Friday, October 23, 2009

தொல்லைபேசிகளாகும் தொலைபேசிகள்!

மலேசிய வானொலியாகிய மின்னல் F.M. இன் நேற்றைய கண்ணாடித்துண்டுகள் என்னும் பெயரிலான சமூகப்பிரச்சினைகளை அலசி ஆராயும் நிகழ்ச்சியினை செவிமடுத்த போதினில் நெஞ்சு பகீரென்றது. வரும் குறுந்தகவல்கள் (SMS) மற்றும் அறியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புக்கள் எத்தனை தூரத்திற்கு இளையவர்களுக்கு, அதிலும் குறிப்பாக பள்ளிப்பருவப் பெண்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்துகின்றது என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பகிர்ந்து கொண்ட போது நெஞ்சடைத்துப் போனது.

பொதுவாக முன்பின் தெரிந்திராத நபர்களிடமிருந்து வரும் குறுந்தகவல்கள், அதை அனுப்பியவர் யாராயிருக்கும் என்கின்ற ஆவலைத் தூண்டிவிடும். அதிலும் குறிப்பாக இளையவர்கள் அதனை ஒரு புதிர் போல எண்ணி அதை விடுவிக்கும் முயற்சியில் இறங்கி விடுகிறார்கள். எனவே அவர்களும் பதில் அனுப்ப, அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வலைக்குள் அவர்கள் விழுந்து விடுகிறார்கள். குறுந்தகவல்களினூடாக ஏற்படும் உறவுகளுக்குள் சிக்கியவர்களில் இளம்பெண்களே கூடுதலான பாதிப்பினை அனுபவிக்கிறார்கள். நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவி கூறியவாறு சிலவேளைகளில் அதன் பாதிப்பு அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடுகிறது. அல்லது அவர்களை ஒருவகை மனநோய்க்குள் தள்ளி விடுகிறது. தமக்கு ஏற்பட்ட பாதிப்பினை பெற்றோர்களிடம் கூடச் சொல்வதற்கான அவர்களின் தயக்கத்தால் அவர்கள் மனநோயாளிகளாக மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.

அந்த நிகழ்ச்சியில் கல்நது கொண்ட கல்வியியலாளர்கள் கூறியது போல் சிறுவர்களுக்கு கைத்தொலைபேசி தேவைதானா என்கின்ற கேள்வி நியாயமானதாகவே எனக்கும் பட்டது. கைத்தொலைபேசியால் சிறுவர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்களை விட பிரதிகூலங்களே அதிகம். அதிலும் இப்போது video-camera உட்பட இணையத் தொடர்பு வசதிகளும் கைத்தொலைபேசியில் கிடைக்கப்பெறுவதால் பதின்ம வயதினரின் முக்கிய கவனக்கலைப்பானாக இந்தக் கைத்தொலைபேசிகள் மாறி விடுகின்றன. பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிடப் பெற்றோர்களாலும் முடியாதிருப்பதால் பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறியாது தங்கள் பிள்ளைகள் அப்பாவிகள் என்றே பெரும்பாலான பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கைத்தொலைபேசிகளால் ஏற்படும் தொல்லைகள் பதின்மப் பருவத்தினரை மட்டும் தான் பாதிக்கின்றன என்று சொல்வதற்கில்லை. ஆயினும் பாதிக்கப்பட்டவர்களில் பெருமளவிலானோர் பதின்மப் பருவத்தினராகவே காணப்படுகின்றனர். நேற்றைய கண்ணாடித்துண்டுகள் நிகழ்ச்சியினை செவிமடுத்துவர்கள் பல தகவல்களை அறிந்திருப்பார்கள். அந்நிகழ்ச்சியினை வழங்கியவர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

எனக்கும் இப்படியான முன்பின் அறிந்திராத நபர் ஒருவரிடமிருந்து தொல்லை வந்து கொண்டிருந்தது. அது 2003ஆம் ஆண்டு காலப்பகுதி. ஒரு நாள் நள்ளிரவு தாண்டிய நேரம் திடீரென தொலைபேசி அலறியது. நித்திரை குழம்பி அதை எடுக்க கையசைக்க அழைப்பொலி நின்று விட்டது. யாராயிருக்கும் என்கின்ற நினைப்புடன் அழைப்பு எண்ணைப் பார்த்த போது, அது புதிய இலக்கமாயிருந்ததுடன் அதே இலக்கத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தியும் வந்திருந்தது. 'Sellam niththiraiyaa? Good night da sellam'. மண்டை குறுகுறுத்தது. எவன்டா அவன்? அறுப்பான் நித்திரையால இருக்கிறவனை எழுப்பி good night சொல்லுறது என்கின்ற ஆத்திரத்துடன் அந்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்த இணைப்புத் துண்டிக்கப் பட்டது.

தொடர்ந்து சில நாட்களுக்கு நள்ளிரவு ஒரு மணி இரண்டு மணிக்கெல்லாம் குறுஞ்செய்தியும் சில கணநேர அவகாசத்தில் துண்டிக்கப்படும் அழைப்புகளும் தொடர்ந்தன. நான் அழைப்பினை ஏற்படுத்த இணைப்புத் துண்டிக்கப்பட்டு விடும். அட! யாரோ ஒரு பொண்ணு எனக்கும் ரூட்டு விடுது என்று மனதுக்குள்ளும் சின்னதாய் ஒரு சந்தோசம்.

அந்த சந்தோசம் ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. மறுநாள் வந்த குறுஞ்செய்தி விசரைக் கிளப்பியது. “Ennadi nee, naan eththanai sms anuppuran nee oru sms kooda enakku anuppa maaddiyaa?". அந்தச் செய்தியைப் பார்த்ததும் யாரோ என்னைக் காய வைக்கிறார்கள் அல்லது தவறுதலாக எனக்கு அனுப்புகிறார்கள் என்றே எனக்குப் பட்டது. எனவே பதிலுக்கு அவர் யாரெனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினேன். “Your sweet heart" என உடனேயே பதில் வந்தது. சரி விளையாடுறான். வாடா மாப்பிள, வந்து மாட்டிக்கிட்டியா நாங்களும் விளையாடுவோம்ல, என்கின்ற எண்ணத்தில் நானும் அந்த முகமறியாத் தொடர்புடன் விளையாடத் தொடங்கினேன்.

