Saturday, October 16, 2010

வாடிக்கையாளர் பராமரிப்புச் சேவை

கடந்த செவ்வாய்க்கிழமை வாடிக்கையாளர் பராமரிப்புச் சேவை (Customer Care Service) தொடர்பான பயிற்சிப்பட்டறைக்குச் செல்லவேண்டியிருந்தது. எனக்கு அதில் பங்கேற்க வேண்டிய தேவையும் ஆர்வமும் இருக்கவில்லையாயினும், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையினை வழங்கும் நோக்கின் ஒர் அங்கமாக அனைத்துப் பணியாளர்களும் சுழற்சி முறையில் பயிற்சிப்பட்டறையில் பங்கேற்க வேண்டிய பணியிடத்துக் கட்டாயத்தின் பேரில் அரைமனதுடனேயே கலந்து கொண்டேன்.

எங்களது அறிமுகங்களின் பின் எங்களால் மறக்கமுடியாத அல்லது நாங்கள் விரும்பி அனுபவித்த வாடிக்கயைாளர் சேவையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டோம். ஒருவர் விமானப் பணிப்பெண்ணின் சேவையினைப் பகிர்ந்து கொண்டார். 'Tea? Coffee? or Me?' என்கின்ற விமானப்பணிப் பெண் ஒருவர் எழுதிய ஒருநூல் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் குறிப்பிட்டது நினைவில் வந்து போனது. நானும் எத்தனையோ தடவைகள் பலரகமான விமானங்களில் பயணித்திருக்கின்றேன். ஆயினும் அவர்களது சேவை ஏனோ என்னைக் கவர்ந்ததில்லை. எந்தவொரு வான்பயணமும் கூட என்னிடம் ஒரு பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கவுமில்லை. அது முதலாவது வான் பயணத்திந்குக்கூடப் பொருந்தும். ஏனெனில் அப்போது நானிருந்த நிலை அப்படி. ஆயினும் மறக்கமுடியாத ஒரு வான்பயண அனுபவம் 2006 இல் கிடைத்திருந்தது. அது நான்கு பயணிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய உள்ளூர் போக்குவரத்து விமானம். அதிலெல்லாம் வாடிக்கையாளர் சேவை என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. அந்த விமானத்தில் ஏறுகையில் இதுவும் பறக்குமா என்று எழுந்த எண்ணத்தைப் புறக்கணித்து மேலெழுந்து பத்திரமாகப் பலாலியையும் சென்றடைந்திருந்தது.

இப்போது என்னுடைய அனுபவத்தினைப் பகிரவேண்டிய நிலை. உடனடியாக நினைவுக்கு வந்தது சிலமாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்தவொரு சம்பவம். அது நடுநிசி தாண்டிய நேரம். ஊரிலிருந்து வருகின்ற பயணக்களைப்பும் தூக்கக் கலக்கமும் உடலைத்தாக்க அவசரமாகப் பணத்தைக் கொடுத்து விட்டு வாடகியிலிருந்து (வாடகி - Taxi) விடுவிடுவென்று இறங்கி இருப்பிடத்தினை அடைந்து கதவினைத் திறக்க ஆயத்தமானபோதுதான் நெஞ்சு திக்கென்றது. எனது கைப்பையினை வாடகியினுள்ளேயே விட்டுவிட்டேன். அதனுள்தான் என்னுடைய அனைத்து ஆவணங்களும் இருந்தன. இப்போது யாராவது வந்து என்னை யாரென்று கேட்டால் எப்படிச் சொல்வது அதாவது நான்தான் நான் என உறுதிப்படுத்தக்கூடிய எந்தவொரு ஆவணங்களும் என்னிடம் இருக்கவில்லை. ஆக நான் என்பதே அந்த வெறும் ஆவணங்கள் தானா என எழவாரம்பித்த தொடர் கேள்விகளை ஒதுக்கிவிட்டு எவ்வாறு அந்த வாடகியினை மீண்டும் கண்டுபிடிக்கலாம் என மற்றவர்களுடன் ஆலோசித்தேன். நல்லவேளையாக வாடகியின் நிறமும் அது சார்ந்த நிறுவனமும் (Trans cab) ஞாபகத்தில் இருந்தன. பின்னர் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு தொலைபேசியினூடாக இணைப்பினை ஏற்படுத்தி விபரத்தைக் கூறினோம். 10 நிமிட இடைவெளியில் அவர்கள் குறித்த வாடகியின் சாரதியுடனான தொலைபேசி இணைப்பினை ஏற்படுத்தித் தரவே, எனது வேண்டுகோளினை ஏற்றுக்கொண்டு அந்த சாரதியும் அவரது தூக்கத்தையும் பொருட்படுத்தாது ஒருமணிநேரத்திற்குள் எனது கைப்பையினை எனது இருப்பிடத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பித்தார். எப்படி அவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் எனது நன்றியைத் தெரிவிப்பது என்பதை அறியாமல் திண்டாடினேன்.

தங்களுடைய வாடிக்கையாளர்கள் தங்களைப் பாராட்டிய சில சம்பவங்களையும் வந்திருந்தவர்களில் சிலர் பகிர்ந்து கொண்டனர். அப்படியான சந்தர்ப்பங்களில் அவர்கள் அடைந்த சந்தோஷமும் திருப்தியும் அவர்கள் பெற்ற சன்மானங்களை விடவும் உயர்ந்ததாகத் தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்திருந்தனர். 'Everyone expects the Rewards and Recognition in his/her work.' பெரும்பாலான வேளைகளில் வெகுமதிகளை விடவும் செயலுக்கான அங்கீகாரமே அதிக மன நிறைவதைத் தருகின்றன. அதைத்தான் 'Maslow's hierarchy of neeeds'-உம் சொல்லி நிற்கிறது.




