Thursday, January 14, 2010

பேரூந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

இன்றைய காலை பணியிடத்திற்குச் செல்வதற்கான பேரூந்துத் தரிப்பிடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை. காலம் அகாலமாகிக் கொண்டிருக்க, உடலுக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது. விட்டால் சரிவராது என்றது உள்ளுணர்வு. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னரான பட்டறிவு படமாயோட ஆரம்பித்தது.

அது இந்த ஆங்கில வருடத்தின் முதல் வேலைநாள். மூன்றரை நாள் விடுமுறையை அடுத்து வந்த நாளாதலால் சீக்கிரமே இருப்பிடத்தை விட்டுக் கிளம்பியிருந்தேன். பேரூந்தத் தரிப்பிடத்தை அடைகையில் நான் செல்ல வேண்டிய பேரூந்தும் வந்த விட்டிருந்தது. வழமை போன்றே காலியாகவிருந்த ஜன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்து கொண்டே வெளியாலே துமித்துக் கொண்டிருந்த மழையினூடாக வேடிக்கை பார்க்கலானேன். அடுத்து வந்த தரிப்பிடத்தை அடைகையில் மழை பலத்து விட்டிருந்ததனால் பேரூந்திற்குள் ஏறுபவர்களை நோக்கினேன்.

பலரையும் தவிர்த்து ஒரு பெண் என் கவனத்தை ஈர்த்தாள். முப்பது வயது மதிக்கத்தக்கதான அந்தப் பெண் மலே அல்லது இந்திய-மலே கலப்பினத்தவளாக இருக்கக்கூடும். முகம் கழுவிவிட்டு வந்து முகத்தைத் துடைக்காமல் பவுடரைப் பூசினால், ஈரம் உலர்ந்த பின்னர் எப்படி இருக்குமோ அப்படியே அவள் முகமெங்கும் திட்டுத்திட்டாக வெள்ளையாக பவுடர் அப்பிக் கிடந்தது. வந்தவள் எனக்கு முன் வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள். வெளியே மழை இன்னமும் அடைத்துப் பெய்யத் தொடங்கியது.

சிறிது நேரத்தின் பின் மீண்டும் பார்வையினை பயணிகள் மீது ஓட விட்டேன். இப்போது இந்தப் பெண் தன்னை அலங்கரித்தக் கொண்டிருப்பதனை அவதானிக்கக்கூடியதாயிருந்தது. அவளது கைப்பைக்குள் இருந்து விதம் விதமான தூரிகைகளும் விதவிதமான வர்ணப் பூச்சுக்களும் இடையிடையே வெளியே வந்து அவள் முகத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. அரை அங்குலமளவிலான தூரிகையினைப் பயன்படுத்தி முகமெங்கும் உரஞ்சுகையில் எனக்குள் வியப்பு மேலிட்டது. நான் அதானிக்காதிருந்த பொழுதுகளில் இன்னும் என்னென்ன விதமான உபகரணங்களைப் பயன்படுத்தினாளோ? அவளது கைப்பைக்குள் அழகுசாதனப் பொருட்களைத் தவிர்த்து வேறு ஏதேனும் பொருட்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்றே எனக்குப் பட்டது. எல்லாப் பெண்களினதும் கைப்பைகள் இப்படித்தான் அழகுசாதனப் பொருட்களால் நிரப்பப் பட்டிருக்குமா?

எனக்கான இறங்குமிடம் வந்தது. இறங்குகையில் தான் அவளது முகத்தினை முன்பக்கமாய் அவதானிக்க முடிந்தது. ஆச்சரியமாயிருந்தது. வெள்ளைத் திட்டுத்திட்டாய் அலங்கோலமாயிருந்த முகம், இப்போது அழகில் ஜொலித்துக் கொண்டிருந்தது. இப்போது அவளது முகத்தைப் பார்ப்பவர்கள் யாரும் அவளை பதினெட்டு வயதிற்கு மேல் மதிக்க மட்டார்கள். பாரதி வியந்து பாடிய பதினாறு வயதுப் பருவ மங்கை இப்படித்தான் இருப்பாளோ?


அவளை மறுபடி பார்க்க முடிந்தால், அதுவும் இன்றையைப் போல் பின்னாலிருந்தல்லாமல் அவள் தன்னை அலங்கரிப்பதை அருகிலிருந்து பார்க்க நேர்ந்தால் அந்த இளமை பெயரும் ரசவாதத்தை நானும் அறிந்து கொள்ளலாமே என்கின்ற ஏக்கம் எழுந்தது.

அழகு நிலையங்களிலிருந்த வெளிவரும் பெண்களின் பின்னால் செல்லாதீர்கள். சில வேளைகளில் அவர் உங்களின் பாட்டியாகவும் இருக்கக்கூடும் என்பது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே சொல்லப்படுகின்றது என்று அதுவரை நினைத்திருந்த எண்ணம் காணாமல் போயிருந்தது.

