Wednesday, August 5, 2009
வேரென நீயிருந்தாய்...(4)
Saturday, August 1, 2009
தொடர் வினா
கொண்ட நிலையைக்
கலைத்தலுக்குமிடையில்
வாழக்கை வழுவுகிறது.
ஒற்றை வாக்கியம்கூட, ஒருவர்
நிலையைக் கலைத்துப்போடலாம்.
தாசிகூறிய மந்திர வார்த்தை
நகுலனை ராமதாசராக்கிற்றே!
நிலைத்தல் எப்போதுமே
நிலையற்றதாயிருப்பினும்
அந்த நிலைமாறலில்கூடவொரு
நிலைத்தன்மை இருக்கலாம்.
கலைத்தல்கூட, கைகூடிவரலாம்
அப்போதேயெம் மாயச் சுயம்
தொலைத்துத் தெளிவுகாணும்
வல்லமை கொளல் வேண்டும்.
நிலைப்பேனா? இல்லையின்னும்
அலைவேனா? கொண்ட சுயம்
கலைப்பேனா? மீண்டு, நான்
பிழைப்பேனா? தொடரும் வினா.
Tuesday, July 28, 2009
நன்றி நவிலலும், பிரியாவிடையும்
தொடர்ச்சியானதென்று?
ஒவ்வொரு கணப்பொழுதுகளும்
ஒன்றுடனொன்று சம்பந்தமேயில்லாமல்...
ஒவ்வொரு கணப் பொழுதினையும்
தனித்தனியாகவே வெட்டியகற்றியவாறே...
வேதாளம் வீழ்த்தும் விக்கிரமாதித்தனாய்
என்பொழுதுகள் கழிந்துகொண்டிருக்கின்றன.
என்றைக்கேனும் எனக்கானவொருநாளில்
நானுமந்த “முறைதெரியாக் கதை”யிற்கான
பதிலினை அளிக்கவேண்டியதாயிருக்கலாம்.
அன்றைக்கெந்தன் சுயமழிந்து போயிருக்கும்.
நாள்தோறும் மாறிவரும் சுயம்
நாளைகூட மறைந்து போகலாம்
அதுகூடிவரும் நன்நாளினில்
நான்கூட மறைந்து போகலாம்.
அதற்குள் என் சுயம்கரைத்தல் வேண்டும்.
நானேயகிலமாகி, அந்தவகிலமும் நானாகி
நானும் நானாகி, எல்லாமும் நானாகி
நான்கரைந்து எங்குமாதல் வேண்டும்.
அப்போது நீங்கள் நானாகியிருக்கலாம்.
நான் உங்களிலும் நிறைந்திருக்கலாம்.
யாரறிவர்? அப்போது நான் மறந்திருக்கலாம்
இல்லை நீங்களேயென்னை துறந்திருக்கலாம்.
ஆதலினாலென் அன்புக்குரியோரே!
இதுவரைகாலும் நினைவுப் பாளம்பாளமாய்
கணங்களை வெட்டிக் கட்டிவைத்திருக்கும்
காலக் குவியலுக்குளிருந்து கூறுகிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
என்னுற்ற உறவுகளே! நயமான நட்புகளே!
எதிரியாயென்னை எண்ணிக்கொண்டோரே!
பட்டும்படாமலும் பழகிக்கொண்டோரே!
உங்களிடமெந்த வேறுபாடுகளோ - அன்றி,
கருத்துமுரண்பாடுகளோ இப்போதெனக்கில்லை.
ஏற்றுக்கொள்ளுங்கள் என்பிரியாவிடையினை
ஏனெனில் நாளைநான் கரை(லை/ல)ந்துபோயிருக்கலாம்
Sunday, July 26, 2009
கட்டுடைத்தல்

அடை வைக்கப்பட்டிருந்தவென்
நினைவுப் பட்சியின்று தன்
கோதுடைத்து புறப்பட்டது.

கோழிக்குஞ்சின் கதகதப்புடன்,
படபடத்தவதன் சிறகுகளுடன்
உள்ளங்கைக்குள் உள்வாங்கினேன்.
இறகுகளை வருடிக்கொடுக்க,
பீமனுக்கான அநுமனின்
விஸ்வரூபமாயது வெளிப்பட்டது.
முடியாது. இனி முடியாது.
இதுவென்றுமினி மடியாது
என்றவாறேயது புறப்பட்டது.
அடைகாத்தல் முடிந்து, இனி
அடைத்துவைத்தல் முடியாது
ஆதலினால் விட்டுவிட்டேன்.

