Wednesday, January 13, 2010

பொங்கல் அவசியமா?


உழவர் திருநாள், தைப்பொங்கல், தைத்திருநாள், தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு என்று இன்றைய தேதியில் அழைக்கப்படுகின்ற இந்த நாள் அல்லது பண்டிகை கொண்டாடப்படுவது தற்போதைய சூழ்நிலையில் அவசியமா?

விவசாயிகளால் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்டதாக இந்தப் பண்டிகை பற்றிய கதைகள் இருக்கின்ற போதினில் இன்றைய நிலையில் மற்றையவர்களும் அதனைக் கொண்டாட வேண்டிய தேவையின் அவசியம் தான் என்ன?

சரி. இப்போது தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்த் திங்கள் தை முதலாம் நாள் அறிவிக்கப்பட்டிருப்பதால் புத்தாண்டினைப் புது நம்பிக்கைகளுடனும் புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் திட்டங்களுடனும் ஆரம்பிப்பதற்காக அதனைக் கொண்டாடலாம். பன்னிரெண்டாம் இராசியான மீனத்திலிருந்து முதலாம் இராசியான மேடத்திற்கு சூரியன் இடம்பெயர்வது தமிழ்த்திங்கள் சித்திரை ஒன்றிலாக இருப்பதனால், தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்த்திங்கள் தை முதலாம் நாளைக் கொள்வதா அன்றி தமிழ்த்திங்கள் சித்திரை முதலாம் நாளைக் கொள்வதா என்கின்ற சந்தேகம் இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக சோதிடத்தினை நம்புகின்றவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். இப்படியான சந்தேகங்களுக்குமப்பால், இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டியது அவசியம் தானா? பாரிய இன அழிப்பு மற்றும் இன்னல்களால் பாதிப்படைந்திருக்கும் நிலையில் இதனைக் கொண்டாட வேண்டியதற்கான காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா...?” என்றார் பாரதிதாசன்.
துன்பத்தில் துவண்டு போயிருக்கும் எவருக்குமே ஆறுதலளித்து நம்பிக்கை கொடுத்து இன்பம் ஊட்டவேண்டுமேயன்றி, அந்தத் துன்பியல் நிகழ்வுகளையே தொடர்ந்து நினைத்து வேதனைப்பட்டுக் கொணடிருப்பதால் பயனேதுமில்லை. ஏற்படுத்தப்பட்ட இழப்புகளை, உறவுகளை மறந்து விடுவதல்ல அதன் அர்த்தம். வேதனைகளையும் இழப்புக்களையும் உரமாக்கிக் கொண்டு மீண்டும் எழ வேண்டும். தனிமனிதனுக்கும் சரி, ஒரு இனத்திற்கும் சரி, இது பொருந்தும். விழவிழ எழுந்தவர்கள் தமிழர்கள். இனியும் எழுவோம். சென்றடைய வேண்டிய இடம் பற்றிய தெரிவு தெளிவானால் பாதைகள் பற்றிய கவலைகள் வேண்டியதில்லை. பாதைகள் மாறியேனும் பயணம் முடிவிடத்தை அடைந்து விடும். அந்த நம்பிக்கையை ஊட்ட வேண்டிய தருணம் இது.

பேய் சரிப்பட்டுவராது என்பது உறுதியாகத் தெரிந்த பின்னர், வேறு தெரிவுகளற்ற நிலையில் பிசாசை முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. எய்தவனை விடுத்து அம்பினை நோவதில் அர்த்தமுமில்லை. எம்விதியை மாற்றியவர்களின் விதியை மாற்றும் வாய்ப்பு இப்போது எம் கைகளில். மாற்றம் ஒன்று தான் மாறாதது. அந்த நம்பிக்கையை மனங்களில் விதைத்து பன்னிரெண்டாம் நாளில் அறுவடை செய்யவேனும் இந்தப் புத்தாண்டினைக் கொண்டாட வேண்டியது அவசியமே.


உங்கள் எல்லோருக்கும் என் உளப்பூர்வமான தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

Thursday, December 31, 2009

என்னைக் கண்டீர்களா?



எனக்குள்ளேயே
நான் இருப்பதாய்
நெடுநாளாயிருந்தவென்
நினைப்பு கலைந்ததெனக்கு.

வேறெங்கோவெல்லாம்
என்னைக் கண்டதாய்,
கண்டவர்கள் வந்து
சொல்லக் கேட்டேன்.

வாய்வழி வந்து
செவிவழி புகுந்து,
பின்னும் நான்
அலைகின்றேனாம்.

பலரும் பார்த்துவிட்டுப்
பார்க்காமலேயே போவதைப்,
பார்த்ததாய்ச் சொல்கிறார்கள்.

காற்று வெளிகளில்
கால்தடம் பதி்ப்பதாய்
தூற்றவும் செய்கிறார்களாம்.

எனக்குள் நானிருந்ததான
நினைப்பெனக்கு
கலைந்ததிப்போ.