அன்றைய தினம் நேரத்துடனேயே பணியிடத்திற்குச் சென்றிருந்ததால், மறுநாள் விழிப்புமணி ஒலி எழுப்புகையில் அதனை snooze mode இற்கு மாற்றிவிட்டு இழுத்திப் போர்த்துக் கொண்டேன். சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையோ பொய்யோ, என்னைப் பொறுத்தவரை, விழிப்புமணி ஒலித்த பின்னும் அதை snooze mode இற்கு மாற்றிவிட்டு இழுத்திப் போர்த்திக் கொண்டு உறங்கும் சுகமிருக்கிறதே, அதைத் தான் சொர்க்கமென்பேன். அந்த சொர்க்கத்தை அனுபவி்த்ததன் விளைவு, இருப்பிடத்தை விட்டு வெளியேறும் நேரம் பிந்தி விட்டிருந்தது.


பேரூந்திற்கு தரித்து நிற்கையில் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு யுகங்களாய்க் கடந்து கொண்டிருந்தது. “காத்திருந்தால் நிமிடங்கள் வருடமென்பாய், வந்து விட்டால் வருடங்கள் நிமிடமென்பாய். காதலித்துப்பார்...” என்று கவிதை எழுதிய வைரமுத்து, இப்படியான ஒரு சூழ்நிலையை அனுபவித்திருக்க மாட்டாரோ என்றே எண்ணத் தோன்றியது.

வந்த பேரூந்தினுள் என்னைத் திணித்துக் கொண்டே ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தாலும் மனம் என்னவோ என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டிருந்தது. ஒவ்வொரு தரிப்பிடத்திலும் பேரூந்து பயணிகளுக்காக தரிக்கையில் எரிச்சல் எரிச்சலாய் வந்தது. ஏறுகின்ற இறங்குகின்ற பயணிகளை மனத்திற்குள் திட்டத் தொடங்கினேன். பேரூந்து சமிக்ஞை விளக்குகளில் நிற்கையில் சமிக்ஞை விளக்குகளின் மேல் கோபமாய் வந்தது. பேரூந்து மெதுவாகச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட, என்னடா இவன் பேய்ப்... தேய்ச்சுக் கொண்டு போகிறான் என்று சாரதியின் மேல் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. இப்போது வயிற்றுற்குள் அமிலச் சுரப்புகள் உண்டாவதைத் தெளிவாக உணரமுடிந்தது. ஒருவாறாக நான் இறங்க வேண்டிய தரிப்பிடம் வரவே இருக்கையை விட்டு எழுந்தேன்.

அட! எனது பக்கத்து இருக்கையில் அதே பெண் தன் ஒப்பனைகளை முடித்து விட்டு சிறிய தளவாடியொன்றில் தன் முகத்தினைச் சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.

எதனை நான் பார்க்க வேண்டுமென்று முந்தைய தினம் நான் விரும்பியிருந்தேனோ, அதற்கான சந்தர்ப்பம் மறுநாளே வாய்த்து விட்டிருந்தும் நானிருந்த மனநிலையினால் அதனைத் தவற விட்டிருந்தேன். அன்றைய தினம் பணியிடத்தை அடைந்து விரல் பதிக்கையில் 5 நிமிடங்கள் மட்டுமே தாமதமாகியிருந்தது. ஆயினும் வயிற்றினுள் அளவிற்கு மீறிச் சுரந்து விட்டிருந்த அமிலம் அன்றைய நாள் முழுதும் தொந்தரவினைத் தந்து கொண்டிருந்தது.

நினைவுச்சுழல் நிகழ்காலத்திற்குத் திரும்ப பதற்றமடைவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்கின்ற தெளிவு உண்டானது. சிறிது நேரத்திலேயே எனக்கான பேரூந்தும் வந்து சேர்ந்தது. மீண்டும் ஜன்னலோர இருக்கை. அலைபேசி வானொலியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

“பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம் பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்...”

பாடல் செவிகளைத் தழுவிக்கொண்டிருக்க எண்ணப்பறவை சிறகடிக்கத் தொடங்கியது.

பயணங்களின் போது எங்களில் பெரும்பாலானவர்கள் ஜன்னலோர இருக்கைகளையே விரும்புகின்றோம். முக்கியமாக வெளியே விடுப்புப் பார்க்கவும், இயற்கையை இரசிக்கவும் என ஏராளமான விடயங்கள் பேரூந்தின் வெளியே கொட்டிக் கிடக்கின்றன. பேரூந்திற்குள்ளே அப்படித் தொடர்ந்து இரசிப்பதற்கு பெரிதாக எதுவும் இருக்காது என்கின்ற நினைப்பும் எமக்கு வேண்டிய அல்லது விரும்பத்தக்க விடயங்கள் வெளியே தான் இருக்கின்றன என்கின்ற எண்ணமும் தானே எமக்குள் இருக்கிறது. அதே வேளைகளில் பேரூந்தில் வரும் இளம் ஜோடிகளைப் பார்த்தால், அவர்களின் உலகமோ, அந்த இருவரிலும் மட்டுமே தங்கியிருக்கின்றது. அருகிலிருப்பவர்கள் பற்றிய எந்தவிதமான பிரக்ஞைகளுமின்றி அவர்கள் செயற்படும் விடயங்களைப் பார்க்கையில் என்ன தோன்றுகின்றது?

