இன்றைய காலை எனக்கு, அதிகாலை 5.00 இற்கே ஆரம்பித்து விட்டது. 4.45 இற்கு ஒலிஎழுப்பி நித்திரையைக் குழப்பிய விழிப்புமணி (Alarm) ஓசையுடன் ஆரம்பித்த உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான போரில் 5.00 மணியளவில் உறக்கத்தைத் தோற்கடித்து விழிப்பு அதிசயமாய் வெற்றிவாகை சூடிக்கொண்டது. காலைக்கடமைகளாய் வரித்துக்கொண்டவற்றை முடித்து, இருப்பிடம் விட்டு வெளியேற நேரம் காலை 6.15 ஐத் தாண்டி விட்டிருந்தது. மென்பனிக்குளிரின் சில்லிடலுக்கு உடலில் ஏறியிருந்த உஷ்ணம் குறைவது இதமாய் இருந்தது.
நீண்டநாட்களின் பின்னானவொரு இயற்கை மதிய உணவினை முடித்துவிட்டிருக்கையில், மாலை 3.15 மணியளவில், இங்கு வந்த பின்னர் அறிமுகமாகியிருந்த அம்மா ஒருவரின் அழைப்பு. இன்று மாலை சிங்கப்பூர்க் கவிமாலையினரின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி பொது நூலகத்தில் கவிதைநூல் வெளியீடு இருப்பதாகவும், தனது கவிதைகளும் அந்நூலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். வழமையாக இங்கே நடைபெறும் விழாக்களுக்கு அவரே தன்னுடன் என்னை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை அவர் அழைக்கையில் நான், அவரிடத்தில் இருந்து வெகுதொலைவில் இருந்தேன். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்களுடன் சிறப்பு விருந்தினராக சேரனும் வருவதால் என்னை வரமுயற்சிக்குமாறு அறிவுறுத்தினார்.
கவிமாலைப் பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சேரன் யாராயிருக்கும் என்பது பிடிபடவில்லை. பெரும்பாலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு கவிஞராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றவொரு கவிமாலை நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து தெளிவத்தை ஜோசப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இலங்கையிலிருந்து சேரன் என்கின்ற பெயரில் ஒரு பிரபலமான கவிஞரை நான் கேள்விப்பட்டதில்லை. நெல்லைக் க.பேரன்-ஐ அறிந்திருக்கிறேன். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.
இருந்தாலும் பொதுநூலகத்தின் அரங்கினை மாலை 4.45 மணியளவில் சென்றடைந்தேன். ஒருசிலரே அங்கே காணப்பட்டனர். 5.00 மணியளவில் அரங்கினுள் சென்று அமர்ந்தேன். அப்போதுதான் மேடையைக் கவனித்தேன். அதிலிருந்தே இயக்குனர் மற்றும் நடிகரான திரு. சேரன் அவர்களே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதை அறிந்து கொண்டேன். 5.15 வரை அதிகம் கூட்டமில்லாதிருந்த இடம் நிறையத் தொடங்கியது. அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் போன்று சரியாக மாலை 5.30 இற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இயக்குனர் சேரன் எந்தவித பந்தாவுமில்லாமல் சாதாரண உடையுடன் வந்து முன்வரிசையில் அமர்ந்து கொண்டார்.
கவிமாலைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களின் கவிதைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்களும் விழாவில் பங்கேற்றுக் கொண்டார். தொடர்ந்து “பொன்மாலைப் பூக்கள்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டினை இயக்குநர் திரு சேரன் அவர்கள் நடாத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மேடைக்கு வந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அடுத்தடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளினை அடுத்து நானும் சென்று ஒரு நூலினைப் பெற்றுக்கொண்டேன். அத்தனை பேருக்கும் சலிக்காமல் இன்முகத்துடன் கைகொடுத்து களைத்திருந்தார் சேரன். அவரது கைகள் கடினமாயிருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அவை மிகவும் மிருதுவாகவேயிருந்தன. பொதுவாகவே ஒருவருடன் கைகுலுக்கும் போது என்னையறியாமலேயே என் மனம் அவரது கையின் மென்மையை எடைபோட்டுவிடும். இது நபிகள் அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினை பாடசாலைக்காலங்களில் பாடப்புத்தகத்தில் படித்ததனால் ஏற்பட்ட விளைவு என்றே நினைக்கிறேன். மீண்டும் எனது இருக்கைக்கு வந்து கவிதைத் தொகுப்பினை பிரட்டினேன்.
“நீயும் போய் சிநேகாவைத் தொட்டு நடிச்ச கைக்கு, கைகொடுத்திட்டு வா.” என்கின்ற குரல் கேட்டு திரும்பிய எனக்கோ அதிர்ச்சி. அதைச்சொன்ன வாலிபருக்கு வயது நிச்சயம் 65 இற்கு மேல் இருக்கும். தன்வயதொத்த இன்னொரு இளைஞரிடம்(?) அவர் அதனைக் கூறிக்கொண்டிருந்தார். இருவருமே எனக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். புத்தகத்தினைப் படிப்பது போல் பாவனை செய்து கொண்டே அவர்களை அவதானித்தேன. முதலில் கூறியவர் தனது சட்டைப்பையில் இருந்து ஒரு பேனாவைத் தனது நண்பருக்கு எடுத்துக்காட்டி, இந்தப்பேனையாலே தான் சிநேகாவிடம் ஆட்டோகிராப் வாங்கியதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார். பின் அவரும் போய் சினேகாவைத் தொட்டு நடித்த கைக்கு கைகொடுத்துவிட்டு வந்தது வேறுவிடயம்.
சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்கள் தனதுரையில் தமிழ்மொழி அழிந்து வருவதையிட்டு தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏறத்தாழ 50% மான தமிழ்க்குடும்பத்தினர் இங்கே தங்களுக்குள் தமிழில் உரையாடிக் கொண்டதாகவும், தற்போது அது 20% மாகக் குறைந்து விட்ட தகவலையும் அவர் தெரிவித்தார். உண்மைதான். காலையில் நான் சென்றிருந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தமிழ் மாணவனுக்கு தமிழில் உரையாடத் தெரியவில்லை. அவரால் மற்றவர்கள் பேசுவதை ஓரளவிற்கு புரிந்து கொண்டாலும், ஒரு வார்த்தைகூட தமிழி்ல் பேசுவதற்கு அவரால் இயலவில்லை.
பின் திரு. சேரன் அவர்களைப் பற்றி அறிமுக உரையாற்றிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் இயக்குனர் சேரனுக்கு நடிக்கத் தெரியாது என்றார். ஆமாம்! பின்னர் சேரன் அவர்களின் உரையிலும் அதை அறியக்கூடியதாய் இருந்தது. அவர் உரையாற்றுகையில் எவ்வித நடிப்புமி்ன்றி வெளிப்படையாகவே பேசினார். சேரன் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றி மேலும் விபரித்த திரு இளங்கோ அவர்கள், சிங்கப்பூர் விமானநிலையத்தில் பணத்தாள் ஒன்றில் கையெழுத்திடுமாறு கேட்ட இரசிகர் ஒருவருக்கு பணத்தாளில் ஆட்டோகிராப் இட இயக்குனர் சேரன் அவர்கள் மறுத்துவிட்டதைக் கூறிப் புகழ்ந்தார்.
இயக்குனர் சேரன் அவர்களின் படங்களை விரும்பிப் பார்த்திருந்தாலும் அவரின்மேல் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான அபிமானமும் இன்றி ஏனைய பெரும்பாலான (பெரும்பாலான என்பதைக் கவனிக்கவும்) திரையுலகத்தினரைப் போலவே அவரையும் பத்தோடு பதினொன்றாக எண்ணியிருந்தேன், இறுதி நிகழ்வாக இடம்பெற்ற அவரின் சிறப்புரையினைக் கேட்கும் வரை. அதன்பின்னான கேள்வி பதில் நிகழ்வில் அவர் பதிலளித்த விதமும் வெளிப்படையாகவே தன் தவறுகளை நியாயப்படுத்தாமல் அதை ஒப்பக் கொண்ட விதமும், அவர் மேலான மரியாதையை மிகவும் உயர்த்தின.
(இந்தப்பதிவு நீண்டு விட்டதால் இவை பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில்)