நண்பன் ஒருவனின் உதவியுடன் தொலைபேசி இலக்கத்தை வைத்து அந்த நபரின் விபரங்களை அறிந்த போது அவர் என்னிலும் 8 வயதுகள் குறைந்த ஒரு மாணவன் என அறிய வந்தது. அவன் நான் பெண் எனவே நம்பிவிட்டான். என்னை சீரியசா காதலிப்பதாக வேறு குறுஞ்செய்திகளில் உளற ஆரம்பித்தான். இத்தனைக்கும் ஒருதடவை கூட தொலைபேசியில் உரையாடியதில்லை. ஒருநாள் அதிகாலை 3 மணியளவில் “Intraikku enka veeddila maadu kantru poaddathu. enakku un gnaapakam thaan. niththirai varukuthillai. sms anuppudi" என்று குறுந்தகவல் அனுப்பி விட்டு துண்டித்த அழைப்பினை (missed call இனை தமிழில் துண்டித்த அழைப்பு எனலாமா?) ஏற்படுத்தினான். வழமை போன்றே நானும் சற்று நேரம் கழித்து துண்டித்த அழைப்பினை ஏற்படுத்தினேன். மறுநாள் யோசித்த போது பாவமாய் இருந்தது. எனக்கு இதுவரையிலான செலவு 2.00 ரூபாய் தான் (ஒரேயொரு குறுஞ் செய்தி மட்டுமே. மற்றதெல்லாம் துண்டித்த அழைப்பு). ஆனால் அவனுக்கோ அது 200.00 ரூபாயையும் தாண்டி விட்டிருந்தது. மேலும் விளையாட்டைத் தொடருவும் மனம் விரும்பவில்லை.

மறுநாள் பொதுத் தொலைபேசியில் அவனை அழைத்து விபரம் சொன்னபோது அதிர்ந்து விட்டான். ஆனாலும் அவன் லேசுப்பட்ட ஆளில்லை. வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தையில் இருந்து கொண்டு வீட்டிலை மாடு கன்று போட்டிருக்குதென்று கதை விட்டிருக்கிறான். தன்னுடன் இணையத்தில் பெண் பெயரில் chat செய்த ஒருவரே தனது தொலைபேசி இலக்கம் என்று என்னுடைய இலக்கத்தினை அவனுக்குக் கொடுத்ததாகக் கூறினான். இதைப் பற்றி என் நண்பர்களிடம் கூறி அந்த குறுஞ்செய்திகளைக் காட்டியபோது அவர்களும் “மச்சான் இதே உண்மையில ஒரு பெட்டைக்குப் போயிருந்துதெண்டா அவன்ரை லவ் சக்சசாகியிருக்கும்” என்றனர். உண்மைதான் பெரும்பாலான குறுஞ்செய்திகள் அவ்வளவு உருக்கமாகவும், மனதைக் கரைப்பனவாகவுமே இருந்தன.

ஆக பெற்றோர்களே உங்கள் பதின்மவயதுப் பிள்ளைகளின் கைத்தொலைபேசிகள், அழைப்புக்கள், குறுந்தகவல்கள் தொடர்பாகக் கவனமாக இருங்கள். சரி பெரியவர்கள் என்று அழைக்கப்படுகின்றவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை இந்த அசைபடத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.




Wednesday, September 30, 2009

தமிழ்மொழி தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுமா?



“தக்கன பிழைக்கும்” என்றார் சாள்ஸ் டாவின்.

செம்மொழியாகிய எம்மொழியாம் தமிழ்மொழி எதிர்காலத்தில் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுமா?

இவ்வினாவினை எனக்குள் விதைத்தது அண்மையில் எனக்கு வந்தவொரு கருத்துப் பகிர்வு. பொதுவாக பெயரில்லாமல் (Anonymus) வரும் பின்னூட்டங்களுக்கு நான் பதிலளிப்பதில்லை. ஆயினும் இது, நான் திகதிகளை குறிப்பிடும் முறையைத் தவறென்று கூறி “நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்கின்ற எச்சரிக்கையுடன்(?) வந்ததாலும், அந்தத் குற்றச்சாட்டு சரியென்று நானும் உணர்ந்ததாலும் அதற்கு நானும் பதிலளித்திருந்தேன். பின் அந்த நக்கீரர் தன்னை எனக்கு அறியத்தந்த போது மிக்க மகிழ்ச்சியாய் இருந்தது. எனது மரியாதைக்குரிய நபர்களில் அந்தக் கலைஞனும் ஒருவர். பல கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்கும் சொந்தக்காரர் அவர்.

இப்போதெல்லாம் தமிழ் திகதிகளை பெரும்பாலும் தின நாட்காட்டிகளிலும் மற்றும் அழைப்பிதழ்களிலும் மட்டுமே காணக்கூடியதாய் இருக்கிறது. மற்றம்படிக்கு நாங்கள் யாவருமே ஆங்கிலத் திகதியினையே எமது வழக்கில் கொண்டிருக்கின்றோம். சரி, உலக நியமத்திற்கு அமைவாக அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் நிச்சயமாக அதனால் பல சிக்கல்கள் உருவாகும். இலக்கங்களில் பயன்படுத்துகையில் மொழிப் பிரச்சனை இல்லை. ஆனால் அதில் உள்ள சிக்கல் என்னவென்றால் சில இடங்களில்/நாடுகளில் நாள்/மாதம்/ஆண்டு (dd/mm/yyyy) என்றும் வேறுசில இடங்களில்/நாடுகளில் மாதம்/நாள்/ஆண்டு (mm/dd/yyyy) என்றும் பாவனையில் இருப்பதால் பல சந்தர்ப்பங்களில் சரியான திகதியை அறிவது கடினம். உதாரணமாக 08/09/2009 என்கின்ற திகதியை எடுத்துக் கொண்டால் அது ஒன்பதாம் மாதத்தின் (September) எட்டாம் நாள் என்பதா அல்லது எட்டாம் மாதத்தின் (August) ஒன்பதாம் நாள் என்பதா என்கின்ற குழப்பத்தை உருவாக்கிவிடும். ஆனால் 14/09/2009 என்பதிலோ அல்லது 09/14/2009 இந்தப் பிரச்சனை இல்லை. இது சம்பந்தமான நடைமுறைச் சிக்கல்களை, கணினியில் database சம்பந்தமான வேலைகளில் உள்ளவர்கள் அறிந்திருப்பார்கள். எழுத்து வழக்கில் இந்தச் சிக்கலை எவ்வாறு கையாள்வது?