எமக்கான உலகம் எங்களால்தான் தீர்மானிக்கப் படுகிறது. புறக்காரணிகளால் அல்ல. ஆனாலும் நாங்கள் புறக்காரணிகளில் புலனைச் செலுத்திவிட்டு எங்களால் கட்டமைக்கப்படக்கூடிய உலகத்தை, அதுதரும் சந்தோசத்தை, அமைதியை அனுபவிக்க மறந்து விடுகின்றோம். ஜன்னலோர வாசிகளைப் போல எமக்கு வெளியே காணப்படும் விடயங்களில் எம்மைத் தொலைத்து விடுகி்ன்றோமே அன்றி எமக்குள் ஆழ்ந்து சென்று பார்க்கத் தவறி விடுகின்றோம். அத்துடன் பல முகமூடிகளையும் அணிந்து மற்றவர்களிடம் எம்மை மறைக்க ஆரம்பித்துப் பின் எம்மிடமிருந்தும் நாம் தொலைந்து விடுகின்றோம்.

இறங்கவேண்டிய இடம் வரவே எண்ணங்கள் கலைத்து இறங்கிக் கொண்டேன். இன்றைக்கு 15 நிமிடங்கள் தாமதாமாகி விட்டிருந்தது. ஆனாலும் மனது சந்தோசமாகவிருந்தது. இன்றைக்கு மட்டுமாவது முகமூடிகள் அகற்றி இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டேன். சக பணியாட்கள் பொங்கல் வாழ்த்துத் தெரிவிக்கையில்தான் இன்றைக்குப் பொங்கல் சாப்பிட வேண்டுமென்கின்ற ஆவல் எழுந்தது. நான் மட்டுமன்றி மற்றவர்களும் பொங்கல் உட்கொள்ள விரும்பவே மதிய உணவாகப் பொங்கல் கிடைக்குமா என்று கேட்டு உணவகங்களுக்கு மேற்கொண்ட அழைப்புகள் பயன் தரவில்லை. எனது இருப்பிடத்திற்கு அண்மையில் இருக்கும் நண்பன் இங்கே வந்த பிறகும் பொங்கல் பொங்குவது ஞாபகத்திற்கு வந்தது. இன்றைக்கு முகமூடி அணியக்கூடாது என்று எண்ணியிருந்தது நினைவிற்கு வந்ததாலோ அல்லது ஆசை வெட்கம் அறியாது என்பதனாலோ google இல் அவனுடன் தொடர்பினை ஏற்படுத்தினேன். அவனுக்கும் நான் கேட்க முதலிலேயே புரிந்து விட்டது. ஏற்கனவே எனது இருப்பிடத்தில் குளிர்சாதனப் பெட்டிக்குள் எனக்கான பொங்கல் வைக்கப்பட்டிருப்பதாக அறியத் தந்தான். பொங்கலோ பொங்கல்! உள்ளம் நிறைந்த பொங்கல்.

Wednesday, January 13, 2010

பொங்கல் அவசியமா?


உழவர் திருநாள், தைப்பொங்கல், தைத்திருநாள், தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு என்று இன்றைய தேதியில் அழைக்கப்படுகின்ற இந்த நாள் அல்லது பண்டிகை கொண்டாடப்படுவது தற்போதைய சூழ்நிலையில் அவசியமா?

விவசாயிகளால் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்டதாக இந்தப் பண்டிகை பற்றிய கதைகள் இருக்கின்ற போதினில் இன்றைய நிலையில் மற்றையவர்களும் அதனைக் கொண்டாட வேண்டிய தேவையின் அவசியம் தான் என்ன?

சரி. இப்போது தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்த் திங்கள் தை முதலாம் நாள் அறிவிக்கப்பட்டிருப்பதால் புத்தாண்டினைப் புது நம்பிக்கைகளுடனும் புதிய எதிர்பார்ப்புகள் மற்றும் திட்டங்களுடனும் ஆரம்பிப்பதற்காக அதனைக் கொண்டாடலாம். பன்னிரெண்டாம் இராசியான மீனத்திலிருந்து முதலாம் இராசியான மேடத்திற்கு சூரியன் இடம்பெயர்வது தமிழ்த்திங்கள் சித்திரை ஒன்றிலாக இருப்பதனால், தமிழ்ப் புத்தாண்டாக தமிழ்த்திங்கள் தை முதலாம் நாளைக் கொள்வதா அன்றி தமிழ்த்திங்கள் சித்திரை முதலாம் நாளைக் கொள்வதா என்கின்ற சந்தேகம் இந்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக சோதிடத்தினை நம்புகின்றவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். இப்படியான சந்தேகங்களுக்குமப்பால், இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டியது அவசியம் தானா? பாரிய இன அழிப்பு மற்றும் இன்னல்களால் பாதிப்படைந்திருக்கும் நிலையில் இதனைக் கொண்டாட வேண்டியதற்கான காரணங்கள் ஏதேனும் உள்ளதா?