உங்களைத் தான்!
எங்கேனும் கண்டீர்களா
நானின்றி என்னை?

Sunday, December 27, 2009

கனவு

இரவைத் தின்று
வளர்கின்றன கனவுகள்.
வதவதவென விதவிதமாய்
கற்பனைக்கும் அப்பால்.

புவியீர்ப்புவிசை எனக்கு
புறக்கணிக்கப்படுகிறது.
ஈர்ப்பின்றியவாறே எனது
இசைவுகளும் அசைவுகளும்.

அர்த்தங்கள் இழக்கும்
தர்க்கங்களும், எந்தவொரு
புத்தகத்திலும் இல்லா
வித்தகங்களுமாய்...

கனவிலும் வருகின்ற
கனவுகள் எந்தப்
புனைவிலும் வாராத
நினையா நிகழ்வுகள்.

கற்பிதங்களா? அன்றி
அற்புதங்களா? அவைபற்றி
செப்பவே முடியாத
சொப்பனங்கள்.

கனவு வாழ்க்கையா?
வாழ்க்கைக் கனவா?
இரவுகளில் கனவா?
கனவுகளில் இரவா?

கனவு தின்கின்ற
உறக்கம்! அல்லது
உறக்கம் தின்கின்ற
கனவு! நிஜமெது?

Monday, December 21, 2009

விடுகதையா வாழ்க்கை?



நேற்றைய தினம், நண்பன் ஒருவனின் இல்லத்தில், அவர்களின் பெற்றோரின் வரவினை ஒட்டி விருந்துடன் கழிந்தது. பலரும் கலந்து கொண்ட அந்தத் தமிழக விருந்திற்கு முந்தைய தினம் பிறிதொரு நண்பன் வீட்டில் இலங்கை விருந்து. இரண்டிலும் குழந்தைகளின் இயல்புகளை வியப்புடன் கவனித்தக் கொண்டிருந்தேன். தஙகளுக்குள் அவர்கள் அடிபட்டு அழுதுகொண்டாலும் பின் சிறிது நேரத்தில் தாங்களாகவே கோபங்களை மறந்து மீண்டும் விளையாட்டினைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். நினைத்த போதிலெல்லாம் ஓடினார்கள், துள்ளினார்கள், கூக்குரலிட்டார்கள். இப்போதைய நிலையில் எங்களால் அப்படி முடியுமா?

குழந்தைப் பருவத்தி்ல் நாங்கள் அனைவருமே அப்படித்தான் இருக்கிறோம். ஆனால் வளர வளர எமக்கிடையிலான பேதங்களும் கோபங்களும் வளர்ந்து கொண்டே வருவதுடன் எமது இயல்புகளை இழந்து விட்டு (வரட்டுக்) கௌரவங்களைக் கட்டிக் கொள்கின்றோமே. எதற்காக? அல்லது எவற்றிற்காக? சரி! எதற்காகத்தான் எமக்கு இந்த வாழ்க்கை?

“பிறருக்கு நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மையைச் செய்யாவிட்டாலும் தீமையையாவது செய்யாதிரு.” என்றார் விவேகானந்தர். அப்படியானால் மற்றவர்கள் எதற்காகப் பிறந்தார்கள் என்ற குதர்க்கம் தானாகவே எழுகிறது. எல்லோருமே ஒருவருக்கொருவர் நன்மை செய்யவே பிறந்ததாக/பிறப்பதாக வைத்துக் கொண்டால், அதற்காக எதற்குப் பிறக்க வேண்டும். பிறக்காமலேயே இருந்திருக்கலாமே. சரி அப்படிப் பிறந்தாலும் பின் எதற்கு இறக்க வேண்டும். வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாக இருக்கையில், ஏன் அது அனைவருக்கும் சமமானதாக இல்லாமல் இருக்கிறது?

மாலை செம்பாவாங் கடற்கரைக்குச் சென்றிருந்தோம். பலரும் பொழுதுபோக்கிற்காக தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கரையை அண்டிய அந்த இடத்திலும் பரவலாக மீன்கள். சில மீன்கள் இரையை அருந்திவிட்டு இலாவகமாகத் தப்பித்துச் செல்ல வேறுசில (அப்பாவி?) மீன்கள் தூண்டிலில் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டிருந்தன. அந்த மீன்களைப் போலத்தான் எங்களின் வாழ்க்கையுமா?

இரவு உணவு முடிந்து விடைபெற நேரம் இரவு 9.00 இனைத் தாண்டி விட்டிருந்தது. 'அட்மிரல்டி' தொடரூந்து நிலையம் வரை கூடவே வந்தான் நண்பன். பலவிடயங்களையும் உரையவாடியவாறே வருகையில், விருநதிற்கு வந்திருந்த இன்னொருவரால் பகிரப்பட்ட ஒரு உணமைச் சம்பவம் நினைவுக்கு வரவே, அவனிடம் கூறினேன்.

