய சாத்தியப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வினையும் ஏற்படுத்தினார். எழுதி வைத்திருந்து அவர் வாசித்திருந்தாலும், அதில் இருந்த கருத்துக்களும், ஏற்ற இறக்கங்களுடன் உரையாற்றிய விதமும் மிகவும் நன்றாகவே இருந்தது. அங்கு பேசியிருந்த சிறார்கள் பலரினதும் உரையிலும் மொறிசியஸ் நாட்டைப் போன்று சிங்கையிலும் வருங்காலத்தில் தமிழ் மொழி தெரியாத தமிழர்கள்தான் இருக்கக்கூடுமோ என்றும் சந்தேகம் உண்டானது.

சில நடனநிகழ்ச்சிகளுடன் கோலாட்டம், கும்மி போன்ற தமிழர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் மிகவும் இரசிக்கக் கூடியனவாக இருந்தன. ஆயினும் இந்தக் கலைகளும் விரைவில் அழிந்து விடுமோ என்றும் கிலேசம் உண்டானது. மயிலாட்டத்தை நான் பார்த்தது இதுவே முதல் தடவை. என் பால்ய வயதினில் ஒரு தடவை நானும் கோலாட்டத்தில் பங்கு பற்றியிருக்கிறேன். அதன் பின்னர் பல வருடங்கள் கழித்து ஒரேயொரு தடவை பேராதனைப் பல்கலைக்கழக நிகழ்ச்சியொன்றில் கோலாட்ட நிகழ்வினைக் காணமுடிந்தது. அதன் பின்னர் இன்றுதான் காணக்கி்டைத்தது. தமிழர் பாரம்பரியக் கலைகள் அழிந்த போவது பற்றிய கவலைகள் பலரைப் போலவே என்னிடமும் உண்டு. 2002ஆம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டுப்பாடல்கள் மற்றும் நாட்டாரிலக்கியங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காக தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பினூடாக (TITA) சில மாதங்கள் ஈடுபட்டிருந்த போதே நாங்கள் எத்தனை விடயங்களை தொலைத்து விட்டிருக்கிறோம் என்பது தெரிய வந்தது. அதற்கு முன் இவையெல்லாம் இனித்தேவையில்லை என்றே எண்ணியிருந்தேன். இப்போதைய தமிழக தொலைக்காட்சிகளால் நடாத்தப்படும் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும் போது விரசமேயில்லாத பல பாரம்பரிய ஆடற்கலைகளை நாம் எமது அடுத்த சந்ததிக்கு மறைத்து விட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது.

சட்ட மற்றும் இரண்டாம் உள்துறை அமைச்சர் திரு. சண்முகம் அவர்கள் மிகவும் சுருக்கமாகவும் அதே சமயம் தெளிவாகவும் சில கருத்துக்களை முன்வைத்தார். இன்றைய நிகழ்ச்சி ஏற்பாட்டினை வியந்துரைத்ததுடன் அவரின் உரையினூடாக ஒரு நாட்டு அரசாங்கம் எப்படி தன் குடிமக்களிடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உணர்ந்து அதை முன்கூட்டியே தடுப்பதில் காட்டும் அக்கறையை உணர முடிந்தது. சில தினங்களுக்கு முன்னாள் மலேசிய உயர் நீதிமன்றம் கடவுளைக் குறிப்பதற்கு “அல்லா” என்கின்ற பெயரை முகம்மதியர்கள் அல்லாதவர்களும் பயன்படுத்தலாம் என்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து சில கத்தோலிக்க தேவாலயங்கள் சேதமாக்கப்பட்டு மதக்கலவரங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் பக்கத்து நாடான சிங்கையில் நடைபெற்ற இந்தத் “தமிழர் திருநாள்” விழாவின் முக்கிய புரவலராக ஒரு முகம்மதியரே இருந்ததுடன் பலமதங்களைச் சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சிகளில் ஒற்றுமையுடன் பங்குபற்றியிருந்தனர்.

