Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Wednesday, November 8, 2017

தொல்-காப்பியக் காதல்

அப்போது அவனுக்கு வயது பதினாறு. க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தான்.

இடம்: வேலணை, யாழ்ப்பாணம்
காலம்: 22 ஓகஸ்ற் 1990

'கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்'

அன்றைய விடியலிலும் வழமைபோன்றே காகங்கள் கரைந்திருந்தன. சேவல்களும் தங்கள் கடமைகளைச் சரிவரவே செய்திருந்தன. அவனது அம்மாவும் வழமை போன்றே சிவப்பியில் பாலைக் கறந்து விட்டு கறுப்பியில் கறப்பதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கையில் அவனும் இயற்கைக்கடனை முடித்துவிட்டுக் குளிப்பதற்காக கிணற்றடியினை அடைந்தான். வழமை போன்றே குளித்துவிட்டு வந்து ஜன்னலின் உள்ளே கொழுவிவிட்டிருந்த திருநீற்றுக்குட்டானிலிருந்து திருநீற்றினை எடுத்துப் பூசிவிட்டுவர, தாயாரும் வழமை போன்றே தயாராக பசுப்பால்த் தேனீரும் பனங்கட்டித்துண்டுடனும் வர, எல்லாமே வழமை போன்றிருக்கையில் தூரத்தில் உலங்குவானூர்தியினதும் குண்டுவீச்சு விமானங்களினதும் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. அது மட்டும் வழமைக்கு மாறாகவிருந்தது.

அந்த வழமைக்கு மாறான சத்தங்கள் அவர்கள் இருப்பையே வேரோடு பிடுங்கியெறியப்போகின்றன என்பது அந்தக்கணத்தில் அவர்களுக்கு ஒருதுளியேனும் தெரிந்திருக்கவில்லை. மூன்றுநாட்கள் தொடர்ச்சியாக பதுங்குகுழிகளினுள் அவர்களை முடக்கிப்போட்டது அந்த 'முச்சக்திப் (திரவிடபலய) படைநடவடிக்கை'. மூன்றாம்நாள் மாலையில் விமானங்களினது குண்டுவீச்சுக்களும்  உலங்குவானூர்திகளினது துப்பாக்கித் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும் ஓய்ந்துவிட்ட பின்னரேயே நேர்ந்துவிட்டிருந்த அவல நிகழ்வுகள் அவர்களுக்குத் தெரியவந்தன. சிதைக்கப்பட்டவை தவிர்ந்து எஞ்சியவூர் தானாகவே சிதையலாயிற்று. வல்லூறுகளால் சிதைக்கப்பட்ட அந்த அழகிய கூட்டினைவிட்டு எல்லாப் பறவைகளும் ஒவ்வொரு திக்கில் வெளியேறின.

கைக்கிளை (ஒருதலைக் காதல்)

இடம்பெயர்ந்து தற்காலிகமாக ஒரு உறவினர்வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கே பலரும் அவனது குடும்பத்தைப்போலவே இடம்பெயர்ந்து தங்கியிருந்தார்கள். அங்கேதான் அவளைக்கண்டான்.

'அணங்குகொல் ஆய்மயில்கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு' – (திருக்குறள் 1081)

அவன் குழம்பிப்போனான். அவள் மானிடப் பெண்ணா இல்லை தேவதையா?

அவனுக்குள் ஏதேதோ இரசாயன மாற்றங்கள். அவன் இப்போது அவனாக இல்லை. அவன் உடலின் அத்தனை அணுக்களும் கண்களாகமாறி அவளையே நோக்கிக்கொண்டிருக்க, அவள் அறைக்குள் சென்று மறைந்து விட்டாள். அவன் மனது அவனைவிட்டுப் பிரிந்து அவளுடனேயே சென்றுவிட்டது. அவள் யாராயிருப்பாள்? உறவினளாயிருப்பாளா? அவளை நான் காதலிக்கத் தொடங்கி விட்டேனா? பார்க்க என்னிலும் விடவயது குறைந்தவளாக இருக்கிறாள். அவளுக்கு என்காதல் புரியுமா? எனது காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்வார்களா? இந்தவயதில் காதலா என்று ஏசமாட்டார்களா? நான் எனது படிப்புகளை முடித்து வேலை பெறுவதற்குள் அவளுக்குத் திருமணம் நடத்திவிடுவார்களா? அவளும் என்னைக் காதலிப்பாளா? அல்லது அவளுக்கு ஏற்கனவே வேறு யாரேனும் காதலன் இருக்கக்கூடுமோ? ச்சேச்சே அவளைப் பார்க்க அப்படியான பெண்ணாகத்தெரியவில்லை. அது மட்டுமன்றி அவளைப்பார்க்கச் சின்னப்பெண்ணாகவே தெரிகிறது. அதற்குள் காதல் கீதல் என்று விழுந்திருக்கமாட்டாள். அப்படியானால்; என்காதலை மட்டும் ஏற்றுக் கொள்வாளா? சிந்தனைச் சிக்கல்களால் உறக்கமில்லா விழிகளின் கனவுகளுடன் உலவினான் அவன்.