ஒரு தாய் தன் குழந்தைப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு கடைககுச் செல்கையில் அந்தக் குழந்தை தன் தாயிடம்,

“அம்மா! ஏன் நாங்க கடைக்குப் போறம்?”

“பொருட்கள் வாங்க.”

“ஏன் பொருட்கள் வாங்க வேணும்?”

“சமைக்கிறதுக்கு.”

“ஏன் சமைக்க வேணும்?”

“சாப்பிடுவதற்கு.”

“ஏன் சாப்பிட வேணும்?”

“சாப்பிட்டால்தான் உயிரோடிருக்கலாம்.”

“ஏன் உயிரோடிருக்க வேணும்?”

பதில் தெரியாமல் திண்டாடினாள் தாய்.

கதையை முடித்துவிட்டு, “சரி நான் வெளிக்கிடுகிறேன். பிறகு பார்க்கலாம்.” என்றவாறே விடைபெற்றேன் நண்பனிடம்.

“இரண்ணா! கதையை முடிக்காம, இப்பிடிப் பாதியிலயே விட்டுட்டுப்போனா எப்படி?” என்றான் நண்பன்.

விடை தெரியாமல் எனக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் வினா அது. பின்னால் பலாப்பழத்துடன் பலரும் நிற்பது போன்ற உணர்வு எழ சிரித்துக்கொண்டு விடைபெற்றவாறே, அலைபேசியில் வானொலி இணைப்பினை ஏற்படுத்தினேன்.

அப்போது இரவு 09.30 மணி தாண்டியிருக்கவே, மின்னல் F.M. உடன் காற்றலை வழியே இணைந்து கொள்ள,

“விடுகதையா வாழ்க்கை? விடைதருவார் யாரோ....”
பாடல் கேள்விகளைச் செவிகளுக்குள் செருகிக் கொண்டிருந்தது.

Thursday, November 12, 2009

தொடரூந்து (MRT) எனக்கொரு போதிமரம்


இன்றைய மதிய நேரம். ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையிலான நீண்ட தொடரூந்துப் பயணம். ஆரம்பத்தில் பயணிகள் அதிகம் இல்லையாயினும் பயணத்தூரம் செல்லச்செல்ல இருக்கைகள் நிரம்பி, நின்று கொண்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. தொடரூந்து நிலக்கீழ்ச் சுரங்கத்திற்குள் நுழைய அலைபேசியின் வானொலி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. சுற்றிவர நோட்டமிட்டேன். வழமை போன்றே ஒவ்வொரு பயணிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதது போல் தங்கள் தங்கள் உலகில் ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். அநேகமானோர் காதுகள் iPod-உடனேயே இணைக்கப்பட்டிருந்தன. சிலர் PSP (PlayStation Portable) யில் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடுத்த தரிப்பிடத்தில் இறங்குவதற்காய், எனக்கருகிலிருந்தவர் எழ, அந்த இருக்கையைக் குறிவைத்து ஒரு சீன இளம்பெண் வந்தாள். அங்கங்கே அங்கங்கள் காட்டும் ஆடையுடன் மதர்ப்பாயிருந்தாள். வாளிப்பாய், வனப்பை அள்ளிக்குவித்து வைத்தது போல் கவர்ச்சியாய் இருந்தாள். அருகில் அமர்ந்ததும் உள்ளம் கிளுகிளுப்பாவதை உணர்ந்தேன்.

அடுத்து வந்த தரிப்பிடத்தில் எனக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருந்தவர் எழ, அப்போதுதான் உள்ளே நுழைந்த இன்னோர் சீன மூதாட்டி அதில் வந்தமர்ந்தாள். உற்று நோக்கினேன். கூன்விழுந்து உடல் தளர்ந்து நரைதிரை கண்ட பெண். கைகளில் முகத்தில் ஆங்காங்கே பட்டைபட்டையாய் தோல் உரிந்தும் சில இடங்களில் புண்ணாகியும்...அருவருப்பாய் உணர்ந்தேன்.

எனக்குள் பார்த்தேன். ஒருபுறம் தேவதை மறுபுறம் தேவாங்கு என்று எழுந்த எண்ணம் மறுகணமே அடங்கிப்போனது. இப்போது என்னால் அருவருப்பாய்ப் பார்க்கப்படுகின்ற இந்த முதிய பெண்ணும் பல ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு தேவதையாய் இருந்திருக்கக்கூடும். யார் கண்டது, எத்தனை இளைஞர்கள் இவள் பின்னால் அலைந்தார்களோ? இதோ இப்போது என்மறுபக்கத்தில் சுண்டி இழுக்கும் கவர்ச்சியுடன் காணப்படும் இந்த இளம்பெண் இன்னும் பல ஆண்டுகள் கழித்து, அப்போது வரும் இளைஞர்களால் அருவருப்பாய்ப் நோக்கப்படக்கூடும்.

