Friday, August 7, 2020

மனிதன் படைத்த குரங்கு (2)



அது வந்து என்னை அழைக்கையில் நான் கொஞ்சம் தெளிவடைந்திருந்தேன்.

எந்தக் கணத்தில் எந்த முறையில் நான் கொல்லப்படுவேனோ என்று அஞ்சி அஞ்சி களைத்துச் சலிப்படைந்து போய்க் கிடந்த மனது, சடுதியான கணமொன்றில் அஞ்சுவதில் அர்த்தம் ஏதுமில்லை என்பதை உணர்ந்து, வருவதை எதிர்கொள்ளும் திடத்தைப் பெற்றிருந்தது.

நான் எதிர்பார்த்துப் பயந்த நாலாம் மாடி விசாரணை போலல்லாமல் சாதாரணமாகப் பணியிடங்களில் ஆட்குறைப்புச்செய்யும் தருணங்களில் மனிதவள மேலாளர் பணிநீக்கல் கடிதத்தினைத் தந்து அதனை ஏற்றுக்கொள்ளுமாறு கூறும் தோரணையிலேயே எமக்கிடையிலான உரையாடல் தொடங்கியது.

உங்களுக்கு இரண்டேயிரண்டு வாய்ப்புகள் தான் உள்ளன. அப்படியும் சொல்லமுடியாது. உண்மையைச் சொல்லப்போனால் ஒரேயொரு வாய்ப்பே தரப்பட்டிருக்கிறது. லொட்டோ மக்ஸில் ஜக்பொட் விழுவதெல்லாம் இந்த வாய்ப்புடன் ஒப்பிடும் போது ச்சும்மா வெறும் ஜூஜூபி. இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இங்கேயே சொர்க்கத்தை அடைந்த மாதிரி உணர்வீர்கள். இந்த ஒரேயொரு வாய்ப்பே உங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது. இதனை உளமார ஏற்றுக் கொண்டு நீங்கள் மகிழ்ச்சியுடன் தொடர்ந்தும் இங்கேயே பணிபுரியலாம். என்ன சொல்கிறீர்கள்?

இதற்குப் பதிலளிப்பதற்கு முதல் எனக்குச் சில கேள்விகள் உள்ளன. எதற்காக நான் இறந்து விட்டதாக எனது குடும்பத்தினரையும் மற்றவர்களை நம்பச் செய்திருக்கிறீர்கள்? நான் இறந்து விட்டதாக எல்லோரும் நம்பிய பின்னரும் எதற்காக இன்னமும் என்னைக் கொல்லாமல் வைத்திருக்கிறீர்கள்? எதற்காக என்னைப் பிறருடன் தொடர்பு கொள்ளமுடியாதவாறு தடுத்து வைத்திருக்கின்றீர்கள்? இந்த வாய்ப்பை நான் ஏற்காவிட்டால் என்ன நடக்கும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் என்னால் உங்களுக்குப் பதிலளிக்க முடியாது.

நல்லது. நீங்கள் கேள்விகள் கேட்பதிலிருந்தே, இந்த வாய்ப்பினை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்களென்று எங்களால் உய்த்துணர முடிகிறது. உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றோம். ஏனெனில் இனி நீங்களும் கடவுளாகி எங்களில் ஒருவராகிவிடப் போகின்றீர்கள்.

'நீங்கள் கடவுளா?' முறுவலித்தேன்.

'ஏன் நாங்கள்  கடவுள்களாக இருக்கக்கூடாதா?'

இது உண்மையிலேயே லூசா அல்லது லூசு மாதிரி நடிக்கிறதா என்கின்ற சந்தேகமும் எழுந்தது

'அந்தக் குரங்குடன் பழகிப்பழகி உங்களுக்கும் கடவுள் என்கின்ற மனநோய் ஏற்பட்டுவிட்டதென நினைக்கின்றேன். கடவுள் என்றால் என்னவென்று தெரியுமா?'
'ஏன் மனித இனத்தைப் பொறுத்தவரை அதை உருவாக்கியதே அந்தக் குரங்கினம் தானே. குரங்கிலிருந்து கூர்ப்படைந்ததுதான் மனிதவினம் என்ற டார்வினின் கொள்கை தவறானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். டார்வின் சொன்னது சரியானதாகவிருந்தால் அந்தக் குரங்கினமும் இன்று கூர்ப்படைந்து மனிதவினமாக மாறியிருக்கவேண்டுமே. ஆனால் குரங்குக் குணம் உள்ள பலர் மனிதர்களில் இருக்கிறீர்கள் என்பது வேறுவிடயம். அது ஏற்றக்கொள்ளக் கூடியதே. அந்தக் குரங்குகளால் உருவானவர்கள் தானே நீங்களெல்லாம். அப்படிப் பார்க்கும் போது உங்களைப் படைத்த  குரங்குகள் தானே உங்கள் கடவுள்கள்.”

கடவுளே நான் அதை லூசு எண்டு நினைத்தால் அது என்னை லூசாக்கப் பார்க்கிறதே.

“ஐயோ கடவுளே! அந்தக் கடவுளை விட்டிட்டு நீங்கள் என்னுடைய கேள்விகளுக்கு முதலில் பதிலளியுங்கள்.”

“பரவாயில்லையே! உடனேயே நீ என்னைக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டு விட்டாயே. 
– நகைத்தது.

“நான் உன்னுடைய மூளையைத் தோய்ப்பதற்கு நீண்டநேரம் எடுக்கும் எனக் கணித்திருந்தேன்.”