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா...?” என்றார் பாரதிதாசன்.
துன்பத்தில் துவண்டு போயிருக்கும் எவருக்குமே ஆறுதலளித்து நம்பிக்கை கொடுத்து இன்பம் ஊட்டவேண்டுமேயன்றி, அந்தத் துன்பியல் நிகழ்வுகளையே தொடர்ந்து நினைத்து வேதனைப்பட்டுக் கொணடிருப்பதால் பயனேதுமில்லை. ஏற்படுத்தப்பட்ட இழப்புகளை, உறவுகளை மறந்து விடுவதல்ல அதன் அர்த்தம். வேதனைகளையும் இழப்புக்களையும் உரமாக்கிக் கொண்டு மீண்டும் எழ வேண்டும். தனிமனிதனுக்கும் சரி, ஒரு இனத்திற்கும் சரி, இது பொருந்தும். விழவிழ எழுந்தவர்கள் தமிழர்கள். இனியும் எழுவோம். சென்றடைய வேண்டிய இடம் பற்றிய தெரிவு தெளிவானால் பாதைகள் பற்றிய கவலைகள் வேண்டியதில்லை. பாதைகள் மாறியேனும் பயணம் முடிவிடத்தை அடைந்து விடும். அந்த நம்பிக்கையை ஊட்ட வேண்டிய தருணம் இது.

பேய் சரிப்பட்டுவராது என்பது உறுதியாகத் தெரிந்த பின்னர், வேறு தெரிவுகளற்ற நிலையில் பிசாசை முயற்சித்துப் பார்ப்பதில் தவறில்லை. எய்தவனை விடுத்து அம்பினை நோவதில் அர்த்தமுமில்லை. எம்விதியை மாற்றியவர்களின் விதியை மாற்றும் வாய்ப்பு இப்போது எம் கைகளில். மாற்றம் ஒன்று தான் மாறாதது. அந்த நம்பிக்கையை மனங்களில் விதைத்து பன்னிரெண்டாம் நாளில் அறுவடை செய்யவேனும் இந்தப் புத்தாண்டினைக் கொண்டாட வேண்டியது அவசியமே.


உங்கள் எல்லோருக்கும் என் உளப்பூர்வமான தைத்திருநாள் வாழ்த்துக்கள்!

Thursday, December 31, 2009

என்னைக் கண்டீர்களா?



எனக்குள்ளேயே
நான் இருப்பதாய்
நெடுநாளாயிருந்தவென்
நினைப்பு கலைந்ததெனக்கு.

வேறெங்கோவெல்லாம்
என்னைக் கண்டதாய்,
கண்டவர்கள் வந்து
சொல்லக் கேட்டேன்.

வாய்வழி வந்து
செவிவழி புகுந்து,
பின்னும் நான்
அலைகின்றேனாம்.

பலரும் பார்த்துவிட்டுப்
பார்க்காமலேயே போவதைப்,
பார்த்ததாய்ச் சொல்கிறார்கள்.

காற்று வெளிகளில்
கால்தடம் பதி்ப்பதாய்
தூற்றவும் செய்கிறார்களாம்.

எனக்குள் நானிருந்ததான
நினைப்பெனக்கு
கலைந்ததிப்போ.

உங்களைத் தான்!
எங்கேனும் கண்டீர்களா
நானின்றி என்னை?

Sunday, December 27, 2009

கனவு

இரவைத் தின்று
வளர்கின்றன கனவுகள்.
வதவதவென விதவிதமாய்
கற்பனைக்கும் அப்பால்.

புவியீர்ப்புவிசை எனக்கு
புறக்கணிக்கப்படுகிறது.
ஈர்ப்பின்றியவாறே எனது
இசைவுகளும் அசைவுகளும்.

அர்த்தங்கள் இழக்கும்
தர்க்கங்களும், எந்தவொரு
புத்தகத்திலும் இல்லா
வித்தகங்களுமாய்...

கனவிலும் வருகின்ற
கனவுகள் எந்தப்
புனைவிலும் வாராத
நினையா நிகழ்வுகள்.

கற்பிதங்களா? அன்றி
அற்புதங்களா? அவைபற்றி
செப்பவே முடியாத
சொப்பனங்கள்.

கனவு வாழ்க்கையா?
வாழ்க்கைக் கனவா?
இரவுகளில் கனவா?
கனவுகளில் இரவா?

கனவு தின்கின்ற
உறக்கம்! அல்லது
உறக்கம் தின்கின்ற
கனவு! நிஜமெது?

Monday, December 21, 2009

விடுகதையா வாழ்க்கை?



நேற்றைய தினம், நண்பன் ஒருவனின் இல்லத்தில், அவர்களின் பெற்றோரின் வரவினை ஒட்டி விருந்துடன் கழிந்தது. பலரும் கலந்து கொண்ட அந்தத் தமிழக விருந்திற்கு முந்தைய தினம் பிறிதொரு நண்பன் வீட்டில் இலங்கை விருந்து. இரண்டிலும் குழந்தைகளின் இயல்புகளை வியப்புடன் கவனித்தக் கொண்டிருந்தேன். தஙகளுக்குள் அவர்கள் அடிபட்டு அழுதுகொண்டாலும் பின் சிறிது நேரத்தில் தாங்களாகவே கோபங்களை மறந்து மீண்டும் விளையாட்டினைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். நினைத்த போதிலெல்லாம் ஓடினார்கள், துள்ளினார்கள், கூக்குரலிட்டார்கள். இப்போதைய நிலையில் எங்களால் அப்படி முடியுமா?