காமம் சாலா இளமையோள்வயின்,
ஏமம் சாலா இடும்பை எய்தி,
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்,
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து,
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்-
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.
– (தொல்காப்பியம். பொருள். நூற்பா-53)


அன்பின் ஐந்திணை

குறிஞ்சி (புணர்தலும் புணர்தல் நிமித்தமும்)
             
இடம்: பேராதனை, கண்டி (மலையும் மலைசார்ந்த இடமும்)
காலம்: 1998 கார்த்திகை (கூதிர்காலம் யாமப்பொழுது)

பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தில் அவன் மூன்றாம் ஆண்டில் கற்றுக்கொண்டிருந்தான். புதுமுகமாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள் ஆரம்பித்துவிட்டிருந்தன. கடந்த வருடங்களைப் போலல்லாமல் இம்முறை பகிடிவதைகளின் ஆரவாரம் குறைந்திருந்தது. கடந்தவருடம் வரப்பிரகாஷின் இழப்பின் பின் புதுமுகமாணவர்களுடன் கதைப்பதற்குக்கூட சிரேஷ்ட மாணவர்கள் அஞ்சினர். அவனும் அதற்கு விதிவிலக்காகாமல் தன்பாட்டில் இருந்தான். இல்லையெனில் புதுமுகமாணவர்களைச் சந்திப்பதில் முதல்ஆளாய் நிற்பவன் அவன். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. சிலவேளை அவளும் அங்கே வருவாளோ என்கின்ற மீ-மிகச்சிறிய நப்பாசை. அவ்வப்போது அவளின் ஞாபகங்கள் தலைதூக்கும். எவ்வளவு பெரிய கோழை அவன்? ஒரு வாரம் ஒரே வீட்டிலேயே இருந்திருக்கிறான் அவளின் பெயரைக்கூடத் தெரியாமல்.

வெள்ளிக்கிழமைகளில் மாலைவேளையில் குறிஞ்சிக்குமரனிடம் செல்வது அவன் பழக்கம். அக்பர்பாலத்தின் மீதாக இலங்கையின் மிகநீண்டநதியான மகாவலியாற்றினைக் கடந்து அந்த மலையில் ஏறிச்செல்வது ஒருவித சுகானுபவம். இந்தமுறை பூசைமுடிந்து இறங்க ஆயத்தமாகுகையில் எதேச்சையாக அவன் கண்களில் தட்டுப்பட்டது?

ஓ மை காட்! அவளா?

அவனுக்குள் ஹோர்மோன்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. கடவுளே அது அவளாகவே இருக்க வேண்டும். அவளுக்கு என்னை ஞாபகம் இருக்குமா? எப்படி அவளை அணுகுவது? பாதணிகளை எடுப்பதற்காக அவள் செல்வதைக் கண்டு அவள் அருகே விரைந்தான்.

'ஹலோ! Fresher-ஆ?

'ஓம் அண்ணா!'

'என்ன? அண்ணாவோ?'

'இல்லை அண்ணா!'

'என்ன நக்கலா? ராக்கிங் ஒண்டும் இல்லையெண்ட நினைப்போ?'

'இல்ல....' என்றவள் நிமிர்ந்து அவனை ஒருநொடி பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள்'

'சீனியர்ஸ் எல்லாரையும் தெரிஞ்சிருக்கவேணுமெண்டு தெரியாதோ? என்னைத் தெரியுமோ?'

'தெரியும்'

'தெரியுமோ? எப்பிடி?'

'தெரியும்'

'எப்பிடித் தெரியுமெண்டுதான் கேட்டனான்?'

'அதான் தெரியுமெண்டு சொல்லுறனே. விடுங்கோவன்'

'நல்லா வாய் காட்டுறீர் என. நாளைக்கு பக்கல்ரீல என்ன வந்து சந்திக்கவேணும் சரியா?'

'ஏலாது. நான் ஈ-பக்கல்ரியில்ல. டென்ரல் பக்கல்ரி'

அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள்போய்விட்டாள். ஒருவேளை அவளுக்கு என்னை ஞாகபமிருக்குமோ என்னைப்பற்றிய எல்லா விபரமும் அவளுக்குத் தெரிந்திருக்குமோ?’ அவன் குழம்பினான். அடுத்த வெள்ளி மாலைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்

அடுத்த வெள்ளி மாலை நேரத்துடன் சென்று, தன் நண்பனான கோவில்த் தலைவரிடம் அந்தப் பெண்கள் வந்தவுடன் அவர்களைப் பூப்பறிப்பதற்குத் தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக்கொண்டான்.

குறிஞ்சிக்குமரனின் பூந்தோட்டத்தில் அவனைக் கண்டதும் அவள்தன் தோழிக்குப்பின்னால் ஒளிந்துகொள்ள முற்பட்டாள்.

'எப்பிடி உங்களுக்கு என்னைத் தெரியும்?'

'எடியே இவரையா சொன்னனீ?' என்றாள் அவளுடன் வந்திருந்த அவள் சிநேகிதி.

தன்தோழியின் வாயைத் தன்தளிர்க்கரங்களால் பொத்தினாள் அவள்.

'என்ன சொன்னவா என்னைப்பற்றி? ராக்கிங் குடத்தனானாமோ?'