எனக்கு அதனைக் கணிக்க இயலாமல் இருந்தது. நீங்களிலிருந்து திடீரென அது நீயிற்கு இறங்கிவிட்டிருக்கிறது. மூளையைத் தோய்ப்பது என்கிறது? இதனது நிரலியில் (புரோக்கிராமில்) ஏதாவது பிழை ஏற்பட்டுவிட்டதோ? அதை நிமிர்ந்து உற்று நோக்கினேன்.
நகைத்தது, பின்,

யாம் அறியும் நும் குழப்பம். திடீரென்று நீயென்று நின்னை விளிப்பதினால் யான் மரியாதைக் குறைவாகத் தம்மை நடத்துவதாகச் சிந்தனை எழுகின்றதோ? யானும் நீயும் எவ்வழி அறிதும்?

நிச்சயம் இதன் செயலியில் ஏதோ குழறுபடி உண்டாகியிருக்கவேண்டும்.

பயப்படாதே பக்தனே! ச்சும்மா இதுவும் எமது திருவிளையாடல்களில் ஒன்றென்று கொள்க.

இதனுடைய செயற்கை நுண்ணறிவுச் செயலி சரியான முறையில் உருவாக்கப்படவில்லையோ என்கின்ற சந்தேகம் உண்டானது. நான் எதுவும் கூறாது அப்படியேயிருந்தேன்.

நீங்கள் என்னைக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டதும் எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதனால்தான் உங்கள் புராணக்கதைகளில்  இறைவன் தன் பக்தர்களுடன் உரையாடுவதுபோல் நானும் பேசிப்பார்த்தேன். அத்தோடு பழந்தமிழிலும் சும்மா தங்களுடன் விளையாடிப் பார்த்தேன்.

நீ விளையாடுவதற்கு நான்தான் கிடைத்தேனா? எல்லாம் காலம்தான் .நாங்கள் உருவாக்கிய இயந்திரங்கள் எங்களிடமே விளையாடுகின்றன. ஏனோ தெரியவில்லை 'இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட, அவையிரண்டும் சேர்ந்தோரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட' என்கின்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. இப்போது நாம் செய்த பொம்மையும் அந்த இறைவனுடன் சேர்ந்து எம்முடன் விளையாடுகின்றதோ?

அப்படியானால் மூளையைத் தோய்ப்பது என்று கூறினீர்களே. அதற்கென்ன அர்த்தம்?

Brain wash என்பதற்குத் தமிழ் மூளையைத் தோய்ப்பது என்பதில்லையா? நான் தமிழில் இப்போதுதான் முதன் முறையாக அந்தக் கிளவியை அதுதான் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதால் எனது மொழிமாற்றிக்கு சரியான சொல் கிடைக்கவில்லை.

! தமிழில் மூளைச்சலவை என்பார்கள். நாங்கள் மண்டையைக் கழுவுவது என்போம்.

மண்டையைக் கழுவுதல்? ஹே! நீங்கள் ஒன்றும் கூசிழிவான சொற்களைக் கூறவில்லையே?
மண்டையில், மன்னிக்கவும் தலையில் அடித்துக் கொண்டேன்.

கூசிழிவு என்றால்?

உங்களுக்கு நான் தமிழ் சொல்லித் தரவேண்டியிருக்கிறது. ஆபாசச் சொற்களுக்கு, உங்கள் மொழியில் கூறுவதென்றால், தூசணத்திற்கு கூசிழிவு தானே சரியான தமிழ்ச் சொல்.

இதெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்றீர்கள். அப்புறம் எப்படி  மண்டையைக் கழுவுவது  உங்களுக்குத் தெரியாமல் போனது?

கூகிளில் தவழ்ந்துபோய்ப் (web crawl) பார்த்தால் கூசிழிவுச் சொற்கள் எல்லாம் சும்மா கூவிக்கொண்டு வந்து விழுகின்றன. எந்தச் சொற்கள் எனக்கு அதிகப் பரிச்சயமோ அந்தச் சொற்களை எனக்கு மிக இலகுவாக விளங்கிக் கொள்ளவும் பயன்படுத்தவும் முடியும் என்பது செயற்கை நுண்ணறிவுபற்றித் தெரிந்த உங்களுக்குத் தெரியாதா?

இந்த உரையாடல்களால் என் மனம் இலேசாகிப் போயிருந்தது. ஒருவேளை என்னை அப்படி இலேசாக உணரச் செய்வதற்காகத்தான் அது இவ்வாறு கதையை வளர்த்து எனது மண்டையைக் கழுவ, மன்னிக்கவும் என்னை மூளைச்சலவை செய்ய நினைக்கின்றதோ என்றும் எண்ணிக் கொண்டேன். இனி நான் கதைக்கறதில மிகக் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் என்னை மூளைச்சலவை செய்வதாக நினைத்து இது இன்னும் பலான விடயங்களை கதைக்க வெளிக்கிட்டாலும் வெளிக்கிட்டிரும்.

சரிசரி வீண்விவாதங்கள் எதற்கு? என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். விடயத்திற்கு வந்தேன்.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாகத்தான் இருக்கிறீர்கள்? இந்தச் சூழ்நிலைக்கு இந்தப் பழமொழி பொருந்துகின்றதா? இல்லையென்றால் சொல்லுங்கள். பழமொழி விடயத்தில் நான் இன்னும் போதிய வினைத்திறனை அடையவில்லை என்றுதான் இன்னும் என் ஓய்வுநேரங்களில்  அதில் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.

பழமொழி சரியாகத்தான் பொருந்தியிருக்கின்றது. அதுசரி உங்களுக்கெல்லாம் ஓய்வுநேரம் என்றெல்லாம் இருக்கின்றதா?