இறுதி நிகழ்வாக எல்லோரும் ஆவலுடன் காத்திருந்த சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களின் சிறப்புரை ஆரம்பமாகியது. தலைப்பே இல்லாமல் உரையாற்றி திரு. சுகி சிவம் அவர்கள் மாதவி இலக்கிய மன்றத்தின் நிகழ்வாதலால் தான் சிலப்பதிகாரத்தையும் இடையிடையே தொட்டுச் செல்வேன் என்று தொடக்கத்திலேயே கூறியிருந்தார். இன்றைய வாழ்வை வளமாக்குவதற்குத் தேவையான பல கருத்துக்களை அவரின் பாணியிலேயே சின்னச்சின்ன நகைச்சுவைக் கதைகளினூடாக வந்திருந்தவர்களின் மனங்களில் விதைத்துக் கொண்டிருந்தார். உள்ளதை அல்லது நடந்து முடிந்த விடயங்களை அப்படியே ஏற்றுக்கொள்வது பற்றியும் அதனால் கிடைக்கும் அனுகூலங்கள் பற்றியும் மிகவும் சிறப்பாக உரையாற்றனார். மனமெனும் குரங்கிடம் நாம்-ஆகிய விமானங்களைச் செலுத்துவதற்கு அனுமதித்து விடுவதால் ஏற்படும் விபத்துகள் பற்றிக் கூறியது அருமையாக இருந்தது.

கோவலன் கண்ணகியைப் பிரிந்தது அவள் மேல் எற்பட்ட வெறுப்பினால் அன்று என்றும், அது மனித மனம் கொள்ளும் சலிப்பினால் ஏற்பட்டதாகவும் கூறினார். எதைக்கண்டு மாதவியை மோகித்தானோ, பின் அதே காரணத்திற்காகவே மாதவியை விட்டும் பிரிகின்றான் கோவலன். தாம்பத்தியத்தில் கண்ணகி கொடுப்பதைப் பெற்றுக்கொள்பவளாக விளங்கினாள். மாதவியோ கொடுப்பவளாகவே விளங்கினாள். அந்த வித்தியாசமே கோவலனைக் கண்ணகியிடமிருந்து பிரித்து மாதவிபால் வீழ்த்தியிருக்கிறது. விருப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் அந்த விருப்பே பின்னர் வெறுப்பாகவும் மாறியிருக்கிறது. ஆக ஒரு தாளின் இரு பக்கங்களையும் போன்றதே விருப்பும் வெறுப்பும். இதனையே மிக எளிமையாக ஓஷோ அவர்கள் “சிரசாசனம் செய்யும் போதும் நான் நானாகவே இருக்கின்றேன்” என்று குறிப்பிட்டிருக்கின்றார் என்றார். தன் மனைவியை முற்றுமுழுதாய்ப் புரிந்த கொண்ட கணவனும் இல்லை. கணவனை முற்றுமுழுதாய்ப் புரிந்து கொண்ட மனைவியும் இல்லை. இதைப் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே குடும்பத்தில் ஏற்படும் முக்கால்வாசிப் பிரச்சனைகள் தீர்ந்தவிடும் என்றார்.

கோவலனும் கண்ணகியும் மணமுடிக்கையில் அவர்கள் வயது முறையே பாதினாறும் பன்னிரெண்டும் என்று தான் ஒரு பள்ளியில் கூறியபின்னர், ஆட்டோகிராப் வாங்க வந்த பையன் தன் அப்பாவிற்கு வந்து வகுப்பெடுக்கும் படி கூறியதாக நகைச்சுவையாகக் கூறிய சொல்வேந்தர், மேலைத்தேய கீழைத்தேய பண்பாட்டு வித்தியாசங்களைப் பற்றியும் விளக்கமளித்தார். கீழைத்தேயங்களில் பதின்மப் பருவத்திலேயே மணம்முடித்துக் கொடுப்பது தவறென்றும், அதே வேளை மேலைத்தேயங்களில் பதின்மப் பருவங்களில் பிள்ளைகள் திருமண பந்தமின்றி பாலியல் உறவுகளில் ஈடுபடுவதை அனுமதிப்பதும் தவறென்றும் எடுத்துரைத்த அவர் வளமான வாழ்ககைக்கு யௌவனம் மலரும் பருவததில் உள்ளவர்களுக்கு தியானத்தைக் கற்றுக்கொடுப்பதே அவர்கள் வாழ்க்கையை மேன்மைப்படுத்திக் கொள்ள உதவும் என்றார். ஈற்றில் நிகழ்ச்சியை நிறைவு செய்ய வேண்டிய வேளை வந்து விட்டதை விழாக்குழுவினர் சில தடவைகள் நினைவூட்டிய பின்னர், சிலப்பதிகாரத்தின் கதையை மிகச் சுருக்கமாக இருவரிகளில் கூறினார்.

பரத்தை பத்தினியானாள். பத்தினி பகவதியானாள்.