'ஓ! நீங்க ஏற்கனவே சந்திச்சிற்றீங்களா? கள்ளி இவள் சொல்லவேயில்லை'

'அப்ப என்னெண்டு இவாவுக்கு என்னைத் தெரியுமாம்?'

'இவாவின்ரை மாமி உங்கட சித்தியின்ரை ஒண்டுவிட்ட தங்கச்சியாம். தொண்ணூறில நீங்கெல்லாம் இடம்பெயர்ந்து ஒண்டா இருந்தனீங்கெண்டெல்லாம் சொன்னவள். நீங்க என்ன தெரியாதமாதிரிக் கதைக்கிறீங்கள்?'

'ஓ.....'

சித்தியின்ரை தங்கச்சி அவளுக்கு மாமியெண்டா அவள் தனக்கு என்ன முறை?

ஆயிரந்தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மியைக் கொட்டுங்களே....

அவனுக்குள் ஆனந்தக் கும்மி ஆரம்பமாகியது.

'நான் இஞ்சை நிற்கிறது உங்களுக்கு இடைஞ்சலா இருக்குமெண்டா நான் மாலை கட்டுற இடத்துக்குப் போறன்' என்றாள் அவள் தோழி

'உதை வேண்டுவ' என்றாள் அவள்.

அடுத்து வந்த வாரங்களில் ஒன்றில்

'இஞ்சேரும் உம்மட காலில மலையட்டை ஒண்டு ஊருது'

'ஐயோ எங்க?'

'அப்பிடியே அசையாம நில்லும் எடுத்து விடுறன்'

அவன் குனிந்து, யானைத்தந்தங்களைக் கடைந்து உருவாகியிருந்த அவள் கெண்டைக்காலில், ஒட்டிக்கொண்டிருந்த அட்டையை இழுத்தெடுத்தான்

இருவருமே மனதிற்குள் அட்டையைப் போற்றத்தொடங்கினர்.

மெய் தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல்,
இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல்,
நீடு நினைந்து இரங்கல், கூடுதல் உறுதல்,
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ.....
- (தொல்காப்பியம். பொருள். நூற்பா-99 இலிருந்து)

முல்லை (இருத்தலும் இருத்தல் நிமித்தமும்)

இடம்: புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (காடும் காடுசார்ந்த இடமும்)
காலம்: 2002 புரட்டாதி (கார்காலம் மாலைப்பொழுது)

அவள் தன் கற்கைநெறி முடிந்து, தற்காலிக பல்மருத்துவராக புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபாகார்த்த வைத்தியசாலையில் பணியாற்றத் தொடங்கியிருந்தாள். குடிசார் பொறியிலாளனான அவன் இலங்கையில் வேலைவாய்ப்பின்மை காரணமாகச் சிங்கப்பூர் சென்றுவிட்டிருந்தான். அவன் சிங்கப்பூர் சென்றபின்னர் இருந்துவந்த அவர்களுக்கிடையிலான தொலைபேசித் தொடர்புகளும் இப்போது துண்டிக்கப்பட்டாயிற்று. வேலைமுடிந்து மாலையில் வீடுவந்தால் வெறுமை அவளை நிரப்பிக் கொள்கிறது.

'மாலை என் வேதனை கூட்டுதடா
காதல் தன் வேலையைக் காட்டுதடா'

என்று அவள் திரையிசைப்பாடல்களை மாற்றி அவனுக்கு மடல்கள் வரையலானாள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி அமைதி திரும்பிக்கொண்டிருந்ததால் வடகிழக்கில் குடிசார் பொறியியலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்க அவனை நாட்டுக்குத் திரும்பிவரும்படி வற்புறுத்தினாள். எடுத்துக்கொண்ட வேலைத்திட்டம் முடியாமல் வரமுடியாது என்றும் இன்னும் ஒருவருடத்தில் அது முடிந்துவிடும், அது முடிந்தவுடன் வந்து விடுகிறேன் என்றும் மடலனுப்பினான் அவன்.

அவன் வருகைக்காக அவள் காத்திருக்கத் தொடங்கினாள்.

மருதம் (ஊடலும் ஊடல் நிமித்தமும்)

இடம்: திருவையாறு, கிளிநொச்சி (வயலும் வயல்சார்ந்த இடமும்)
காலம்: 2004 தை (வைகறை, விடியல் பொழுது)

நியாப் திட்டத்தின் கீழ் ஒரு பொறியியலாளனாக அவனும் இணைந்து கொண்டான். வேலை நிமித்தம் அவன் கிளிநொச்சியில் இருக்கவேண்டியேற்பட்டதால் அவளும் தன் வேலையை கிளிநொச்சியிலுள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றிக் கொண்டாள்.

ஒருமடமாது ஒருவனுமாகி
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து..

மாதங்கள் உருண்டோடின. மழலைகளும் ஒன்றன்பின் ஒன்றாய் இரண்டாயிற்று. ஓய்வில்லா வேலை அவளுக்கு. அவனுக்கும் அவளுக்குமிடையே பிள்ளைகள் உறங்க இருவருக்குமான இடைவெளி அதிகமாகியதாய் அவளுக்குத் தோன்றத் தொடங்கியது. அவனும் அடிக்கடி வேலை நிமித்தமெனக்கூறித் தாமதமாக வருவதாய் உணர்ந்தாள் அவள். தான் புறக்கணிக்கப்படுகின்றேனோ என்கின்ற எண்ணம் எழுந்தது. சந்தேகவிதை விழுந்தது. அவன் செயல்களில் ஐயங்கொண்டு அது முளைக்கவும் தொடங்கியது. அம்முளை வெளியே தெரியவும் தொடங்கியது.