நினைவுப் பறவையினித்தன்
கட்டுடைத்து சிறகுவளர்க்கும்
இமயத்தின் சிகரம் செல்லும்.

சூரியவொளிதாண்டி சூனியவெளிதாண்டி
விரிவடையும் பிரபஞ்சங்கடந்துமது
சிறகினை விரிக்கும்.

நான்வளர்த்த குஞ்சினைத்
தனித்தனுப்ப தடுமாறும்
தாய்மை மனமெனக்கு.
ஆதலினால், அப்பட்சியின்
உறவுகளை உங்கள்
நெஞ்சங்களில் அடைத்திருப்போரே
திறந்திடுங்கள் உங்கள்
உள்ளக் கூண்டுகளை. என்
எண்ணப்பறவை புறப்படட்டும்.

தன் இருத்தலின் எந்தவொரு
அடையாளத்தையும் அதற்கு
விட்டுவைக்கும் விருப்பவி்ல்லை.
இறகுகள் ஒவ்வொன்றாய்
உதிரட்டும். அதன் உதிரத்தின்
கடைசிச் சொட்டும் தீரட்டும்.
ஈற்றணுவும் இற்றுப்போகும்வரை
அது பறக்கட்டும். பறந்து அந்த
பிரபஞ்சம் அளக்கட்டும்.
Thursday, July 23, 2009
ஆங் சான் சூகீ அம்மையாரும் அமைதிக்கான மகாத்மா காந்தி விருதும்.
நேற்றைய வானொலிச் செய்தியின் போது, மியன்மார் நாட்டின் எதிர்க்கட்சித் (National League for Democracy) தலைவியான திருமதி ஆங் சான் சூகீ (Aung San Suu Kyi) அம்மையாருக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருதினை வழங்கிக் கௌரவித்திருக்கும் செய்தியினை கேட்கையில் நெஞ்சுக்குள் ஒருவித பரவசம் வந்தாலும் செய்திமுடிவின் போதே அதைக்கேட்டதால் அதை வழங்கியது யார் அல்லது எது என்பதை அறியமுடியவில்லை. இதுவும் யாரும் ஒரு பதிவரின் வேலையோ என்ற ஐயமும் எழாமலில்லை :-).இவை எல்லாவற்யும் மீறி, மகாத்மா காந்தியின் பெயரில் வருவதால் ஒருவேளை இது இந்திய அரசின் விருதாக இருக்குமோ என்று எழுந்த சந்தேகம். “உனக்கு எதிலதான் பகிடிவிடுகிறது என்கின்ற விவஸ்தையே இல்லையா?” என்று உள்ளிருந்து கேட்ட குரல் ஒன்றினால் அடுத்தகணமே அடங்கிப்போயிற்று. பின்னர்தான் அது தென்னாபிரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை நிறுவனத்தினால் அவ்விருது ஆடிமாத்ம் 20ம் திகதியன்று (அன்று தான் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.) அவரின் சார்பில் மியன்மாரின் முன்னாள் பிரதமர் தியென் வின் அவர்களிடம் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. கடந்த வருடம் அவ்விருது தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவரான திரு நெல்சன் மண்டேலா அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்விருவருமே இவ்விருதிற்கு முன்னரேயே சமாதானத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விருதுகள் பற்றிக் கதைப்பதென்றால் (பேசுவதென்றால்) கதைத்துக்கொண்டே போகலாம். சிலருக்கு ஏதாவது விருது வழங்கப் பட்டே ஆகவேண்டும் என்பதற்காகவே சில விருதுகள் உருவாக்கப்படுகின்றன. சில விருதுகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்கின்ற தெளிவே இல்லாமலும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இப்படியே எழுதிக்கொண்டு போனால், கடிதங்கள் எழுதிஎழுதியே களைத்துப்போகாமல் இருந்ததற்காக சகிப்புத்தன்மைக்கு யுனெஸ்கோவிடம் விருது பெற்றவர்களைப் போல சிலவேளைகளில் எனக்கும் ஏதேனும் விருதுகள் கிடைக்கக்கூடும் என்கின்ற நப்பாசையும் இருக்கத்தான் செய்கிறது. என்ன? கடிதம் எழுதுவதென்றால் முத்திரைக்குச் செலவு செய்யவேணும். அத்துடன் ஒரு கடிதத் தலைப்பும் (letter pad) வேணும். பதிவு எழுதுவதில் உள்ள சௌகரியம் இவை எவையுமே தேவையில்லை. யுனெஸ்கோ காரர்கள் பதிவுகளையும், பதிவர்களையும் கொஞ்சம் கவனிப்பார்களாக!
