Showing posts with label மகாத்மாகாந்தி விருது. Show all posts
Showing posts with label மகாத்மாகாந்தி விருது. Show all posts

Thursday, July 23, 2009

ஆங் சான் சூகீ அம்மையாரும் அமைதிக்கான மகாத்மா காந்தி விருதும்.

நேற்றைய வானொலிச் செய்தியின் போது, மியன்மார் நாட்டின் எதிர்க்கட்சித் (National League for Democracy) தலைவியான திருமதி ஆங் சான் சூகீ (Aung San Suu Kyi) அம்மையாருக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருதினை வழங்கிக் கௌரவித்திருக்கும் செய்தியினை கேட்கையில் நெஞ்சுக்குள் ஒருவித பரவசம் வந்தாலும் செய்திமுடிவின் போதே அதைக்கேட்டதால் அதை வழங்கியது யார் அல்லது எது என்பதை அறியமுடியவில்லை. இதுவும் யாரும் ஒரு பதிவரின் வேலையோ என்ற ஐயமும் எழாமலில்லை :-).

இவை எல்லாவற்யும் மீறி, மகாத்மா காந்தியின் பெயரில் வருவதால் ஒருவேளை இது இந்திய அரசின் விருதாக இருக்குமோ என்று எழுந்த சந்தேகம். “உனக்கு எதிலதான் பகிடிவிடுகிறது என்கின்ற விவஸ்தையே இல்லையா?” என்று உள்ளிருந்து கேட்ட குரல் ஒன்றினால் அடுத்தகணமே அடங்கிப்போயிற்று. பின்னர்தான் அது தென்னாபிரிக்காவினைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை நிறுவனத்தினால் அவ்விருது ஆடிமாத்ம் 20ம் திகதியன்று (அன்று தான் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன.) அவரின் சார்பில் மியன்மாரின் முன்னாள் பிரதமர் தியென் வின் அவர்களிடம் வழங்கப்பட்டதாகவும் தெரியவந்தது. கடந்த வருடம் அவ்விருது தென்னாபிரிக்காவின் முன்னாள் தலைவரான திரு நெல்சன் மண்டேலா அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவ்விருவருமே இவ்விருதிற்கு முன்னரேயே சமாதானத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விருதுகள் பற்றிக் கதைப்பதென்றால் (பேசுவதென்றால்) கதைத்துக்கொண்டே போகலாம். சிலருக்கு ஏதாவது விருது வழங்கப் பட்டே ஆகவேண்டும் என்பதற்காகவே சில விருதுகள் உருவாக்கப்படுகின்றன. சில விருதுகள் எதற்காக வழங்கப்படுகின்றன என்கின்ற தெளிவே இல்லாமலும் சிலருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இப்படியே எழுதிக்கொண்டு போனால், கடிதங்கள் எழுதிஎழுதியே களைத்துப்போகாமல் இருந்ததற்காக சகிப்புத்தன்மைக்கு யுனெஸ்கோவிடம் விருது பெற்றவர்களைப் போல சிலவேளைகளில் எனக்கும் ஏதேனும் விருதுகள் கிடைக்கக்கூடும் என்கின்ற நப்பாசையும் இருக்கத்தான் செய்கிறது. என்ன? கடிதம் எழுதுவதென்றால் முத்திரைக்குச் செலவு செய்யவேணும். அத்துடன் ஒரு கடிதத் தலைப்பும் (letter pad) வேணும். பதிவு எழுதுவதில் உள்ள சௌகரியம் இவை எவையுமே தேவையில்லை. யுனெஸ்கோ காரர்கள் பதிவுகளையும், பதிவர்களையும் கொஞ்சம் கவனிப்பார்களாக!