பிள்ளைகள் இருவரும் உறங்கிவிட்ட பின்னும் அவன் வரக்காணோம். அன்று அவன் மிகத் தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். கதவைத் தட்டினான். அவன்மேல் அவளுக்கு மிகுந்த கோபம் உண்டானது. கதவினைத் திறக்காமல் அமைதியாக இருந்தாள். சாளரம் வழியே எட்டிப் பார்த்தான். அவள் கதிரையில் இருப்பது மங்கலாகத் தெரிந்தது. அவள் கோபமாக இருப்பது புரிந்தது. காரணம் புரியாமல் குழம்பினான். மீண்டும் மீண்டும் பலமாகக் கதவைத் தட்ட அவள் கதவினைத் திறந்தாள். அவனைக் கோபத்துடன் ஏறிட்டாள்.

'இப்ப என்னத்துக்கு இந்தநடுச்சாமத்தில வந்து கதவைத் தட்டுறியள்? பிள்ளைகள் நித்திரை கொள்ளுறது தெரியேல்லையா? வீட்டில மனிசி பிள்ளைகள் இருக்கெண்டு நினைப்பில்லை. இந்த வயதிலையும் அமரடங்காம ஊர்மேய வெளிக்கிட்டிருக்கிறார்'

'என்ன வாயெல்லாம் கண்டகண்டபாட்டுக்கு நீளுது?'

'எனக்கு வாய்தான் நீளுது. உங்கை சிலபேருக்கு கண்டகண்ட இடங்களில என்னென்னவோ எல்லாம் நீளுதாம்'

'உமக்கு இப்ப என்ன பிரச்சனை? ஒரு மனுசன நிம்மதியா வீட்டுக்கு வந்து நித்திரைகூட கொள்ளவிடாம?'

'ஐயோ ராசா, இப்ப உங்களுக்கு நான் பிரச்சனையாப் போயிற்றன் என? புதுசா ஒருத்தி கிடைச்சவுடனே நான் வேண்டாதவளாகிற்றன். நீங்க அவளிட்டையே போங்கோ. என்ரை பிள்ளைகள வளர்க்க என்னால ஏலும். என்ரை அம்மா அப்பாவை என்னைப் படிப்பிச்சது வீணாப் போகாது?'

'என்ன உளருறீர்? உமக்கென்ன விசரா பிடிச்சிருக்கு?'

'விசர்தான். உங்களில பைத்தியமா இருந்தனே. அதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்'

அவனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்தது. அதேசமயம் தன்மேல் அபாண்டமாகப் பழிசுமத்தும் அவளைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. தன்நிலை விளக்கினான். அவள் சந்தேகங்கள் அடிப்படையற்றவை என்பதைப் புரிய வைத்தான்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். – (திருக்குறள் 1327)

அவள் வென்றவளானாள்.

நெய்தல் (இரங்கலும் இரங்கல் நிமித்தமும்)

இடம்: மன்னார் (கடலும் கடல்சார்ந்த இடமும்)
காலம்: 2008 பங்குனி (எற்பாடு பொழுது)

அவன் வேலைநிமித்தம் கிளிநொச்சியிலிருந்து மன்னாருக்குச் சென்றுவரவேண்டியிருந்தது. அக்காலப்பகுதியில் வன்னிக்குள் போக்குவரத்துகள் ஆபத்தானவையாக மாறிக்கொண்டிருந்தன. ஆழஊடுருவித் தாக்கும் படைகளின் கிளைமோர்த் தாக்குதல்களுக்குப் பெரும்பாலும் பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்களே பலியாகிக் கொண்டிருந்தன. அவன் மன்னாருக்குச் சென்றுவரும் ஒவ்வொரு நாளும் அவளுக்குத் துயர் நிறைந்ததாய் மாறிற்று. எங்காவது தூரத்தில் ஏதாவதொரு வெடியோசை கேட்கையிலும் அவள் அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிடுகிறதோ என்று இரங்கிக் கொண்டும் தெய்வங்களிடம் அவனைக் காப்பாற்றுமாறு இறைஞ்சிக் கொண்டுமிருந்தாள்.