அழகு, நிரந்தரமற்றதெனினும் முதற்பார்வையில், நாம் அழகாய் தெரிபவற்றின் மேல் கவரப்படவும் அசிங்கமாய் தெரிபவற்றின் மேல் வெறுப்புறவும் தானே செய்கிறோம். வாழ்வின் இருகோடி அந்தங்களும் என் இருபுறமும் இப்போது இருப்பதாய் எனக்குப்பட்டது. அழகைக் கண்டு ரசிப்பதா? அல்லது அசிங்கத்தைப் பார்த்து வெறுப்பதா? உணர்வுகள் திண்டாடின.

சரி! இந்த மூதாட்டியை எல்லோருமே அருவருப்பாய்த்தான் பார்ப்பார்களா? மீண்டும் அந்த மூதாட்டி பக்கம் திரம்பினேன். அட! அவருக்கு மறுபுறம் அவரை ஆதுரமாய் அணைத்தவாறே ஒரு வயோதிகர், அவரின் கணவராய் இருக்க வேண்டும். இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருந்தனர்.

என்னால் அருவருப்பாய் வெறுக்கப்பட்ட அதே பெண், இன்னொருவருக்கு விருப்புக்குரியவராய் அழகானவராய்த் தெரிகிறார். “காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு” என்கின்ற பழமொழி ஞாபகத்தில் வந்து போனது. ஆக அவர் அருவருப்பாய் எனக்குத் தெரிவது எனது பிரச்சனையே அன்றி அந்த மூதாட்டியின் பிரச்சனையல்ல. அப்படியானால் எனக்கு அழகாய்த் தெரியும் மறுபுறம் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணும் வேறு யாராலும் வெறுக்கப்படக் கூடுமா? என்கின்ற கேள்வி எழுந்தது. இருக்கலாம், யாருக்குத் தெரியும்? “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம்”. பொதுவாக அழகான பெண்களிடம் காணப்படும் அகங்காரத்தினால் எத்தனையோ பேரை இவள் கேவலமாக நடத்தியிருக்கக்கூடும். சிலவேளைகளில் இவள் அகங்காரமற்றவளாய், எல்லோருடனும் அன்பாய் பழகுவளாய்க்கூட இருக்கலாம். இல்லை வேறுவிதமான இரசனை கொண்டவர்களுக்கு சிலவேளை இவள் அசிங்கமாய்க்கூடத் தெரியலாம். ஆக இவள் எனக்கு அழகாய்த் தெரிவதும் எனது பிரச்சனையே அன்றி அவளுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. ஒரு தெருநாய்க்கு ஒரு குட்டை போட்ட பெட்டைநாய் தான் அழகாய் கவர்ச்சியாய்த் தெரியுமேயன்றி ஐஸ்வர்யாராய் அல்ல.

அழகுகூட ஒரு ஒப்பீடே என்றது உள்மனது. உண்மைதான் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இன்னொருபொருள் கிடைக்காத போதுதான் நாம் ஒன்றை அப்படியே அது உள்ளவாறே ஏற்றுகொள்வோம். ஆனால் அப்படி, ஒப்பிடமுடியாத ஒரு பொருள் என்று எதுவும் எம்மிடையே உள்ளதா?

உண்மையைச் சொல்லுங்கள். இந்தக் கேள்வியை வாசித்ததும் உங்களுக்குள் ஒரு ஒப்பீடு நடந்ததா? இல்லையா? இதுதான், இந்த ஒப்பீடுதான் எமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ஆனால் இதே ஒப்பீடுதான் இன்றைய விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக நாம் பிரச்சனைகள் என்று எண்ணுபவற்றிற்கு காரணம் நாம் ஒப்பிடும் பொருட்கள் அல்ல, மாறாக நாம்தான் எமது பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது புரிந்தது.

இப்போது அந்த அழகிய இளம்பெண் பக்கம் திரும்ப அவள் எனக்கு இளம்பெண்ணாக (அழகிய விடுபட்டுப் போனது) தெரிந்தாள். மறுபுறம் திரும்ப அசிங்கமாய்த் தெரிந்த மூதாட்டி, வயதான பெண்ணாக (அசிங்கம் விடுபட்டுப் போனது) தெரிந்தார். ஏதோ புரிபட்டதாய் உணர்ந்தேன். இன்னும் ஒப்பீடு இருப்பதாகவே தெரிந்தது. நேரம் செல்லச்செல்ல இருவரும் பெண்களானார்கள் (இளமை/முதுமை என்பது விடுபட்டுப் போனது). மேலும் சில கணங்கள் கழிய இருவருமே சக மனிதர்களானார்கள் (பெண்கள் என்பது விடுபட்டுப்போனது). மேலும் சில கணங்கள் கடக்கையில்... நான் இறங்கவேண்டிய தரிப்பிடம் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட சிந்தனை கலைந்து வெளியே வந்தேன்.

வெளியே வானொலிக்கான சமிக்ஞைகள் இல்லாததால் iPod-இனை அணிந்து கொண்டேன்.

“...எறும்புத்தோலை உரித்துப் பார்த்தேன், யானை வந்ததடா. -நான்
இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா...”