குழந்தைப் பருவத்தி்ல் நாங்கள் அனைவருமே அப்படித்தான் இருக்கிறோம். ஆனால் வளர வளர எமக்கிடையிலான பேதங்களும் கோபங்களும் வளர்ந்து கொண்டே வருவதுடன் எமது இயல்புகளை இழந்து விட்டு (வரட்டுக்) கௌரவங்களைக் கட்டிக் கொள்கின்றோமே. எதற்காக? அல்லது எவற்றிற்காக? சரி! எதற்காகத்தான் எமக்கு இந்த வாழ்க்கை?

“பிறருக்கு நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மையைச் செய்யாவிட்டாலும் தீமையையாவது செய்யாதிரு.” என்றார் விவேகானந்தர். அப்படியானால் மற்றவர்கள் எதற்காகப் பிறந்தார்கள் என்ற குதர்க்கம் தானாகவே எழுகிறது. எல்லோருமே ஒருவருக்கொருவர் நன்மை செய்யவே பிறந்ததாக/பிறப்பதாக வைத்துக் கொண்டால், அதற்காக எதற்குப் பிறக்க வேண்டும். பிறக்காமலேயே இருந்திருக்கலாமே. சரி அப்படிப் பிறந்தாலும் பின் எதற்கு இறக்க வேண்டும். வாழ்க்கை என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியாக இருக்கையில், ஏன் அது அனைவருக்கும் சமமானதாக இல்லாமல் இருக்கிறது?

மாலை செம்பாவாங் கடற்கரைக்குச் சென்றிருந்தோம். பலரும் பொழுதுபோக்கிற்காக தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கரையை அண்டிய அந்த இடத்திலும் பரவலாக மீன்கள். சில மீன்கள் இரையை அருந்திவிட்டு இலாவகமாகத் தப்பித்துச் செல்ல வேறுசில (அப்பாவி?) மீன்கள் தூண்டிலில் தப்பிக்க முடியாமல் மாட்டிக் கொண்டிருந்தன. அந்த மீன்களைப் போலத்தான் எங்களின் வாழ்க்கையுமா?

இரவு உணவு முடிந்து விடைபெற நேரம் இரவு 9.00 இனைத் தாண்டி விட்டிருந்தது. 'அட்மிரல்டி' தொடரூந்து நிலையம் வரை கூடவே வந்தான் நண்பன். பலவிடயங்களையும் உரையவாடியவாறே வருகையில், விருநதிற்கு வந்திருந்த இன்னொருவரால் பகிரப்பட்ட ஒரு உணமைச் சம்பவம் நினைவுக்கு வரவே, அவனிடம் கூறினேன்.

ஒரு தாய் தன் குழந்தைப்பிள்ளையையும் அழைத்துக் கொண்டு கடைககுச் செல்கையில் அந்தக் குழந்தை தன் தாயிடம்,

“அம்மா! ஏன் நாங்க கடைக்குப் போறம்?”

“பொருட்கள் வாங்க.”

“ஏன் பொருட்கள் வாங்க வேணும்?”

“சமைக்கிறதுக்கு.”

“ஏன் சமைக்க வேணும்?”

“சாப்பிடுவதற்கு.”

“ஏன் சாப்பிட வேணும்?”

“சாப்பிட்டால்தான் உயிரோடிருக்கலாம்.”

“ஏன் உயிரோடிருக்க வேணும்?”

பதில் தெரியாமல் திண்டாடினாள் தாய்.

கதையை முடித்துவிட்டு, “சரி நான் வெளிக்கிடுகிறேன். பிறகு பார்க்கலாம்.” என்றவாறே விடைபெற்றேன் நண்பனிடம்.

“இரண்ணா! கதையை முடிக்காம, இப்பிடிப் பாதியிலயே விட்டுட்டுப்போனா எப்படி?” என்றான் நண்பன்.

விடை தெரியாமல் எனக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் வினா அது. பின்னால் பலாப்பழத்துடன் பலரும் நிற்பது போன்ற உணர்வு எழ சிரித்துக்கொண்டு விடைபெற்றவாறே, அலைபேசியில் வானொலி இணைப்பினை ஏற்படுத்தினேன்.

அப்போது இரவு 09.30 மணி தாண்டியிருக்கவே, மின்னல் F.M. உடன் காற்றலை வழியே இணைந்து கொள்ள,

“விடுகதையா வாழ்க்கை? விடைதருவார் யாரோ....”
பாடல் கேள்விகளைச் செவிகளுக்குள் செருகிக் கொண்டிருந்தது.