ஆங்கில ஆண்டு January யில் தொடங்கி December இல் முடிவடைவதாலும் அதற்கேற்ப தற்போது தமிழ் ஆண்டு தை மாதத்தில் தொடங்கி மார்கழி மாதத்தில் முடிவடைவதாலும், இன்றைய திகதியினை எழுத்தில் குறிப்பதற்கு புரட்டாதி 30 எனப் பயன்படுத்தலாம் என்றே எண்ணியிருந்தேன். அது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டதை ஏற்றுக் கொண்டதால் இலங்கைப் பத்திரிகைகள் எவ்வாறு இதைக் கையாள்கின்றன என்று பார்த்த போது அவை தமிழ் திகதியினைத் தமிழிலும் ஆங்கில திகதியினை ஆங்கிலத்திலுமே அச்சடிக்கின்றன. இன்றைய திகதியை September 30 என்று அழைப்பதே சரியானதாகத் தோன்றுகிறது. ஆயினும் இதனை ஆங்கிலம் கலவாமல் தமிழில் எழுதும் போது செப்ரம்பர் என்று எழுதுவதா அல்லது செப்டம்பர் என்று எழுதுவதா? அதே போல் இலங்கையைச் சேர்ந்தவர்கள் August மாதத்தினை ஓகஸ்ற் என்று உச்சரிக்கும்/எழுதும் அதேவேளையில் இந்தியாவில் இருப்பவர்கள் ஆகஸ்ட்டு என்றும் சிலர் ஆகஸ்து என்றும் உச்சரிக்கறார்கள்/எழுதுகிறார்கள். ஆக தமிழ் மொழியில் இந்த மாதங்களைக் குறிப்பதில் சிக்கல்கள் உண்டாகின்றன.

வேற்று மொழிச் சொல்லைத் தமிழ்மொழிக்குள் உள்வாங்குவது தவறல்ல. அப்படி உள்வாங்கினால்தான் அந்தமொழி வளரும் என்று உறுதியாக நம்புகின்றேன். ஆயினும் அப்படி உள்வாங்கப்படும் சொல் ஒரே சொல்லாகவும் (spelling) ஒரே உச்சரிப்பையும் கொண்டதாகவும் அமைந்தாலே அது அழகாக இருக்கும் என்றே நான் நினைக்கின்றேன்.
ஆங்கிலத்தில் இங்கிலாந்தின் ஆங்கிலத்திற்கும் அமெரிக்க ஆங்கிலத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. உதாரணமாக இங்கிலாந்து ஆங்கிலத்தில் colour என்கின்ற சொல்லிற்கு அமெரிக்க ஆங்கிலத்தில் color என்கின்ற சொல்லே பயன்படுத்தப் படுகிறது (spelling வித்தியாசம்). இப்படியானவற்றை வைத்துக் கொண்டு தமிழிலும் அவ்வாறே பயன்படுத்தலாம் என்று கூறுவதிலும் பார்க்க பொதுவான ஒரு சொல்லைப் பயன்படுத்துவதே சிறந்ததாயிருக்கும் என்று நான் கருதுகின்றேன். அண்மையில் இங்கே பதிவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்திற்கு எதேச்சையாக நானும் சென்றிருந்தேன். அங்கிருந்த பதிவர்களில் பலர் தங்களது எழுத்துப்பிழைகளைத் திருத்துவதற்கு தமிழில் ஒரு எழுத்துப்பிழைதிருத்தி (spell checker) இல்லையே என்று கவலை தெரிவித்திருந்தார்கள். ஏற்கனவே தமிழ் எழுத்துப் பிழைதிருத்தி ஒன்று (https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902) Mozilla Firefox இணைய உலாவியிற்கு addon வடிவில் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பினும் அதில் இன்னமும் பெருமளவிலான சொற்கள் இணைக்கப்படவேண்டி இருக்கின்றன.

ஓலைச்சுவடிகளில் எழுதிப் பின் அச்சிலேற்றி தமிழை வளர்ப்பதென்பதெல்லாம் மலையேறிப்போய்விட்ட இலத்திரனியல் காலம் இது. விஜயதசமி அன்றோ அல்லது தைப்பூசம் அன்றோ தட்டில் அரிசி பரவி ஏடுதொடக்குவதெல்லாம் வருங்கால சந்ததியினருக்கு பழைய பஞ்சாங்கம். இனி ஏடு தொடக்குவது கூட (அப்படி ஒரு சடங்கு செய்யவேண்டும் என்று விரும்புவர்கள்) கணினியில் தான் தொடங்குவார்கள். ஆக தமிழையும் கணினியில் கையாள்வதற்குத் தகுந்த மாதிரி இலகுவாக்கினாலேயே கணினியில் தமிழ் வளரும். அதற்காக தமிழின் சிறப்பியல்புகளை புறக்கணிக்க வேண்டியதில்லை. “'ங'-போல் வளை” என்று ஒரு பழமொழியே இருக்கிறது. உயிர்மெய் எழுத்துக்களில் 'ங' வரிசையில் 'ங' தவிர ஏனை எழுத்துக்கள் பாவனையில் இல்லை. ஆயினும் 'ங'-விற்காக அந்த வரிசையில் உள்ள ஏனைய 11 எழுத்துக்களையும் தமிழில் வீணாக வைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் பல ஆங்கிலச் சொற்களைச் சரியாக உச்சரிப்பதற்கான தமிழ் எழுத்துக்கள் எங்களிடம் இல்லை. வடமொழியின் ஆதிக்கம் தமிழிற்குள் பல சொற்களைப் (ஜ,ஸ,ஷ,ஹ) புகுத்தியது. அப்போதிருந்த தமிழறிஞர்கள்/ஆர்வலர்கள் இதைச் செய்திருக்கிறார்கள். ஆகவே தமிழ் மொழிக்கு வெறுமனே செம்மொழி என்கின்ற அந்தஸ்தை மட்டும் அளித்துவிட்டு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று உரியவர்கள் எண்ணாமல் தமிழ் மொழி தன் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியை (“கன்னித் தமிழோ கம்பன் கவியோ...” என்று பாடாமல் இனி “கன்னித் தமிழோ கணினித் தமிழோ...” என்று வேண்டுமானாலும் பாடலாம்.) அடைய உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தருணம் இது.

