நண்பனொருவன் தான் காதலிப்பதாகவும் அதைத் தன் காதலியிடம் கவிதை வடிவில் தெரிவிக்க விரும்புவதாகவும் எப்படி கவிதை எழுதுவதென்றும் கேட்டு நடுநிசியை அண்டும் நேரத்தில் தொ(ல்)லைபேசினான்.
அப்போது நான் இருந்த மனநிலையில், “ஆடான ஆடெல்லாம் தவிடுபுண்ணாக்கெண்டு அலையுதாம். வாத்தியார் வீட்டு நொண்டி ஆடு மட்டும்... இப்ப உனக்கெதுக்கு இந்த காதலும் கத்தரிக்காயும்?” என்றேன்.
நண்பனுக்கு விளங்கிவிட்டது நான் வெறியில் (அட நிஜமாலுமே நித்திரை வெறிங்க) இருப்பது. எனக்கு மின்மடலில் விளக்கமாய் அனுப்பவதாய்க்கூறி அழைப்பினைத் துண்டித்தான்.
பொதுவாகவே காதல் என்றவுடன் இந்தக் கத்தரிக்காயும் அதனுடன் சேர்ந்து விடுகிறதே. அப்படியானால் காதலுக்கும் கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம்?
இது என்ன முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப்போடுவது போன்றதா அல்லது அமவாசைக்கும் அப்தல்காதருக்கமான உறவு போன்றதா?
எனக்குத் தெரிந்த வரையில் பெண்கள் பருவமடைந்ததும் பச்சரிசிச் சோறும், வெள்ளைக் கத்தரிக்காய்ப் பாற்கறியும், நல்லெண்ணெய்யும், உழுத்தங்களியும் அவர்களுக்கான பிரதான உணவாக மாறி விடுகின்றது. அதைவிடுத்து கத்தரிக்காய்க்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?
கத்தரிக்காய் பிராணசக்தியைக் குறைக்கும் என்று சில யோகாவில் சொல்லப்படுகிறது. பாக்கியராஜ்-இன் படத்தில் சொல்லப்படும் சம்பந்தம் அறிவுபூர்வமாக தவறென்று மருத்துவ நண்பன் ஒருவன் கூறினான்.
அப்படியானால் எதற்காக காதலுடன் இந்தக் கத்தரிக்காயைச் சம்பந்தப் படுத்துகிறோம். தெரிந்தவர்கள் கூறலாமே.