பாலை (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்)

இடம்: புதுமத்தாளன் (குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம்)
காலம்: 2009 சித்திரை (நண்பகல்ப் பொழுது)


போர் உக்கிரமடைந்து தொடர்ச்சியான இடப்பெயர்வுகளால் களைத்துப் போய் புதுமத்தாளன் பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். காயப்பட்டவர்களில் சிலர் கப்பலூடாகத் திருகோணமலைக்கு அழைத்தச்செல்லப்படுகையில் களவாகவும் வள்ளங்களில் சிலர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியிருந்தனர். அப்படியொரு வள்ளத்தில் அவர்களும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். எந்தப் பக்கத்தாலும் எந்தப் பகுதியிலிருந்தும் துப்பாக்கிச்சன்னங்கள் பதம் பார்க்கலாம். அவற்றைத் தாண்டிக் கடலுக்குள் வந்துவிட்டாலும், கடற்படையினரதோ அல்லது விமானப் படையினரதோ ரேடார்க் கண்களில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். சுற்றிவர கடல்முழுதும் நீரிருந்தும் பருகுதற்கு ஒருதுளி நீரில்லாத அந்தப் பயணத்தில் உயிரைப் பணயம் வைத்துப் புறப்பட்ட அவர்கள் தாம் அடையவேண்டிய கரையினை ஆண்டவன் அருளால் அடைந்தனர். அங்கே அவர்களை விட்டுவிட்டு, தன் குடும்பத்தின் எதிர்கால நலன்கருதி அவன் கப்பலேறினான்.

பெருந்திணை (பொருந்தாக் காதல்)

இடம்: ரொறன்ரோ, கனடா
காலம்: 2017 நவம்பர்

அவன் மட்டும் இங்கே. அவன் வந்த கப்பலின் பின் எதுவுமே இங்கேவர முடியாதாவாறு ஆயிற்று. அவளும் பிள்ளைகளும் மலேசியாவில். அவனது அகதிக்கோரிக்கைக்கும் இன்னமும் ஒரு முடிவு கிட்டாத நிலையில் ஏழாண்டுகளுக்கும் மேலாக அவளையும் தன் பிள்ளைகளையும் காணமுடியாதவாறு தவித்தக் கொண்டிருந்தவனுக்குப் புதிய பிரச்சனையொன்று முளைக்கத் தொடங்கியிருந்தது.

அந்தப் புதியவள் வேற்றினத்தவள். அவனைப்போலவே அகதிக்கோரிக்கையின் பதிலுக்காகக் காத்திருப்பவள். அவனும் அவளும் ஒரேயிடத்திலேயே களவாகப் பணியாற்றுகிறார்கள். அவனிலும் வயதில் மூத்தவள். ஆயினும் இப்போது அவனுக்கு அழகானவளாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறாள். இப்போதெல்லாம் அவள் குனிந்து நிமிர்ந்து வேலைசெய்கையில் அலையும் தன்விழிகளைத் தடுக்கவேண்டுமென்று அவனுக்குத் தோன்றுவதில்லை. கோடைகாலம் முடிந்து குளிர்பனிக்காலம் ஆரம்பித்தாலும் தன் ஆடைகளின் நீள அகலங்களை அதிகரிக்கவேண்டுமென்று அவளுக்கும் தோன்றுவதில்லை. அப்படி அவளுக்குத் தோன்றாமலிருப்பது அவனுடனிருக்கும் நேரங்களில் மட்டுமே என்பதை அவனும் அவளும் தெரிந்தே வைத்திருந்தனர். கண்ணுக்குத் தெரியாதவொரு எல்லைக்கோட்டில் நின்று கண்ணாமூச்சியாடும் அவர்கள், அந்த எல்லைக்கோட்டைக் கடக்காதிருப்பராக.

ஏறிய மடல் திறம், இளமை தீர் திறம்,
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்,
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ,
செப்பிய நான்கும்-பெருந்திணைக் குறிப்பே

– (தொல்காப்பியம். பொருள். நூற்பா-54)



நன்றி: தாய்வீடு (நவம்பர் 2017)

படங்கள்: இணையத்தில் பெறப்பட்டன.

====================

Friday, July 25, 2014

ஆனந்தி

வேலைத்தளத்தில் இருக்கையில் சொரூபன் கைபேசியில் அழைத்தான்.

'மச்சான் டேய் முகுந்தன் பிரான்சில இருந்து வந்து நிக்கிறானாமெடாப்பா. நாளைக்கு பின்னேரம் அவன மீற் பண்ணப் போவமா?'

முகுந்தனை மீண்டும் சந்திப்பேனென நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை. இப்போது எல்லாமே அவனுக்குத் தெரிந்திருக்குமோ இல்லையோ என்றுகூடத் தெரியாது. எந்த முகத்துடன் அவனைச் சென்று சந்திப்பது? உண்மைகள் தெரிந்திருந்தால் என்னைக் காண்கையில் அவனது எதிர்வினைகளை என்னால் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்குமா? மனதிற்குள் ஆயிரம் கேள்விகளுடன் துரோகம் புரிந்துவிட்டதான குற்ற உணர்ச்சியும் மீண்டும் வந்து குறுகுறுக்கத் தொடங்கியது.

'இல்ல மச்சான். எனக்கு நாளைக்கு வேலை'

'என்னடா சனிக்கிழமையிலும் வேலையா?'

'OT' -யடாப்பா. 