இல்லையேல் “தக்கன பிழைக்கும் அல்லன அழியும்.” என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்மொழியும் அமைந்துவிடும்.

Sunday, September 27, 2009

தமிழ் அழிகிறது. நடிக்கத் தெரியாத இயக்குனர் சேரன் ஆட்டோகிராப் தர மறுத்தார்


இன்றைய காலை எனக்கு, அதிகாலை 5.00 இற்கே ஆரம்பித்து விட்டது. 4.45 இற்கு ஒலிஎழுப்பி நித்திரையைக் குழப்பிய விழிப்புமணி (Alarm) ஓசையுடன் ஆரம்பித்த உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான போரில் 5.00 மணியளவில் உறக்கத்தைத் தோற்கடித்து விழிப்பு அதிசயமாய் வெற்றிவாகை சூடிக்கொண்டது. காலைக்கடமைகளாய் வரித்துக்கொண்டவற்றை முடித்து, இருப்பிடம் விட்டு வெளியேற நேரம் காலை 6.15 ஐத் தாண்டி விட்டிருந்தது. மென்பனிக்குளிரின் சில்லிடலுக்கு உடலில் ஏறியிருந்த உஷ்ணம் குறைவது இதமாய் இருந்தது.

நீண்டநாட்களின் பின்னானவொரு இயற்கை மதிய உணவினை முடித்துவிட்டிருக்கையில், மாலை 3.15 மணியளவில், இங்கு வந்த பின்னர் அறிமுகமாகியிருந்த அம்மா ஒருவரின் அழைப்பு. இன்று மாலை சிங்கப்பூர்க் கவிமாலையினரின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி பொது நூலகத்தில் கவிதைநூல் வெளியீடு இருப்பதாகவும், தனது கவிதைகளும் அந்நூலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். வழமையாக இங்கே நடைபெறும் விழாக்களுக்கு அவரே தன்னுடன் என்னை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை அவர் அழைக்கையில் நான், அவரிடத்தில் இருந்து வெகுதொலைவில் இருந்தேன். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்களுடன் சிறப்பு விருந்தினராக சேரனும் வருவதால் என்னை வரமுயற்சிக்குமாறு அறிவுறுத்தினார்.


கவிமாலைப் பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சேரன் யாராயிருக்கும் என்பது பிடிபடவில்லை. பெரும்பாலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு கவிஞராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றவொரு கவிமாலை நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து தெளிவத்தை ஜோசப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இலங்கையிலிருந்து சேரன் என்கின்ற பெயரில் ஒரு பிரபலமான கவிஞரை நான் கேள்விப்பட்டதில்லை. நெல்லைக் க.பேரன்-ஐ அறிந்திருக்கிறேன். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.


இருந்தாலும் பொதுநூலகத்தின் அரங்கினை மாலை 4.45 மணியளவில் சென்றடைந்தேன். ஒருசிலரே அங்கே காணப்பட்டனர். 5.00 மணியளவில் அரங்கினுள் சென்று அமர்ந்தேன். அப்போதுதான் மேடையைக் கவனித்தேன். அதிலிருந்தே இயக்குனர் மற்றும் நடிகரான திரு. சேரன் அவர்களே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதை அறிந்து கொண்டேன். 5.15 வரை அதிகம் கூட்டமில்லாதிருந்த இடம் நிறையத் தொடங்கியது. அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் போன்று சரியாக மாலை 5.30 இற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இயக்குனர் சேரன் எந்தவித பந்தாவுமில்லாமல் சாதாரண உடையுடன் வந்து முன்வரிசையில் அமர்ந்து கொண்டார்.


கவிமாலைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களின் கவிதைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்களும் விழாவில் பங்கேற்றுக் கொண்டார். தொடர்ந்து “பொன்மாலைப் பூக்கள்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டினை இயக்குநர் திரு சேரன் அவர்கள் நடாத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மேடைக்கு வந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அடுத்தடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளினை அடுத்து நானும் சென்று ஒரு நூலினைப் பெற்றுக்கொண்டேன். அத்தனை பேருக்கும் சலிக்காமல் இன்முகத்துடன் கைகொடுத்து களைத்திருந்தார் சேரன். அவரது கைகள் கடினமாயிருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அவை மிகவும் மிருதுவாகவேயிருந்தன. பொதுவாகவே ஒருவருடன் கைகுலுக்கும் போது என்னையறியாமலேயே என் மனம் அவரது கையின் மென்மையை எடைபோட்டுவிடும். இது நபிகள் அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினை பாடசாலைக்காலங்களில் பாடப்புத்தகத்தில் படித்ததனால் ஏற்பட்ட விளைவு என்றே நினைக்கிறேன். மீண்டும் எனது இருக்கைக்கு வந்து கவிதைத் தொகுப்பினை பிரட்டினேன்.


“நீயும் போய் சிநேகாவைத் தொட்டு நடிச்ச கைக்கு, கைகொடுத்திட்டு வா.” என்கின்ற குரல் கேட்டு திரும்பிய எனக்கோ அதிர்ச்சி. அதைச்சொன்ன வாலிபருக்கு வயது நிச்சயம் 65 இற்கு மேல் இருக்கும். தன்வயதொத்த இன்னொரு இளைஞரிடம்(?) அவர் அதனைக் கூறிக்கொண்டிருந்தார். இருவருமே எனக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். புத்தகத்தினைப் படிப்பது போல் பாவனை செய்து கொண்டே அவர்களை அவதானித்தேன. முதலில் கூறியவர் தனது சட்டைப்பையில் இருந்து ஒரு பேனாவைத் தனது நண்பருக்கு எடுத்துக்காட்டி, இந்தப்பேனையாலே தான் சிநேகாவிடம் ஆட்டோகிராப் வாங்கியதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார். பின் அவரும் போய் சினேகாவைத் தொட்டு நடித்த கைக்கு கைகொடுத்துவிட்டு வந்தது வேறுவிடயம்.


சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்கள் தனதுரையில் தமிழ்மொழி அழிந்து வருவதையிட்டு தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏறத்தாழ 50% மான தமிழ்க்குடும்பத்தினர் இங்கே தங்களுக்குள் தமிழில் உரையாடிக் கொண்டதாகவும், தற்போது அது 20% மாகக் குறைந்து விட்ட தகவலையும் அவர் தெரிவித்தார். உண்மைதான். காலையில் நான் சென்றிருந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தமிழ் மாணவனுக்கு தமிழில் உரையாடத் தெரியவில்லை. அவரால் மற்றவர்கள் பேசுவதை ஓரளவிற்கு புரிந்து கொண்டாலும், ஒரு வார்த்தைகூட தமிழி்ல் பேசுவதற்கு அவரால் இயலவில்லை.


பின் திரு. சேரன் அவர்களைப் பற்றி அறிமுக உரையாற்றிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் இயக்குனர் சேரனுக்கு நடிக்கத் தெரியாது என்றார். ஆமாம்! பின்னர் சேரன் அவர்களின் உரையிலும் அதை அறியக்கூடியதாய் இருந்தது. அவர் உரையாற்றுகையில் எவ்வித நடிப்புமி்ன்றி வெளிப்படையாகவே பேசினார். சேரன் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றி மேலும் விபரித்த திரு இளங்கோ அவர்கள், சிங்கப்பூர் விமானநிலையத்தில் பணத்தாள் ஒன்றில் கையெழுத்திடுமாறு கேட்ட இரசிகர் ஒருவருக்கு பணத்தாளில் ஆட்டோகிராப் இட இயக்குனர் சேரன் அவர்கள் மறுத்துவிட்டதைக் கூறிப் புகழ்ந்தார்.


இயக்குனர் சேரன் அவர்களின் படங்களை விரும்பிப் பார்த்திருந்தாலும் அவரின்மேல் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான அபிமானமும் இன்றி ஏனைய பெரும்பாலான (பெரும்பாலான என்பதைக் கவனிக்கவும்) திரையுலகத்தினரைப் போலவே அவரையும் பத்தோடு பதினொன்றாக எண்ணியிருந்தேன், இறுதி நிகழ்வாக இடம்பெற்ற அவரின் சிறப்புரையினைக் கேட்கும் வரை. அதன்பின்னான கேள்வி பதில் நிகழ்வில் அவர் பதிலளித்த விதமும் வெளிப்படையாகவே தன் தவறுகளை நியாயப்படுத்தாமல் அதை ஒப்பக் கொண்ட விதமும், அவர் மேலான மரியாதையை மிகவும் உயர்த்தின.

(இந்தப்பதிவு நீண்டு விட்டதால் இவை பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில்)

மறக்கமுடியாத சரஸ்வதி பூசையும், சாப்பாடும்


அது 2003ஆம் ஆண்டு காலப்பகுதி. அக்பர் விடுதியை ஞாபகப்படுத்தும் விதத்திலேயே தெஹிவளையில் எமது வசிப்பிடமும் அமைந்திருந்தது. அதே விடுதி நண்பர்கள் பலரும் ஒன்றாக, மீண்டும் அக்பர் வாழ்க்கையை நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். அந்த வருடத்தைய வீட்டுப்பூசையன்று என்னையும் இன்னொரு நண்பனையும் தவிர ஏனையவர்கள் கொழும்பில் வசிக்கும் தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டிருந்தனர்.

எங்கள் இருவருக்கும் அவல், சுண்டல் எல்லாம் சாப்பிடவேண்டும் என்கின்ற அவா. கோவிலுக்குப் போகலாமா என்றான் நண்பன். எனக்கோ கோவிலுக்குச் செல்ல இஷ்டமில்லை. ஆயினும் இருவருக்குமே சரஸ்வதி பூசைச் சாப்பாடு சாப்பிட்டே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம். அதற்கு உணவின் மீதான பிரியம் மட்டுமல்ல, மற்றைய நண்பர்களிடம் கடி வாங்காமல் இருக்கவேண்டுமே என்கின்ற மானப்(?) பிரச்சனை. சிறிது நேரம் யோசித்து விட்டு என்னுடன் பணியிடத்தில் அறிமுகமாகியிருந்த வேறொரு நண்பரின் வீட்டுக்குச் செல்வதென்கின்ற முடிவுடன் வெள்ளவத்தைக்குப் புறப்பட்டோம்.

அந்த நண்பரின் வீட்டில் இப்படியான கொண்டாட்டங்கள் எல்லாம் மிகச் சிறப்பாகச் செய்யப்படும். அங்கே சென்றபோது அவர்கள் வீட்டில் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்மைக் கண்டதும் நண்பரின் தாயார் இருந்து சாப்பிட்டு விட்டுப் போகும்படி கூறினார்.

“ஏன் அன்ரி? என்ன விசேசம்?” என்றோம்.

“இண்டைக்கு சரஸ்வதிபூசை வீட்டில செய்யிறம்.” என்றார்.

“ஓ! அப்ப சரஸ்வதி பூசை தொடங்கீற்றுதா?” என்றான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

“பரவாயில்லை அன்ரி. நாங்க இன்னொரு நாளைக்கு வாறம். இண்டைக்கு வேற அலுவல் ஒண்டு இருக்கு.” என்றேன் நான்.

உடனேயே நாங்கள் வந்திருந்த வீட்டுக்குரிய நண்பர் “அதெல்லாம் முடியாது. இருந்து சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும். இன்னும் கொஞ்ச நேரத்தில பூசையெல்லாம் முடிஞ்சிரும்.” என்றவாறே பூசையறைக்குள் சென்று விட்டார்.