1945 ஆனி 19 இல் பிறந்த ஆங்சான் சூயி அவர்களுக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆடி 19 இல் அவரது தந்தை ஜெனரல் ஆங் சான் (Aung San) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 தை 04ம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையாகிறது. தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூயி அவர்கள் 1972 தை 01இல் பிரித்தானியரான மைக்கேல் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். 1988இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 புரட்டாதி 24இல் உருவாக்கப்பட்ட NDL (National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 தை 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூகி அவர்கள் தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். அதைத் தொடர்ந்து 1989 ஆடி 20இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 82% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சி பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்றான் சூகி அவர்கள் வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் அவர் ஆங்சான் சூகி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இப்போது, இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் அமைதிக்கான ஓர் விருது ஆங்சான் சூகி அம்மையாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே இந்தியாவை இப்போது தன் கையசைப்பில் வைத்திருப்பவர் ஒரு வேற்றுநாட்டுப் பெண்மணியென்பதும் குறிப்பிடத்தக்கது.
எனது தமிழக நண்பர்களில் பெரும்பாலனவர்களிடம் உரையாடியதில் இருந்து நான் தெரிந்து கொண்டது, அவர்கள் இப்போதும் சோனியா காந்தியும் (ரஜீவ் காந்தியும்) மகாத்மா காந்திக்கு உறவு என்றே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பலர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததே மகாத்மா காந்தியால்தான் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும் அவரது இந்திய தேசிய இராணுவத்தை (INA) பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு சிலரோ INA-ஐயும் சிப்பாய்க்கலகத்தையும் சேர்த்துக் குழம்புகின்றனர். பெரும்பாலோனோருக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பற்றியோ அல்லது V.V.S.ஐயர் என்று அழைக்கப்படுகின்ற வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் அவர்களைப் பற்றியோ இந்திய சுதந்திரத்திற்கான அவர்களின் பங்களிப்புகள் பற்றியோ தெரியவில்லை. இவ்வளவும் ஏன், கேரளாவுடனான முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றியோ அல்லது கர்நாடகாவுடனான காவிரி நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சனை பற்றியோ, உச்சநீதிமன்றின் தீர்ப்பின் பின்னும் அவை இன்னமும் அமல்படுத்தப்படாதிருப்பதற்கான காரணங்கள் பற்றிய அறிவுமில்லால், அறியும் ஆர்வமுமில்லாதவர்களாகவே அவர்கள் காணப்படுகிறார்கள். காஷ்மீர்ப் பிரச்சனையில் சீனாவிடம் இந்தியா அடைந்த படுதோல்வியின் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிஞர் அண்ணா அவர்கள் “போராட்டத்திற்கான காரணிகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. எனினும் இப்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு எமது போராட்டத்தினைக் கைவிடுகிறோம்” என்ற அறிவிப்பின் பின் போராட்டத்திற்கான காரணிகளையே அவர்கள் மறந்து விட்டார்கள்.
இந்தியா மிகப்பெரியவொரு ஜனநாயக நாடென்றும், அது மகாத்மா காந்தியின் வழியில் அகிம்சையையே ஆதரிக்கின்றது என்றுமே அதிகளவினர் இப்போதும் எண்ணுகிறார்கள். அப்படி நினைப்பவர்கள் ஆசாத் காஷ்மீரில் இந்தியக் கூலிப்படைகள் செய்யும் அநியாயங்களை அறியாதவர்கள். இதைப் பற்றி ஊடகங்கள்கூட அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை என்பது கவலைக்குரிய விடயம். ஆனாலும் இந்தியக்கூலிப்படைகள், அவை எதுவாயிருந்தாலும் எப்படிப்பட்டவை என்கின்ற பட்டறிவு எங்களுக்கு நிறையவே உண்டு. மகாத்மா காந்தியின் அகிம்சாவாதக் கொள்கைகளை இன்னமும் இந்தியா மதிக்கிறது என்று இப்போதும் நம்புகின்றவர்கள் அதன் சீத்துவத்தை அறிய உங்கள் நாட்காட்டிகளில் 1987 புரட்டாதி 26ம் திகதியை சற்றே திருப்பிப் பாருங்கள். வெட்கமாயில்லை?