Thursday, November 12, 2009

தொடரூந்து (MRT) எனக்கொரு போதிமரம்


இன்றைய மதிய நேரம். ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரையிலான நீண்ட தொடரூந்துப் பயணம். ஆரம்பத்தில் பயணிகள் அதிகம் இல்லையாயினும் பயணத்தூரம் செல்லச்செல்ல இருக்கைகள் நிரம்பி, நின்று கொண்டு பயணிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. தொடரூந்து நிலக்கீழ்ச் சுரங்கத்திற்குள் நுழைய அலைபேசியின் வானொலி இணைப்புத் துண்டிக்கப்பட்டது. சுற்றிவர நோட்டமிட்டேன். வழமை போன்றே ஒவ்வொரு பயணிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதது போல் தங்கள் தங்கள் உலகில் ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். அநேகமானோர் காதுகள் iPod-உடனேயே இணைக்கப்பட்டிருந்தன. சிலர் PSP (PlayStation Portable) யில் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடுத்த தரிப்பிடத்தில் இறங்குவதற்காய், எனக்கருகிலிருந்தவர் எழ, அந்த இருக்கையைக் குறிவைத்து ஒரு சீன இளம்பெண் வந்தாள். அங்கங்கே அங்கங்கள் காட்டும் ஆடையுடன் மதர்ப்பாயிருந்தாள். வாளிப்பாய், வனப்பை அள்ளிக்குவித்து வைத்தது போல் கவர்ச்சியாய் இருந்தாள். அருகில் அமர்ந்ததும் உள்ளம் கிளுகிளுப்பாவதை உணர்ந்தேன்.

அடுத்து வந்த தரிப்பிடத்தில் எனக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருந்தவர் எழ, அப்போதுதான் உள்ளே நுழைந்த இன்னோர் சீன மூதாட்டி அதில் வந்தமர்ந்தாள். உற்று நோக்கினேன். கூன்விழுந்து உடல் தளர்ந்து நரைதிரை கண்ட பெண். கைகளில் முகத்தில் ஆங்காங்கே பட்டைபட்டையாய் தோல் உரிந்தும் சில இடங்களில் புண்ணாகியும்...அருவருப்பாய் உணர்ந்தேன்.

எனக்குள் பார்த்தேன். ஒருபுறம் தேவதை மறுபுறம் தேவாங்கு என்று எழுந்த எண்ணம் மறுகணமே அடங்கிப்போனது. இப்போது என்னால் அருவருப்பாய்ப் பார்க்கப்படுகின்ற இந்த முதிய பெண்ணும் பல ஆண்டுகளுக்கு முன்னர், அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு தேவதையாய் இருந்திருக்கக்கூடும். யார் கண்டது, எத்தனை இளைஞர்கள் இவள் பின்னால் அலைந்தார்களோ? இதோ இப்போது என்மறுபக்கத்தில் சுண்டி இழுக்கும் கவர்ச்சியுடன் காணப்படும் இந்த இளம்பெண் இன்னும் பல ஆண்டுகள் கழித்து, அப்போது வரும் இளைஞர்களால் அருவருப்பாய்ப் நோக்கப்படக்கூடும்.

அழகு, நிரந்தரமற்றதெனினும் முதற்பார்வையில், நாம் அழகாய் தெரிபவற்றின் மேல் கவரப்படவும் அசிங்கமாய் தெரிபவற்றின் மேல் வெறுப்புறவும் தானே செய்கிறோம். வாழ்வின் இருகோடி அந்தங்களும் என் இருபுறமும் இப்போது இருப்பதாய் எனக்குப்பட்டது. அழகைக் கண்டு ரசிப்பதா? அல்லது அசிங்கத்தைப் பார்த்து வெறுப்பதா? உணர்வுகள் திண்டாடின.

சரி! இந்த மூதாட்டியை எல்லோருமே அருவருப்பாய்த்தான் பார்ப்பார்களா? மீண்டும் அந்த மூதாட்டி பக்கம் திரம்பினேன். அட! அவருக்கு மறுபுறம் அவரை ஆதுரமாய் அணைத்தவாறே ஒரு வயோதிகர், அவரின் கணவராய் இருக்க வேண்டும். இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக தங்களுக்குள் உரையாடிக்கொண்டிருந்தனர்.

என்னால் அருவருப்பாய் வெறுக்கப்பட்ட அதே பெண், இன்னொருவருக்கு விருப்புக்குரியவராய் அழகானவராய்த் தெரிகிறார். “காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு” என்கின்ற பழமொழி ஞாபகத்தில் வந்து போனது. ஆக அவர் அருவருப்பாய் எனக்குத் தெரிவது எனது பிரச்சனையே அன்றி அந்த மூதாட்டியின் பிரச்சனையல்ல. அப்படியானால் எனக்கு அழகாய்த் தெரியும் மறுபுறம் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணும் வேறு யாராலும் வெறுக்கப்படக் கூடுமா? என்கின்ற கேள்வி எழுந்தது. இருக்கலாம், யாருக்குத் தெரியும்? “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம்”. பொதுவாக அழகான பெண்களிடம் காணப்படும் அகங்காரத்தினால் எத்தனையோ பேரை இவள் கேவலமாக நடத்தியிருக்கக்கூடும். சிலவேளைகளில் இவள் அகங்காரமற்றவளாய், எல்லோருடனும் அன்பாய் பழகுவளாய்க்கூட இருக்கலாம். இல்லை வேறுவிதமான இரசனை கொண்டவர்களுக்கு சிலவேளை இவள் அசிங்கமாய்க்கூடத் தெரியலாம். ஆக இவள் எனக்கு அழகாய்த் தெரிவதும் எனது பிரச்சனையே அன்றி அவளுக்கும் அதற்கும் சம்பந்தமேயில்லை. ஒரு தெருநாய்க்கு ஒரு குட்டை போட்ட பெட்டைநாய் தான் அழகாய் கவர்ச்சியாய்த் தெரியுமேயன்றி ஐஸ்வர்யாராய் அல்ல.