கீழே உள்ள காணொலில் உள்ளது போன்ற வாடிக்கையாளர்களையும் எதிர்கொள்ளவேண்டித்தான் இருக்கின்றது என்பது வேறுவிடயம் :-).




வெளிவாரி (External) வாடிக்கையாளர்களுடன் தொடர்புகள் தேவைப்படாத நிலையில் எனது பணி இருப்பதால் என்வாழ்க்கையில் நிகழ்ந்த அவ்வாறானவொரு சம்பவத்தினை என்னால் பகிர்ந்து கொள்ளமுடியாமல் இருந்தபோது, தொழில்சாரா வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களையாவது பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டேன். வாடிக்கையாளர் பராமரிப்புச் சேவையினை தொழிலுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது புரிந்தது. வாடிக்கையாளர் பராமரிப்புச் சேவையின் மிக அடிப்படையான GST (Greeting, Smile & Thanking) பற்றியும் 'First impression is very important' என்றும் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் வாடிக்கையாளரை/மற்றவர்களை மகிழ்வித்த குறைந்தது ஒரு சம்பவத்தினையாவது பகிர்ந்து கொண்டேயாக வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தம். இதுவரையான கால வாழ்க்கையில் யாரையாவது அப்படி நான் மகிழ்வித்திருக்கின்றேனா? விடைதெரியா கேள்விகள் முளைவிட ஆரம்பித்தன. சிலரைக் காயப்படுத்தியிருப்பது நினைவுக்கு வந்தது. பலர் என்னை மகிழ்வித்திருப்பதும் நினைவில் நிற்கிறது. ஆனால் நான் யாரையும் மகிழ்வித்திருக்கின்றேனா? நீண்ட நேரத்தின் பின்னர் ஒரேயொரு சம்பவம் மாத்திரம் நினைவிற்கு வந்தது.

அது என்னுடைய பாலகப்பருவம். அமைதிப்படை போர்வையில் வந்த இந்திய ஆக்கிரமிப்புப்படை தன்கரங்களின் கொடும்பிடிக்குள் யாழ்நகரினைக் கொண்டுவருவதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரம். ஒருநாள் இரவு எட்டுமணி தாண்டியிருக்கும். யாரோ வீட்டுக்கு வெளியே படலையடியில் நின்று கூப்பிடுவது கேட்டது. விளக்கினைக் கொண்டு வெளியே சென்றேன். ஒரு சில வருடங்களுக்கு முன்பே உறவாகியிருந்த சிலர் வெளியே நின்றிருந்தனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போரினின்றும் தப்பித்து இடம்பெயர்ந்து அவர்கள் எமது கிராமத்தினை வந்தடைந்திருந்தனர். அவர்களில் ஒருவர் வயதானவர். பாடசாலையொன்றின் முன்னாள் அதிபர். அதன்தொடர்ச்சிகள் நினைவிலில்லை. ஆயினும் அதன் பின்னர் பல தடவைகள் அந்த அதிபர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னுள் வியப்பினை ஏற்படுத்தியிருந்தன. ஒரு தடவை நான் பாடசாலையில், ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாலைநேரப் பிரத்தியேக வகுப்பில் இருப்பதை வீதியால் செல்கையில் பார்த்துவிட்டு இனிப்புப்பண்டங்கள் வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தார். அதன் பின்பும் கூட பல காலங்களுக்கு என்னைக் காணும் நேரங்களில் என்னிடம் தனது பிரியங்களினை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்திக் கொள்வார். பின் 2004 ஆம் ஆண்டில் பல வருடங்கள் கழித்து அவரைச் சந்தித்திருந்தேன். ஒரு சனிக்கிழமையொன்றினைத் தனக்காக ஒதுக்கச் சொல்லி மதியபோசன விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார். விருந்து முடிந்ததும் எனக்குள் பலவருடங்களாக அரித்துக் கொண்டிருக்கும் அந்த வினாவினை அவரிடமே கேட்டேன். ”ஏன் என்னை மட்டும் இப்படி விசேஷமாகக் கவனிக்கின்றீர்கள்?” என. அதற்கு “first impression is ever lasting" என்றார் அவர். யாழிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இரவன்றுதான் என்னை நானாகப் பார்த்திருக்கிறார். அன்றைக்கு நான் எப்படி அவருடன் நடந்து கொண்டேன் என்பது எனக்கு நினைவிலில்லை. ஆயினும் அன்றைய என்மேலான அவரது அபிப்பிராயம் அவரிடம் ஆழமாகப் பதிந்து விட்டதை உணர்ந்தேன். அதன்பின் ஏறத்தாழ 23 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில்கூட வேறொருவரையேனும் நான் மகிழ்வித்ததான எந்தவொரு சம்பவமும் இடம்பெற்றதாக நினைவிலி்ல்லை.

பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து எங்களுக்கான மகிழ்ச்சியினைப் பெற்றுக்கொள்வதில் காட்டுகின்ற ஆர்வத்தினை மற்றவர்களுக்கு எம்மாலியன்ற சந்தோஷத்தினைக் கொடுப்பதில் காட்டுவதில்லைதானே. தொழில்சார் தொடர்பான பயிற்சிப் பட்டறையாக இந்த நிகழ்வு அமைந்திருந்தாலும், அதற்குள்ளேயும் வாழ்க்கையின் பல தத்துவங்கள் நிறைந்திருப்பதாய் எனக்குப்பட்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் தொழில் என்பது வேறு வாழ்க்கை என்பது வேறு எனக் கட்டப்பட்டிருந்த என் மனப் படிமானத்தில் ஆட்டம்காணுவதாய் உணர்ந்தேன். தொழில் நிமித்தம் யாரோ தெரியாதவர்களிடமெல்லாம் வலுக்கட்டாயமாய்ச் சிரித்துப் பேசி வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்யும் நாம் எமது வாழ்வின் அங்கங்களான எமது உறவுகளிடமும் அப்படியா நடந்து கொள்கின்றோம். பணியிடத்துப் பிரச்சனைகளால் ஏற்படுகின்ற தாக்கங்களைக்கூட எங்கள் நெருங்கிய உறவுகளிடம் தானே பிரதிபலித்துக் கொள்கின்றோம். மற்றவர்கள் எங்களைப் புரிந்து கொண்டு எங்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கும் நாம் என்றைக்காவது மற்றைய உறவுகளைப் புரிந்து கொண்டு அவர்களைத் திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றோமா? சிலவேளைகளில் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர்களை நாங்களும் சந்தோஷப்படுத்த முயன்றிருக்கின்றோம். ஆனால் அதுவொரு பிரதியுபகாரமாகவே இருந்திருக்கின்றது. ஒருவகையில் அதுவொரு நிபந்தனையுடன்கூடிய ஒப்பந்தம் போன்றது. நீ என்னை மகிழ்வித்தால் நானும் உன்னை மகிழ்விப்பேன் இல்லையேல் உன்னைப்பற்றிய கவலை எனக்குக் கிடையாது என்கின்ற எண்ணத்துடனேயே இருக்கின்றோம், இல்லயா?

கீழே உள்ள காணொலியினைப் பார்க்கையில், எங்களுடைய முதலாவது அபிப்பிராயம் என்ன? இப்படியொரு காதலன்/காதலி அல்லது கணவன்/மனைவி எங்களுக்குக் கிடைக்காதா என்று தானே எண்ணத் தோன்றுகின்றது. எத்தனை பேருக்கு உண்மையாகவே இந்தக் காதலனைப் போலவே இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றியது/தோன்றுகிறது?



Monday, October 11, 2010

தீராப்பசி!

தீராப் பசிகொண்டலையும்
திருப்தியற்ற திருந்தாமனமே!

தீனிக்கான திண்டாட்டம்
பற்றிய கவலைகளின்றிய
கொண்டாட்டமா உனக்கு?

அது அன்றைக்கும்
இன்றைக்கும் என்றைக்குமா?

எண்ணற்ற எண்ணங்களை
உண்டு தீர்த்த பின்னும்
அவாஞ்சையை அடக்கா
அடங்காப்பசி மனமே!

சட்டென்றொரு
சிலநொடி நேரப்
பட்டினியைக்கூடத்
தாங்கமாட்டாத்
தீனிப்பண்டாரமே!

பலகாலப் பலகாரங்களைக்கூட
பழுதடைந்த பின்னும்
வைத்து வைத்துத்
தின்று தீர்க்கின்ற நரியே!

காலாவதியான
உணவுகள் பற்றிய
உணர்வுகள் அற்றுச்சுமக்கும்
சுணைகெட்ட கழுதையே!

தின்று ஏப்பமும்விட்ட
உணவினைக்கூட
இரைமீட்டி இரைமீட்டி
அசைபோடும் அசிங்கமே!

ஏன்? சிலவேளைகளில்
வயிற்றுக்குள் செரிப்பதைக்கூட
வாந்தியெடுத்துவிட்டுப் பின்
அள்ளிப் பசி தீர்க்கும் நாயே!

அதுவும் அல்லாதவிடத்து
கழித்த மலத்தினைக்கூட
கையினால் கிண்டிக்கிளறியுன்
இரைப்பையை நிரப்பும் பேயே!

பட்டினியை மறுதலிக்குமுனக்கு
வெறுமையைத் உண்ணத்தந்தால்,
ஏற்க மறுக்கும் தொல்லையறுத்து
சும்மாயிரு மனமே!

Monday, September 27, 2010

உணர்ச்சிகள் அற்ற கவிதை


உணர்ச்சிகள் அற்றவனின்
புணர்ச்சியின் எச்சமாய்
வெற்றுத்தாளில் ஒரு
வறண்ட கவி(/)தை!

வார்த்தை ஜாலங்களோ
மாய் மாலங்களோ
அற்றவொரு வெறும்
வெற்றுக் கவி(/)தை!

தையல் பற்றியோ - கொண்ட
மையல் வற்றியோ, அன்றி
பற்றுக்கள் தொலைத்தவனின்
பரிதாபக் கவி(/)தை!

பொய்களைத் தாண்டி
மெய்களைத் தீண்டி
உவமைகள் வேண்டி
உவப்பற்ற கவி(/)தை!

கருவே காணதவொரு
கர்ப்பப்பை போன்று
உருவே கொள்ளாமலொரு
மலட்டுக் கவி(/)தை!

நாற்றுநடா வயல்போன்று
எழுதுகோல் விடும்
கீற்றுக்கள் தீண்டாத
அரூபக் கவி(/)தை!

Sunday, September 26, 2010

நினைவுகளில் நீ!


பசித் தீயையெரித்த
பட்டினித் தீ நீ!
பன்னிரு நாட்கள்
பசியுனக்குத் தீனி!

விடுதலை வேள்வியில்
எழுந்த யாகத்தீ!
அந்த யாகத்தில்
சொரிந்தவாகுதி நீ!

தீயதே தீண்டாத
தியாகம் நீ!
தீயுமே தீண்டிடாதவுன்
திருமேனி!

அகிம்சை வாதி
மகாத்மா காந்தி
அவரையும் விஞ்சி
நீ காலத்தீ!

நாட்டுக்காய் உருகிய
மெழுகு வர்த்தி!
ஞாலம் வணங்கிடும்
திலீபம் நீ!

