Sunday, September 27, 2009

தமிழ் அழிகிறது. நடிக்கத் தெரியாத இயக்குனர் சேரன் ஆட்டோகிராப் தர மறுத்தார்


இன்றைய காலை எனக்கு, அதிகாலை 5.00 இற்கே ஆரம்பித்து விட்டது. 4.45 இற்கு ஒலிஎழுப்பி நித்திரையைக் குழப்பிய விழிப்புமணி (Alarm) ஓசையுடன் ஆரம்பித்த உறக்கத்திற்கும் விழிப்பிற்குமான போரில் 5.00 மணியளவில் உறக்கத்தைத் தோற்கடித்து விழிப்பு அதிசயமாய் வெற்றிவாகை சூடிக்கொண்டது. காலைக்கடமைகளாய் வரித்துக்கொண்டவற்றை முடித்து, இருப்பிடம் விட்டு வெளியேற நேரம் காலை 6.15 ஐத் தாண்டி விட்டிருந்தது. மென்பனிக்குளிரின் சில்லிடலுக்கு உடலில் ஏறியிருந்த உஷ்ணம் குறைவது இதமாய் இருந்தது.

நீண்டநாட்களின் பின்னானவொரு இயற்கை மதிய உணவினை முடித்துவிட்டிருக்கையில், மாலை 3.15 மணியளவில், இங்கு வந்த பின்னர் அறிமுகமாகியிருந்த அம்மா ஒருவரின் அழைப்பு. இன்று மாலை சிங்கப்பூர்க் கவிமாலையினரின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி பொது நூலகத்தில் கவிதைநூல் வெளியீடு இருப்பதாகவும், தனது கவிதைகளும் அந்நூலில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். வழமையாக இங்கே நடைபெறும் விழாக்களுக்கு அவரே தன்னுடன் என்னை அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை அவர் அழைக்கையில் நான், அவரிடத்தில் இருந்து வெகுதொலைவில் இருந்தேன். அத்துடன் இந்நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்களுடன் சிறப்பு விருந்தினராக சேரனும் வருவதால் என்னை வரமுயற்சிக்குமாறு அறிவுறுத்தினார்.


கவிமாலைப் பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சேரன் யாராயிருக்கும் என்பது பிடிபடவில்லை. பெரும்பாலும் இலங்கையைச் சேர்ந்த ஒரு கவிஞராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். ஏனெனில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றவொரு கவிமாலை நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து தெளிவத்தை ஜோசப் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். இலங்கையிலிருந்து சேரன் என்கின்ற பெயரில் ஒரு பிரபலமான கவிஞரை நான் கேள்விப்பட்டதில்லை. நெல்லைக் க.பேரன்-ஐ அறிந்திருக்கிறேன். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.


இருந்தாலும் பொதுநூலகத்தின் அரங்கினை மாலை 4.45 மணியளவில் சென்றடைந்தேன். ஒருசிலரே அங்கே காணப்பட்டனர். 5.00 மணியளவில் அரங்கினுள் சென்று அமர்ந்தேன். அப்போதுதான் மேடையைக் கவனித்தேன். அதிலிருந்தே இயக்குனர் மற்றும் நடிகரான திரு. சேரன் அவர்களே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதை அறிந்து கொண்டேன். 5.15 வரை அதிகம் கூட்டமில்லாதிருந்த இடம் நிறையத் தொடங்கியது. அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் போன்று சரியாக மாலை 5.30 இற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. இயக்குனர் சேரன் எந்தவித பந்தாவுமில்லாமல் சாதாரண உடையுடன் வந்து முன்வரிசையில் அமர்ந்து கொண்டார்.


கவிமாலைப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களின் கவிதைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்களும் விழாவில் பங்கேற்றுக் கொண்டார். தொடர்ந்து “பொன்மாலைப் பூக்கள்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டினை இயக்குநர் திரு சேரன் அவர்கள் நடாத்தி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மேடைக்கு வந்து நூல்களைப் பெற்றுக் கொள்ளுமாறு அடுத்தடுத்து விடுக்கப்பட்ட வேண்டுகோளினை அடுத்து நானும் சென்று ஒரு நூலினைப் பெற்றுக்கொண்டேன். அத்தனை பேருக்கும் சலிக்காமல் இன்முகத்துடன் கைகொடுத்து களைத்திருந்தார் சேரன். அவரது கைகள் கடினமாயிருக்கும் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அவை மிகவும் மிருதுவாகவேயிருந்தன. பொதுவாகவே ஒருவருடன் கைகுலுக்கும் போது என்னையறியாமலேயே என் மனம் அவரது கையின் மென்மையை எடைபோட்டுவிடும். இது நபிகள் அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தினை பாடசாலைக்காலங்களில் பாடப்புத்தகத்தில் படித்ததனால் ஏற்பட்ட விளைவு என்றே நினைக்கிறேன். மீண்டும் எனது இருக்கைக்கு வந்து கவிதைத் தொகுப்பினை பிரட்டினேன்.


“நீயும் போய் சிநேகாவைத் தொட்டு நடிச்ச கைக்கு, கைகொடுத்திட்டு வா.” என்கின்ற குரல் கேட்டு திரும்பிய எனக்கோ அதிர்ச்சி. அதைச்சொன்ன வாலிபருக்கு வயது நிச்சயம் 65 இற்கு மேல் இருக்கும். தன்வயதொத்த இன்னொரு இளைஞரிடம்(?) அவர் அதனைக் கூறிக்கொண்டிருந்தார். இருவருமே எனக்கு அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். புத்தகத்தினைப் படிப்பது போல் பாவனை செய்து கொண்டே அவர்களை அவதானித்தேன. முதலில் கூறியவர் தனது சட்டைப்பையில் இருந்து ஒரு பேனாவைத் தனது நண்பருக்கு எடுத்துக்காட்டி, இந்தப்பேனையாலே தான் சிநேகாவிடம் ஆட்டோகிராப் வாங்கியதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார். பின் அவரும் போய் சினேகாவைத் தொட்டு நடித்த கைக்கு கைகொடுத்துவிட்டு வந்தது வேறுவிடயம்.