“இல்ல, நாங்க போகவேணும்.” என்றவாறே தலையைச் சொறிந்தான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

மற்ற நண்பரின் தாயாரின் வற்புறுத்தலின் பேரில் ஒருவாறாக இருவரும் இருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வதற்கு இணங்கிக் கொண்டோம். சிறிது நேரத்திலேயே சக்கரைப் பொங்கல், அவல், சுண்டல் உழுந்து வடையென வயிறும் மனமும் நிறைந்துவிட விடைபெற்றவாறே வீட்டை விட்டு விலகி வீதிக்கு வந்தவுடன் ஆரம்பித்த சிரிப்பு தெஹிவளையில் எமது இருப்பிடம் வந்து சேர்ந்த பின்னும் நிற்கவில்லை. மறுநாள், என்றைக்கேனும் நான் மீண்டும் எழுத ஆரம்பிக்கும் காலங்களில் இந்நிகழ்ச்சியைப்பற்றி கட்டாயம் எழுதுமாறு என்நண்பன் கேட்டுக்கொண்டான்.

அதற்கடுத்தடுத்த வருடங்களில் வந்த சரஸ்வதி வீட்டுப்பூசையன்று நாங்களே அவல் மற்றும் சுண்டல் செய்து கொண்டதும், வேறு நண்பர்களின் இடங்களில் கோழிப்பொங்கல் செய்து பகிர்ந்து கொண்டதெல்லாம் வேறு விடயம்.

Friday, September 25, 2009

நிலைமாறும் உலகம்.


இன்றைய நடுநிசி தாண்டிய நள்ளிரவில், தொடரூர்ந்து (MRT) விட்டு, கூடவந்த நண்பர்கள் விலகி எனது இருப்பிடம் நோக்கிய நடைப்பயணத்தில் IPod இனை அணிந்து கொள்ள, “நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி....” என்கின்ற பழைய பாடல் நெஞ்சத்தைக் கிள்ளியது.

இருப்பிடம் அடைந்து இணையத்தில் இணைகையில் “மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது.” என்கின்ற மிகப்பிரபலமான வாக்கியம் (Change is the one that never changes in the world) கண்ணில் பட்டது.

மின்னஞ்சலில் வாசிக்கப்படாதிருந்த மின்மடல்களில் ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் Yahoo Geocities யிடமிருந்து வந்திருந்தது.

ஆகா! அவர்களும் கடையை மூடுகிறார்களாம்.

2000ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் இலவச இணையத்தள சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தாலும், அப்போதெல்லாம் நிரந்தர நம்பகத் தன்மை கொண்டதாக Yahoo குழுமத்தின் geocities சேவையே விளங்கியது. பல தளங்களில் உருவாக்கி வைத்திருந்த இலவச இணையத்தளங்கள் பலவும் சிலமாதங்களுக்குத் தொடர்ச்சியான கவனிப்பில்லாமல் இருக்கையில் அந்த சேவை வழங்குனர்களால் துண்டிக்கப்பட்டிருந்தன. ஆயினும் Yahoo குழுமம் தனது சேவையினைத் தொடர்ச்சியாக வழங்கி அதன் கொள்கைகளைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த நம்பிக்கையிலும் கைவைத்து விட்டார்கள். வரும் ஐப்பசி (October) 26 ஆம் திகதியுடன் Yahoo குழுமத்தின் Geocities தனது இலவச இணையத்தள சேவையினை நிறுத்திக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

அனிச்சையாய் mouse pointer கணினியின் வலப்பக்க கீழ் மூலையில் சென்று ஓய்வெடுக்க September 26, 2009 என இன்றைய தேதி மின்னியது.

ஒவ்வொரு கணங்களும் மின்னல்வேகத்தில் ஓடிமறைய காலச்சக்கரம் சீக்கிரமாய்ச சுழன்று செல்வதான உணர்வுகள்.

சில தசாப்தங்களுக்குள் எத்தனை மாற்றங்கள். இப்படியான ஓர் தினத்தில்தான் பாரதத்தின் பணநோட்டுக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் காந்தியின் (மகாத்மா) வேதனையுடன் கூடிய அவமானம் கலந்த கண்ணீரில் கரைந்து போயிருந்தன.

பாரதத்தின் தேசபிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் அந்நாட்டுக்கு இந்திய திறைசேரியிலிருந்த பகிர்நதளிக்கப்படாதிருந்த நிதியினைப் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கச் சொல்லி, இந்திய அரசிற்கு எதிராக அவரது பாணியிலான அகிம்சாவழியிலான உண்ணா நோன்பினை மேற்கொண்டிருந்தார். அப்போதைய பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களும், பாரதத்தின் பண நெருக்கடிக்கள்ளும் மகாத்மாவின் போராட்டத்திற்கு மதிப்பளித்திருந்தார்.

பின் பேரன்கள் காலம், மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை அதுவும் உணர்த்தியது.

Wednesday, September 16, 2009

இன்றுடன் நிறைவுற்ற இன்று ஒரு தகவல்


இன்றைய மாலைநேரச் செய்தி இந்தத் தகவலைச் செவியில் அறைந்தது. தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இன்று (16 புரட்டாதி 2009) இயற்கையெய்தி விட்டார். இனிமேல் எமக்கு இன்று ஒரு தகவல் சொல்ல அவர் வரமாட்டார்.

பிரபலமான எழுத்தாளரும் வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பேச்சாளருமான அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், தமிழ் உலகால் நன்கு அறியப்பட்டவர். தன் தனிப்பட்ட பாணியிலான பேச்சாற்றலினால் கேட்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். அவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினை அநேகமாக தமிழ் வானொலி நேயர்கள் அனைவருமே இரசித்திருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் 'வலம்புரி' நாளிதழ் தினந்தோறும் இவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினைப் பிரதியெடுத்து வெளியிட்டு வந்தது.