விழா முடிந்து, நான் சேர்ந்து போயிருந்த அம்மாவுடன் உரையாடிய போது, இன்னும் கொஞ்ச நேரம் அவரைப் பேச விட்டிருக்கலாம் என்றேன். அதை அவரும் ஆமோதித்தார். நான் பல இலக்கியக் கருத்துகளையும் அவரது விளக்கங்களையும் எதிர்பார்த்தே போயிருந்தேன். அம்மா சொன்னார், “அவற்ற பேச்சைக் கேட்டாப்பிறகு நல்லா நடக்கவேணும். மற்றாக்களி்ன்ர மனச நோகப்பண்ணக்கூடாது. அப்பிடி இப்பிடியெல்லாம் இருக்கவேணும் போல இருக்கும். ஆனா ரெண்டு நாள் போனா எல்லாம் மறந்து போயிற்று பழைய மாதிரி வந்திருவம்” என்றார்.

உண்மைதானே?

Thursday, January 14, 2010

பேரூந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

இன்றைய காலை பணியிடத்திற்குச் செல்வதற்கான பேரூந்துத் தரிப்பிடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை. காலம் அகாலமாகிக் கொண்டிருக்க, உடலுக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது. விட்டால் சரிவராது என்றது உள்ளுணர்வு. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னரான பட்டறிவு படமாயோட ஆரம்பித்தது.

அது இந்த ஆங்கில வருடத்தின் முதல் வேலைநாள். மூன்றரை நாள் விடுமுறையை அடுத்து வந்த நாளாதலால் சீக்கிரமே இருப்பிடத்தை விட்டுக் கிளம்பியிருந்தேன். பேரூந்தத் தரிப்பிடத்தை அடைகையில் நான் செல்ல வேண்டிய பேரூந்தும் வந்த விட்டிருந்தது. வழமை போன்றே காலியாகவிருந்த ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்து கொண்டே வெளியாலே துமித்துக் கொண்டிருந்த மழையினூடாக வேடிக்கை பார்க்கலானேன். அடுத்து வந்த தரிப்பிடத்தை அடைகையில் மழை பலத்து விட்டிருந்ததனால் பேரூந்திற்குள் ஏறுபவர்களை நோக்கினேன்.

பலரையும் தவிர்த்து ஒரு பெண் என் கவனத்தை ஈர்த்தாள். முப்பது வயது மதிக்கத்தக்கதான அந்தப் பெண் மலே அல்லது இந்திய-மலே கலப்பினத்தவளாக இருக்கக்கூடும். முகம் கழுவிவிட்டு வந்து முகத்தைத் துடைக்காமல் பவுடரைப் பூசினால், ஈரம் உலர்ந்த பின்னர் எப்படி இருக்குமோ அப்படியே அவள் முகமெங்கும் திட்டுத்திட்டாக வெள்ளையாக பவுடர் அப்பிக் கிடந்தது. வந்தவள் எனக்கு முன் வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். வெளியே மழை இன்னமும் அடைத்துப் பெய்யத் தொடங்கியது.

சிறிது நேரத்தின் பின் மீண்டும் பார்வையினை பயணிகள் மீது ஓட விட்டேன். இப்போது இந்தப் பெண் தன்னை அலங்கரித்தக் கொண்டிருப்பதனை அவதானிக்கக்கூடியதாயிருந்தது. அவளது கைப்பைக்குள் இருந்து விதம் விதமான தூரிகைகளும் விதவிதமான வர்ணப் பூச்சுக்களும் இடையிடையே வெளியே வந்து அவள் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. அரை அங்குலமளவிலான தூரிகையினைப் பயன்படுத்தி முகமெங்கும் உரஞ்சுகையில் எனக்குள் வியப்பு மேலிட்டது. நான் அதானிக்காதிருந்த பொழுதுகளில் இன்னும் என்னென்ன விதமான உபகரணங்களைப் பயன்படுத்தினாளோ? அவளது கைப்பைக்குள் அழகுசாதனப் பொருட்களைத் தவிர்த்து வேறு ஏதேனும் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே எனக்குப் பட்டது. எல்லாப் பெண்களினதும் கைப்பைகள் இப்படித்தான் அழகுசாதனப் பொருட்களால் நிரப்பப் பட்டிருக்குமா?