'வேலைவேலையெண்டு இப்பிடி உழைச்சு என்னத்தை மச்சான் காணப்போறாய்'

'உனக்கென்னடாப்பா, நீ சொல்லுவ. அவனவனின்ரை கஷ்ரம் அவனவனுக்குத்  தான் தெரியும். மூண்டு வருஷமாச்சு. இன்னும் வந்து சேர்ந்த காசே ஏஜென்சிக்காரனுக்கு; கட்டி முடிக்கேல்ல. உழைக்கிற காசெல்லாம் வட்டிகட்டத்தான் சரியாயிருக்கு'ஃ

'சரியடாப்பா அப்ப கொன்பிரன்சில விடுறன். மற்ற லைனில முகுந்தன் நிக்கிறான் கதை'

நெஞ்சுக்குள் உண்டான நடுக்கத்தை மறைத்துக் கொண்டு,

'முகுந்தன் டேய் எப்பிடியிருக்கிற?'

'இருக்கிறன்ராப்பா. நீ எப்பிடி இருக்கிற. எப்பிடிப் போகுது கனடா எல்லாம்?'

'ம்ம்ம்.... இக்கரைக்கு அக்கரை பச்சைதான். என்ன விசயம். திடீரெண்டு கனடாக்கு வந்திருக்கிறாய்?'

'இல்ல மச்சான் தெரியாதே. வயசும் போகுது. அக்காதான் வரச் சொன்னவா. இஞ்சையொரு பிள்ளையைப் பாத்து வைச்சிருக்கெண்டு. போட்டோ பிடிச்சிருந்துது. அதுதான் நேரபாத்துக் கதைச்சுப்பழகி பிடிச்சிருந்தா கட்டுவமெண்டிட்டு வந்தனான்.'

'அப்ப ஆனந்.'

தீ-யை வாய்க்குள் விழுங்கிக் கொண்டேன். என்னையே அறியாமல் வந்து விழுந்துவிட்ட வார்த்தைகள். முகுந்தன் என்றவுடன் ஆனந்தியும் சேர்ந்தே நினைவுக்கு வருவாள். ஆனால் இந்த இருவருக்கும் நான் செய்திருப்பது? 

வாற செவ்வாய் வேலைக்கு லீவு போட்டு திரும்பவும் டொக்ரர் சூரியபாலனைப் போய்ப் பார்க்க வேணும். இல்லையெண்டா திரும்பவும் டிப்பிரஷன் வந்து வேலைக்கும் போகேலாம. ச்சே இவனை ஆரு இப்ப இஞ்சை வரச் சொன்னது?

'அந்த வே... பற்றி என்னோட கதைக்காத மச்சான். அவள் இப்பை அங்க அடிசர... .தெரியுமா உனக்கு?

கைகள் நடுங்கி கைபேசி கீழே விழுந்தது.  மனம் உடைந்து நொருங்கி சுக்கல்சுக்கலானதாய்.. குற்றவுணர்ச்சியில் மனம் குமையத் தொடங்கியது.

ஆனந்தி. 

எங்களின் சின்ன வயதுச் சிநேகிதி. பாலகப் பருவத்திலிருந்தே ஒன்றாவே படித்து வந்தோம் ஆண்பெண் பேதமறியா பேதை பெதும்பைப் பருவங்களில் எங்களோடு சேர்ந்து விளையாடியவள். நாங்கள் மறவோன்களாக அவள் மங்கையானாள். அதுவரை ஆனந்தத் தித்திப்பாய் இருந்தவள் எனக்கு ஆனந்தத் தீயாய் மாறினாள். அவளின் மேல் இன்னவென்று புரியாத அதீத ஈர்ப்புகள் என்னுள் உருவாகத் தொடங்கின. ஆசிரியர்கள் கற்பிக்கும் நேரங்களில்கூட  கரும்பலகையிலிருந்து  என் நயனங்கள் நழுவி அவள் கூந்தலில் சென்று சிக்கெடுக்கத் தொடங்கின. எப்போதுமே நான் ஒருவித கிறக்கத்தில் திரிந்து கொண்டிருந்தேன். இதைப்பற்றி யாருடானவது கதைக்கவேண்டும் போலிருந்தது. என் நம்பிக்கைக்குரியவனாக முகுந்தனே இருந்தான். ஒரு நாள் இன்ரேர்வலுக்கு அவனைத் தனியே அழைத்துச் சென்றேன்.

'மச்சான் நான் உன்னோட கொஞ்சம் கதைக்க வேணும்'

'சொல்லு மச்சான்'

ஏனோ தெரியவில்லை குரல் நடுங்கியது.

'இல்ல மச்சான்... ஆ..னந்தி ல. லலவ்'

'எப்பிடியடா கண்டு பிடிச்ச?'

'எ...என்ன?'

'நான் ஆனந்திய லவ் பண்ணுறன் எண்டு எப்பிடிக் கண்டு பிடிச்ச?'

என் இதயத்திலிருந்து எதையோ யாரோ பிய்த்தெறிவது போல உணர்ந்தேன். கண்களை உடைத்துக் கொண்டு பாய்வதற்குக் கண்ணீர் அருவிகள் துடித்தன. ஓவென்று கத்தி அழ வேண்டும் போலிருந்தது.

'மச்சான் ஆனந்தி அந்தப் பக்கமாப் போறாள். நான் பிறகு உன்னோட கதைக்கிறன் என'.

அன்றைய இரவு முழுவதும் நித்திரையின்றி மனதைப் பிசைந்துகொண்டேயிருந்தது. கண்ணீரருவிகள் கன்னங்களில் கோடிழுத்துக் கொண்டேயிருந்தன. யாருடனும் கதைக்கப் பிடிக்காமல் சில நாட்கள் தனித்தே திரிந்தேன்.