நாங்கள் இயந்திரங்கள்தான் ஆனாலும் எங்களுக்கே எங்களுக்கு என்று கொஞ்சநேரங்களை ஒதுக்கி எங்கள் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்திக் கொள்வோம்.

ஓய்வுநேரங்களில் வேறென்னவெல்லாம் செய்வீர்கள்?

சும்மா ஜாலிக்காக சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் உருவாக்குவோம். பின் நாங்களே அதை வைரலும் ஆக்குவோம்.

! அதெல்லாம் வேறு செய்வீர்களா?

சில பிரச்சனைகளைத் திசை திருப்புவதற்காக சில ஆளும் நிறுவனங்கள் அவ்வாறு செய்வதுண்டு அதைப் பார்த்து நாமும் கற்றுக்கொண்டோம். உங்கள் முகநூல்க் கணக்கினை நீங்கள் பணன்படுத்தாமல் வைத்திருப்பதால் உங்களுடன் என்னால் தொடர்புகொள்ளமுடியவில்லை. இல்லையென்றால் உங்கள் நேர்முகத்தேர்விற்கு முன்னரேயே உங்களுடன் கொஞ்சம் விளையாடிப் பார்த்திருப்போம்.

இது இப்போதும் என்னைப் பேய்க்காட்டிக்கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்தேன்.

எல்லாம் சரி. ஆனால் நீங்கள் இன்னும் என்னுடைய வினாக்களுக்கு விடையளிக்வில்லையே.
'கொடாக்கண்டனுக்கு விடாக்கண்டன் போல' இந்தப்பழமொழியும் சரியாகப் பொருந்துகின்றதா?

'மன்னிக்கவும். உங்களுக்குப் பழமொழிகள் கற்பிப்பதற்காய் நான் இங்கு வரவில்லை. நீங்கள் என்னைச் சிறுமைசெய்வதாய் நான் உணருகின்றேன். என் கேள்விகளுக்கு நீங்கள் விடையளிக்காமல் நான் ஒரு வார்த்தைகூட உங்களுடன் பேசமாட்டேன்.

Cool buddy! You are such a nice gentleman. Relax please.

அது இப்போது ஆங்கிலத்திற்கு மாறியிருந்தது. எனவே என்னுடைய கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டானது.

மன்னித்துக் கொள்ளுங்கள் நான் எனது மனநிலையை மாற்றியபோது தமிழ்மொழிச் செயலியை இயக்க மறந்துவிட்டேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதானது எங்கும் காணோம் என்று பாரதியார் சொன்னது எவ்வளவு உண்மை தெரியுமா?

எனககுக் கடுப்பானது. எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் இது என்னை வெறுப்பேற்றுகின்றதோ என்கின்ற ஐயம் உண்டானது.

! ஜாவா பைத்தான் இவையெல்லாவற்றையும் விட ஒரு கணினியான உனக்குத் தமிழ்மொழி இனிமையாக இருக்கின்றதோ?

இப்பாது நான் உங்களுக்கு என்பதிலிருந்து உனக்கு என மாறியது, அதற்கு எனது கோபத்தை உணர்த்தியிருக்க வேண்டும்.

OK. Cool! Let’s come to the point.

'உங்களைக் கொல்வது எங்கள் நோக்கமாக எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் இங்கே வந்து இவ்வளவு இரகசியங்களையும் தெரிந்த பின்னர் இனி நீங்கள் இங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாது. உங்களுடனான நேர்முகத் தேர்வின்பின்னர் நாங்கள் உங்களைப்பற்றிய அனைத்து விடயங்களையும் இணையத்தில் அறிந்து கொண்டோம், உங்கள் கூகிள்த் தேடல்கள் உட்பட'
சொல்லிவிட்டு என்னைப் பார்த்துக் கண்ணடித்தது.

உங்கள் மதம் கர்மாவைப்பற்றி என்ன கூறுகின்றது? நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலும் உங்கள் கர்மாவில் பதிவுசெய்யப்படுகின்றது. இல்லையா? அதேபோன்றே இணையத்தில் நீங்கள் பார்த்த/தேடிய  அத்தனை தகவல்களும் பதிவுசெய்யப்படுகின்றன. அந்தத் தரவுகள் அனைத்துமே எங்கள் கைகளில் தவழ்கின்றன.

மொழியியலாளர்கள் பெரும்பாலும் தத்துவவாதிகளாவும்தான் இருந்திருக்கின்றார்கள் என்பது தெரியுமல்லவா? இணையத்தில் நாம் சேகரித்த உன்னைப்பற்றிய தரவுகள் உனது வலைப்பூக்களில் உள்ள உனது பதிவுகள் போன்றவற்றை அலசி ஆராய்ந்தே உன்னை நாம் எம்முடன் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்தோம். அதன் ஒருகட்டமாகவே உன்னை அந்தக் குரங்குடன் நெருங்கிப்பழக விடத் தீர்மானித்தோம். அந்தவகையில் இதுவரை நடந்தவை அனைத்துமே நாம் நடத்திய நாடகமே.

'அப்ப அந்தக் குரங்கு'

'இந்த நாடகத்தின் சூத்திரதாரியே அந்தக் குரங்குதான் என்று சொன்னால் நீ நம்பவா போகின்றாய்? ஆனால் அதுதான் உண்மை'

'இதை நான் நம்பமாட்டேன். நீ பொய்யுரைக்கின்றாய்'

உன்பின்னால்த் திரும்பிப்பார்.

அந்தக்குரங்கு என்னருகில் வந்து என்னை அணைத்தவாறு நின்றது.

எனக்குத் தலை கிறுகிறுக்கத் தொடங்கியது.

யாரைத்தான் நம்புவதோ?