Friday, September 17, 2010

சொல்ல விரும்பும் கதை, அதைச் சொல்லத் தயங்கும் நிலை

நேற்றைய மாலை கடந்து நேரம் எட்டு மணியை எட்டிக் கொண்டிருக்கையில் Little India-இற்குள் தொடரூந்து நிலையத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். Buffalo வீதியினை அடைகையில் கோமளா விலாஸ் கண்ணில் பட்டது. உள்ளே நுழையச் சொல்லி உடலை உந்தியது உள்ளிருந்தவொரு மனம். உமிழ் நீர்ச்சுரப்பிகள் வஞ்சகமின்றித் தங்கள் வேலைகளில் ஈடுபடவாரம்பித்தன. உள்ளே போகலாமா வேண்டாமா என மனம் தடுமாறத் தொடங்கியது. கடந்த எட்டு நாட்களாக கடைப்பிடித்து வரும் இரவுணவுப் பழக்கத்திற்கு களங்கம் வரப்போவதாய் ஆழ்மனது எச்சரித்தது. குறைந்தது ஒரு மண்டலமாவது அந்த இரவுணவுப் பழக்கத்தினைக் கைக்கொள்ள வேண்டுமென எண்ணியிருந்ததால் இன்னோர் மனது பின்னடித்தது. மனதின் எங்கோ ஒரு மூலைக்குள் ஒளிந்திருந்த துரோக மனமொன்று தன்வேலையைக் காட்ட ஆரம்பித்தது. நான் இரண்டாகப் பிளவுபட்டேன்.

விரோதியை வெல்லலாம் கூடவே ஒழிந்திருக்கும் துரோகியை வெல்ல முடியுமா? Trojan குதிரைக் காலத்திலிருந்து இற்றைவரை துரோகத்தனங்கள்தான் வெல்லமுடியாதவர்களாய் இருந்தவர்களையெல்லாம் வெற்றிகொள்ள உதவி செய்திருக்கிறது. இப்போது என் அனுமதியின்றியே அனிச்சையாக கால்கள் உள்ளே நுழைந்து விட்டிருந்தன. ஆயினும் மனத்திற்குள் போராட்டம் முடிந்தபாடாயில்லை. இல்லாத உணவுப் பதார்த்தத்தைக் கேட்டுவிட்டு வெளியேறச் சொல்லியது உள்மனது. உணவு பாரிமாறுபவர் வந்து என்ன வேண்டும் என்று கேட்டதும் “கொத்து பரோட்டா” என்றது அந்த மனது. அனேகமாக அந்நேரத்திற்கு அங்கே கொத்துபரோட்டா முடிந்துவிட்டிருக்கும் என்கின்ற முன்னைய அனுபவத்தில். தூரதிர்ஷ்டவசமாக கொத்து பரோட்டா கிடைக்கவே, வேறுவழியேயில்லை என்கின்ற ஏற்றுக்கொள்ளலில் மனங்களெல்லாம் ஒன்றுபட உணவினை இரசித்துச் சுவைக்கத் தொடங்கினேன்.

முதல்கவளம் உள்ளே சென்றதும் அப்படி ஒரு பரவசம். நீண்ட நாட்களின் பின்னர் கிடைத்த அந்த மென்மையான கொத்துபரோட்டா சிறிது நேரத்திலேயே காலியாகத் தொடங்கியது. முதல் கவளத்தில் கிடைக்கும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் கடைசிக் கவளம் வரை தொடர்வதில்லை. சில கவளங்கள் உட்கொண்டவுடனேயே மனது வேறு நினைவுகளுக்குத் தாவிவிடுவதே வழமையானது. அதன் பின்னர் பழக்கதோஷத்தில் கைகள் வாயிந்கு உணவினை எடுத்துச் செல்ல, வாய் அதைவாங்கி வயிற்றுக்கு அனுப்புவதைக் கடமையாகச் செய்துவிடுகின்றதேயன்றி ஆரம்பிக்கும் போதிருந்த அந்த ஆனந்தம் தொடர்வதில்லை. உணவு மட்டுமல்ல, உறவுகள் உட்பட அனைத்து விடயங்களும் அப்படியானவையே. அதனால்தானோ என்னவோ பழகப்பழகப் பாலும் புளிக்கும் என்று அந்தக்காலத்திலேயே அனுபவித்துச் சொல்லியிருக்கிறார்கள். அதை இந்த உணவகத்தினரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர் என்றே எண்ணத் தோன்றியது. ஏனெனில் இங்கே சாதாரண அளவிலும் குறைவாகவே பரிமாறுகின்றார்கள். அப்போதுதான் அந்த சுவை அலுத்துப்போகாதிருக்கும், வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருப்பார்கள்.

இப்போது பக்கத்து மேசையிலிருந்தவருக்கு பூரி செல்வதைப் பார்த்ததும் நாக்கில் மீண்டும் எச்சில் ஊறியது. இந்த நாக்கு எப்போதுமே இப்படித்தான் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுகிறது. உணவு பரிமாறுபவர் அருகே வந்து வேறு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டதும் முந்தியடித்துக்கொண்டு நாக்கு பூரி கொண்டுவரச் சொன்னது. சற்று நேரம் யோசிக்க விட்டால் உள்மனது அதைத்தடுத்திருக்கும் என்று அந்த துரோக மனது நாக்கிடம் சொல்லியிருக்க வேண்டும். விழித்துக் கொள்வதற்குள் உணவுபரிமாறுபவர் சமையலிடத்தினை நோக்கி நகர்ந்து விட்டார். இம்முறை பூரியினை அனுபவத்துச் சுவைத்துச் சாப்பிடமுடியவில்லை. நான் மீண்டும் இரண்டுபட்டுவிட்டேன். இப்போது என்னைப் பார்க்க எனக்கே கேவலமாகவிருந்தது.. உள்மனதின் உறுத்தலைத் தாங்க முடியவில்லை. அதுவும் செப்டம்பர் பதினைந்தாம் திகதிக்கு அடுத்த நாளே இப்படியானவொரு நிலைக்கு நீ இறங்கிவிடுவாயென தான் நினைக்கவேயில்லையென அந்த உள்மனம் திட்டத் தொடங்கியது. செப்டம்பர் பதினைந்து நிவைிற்கு வந்ததும் குற்றவுணர்ச்சி குறுகுறுக்கவாரம்பித்தது. ஆரம்பத்திலேயே இது தெரிந்திருந்தால் கால்களின் தன்னிச்சையான செயற்பாடு முதலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டிருந்திருக்கும். அந்த நம்பிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. ஆயினும் அந்த நம்பிக்கையைத் தவிடு பொடியாக்கிவிட்டது இன்றைய நிகழ்ச்சி. இப்போது நாக்கினையும் அதற்கு ஆதரவாக நின்ற மனங்களையும் நோக்கினேன். தலையைக் குனிந்துகொண்டவாறே ஓரமாய் ஒதுங்கிக் கொண்டன.