சட்ட அமைச்சர் திரு. சண்முகம் அவர்கள் தனதுரையில் தமிழ்மொழி அழிந்து வருவதையிட்டு தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். பத்தாண்டுகளுக்கு முன்னர் ஏறத்தாழ 50% மான தமிழ்க்குடும்பத்தினர் இங்கே தங்களுக்குள் தமிழில் உரையாடிக் கொண்டதாகவும், தற்போது அது 20% மாகக் குறைந்து விட்ட தகவலையும் அவர் தெரிவித்தார். உண்மைதான். காலையில் நான் சென்றிருந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தமிழ் மாணவனுக்கு தமிழில் உரையாடத் தெரியவில்லை. அவரால் மற்றவர்கள் பேசுவதை ஓரளவிற்கு புரிந்து கொண்டாலும், ஒரு வார்த்தைகூட தமிழி்ல் பேசுவதற்கு அவரால் இயலவில்லை.


பின் திரு. சேரன் அவர்களைப் பற்றி அறிமுக உரையாற்றிய பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் இயக்குனர் சேரனுக்கு நடிக்கத் தெரியாது என்றார். ஆமாம்! பின்னர் சேரன் அவர்களின் உரையிலும் அதை அறியக்கூடியதாய் இருந்தது. அவர் உரையாற்றுகையில் எவ்வித நடிப்புமி்ன்றி வெளிப்படையாகவே பேசினார். சேரன் அவர்களின் சிறப்பியல்புகள் பற்றி மேலும் விபரித்த திரு இளங்கோ அவர்கள், சிங்கப்பூர் விமானநிலையத்தில் பணத்தாள் ஒன்றில் கையெழுத்திடுமாறு கேட்ட இரசிகர் ஒருவருக்கு பணத்தாளில் ஆட்டோகிராப் இட இயக்குனர் சேரன் அவர்கள் மறுத்துவிட்டதைக் கூறிப் புகழ்ந்தார்.


இயக்குனர் சேரன் அவர்களின் படங்களை விரும்பிப் பார்த்திருந்தாலும் அவரின்மேல் தனிப்பட்ட ரீதியில் எந்தவிதமான அபிமானமும் இன்றி ஏனைய பெரும்பாலான (பெரும்பாலான என்பதைக் கவனிக்கவும்) திரையுலகத்தினரைப் போலவே அவரையும் பத்தோடு பதினொன்றாக எண்ணியிருந்தேன், இறுதி நிகழ்வாக இடம்பெற்ற அவரின் சிறப்புரையினைக் கேட்கும் வரை. அதன்பின்னான கேள்வி பதில் நிகழ்வில் அவர் பதிலளித்த விதமும் வெளிப்படையாகவே தன் தவறுகளை நியாயப்படுத்தாமல் அதை ஒப்பக் கொண்ட விதமும், அவர் மேலான மரியாதையை மிகவும் உயர்த்தின.

(இந்தப்பதிவு நீண்டு விட்டதால் இவை பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில்)

மறக்கமுடியாத சரஸ்வதி பூசையும், சாப்பாடும்


அது 2003ஆம் ஆண்டு காலப்பகுதி. அக்பர் விடுதியை ஞாபகப்படுத்தும் விதத்திலேயே தெஹிவளையில் எமது வசிப்பிடமும் அமைந்திருந்தது. அதே விடுதி நண்பர்கள் பலரும் ஒன்றாக, மீண்டும் அக்பர் வாழ்க்கையை நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். அந்த வருடத்தைய வீட்டுப்பூசையன்று என்னையும் இன்னொரு நண்பனையும் தவிர ஏனையவர்கள் கொழும்பில் வசிக்கும் தங்களின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டிருந்தனர்.

எங்கள் இருவருக்கும் அவல், சுண்டல் எல்லாம் சாப்பிடவேண்டும் என்கின்ற அவா. கோவிலுக்குப் போகலாமா என்றான் நண்பன். எனக்கோ கோவிலுக்குச் செல்ல இஷ்டமில்லை. ஆயினும் இருவருக்குமே சரஸ்வதி பூசைச் சாப்பாடு சாப்பிட்டே ஆகவேண்டும் என்கின்ற கட்டாயம். அதற்கு உணவின் மீதான பிரியம் மட்டுமல்ல, மற்றைய நண்பர்களிடம் கடி வாங்காமல் இருக்கவேண்டுமே என்கின்ற மானப்(?) பிரச்சனை. சிறிது நேரம் யோசித்து விட்டு என்னுடன் பணியிடத்தில் அறிமுகமாகியிருந்த வேறொரு நண்பரின் வீட்டுக்குச் செல்வதென்கின்ற முடிவுடன் வெள்ளவத்தைக்குப் புறப்பட்டோம்.

அந்த நண்பரின் வீட்டில் இப்படியான கொண்டாட்டங்கள் எல்லாம் மிகச் சிறப்பாகச் செய்யப்படும். அங்கே சென்றபோது அவர்கள் வீட்டில் பூசை நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்மைக் கண்டதும் நண்பரின் தாயார் இருந்து சாப்பிட்டு விட்டுப் போகும்படி கூறினார்.

“ஏன் அன்ரி? என்ன விசேசம்?” என்றோம்.

“இண்டைக்கு சரஸ்வதிபூசை வீட்டில செய்யிறம்.” என்றார்.

“ஓ! அப்ப சரஸ்வதி பூசை தொடங்கீற்றுதா?” என்றான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

“பரவாயில்லை அன்ரி. நாங்க இன்னொரு நாளைக்கு வாறம். இண்டைக்கு வேற அலுவல் ஒண்டு இருக்கு.” என்றேன் நான்.