எனக்கான இறங்குமிடம் வந்தது. இறங்குகையில் தான் அவளது முகத்தினை முன்பக்கமாய் அவதானிக்க முடிந்தது. ஆச்சரியமாயிருந்தது. வெள்ளைத் திட்டுத்திட்டாய் அலங்கோலமாயிருந்த முகம், இப்போது அழகில் ஜொலித்துக் கொண்டிருந்தது. இப்போது அவளது முகத்தைப் பார்ப்பவர்கள் யாரும் அவளை பதினெட்டு வயதிற்கு மேல் மதிக்க மட்டார்கள். பாரதி வியந்து பாடிய பதினாறு வயதுப் பருவ மங்கை இப்படித்தான் இருப்பாளோ?


அவளை மறுபடி பார்க்க முடிந்தால், அதுவும் இன்றையைப் போல் பின்னாலிருந்தல்லாமல் அவள் தன்னை அலங்கரிப்பதை அருகிலிருந்து பார்க்க நேர்ந்தால் அந்த இளமை பெயரும் ரசவாதத்தை நானும் அறிந்து கொள்ளலாமே என்கின்ற ஏக்கம் எழுந்தது.

அழகு நிலையங்களிலிருந்த வெளிவரும் பெண்களின் பின்னால் செல்லாதீர்கள். சில வேளைகளில் அவர் உங்களின் பாட்டியாகவும் இருக்கக்கூடும் என்பது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே சொல்லப்படுகின்றது என்று அதுவரை நினைத்திருந்த எண்ணம் காணாமல் போயிருந்தது.

அன்றைய தினம் நேரத்துடனேயே பணியிடத்திற்குச் சென்றிருந்ததால், மறுநாள் விழிப்புமணி ஒலி எழுப்புகையில் அதனை snooze mode இற்கு மாற்றிவிட்டு இழுத்திப் போர்த்துக் கொண்டேன். சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையோ பொய்யோ, என்னைப் பொறுத்தவரை, விழிப்புமணி ஒலித்த பின்னும் அதை snooze mode இற்கு மாற்றிவிட்டு இழுத்திப் போர்த்திக் கொண்டு உறங்கும் சுகமிருக்கிறதே, அதைத் தான் சொர்க்கமென்பேன். அந்த சொர்க்கத்தை அனுபவி்த்ததன் விளைவு, இருப்பிடத்தை விட்டு வெளியேறும் நேரம் பிந்தி விட்டிருந்தது.


பேரூந்திற்கு தரித்து நிற்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகங்களாய்க் கடந்து கொண்டிருந்தது. “காத்திருந்தால் நிமிடங்கள் வருடமென்பாய், வந்து விட்டால் வருடங்கள் நிமிடமென்பாய். காதலித்துப்பார்...” என்று கவிதை எழுதிய வைரமுத்து, இப்படியான ஒரு சூழ்நிலையை அனுபவித்திருக்க மாட்டாரோ என்றே எண்ணத் தோன்றியது.

வந்த பேரூந்தினுள் என்னைத் திணித்துக் கொண்டே ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தாலும் மனம் என்னவோ என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டிருந்தது. ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பேரூந்து பயணிகளுக்காக தரிக்கையில் எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஏறுகின்ற இறங்குகின்ற பயணிகளை மனத்திற்குள் திட்டத் தொடங்கினேன். பேரூந்து சமிக்ஞை விளக்குகளில் நிற்கையில் சமிக்ஞை விளக்குகளின் மேல் கோபமாய் வந்தது. பேரூந்து மெதுவாகச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட, என்னடா இவன் பேய்ப்... தேய்ச்சுக் கொண்டு போகிறான் என்று சாரதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. இப்போது வயிற்றுற்குள் அமிலச் சுரப்புகள் உண்டாவதைத் தெளிவாக உணரமுடிந்தது. ஒருவாறாக நான் இறங்க வேண்டிய தரிப்பிடம் வரவே இருக்கையை விட்டு எழுந்தேன்.

அட! எனது பக்கத்து இருக்கையில் அதே பெண் தன் ஒப்பனைகளை முடித்து விட்டு சிறிய தளவாடியொன்றில் தன் முகத்தினைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

எதனை நான் பார்க்க வேண்டுமென்று முந்தைய தினம் நான் விரும்பியிருந்தேனோ, அதற்கான சந்தர்ப்பம் மறுநாளே வாய்த்து விட்டிருந்தும் நானிருந்த மனநிலையினால் அதனைத் தவற விட்டிருந்தேன். அன்றைய தினம் பணியிடத்தை அடைந்து விரல் பதிக்கையில் 5 நிமிடங்கள் மட்டுமே தாமதமாகியிருந்தது. ஆயினும் வயிற்றினுள் அளவிற்கு மீறிச் சுரந்து விட்டிருந்த அமிலம் அன்றைய நாள் முழுதும் தொந்தரவினைத் தந்து கொண்டிருந்தது.