அழகுகூட ஒரு ஒப்பீடே என்றது உள்மனது. உண்மைதான் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இன்னொருபொருள் கிடைக்காத போதுதான் நாம் ஒன்றை அப்படியே அது உள்ளவாறே ஏற்றுகொள்வோம். ஆனால் அப்படி, ஒப்பிடமுடியாத ஒரு பொருள் என்று எதுவும் எம்மிடையே உள்ளதா?

உண்மையைச் சொல்லுங்கள். இந்தக் கேள்வியை வாசித்ததும் உங்களுக்குள் ஒரு ஒப்பீடு நடந்ததா? இல்லையா? இதுதான், இந்த ஒப்பீடுதான் எமது எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ஆனால் இதே ஒப்பீடுதான் இன்றைய விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக நாம் பிரச்சனைகள் என்று எண்ணுபவற்றிற்கு காரணம் நாம் ஒப்பிடும் பொருட்கள் அல்ல, மாறாக நாம்தான் எமது பிரச்சனைகளுக்குக் காரணம் என்பது புரிந்தது.

இப்போது அந்த அழகிய இளம்பெண் பக்கம் திரும்ப அவள் எனக்கு இளம்பெண்ணாக (அழகிய விடுபட்டுப் போனது) தெரிந்தாள். மறுபுறம் திரும்ப அசிங்கமாய்த் தெரிந்த மூதாட்டி, வயதான பெண்ணாக (அசிங்கம் விடுபட்டுப் போனது) தெரிந்தார். ஏதோ புரிபட்டதாய் உணர்ந்தேன். இன்னும் ஒப்பீடு இருப்பதாகவே தெரிந்தது. நேரம் செல்லச்செல்ல இருவரும் பெண்களானார்கள் (இளமை/முதுமை என்பது விடுபட்டுப் போனது). மேலும் சில கணங்கள் கழிய இருவருமே சக மனிதர்களானார்கள் (பெண்கள் என்பது விடுபட்டுப்போனது). மேலும் சில கணங்கள் கடக்கையில்... நான் இறங்கவேண்டிய தரிப்பிடம் வந்துவிட்டதாக அறிவிக்கப்பட சிந்தனை கலைந்து வெளியே வந்தேன்.

வெளியே வானொலிக்கான சமிக்ஞைகள் இல்லாததால் iPod-இனை அணிந்து கொண்டேன்.

“...எறும்புத்தோலை உரித்துப் பார்த்தேன், யானை வந்ததடா. -நான்
இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா...”

கண்ணதாசனின் பாடல்வரிகள் அர்த்தத்துடன் செவிகளை வந்தடைந்து கொண்டிருந்தன.

Monday, November 9, 2009

வள்ளுவர் ஆணாதிக்கவாதி. தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளிய டாக்டர் கி.வீரமணி



சிங்கப்பூர், பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், நேற்றைய (08 நவம்பர் 2009) மாலை வள்ளல் பொ.கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்ற, 'பெரியார் கண்ட வாழ்வியல்' எனும் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.


புதுமைத் தேனி மா.அன்பழகன் அவர்கள் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த எம்.இலியாஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். வழமையான வரவேற்புரை போன்றல்லாது அது, வரவிருக்கும் செம்மொழி மாநாட்டினையொட்டியதான ஒரு வேண்டுகோள் உரையாகவும் அமைந்திருந்தது. பின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் “புதியதோர் உலகம் செய்வோம்...” பாடலுக்கு மாணவியொருவர் மிக அற்புதமாக நடனமாடினார். பின்னர் வந்த குழந்தையொன்று “தமிழுக்கு அமுதென்று பேர்...” என்கின்ற பாடலை வயதிற்கு மீறிய முதிர்ச்சியுடன் மிக அருமையாகப் பாடினார்.

இம்முறை முதன்முறையாக சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தினரால் 'பெரியார் விருது' விருது வழங்கப்பட்டது. சிங்கை தேசிய நூலக வாரியத்தின் மூத்த அதிகாரி திருமதி புஷ்பலதா அவர்கள், தமிழ்மொழி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய/ஆற்றிக் கொண்டிருக்கும் பணிக்காக அவ்விருது, வழங்கிக் கௌரவிக்கபட்டார்.

டாக்டர். சோம. இளங்கோவன் அவர்களின் வாழ்த்துரையினை அடுத்து தமிழ்நாடு திராவிடர் கழகத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் சிறப்புரை ஆரம்பித்தது.


அவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் 30 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் பெருமளவு நிமிடங்களுக்கு மேடையில் அமர்ந்திருந்தவர்களைப் பற்றியே புகழ்ந்து கொண்டிருந்தபோது, ச்சே! 30 நிமிட நேரத்தையும் இப்படியே தான் விரயமாக்கப் போகின்றாரோ என்று, அவரிடம் வேறு பல விடயங்களையும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மனது சலிததுக் கொண்டது. பின் அவர் பெரியாரின் வாழ்வில் இடம்பெற்ற பல சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டபோது என்ன மனிதர் இவர்? இப்படிக் கீழ்த்தரமானவராக நடந்து கொள்கின்றாரே என்றுதான் எண்ணத்தோன்றியது.

பெரியார் ஒருபோதுமே தன்னை யாரும் மேடையில் வைததுப் புகழ்ந்து பேசுவதை விரும்பியதில்லை. மேலும் அவர், ஒருவரை மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனில், தண்டிக்கப்பட வேண்டியவரை மேடையில் ஏற்றி வைத்துவி்ட்டு அவரைப்பற்றிப் புகழ்ந்து கொண்டே இருந்தால் அதை விடக் கடுமையான தண்டனை வேறொன்று இருக்க முடியாது என்றார். அப்படியானால் மேடையில் இருந்து விழாவைச் சிறப்பித்தவர்கள் மேல் டாக்டர் கி. வீரமணி அவர்களுக்கு அப்படி என்ன கோபமோ? தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளைகளையும் கிள்ளி விட்டிருந்தார்.

30 நிமிடங்களைத் தாண்டி சூடுபிடித்து நீண்டு சென்ற உரை ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரத்தினை விழுங்கி விட்டிருந்தாலும் பார்வையாளர்களைத் தனது பேச்சினால் கட்டிப்போட்டிருந்தார். பெரியார் கண்ட வாழ்வியலினை பலரும் முறையாக அறிந்திருக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டார். பெரியாரைப் பற்றிப் பலரும் அறிந்திருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்களும் குருடர்கள் பார்த்த யானை போன்றே பெரியாரின் ஒவ்வொரு பக்கங்களை மட்டுமே அறிந்திருப்பதாகவும் கூறினார். உண்மைதான், பெரியாரினால் வலியுறுத்தப்பட்ட பெண்விடுதலை, சிக்கனம், சீர்திருத்தத் திருமணம் என்பவற்றையெல்லாம் விட்டுவிட்டு , நாத்திகம் பேசுவதற்கு மட்டுமே இப்போதெல்லாம் பெரியாரின் பெயர் உபயோகிக்கப்படுகிறது.

“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”

என்கின்ற குறளினை உவமைக்கு எடுத்திருந்த டாக்டர் கி.வீரமணி அவர்கள், ஆண்களை மட்டுமே இக்குறள் குறிப்பதாகக் கூறினார். மேலும்,

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்கின்ற குறளினையைம் கூறிய அவர் வள்ளுவர் ஆணாதிக்க வாதியாக இருந்திருப்பாரோ என்கின்ற சந்தேக விதையினையும் தூவிவிட்டிருந்தார். ஒரு ஆணுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன உரிமைகள் உள்ளதோ அதே உரிமைகள் ஒரு பெண்ணுக்கும் இருக்கவேண்டும் என்பதற்காக பெரியார் அயராது உழைத்ததாகவும் கூறினார். சிங்கப்பூர், எப்போதோ பெரியார் கண்ட, பெண்விடுதலையை அடைந்து விட்டிருப்பதைப் பார்த்து தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

நிகழ்ச்சிகள் நிறைவுற வெளியே வந்தோம். அப்போது வயதானவர் ஒருவர் எங்களருகில் வந்து நாங்கள் எங்கே இருக்கின்றோம் என்று வினவினார். நாங்கள் சொன்னதும், என்னருகில் நின்றிருந்த அம்மாவிடம் “உங்கள் பெண்பிள்ளைகள் யாரும் மணமாகாமல் இருக்கின்றார்களா?” என்றார். ஒருவேளை அந்த அம்மாவிற்கு தெரிந்தவராய் இருக்கலாம் என்கின்ற எண்ணத்தில் நான் பார்வையாளனானேன். அவர் தனது மகனுக்குத் தகுந்த பெண் தேடுவதாகவும், ஊரில் (இந்தியாவில்) பெண்கள் இருந்தால் அறியத்தரும்படியும் கேட்டது தான் அந்த உரையாடலின் சாராம்சம். பின் அநத அம்மாவுடன் உரையாடிய போது இன்றுதான் அவரை முதன்முதலில் சந்திப்பதாகவும், இங்குள்ள பெரும்பாலான பெற்றோர் தங்கள் ஆண்பிள்ளைகளுக்கான மணமகள்களை ஊரிலேயே தேடுவதாகவும், அப்படி இணைந்து கொண்ட குடும்பங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், இங்கேயே திருமணம் செய்து கொண்ட பெரும்பாலனவர்களின் குடும்பங்கள் விவாகரத்துக் கோரி நீதிமன்றத்தில் நிற்பதாகவும் கூறினார். அப்படியானால், இதைத்தான் பெரியார் கண்ட பெண்விடுதலை என்பதா?