அது நிகழ்கையில் நான் இருபத்திநான்காம் வயதில் இருந்தேன். அதற்கு முந்தைய மூன்று வருடங்களிலும் ஆண்டுக்கு இருதடவைகள் 24 மணிநேரம் நீர் உட்பட எந்தவித உணவுப்பதார்த்தங்களையும் உட்கொள்வதைத் தவிர்த்து வந்திருந்தேன். இரவு 11.55 முன்னதாக வயிறு நிறைய உண்டு தண்ணீரும் பருகிவிட்டுப் படுத்துக் கொண்டால் 24 மணிநேரம் கழித்து அடுத்த நாள் நடுநிசி 12.00 மணி தாண்டிய பின்பே தண்ணீரும் உணவும் உட்கொள்வேன். இப்போது 23 வயது முடிந்து 24வது நடப்பதால் இம்முறை அதை 48 மணி நேரமாக்கும் எண்ணம் வந்தது. இரவு 12.00 மணிக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் உட்கொள்வதை நிறுத்திக் கொண்டேன். மறுநாள் எந்த உபாதைகளும் இன்றிக் கழிந்தது. அடுத்தநாள் காலையில் சோர்வாய் உணர்ந்தேன். மதியம் அண்மிக்கையில் தலையிடிக்கத் தொடங்கியது. மதியம் இரண்டுமணி கழிகையில் இலேசாகத் தலைச்சுற்றலை உணர்ந்தேன். நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்வது புரிந்தது. படுத்துக் கொண்டேன். புருவஙங்களுக்கு மத்தியில் விண்விண்ணென வலிக்கத் தொடங்கியது. பின் அது நெற்றிவரை பரவி சிரசெங்கும் விரிவது புரிந்தது. பார்க்கும் பொருட்களெல்லாவற்றின் மேலும் பச்சைநிறம் படர்வது போன்றவொரு பிரமை. இதற்கு மேல் என்ன நடக்குமோ என்கின்ற பயம் வந்தது. நேரத்தைப் பார்த்தேன் மாலை 03.40 ஆகியிருந்தது. இதற்கு மேலும் தொடர்ந்தால் என்ன நடக்குமோ என்கின்ற பயத்தினில் அருகிலிருந்த தண்ணீரைப் பருகினேன். சற்று சிரமப் பட்டே தண்ணீர் தொண்டைக்குழியைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு 'பணிஸ்' (bun) இற்கு மேல் உண்ண முடியவில்லை. 48 மணி நேரம் என எண்ணியிருந்ததை வெறும் முப்பத்தொன்பதே முக்கால் மணி நேரத்துடன் முடித்துக் கொண்டேன். பட்டினியின் கொடிய வலியினை அனுபவபூர்வமாய் அறிந்து கொண்டேன். அதன் பின்னர் சில நாட்கள் பட்ட அவஸ்தையின் காரணமாக அந்தப் பயிற்சியினைப் பின்னர் நிறுத்தி விட்டேன்.


அது 23 வருடங்களுக்கு முன்னர். அவனுக்கும் அது 23 வயது முடிவடைந்து 24வது நடந்து கொண்டிருந்தது. அவன் ஒரு மருத்துவபீட மாணவனாயிருந்திருந்தவன், ஆயினும் அவன் வேறொரு வியாதிக்கும் மருத்துவனாயிருக்க ஆசைப்பட்டான். ஆசைப்பட்டது மட்டுமல்ல அதை அடைவதிலும் ஆர்வமாயிருந்தான். அதை அடையும் வழியினில் சென்று கொண்டிருந்தான். காகங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைக் காப்பாற்றுவதில் அவன் தீவிரமாயிருந்தான். காலவெள்ளத்தில் அமைதிப்புறாக்கள் வந்தன. கோழிகளுக்கோ மிக்க மகிழ்ச்சி. அவை ஏதுமறியாத அப்பாவிகள். ஆயினும் அவன் புரிந்து கொண்டான். அமைதிப்புறா வேடமணிந்து வந்தவை, வல்லரசு வேட்கையில் வேட்டையாடத் துடித்துக்கொண்டிருக்கும் வல்லூறுகளே என்பதை. இப்போது அவன் இம்சைவாதிகள் அணிந்து வந்திருக்கும் அகிம்சை முகமூடிகளைக் கிழித்தெறிவதற்கு ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பிணியறுக்கும் மருத்துவனாயிருப்பதில் வல்லவனான அவனே இப்போது இங்கே மருந்தாகினான்.


கௌதம புத்தர், மகாத்மா காந்தி எல்லோருமே மிகச்சிறந்த அகிம்சாமூர்த்திகள்தான். ஆயினும் அவர்களின் பெயரால் ஆட்சி செய்பவர்கள்???