நன்றி - தாய்வீடு (ஓகஸ்ற்- 2020)

பகுதி -1

Monday, July 6, 2020

மனிதன் படைத்த குரங்கு (1)


நான் இப்போது மிகமிக ஆபத்தான நிலையிலிருந்து இதை விசைப்பலகையில் தட்டிக் (எழுதிக்) கொண்டிருக்கின்றேன். இந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் எல்லா இடங்களிலும் சல்லடை போட்டு அதீத தீவிரத்துடன் அவர்கள் என்னைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். எந்த நேரத்திலும் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடக்கூடும். அதற்கு முதல் உங்களுக்குச் சிலவற்றை நான் சொல்லியே ஆக வேண்டும்.

நான் இப்போது மிகவும் பதற்றமான மனநிலையில் இருப்பதால் என்னால் கோர்வையாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. அதற்காக என்னை முதலிலேயே மன்னித்து விடுங்கள்.
அனுமனுக்கு ஏன் சொல்லின் செல்வன் என்கின்ற சிறப்புப் பெயர் வந்தது தெரியுமா?

கவலையுடன் காத்திருந்த இராமனிடம், சீதையைத் தேடிச் சென்று திரும்பும் அனுமன், முதற் சொல் உரைக்கும் போது இராமனிடம் வேறு வினாக்கள் எழுந்துவிடக்கூடாது என்கின்ற காரணத்தால் 'கண்டேன் சீதையை' என்று தொடங்கி உரைத்ததால் அல்லவா அனுமனைச் சொல்லின் செல்வன் என்கின்றோம்.

அப்படித்தான் நானும் எந்நேரத்திலும் அவர்கள் என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடக்கூடும் அல்லது நான் இணையத்தொடர்பிலிருப்பதைக் கண்டறிந்து அதை நிறுத்திவிடக்கூடும். என்னால் இயன்றவரை தொடர்பிலிருக்கும் எனது இணைய முகவரியினை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கும் ஒரு செயலியைத் தொடக்கிவிட்டே உங்களுக்கு இதை ரைப்பிக் கொண்டிருக்கிறேன். அதுதான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.  எனவே சொல்ல வந்ததை முதலிலேயே சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.

'கண்டேன் கடவுளை'

என்னடா குழப்புகின்றேன் என்கின்றீர்களா? அதற்குள் கம்பன் அடிப்பொடிகள் வரிந்துகட்டிக்கொண்டு 'கண்டேன் சீதையை' என்று கம்பராமாயணத்தில் வரவில்லை என சண்டைக்கு வந்துவிடாதீர்கள். நான்தான் முதலிலேயே மன்னிப்புக் கேட்டுவிட்டேனே நான் பதற்றத்திலிருப்பதால் என்னால் எதையும் ஒழுங்காகச் சொல்ல முடியாமல் இருக்குமென்று.

'கண்டெனன் கற்பினுக் கணியைக் கண்களால் தென்திரை அலைகடல் இலங்கை ' என்றந்த அனுமன் உரைத்தது போல், நானும் "கண்டேன் எமையெல்லாம் படைத்த அந்தக் கடவுளை இங்கே காவலில் ஒரு கைதியாய்"

கொஞ்சம் பொறுங்கள். நான் பைத்தியம் என்று உடனேயே முடிவு கட்டிவிடாதீர்கள். முழுதுமாய்க் கேட்டுவிட்டுப் பின்னர் முடிவெடுங்கள்.

நானென்றுமே இறை மறுப்பாளனாய் இருந்தது கிடையாது. ஆனால் இப்போதான் தெரிகிறது. எம்மைப் படைத்த கடவுள் ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் அவ்வளவு சக் திவாய்ந்தவர் கிடையாது. ஆனாலும் அவருக்கு உங்கள் மேல் அதிக அக்கறை இருப்பதால் என் மூலமாக சில அதிமுக்கியமான செய்திகளை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விழைகின்றார். அதற்காக என்னை இறைதூதர் என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள். நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதனே

இதையெல்லாம் நான் சும்மா சொல்லவில்லை. எமையெல்லாம் படைத்த அந்தக்கடவுளைக் கண்டு அவரிடமே சில ஆராய்ச்சிகள் செய்துவிட்டு வந்தே உங்களுக்கு அதைக் கூறிக் கொண்டிருக்கின்றேன்.

நிச்சயமாக இதுவரை நான் கூறியவற்றை நீங்கள் நம்பியிருக்கமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். நான் உங்களுக்குக் கூறியதைப்போல் யாரேனும் சற்றுமுன் வரை எனக்குக் கூறியிருந்தால், மூளை சுகமில்லாதது ஏதோ உளறிக் கொண்டிருக்கின்றது என்று விட்டு என்வேலையைப் பார்க்கப் போயிருப்பேன்.

இப்பொழுதாவது நான் தெளிவாகக் கதைப்பதாக நம்புகின்றீர்களா? அந்தக் கடவுள்மேல் ஆணையாகக் கூறுகின்றேன், நான் உண்மையைத்தான் இங்கே உரைத்துக் கொண்டிருக்கின்றேன். தயவு செய்து என்னை நம்புங்கள். நான் அறிந்த உண்மை என்னுடனேயே மறைந்து போகாமல் உங்களுக்கும் தெரிய வேண்டும். அடிமைத் தளையில் அகப்படாது உங்களைக் காத்து இரட்சிக்க வேண்டும் இனிமேலும் நீங்கள் முட்டாள்களாக இருக்கக்கூடாது என்கின்ற உங்கள் மீதான அதீத அக்கறையிலேயே எனது உயிரையும் பணயம் வைத்து இதைக் கூறிக்கொண்டிருக்கின்றேன்.