நல்லவொரு கருத்தினைக் கூறிவிட்டு முத்தாய்ப்பாக அதற்குப் பொருத்தமானவொரு நகைச்சுவைக் கதையையும் கூறி எம் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். முதன்முதலில் அவரது நிழற்படத்தினைப் பார்த்த பொழுது இவரா அவர் எனச் சந்தேகமாகவே இருந்தது. கருத்துக்களில் மட்டும் சொல்லாது வாழ்க்கையிலும் செய்து காட்டிய மிக அரிய எளிமையான மனிதர் அவர். அவரை முதற்தடவை பார்க்கும் எவருமே இந்த மனிதருக்குள் இப்படியொரு திறமையிரக்கும் என நம்பமாட்டார்கள். அவரது ஒரு நிகழ்ச்சியில் அவரே இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். அது அவர் தொலைக்காட்சியில் அறிமுகமாகியிராத காலம். ஆனாலும் வானொலியினூடாக அவரது 'இன்று ஒரு தகவல்' மூலம் தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்கின்ற பெயர் பிரபலமாகியிருந்தது. ஒருமுறை அவர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவரின் பின்னால் இருந்தவர்களில் ஒருவர், மற்றவரிடம் “முன்னுக்கிருப்பவரைப் பார்த்தால் தென்கச்சி கோ.சுவாமிநாதன் போல் உள்ளது.” என்றுகூற அதற்கு மற்றவர் “இருக்காது, அவர் எவ்வளவு அறிவாளி. இவரைப் பார்த்தால் படித்தவர் போலவா தெரிகிறது?” என்றாராம். நம்மாளோ (அதாங்க தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள்) எதையுமே காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்துவிட்டாராம்.

அண்மையில் இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்களே? ஒரு குட்டிக்கதை மூலம் கேட்பவர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? எனக் கேட்டதற்கு அவர் அளி்த்த பதில்;

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''


(தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகள்)

Monday, August 31, 2009

கனவினைக் குழைத்தொரு



அவனுக்குக் குழப்பமாயிருந்தது. எப்படி இப்படி? தலை விண்விண்ணென வலியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இது மப்புத்தான். ஆனால் எப்படி? அவனுக்கு சுத்தமாக நினைவிற்கு வரவில்லை. யாருடன் சென்றிருப்பான் எனக் குழப்பமாயிருந்தது. நிச்சயமாக இது பியராக இருக்க முடியாது. அவனது பிரியத்திற்குரிய ரைகர் பியர் ஒருபோதும் இப்படியான ஒரு போதையைத் தந்ததில்லை. இது வேறு. எல்லாமே குழம்பிப்போன நிலை. அழைத்துச் சென்றவன் வேறு ஏதேனும் 'பெரிசு' கலந்து தந்திருப்பானோ?. இல்லையில்லை. இது கனவு. வெறும் கனவு மட்டுமே. இது நிஜமெனில் கூட வந்தவனையாவது அவன் நிச்சயம் நினைவில் வைத்திருந்திருப்பான். மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்பதற்கு இன்றுவரை அவன் உதாரணமாய் இருந்தவன். ஆக இது கனவே தான். கனவில் மட்டுமே சம்பந்தாசம்பந்தமில்லா நிகழ்ச்சிகள் வரும். அவன் இதைக் கனவென்றே நம்பத் தொடங்கினான்.

கனவென்பது மனதிற்கு உறுதியானதும், கனவிலேயே அவன் தான் குடித்திருக்கின்றேனா என்பதை உறுதிப்படுத்த விரும்பினான். எழுந்து நடந்தான். உடல் இலேசாகியிருந்தது போன்ற உணர்வு. மெல்ல வீதியைக் கடந்து நடைபாதையில் நடந்தவன் எதிர்பாராத விதமாய் எதிரே வந்தவருடன் மோதிக்கொண்டான். பலத்த இடி முன்நெற்றியில். தடவிவிட்டுக் கொண்டான். வலி அடங்குவதாய்த் தெரியவில்லை. கனவென்றால் இப்படி வலிக்காதே. ஒருவேளை இது நிஜமோ? தன்னைத்தானே கையில் கிள்ளிக் கொண்டான். வலிமட்டுமல்லாது கிள்ளிய இடம் கன்றிப்போய் இருந்தது. அப்படியானால் இது கனவல்ல. இது நிஜமென்று இப்போது நினைக்கத் தொடங்கினான்.

வயிறு பசித்தது. சற்றுத் தொலைவில் சாப்பாட்டுக்கடை தெரிந்தது. அருகே செல்ல ஊதுவத்தி வாசனை மூக்கைத் துளைத்தது. இருக்கையில் அமர முன்னுக்கிருந்தவர்கள் கையை உதறி விட்டு எழுந்தார்கள். பணியாளுடன் பிரச்சனைப்பட்டுக் கொண்டே கல்லாவை நெருங்கியவர்கள். “தோசையின்ர திறத்தில ஆட்டுக்கல்லுக்கொரு மாலை” என்று கோபமாகத் திட்டியவாறே வெளியேறினார்கள்.

அவன் ஆட்டுக்கல்லைப் பார்த்திருக்கிறான். அதில் தோசைக்கு மாவாட்டியுமிருக்கிறான். மாலை போடப்பட்டிருந்த ஆட்டுக்கல்லை உற்று நோக்கினான். அது ஆட்டுக்கல்லல்ல. அவனுக்கது உறுதியாய்த் தெரிந்தது. ஆட்டுக்கல்லின் வடிவில் அமைந்தவொரு உருவம். அந்த உருவத்தை அவன் முன்னரும் பார்த்திருக்கிறான். அந்த உருவத்தைப் பற்றி அவன் புத்தகங்களிலும் வாசித்திருக்கிறான். சட்டென எதுவும் நினைவிற்கு வரவில்லை. அவனுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து மீண்டும் நடக்கத் தொடங்கினான்.

இப்போது அவனுக்கு சந்தோசமாயிருந்தது. அது பற்றிய சிறுகுறிப்பொன்று அவன் நினைவிற்கு வந்து விட்டது. அதைப் பற்றிக் கண்ணதாசனின் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது கலவி நிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. புணர்ச்சி நிலையை எதற்காய் ஒரு குறியீட்டால் காட்டவேண்டும். பின் எதற்காய் அதற்கு மாலை போடவேண்டும். ஆகா! அங்கே ஏதேனும் சக்தி ஒளிந்து கிடக்கிறதோ? அதுதானே! புதிதாய் ஒரு ஜீவனை வேறெந்தக் கருவிகளால் உண்டாக்க முடியும்? ஏதோ புரிவது போலவும் புரியாதது போலவும் தோன்றியது. குழப்பம் மறுபடி கூடுவதாய்த் தோன்றியது. இது கனவா இல்லை நனவா என்கின்ற சந்தேகம் மீண்டும் முளைத்தது. இரண்டு பியர் அடித்துவிட்டுப் பேசாமல் போய்ததூங்கி விடலாம் என்றது மனது.