கண்ணதாசனின் பாடல்வரிகள் அர்த்தத்துடன் செவிகளை வந்தடைந்து கொண்டிருந்தன.

Monday, November 9, 2009

வள்ளுவர் ஆணாதிக்கவாதி. தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிய டாக்டர் கி.வீரமணி



சிங்கப்பூர், பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்றைய (08 நவம்பர் 2009) மாலை வள்ளல் பொ.கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்ற, 'பெரியார் கண்ட வாழ்வியல்' எனும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.


புதுமைத் தேனி மா.அன்பழகன் அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த எம்.இலியாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வழமையான வரவேற்புரை போன்றல்லாது அது, வரவிருக்கும் செம்மொழி மாநாட்டினையொட்டியதான ஒரு வேண்டுகோள் உரையாகவும் அமைந்திருந்தது. பின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “புதியதோர் உலகம் செய்வோம்...” பாடலுக்கு மாணவியொருவர் மிக அற்புதமாக நடனமாடினார். பின்னர் வந்த குழந்தையொன்று “தமிழுக்கு அமுதென்று பேர்...” என்கின்ற பாடலை வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் மிக அருமையாகப் பாடினார்.

இம்முறை முதன்முறையாக சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தினரால் 'பெரியார் விருது' விருது வழங்கப்பட்டது. சிங்கை தேசிய நூலக வாரியத்தின் மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்கள், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய/ஆற்றிக் கொண்டிருக்கும் பணிக்காக அவ்விருது, வழங்கிக் கௌரவிக்கபட்டார்.

டாக்டர். சோம. இளங்கோவன் அவர்களின் வாழ்த்துரையினை அடுத்து தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் சிறப்புரை ஆரம்பித்தது.


அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் 30 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் பெருமளவு நிமிடங்களுக்கு மேடையில் அமர்ந்திருந்தவர்களைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தபோது, ச்சே! 30 நிமிட நேரத்தையும் இப்படியே தான் விரயமாக்கப் போகின்றாரோ என்று, அவரிடம் வேறு பல விடயங்களையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மனது சலிததுக் கொண்டது. பின் அவர் பெரியாரின் வாழ்வில் இடம்பெற்ற பல சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டபோது என்ன மனிதர் இவர்? இப்படிக் கீழ்த்தரமானவராக நடந்து கொள்கின்றாரே என்றுதான் எண்ணத்தோன்றியது.

பெரியார் ஒருபோதுமே தன்னை யாரும் மேடையில் வைததுப் புகழ்ந்து பேசுவதை விரும்பியதில்லை. மேலும் அவர், ஒருவரை மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனில், தண்டிக்கப்பட வேண்டியவரை மேடையில் ஏற்றி வைத்துவி்ட்டு அவரைப்பற்றிப் புகழ்ந்து கொண்டே இருந்தால் அதை விடக் கடுமையான தண்டனை வேறொன்று இருக்க முடியாது என்றார். அப்படியானால் மேடையில் இருந்து விழாவைச் சிறப்பித்தவர்கள் மேல் டாக்டர் கி. வீரமணி அவர்களுக்கு அப்படி என்ன கோபமோ? தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளைகளையும் கிள்ளி விட்டிருந்தார்.

30 நிமிடங்களைத் தாண்டி சூடுபிடித்து நீண்டு சென்ற உரை ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரத்தினை விழுங்கி விட்டிருந்தாலும் பார்வையாளர்களைத் தனது பேச்சினால் கட்டிப்போட்டிருந்தார். பெரியார் கண்ட வாழ்வியலினை பலரும் முறையாக அறிந்திருக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். பெரியாரைப் பற்றிப் பலரும் அறிந்திருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களும் குருடர்கள் பார்த்த யானை போன்றே பெரியாரின் ஒவ்வொரு பக்கங்களை மட்டுமே அறிந்திருப்பதாகவும் கூறினார். உண்மைதான், பெரியாரினால் வலியுறுத்தப்பட்ட பெண்விடுதலை, சிக்கனம், சீர்திருத்தத் திருமணம் என்பவற்றையெல்லாம் விட்டுவிட்டு , நாத்திகம் பேசுவதற்கு மட்டுமே இப்போதெல்லாம் பெரியாரின் பெயர் உபயோகிக்கப்படுகிறது.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்கின்ற குறளினை உவமைக்கு எடுத்திருந்த டாக்டர் கி.வீரமணி அவர்கள், ஆண்களை மட்டுமே இக்குறள் குறிப்பதாகக் கூறினார். மேலும்,

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்கின்ற குறளினையைம் கூறிய அவர் வள்ளுவர் ஆணாதிக்க வாதியாக இருந்திருப்பாரோ என்கின்ற சந்தேக விதையினையும் தூவிவிட்டிருந்தார். ஒரு ஆணுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளதோ அதே உரிமைகள் ஒரு பெண்ணுக்கும் இருக்கவேண்டும் என்பதற்காக பெரியார் அயராது உழைத்ததாகவும் கூறினார். சிங்கப்பூர், எப்போதோ பெரியார் கண்ட, பெண்விடுதலையை அடைந்து விட்டிருப்பதைப் பார்த்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