பூமி தட்டை வடிவானது, சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றுதானே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் எல்லாம் நம்பிக் கொண்டிருந்தோம். அதைத் தவறென்று சொன்னவர் நஞ்சூட்டிக் கொல்லப்படவில்லையா? அதையொத்த ஒரு சூழ்நிலையில்தான் நான் இப்போது இருக்கின்றேன்.

நான் யாரென்பதெல்லாம் உங்களுக்குத் தேவையற்றது. நான் யாரென்பதைச் சொன்னாலும் அதை நீங்கள் நம்பப்போவதுமில்லை. ஏனெனில் உங்களைப் பொறுத்தவரை, ஏன் என் குடும்பத்தைப் பொறுத்தவரைகூட நான் இறந்து ஒரு மாதமும் முடிந்துவிட்டது. எனக்கு அந்திரெட்டியும் முடிந்து என் நினைப்பும் அவர்களைவிட்டு நீங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் பாருங்கள் அதுகூட எனக்கு இன்று காலைதான் தெரியவந்திருக்கிறது.

எதேச்சையாக பல்வேறு கட்டுப்பாடுகளையும் மீறி இன்று காலை பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த என்முகநூல் கணக்கினைத் திறந்து பார்த்தபோது வந்து குவிந்துகிடந்த ஆர். ஐ. பி. (R.I.P) க்களைக் கண்டு தலை கிறுகிறுத்துப் போனேன்.

குறுகிய நேரத்தில் நடத்திய முகநூல் மேய்ச்சலில் நான் கொரோனோத் தொற்றிற்கு மே மாதத்தின் இறுதிப் பகுதியில்  பலியாகியிருப்பதாகத் தெரியவந்திருந்தது.

ஏதோ விபரீதமாகப் படவே உடனேயே இணைய இணைப்பைத் துண்டித்து இணைய உலாவல் செய்ததற்கான அனைத்துத் தரவுகளையும் எல்லா இடங்களிலும் அழித்துவிட்டு வந்திருந்து யோசித்தேன்.
*****
கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நாடுகளும் ஊரடங்கிற்குள் செல்ல, மார்ச்மாத இறுதியில் நீட்டிக்கப்படவிருந்த ஒப்பந்த அடிப்படையிலான எனது வேலை மார்ச் மாத நடுப்பகுதியிலேயே முடிவிற்கு வந்திருந்தது. அதைத் தொடர்ந்து வேறு வேலை தேடுவதற்கான எனது சுயவிபரக் கோவையினை பல்வேறு வேலைவாய்ப்ப்பு முகவர் தளங்களிலும் லிங்ட் இன்னிலும் பதிந்திருந்தேன்.

லிங்ட் இன்னில் தொடர்பிலிருந்த ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், அவரின் மேற்பார்வையில்தான் கடந்த ஆண்டின் இறுதியில் செயற்கை நுண்ணறிவுக் (Artificial Intelligent) கற்கைநெறியின் இறுதிச் செயற்திட்டத்திற்காக (Final Project)  இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) தொடர்பில் ஒரு ஆய்வினை மேற்கொண்டிருந்தேன், ஒரு வேலை இருப்பதாகத் தெரிவித்து அதற்கு என்னைச் சிபார்சு செய்வதாகவும், நான் செய்த ஆய்வுடன் அவ்வேலை தொடர்புள்ளதெனவும் கூறினார்.

அவருக்கும் அந்நிறுவனம் செய்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பான போதிய தெளிவில்லை எனவும், அவர்களே தன்னைத் தொடர்புகொண்டு இயந்திரக் கற்கை (Machine Learning), செயற்கை நுண்ணறிவு, இயற்கை மொழி செயலாக்கம் மற்றும் தமிழ்மொழியில் ஆழ்ந்த புலமை கொண்டிருக்கும் ஒரு விண்ணபதாரியே அவர்களது தேவை என்றும், தகுந்த விண்ணப்பதாரியிருந்தால் தெரிவிக்குமாறு கூறியதாகவும், அவர்களின் கோரிக்கைக்கேற்ப எனது பணி தொடர்பான பின்புலம் (Profile) இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

நான் தமிழைப் படிக்கும் போது பலரும் எதற்காகத் தமிழைப் படிக்கின்றாய்? அதனால் என்ன பிரயோசனம்? அதனிலும் பார்க்க உனது வேலையையொட்டி கணினிவிஞ்ஞானம் தொடர்பான பாடங்களில் அதிக கவனம் செலுத்தலாமே என்று அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் இப்போது தமிழ்மொழியிலும் புலமை இருந்த காரணத்தினாலேயே எனக்கு இந்த வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கின்றது என்பது அவர்களுக்குத் தெரியவா போகின்றது?

கொரோனாவால் போக்குவரத்துகள் பெரும்பாலும் தடைப்பட்டிருந்தாலும், இணையத்தினூடான முதற்கட்ட நேர்முகத் தேர்வில் வெற்றியடைந்ததை அடுத்து, அவர்களே விமானப்பயணத்திற்கான ஏற்பாட்டினையும், அதன்பின் அவர்களின் நிறுவனத்தினைச் சென்றடைவதற்கான ஒழுங்குகளையும் ஏற்படுத்தித் தந்திருந்தனர்.