Monday, July 20, 2009
மனிதகுலத்தின் மாபெரும் பாய்ச்சல் - வரலாற்றில் இன்று

20-07-1969 மனிதகுலம் ஒரு மாபெரும் பாய்ச்சலை நீல் ஆம்ஸ்ரோங்கினூடாக நடத்தியிருந்தது. பூமியிலிருந்து முதன்முறையாக மனிதகுலப் பிரதிநிதிகள் தமது உபகோளிற்கான விஜயத்தினை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தனர்.விண்வெளிஆதிக்கப் போட்டியில் முதற்தடவையாக சோவியத் யூனியன், யூரிகாகரினின் எதிர்பாராத விபத்து
மரணத்தினால் தவிர்க்கமுடியாமல் ஐக்கிய அமெரிக்காவிடம் தோல்வியைத் தழுவியிருந்தது. இன்றுடன் அமெரிக்காவின் அந்தச் சாதனையின் நாற்பது ஆண்டுகள் நிறைவு பெறுகையில், இந்தப் பூமிப் பந்தில் எத்தனையோ மாற்றங்கள். அன்றைய நாளில் விரைவிலேயே செவ்வாய்க்கிரகத்திற்கும் மனிதன் சென்றுவிடுவான் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதை அநேகமாக சோவியத் யூனியனே செய்துகாட்டும் என்ற நம்பிக்கையும் நிலவியது. ஆனால் இன்று?
அந்த ராட்சத நாடே சிதறுண்டு சின்னாபின்னமாகி... “மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்” என்கின்ற பழமொழிக்கு ஆதாரமாய்... அல்லது விதி வலிது என்பதை மெய்ப்பிப்பதாய்... அப்படி நினைப்பவர்கள் கொஞ்சம் மாற்றி யோசித்தீர்களானால் அல்லது கழுகுக் கண்கொண்டு பார்ப்பீர்களானால் எது அந்த விதி அல்லது எந்தத் தெய்வம் சோவியத் யூனியன் சிதறுண்டு போக நினைத்தது என்பதைப் புரிந்து கொள்வது அப்படியொன்றும் சிதம்பர சக்கரமல்ல.
மனிதகுலப் பிதிநிதிகள் நிலாவில் கால்தடம் பதித்து பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் கூட பாலர் வகுப்பில் எங்களுக்கு வழங்கப்பட்ட சைவநெறி நூலில் “கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார் ....” என்று சொல்லி சந்திரனின் வரலாற்றுப் புராணக்கதைகளைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள். பிள்ளையார் ஒருமுறை நடனமாடினாராம், அவரது ஆட்டத்தைப் பார்த்த சந்திரனுக்குச் சிரிப்பு வந்து சிரித்து விட்டானாம். உடனே சந்திரனைத் தேய்ந்து போகுமாறு பிள்ளையார் சாபமிட்டாராம் (பிள்ளையாரை அடையாளப்படுத்தும் உருவம் நடனமாடினால், அதைப்பார்த்து சிரிப்பு வராமல் என்ன செய்யும்?). தேயத்தொடங்கிய சந்திரன் பயந்து போய் சிவனிடம் சரணடைந்தானாம். சிவன், சந்திரனுக்கு அபயமளித்து தன் தலையில் வைத்துக் கொண்டாராம். இப்போதும் இதையே சொல்லிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.
Saturday, July 18, 2009
சிங்கப்பூர் பதிவர் மாநாடும்.....

18-07-2009 இல் நடைபெற்ற சிங்கப்பூர் பதிவர் மாநாட்டிற்கு வருமாறு பதிவர் அறிவிலி அழைப்பு விடு்த்திருந்தார் (ஆள முன்னப் பின்னப் பார்த்ததில்லை பேசினதில்ல. பாத்திருந்தா மட்டும் என்ன பண்ணுவ என்று கேட்கக்கூடாது). கடந்த வெள்ளிக்கிழமையன்று (சிங்கப்பூர் வந்த பின்னர் அறிமுகமாகியிருந்த) பதிவர் கதியால் (கிடுகுவேலி, இவரின் முட்கம்பி முகாமுக்குள் வாழும் நண்பா..! இனை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்) அழைப்பினை ஏற்படுத்தி பதிவர் மாநாட்டிற்குச் செல்வோமா என்று கேட்டிருந்தார். பின்னர் சில காரணங்களால் எங்கள் இருவராலுமே பங்கேற்க முடியவில்லை (தப்பிட்டீங்கப்பா மாநாட்டுக்காரர்களே!). எனவே அறிவிலி அவர்களால் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு தரப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றேன். அவர் ரொம்ப busy போல. தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால்தான் அழைப்பு துண்டிக்கப்பட்டது. பின் சில நிமிடங்களிலேயே அவரின் இலக்கத்திலிருந்து அழைப்புவர, வேறொரு நண்பனுடன் தொடர்பில் இருந்ததால், அவரது அழைப்பை நான் துண்டிக்க வேண்டியதாயிற்று. பின் மீண்டும் அவருக்கு அழைப்பினை ஏற்படுத்தினேன். முதன்முறையாய், அறிமுகமே இல்லாதவருடன், என்ன பேசுவதென்ற தடுமாற்றம் (இது வள்ளுவர் வார்த்தையில், எண்ணித் துணியாமல், துணிந்தபின் எண்ணிய இழுக்கு)
நான் : ஹலோ!