நிகழ்ச்சிகள் நிறைவுற வெளியே வந்தோம். அப்போது வயதானவர் ஒருவர் எங்களருகில் வந்து நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்று வினவினார். நாங்கள் சொன்னதும், என்னருகில் நின்றிருந்த அம்மாவிடம் “உங்கள் பெண்பிள்ளைகள் யாரும் மணமாகாமல் இருக்கின்றார்களா?” என்றார். ஒருவேளை அந்த அம்மாவிற்கு தெரிந்தவராய் இருக்கலாம் என்கின்ற எண்ணத்தில் நான் பார்வையாளனானேன். அவர் தனது மகனுக்குத் தகுந்த பெண் தேடுவதாகவும், ஊரில் (இந்தியாவில்) பெண்கள் இருந்தால் அறியத்தரும்படியும் கேட்டது தான் அந்த உரையாடலின் சாராம்சம். பின் அநத அம்மாவுடன் உரையாடிய போது இன்றுதான் அவரை முதன்முதலில் சந்திப்பதாகவும், இங்குள்ள பெரும்பாலான பெற்றோர் தங்கள் ஆண்பிள்ளைகளுக்கான மணமகள்களை ஊரிலேயே தேடுவதாகவும், அப்படி இணைந்து கொண்ட குடும்பங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், இங்கேயே திருமணம் செய்து கொண்ட பெரும்பாலனவர்களின் குடும்பங்கள் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் நிற்பதாகவும் கூறினார். அப்படியானால், இதைத்தான் பெரியார் கண்ட பெண்விடுதலை என்பதா?

Friday, October 30, 2009

வேரென நீயிருந்தாய்... (7)

அன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். அறையில் இருந்த நண்பர்களில் சிலர் தங்களின் வீடுகளிற்குச்சென்றுவிட்டிருந்தார்கள். இப்போதெல்லாம் குருந்துவத்தைச்சந்தியால் இறங்குவதைத்தவிர்த்து அங்குணாவலையூடாக எமது பாதையினை மாற்றி விட்டிருந்ததில் சிரேஷ்ட மாணவர்களின் பார்வையில்படுவதை பெருமளவில் தவிர்த்துக்கொண்டிருந்தோம். அன்றைய காலைஉணவிற்காக அங்குணாவலைச்சந்தியை அடைய, ச்சே! வெறுத்துப் போனது மனது. சிரேஷட மாணவர்கள்! ஏற்கனவே பல தடவைகள் சந்தித்து தாராளமாய்த்தோப்புக்கரணமும் ரிப்சும் (தண்டால்) அவர்களின் பெயரால் வாரி வழங்கியிருந்தோம்.

“டேய்! இஞ்சை ஏன்ரா வந்தனீங்கள்?”

”சாப்பிட”

”உங்களையெல்லாம் குருந்துவத்தையிலதானே சாப்பிடச்சொன்னது. சீனியர்ஸிற்குச் சுத்திக்கொண்டு இஞ்சால ஒளிச்சுத்திரியிறியள் என. வாங்கடா! இண்டைக்கு அக்பரில வந்து சாப்பிடுங்கோ.”

வெறுத்துப்போன மனதுடன், சிரேஷ்ட மாணவர்களுடன் பேருந்துத் தரிப்பிடத்தினை அடைய பேருந்தும் வந்துசேர்ந்தது.

சிங்கத்தின் குகைக்குள் செல்வது போன்றிருந்தது. வரிசையில் நின்று சாப்பாட்டிற்கு காசு கொடுத்தபோது திகைப்பாயிருந்தது. விலைகள் எல்லாம் அவ்வளவிற்கு குறைவாயிருந்தன.

“இனித் திரும்பிப்போறது உங்கட கெட்டித்தனம்.” என்று சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட, வேறு சிலர் எம்மைச்சூழ்ந்துகொண்டனர். ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திக்காய்ப்பிரித்து அழைத்துச்சென்றனர். மாடிப்படிகள் நிலத்துக்கு கீழே செல்வது ஆச்சரியமாயிருந்தது.

நாமும் நடக்க தானும் நடக்கின்ற ஏகாந்தப்பெருங்ககனம் என்பது போல் இருண்ட ஹொரிடோரின் வழியாக நடந்து கொண்டேயிருந்தோம். அறையிலக்கங்கள் 2024 முடிந்து 3122ம் முடிந்து 4103 இற்கு வருகையில்,

”மச்சான் கம்பூச்சி வந்து நிக்கிறேராமடாப்பா. இவன வச்சிருந்தால் பிரச்சனை. ஆளை அனுப்பு” - என வேகமாக வந்து சொன்ன இன்னொரு சிரேஷ்ட மாணவனின் சொற்கேட்டு.