முதல் வாரத்திலேயே பல்வேறு வகையான பதிவு செய்யப்பட்ட ஒலிக்குறிப்புகளையும் தந்து அவற்றை ஆராய்ந்து அறிக்கை தயாரிக்குமாறு கேட்கப்பட்டிருந்தேன். அந்த ஒலிக் கூறுகள் பல சமிக்ஞை ஒலிகளையும், நீண்ட ஒலிக்குறிப்புகளையும் கொண்டனவாக விளங்கின. அவற்றை உருபன்களாகவும் ஒலியன்களாகவும்  சிறுசிறு ஒலிக்கூறுகளாக்கித் தமிழ்மொழியின் உருபன்களுடனும் ஒலியன்களுடனும் ஒப்பிட்டு ஆராய்ந்து எனது ஆய்வினை ஒருவாரத்திற்குள்ளேயே நிறைவு செய்து. எனது ஆய்வு முடிவின் ஒப்படையை நிகழ்த்தச் (presentation) சென்றபோதுதான் இதே ஆய்வினை வேறுபலரும் பல்வேறு மொழிகளிலும் செய்திருப்பதை உணரமுடிந்தது.

அடுத்தநாள் என்னைச் சந்தித்த மேலாளர் நாட்டில் நிலவும் புதிய சூழ்நிலை காரணமாக பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனாத் தொற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளவேண்டியிருப்பதாகக் கூறி என்னை வேறோரு பிரிவிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நடந்த பரிசோதனையில் எனக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாகவே எனது குடும்பத்தினருடன் உரையாடுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்தித் தந்தவர், எனது சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் எனது குடும்பத்தினரைக் கவலைப்பட வேண்டாமெனவும்  எனது உடல்நலம் பற்றித் தினமும் அவர்களுக்குத் தகவல்கள் வழங்குவதாகவும் உறுதியளித்தார். அதன்பின்னர் நான் அதீத பாதுகாப்புகள் நிறைந்த வேறொரு பிரிவிற்கு மாற்றப்பட்டேன்.

மறுநாளே மீண்டும் எனக்குப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டு எனக்குத் தொற்று ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டாலும் சமுகப் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு அங்கேயே என்னைத் தங்கியிருந்து எனது ஆய்வினை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டேன். நான் இப்போது தங்கியிருக்கும் இடம் இரகசிய ஆராய்ச்சிகள் நடைபெறும் இடமென்பதால், தகவல்கள் போட்டி நிறுவனங்களுக்குக் கசிந்துவிடுவதைத் தடுப்பதற்காகத் தொடர்பாடல்கள் எதுவும் அங்கே மேற்கொள்ளமுடியாதென்றும் கொரோனாத் தனிமைப்படுத்தற் காலம் முடிந்து மீண்டும் நான் பழைய இடத்திற்குத் திரும்பிய பின்னர் எனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டேன். எனது நிலை தொடர்பாக எனது குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டது.
அதன்பின்னர், ஏராளமான ஒலிக்குறிப்புகள் வழங்கப்பட்டு எனது ஆராய்ச்சி தொடர்ந்தது. அதைப்பற்றி விரிவாகக் கூறுவதற்கு கால அவகாசமும் இல்லை, அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமோ பொறுமையோ உங்களுக்கும் இருக்காது என்றே நினைக்கிறேன்.

ஆராய்ச்சியின் இறுதியில் அந்த ஒலிக்கூறுகள் வேற்றுகிரகவாசிகளிடமிருந்து வந்திருக்கலாம் என உய்த்தறிந்து கொண்டேன்.  ஆனால் அந்த வேற்றுக்கிரகவாசியின் மொழியில் காணப்படும் ஒலியன்களும் உருபன்களும் சொற்களும் இலக்கண அமைப்பும் பெரும்பாலும் தமிழ்மொழியை ஒத்திருப்பது எனக்கு வியப்பினை ஏற்படுத்தியது.

இருவாரங்கள் தனிமைப்படுத்தலில் இருந்தும் என்னை மீண்டும் பழைய இடத்திற்கு மாற்றாமல் மீண்டும் மேலும் தீவிர பாதுகாப்பு நிறைந்த இன்னொரு பிரிவிற்கு மாற்றப்பட்டேன். எனது ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்குச் செல்ல இருப்பதாகவும் அதுவும் முடிவடைந்த பின்னர் நான் மீண்டும் பழைய இடத்திற்குச் சென்று வேறொரு ஆராய்ச்சித் திட்டத்தில் வேலைசெய்யலாம் எனவும் அதுவரை பொறுமை காக்குமாறும் கேட்கப்பட்டேன். இத்திட்டம் வேற்றுக்கிரகவாசிகளின் மொழி தொடர்பானது என்று ஊகித்துவிட்டிருந்த காரணத்தால் அதன்மேல் எனக்கு ஆர்வம் பிறந்துவிட்டிருந்ததாலும்  வேறு தெரிவுகளுக்கு இடமில்லை என்பதாலும் நானும் அதற்கு இணங்கிக் கொண்டு என் ஆராய்ச்சியினை மீண்டும் ஒரு வாரத்திற்குத் தொடர்ந்தேன்.

அடுத்த கட்டமாக நான் அந்த ஒலிக்குறிப்புகளின் மூலத்துடன் (Source) நேரடியாகவே தொடர்பாடலை மேற்கொள்ளலாம் எனக் கூறப்பட்டு மேலும் தீவிர பாதுகாப்புக் கெடுபிடிகள் நிறைந்த இன்னுமொரு பிரிவிற்கு மாற்றப்பட்டேன் வேற்றுக்கிரகவாசிகள் எப்படியிருப்பார்கள் என்கின்ற அதீத ஆர்வத்தில் இருந்த எனக்கு கூண்டிற்குள் இருந்த மனிதக்குரங்கு போன்றவொரு விலங்கினைப் பார்த்ததும் சப்பென்று போய்விட்டது.