அறிவிலி : ஹலோ!
நான் : ஹலோ நான்... கதைக்கிறன்.
அறிவிலி: #@!##@!#
(எனது தமிழ் அவருக்கு விளங்கவில்லை sorry புரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது.
அறிவிலி: I received a missed call from this number. That's why I called you back.
நான் : ok ok. அறிவிலியோட பேச முடியுமா? என்னையும் பதிவர் மாநாட்டிற்கு வரச்சொல்லியிருந்தீங்க. என்னால வரமுடியல. அதுதான் உங்களுக்குக் கோல் பண்ணுறன்.
அறிவிலி : ஆ! நான் ரா..ஷ் தான் பேசறேன் நீங்க வலசு-வேலணை தானே. பரவால்லீங்க அடுத்த meeting-இற்கு வந்திடுங்க.
நான் : சரிங்க! அப்புறம் meeting எல்லாம் எப்பிடிப் போய்க்கிட்டிருக்கு?
ரா..ஷ் : ம்ம்ம். ஆரம்பிச்சிட்டோங்க. 15 பேர்வரைல இதுவரைக்கும் வந்திருக்காங்க. உங்களுக்கு அப்புறமா update பண்றேங்க.
நான் : சரிங்க. அப்ப அடுத்தவாட்டி சந்திப்பமுங்க. meeting-க enjoy பண்ணுங்க.
இணைப்பினைத் துண்டித்தோம்.
பதிவர் மாநாட்டில் என்னதான் நடந்திருக்கும் என்ற ஆவலுடன் அறிவிலியின் வலைத்தளத்திற்கு சற்று முன்னர் சென்றேன் (இப்போதெல்லாம் இணையத்தில் உலாவ என்னால் அதிக நேரம் ஒதுக்க முடிவதில்லை). இறுதியாக ஆடி 17 அன்றே பதிவிட்டிருக்கிறார். பதிவின் தலைப்பு சுவாரஸ்யமான அதிர்ச்சி. என்னவென்று பார்த்தால் அட! எனக்கும் அது சுவாரஸ்யமான அதிர்ச்சி. அவர் பட்டியலிட்டிருக்கும் 6 சுவாரஸ்யமான வலைப்பதிவுகளில் 'சும்மா' வும் சும்மா இடம்பிடித்திருக்கிறது. நன்றி அறிவிலி.
இப்ப இது என்னோட முறை. இந்த விளையாட்டின் நிபந்தனைகளின்படி நானும் 6 பதிவுகளைப் பட்டியலிடவேண்டும்.பட்டியலிட என்னிடம் ஒரு நீண்டபட்டியலே இருக்கிறது. ஆனாலும் விதி ஆறுடன் மட்டுப்படுத்தச் சொல்கிறது. மேலும் சிலர் ஏற்கனவே இந்த விளையாடடில் விளையாடிவிட்டனர். எனவே நான் பட்டியலிடும் அந்த 6 வலைப்பதிவுகளும்
1) ஷண்முகப்ரியனின் 'படித்துறை'
3) ஆ.ஞானசேகரன்-இன் 'அம்மா அப்பா'
4) மயாதி-இன் 'கொஞ்சு(ச)ம் க(வி)தைகள்'
6) தேவன் மாயம்-இன்'தமிழ்த்துளி'
என்னிடமே எனக்குப்பிடிக்காத ஒரு பழக்கம் எதையும் உடனே தொடங்கிவிடுவது, ஆனால் உரிய நேரத்திற்குள் அதைச் செய்து முடிப்பதில்லை. சிலவேளைகளில் தொடங்கியதை பின்னாட்களில் மறந்துவிடுவதும் உண்டு. அதுதான் அறிவிலி என்கின்ற பெயரில் உலாவரும் ரா..ஷ் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் “வேரென நீயிருந்தாய்...” தொடருக்கும் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ச்சியாய் எழுத நினைத்திருந்த போதிலும் அப்போதிருந்த மனநிலையில் அதைத்தொடர முடியவில்லை. பின்னர் வழமைபோன்று அதை மறந்தும் விட்டிருந்தேன். ஆனால் மீண்டும் தொடங்கும் மிடுக்கு.