1945 ஆனி 19 இல் பிறந்த ஆங்சான் சூயி அவர்களுக்கு இரண்டு வயது இருக்கையில் 1947 ஆடி 19 இல் அவரது தந்தை ஜெனரல் ஆங் சான் (Aung San) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். பின் 1948 தை 04ம் திகதி பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து பர்மா (அப்போது மியன்மார், பர்மா என்றே அழைக்கப்பட்டது) விடுதலையாகிறது. தனது கல்வியை இந்தியாவைத் தொடர்ந்து பிரித்தானியாவிலும் பின் அமெரிக்காவிலும் நிறைவு செய்த ஆங்சான் சூயி அவர்கள் 1972 தை 01இல் பிரித்தானியரான மைக்கேல் என்பவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார். 1988இல் தாயாரின் உடல்நிலை பாதிப்படைந்ததைத் தொடர்ந்து மியன்மாருக்குத் திரும்பிய அவர், 1988 புரட்டாதி 24இல் உருவாக்கப்பட்ட NDL (National League for Democracy) இன் பொதுச்செயலாளராக பதவியேற்றார். 1988 மார்கழி 27 இல் தாயார் மரணமடைய, 1989 தை 02 இல் நடைபெற்ற தாயாரின் இறுதிக்கிரியைகளை அடுத்து மியன்மார் அரசியல் களத்தில் ஆங்சான் சூகி அவர்கள் தீவிரமாகக் களமிறங்கி இராணுவ அடக்குமுறைக்கெதிராகப் போராடினார். அதைத் தொடர்ந்து 1989 ஆடி 20இல் அவர் இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 1990 வைகாசி 27 இல் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 82% பெரும்பான்மையைப் பெற்றிருந்த போதிலும் இராணுவ ஆட்சியாளர்கள் அவரது கட்சியினை ஆட்சி பீடத்தில் ஏறவிடாது தடுத்ததுடன், ஆங்றான் சூகி அவர்கள் வெளிநாட்டுக்காரரை (பிரித்தானியர்) மணம் செய்து கொண்டதால் அவருக்கு அரசியலில் ஈடுபட அருகதை இல்லை என்றும் அறிவித்து விட்டனர். 1991 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசினையும் அவர் ஆங்சான் சூகி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இப்போது, இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் பெயரில் அமைதிக்கான ஓர் விருது ஆங்சான் சூகி அம்மையாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே இந்தியாவை இப்போது தன் கையசைப்பில் வைத்திருப்பவர் ஒரு வேற்றுநாட்டுப் பெண்மணியென்பதும் குறிப்பிடத்தக்கது.



எனது தமிழக நண்பர்களில் பெரும்பாலனவர்களிடம் உரையாடியதில் இருந்து நான் தெரிந்து கொண்டது, அவர்கள் இப்போதும் சோனியா காந்தியும் (ரஜீவ் காந்தியும்) மகாத்மா காந்திக்கு உறவு என்றே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பலர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததே மகாத்மா காந்தியால்தான் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலரே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றியும் அவரது இந்திய தேசிய இராணுவத்தை (INA) பற்றியும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு சிலரோ INA-ஐயும் சிப்பாய்க்கலகத்தையும் சேர்த்துக் குழம்புகின்றனர். பெரும்பாலோனோருக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பற்றியோ அல்லது V.V.S.ஐயர் என்று அழைக்கப்படுகின்ற வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் அவர்களைப் பற்றியோ இந்திய சுதந்திரத்திற்கான அவர்களின் பங்களிப்புகள் பற்றியோ தெரியவில்லை. இவ்வளவும் ஏன், கேரளாவுடனான முல்லைப் பெரியாறு பிரச்சனை பற்றியோ அல்லது கர்நாடகாவுடனான காவிரி நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சனை பற்றியோ, உச்சநீதிமன்றின் தீர்ப்பின் பின்னும் அவை இன்னமும் அமல்படுத்தப்படாதிருப்பதற்கான காரணங்கள் பற்றிய அறிவுமில்லால், அறியும் ஆர்வமுமில்லாதவர்களாகவே அவர்கள் காணப்படுகிறார்கள். காஷ்மீர்ப் பிரச்சனையில் சீனாவிடம் இந்தியா அடைந்த படுதோல்வியின் பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அறிஞர் அண்ணா அவர்கள் “போராட்டத்திற்கான காரணிகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன. எனினும் இப்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு எமது போராட்டத்தினைக் கைவிடுகிறோம்” என்ற அறிவிப்பின் பின் போராட்டத்திற்கான காரணிகளையே அவர்கள் மறந்து விட்டார்கள்.

இந்தியா மிகப்பெரியவொரு ஜனநாயக நாடென்றும், அது மகாத்மா காந்தியின் வழியில் அகிம்சையையே ஆதரிக்கின்றது என்றுமே அதிகளவினர் இப்போதும் எண்ணுகிறார்கள். அப்படி நினைப்பவர்கள் ஆசாத் காஷ்மீரில் இந்தியக் கூலிப்படைகள் செய்யும் அநியாயங்களை அறியாதவர்கள். இதைப் பற்றி ஊடகங்கள்கூட அவ்வளவாக அலட்டிக் கொள்வதில்லை என்பது கவலைக்குரிய விடயம். ஆனாலும் இந்தியக்கூலிப்படைகள், அவை எதுவாயிருந்தாலும் எப்படிப்பட்டவை என்கின்ற பட்டறிவு எங்களுக்கு நிறையவே உண்டு. மகாத்மா காந்தியின் அகிம்சாவாதக் கொள்கைகளை இன்னமும் இந்தியா மதிக்கிறது என்று இப்போதும் நம்புகின்றவர்கள் அதன் சீத்துவத்தை அறிய உங்கள் நாட்காட்டிகளில் 1987 புரட்டாதி 26ம் திகதியை சற்றே திருப்பிப் பாருங்கள். வெட்கமாயில்லை?