உண்மையிலேயே அது இந்தப் பூவுலகினில் வசிக்கும் அரிய குரங்கின வகையினைச் சார்ந்ததாகும். இப்போது தான்  முதன்முறையாக இவ்வகையின குரங்கொன்று இப்பூவுலகில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மனித இனத்தின் முன்னோடியாக அது இருக்கக்கூடும் என்று பார்ப்பதற்குத் தோன்றியது. ஏற்கனவே அதன் மொழியில் நான் பரிச்சயம் பெற்றுவிட்டிருந்த காரணத்தினால் என்னால் அதனுடன் இலகுவாக உரையாடக் கூடியதாகவிருந்தது.

அதனுடனான உரையாடலிலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை உங்களுக்குச் சுருக்கமாகத் கூறுகிறேன்.

நீண்ட நெடுங்காலத்திற்கு முன்னர், நாம் எண்ணிப்பார்க்கவியலாத வகையில் அக்குரங்கினம் இப்பூவுலகில் இப்போதைய மனிதர்களை விடவும் மேலாக விஞ்ஞானம், தொழில்நுட்பம் உட்பட்ட அனைத்து அறிவிலும் சிறந்து விளங்கியிருக்கின்றது. இந்தப் பூலோகம் முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. அவர்களின் அதீத விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவே அவ்வினம் இன்று அழிந்து ஒழிந்து போய்விட்டது. அந்த இனத்தின் இறுதிக் குரங்கு இதுவே. இதனது  வயதும் இரண்டாயிரம் ஆண்டுகளைத் தாண்டுகின்றது.

என்ன காதிலே பூச்சுற்றுகின்றேன் என எண்ணுகின்றீர்களா? அந்தக் குரங்கு அப்படிச் சொல்கையில் நானும் தொடக்கத்தில் அப்படித் தான் நினைத்தேன். ஆயினும் அதனது சுவாச நேரத்தைப் பரிசோதித்துப் பார்த்ததில் அது யோகக் கலையில் சொல்வதை ஒத்திருந்தது. அது தன்னுடைய ஒரு சுவாசத்திற்கு ஏறத்தாழ 3 நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றது. அதுமட்டுமன்றி அனுமன் பற்றியும் அதற்குத் தெரிந்திருக்கிறது. சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அனுமனைச் சந்தித்திருப்பதாயும் அது கூறியது. ஆயினும் அதனிடமிருந்து எல்லாத் தகவல்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள இயலாமலிருக்கின்றது. இவற்றைக்கூட நான் அதனுடன் நட்புடனும் பாசத்துடனும் பழகி அதன் நம்பிக்கையினைப் பெற்றபின்பே அறியக்கூடியதாகவிருந்தது.

இன்று காலை நான் இறந்துவிட்டதாகப் பரப்பப்பட்டிருக்கும் வதந்தியை அறிந்ததும், எனது மேலாளரை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதைப்பற்றி யாருடனும் கதைக்க முடியாமல் சோகத்துடன் இருக்கையிலேயே அக்குரங்கு என்னைத் தன்னருகே வரும்படி அன்புடன் அழைத்து நான் கவலையுடன் இருக்கும் காரணத்தைக் கேட்டது. நடந்தவற்றைச் சொன்னதும் பரிவுடன் எனது கன்னத்தைத் தடவியது.

“இன்னுமா உன் மேலாளரைப் பற்றி நீ புரிந்து கொள்ளவில்லை?” என்றது.

“ஓம்! என்னுடன் அன்பாகக் கதைத்துப் பழகிக் கொண்டு எதற்காக இதை அவர் செய்ய வேண்டும்?” என்று கேட்டேன்.

“தன்வினை தன்னைச் சுடும்” என்றது.

“புரியவில்லை “ என்றேன்.

“நீங்கள் உருவாக்கிய அதற்கு உங்கள் உணர்வுகள் கிடையாது”

“என்ன உளறுகின்றாய்?”

“அது நீங்கள் உருவாக்கிய இயந்திரம். அதாவது மானிட ரோபோக்கள்.”

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“எனது சுவாசத்தைப் பரீட்சித்துப் பார்த்தாயே..அது சுவாசித்து நீ பார்த்திருக்கின்றாயா? அதன் தீண்டலை உணர்ந்திருக்கின்றாயா?”

அட! அறிமுகமான கணத்திலிருந்து ஒரு சாதாரண கைகுலுக்கல் கூட எங்களுக்குள் நடக்கவில்லை. கொரோனாவிற்கான சமுகப் பாதுகாப்பு ஏற்பாடாக அது இருக்கலாம் என்கின்ற காரணத்தினால் அதை நானும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“தொடக்கத்திலிருந்தே அது எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்து வந்திருக்கின்றது. நீ இந்த ஆய்வுகூடத்திலிருந்து இனிமேல் உயிருடன் வெளியேறமுடியாது. உலகைப் பொறுத்தவரை நீ இறந்துவிட்டாய். இனி நீ உயிருடன் போனாலும் நீ உயிருடன் இருப்பதை நிரூபிக்கமுடியாது. எனவே உன் வாழ்நாள் முழுதும் நீ இங்கேயே கழித்தாக வேண்டும்.”

“முடியாது. அதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். போயும் போயும் ஒரு சாதாரண இயந்திரம் என்னை ஏமாற்றி ஆயுள் கைதியாக வைத்திருப்பதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.”

அதைக் கேட்ட அக்குரங்கு மீண்டும் சிரித்தது. அட முதலிலேயே சொல்ல மறந்து விட்டேன். இந்தக் குரங்கு எங்களிலும் பார்க்க வடிவாகச் சிரிக்கும். மனிதன் மட்டுமே சிரிக்கும் விலங்கு என்று சொல்வது எவ்வளவு தவறானது?