உடனேயே நாங்கள் வந்திருந்த வீட்டுக்குரிய நண்பர் “அதெல்லாம் முடியாது. இருந்து சாப்பிட்டிட்டுத்தான் போக வேணும். இன்னும் கொஞ்ச நேரத்தில பூசையெல்லாம் முடிஞ்சிரும்.” என்றவாறே பூசையறைக்குள் சென்று விட்டார்.

“இல்ல, நாங்க போகவேணும்.” என்றவாறே தலையைச் சொறிந்தான் என்னுடன் வந்திருந்த நண்பன்.

மற்ற நண்பரின் தாயாரின் வற்புறுத்தலின் பேரில் ஒருவாறாக இருவரும் இருந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வதற்கு இணங்கிக் கொண்டோம். சிறிது நேரத்திலேயே சக்கரைப் பொங்கல், அவல், சுண்டல் உழுந்து வடையென வயிறும் மனமும் நிறைந்துவிட விடைபெற்றவாறே வீட்டை விட்டு விலகி வீதிக்கு வந்தவுடன் ஆரம்பித்த சிரிப்பு தெஹிவளையில் எமது இருப்பிடம் வந்து சேர்ந்த பின்னும் நிற்கவில்லை. மறுநாள், என்றைக்கேனும் நான் மீண்டும் எழுத ஆரம்பிக்கும் காலங்களில் இந்நிகழ்ச்சியைப்பற்றி கட்டாயம் எழுதுமாறு என்நண்பன் கேட்டுக்கொண்டான்.

அதற்கடுத்தடுத்த வருடங்களில் வந்த சரஸ்வதி வீட்டுப்பூசையன்று நாங்களே அவல் மற்றும் சுண்டல் செய்து கொண்டதும், வேறு நண்பர்களின் இடங்களில் கோழிப்பொங்கல் செய்து பகிர்ந்து கொண்டதெல்லாம் வேறு விடயம்.

Friday, September 25, 2009

நிலைமாறும் உலகம்.


இன்றைய நடுநிசி தாண்டிய நள்ளிரவில், தொடரூர்ந்து (MRT) விட்டு, கூடவந்த நண்பர்கள் விலகி எனது இருப்பிடம் நோக்கிய நடைப்பயணத்தில் IPod இனை அணிந்து கொள்ள, “நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி....” என்கின்ற பழைய பாடல் நெஞ்சத்தைக் கிள்ளியது.

இருப்பிடம் அடைந்து இணையத்தில் இணைகையில் “மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது.” என்கின்ற மிகப்பிரபலமான வாக்கியம் (Change is the one that never changes in the world) கண்ணில் பட்டது.

மின்னஞ்சலில் வாசிக்கப்படாதிருந்த மின்மடல்களில் ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் Yahoo Geocities யிடமிருந்து வந்திருந்தது.

ஆகா! அவர்களும் கடையை மூடுகிறார்களாம்.

2000ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பல்வேறு நிறுவனங்கள் இலவச இணையத்தள சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தாலும், அப்போதெல்லாம் நிரந்தர நம்பகத் தன்மை கொண்டதாக Yahoo குழுமத்தின் geocities சேவையே விளங்கியது. பல தளங்களில் உருவாக்கி வைத்திருந்த இலவச இணையத்தளங்கள் பலவும் சிலமாதங்களுக்குத் தொடர்ச்சியான கவனிப்பில்லாமல் இருக்கையில் அந்த சேவை வழங்குனர்களால் துண்டிக்கப்பட்டிருந்தன. ஆயினும் Yahoo குழுமம் தனது சேவையினைத் தொடர்ச்சியாக வழங்கி அதன் கொள்கைகளைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த நம்பிக்கையிலும் கைவைத்து விட்டார்கள். வரும் ஐப்பசி (October) 26 ஆம் திகதியுடன் Yahoo குழுமத்தின் Geocities தனது இலவச இணையத்தள சேவையினை நிறுத்திக் கொள்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

அனிச்சையாய் mouse pointer கணினியின் வலப்பக்க கீழ் மூலையில் சென்று ஓய்வெடுக்க September 26, 2009 என இன்றைய தேதி மின்னியது.

ஒவ்வொரு கணங்களும் மின்னல்வேகத்தில் ஓடிமறைய காலச்சக்கரம் சீக்கிரமாய்ச சுழன்று செல்வதான உணர்வுகள்.

சில தசாப்தங்களுக்குள் எத்தனை மாற்றங்கள். இப்படியான ஓர் தினத்தில்தான் பாரதத்தின் பணநோட்டுக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் காந்தியின் (மகாத்மா) வேதனையுடன் கூடிய அவமானம் கலந்த கண்ணீரில் கரைந்து போயிருந்தன.

பாரதத்தின் தேசபிதாவாகக் கருதப்படும் மகாத்மா காந்தி, பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர் அந்நாட்டுக்கு இந்திய திறைசேரியிலிருந்த பகிர்நதளிக்கப்படாதிருந்த நிதியினைப் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கச் சொல்லி, இந்திய அரசிற்கு எதிராக அவரது பாணியிலான அகிம்சாவழியிலான உண்ணா நோன்பினை மேற்கொண்டிருந்தார். அப்போதைய பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களும், பாரதத்தின் பண நெருக்கடிக்கள்ளும் மகாத்மாவின் போராட்டத்திற்கு மதிப்பளித்திருந்தார்.

பின் பேரன்கள் காலம், மாற்றம் மட்டுமே மாறாதது என்பதை அதுவும் உணர்த்தியது.

Wednesday, September 16, 2009

இன்றுடன் நிறைவுற்ற இன்று ஒரு தகவல்


இன்றைய மாலைநேரச் செய்தி இந்தத் தகவலைச் செவியில் அறைந்தது. தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் இன்று (16 புரட்டாதி 2009) இயற்கையெய்தி விட்டார். இனிமேல் எமக்கு இன்று ஒரு தகவல் சொல்ல அவர் வரமாட்டார்.