“உனக்கு இண்டைக்கு நல்ல காலம். ஓடித்தப்பு”

என்று என்னை விரட்டினார்கள். திரும்பி தனியே வர பாதை பிடிபடவில்லை. மாறி குளியலறைத்தொகுதிக்குள் நுழைய....

“you can go this way.” ஒரு சிங்கள சிரேஷ்ட மாணவன் சரியான பாதைகாட்ட அறை இலக்கம் 2001 தாண்டி வர வெளியே வாசல் தெரிந்தது. வரும்போது கீழே இறங்கி வந்தது நினைவிற்குவந்து குழப்பியது. பின்புதான் அக்பர் விடுதியைப்பற்றி மற்றைய மாணவர்கள் கூறியது நினைவிற்கு வந்தது. அது பள்ளம் மேடு சார்ந்தவொரு நிலப்பரப்பில் அமைந்திருந்ததால் ஒரு கட்டடத் தொகுதி மற்றைய கட்டடத்தொகுதியினின்றும் ஒரு தளம் உயர்ந்திருப்பது புரிந்தது. அதன் வழியே வெளியேறி எங்கே செல்வது என்று குழம்புகையில்.

“அணணே! இதுக்குள்ள என்ன தடவுறாய்?”
-ம்ம்ம்...! சரி! இண்டைக்கு ஆப்புத்தான் என்றது மனது.

“வாடா வா அப்பிடியே எனக்குப்பின்னால சத்தம் போடாம வா” - பின்தொடர்ந்தேன்.

“போய்க் கதவைத் திற” - திறந்தேன்.

“சின்னனில ஒளிச்சுப்பிடிச்சு விளையாடியிருக்கிறியா? ”

”ஓம்”.

”அப்ப இந்த றூமுக்குள்ள எதுக்குள்ளையெண்டாலும் போய் ஒளி. நான் உன்னத் தேடுறன்.”

ஙே!

“என்னடா முழிக்கிற? ரெண்டு அலுமாரி கிடக்கு, கட்டிலுக்குக் கீழ எவ்வளவோ இடங்கிடக்கு. கெதியா ஒளி”.

கட்டிலுக்குக்கீழே குனிந்தேன். திகைத்தேன். அதற்குள் வேறொரு மாணவன் படுத்துக்கிடந்தான். மறுபுறம் திரும்பி மற்றக்கட்டிலின் அடியில் பார்க்க அட! அங்கேயும் வேறொரு மாணவன்.

“என்ன ஒளிஞ்சாச்சா?”

அவசரமாய் அலுமாரிகளைத் திறந்தேன். எல்லாமே ஏற்கனவே வேறு சக மாணவர்களால் நிரப்பப் பட்டிருந்தன.

”என்ன இன்னும் ஒளியேல்லையா?”

”இ.. இ..இடமில்லையண்ணே.”

”சரி அப்ப வந்து கதிரையில இரு.”

கண்களுக்கு எந்தக் கதரையுமே தட்டுப்படவில்லை.

“என்னடா? சொன்னது விளங்கேல்லையோ? கதிரையிலை இருடா எண்டால் வாய்பாத்துக் கொண்டு நிக்கிறாய்”

“ல்ல.. கதிரையொண்டையும் காணேல்ல”

“பேய்ப்... உங்கொப்பனா இஞ்ச கதிரைகொண்டந்து வச்சவன். டேய்! உள்ளுக்க இருக்கிறவங்கள் எல்லாம் வெளியால வாங்கடா” - வந்தார்கள்.

“ஆராரு (யார்யார்) நேற்று ராத்திரியே வந்தாக்கள்?”- இருவர் கையுயத்தினர்.

“ரெண்டு பேரும் ஓடுங்கோ. நீங்க மூண்டு பேரும் வரிசையா வந்து கதிரையில இருங்கோ”

மற்றைய இருவரும் கதிரையில் உட்காருவதைப் போலவே பாவனை செய்ய நானும் உட்கார்ந்தேன்.

”டேய் புதுசா வந்தனி! காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டு இரு. இருடா எண்டுறன். தூக்கடா ஒரு கால.” - தூக்க முயற்சித்தேன். அப்படியே தவறிக் கீழே விழுந்தேன்.

”ஏன்ரா கதிரையை உடைச்சனி? டேய் குட்டான்! நீ சிரிக்கிற என. போடா போய்ச் சிரிப்ப வெட்டி எறிஞ்சிற்று வா”
முதலாவதாயிருந்த அந்த சின்ன உருவம் தன் சொண்டினை (உதடுகள்) ஒருகையால் இழுத்துப்பிடித்தவாறே மற்றைய கையால் கத்தி கொண்டு அறுப்பது போன்றும் பின் அறுபட்டதை ஜன்னலால் எறிவது போன்றும் பாவனை செய்தான்.

“நீ நல்லா ராக்கிங் வாங்கித்தானிருக்கிற. சரி அப்பிடியே நிலத்தில இரு” - அவன் இருந்தான்.

“டேய் ரெண்டாவது நீ மக்ஸிமம் எத்தனை தோப்பு போட்டிருக்கிற?”

