Showing posts with label திருநங்கைகள். Show all posts
Showing posts with label திருநங்கைகள். Show all posts

Saturday, July 4, 2009

மூன்றாவது பால் அல்லது மூன்றாம் பாலினம்

நேற்றைய பொழுதில் www.globaltamilnews.net இனில் மேய்ந்து கொண்டிருந்தபோது டி.அருள் எழிலன் அவர்களால் எழுதப்பட்டிருந்த “ரேவதி என்ற திருநங்கையின் கதை” யினை வாசிக்க நேர்ந்தது. (கீழே இணைக்கப்பட்டிருக்கிறது)

சில மாதங்களுக்கு முன்னர் மின்னல் FM இன் இரவு நிகழ்ச்சி ஒன்றில் (கண்ணாடித் துண்டுகள் என்கின்ற சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராயும் நிகழ்ச்சியென நினைக்கிறேன். சரியாக நினைவில்லை) திருநங்கைகள் பற்றியும், சமூகத்தில் அவர்கள் படும் இன்னல்கள் பற்றியும் அலசியிருந்தனர். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருநங்கை ஒருவர் தான் சந்தித்த இன்னல்களைப் பற்றிக் கூறியபோது மனம் கனத்துப் போனது.

எங்களில் எத்தனை பேர் இந்த மூன்றாவது பாலினரைப் பற்றி, அவர்களுக்கான பிரச்சனைகள் பற்றி, அவர்களின் உணர்வுகள் பற்றி சிந்தித்துப் பார்த்திருக்கிறோம்? பொதுவாகவே திருநங்கைகள் என்றவுடன் அவர்கள் பாலியல் தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற எண்ணக்கருத்தினையே இதுவரை ஊடகஙகள் செய்து வந்திருக்கின்றன. அவர்களைப் பற்றி உரையாடுவதையே கேவலமாகப் பார்க்கும் நிலையே இப்போதும் நீடிக்கிறது.

வரும் சனிக்கிழமை (11-07-2009) இங்கே சிங்கப்பூர் பெற்றோர் மாநாடு - 2009 நடக்க இருப்பதாகவும், பதின்ம வயதுப் பிள்ளைகளின் பெற்றோர் எவ்வாறு தங்கள் பிள்ளைகளின் பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளைக் கையாள்வது என்பது பற்றிய கலந்துரையாடலாக அது இருக்கும் எனவும் 'ஒலி FM' அடிக்கொருதரம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களாவது இந்த மூன்றாவது பாலினரைப் பற்றியும், அவர்களின் பிரச்சினைகள் பற்றியும் ஆரோக்கியமான முறையில் கருத்துக்களை முன்வைப்பார்களா?

வருங்காலத்தில் தனிப்பட்ட விபரங்களை நிரப்பும் படிவத்தில் (personal details form) ஆண்பால், பெண்பால் உடன் இந்த மூன்றாவது பாலினமும் இருக்குமெனவே நான் நம்புகிறேன். யார் கண்டது சிலவேளை அடுத்த நூற்றாண்டு காலப்பகுதியில் நான்கு பாலினமும் (ஆண், பெண், பெண்ணாக மாறிய ஆண், ஆணாக மாறிய பெண்), அதன் பின் மேலும் சில நூற்றாண்டுகள் கழித்து பாலினமே அழிந்துபோய் எல்லாமே தனியன்களாய் (குளோனிங் உபயத்தால்) அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

**************

இயங்குதளம் மாற்றி
நிறுவப்பட்ட கணனியாய்...
மென்பொருளில்
மறைந்திருக்கும் தவறாய்...
சொந்த உடற்கூட்டுக்குள்
எதிர்ப்பாலின் உள்ளப்பறவை.
மெல்லினத்தின் கட்டிற்குள்
இந்த வல்லினங்கள்.
மென்பொருளா வன்பொருளா
வலிமை மிகுந்தது?

அண்மையில் இந்தியாவில், புதுடில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின் மூலம் திருநங்கைகள் என்று அழைக்கப்படும் இந்த முன்றாவது பாலினத்தாருக்கு ஓரளவு நீதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது.

ம்ம்ம்ம..... எங்களுக்கு எப்போதோ?

******************

http://www.globaltamilnews.net இல் இருந்து,

(ஒரினச் சேர்க்கையை இயர்க்கைக்கு எதிரானது என்று சொல்லி தண்டிக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவு செல்லாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிருப்பதன் முலம் நீண்டகாலமாக ஓடுக்கப்படும் மூன்றாம் பாலினத்தோர் ஓரளவு உரிமை பெற வழி ஏற்பட்டிருக்கிறது. நான் திருநங்கை ரேவதியை இரண்டு வருடத்திற்கு முன் பெங்களூரில் வைத்து சந்தித்தேன். ரேவதி இச்சட்டப் பிரிவுக்கு எதிராக போராடினார். இப்போது சட்ட ரீதியானக வெற்றி பெற்றிருக்கும் சூழலில் இந்தக் கதை முக்கியத்துவம் உள்ளது என்பதால் விரிவாக மீண்டும் எழுதி இப்போது வெளியிடுகிறேன்.)



என்னை மாதிரி அரவாணிகளின் வேதனையைச் சொல்லும் இன்னொரு அரவாணி எழுதிய கவிதை இது. நீண்ட நாட்களாக இந்த வரிகளை நான் எப்போதும் என்னுடன் வைத்திருந்தேன். தூங்கி எழுந்தால் இந்த கவிதையின் முகத்தில் விழிக்கிற மாதிரிதான் இதை ஒட்டி வைத்திருப்பேன். இனி என் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்,

தமிழ் நாட்டில்தான் பெயர் சொல்ல முடியாத ஒரு கிராமத்தில் நான் பிறந்தேன்.ஒரு அக்கா மூன்று அண்ணன்கள் நான் கடைக்குட்டி. அதனால் எனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். அக்கா கோலம் போடும் போது நானும் அதிகாலையே எழுந்து போய் அக்காவுடன் கோலம் போடுவேன்.எப்படி புள்ளிவைப்பது? இட்ட புள்ளிகளை எல்லாம் இணைத்து அழகான கோலமாக எப்படி மாற்றுவது என்பதை எல்லாம் நான் அக்காவிடம் தான் கற்றுக் கொண்டேன். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் பிரியும் மாவு புள்ளியாய் மாறும் பக்குவம் வந்த பிறகு அக்கா எழுவதற்கு முன்பே நான் எழுந்து கோலம் போடத்துவங்கினேன். போட்டு முடித்து விட்டு வடிவான கோலமாக அது வந்திருக்கிறதா என இடுப்பில் வைத்தபடி நின்று பார்ப்பேன். அதில் மனசு நிறைந்து பூத்துப் போகும். அமமா பாத்திரம் கழுவும் போது நானும் கூடப்போய் நின்று அவங்களுக்கு உதவுவேன். அம்மா செய்கிற வேலைகளை எல்லாம் நானும் செய்வேன். ஒரு பெண் இன்னின்ன வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும் என சமூகம் தீர்மானித்திருக்கிறதோ அந்த வேலைகளை எல்லாம் நான் செய்வேன்.

மனசுக்கு மிகவும் சந்தோசமான காலம் அது...ஏன் தெரியுமா? பிறப்பால் ஆண் பிள்ளையானாலும் மனதால் ஒரு பெண்ணாக நான் மாறிய காலமாக அது இருந்ததால் அதனால்தான் நானோ நீங்களோ விரும்பியோ விரும்பாமலோ திருநங்கைகள் உருவாவதில்லை.