Saturday, August 14, 2010

வெற்றிக்கான தோல்வி (Lose to win)


இன்றைய நடுநிசியை அண்டிய பயணம். தூக்கக் கலக்கம் வேறு. வழமையாக நீண்ட நேரப் பயணங்களுக்கு (இங்கே சிங்கப்பூரில் ஒரு மணி நேரப்பயணம் என்பது நீண்ட நேரம் தான்) IPod தான் எனக்கு வழித்துணையாக இருப்பது வழக்கம். ஆனால் காலையில் புறப்படுகின்ற அவசரத்தில் IPod இனை மறந்து விட்டிருந்தேன். இரவு நேரப் பயணங்களில் பழைய பாடல்களைக் கேட்டவாறே கண்மூடிப்பயணிப்பது ஒரு சுகானுபவம். கடைசியாக கடந்த மாத இறுதியில் அந்த இனிமையை இரசித்திருந்தேன். அதிலும் பழைய பாடல்களை என் சிறுவயதில் மனனம் செய்து கொள்வதற்கு காரணமாக இருந்தவரும் அருகிலிருந்து பாடல்களை மீட்டியவாறு வந்த அந்த கொழும்பு-யாழ் இரவுப் பேருந்துப் பயணம் ரம்மியமானது. பழைய இனிய நினைவுகள் எப்போதுமே உற்சாகத்தைத் தருபவையே.

பேருந்திற்குக் காத்திருக்கையில் நேரத்தைக் கடத்துவது சிரமமாயிருந்தது. சகபயணிகளின் எண்ணிக்கையும் குறைவாகவேயிருந்தது. செவிக்கு உணவில்லாதவிடத்து வயிற்றுக்கும் கொஞ்சம் ஈயப்படும் என்றார் வள்ளுவர். வயிறு ஏற்கனவே நிரம்பிவிட்டிருந்ததால் கண்கள் அலைபாயத் தொடங்கின. எங்கள் புலன்கள் யாவுமே இப்படித்தானே, சும்மாயிராமல் எப்போதும் எங்கேயாவது அலைபாய்ந்து கொண்டுதானே இருக்கின்றன. சும்மா இருப்பது எவ்வளவு கடினமானது என்பது புரிந்தது. வாசிப்பதற்கும் எதுவும் என்னிடம் இருக்கவில்லை.

பார்வை வீச்சுக்குள் சில பயணிகள் வந்தார்கள் போனார்கள். சில பெண்கள் வாசகங்கள் பதித்த மேலாடைகளுடன் வந்தார்கள். “அறிவு எங்கே இருக்கிறது?” என்கின்ற கேள்விக்கு “பெண்களின் மார்பகங்களின் நடுவே” என்றான் தெய்வீகப்புலவன் காளிதாசன். ஆயினும் பெண்களின் ஆடைகளின் முன்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகங்களைப் படித்து அறிவினை வளர்த்துக்(?) கொள்வதில் உள்ள இயல்பான தயக்கம் கண்களைக் கீழே தாழவைத்து விடுகிறது. தாய்ப்பால் அருந்திய சிசு அதனின்றும் விடுபடுகையில் அறிவினைப் பெறத் தொடங்குகின்றான். பின் மணவாழ்வில் இணைந்து மனைவியின் மார்பில் முயங்கத் தொடங்குவதனுடன் அவனது அறிவு விருத்தி நின்று விடுகின்றது. காளிதாசன் காலத்தில் அதுதான் வாழ்க்கையை முறையாகவும் இருந்தது. குருகுலவாசத்தில் அறிவைத் தேடிக்கொண்டு பிரம்மச்சரியம் முடித்து கிருகஸ்தத்தில் இறங்கிவிடுவதே அக்கால வழமை. எதேச்சையாய் நிமிர்கையில்,

“LOSE TO WIN'

ஓர் ஆணின் சட்டையின் முதுகுப்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் கவனத்தை ஈர்த்தது.

Lose to win. வெல்வதற்காகத் தோற்பது. அதன் அர்த்தம் என்ன? வெற்றி என்றால் என்ன? தோல்வி என்றால் என்ன? நாம் விரும்பியதை அடைவதை வெற்றி என்று கூறலாமா? அப்படியானால் தோல்வி என்பது நாம் விரும்பியதை அடையமுடியாமல் இருப்பது என்றுதானே அர்த்தப்படமுடியும். அல்லது நாம் விரும்பாததைப் பெற்றுக்கொள்வது என்றும் கூறலாம். ஏனெனில் ஒன்றை அடையமுடியவில்லையென்பதன் அர்த்தம் வேறொன்றை அடைந்து விட்டோம் என்பதுதானே. அப்படியானால் வெல்வதற்காகத் தோற்பது என்பது என்ன அர்த்தத்தைக் கொடுக்க முடியும்? சரி. எதற்காக வெற்றியடைய விரும்புகின்றோம்? அந்த வெற்றி எமக்கு மகிழ்ச்சியைத் தருவதனால்தானே? தோல்வி துன்பத்தைத் தருவதனால்தானே அதைத் தவிர்க்க விரும்புகின்றோம்.