பிரபலமான எழுத்தாளரும் வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பேச்சாளருமான அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், தமிழ் உலகால் நன்கு அறியப்பட்டவர். தன் தனிப்பட்ட பாணியிலான பேச்சாற்றலினால் கேட்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். அவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினை அநேகமாக தமிழ் வானொலி நேயர்கள் அனைவருமே இரசித்திருப்பார்கள். யாழ்ப்பாணத்தில் 'வலம்புரி' நாளிதழ் தினந்தோறும் இவரின் 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியினைப் பிரதியெடுத்து வெளியிட்டு வந்தது.

நல்லவொரு கருத்தினைக் கூறிவிட்டு முத்தாய்ப்பாக அதற்குப் பொருத்தமானவொரு நகைச்சுவைக் கதையையும் கூறி எம் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். முதன்முதலில் அவரது நிழற்படத்தினைப் பார்த்த பொழுது இவரா அவர் எனச் சந்தேகமாகவே இருந்தது. கருத்துக்களில் மட்டும் சொல்லாது வாழ்க்கையிலும் செய்து காட்டிய மிக அரிய எளிமையான மனிதர் அவர். அவரை முதற்தடவை பார்க்கும் எவருமே இந்த மனிதருக்குள் இப்படியொரு திறமையிரக்கும் என நம்பமாட்டார்கள். அவரது ஒரு நிகழ்ச்சியில் அவரே இதைப்பற்றிக் கூறியிருக்கிறார். அது அவர் தொலைக்காட்சியில் அறிமுகமாகியிராத காலம். ஆனாலும் வானொலியினூடாக அவரது 'இன்று ஒரு தகவல்' மூலம் தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்கின்ற பெயர் பிரபலமாகியிருந்தது. ஒருமுறை அவர் பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் அவரின் பின்னால் இருந்தவர்களில் ஒருவர், மற்றவரிடம் “முன்னுக்கிருப்பவரைப் பார்த்தால் தென்கச்சி கோ.சுவாமிநாதன் போல் உள்ளது.” என்றுகூற அதற்கு மற்றவர் “இருக்காது, அவர் எவ்வளவு அறிவாளி. இவரைப் பார்த்தால் படித்தவர் போலவா தெரிகிறது?” என்றாராம். நம்மாளோ (அதாங்க தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள்) எதையுமே காட்டிக்கொள்ளாமல் அமைதியாய் இருந்துவிட்டாராம்.

அண்மையில் இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்களே? ஒரு குட்டிக்கதை மூலம் கேட்பவர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? எனக் கேட்டதற்கு அவர் அளி்த்த பதில்;

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

''ஈழத் தமிழர்கள்!''


(தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களுக்கு எமது இதய அஞ்சலிகள்)

Monday, August 31, 2009

கனவினைக் குழைத்தொரு



அவனுக்குக் குழப்பமாயிருந்தது. எப்படி இப்படி? தலை விண்விண்ணென வலியைக் கிளப்பிக் கொண்டிருந்தது. இது மப்புத்தான். ஆனால் எப்படி? அவனுக்கு சுத்தமாக நினைவிற்கு வரவில்லை. யாருடன் சென்றிருப்பான் எனக் குழப்பமாயிருந்தது. நிச்சயமாக இது பியராக இருக்க முடியாது. அவனது பிரியத்திற்குரிய ரைகர் பியர் ஒருபோதும் இப்படியான ஒரு போதையைத் தந்ததில்லை. இது வேறு. எல்லாமே குழம்பிப்போன நிலை. அழைத்துச் சென்றவன் வேறு ஏதேனும் 'பெரிசு' கலந்து தந்திருப்பானோ?. இல்லையில்லை. இது கனவு. வெறும் கனவு மட்டுமே. இது நிஜமெனில் கூட வந்தவனையாவது அவன் நிச்சயம் நினைவில் வைத்திருந்திருப்பான். மழைக்கால இருட்டென்றாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்பதற்கு இன்றுவரை அவன் உதாரணமாய் இருந்தவன். ஆக இது கனவே தான். கனவில் மட்டுமே சம்பந்தாசம்பந்தமில்லா நிகழ்ச்சிகள் வரும். அவன் இதைக் கனவென்றே நம்பத் தொடங்கினான்.

கனவென்பது மனதிற்கு உறுதியானதும், கனவிலேயே அவன் தான் குடித்திருக்கின்றேனா என்பதை உறுதிப்படுத்த விரும்பினான். எழுந்து நடந்தான். உடல் இலேசாகியிருந்தது போன்ற உணர்வு. மெல்ல வீதியைக் கடந்து நடைபாதையில் நடந்தவன் எதிர்பாராத விதமாய் எதிரே வந்தவருடன் மோதிக்கொண்டான். பலத்த இடி முன்நெற்றியில். தடவிவிட்டுக் கொண்டான். வலி அடங்குவதாய்த் தெரியவில்லை. கனவென்றால் இப்படி வலிக்காதே. ஒருவேளை இது நிஜமோ? தன்னைத்தானே கையில் கிள்ளிக் கொண்டான். வலிமட்டுமல்லாது கிள்ளிய இடம் கன்றிப்போய் இருந்தது. அப்படியானால் இது கனவல்ல. இது நிஜமென்று இப்போது நினைக்கத் தொடங்கினான்.

வயிறு பசித்தது. சற்றுத் தொலைவில் சாப்பாட்டுக்கடை தெரிந்தது. அருகே செல்ல ஊதுவத்தி வாசனை மூக்கைத் துளைத்தது. இருக்கையில் அமர முன்னுக்கிருந்தவர்கள் கையை உதறி விட்டு எழுந்தார்கள். பணியாளுடன் பிரச்சனைப்பட்டுக் கொண்டே கல்லாவை நெருங்கியவர்கள். “தோசையின்ர திறத்தில ஆட்டுக்கல்லுக்கொரு மாலை” என்று கோபமாகத் திட்டியவாறே வெளியேறினார்கள்.

அவன் ஆட்டுக்கல்லைப் பார்த்திருக்கிறான். அதில் தோசைக்கு மாவாட்டியுமிருக்கிறான். மாலை போடப்பட்டிருந்த ஆட்டுக்கல்லை உற்று நோக்கினான். அது ஆட்டுக்கல்லல்ல. அவனுக்கது உறுதியாய்த் தெரிந்தது. ஆட்டுக்கல்லின் வடிவில் அமைந்தவொரு உருவம். அந்த உருவத்தை அவன் முன்னரும் பார்த்திருக்கிறான். அந்த உருவத்தைப் பற்றி அவன் புத்தகங்களிலும் வாசித்திருக்கிறான். சட்டென எதுவும் நினைவிற்கு வரவில்லை. அவனுக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. எழுந்து மீண்டும் நடக்கத் தொடங்கினான்.

இப்போது அவனுக்கு சந்தோசமாயிருந்தது. அது பற்றிய சிறுகுறிப்பொன்று அவன் நினைவிற்கு வந்து விட்டது. அதைப் பற்றிக் கண்ணதாசனின் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது கலவி நிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. புணர்ச்சி நிலையை எதற்காய் ஒரு குறியீட்டால் காட்டவேண்டும். பின் எதற்காய் அதற்கு மாலை போடவேண்டும். ஆகா! அங்கே ஏதேனும் சக்தி ஒளிந்து கிடக்கிறதோ? அதுதானே! புதிதாய் ஒரு ஜீவனை வேறெந்தக் கருவிகளால் உண்டாக்க முடியும்? ஏதோ புரிவது போலவும் புரியாதது போலவும் தோன்றியது. குழப்பம் மறுபடி கூடுவதாய்த் தோன்றியது. இது கனவா இல்லை நனவா என்கின்ற சந்தேகம் மீண்டும் முளைத்தது. இரண்டு பியர் அடித்துவிட்டுப் பேசாமல் போய்ததூங்கி விடலாம் என்றது மனது.

அவன் நடந்து சென்ற பாதையிலேயே அவன் வழக்கமாகச் செல்லும் அந்தக் கடையும் இருந்தது. அவன் தனது வழமையான இருக்கையில் அமர்ந்ததுமே தனது வாடிக்கையாளரைக் கண்டுவிட்ட அந்த இளம்பெண் அவனுக்குப் பிரியமான ரைகர் பியருடன் அவனை நெருங்கினாள். என்றுமில்லாதவாறு இன்று அவள் மிகவும் கிளர்ச்சியூட்டுபவளாய்த் தெரிந்தாள். 'கறந்த இடம் கண்நாட பிறந்த இடம் மனம் நாட...'

ச்சே! எனக்கு என்னவோ ஆயிற்று அவன் மிகத் தீவிரமாகக் குழம்பினான். இது கனவா நிஜமா? எப்படி உறுதிப்படுத்துவது? அந்தப் பெண்ணிடமே ஒரு வெற்றுத்தாளும் ஒரு பேனையும் கொண்டுவருமாறு கேட்டுக் கொண்டான். இப்போது அவனுக்குத் திருப்தியாய் இருந்தது. இது நிஜமெனில் தான் எழுதுவதே ஒரு படைப்பாய் மாறக்கூடும் என அவன் நம்பினான். இல்லை இதுவொரு கனவெனில் தூக்கம் கலைந்த பின்னர் எழுதிய தாள் இருக்காதே. ஆகவே இது கனவென்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவன் நினைத்தான். அவன் தன் மனதில் தோன்றுபவற்றை காகிதத்தில் எழுத நினைத்தான்.

பேனாவை ஒருதடவை பார்த்தவனின் பார்வை அதிலேயே பல நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. இந்த முனைவடிவை வேறெங்கோ பார்த்திருக்கிறேன். அவன் பார்வையில் இப்போது அந்தப் பேனா மறையத் தொடங்கியிருந்தது. திடீரென அது ஒரு துப்பாக்கிக்குண்டின் முனைப்பகுதியாய் அவன் நெஞ்சைக் குறிபார்த்தது. இந்தச் சின்ன ரவை என்னை என்ன செய்யும் என்று எழுந்த அலட்சியம் சில நொடிப்பொழுதுகளிலேயே அமுங்கிப் போனது. இப்போது அது 50 கலிபர் துப்பாக்கியின் ரவையின் அளவிற்கு வளர்ந்து விட்டிருந்தது. அவனுக்குள் பயம் வேர்விடத் தொடங்குகையில் அது ஒரு ஆர்பிஜி எறிகணையின் அளவிற்கு வளர்ந்திருந்தது. அது தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. இப்போதைய அதன் பரிமாணத்தை அவன் தன் சின்ன வயதில் பார்த்திருக்கிறான். 50 கிலோகிராம் எடையுள்ள வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட விமானத்திலிருந்து வீசப்பட்டவொரு குண்டினை அவன் 1985ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்/புனித பததிரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற கண்காட்சியில் பார்த்திருக்கிறான். பின்நாட்களில் அதை விடப் பாரிய பலமடங்கு எடையுள்ள விமானக்குண்டுகளைப் பார்த்திருந்தாலும் அந்த வடிவத்தில் அவன் பார்த்திருந்த மிகப் பெரிய குண்டு அதுவாகவேயிருந்தது. எனவே இதைவிடப் பெரிதாக அந்தப் பேனா வளரமுடியாது என்கின்ற அவன் கணிப்பைப் பொய்யாக்கி அது மேலும் வளரத் தொடங்கியது.

ஒருவேளை அணுகுண்டு இந்தளவாக இருக்குமோ என்று அவனுள் எழுந்த அனுமானத்தின் அளவுடன் ஒப்பிடுகையில் அந்தப் பேனா சிறிதாகவேயிருந்தது அவனுக்கு ஆறுதலைத் தந்தது. ஆயினும் அது தொடர்ந்து வளர்ந்து அவன் கற்பனையைத் தகர்க்க அவன் உடையத் தொ்டங்கினான். இப்போது அந்தப் பேனாவைப் பார்க்கையில் அதன் முகப்புத் தோற்றம் ஒரு பாரிய விமானத்தின் முகப்பைப் போல் தோன்றியது. இன்னொரு பார்வையில் அதுவொரு நீர்மூழ்கிக் கப்பலின் முகப்பை ஒத்திருந்தது. எப்படியெனினும், தன்னால் வளர்ந்துகொண்டிருக்கும் அந்தப்பேனாவை, தான் அறிந்த வேறொரு பொருளுடன் ஒப்பிடக்கூடியதாயிருப்பதில் அவனுக்குள் ஒருவகை திருப்தியும் சந்தோஷமுமே காணப்பட்டன.

அந்தப் பேனாவை அற்பமாய்ப் பார்த்தான். அது இப்போது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. முடியாது. இதற்குமேல் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கவோ கற்பனை பண்ணிப்பார்க்கவோ அவனால் முடியாது என்பதை உணரத் தொடங்கினான்.

விஸ்வரூபமாய் விரிவடைந்திருந்த பேனா இப்போது அவனை இந்தப் பேரண்டத்தின் ஒரு கோடிக்குள் தள்ளிவிட்டு எங்கும் நீக்கமற விரிவடைந்திருப்பதாய் உணர்கையில் அவன் உருகத் தொடங்கியிருந்தான். அவனுக்குள் ஏற்கனவே உருவாக்கி வைத்திருந்த ஒப்பீடுகளும் எல்லைகளும் உடைந்து சிதறின. அவன் நாபிக்கமலத்திலிருந்து புறப்பட்டு “ஓம்” என்றவாறே அகிலமெங்கும் அதிர்ந்து பரவிய உட்சக்தியுடன் அவன் இலேசாகி, மேலும் இலேசாகி, மேலும் மேலும் இலேசாகி எங்கும் கலக்கத்தொடங்கினான். பின் கரைந்து காணாமல் போனான்.

Monday, August 24, 2009

நினைவுகளில் நீ

முதற்காதலும் முதல்முத்தமும் மட்டுல்ல
முதன்முதலாய் மரிக்கப்பட்ட நட்பும்
மறக்க முடியாதது தான்.

காதலில் தொலைந்தவர்கள் மட்டுமல்ல
நட்பைத் தொலைத்தவர்களும்
கவிதை வரையத் தொடங்கலாம்.

ஜெயந்தா!
அகமகிழ்ந்திருந்தோம்
அஜந்தா ஓவியமாய்
அழியாப் புகழ்பெறுவாயென.

பதின்மப் பருவத்தின்
ஆரம்பப் படிக்கட்டில் நாம்.
உனக்கென்ன வயதப்போ?
பதின்மூன்றா பதின்நான்கா?

பாலகராய்த்தான் நாம்
பள்ளிக்குச் சென்று வந்தோம்.
பாதகர்கள வந்தார்கள். எம்மைப்
பரிதவிக்கச் செய்தார்கள்.

கொடியபடை பாதைகண்டு
விலகிவிட நின்ற உந்தன்
முன்னிருநாள் பசியறிந்த
சிற்றன்னை கஞ்சி தந்தாள்.

கஞ்சி வாயில் வைக்கவில்லை,
கயவர் வாயில் வந்து விட்டார்.
ஓடச்சொல்லிப் பணித்துவிட்டு
சடசடத்தது அவர் துப்பாக்கி.

ஓட்டப் பந்தயத்தில்
எப்போதும் நீ முதலிடம்தான்.
வெற்றிக்கம்பம் தாண்டிக்கூட
களைத்து நீ வீழ்ந்ததில்லை.

இம்முறை நீ வீழ்நதாயாம்.
வீழ்ந்தபின் எழவேயில்லையாம்.
நீ மட்டுமல்ல உன் அயலவர்கள்
எல்லேர்ரும் உன்னுடன் தானாம்.

சேதி அறிகையில் நெஞ்சு துடித்தது.
ஆதி மூலமோ அறியாத் துயிலிலாம்.
ஆரொடு நோவோம்? ஆர்க்கெடுத்துரைப்போம்?
வேரொடு பிடுங்கி, வீசப்பட்ட எம்வாழ்க்கை

உடல்கள் அழியலாம் கொண்ட
உறவுகள் அழிவதில்லை. நீ
மறைந்தாலும் உன் நினைவுகள்
மறைவதில்லை.

(24-08-1990 அன்று வேலணையில் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட இன்பநாயகம் ஜெயந்தனின் 19ம் ஆண்டு நினைவாகவும் அன்றைய தினத்தில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்காகவும்)

Saturday, August 22, 2009

அந்த மூன்று நாட்களும், சிந்திய குருதியும் அதன் பின்னான விளைவுகளும்.



அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்கின்ற பழமொழியினையோ அல்லது ஆவிகள் பழிவாங்குவதைப் பற்றியோ நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அன்றைய பொழுதும் வழமை போன்றே விடிந்தது. காகங்கள் கரைந்திருந்தன. சேவல்கள் அதிகாலையிலேயே கூவிவிட்டிருந்தன. காலைக்கடன்களை முடித்துவிட்டு வந்து அன்றைய தினநாட்காட்டியில் தேதியினைக் கிழித்தேன்.

ஆவணி 22, 1990

தேநீர் பருகுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த வேளையில்தான் அந்தச் சத்தங்கள் எம்செவிகளை வந்தடையத் தொடங்கியிருந்தன. தூரத்தில் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சத்தங்கள் யாரோ இந்தக் காலை வேளையில் விண்கட்டிப் பட்டம் பறக்க விடுகிறார்களோ என்கின்ற சந்தேகத்தையே ஆரம்பத்தில் எழுப்பியிருந்தாலும், அதனுடன் சேர்ந்து கேட்ட உலங்குவானூர்தியின் சத்தம் அட்ரீனலின் சுரப்பியினைத் தூண்டி விட்டிருந்தது. பொம்மர் என்று அழைக்கப்படும் சியாமாசெட்டி ரக குண்டுவீச்சு விமானங்களின் ஓசையுடன் உலங்குவானூர்திகளின் ஓசையும் கேட்கவே புரிந்து விட்டது, எங்கோ தாக்கப்போகிறார்கள் என்பது. பெரும்பாலும் மக்கள் அதிகம் நடமாடும் சந்திகளில் தான் குண்டுவீச்சுக்கள் நடைபெறும் என்கின்ற பட்டறிவு ஏற்கனவே இருந்ததாலும் எங்களின் வீடும் வங்களாவடிச் சந்திக்கு அண்மையில் இருந்ததாலும் உடனேயே நாங்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் சென்று விட்டோம்.

தொடர்நது சில நிமிடங்கள் வட்டமிடுவதை ஓசையில் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாய் இருந்தது. திடீரென மிகுந்த வீச்சுடன் விமானங்கள் ஒலிஎழுப்ப “றேஸ் பண்ணுறான். எங்கையோ குத்தப்போறான். காதைப்பொத்துங்கோ” எனக்கேட்ட குரல் தொடர்ந்து எழும்பிய பாரிய வெடியோசைக்குள் கரைந்து போனது. அடுத்தடுத்து நான்கு குண்டுகளை வீசிவிட்டு விமானங்களின் ஒலி மறையவே உலங்குவானூர்திகள் தங்கள் கைவரிசைகளினை 50 கலிபர் துப்பாக்கிகளினூடாகக் காட்டத் தொடங்கியிருந்தன. ஏறத்தாழ ஒரு மணி நேர இடைவேளையின் பின் ஓசைகள் அடங்கியிருக்கவே பதுங்கு குழியினை விட்டு வெளியே வந்தோம். வந்து சிறிது நேரத்திலேயே மீண்டும் உலங்குவானூர்திகளின் ஓசை நெருங்கவே மீண்டும் பதுங்கு குழியினைத் தஞ்சமடைந்தோம். அன்றைய பொழுது பதுங்கு குழிக்குள்ளேயே கழிந்தது.

அது யாழ் கோட்டைக்குள் இருந்த சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டிருந்த காலம். ஆகவே வேலணையில் எமது பகுதிகளிலும் சிறிலங்காவின் விமானப்படையினர் இடையிடையே வான்வழித் தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் அன்றைய நாள் பூராவும் விமானப்படை விமானங்கள் எம்மை பதுங்குகுழிகளுக்குள் முடக்கியிருந்தனர். அன்றைய இரவும் அடிக்கொரு தடவை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களால் வீடுகளிற்குள் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

மறு நாள் காலையும் விமானப்படையின் குண்டு வீச்சு விமானங்கள் வந்து தங்கள் கடைமைகளைச் செய்திருந்தன. ஆயினும் முதல் நாளைப் போலல்லாது இடையே சில மணித்தியாலங்கள் நீடித்த அமைதியில், ஊர்காவற்றுறையில் சிறிலங்காப் படையினர் தரையிறக்கப்பட்டு முகாம் அமைத்திருக்கின்றார்கள் என்பதை அறிய முடிந்தது. வீட்டின் யன்னல் கண்ணாடிகள் யாவும் நொறுங்கி வீட்டிற்குள் கால்வைக்க முடியாதபடி செய்திருந்தன. வீட்டுச் சுவர்களில் விரிசல்களைக் காணமுடிந்தது. கூரையோடுகள் விலகி நீக்கல்களை ஏற்படுத்தியிருந்தன. முந்தைய தினப் பட்டினி வேறு வயிற்றைக் கிள்ளியது. அவசரஅவசரமாக உணவு சமைக்கப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் விமானங்கள். உடனேயே பதுங்குகுழி. விமானச் சத்தங்கள் குறைந்ததும் மீண்டும் சமையலறை என்றவாறாக ஒருமாதிரி அன்றைக்கு எங்களால் உணவு உட்கொள்ள முடிந்திருந்தது. அன்றைய இரவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்களை அடுத்து அன்றைய இரவையும் பதுங்குகுழியிற்குள்ளேயே கழிக்க வேண்டிய நிலை. தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற குண்டுவீச்சுக்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் எத்தனைபேர் பாதிக்கப்பட்டார்களோ என்கின்ற கவலைவேறு.

மறுநாள் பொழுதும் விடிந்தது.

அது 1990 ஆவணி 24ம் திகதி.

கடந்த இருநாட்களிலும்விட அதிகமான விமானங்களினதும் உலங்குவானூர்திகளினதும் இரைச்சல்கள் காதைக் குடைந்தன. குண்டுத்தாக்குதல்களால் பதங்குகுழியே அதிர்ந்தது. பின் பத்து மணியளவில் குண்டுவீச்சு விமானங்களின் ஓசை குறைந்துவிட உறுமிஉறுமியவாறே உலங்குவானூர்திகள் வட்டமிட்டுக் கொண்டும் இடையிடையே 50 கலிபர்களால் சடசடத்துக் கொண்டுமிருந்தன. மாலை மங்குகையில் யாவும் அமைதியாகி விட்டிருந்தது. பதுங்குகுழிகளை விட்டு வெளியே வந்து அயலவர்களுடன் உரையாடத் தொடங்கிய போதுதான் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின.

திரிவிடபலய என அழைக்கப்படும் முச்சக்தி படை நடவடிக்கையாக, சிறிலங்காவின் அந்நாளைய நட்சத்திரத் தளபதிகளான அப்போதைய வடமாகாண படைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும் யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகியோரின் நேரடி வழி நடத்தலில் ஊர்காவற்றுறையில் தரையிறக்கப்பட்டு இருநாட்கள் நிலை கொள்ள வைக்கப்பட்டிருந்த சிறிலங்காப் படையினர் கரம்பன், நாரந்தனை, சரவணை, பள்ளம்பலம், வேலணை, சாட்டி, மண்கும்பான் வழியாக அன்றைக்கே அல்லைப்பிட்டியை அடைந்திருந்தனர். அவர்கள் சென்ற வழிகளில் இருந்த கிராமங்களையெல்லாம் சிதைத்து அழித்திருந்தனர். அகப்பட்டவர்களையெல்லாம் சுட்டும் வெட்டியும் கொன்று விட்டிருந்தனர் பலரை இறந்துவிட்டதாக எண்ணிக் காயங்களுடனேயே வெளிகளுக்குள்ளும் பற்றைகளுக்கும் விட்டுச் சென்றிருந்தனர். உறவினர்கள் தங்கள் காயப்பட்ட உறவுகளையும் கொல்லப்பட்ட சடலங்களையும், வேலணை அராலிப் பகுதியில் இராணுவத்தினர் சென்ற பாதையின் அருகேயிருந்த காணிகளுக்குள்ளும் பற்றைகளுக்குள்ளும் தேடியெடுத்துக் கொண்டிருந்தனர். அன்றைய பொழுதினில் மட்டும் சிறுவர்கள் உட்பட 350 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டிருந்தனர். பலர் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுசெல்லப்பட்டுமிருந்தனர். அதைத் தவிரவும் வேலணை மேற்குப் பிரதேசத்திலும், சாட்டி மாதா கோவில் மீதும் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டு வீச்சுத் தாக்குதலிலும் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தும் கொல்லப்பட்டுமிருந்தனர். (மறுநாள் ஆவணி 25ம் நாள் சிறிலங்கா இராணுவத்தினர், வேலணைத் தீவினை அடுத்திருந்த மண்டைதீவிற்குள் நுழைந்திருந்தனர். அங்கே அவர்களால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் சொல்லி மாளாதவை.)

தொடர்ந்து வந்த நாட்களில் ஊரைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானோர் இடம்பெயரவும் புலம் பெயரவும் வேலணை வெறிச்சோடத் தொடங்கியது. பின் 1990 புரட்டாதி 26 இல் யாழ்கோட்டையிலிருந்து பின்வாங்கிய படையினர் மண்டைதீவில் தரித்திருந்து பின் 1990 புரட்டாதி 28ஆம் நாள் தாங்கள் வந்த பாதை வழியே, குண்டுவீச்சுகளை நடாத்திவாறே மீண்டும் பின்வாங்கி ஊர்காவற்றுறையைச் சென்றடைந்தனர் பின் மீண்டும் வலம்புரி இராணுவ நடவடிககை மூலம் 1991 இன் நடுப்பகுதியில் தீவகப்பகுதி முழுமையாகப் படையினரால் ஆக்கிரமிக்கப் படுவதற்கு முன்பாக அங்கு வசித்த மக்கள் யாவரும் தங்கள் ஊர்களைவிட்டு வெளியேறியிருந்தனர்.

அது 1992 ஆவணி 08ஆம் நாள்

தீவகப் பகுதியிலிருந்து யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் பூர்த்தியாக்கிவிட்டு, படைநடவடிககையினை ஆரம்பிப்பதற்கு முதல்நாள். சில இராணுவ வாகனங்களில் சிறிலங்காவின் வடமாகாண படைத்தளபதி மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பே கடுவ, மற்றும் யாழ்மாவட்டப் படைத்தளபதி பிரிகேடியர் விஜய விமலரட்ண ஆகிய நட்சத்திரத் தளபதிகளுடன் ஏனைய முக்கியமான தளபதிகளும் இறுதி நேரக் கள யதார்த்தத்தை அறிவதற்காக வேலணை அராலித்துறைக்கு விஜயம் செய்திருந்தார்கள். அனைத்து நடவடிக்கைகளும் திருப்தியளிப்பதாகவே அவர்களுக்குப் பட்டது. அராலிச் சந்திக்கு அண்மையில் அவர்களின் வருகைக்காக உலங்குவானூர்தியொன்று காத்திருப்பதாகத் தகவல் வந்தது.

சற்றேறக்குறைய இரு வருடங்களுக்கு முன்னர் இதே அராலி வெளியில் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களைக் கொன்று குவித்துவிட்டுச் சென்ற அந்த சிறிலங்கா இராணுவத் தளபதிகள் தங்களுக்காகக் காத்திருக்கும் உலங்கு வானூர்தியை நோக்கி ஒரே வாகனத்தில் குதூகலத்துடன் புறப்பட்டார்கள், அவர்களின் வரவிற்காய் ஆவலுடன் காத்திருக்கும் கண்ணிவெடியை அறியாமல்.

இப்போது மறுபடியும் இந்தப் பதிவின் முதற் பந்திக்குச் செல்லுங்கள்.

முள்ளிவாய்க்கால் பற்றி என்கிறீர்களா?

பொறுத்திருந்து பார்ப்போம். தெய்வம் நின்றுதான் கொல்லுமாமே.



*****

பின்குறிப்பு: இந்தப் பதிவு சம்பந்தமான சில தகவல்களைப் பெறுவதற்காக இணையத்தினைத் துளாவியபோது மிக்க அதிர்ச்சியாக இருந்தது. இது சம்பந்தமான தகவல்கள் ஒரே ஒரு தளத்தில் மட்டுமே காணப்பட்டது. அதில் சில தகவல்களும், சில சம்பவங்கள் இடம்பெற்ற நாட்களும் தவறாகக் காணப்பட்டன. பின் வேலணையைச் சேர்ந்த பலரைத் தொடர்பு கொண்டபோதும் அவர்களால் இச்சம்பவம் நடைபெற்ற அந்த மூன்று நாட்களின் திகதிகளையும் சரியாக நினைவுபடுத்த முடியவி்ல்லை. ஈற்றில் நண்பர் ஒருவரின் உதவியுடன் அவரின் உறவினரூடகவே சரியான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. அந்தச் சம்பவத்தில் அவர் தனது நெருங்கிய உறவுகள் பலவற்றை இழந்திருந்தார். தகவல்களைத் தந்துதவிய அவருக்கும், அவற்றைப் பெற உதவிய நண்பனுக்கும் எனது நன்றிகள்.