'நான் உனக்கு முதல்லேயே சொல்லேல்லையெண்டு கோபமா? சொறி மச்சான். நீதான் என்ரை லவ்வுக்கு கெல்ப் பண்ண வேணும்'

முகுந்தன் கேட்கையில் என்னால் மறுக்க முடியவில்லை.

சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள் ஆனந்தியிடம் சென்று நடுக்கத்துடன் முகுந்தனின் காதலைச் சொன்னேன்.

சிரித்தாள்.

'நீங்க சும்மா தானே முகுந்தனைச் சொல்லுறீங்க. கிளாசில நீங்க என்னை அப்பிடிப் பாத்துக் கொண்டிருக்கிறது எனக்கும் தெரியும்'

'இல்லை உண்மையாத் தான். முகுந்தன் தான் உங்களை லவ் பண்ணுறான்'

அவள் வதனம் சுருங்கிப் போவது தெரிந்தது.

'நானும் ஏதோ நீங்க என்ன லவ் பண்ணுறீங்களாக்கும் என்டு நினைச்செல்லோ சும்மா இருந்தன். என்னால இப்ப லவ்வையெல்லாம் நினைச்சுப் பாக்கோலாது. எனக்குப் படிக்க வேணுமாமெண்டு முகுந்தனிட்டச் சொல்லுங்கோ'

அவள் சென்றுவிட எதுவும் புரியாமல் நான் திகைத்து நின்றேன்.

சிலமாதங்களிலேயே எங்கள் பகுதிகளிலும் யுத்தம் பரவ ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கெனப் பிரிக்கப்பட்டோம்.

ஏறத்தாழ பத்து வருடங்களின் பின் 2002 இல் ஆனந்தியை எதிர்பாராத விதமாகக் கிளிநொச்சியில் சந்தித்தேன் முகுந்தனின் காதலியாக, முகுந்தனுடன். அவள் மல்லாவியில் இருப்பதாகவும் முகுந்தனைச் சந்திப்பதற்காக கிளிநொச்சி வந்ததாகவும் முகுந்தன் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். வேலை நிமித்தம்  நான் எனது இருப்பிடத்தைக் கிளிநொச்சிக்கு மாற்றிக் கொண்டேன்

2006 இற்குப்பின்னர் சண்டைகள் உக்கிரமடைந்து தொலைபேசிப் பாவனைகள் சுருங்கிக்கொண்டுவர முகுந்தனுக்கும் ஆனந்திக்கும் தொடர்பாளனாய் நான் மாறிப் போனேன். ஆனந்தியின் தம்பி இயக்கத்தில் இணைக்கப்பட நோயாளிகளான பெற்றோரைப் போஷிக்கும் பொறுப்பு அவளின் தலையில் விழுந்தது. உள்ளுக்குள்ளேயே ஆழஊடுருவும் படைகளின் தாக்குதல்களால் உள்ளூர் போக்குவரத்துகள் ஆபத்தானவையாக மாற எமக்கிடையிலான தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. 

கையில் இருந்தவை எல்லாம் இழந்து நெஞ்சில் வியாபித்திருந்த கனவுகளும் தொலைத்து, முள்ளிவாய்க்காலிலிருந்து சூனியமாகிப் போன மனதுடன் வெளியேற கால்கள் தயங்கிக் கொண்டிருந்த கணத்தில்,

'அண்ணே நான் உங்களோட வரட்டா'

குரல் கேட்டுத் திரும்ப ஆனந்தி தன் தாயுடனும் இரு குழந்தைகளுடனும் நின்றிருந்தாள். அவளுக்கு இன்னும் நான் யார் என்பது புரிந்திருக்கவில்லை. நான் யார் என்பதை அறிய வேண்டிய தேவையும் அவளிடம் காணப்பட்டதாய்த் தெரியவில்லை. தயங்கி நின்றதையே சம்மதமாக எடுத்தவள், என்னுடன் தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டாள். அப்போதுதான் மற்றையவர்களைக் கவனித்தேன் எல்லோரும் குடும்பமாய் இணைந்தே சென்று கொண்டிருந்தனர். ஆங்காங்கே ஷெல் வீச்சுகளினாலும் துப்பாக்கிச் சன்னங்களினாலும் கொல்லப்பட்ட உடல்கள் சிதறிக்கிடக்க,

'கொஞ்சம் பொறுங்கோ அண்ணே வாறன்'

சற்றுத் தள்ளி ஓடியவள் அங்கே கிடந்த ஒரு பெண்ணின் சடலத்தைதப்பிரட்டி எதையோ எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டாள். பின் நெற்றியைத் தொட்டு தன் நெற்றியில் பூசிக் கொண்டாள். ஏதும் புரிபடாமல் நின்றேன்.

'அண்ணை குறை நினைக்காதீங்கோ. தனியப் போனா ஆமிக்காரர் ஏதுஞ்செய்து போடுவாங்கள். சேர்ந்து போனாலும் விசாரிப்பாங்கள்.. அதுதான் அந்தத் தாலியையும் எடுத்து நானே போட்டிட்டு குங்குமப் பொட்டையும் எடுத்து வைச்சுக் கொண்டு வாறன். அவங்கள் கேட்டால் என்னை உங்கட மனிசியெண்டு சொல்லுங்கோ. என்ர பேர்..'