நினைவுச்சுழல் நிகழ்காலத்திற்குத் திரும்ப பதற்றமடைவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்கின்ற தெளிவு உண்டானது. சிறிது நேரத்திலேயே எனக்கான பேரூந்தும் வந்து சேர்ந்தது. மீண்டும் ஜன்னலோர இருக்கை. அலைபேசி வானொலியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

“பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்...”

பாடல் செவிகளைத் தழுவிக்கொண்டிருக்க எண்ணப்பறவை சிறகடிக்கத் தொடங்கியது.

பயணங்களின் போது எங்களில் பெரும்பாலானவர்கள் ஜன்னலோர இருக்கைகளையே விரும்புகின்றோம். முக்கியமாக வெளியே விடுப்புப் பார்க்கவும், இயற்கையை இரசிக்கவும் என ஏராளமான விடயங்கள் பேரூந்தின் வெளியே கொட்டிக் கிடக்கின்றன. பேரூந்திற்குள்ளே அப்படித் தொடர்ந்து இரசிப்பதற்கு பெரிதாக எதுவும் இருக்காது என்கின்ற நினைப்பும் எமக்கு வேண்டிய அல்லது விரும்பத்தக்க விடயங்கள் வெளியே தான் இருக்கின்றன என்கின்ற எண்ணமும் தானே எமக்குள் இருக்கிறது. அதே வேளைகளில் பேரூந்தில் வரும் இளம் ஜோடிகளைப் பார்த்தால், அவர்களின் உலகமோ, அந்த இருவரிலும் மட்டுமே தங்கியிருக்கின்றது. அருகிலிருப்பவர்கள் பற்றிய எந்தவிதமான பிரக்ஞைகளுமின்றி அவர்கள் செயற்படும் விடயங்களைப் பார்க்கையில் என்ன தோன்றுகின்றது?

எமக்கான உலகம் எங்களால்தான் தீர்மானிக்கப் படுகிறது. புறக்காரணிகளால் அல்ல. ஆனாலும் நாங்கள் புறக்காரணிகளில் புலனைச் செலுத்திவிட்டு எங்களால் கட்டமைக்கப்படக்கூடிய உலகத்தை, அதுதரும் சந்தோசத்தை, அமைதியை அனுபவிக்க மறந்து விடுகின்றோம். ஜன்னலோர வாசிகளைப் போல எமக்கு வெளியே காணப்படும் விடயங்களில் எம்மைத் தொலைத்து விடுகி்ன்றோமே அன்றி எமக்குள் ஆழ்ந்து சென்று பார்க்கத் தவறி விடுகின்றோம். அத்துடன் பல முகமூடிகளையும் அணிந்து மற்றவர்களிடம் எம்மை மறைக்க ஆரம்பித்துப் பின் எம்மிடமிருந்தும் நாம் தொலைந்து விடுகின்றோம்.

இறங்கவேண்டிய இடம் வரவே எண்ணங்கள் கலைத்து இறங்கிக் கொண்டேன். இன்றைக்கு 15 நிமிடங்கள் தாமதாமாகி விட்டிருந்தது. ஆனாலும் மனது சந்தோசமாகவிருந்தது. இன்றைக்கு மட்டுமாவது முகமூடிகள் அகற்றி இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டேன். சக பணியாட்கள் பொங்கல் வாழ்த்துத் தெரிவிக்கையில்தான் இன்றைக்குப் பொங்கல் சாப்பிட வேண்டுமென்கின்ற ஆவல் எழுந்தது. நான் மட்டுமன்றி மற்றவர்களும் பொங்கல் உட்கொள்ள விரும்பவே மதிய உணவாகப் பொங்கல் கிடைக்குமா என்று கேட்டு உணவகங்களுக்கு மேற்கொண்ட அழைப்புகள் பயன் தரவில்லை. எனது இருப்பிடத்திற்கு அண்மையில் இருக்கும் நண்பன் இங்கே வந்த பிறகும் பொங்கல் பொங்குவது ஞாபகத்திற்கு வந்தது. இன்றைக்கு முகமூடி அணியக்கூடாது என்று எண்ணியிருந்தது நினைவிற்கு வந்ததாலோ அல்லது ஆசை வெட்கம் அறியாது என்பதனாலோ google இல் அவனுடன் தொடர்பினை ஏற்படுத்தினேன். அவனுக்கும் நான் கேட்க முதலிலேயே புரிந்து விட்டது. ஏற்கனவே எனது இருப்பிடத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் எனக்கான பொங்கல் வைக்கப்பட்டிருப்பதாக அறியத் தந்தான். பொங்கலோ பொங்கல்! உள்ளம் நிறைந்த பொங்கல்.

