ஆங்கில மொழியினில் “Thank you” என்று ஒருவர் நாம் செய்த உதவிக்கு தனது நன்றியை கூறினால், அதை ஏற்றுக் கொள்ளும் முகமாக பதிலுக்கு நாம் “you are welcome” என்று சொல்கிறோம். ஆனால் தமிழில் “நன்றி” என்று கூறினால் பதிலுக்கு என்ன கூறுவது?
“நீங்கள் வரவேற்கப் படுகிறீர்கள்” என்று சொல்வது சரியாகுமா?
கடந்த வாரம் கனடாவில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன். அந்த அழைப்பிற்கு பதிலளித்தவர் ஒரு இளைஞர். அவர் கொழும்பில் பிறந்து வளர்ந்ததுடன் சர்வதேசபாடசாலை (international school) ஒன்றினில் தனது கல்வியை மேற்கொண்டு பின் பட்டப்படிப்பிற்காக வெளிநாடு சென்றவர். தனது விடுமுறையினைக் கழிப்பதற்காக கனடா சென்றிருந்தார். அவருக்கு பெரிதாய் தமிழ் தெரிந்திருக்காது என்கின்ற எண்ணத்தில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்து உரையாடினேன்.
என்ன ஆச்சரியம்! அவர் தூய தமிழில் என்னுடன் உரையாடினார். ஒரு ஆங்கில வார்த்தையைக் கூட அவர் பிரயோகிக்கவில்லை. சாதாரணமாக எங்கள் பேச்சு வழக்கில் கலந்த விட்ட “sure”, “thanks” போன்ற வார்த்தைகட்குகூட அவர் “நிச்சயம்”,“நன்றி” போன்ற வார்த்தைகளையே பிரயோகித்து எனக்கு அதிர்ச்சியளித்தார்.
இத்தனைக்கும் அதுதான் அவருடனான எனது முதல் உரையாடல்.
இந்த உரையாடலுக்கு முதல்நாள் மாலை நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த போது ஒரு நண்பர் கூறினார், நாளையிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு (பங்குனி 14 முதல் பங்குனி 18 வரை), செண்பக விநாயகர் ஆலயத்தில் கம்பன் கழகத்தைச் சேர்ந்த கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களின் கம்பராமாயண சொற்பொழிவு நடைபெற இருப்பதாக. (“நாடு கெட்ட கேட்டுக்கு நரிக்கு உழுந்து வடை கேட்டிச்சாம்.”).
தொடர்ந்த உரையாடலில், ஜெயராஜ் அவர்களால் “வாராதே வரவல்லாய்” என்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களைக் கேவலப் படுத்தி, அவர்களை மீண்டும் தாயகத்திற்கு வரவேண்டாம் என்று வலியுறுத்தி சமாதான காலத்தில் எழுதப்பட்ட கட்டுரையும், அதற்குப் பதிலளிக்கும் முகமாக பிரான்ஸில் இருந்து கி.பி.அரவிந்தன் அவர்களால் எழுதப்பட்ட “ஒரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்” என்கின்ற கட்டுரையும் அலசப்பட்டன.
ஜெயராஜ் அவர்களினால் முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று புலம் பெயர்ந்த தமிழர்களால் தமிழ்மொழி புறக்கணி்க்கப்படுகின்றது என்பதாகும். எனக்குத் தெரிந்த வரையில் இதுவரையில் யாரும் என்னுடன் நான் மேலே குறிப்பிட்ட நபரைப் போன்று தூய தமிழில் உரையாடியதில்லை. அப்படி வேறுயாரும் உரையாடியும் நான் பார்த்ததில்லை. எனவே கம்பராமாயணத்துடன் சேர்த்து ஜெயராஜ் அவர்களின் இந்த் கருத்துடனும் என்னால் உடன்பட முடியவில்லை.
கம்பன் அபரபிரம்மன் என்பதிலோ அல்லது கம்பனின் தமிழ்ப் புலமையிலோ எனக்கு மாற்றுக்கருத்துக் கிடையாது. ஆனால் வான்மீகியின் இராமாயணத்தையே தான் தமிழில் மொழிபெயர்ப்பதாகக் கூறி கம்பன் செய்த வம்(ப்)புகளை, கம்பனின் பக்கச் சார்பான தன்மைகளைப் பற்றி (கம்பராமாயணத்தை உண்மையென்று எண்ணி அதையே வரலாறாக நினைப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது) எழுதுவதென்றால் அது இன்னுமொரு இதிகாசத் தொடராக மாறிவிடக் கூடும். அது இந்தப் பதிவின் நோக்கமும் அல்ல.
சரி, “நன்றி” என்று ஒருவர் கூறினால் அதை ஏற்றுக்கொள்ளும் முகமாக பதிலுக்கு தமிழில் என்ன கூறுவது?
அந்த நபருடனான உரையாடலில் நான் “நன்றி” கூறியபோது பதிலுக்கு அவர் “நல்லது” என்று கூறினார்.
இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாமே.....