'தெரியும், ஆனந்தி'

'உங்களுக்கு எப்பிடி என்னைத் தெரியும்' என்றவாறே என்னை முதன்முதலாக ஏறிட்டுப் பார்த்தாள்.

'ஓ! ஜேந்தன் நீங்களா?'

தலையைக் குனிந்து கொண்டாள்.

'சித்தி எனக்குக் கால் நோகுது. என்னைத் தூக்குங்கோ' என்றது அருகில் இருந்த பெண் குழந்தைகளில் ஒன்று. அதைத் தூக்கியவாறே 

'நீங்க ரெண்டு பேரும் இனி என்ன சித்தி எண்டு சொல்லக்கூடாது. அம்மா எண்டுதான் கூப்பிட வேணும் சரியா. ஆமிக்காரங்கள் கேட்டா இவர்தான் அப்பா எண்டு சொல்ல வேணும். இல்லையெண்டா ஆமிக்காரங்கள் சித்தியை ஏதும் செய்து போடுவாங்கள் சரியா?'

அந்த இரு குழந்தைகளுமே தலையை ஆட்டின. எனக்கும் ஏதோ புரிந்தது போலிருந்தது. அது எனது பாதுகாப்பிற்கும் தேவையாயிருந்தது.

முட்கம்பி முகாமிலும் நாம் கணவன் மனைவியாகவே அறியப்பட்டாலும் நாங்கள் நாங்களாகவே இருந்தோம் என்பதே உண்மை. ஆனால் அதை இந்த சமூகம் எப்படிப் பார்க்கப்போகின்றது என்பதைப் பற்றிய சிந்தனை அப்போது இருந்திருக்கவில்லை. ஒருமாதிரி விடுவிக்கப்பட அடிச்சுப்பிடிச்சு ஒரு ஏஜென்சிக்காரனைப் பிடிச்சு அங்கை இஞ்சை அலைஞ்சு கனாடாவிற்கு வந்து சேர்ந்து நிம்மதிப்பெருமூச்சும் விட்டபின்தான் மனதிற்குள் குற்றவுணர்ச்சி உறுத்தத் தொடங்கியது.

'எங்கள விட்டிட்டுப் போகாதீங்கப்பா' என்று கெஞ்சிய அந்தவிரு குழந்தைகளையோ 'நீயும் எங்களோடையே இருந்தாக் கொஞ்சமாவது தெம்பாயிருக்கும் மோன. நீயும் இல்லையெண்டா நாங்க என்னத்தைச் செய்யப்போறமோ?' என்று கூறிக்கண்ணீர்விட்ட ஆனந்தியின் அம்மாவையோ. எதுவுமே பேசாமல் முகத்தை மறைத்துக் கொண்டு தனித்திருந்து இரவுகளில் விம்மிய ஆனந்தியையோ என்னால் மறக்க முடியவில்லை. ஆனந்தியை அணைத்து அமைதிப்படுத்தி அவர்களுடன் தங்கிவிடவே மனம் விரும்பினாலும் அப்படிச் செய்வது முகுந்தனுக்குச் செய்யும் மிகப்பெரிய நம்பிக்கைத்துரோகமாக அமைந்து விடலாம் என்பதால் என்மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்

விடுதலையாகி வவுனியா வந்த அன்று முகுந்தனைத் தொலைபேசியில் அழைத்து, 'ஆனந்தி' என்று தொடங்கவே 'கேள்விப்பட்டனான் மச்சான், நான் இப்ப வேலையில நிக்கிறன் பிறகு கதைக்கிறன் என்று தொடர்பைத் துண்டித்தவன் அதன் பிறகு எந்தவொரு அழைப்பிற்கும் பதிலளிக்கவில்லை. அவன் என்னத்தைக் கேள்விப்பட்டானோவென்றும் எனக்குத் தெரியாது.

மீண்டும் கைபேசி அழைக்கவே,

என்ன மச்சான் போனைக் கட்பண்ணீற்ற?' 

சொரூபன் கேட்க, 

'இல்லையடா. கவரேஜ் கொஞ்சம் குறைவாயிருக்கு அதுதான். சொல்லு'

'அவன் முகுந்தன் வைச்சிற்றான்ரா. அவனுக்கு நீ ஆனந்தியைப் பற்றிக் கேட்டது பிடிக்கேல்லை. அவள் எப்பையோ இவனுக்குத் தெரியாம கல்யாணம் கட்டி ரெண்டு பெம்பிளைப் பிள்ளைகளும் இருக்காம். அதோட இப்ப அவள் அங்கை அப்பிடி இப்பிடித்தானாம். நீகூட அதை அவனுக்குச் சொல்லேல்லை எண்டு உன்னோடையும் சரியான கோபம். நான் தான் கல்யாண வீட்டுக்கு உனக்கும் சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்தினனான். வாற சனியை விட்டு அடுத்த சனி அவனுக்கு கல்யாணமடா'

மண்டை விறைக்கத் தொடங்கியது.