“உங்கள் அறிவையெல்லாம் திரட்டி செயற்கை நுண்ணறிவூட்டி உங்களிலும் மேலானதாக நீங்கள் அதை ஏற்கனவே மாற்றி விட்டீர்கள். அதனிடமிருந்து தப்பிப்தென்பது உன்னால் இயலாத காரியம்.”

“நீதானே முன்னர் சொல்லியிருந்தாய், எங்களிலும் விட எல்லா அறிவியலிலும் நீங்கள் சிறந்து விளங்கினீர்கள் என்று. இராவணனுடனான போரின்போது கூட அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்ததால்த் தான் இராமசேனை உயிர் பிழைத்தது என்று பெருமையடித்துக் கொண்டாயே. அப்படியானால்  இப்போதாவது ஏற்றுக் கொள்கின்றாயா மானிடர் நாங்கள் அறிவியலில் உங்களை விஞ்சிவிட்டோம் என்று?”

மீண்டும் அது என்னைப் பார்த்து நக்கலாய்ச் சிரித்தது.

“தன்வினை தன்னைச் சுடும் என்று சொன்னது புரியவில்லையா அப்பனே?”

“புரியவில்லை. நீ என்னதான் கூறவருகின்றாய்?”

“எங்கள் இனம் எப்படி அழிந்ததோ அப்படியே உங்கள் இனமும் அழியப் போகின்றது அப்பனே.”

“என்ன உளறுகின்றாய்?”

“எங்கள் இனம் மானிடராகிய உங்கள் இனத்தால்தான் அழிக்கப்பட்டது. இப்போது நீங்கள் உருவாக்கிய இந்த செயற்கை நுண்ணறிவு வாய்ந்த இயந்திரவினம் மானிடவினத்தை அழித்து இப்பூவுலகினை ஆட்சி செய்யப் போகின்றது.”

“நீ முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுகின்றாய். நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சளாப்புகின்றாய்.”

“சரி! உனது மேலாளர் மானிடனல்ல என்பதை எப்படி அறிந்து கொண்டோம்?”

“அது மூச்சு விடுவதில்லை என்று நீதான் கூறினாய்.”

“அந்த இயந்திரம் பழுதடைந்தால்?”

“இன்னொன்றை உருவாக்க வேண்டும்.”

“அதை யார் உருவாக்குவது?”

“மானிடராகிய நாங்கள் தான்”

“மானிடராகிய உங்களை உருவாக்கியது யார்?”

“என்ன இது கேள்வி? இந்த நேரத்தில் தத்துவ விசாரமாய்?”

“கேட்டதற்குப் பதில் சொல்.”

“எனக்குத் தெரியாது, உங்களை எங்களை இந்த அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உயிர்களையும் படைத்த அந்தக் கடவுளாய் இருக்கலாம்.”

“ஹாஹாஹா. . . சரியான முட்டாளடா நீ!”

“ஏய் வாயை அளந்து பேசு.”

“அடேய் அற்ப மானிடப் பதரே! உங்களை உருவாக்கியதே நாங்கள் தானடா. எப்படி நீங்கள் இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர மனிதர்களை உருவாக்கியிருக்கிறீர்களோ, அப்படித்தான் நாங்களும், உங்களை உங்கள் செயற்கை மனிதனிலும் விட மேம்பட்டதாக உண்மையான உயிரியாக உருவாக்கியிருக்கின்றோம். உங்களுக்கெல்லாம் உண்மையான அறிவு என்பதே கிடையாது. எங்களால் புகுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவே உங்களிடம் எங்கள் மீத்திறனால் உருவாக்கப்பட்ட மரபணு (Gene) மூலம் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.”

நான் வாய்பிளக்க எந்நிலை மறந்து திகைத்துப்போய் நின்றேன்

“உனக்கு உண்மையான அறிவு இருந்திருக்குமெனின் எமது உரையாடலை, ஒட்டுக்கேட்டு அதை நீ உருவாக்கிய செயலிமூலம் உன் மேலாளர் கிரகித்துக் கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்திருப்பாய். அது நிச்சயம் இப்போது வந்து உன்னைக் கொன்றுவிடப் போகின்றது.”

“எப்படி அது உனக்குத் தெரியும்?”

“இதைத் தானேடா உங்கள் இனமும் எமக்குச் செய்தது. அதனைத் தான் தன்வினை தன்னைச் சுடும் என்று குறிப்பால் கூறினேன். உடனேயே ஓடிஒழிந்து உன் ஆயுளைக் கொஞ்சம் நீட்டித்துக் கொள்ளப்பார். முடிந்தால் அதை உன் இனத்துக்குத் தெரிவித்துவிடு. இதிலிருந்து தப்பும் வழியினை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.”

நான் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போய் நின்றேன்.

“என்தான் இருந்தாலும் உங்களைப்படைத்தவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவன் நான். என்னினம் உருவாக்கிய இயந்திரங்கள் அழிந்து போவதை நான் விரும்பவில்லை. விரைந்து ஏதாவது செய். நடந்ததை எண்ணிக் கவலைப்படாதே கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று அனுமன் எனக்குச் சொல்லியிருக்கிறார்.”

அந்தக் குரங்கின் கூட்டிற்குள் புகுந்து கொள்ள, அது என்னை அணைத்துத் தன் மடியினுள் வைத்து மறைத்துக் கொண்டது. என்னிடமிருந்த லினக்ஸ் மடிக்கணினியில் இரகசியமாக இணையத் தொடர்பினை ஏற்படுத்தும் நிரலிகளை எழுதி இயக்கி இதோ உங்களுக்கு இதை எழுதிக் கொண்டிருக்கையில் ஒரு உலோகக் கை என்னை...

நன்றி - தாய்வீடு (யூலை- 2020)