Wednesday, January 13, 2010

பொங்கல் அவசியமா?


உழவர் திருநாள், தைப்பொங்கல், தைத்திருநாள், தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு என்று இன்றைய தேதியில் அழைக்கப்படுகின்ற இந்த நாள் அல்லது பண்டிகை கொண்டாடப்படுவது தற்போதைய சூழ்நிலையில் அவசியமா?

விவசாயிகளால் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்டதாக இந்தப் பண்டிகை பற்றிய கதைகள் இருக்கின்ற போதினில் இன்றைய நிலையில் மற்றையவர்களும் அதனைக் கொண்டாட வேண்டிய தேவையின் அவசியம் தான் என்ன?

சரி. இப்போது தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்த் திங்கள் தை முதலாம் நாள் அறிவிக்கப்பட்டிருப்பதால் புத்தாண்டினைப் புது நம்பிக்கைகளுடனும் புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் திட்டங்களுடனும் ஆரம்பிப்பதற்காக அதனைக் கொண்டாடலாம். பன்னிரெண்டாம் இராசியான மீனத்திலிருந்து முதலாம் இராசியான மேடத்திற்கு சூரியன் இடம்பெயர்வது தமிழ்த்திங்கள் சித்திரை ஒன்றிலாக இருப்பதனால், தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்த்திங்கள் தை முதலாம் நாளைக் கொள்வதா அன்றி தமிழ்த்திங்கள் சித்திரை முதலாம் நாளைக் கொள்வதா என்கின்ற சந்தேகம் இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக சோதிடத்தினை நம்புகின்றவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். இப்படியான சந்தேகங்களுக்குமப்பால், இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டியது அவசியம் தானா? பாரிய இன அழிப்பு மற்றும் இன்னல்களால் பாதிப்படைந்திருக்கும் நிலையில் இதனைக் கொண்டாட வேண்டியதற்கான காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா...?” என்றார் பாரதிதாசன்.
துன்பத்தில் துவண்டு போயிருக்கும் எவருக்குமே ஆறுதலளித்து நம்பிக்கை கொடுத்து இன்பம் ஊட்டவேண்டுமேயன்றி, அந்தத் துன்பியல் நிகழ்வுகளையே தொடர்ந்து நினைத்து வேதனைப்பட்டுக் கொணடிருப்பதால் பயனேதுமில்லை. ஏற்படுத்தப்பட்ட இழப்புகளை, உறவுகளை மறந்து விடுவதல்ல அதன் அர்த்தம். வேதனைகளையும் இழப்புக்களையும் உரமாக்கிக் கொண்டு மீண்டும் எழ வேண்டும். தனிமனிதனுக்கும் சரி, ஒரு இனத்திற்கும் சரி, இது பொருந்தும். விழவிழ எழுந்தவர்கள் தமிழர்கள். இனியும் எழுவோம். சென்றடைய வேண்டிய இடம் பற்றிய தெரிவு தெளிவானால் பாதைகள் பற்றிய கவலைகள் வேண்டியதில்லை. பாதைகள் மாறியேனும் பயணம் முடிவிடத்தை அடைந்து விடும். அந்த நம்பிக்கையை ஊட்ட வேண்டிய தருணம் இது.

பேய் சரிப்பட்டுவராது என்பது உறுதியாகத் தெரிந்த பின்னர், வேறு தெரிவுகளற்ற நிலையில் பிசாசை முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. எய்தவனை விடுத்து அம்பினை நோவதில் அர்த்தமுமில்லை. எம்விதியை மாற்றியவர்களின் விதியை மாற்றும் வாய்ப்பு இப்போது எம் கைகளில். மாற்றம் ஒன்று தான் மாறாதது. அந்த நம்பிக்கையை மனங்களில் விதைத்து பன்னிரெண்டாம் நாளில் அறுவடை செய்யவேனும் இந்தப் புத்தாண்டினைக் கொண்டாட வேண்டியது அவசியமே.


உங்கள் எல்லோருக்கும் என் உளப்பூர்வமான தைத்திருநாள் வாழ்த்துக்கள்!