Tuesday, July 7, 2015

பார்வை

வெறுமை











வெள்ளைத்தாளில்
புள்ளிவைத்து
புளித்துப்போன
கேள்வியைக் கேட்ட
மனோதத்துவ நிபுணரிடம்
சலித்துக்கொண்டே சொன்னேன்
புள்ளிதான் தெரிகிறது.

உறுத்தலைப்பார்க்காமல்,
பரந்திருக்கும் வெறுமையை
பார்க்கப்பழகென்றார்

அதன்பின்னர்தான் எனக்கிப்படி!

அணுவிலும் அநேகம் வெறுமையென்றே
ஆழ்ந்துபார்க்க கறை மறைந்தது
தொடர்ந்துபார்க்க தாளும் மறைந்தது

பின்னும் பார்க்க,
பின்புலம் மறைந்து பின்னும் மறைந்து
அகிலமும் மறைந்தனைத்தும் மறைந்து

மறைந்ததெல்லாம் மறைந்து
மன்னிக்கவும்.
மறைந்ததெல்லாம் மறந்து
எல்லாம் மறந்து
மருந்தும் மறந்து

அகவைத்தியரிடம் செல்லாமல் நான்
கண்வைத்தியரிடம் சென்றிருக்க வேண்டும்