ஊடலில் தோற்றவரே வென்றவர் ஆவார் என்பார்கள். அப்படியானால் வேறொன்றைப் பெறுவதற்காக இன்னொன்றை இழப்பதனையா/கொடுப்பதனையா இது குறிக்கின்றது? ஆக பெறுவது மட்டுமே வெற்றியா? கொடுப்பது தோல்வியா? பொதுவாகவே வெற்றியடைய வேண்டுமென விரும்பும் நாமெல்லோருமே மற்றவர்களிடம் ஏதோவொன்றை பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றோமா? கொடுப்பதிலே மகிழ்ச்சி இல்லையா? அங்கேயும் இருக்கிறது. எம்முடைய எதிரிக்கு நல்லவொரு அடி கொடுக்கையில் மகிழ்ச்சியடைகின்றோம் வென்று விட்டதாய்ப் பெருமிதம் அடைகின்றோம். இல்லையா? அதே வேளையில் அடிவாங்கியவர் துன்பமடைகின்றார். அப்படியானால் கொடுப்பதில் நாங்களும் மகிழ்ச்சியடைந்து அதைப் பெறுபவரையும் மகிழ்ச்சியடைய வைக்கமுடியாதா? ஒரு காதலனோ/காதலியோ தனது காதலிக்கோ/காதலனுக்கு முத்தத்தினை வழங்குகையில் இருவருமே மகிழ்ச்சியடைகிறார்களே. அப்படியானால் அங்கே யார் வெற்றிபெறுகிறார்? எவர் தோல்வியடைகிறார்? இதைத்தான் இணைந்து வெல்லுதல் (Win together) என்பதா?

'தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா யார்கொலோ சதுரர்?' என்று கடவுள் என்று தான் நம்பும் சங்கரனைப் பார்த்துக் கேட்கின்றார் மாணிக்கவாசகர். 'அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றதொன்றென்பால்?' என்கின்ற அவர் வெளிப்படையாகவே தானே அந்த சூதாட்டத்தில் வென்றவர் என்றும் பறைசாற்றுகின்றார். ஆக வாழ்க்கையே வெறும் சூதாட்டம் தானா?

இங்கே உள்ள காணொலியினைப் பார்க்கையில் என்ன நினைக்கத் தோன்றுகிறது?

“முருகா நீ ரெண்டுதாரம் கட்டிக்கிட்டுச் சிரிக்கிற...” என்றெல்லாம் இனி அந்தத் தமிழ்த் திரையிசைப்பாடலைப் பாட இந்த மூன்றாவது மனைவி விடுவாரா?
:-)


Monday, July 19, 2010

மயிருக்கு மரியாதை


இன்றைய மதியநேர உணவிற்காக வெளியேறுகையில்,
“Hey! wow! you need not to take care about your hair....”
கலாய்த்தவாறே சென்றார்கள் வேறு பிரிவுகளில் பணிபுரியும் சில பெண்கள்.

தலையைத் தடவி விட்டுக் கொண்டேன். என்னோடு அருகில் கூடவந்த, பணியிடத்தில் பக்கத்திலிருந்து பெட்டி தட்டுபவரும் தனது தலையைத் தடவி விட்டுக்கொண்டார். கலாய்த்தவர்கள் இளம்பெண்களாயிருந்திருந்தால் (அதிலும் அழகானவர்களாயிருந்திருந்தால் சொல்லிவேலையில்லை), அட! எங்களையும் லுக்கு விடுகிறார்களே என்று நெஞ்சுக்குள் கிளுகிளுத்திருக்கும். இவர்கள் வயதானவர்கள் என்பதால் சித்தத்தில் பித்தம் ஏறாமல் சிந்தனை வந்தது.

“When the student ready, the teacher appears” (மாணவன் தயாராயிருக்கும் போது குரு தோன்றுகின்றார்) என்றார் விவேகானந்தர். “இதோ, இங்கே செத்துக்கிடக்கும் எலியும் புத்தியுள்ளவனுக்கு முதலாக அமையும்” என்று எதேச்சையாக யாரோ ஒருவருக்குச் சொல்லக் கேட்டதை, அவரிடம் அறிவுரை கேட்க வந்தவன் தனக்குச் சொல்லப்பட்டதாக நினைத்து அந்த செத்த எலியினையே முதலாக வைத்து பெரிய வியாபாரியாகியதைப் பற்றி சின்ன வயதுகளில் பாடசாலைப் புத்தகத்தினில் கற்றிருக்கிறோம். ஆயினும் சிலவேளைகளில் மாணவன் தயாராகாமலிருக்கையில், சம்பவங்களைக் கொண்டு குரு அவனுக்கு விடயங்களை உணர்த்தி விடுகிறார். காமம் தலைக்கேறி அர்த்தசாமத்து அடைமழைப்போதினில் செத்தபிணத்தினை மரக்கட்டையாக நினைத்து ஆற்றைக் கடந்தும், மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த விஷப்பாம்பினைக் கயிறாகக் கருதி சேற்றினைக் கடந்தும் தாசி வீட்டினையடைந்த நகுலனுக்கு, அத்தனை நாளும் காமக்கிழத்தியாய்க் கிடந்தவள், குருவாக மாறி அவனை ராமதாசராக்கினாள். ஆக சூழ்நிலையும், மாணவனின் விழிப்புணர்வும் சரிவர அமைகையில் சாதாரண சம்பவங்களே பல அரிய பாடங்களைக் கற்றுத் தந்து விடுகின்றன.

என்னருகே தனது தலையைத் தடவியவாறு வந்தவர், தனது சிரசிலேயே வெள்ளாமை செய்து கொண்டிருப்பவர். பாரிய பணச்செலவில் மயிரினைப் பயிரிட்டுக் கொண்டிருப்பவர். அண்மையில் நாற்றுநட்டுவிட்ட வயிலினைப்போல் மயிர்க்கற்றைகள் முளைவிட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதே நபர் ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்னர் தலைமயிர் பற்றிய கவலைகளின்றி என்னைப்போல்தான் இருந்திருப்பார். “உப்பில்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை. அப்பன் இல்லாவிட்டால் தெரியும் அப்பனின் அருமை” என்கின்ற பழமொழிக்கிணங்க நாங்களும் எம்மிடம் இப்போது இருக்கின்றவைகளைப் பற்றிய நிறைவான எண்ணங்களையோ அல்லது அவற்றை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்குரிய முயற்சிகளையோ விட்டுவிட்டு இழந்தவை பற்றியும் இல்லாதவை பற்றியுமான கவலைகளில் நிகழ்காலத்தினைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.

“உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும். என் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்” என்கின்ற திரையிசைத் தத்துவப்பாடலுக்கு எளிய உதாரணமும் இந்த மயிர்தான். தலையில் இருக்கும் வரை எத்தனை மரியாதை இந்த மயிருக்கு? அதனை முடி என்று கூட அழைப்பதுண்டு. 'முடி' என்கின்ற பெயர்ச்சொல் மன்னர்கள் அணியும் கிரீடங்களையும் குறிக்கின்றது. தமிழக நண்பர்களுக்கு சில வேளைகளில் மயிர் என்று கூறுவது அசூசையாக இருக்கலாம். 'மயிர்' என்பது பேச்சு வழக்கில் தவிர்க்கப்படவேண்டிய சொல் என்று சில தமிழக நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆயினும் தமிழகத்தின் பழந்தமிழ் இலக்கியங்களில் கூட மயிர் என்கின்ற சொல் பாவனையில் இருந்திருக்கின்றது. “மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்” என்றிருக்கிறார் வள்ளுவர். ஆக மயிர் என்கின்ற வார்த்தை தவிர்க்கப்படவேண்டிய வார்த்தையோ அன்றி அசூசைப்பட வேண்டிய வார்த்தையோ அல்ல. ஆயினும் “ஓரூருக்குப் பேச்சு, இன்னோரூருக்கு ஏச்சு” என்கின்ற பழமொழியும் எம்மிடையே உண்டு. அண்மையில் தமிழக சஞ்சிகை ஒன்றினில் வந்தவொரு கட்டுரையை வாசிக்கையில் அதில் குறிப்பிடப்பட்டிருந்தவொரு உள்ளூர் பழமொழி (பொன்னி வாருவான்னு பொச்சைத் திறந்து வைச்சுக் காத்திருந்தாராம் நம்மூருப் புள்ளாரு [பிள்ளையார்]) எனக்குப் புரியவில்லை. எனது தமிழக நண்பரிடம் அர்த்தம் கேட்டபோது அதைச் சொல்வதற்கு ரொம்பவும் வெட்கப்பட்டார். அப்புறம் அதற்கான விளக்கத்தினை ஆங்கிலத்தில் கூறினார். என்ன இது? தமிழில் கூறுவதற்கு வெட்கம்/கூச்சம்/அசூசை. ஆனால் அதனையே ஆங்கிலத்தில் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. ஏனப்படி? “நெருப்பென்றால் சுடாது” என்றும் சொல்கிறார்கள். பின் ஏன் இந்த முரண்பாடு? ஆக 'அஞ்சுவது அஞ்சாமை பேதமை' என்பது போல இதுவும் சொல்லைத் (வார்த்தையை) தெரிந்து அதைச் சொல்லத் தெரிவதில் தமிழ்ப்பண்பாடு குறுக்கிடுகின்றதா? “தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கிறது போல” மயிரை விட்டிட்டு...

“பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது” சிரிசிலிருக்கும்வரை தலைமயிருக்கு நாம் செலுத்தும் அக்கறையையும் கவனிப்பையும் பார்க்கும் உதிர்ந்துவிட்ட மயிர் என்ன நினைக்கும்?

எண்ணெய் வைத்து அரப்பு/சீயாக்காய்/ஷம்போ தேய்த்து முழுகி எத்தனையோ வாசனைத்திரவியங்கள் தடவி சீப்பு வைத்து தலை சீவி... எதற்காக? பெண்களின் கூந்தல்அழகினை சிலாகித்துப்பாடாத கவிஞர்கள் உண்டா? பெண்களின் கூந்தல்மணம் இயற்கையா செயற்கையா என்கின்ற வாதத்தில் நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்றாரே நக்கீரர். ஒற்றைத் தலைமுடியை வைத்து அரசியின் தொடையில் மச்சமுமிருக்கும் என்பதை ஊகித்து சிலைவடித்தானே சிற்பி. ஒற்றை முடியில் அத்தனை கூறுகளும் அடங்கியிருக்கிறதா? “ஒருபிடி ஓலை. திருபிடி ராசா. காசிக்குப் போனாலும் வாசிக்க ஏலாது” என்று விடுகதையாகச் சொல்லப்பட்டாலும், கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமாமே.

அந்தக்காலத்தில் ஒருவனை அவமானப்படத்துவதற்கு அல்லது அசிங்கப்படுத்துவதற்கு அவனை மொட்டையடித்து விடுவார்களாம். ஆக எங்கள் முகவழகினை மெருகூட்டுவதில் இந்த தலைமயிர் பாரிய பங்களிப்பினைச் செய்வதனால்தானா இந்த மயிரைக் கொண்டாடுகின்றோம்? அப்படியானால் தங்கள் அழகினைச் சிதைத்துக் கொள்வதற்காகவா பௌத்த துறவிகள் மொட்டையடித்துக் கொள்கிறார்கள்? அழகாயிருப்பதில் சிந்தை மயங்கும் என்பதனாலா? அழகில் மயங்குகையில் அறிவு அடிபட்டுவிடுவதனாலா? அறிவு அடிபட்டு விடுகையில் உண்மைகளை உணரமுடியாமல் போய்விடுவதனாலா? ஆக அழகு என்பதே வெறும் மாயைதானா? ஆயினும் சில எளிய விடயங்களை ஒப்பிடுவதற்கும் இந்த மயிர் உவமானப்படுத்தப் படுகிறதே. பிறகென்ன மயிருக்கு, இந்த மயிருக்கு இந்த மரியாதை?