Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Monday, December 21, 2009

விடுகதையா வாழ்க்கை?



நேற்றைய தினம், நண்பன் ஒருவனின் இல்லத்தில், அவர்களின் பெற்றோரின் வரவினை ஒட்டி விருந்துடன் கழிந்தது. பலரும் கலந்து கொண்ட அந்தத் தமிழக விருந்திற்கு முந்தைய தினம் பிறிதொரு நண்பன் வீட்டில் இலங்கை விருந்து. இரண்டிலும் குழந்தைகளின் இயல்புகளை வியப்புடன் கவனித்தக் கொண்டிருந்தேன். தஙகளுக்குள் அவர்கள் அடிபட்டு அழுதுகொண்டாலும் பின் சிறிது நேரத்தில் தாங்களாகவே கோபங்களை மறந்து மீண்டும் விளையாட்டினைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். நினைத்த போதிலெல்லாம் ஓடினார்கள், துள்ளினார்கள், கூக்குரலிட்டார்கள். இப்போதைய நிலையில் எங்களால் அப்படி முடியுமா?

குழந்தைப் பருவத்தி்ல் நாங்கள் அனைவருமே அப்படித்தான் இருக்கிறோம். ஆனால் வளர வளர எமக்கிடையிலான பேதங்களும் கோபங்களும் வளர்ந்து கொண்டே வருவதுடன் எமது இயல்புகளை இழந்து விட்டு (வரட்டுக்) கௌரவங்களைக் கட்டிக் கொள்கின்றோமே. எதற்காக? அல்லது எவற்றிற்காக? சரி! எதற்காகத்தான் எமக்கு இந்த வாழ்க்கை?

“பிறருக்கு நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மையைச் செய்யாவிட்டாலும் தீமையையாவது செய்யாதிரு.” என்றார் விவேகானந்தர். அப்படியானால் மற்றவர்கள் எதற்காகப் பிறந்தார்கள் என்ற குதர்க்கம் தானாகவே எழுகிறது. எல்லோருமே ஒருவருக்கொருவர் நன்மை செய்யவே பிறந்ததாக/பிறப்பதாக வைத்துக் கொண்டால், அதற்காக எதற்குப் பிறக்க வேண்டும். பிறக்காமலேயே இருந்திருக்கலாமே. சரி அப்படிப் பிறந்தாலும் பின் எதற்கு இறக்க வேண்டும். வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாக இருக்கையில், ஏன் அது அனைவருக்கும் சமமானதாக இல்லாமல் இருக்கிறது?

மாலை செம்பாவாங் கடற்கரைக்குச் சென்றிருந்தோம். பலரும் பொழுதுபோக்கிற்காக தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கரையை அண்டிய அந்த இடத்திலும் பரவலாக மீன்கள். சில மீன்கள் இரையை அருந்திவிட்டு இலாவகமாகத் தப்பித்துச் செல்ல வேறுசில (அப்பாவி?) மீன்கள் தூண்டிலில் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டிருந்தன. அந்த மீன்களைப் போலத்தான் எங்களின் வாழ்க்கையுமா?

இரவு உணவு முடிந்து விடைபெற நேரம் இரவு 9.00 இனைத் தாண்டி விட்டிருந்தது. 'அட்மிரல்டி' தொடரூந்து நிலையம் வரை கூடவே வந்தான் நண்பன். பலவிடயங்களையும் உரையவாடியவாறே வருகையில், விருநதிற்கு வந்திருந்த இன்னொருவரால் பகிரப்பட்ட ஒரு உணமைச் சம்பவம் நினைவுக்கு வரவே, அவனிடம் கூறினேன்.

ஒரு தாய் தன் குழந்தைப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு கடைககுச் செல்கையில் அந்தக் குழந்தை தன் தாயிடம்,

“அம்மா! ஏன் நாங்க கடைக்குப் போறம்?”

“பொருட்கள் வாங்க.”

“ஏன் பொருட்கள் வாங்க வேணும்?”

“சமைக்கிறதுக்கு.”

“ஏன் சமைக்க வேணும்?”

“சாப்பிடுவதற்கு.”

“ஏன் சாப்பிட வேணும்?”

“சாப்பிட்டால்தான் உயிரோடிருக்கலாம்.”

“ஏன் உயிரோடிருக்க வேணும்?”

பதில் தெரியாமல் திண்டாடினாள் தாய்.

கதையை முடித்துவிட்டு, “சரி நான் வெளிக்கிடுகிறேன். பிறகு பார்க்கலாம்.” என்றவாறே விடைபெற்றேன் நண்பனிடம்.

“இரண்ணா! கதையை முடிக்காம, இப்பிடிப் பாதியிலயே விட்டுட்டுப்போனா எப்படி?” என்றான் நண்பன்.

விடை தெரியாமல் எனக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் வினா அது. பின்னால் பலாப்பழத்துடன் பலரும் நிற்பது போன்ற உணர்வு எழ சிரித்துக்கொண்டு விடைபெற்றவாறே, அலைபேசியில் வானொலி இணைப்பினை ஏற்படுத்தினேன்.

அப்போது இரவு 09.30 மணி தாண்டியிருக்கவே, மின்னல் F.M. உடன் காற்றலை வழியே இணைந்து கொள்ள,

“விடுகதையா வாழ்க்கை? விடைதருவார் யாரோ....”
பாடல் கேள்விகளைச் செவிகளுக்குள் செருகிக் கொண்டிருந்தது.

Saturday, March 14, 2009

வாழ நினைத்தால் வாழலாம்

“எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? ” என்று சாதாரண விடயங்களுக்கெல்லாம் அலுத்துக் கொள்ளுபவர்களா நீங்கள்?

வாழ்வே மாயம், எல்லாமே துன்பமயம் என்று சலித்துக் கொள்ளுகிறீர்களா?

எதிர்காலத்தை எண்ணி பயங்கொள்கிறீர்களா?

உங்களின் இந்த மனப்பாங்கிற்கு 100% நீங்களே காரணம். உங்கள் சமூகம் உங்கள் மீது திணித்துள்ள தேவையற்ற வரட்டுக் கருத்துக்களை அடையாளம் கண்டுணராமல் அவற்றிற்கு நீங்கள் அடிமையாகிப் போனதே நீங்கள் செய்த, செய்கிற தவறாகும். தவறுகள் திருத்தப்பட வேண்டியவையே.

இந்த அசைபடத்தினை நீங்கள் அனைவரும் கட்டாயம் ஒருதடவையேனும் பார்வையிட வேண்டும் என உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்

அதன்பின் சிந்தியுங்கள், உங்கள் பயங்கள், சலிப்புகள், வெறுப்புகள் எல்லாமே நியாயமானதா என்று.

அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ?