1945 ஆவணி (August) 06ம் நாள் காலையும் வழமை போன்றே ஜப்பானின் ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எத்தனையோ சுனாமிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப்பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா கே (Enola Gay) என்கின்ற B-29 ரக விமானத்தில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து, அந்நாட்டின் விமானப்படை வீரரான போல் டிபெட்ஸ், ஹிரோஷிமா நகரினை அண்மித்துக் கொண்டிருக்கையில் நேரம் காலை 8.00 மணியினைத் தாண்டி விட்டிருந்தது. சரியாக காலை 8.15 இற்கு அந்த சூறாவளி விண்ணிலிருந்து தரைநோக்கி முதலாவது அணுகுண்டு மனிதகுலத்தை நாசமாக்க வெடித்துக் கிளம்பியது. சின்னப்பையன் (Little Boy) தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டான் என்கின்ற சேதியோடு போல் டிபெட்ஸ் தன் தாயகத்திற்கு திரும்பினார். ஹிரோஷிமா எரிந்தழியத் தொடங்கியது. முதலாவது அணுகுண்டின் அனர்த்தத்தைக் கண்டு மனிதகுலம் உறைந்தது. ஒற்றைக் குண்டு, ஒரு இல்சத்து நாற்பதினாயிரம் அப்பாவி மக்களுடன் அந்த நகரையே சுடுகாடாக்கியிருந்தது. இந்றைக்குச் சரியாக 64 ஆண்டுகள் கழிந்த பின்னரும்கூட மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாத நினைவுச் சின்ன நகரமாய் ஹிரோஷிமாவும் நாகசாகியும்.
சின்னப்பையனிற்கு 3 நாட்கள் கழித்து, கொழுத்த மனிதன் (Fat Man) என அழைக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டு நாகசாகி நகரினைத் துவம்சம் செய்திருந்தது. அத்துடன் நிபந்தனையற்ற சரணாகதியினை ஜப்பான் ஏற்றுக்கொள்ள இரண்டாம் உலகப்போர் உத்தியோகபூர்வமாக முடிவிற்கு வந்தது. ஆயினும், அணுகுண்டின் பிரயோகமின்றியே சில வாரகால இடைவெளிகளில், சோவியத் ரஷ்யப் படைகள் ஜப்பானுக்கெதிராக களத்தில் குதிக்கையில், ஜப்பான் சரணடைந்திருக்கும் என்பதும் அப்போதே அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஹிட்லரின் படைகளை விரட்டிச்சென்று வெற்றிவாகை சூடியிருந்த சோவியத் ரஷ்யாவின் செம்படைகள், நீண்டபோரினை அடுத்து சற்று இளைப்பாறிக்கொண்டிருந்த நேரம். அமெரிக்காவின் மூன்றெழுத்து நிறுவனம் மிகவேகமாக மூளையைக் கசக்கி, அடுத்த ஏகோபித்த வல்லரசாக தான் மட்டுமே விளங்கவேண்டும் என்கின்ற அதிகார வெறியுடனும், ஏனைய நாடுகளைத் தனது பலங்கொண்டு பணியவைக்கவேண்டும் என்கின்ற திமிருடனும் அந்த அராஜகத்தை நடாத்தி முடித்திருந்தது.
இன்றைய தேதியில் மட்டுமல்ல, அன்றுகூட, மனித உரிமைகள், மீறல்கள் என்று கூச்சலிடுவதெல்லாம் வெறும் 'பம்மாத்து'க்கு மட்டுமே. தனக்கு ஒரு நட்டமும் ஏற்படப்போவதில்லை என்று தெரிந்துவிட்டால் அமைதியாயிருப்பதும், அல்லது தனக்குபிடிக்காத மற்றைய நாடுகளுக்கு எதிரானவொரு துருப்புச் சீட்டாக அதனைப் பயன்படுத்த முடியுமெனின் வாய்கிழியக் கத்துவதும், இன்று எல்லா நாடுகளினதும் விதிகளில் ஒன்றாகிவிட்டதைப்பற்றிக் கதைப்பார் யாருமில்லை.
இன்று ஜப்பானும் ஐக்கிய அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள். சில சந்தர்ப்பங்களில் சில நாடுகளில் அமெரிக்காவால் நேரடியாக மூக்கை நுழைக்கமுடியாத சந்தர்ப்பங்களில், அதன் முகவராக ஜப்பான் செயற்படுவது ஒன்றும் பரமரகசியமல்ல.இன்றைய நினைவுநாளில், ஜப்பானிய தலைவர்களால், உலகில் உள்ள அத்தனை அணுவாயுதங்களும் அழிக்கப்படவேண்டுமென விடுக்கப்பட்டிருக்கும் அழைப்பு வரவேற்கப்பட வேண்டியது. அணுவாயுதங்கள் மட்டுமல்ல, கொத்தக்குண்டுகள், பொஸ்பரஸ் எரிகுண்டுகள் உட்பட அனைத்துரக அழிவாயுதங்களும் அழிக்கப்பட வேண்டியவையே.
எப்படி ஜப்பான் என்றவுடன் அணுகுண்டு நினைவிற்கு வருகிறதோ, அவ்வாறே ஜப்பான் என்றவுடன் நினைவிற்கு வரும் இன்னொரு விடயம் ஹைக்கூ.
மூன்று வரிகளில் அமைக்கப்படும் மிகச்சிறியவொரு கவிதை வடிவம். ஒரு கணநிகழ்வினை படம் பிடித்துக் காட்டி எம் கற்பனைச் சிறகினை விரித்துவிடும் அற்புதப்படிமம். இப்போதெல்லாம் தமிழில் கூட ஹைக்கூ கவிதைகள் பிரபலமாகி விட்டன. தமிழ்நாட்டுக் கவிஞர் ஒருவர் (பெயர் நினைவிற்கு வரவில்லை) ஹைக்கூ அந்தாதியே (நூறு ஹைக்கூ கவிதைகள்) எழுதிப் புதுமை செய்திருக்கிறார். அந்தாதி என்பது, ஒரு பாடலின் அந்தம் (முடிவு அல்லது இறுதி வார்த்தை), தொடர்ந்து வரும் மற்றைய பாடலின் ஆதியாக (ஆரம்பமாக அல்லது முதல் வார்த்தையாக) அமைய எழுதுவதாகும். எனக்குப் பிடித்த ஒரு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஜப்பானிய ஹைக்கூ;
உதிர்ந்த மலர்,
கிளைக்குத் திரும்புகிறது.
வண்ணத்துப்பூச்சி!
வண்ணத்துப்பூச்சி (Butterfly) என்றவுடன் இப்போதைக்கு சுபானு தான் நினைவிற்கு வருகிறார். மீண்டுமொரு தொடர் விளையாட்டிற்கு, இம்முறை அவரால் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். நன்றி சுபானு. நானும் மூவருக்கு இந்த வண்ணத்துப்பூச்சியை வழங்கவேண்டிய கட்டாயம். பெரும்பாலானவர்கள் ஏற்கனவே வண்ணத்துப்பூச்சியுடன் உறவு கொண்டாடி விட்டார்கள். இந்த மூவரின் தளங்களின் முகப்பிலும் வண்ணத்துப்பூச்சி பறக்காததால் என்னிடமிருந்து அவர்களிடம் பல்கிப்பெருகி (ஒன்றாய் வந்து மூன்றாய்ச் செல்கிறது) பறக்கிறது
1) பாலா இவரின் அத்தனை கவிதைகளையும் எனக்குப் படித்திருக்கிறது. அனாசயமாக வார்த்தைகளுக்குள் கருத்துக்களைப் புதைத்து விளையாடுகிறார்.
2) அறிவிலி என்கின்ற பெயரைச் சூட்டிக்கொண்டு இந்தியாவை ஒளிரவைத்துக் கொண்டிருப்பவர். இவரின் பயணக்கட்டுரைகள், இவர் போகுமிடமெங்கும் எம்மையும் கூடவே அழைத்துச் செல்கின்றன.(இவரிடமிருந்து எனக்கு வந்த சுவாரஸ்ய விருது, சுபானுவிற்குச் சென்றது. இப்போ சுபானுவிடமிருந்து வந்த வண்ணத்துப்பூச்சி விருது, இவருக்குச் செல்கிறது. உலகம் ரொம்பச் சின்னதா ஆயிட்டுதில்ல?)
3) கதியால் இவரது பெரும்பான்மையான இடுகைகள் கிரிக்கட் பற்றியே இருக்கிறது. எனக்கு அதில் ஆர்வம் இருப்பதில்லை. ஆனால் அவரின் சமீபத்தைய இடுகைகள், அதிலும் குறிப்பாக ஈழத்துச் சதன் பற்றிய பதிவினை அடுத்து இந்த வண்ணத்துப்பூச்சி அவரிடம் பறந்து செல்கிறது.