அவன் நடந்து சென்ற பாதையிலேயே அவன் வழக்கமாகச் செல்லும் அந்தக் கடையும் இருந்தது. அவன் தனது வழமையான இருக்கையில் அமர்ந்ததுமே தனது வாடிக்கையாளரைக் கண்டுவிட்ட அந்த இளம்பெண் அவனுக்குப் பிரியமான ரைகர் பியருடன் அவனை நெருங்கினாள். என்றுமில்லாதவாறு இன்று அவள் மிகவும் கிளர்ச்சியூட்டுபவளாய்த் தெரிந்தாள். 'கறந்த இடம் கண்நாட பிறந்த இடம் மனம் நாட...'

ச்சே! எனக்கு என்னவோ ஆயிற்று அவன் மிகத் தீவிரமாகக் குழம்பினான். இது கனவா நிஜமா? எப்படி உறுதிப்படுத்துவது? அந்தப் பெண்ணிடமே ஒரு வெற்றுத்தாளும் ஒரு பேனையும் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டான். இப்போது அவனுக்குத் திருப்தியாய் இருந்தது. இது நிஜமெனில் தான் எழுதுவதே ஒரு படைப்பாய் மாறக்கூடும் என அவன் நம்பினான். இல்லை இதுவொரு கனவெனில் தூக்கம் கலைந்த பின்னர் எழுதிய தாள் இருக்காதே. ஆகவே இது கனவென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவன் நினைத்தான். அவன் தன் மனதில் தோன்றுபவற்றை காகிதத்தில் எழுத நினைத்தான்.

பேனாவை ஒருதடவை பார்த்தவனின் பார்வை அதிலேயே பல நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. இந்த முனைவடிவை வேறெங்கோ பார்த்திருக்கிறேன். அவன் பார்வையில் இப்போது அந்தப் பேனா மறையத் தொடங்கியிருந்தது. திடீரென அது ஒரு துப்பாக்கிக்குண்டின் முனைப்பகுதியாய் அவன் நெஞ்சைக் குறிபார்த்தது. இந்தச் சின்ன ரவை என்னை என்ன செய்யும் என்று எழுந்த அலட்சியம் சில நொடிப்பொழுதுகளிலேயே அமுங்கிப் போனது. இப்போது அது 50 கலிபர் துப்பாக்கியின் ரவையின் அளவிற்கு வளர்ந்து விட்டிருந்தது. அவனுக்குள் பயம் வேர்விடத் தொடங்குகையில் அது ஒரு ஆர்பிஜி எறிகணையின் அளவிற்கு வளர்ந்திருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. இப்போதைய அதன் பரிமாணத்தை அவன் தன் சின்ன வயதில் பார்த்திருக்கிறான். 50 கிலோகிராம் எடையுள்ள வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட விமானத்திலிருந்து வீசப்பட்டவொரு குண்டினை அவன் 1985ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்/புனித பததிரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சியில் பார்த்திருக்கிறான். பின்நாட்களில் அதை விடப் பாரிய பலமடங்கு எடையுள்ள விமானக்குண்டுகளைப் பார்த்திருந்தாலும் அந்த வடிவத்தில் அவன் பார்த்திருந்த மிகப் பெரிய குண்டு அதுவாகவேயிருந்தது. எனவே இதைவிடப் பெரிதாக அந்தப் பேனா வளரமுடியாது என்கின்ற அவன் கணிப்பைப் பொய்யாக்கி அது மேலும் வளரத் தொடங்கியது.

ஒருவேளை அணுகுண்டு இந்தளவாக இருக்குமோ என்று அவனுள் எழுந்த அனுமானத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் அந்தப் பேனா சிறிதாகவேயிருந்தது அவனுக்கு ஆறுதலைத் தந்தது. ஆயினும் அது தொடர்ந்து வளர்ந்து அவன் கற்பனையைத் தகர்க்க அவன் உடையத் தொ்டங்கினான். இப்போது அந்தப் பேனாவைப் பார்க்கையில் அதன் முகப்புத் தோற்றம் ஒரு பாரிய விமானத்தின் முகப்பைப் போல் தோன்றியது. இன்னொரு பார்வையில் அதுவொரு நீர்மூழ்கிக் கப்பலின் முகப்பை ஒத்திருந்தது. எப்படியெனினும், தன்னால் வளர்ந்துகொண்டிருக்கும் அந்தப்பேனாவை, தான் அறிந்த வேறொரு பொருளுடன் ஒப்பிடக்கூடியதாயிருப்பதில் அவனுக்குள் ஒருவகை திருப்தியும் சந்தோஷமுமே காணப்பட்டன.

அந்தப் பேனாவை அற்பமாய்ப் பார்த்தான். அது இப்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. முடியாது. இதற்குமேல் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ கற்பனை பண்ணிப்பார்க்கவோ அவனால் முடியாது என்பதை உணரத் தொடங்கினான்.

விஸ்வரூபமாய் விரிவடைந்திருந்த பேனா இப்போது அவனை இந்தப் பேரண்டத்தின் ஒரு கோடிக்குள் தள்ளிவிட்டு எங்கும் நீக்கமற விரிவடைந்திருப்பதாய் உணர்கையில் அவன் உருகத் தொடங்கியிருந்தான். அவனுக்குள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த ஒப்பீடுகளும் எல்லைகளும் உடைந்து சிதறின. அவன் நாபிக்கமலத்திலிருந்து புறப்பட்டு “ஓம்” என்றவாறே அகிலமெங்கும் அதிர்ந்து பரவிய உட்சக்தியுடன் அவன் இலேசாகி, மேலும் இலேசாகி, மேலும் மேலும் இலேசாகி எங்கும் கலக்கத்தொடங்கினான். பின் கரைந்து காணாமல் போனான்.