”முன்னூறு”

“நீ”

”நானூற்றிஎண்பது”

“ஆருக்குப் போட்டனி?”

“ஒணரபிள் சுப்பர் சுப்பர் சீனியர் ரமேஷ்”

“சரி எல்லாரும் கிட்ட வந்து நிலத்தில இருங்க” அருகே சென்று அமர்ந்தோம்.

“ஒவ்வொருத்தரா உங்கட detailsஅ சொல்லுங்கோ. இஞ்ச வைச்ச பெயரொண்டும் வேண்டாம்.”

“என்ர பேர் பாலசிங்கம் இந்திரன். சொந்த இடம் கோப்பாய்.....”

“நீ”

“என்ர பேர் சண்முகலிங்கம் கணேசன். சொந்த இடம் பருத்தித்துறை.....”

“நீ”

“என்ர பேர் சுந்தரலிங்கம் ஜெயந்தன். சொந்த இடம் வேலணை....”

“சரி! உங்களில ஆருக்குப்பாட்டுப்பாடத் தெரியும்?”

மூவருமே தெரியாதெனத் தலையாட்டினோம்.

“டேய் பருத்தித்துறையான்! அப்ப நீயொரு கதைசொல்லு. பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்.. எண்டில்லாம நல்லொரு கதையைச் சொல்லு.”

“அண்ணே எனக்குக் கதை தெரியாது.”

“ஆமை முயல் கதை தெரியுமா?”

“ஓம்”

“அப்ப அதைச் சொல்லு.”

“ஒரு ஊரில ஒரு ஆமை இருந்துதாம்.”

“என்னடா அம்புலிமாமாக் கதை போல ஒரு ஊரில ஒரு ஆமையெண்டு? ஊரின்ரை பெயரைச் சொலலிச் சொல்லு”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ஒரு முயல் இருந்துதாம்.”

“அப்ப முயலுக்குப் பேரில்லையோ?”

“பருத்தித்துறை என்கின்ற ஊரில ராமன் என்கின்ற முயல் இருந்துதாம்.”

“எப்ப இருந்ததாம்?”

“1997 ஆம் ஆண்டு”

“கதை சொன்னா முழுசாச் சொல்ல வேணும். நீ பிழை விட்டால் திரும்பி முதலில இருந்து சொல்ல வேணும் சரியா? இப்ப சொல்லு”

“1997ஆம் ஆண்டு தை மாதம் 14ம் திகதி பருத்தித்துறை என்கின்ற ஊரில இருந்த ராமன் என்கின்ற முயல் ஒரு ஆமையிடம் சென்று...”

“நிப்பாட்டு. ஆமைக்குப் பெயரில்லையோ?”

“1997ம் ஆண்டு..... ராமன் என்கின்ற முயல் மணி என்கின்ற ஆமையிடம் சென்று ஓட்டப்போட்டிக்கு வருமாறு அழைத்தது. போட்டி தொடங்கியதும்...”

“இஞ்ச வா! போட்டி எங்க நடந்தது?”

“1997ம் .....அழைத்தது. போட்டி மணியாறன் வளவடியில் இருந்த ஒழுங்கையில் தொடங்கியது.”

“எத்தின மணிக்குத் தொடங்கினது?”

“1997.....போட்டி மாலை 4.00 மணிக்குத் தொடங்கியது. ராமன் என்கின்ற முயல் வேகமாக”

“நிப்பாட்டு. போட்டிக்கு ஆரு நடுவர்?”

“1997.... யோன் என்கின்ற நாயை நடுவராக வைத்து போட்டி தொடங்கியது.”

“ஆமை முயல் எல்லாம் ஓடேக்குள்ள என்ன உடுப்பு போட்டிருந்ததுகள்?”

“1997..... ராமன் என்கின்ற முயல் நீல நிறக்காற்சட்டையும் வெள்ளைநிற மேற்சட்டையும் அணிந்திருந்தது.”

“டேய்! ஓட்டபபோட்டி நடக்குது. முயல் ஜட்டி போடாமா ஓடுதாம். ஆருக்குக் கதை விடுறாய்?”

“1997...........”

“....”

“199.....”

“....”

“19......”

“....”

“1......”

“....”

“@#$%^&*......”

“மவனே றூமுக்குப் போய் ஒழுங்கா prepare பண்ணீற்று நாளைக்கு வந்து எனக்கு இந்தக்கதையை முழுக்கச் சொல்லோணும். இல்லையெண்டால்.” - சரியென்றவாறு கணேசன் தலையாட்டினான்.

”சரி எப்பிடி வெளியால போறதெண்டு தெரியுமா? இப்ப lunch time. அக்பர் வாசலால போனீங்களெண்டால் வேறையாரும் பிடிப்பாங்கள். இப்பிடியே அக்பருக்கும் facultyக்கும் இடையால போற றோட்டால போய் பனிக்குள்ள (பனிதெனியா) இறங்கி தப்பிப் போங்கடாப்பா. ”


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6