(2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்டது)
படம்: https://deepai.org/ என்னும் இணையத்தளத்தின் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
இரவுப் பறவையின் அடைகாப்பில் சூரியக்குஞ்சு தன் கோதுடைக்கும் வேளை, கந்தசாமி அண்ணைக்கு அடிவயிறு, அடிவளவு செல்லச் சொல்லி SMS அனுப்பியது. கையில் தண்ணி வாளியுடன் பனை வடலியை நோக்கிச் சென்ற போது தான். . .
அயல் வளவுப் பற்றைக்குள் அசாதாரணமான அசைவுகளும் வித்தியாசமான ஓசைகளும். இருதயத் துடிப்பு இருநூறு ஹேட்ஸுக்கு எகிற, 'அதிகாலை வேளையில் அடிவளவு சென்றவர் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுப் படுகொலை' என்கின்ற நாளைய தினசரிச் செய்தி கண்முன்னே நிழலாடியது. திரும்பி ஓடினால் துப்பாக்கிச் சன்னங்கள் பின்னாலிருந்து தாக்கலாம் என்கின்ற அச்சத்தினால் அப்படியே நிலத்தில் குந்திய போது தான். . .
சுமார் மூன்றரை அடி வரையிலான உயரமுடைய விநோதமான சில ஜந்துகள் அங்குமிங்கும் நகர்ந்தவாறே எவற்றையோ சேகரித்துக் கொண்டிருந்தன. அச்சத்தில் அட்ரீனலின் உச்ச வேகத்தில் சுரக்க, வயிற்றுப் பக்கமாயிருந்து பந்தாய் உருண்டு வந்த பயக் கோளம் கந்தசாமி அண்ணையின் வாய் வழியே ஓலமிட்டு வெளியேறியது. சடாரென அத்தனை விநோத ஜந்துகளும் ஓடி மறைய, கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தை கக்கிக் கொண்டு, வட்டத் தட்டு வடிவிலான பாரிய கலமொன்று மின்னல் வேகத்தில் விண்ணில் சென்று மறைந்தது.
எங்கேயிருந்து வருகின்றன இந்தப் பறக்கும் தட்டுக்கள்? மின்னல் வேகத்தில் செல்வதாய் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றார்களே, அப்படியானால் ஒளியின் வேகத்தை அண்மிக்கும் வேகத்தில் அவை பயணிக்கின்றன என்று தானே கொள்ள வேண்டும்? எனவே எம்மை விடவும் விஞ்ஞான ஆற்றலில் விஞ்சிய உயிரினமொன்றின் பிஞ்சொன்று, இந்தப் பிரபஞ்சத்தின் எங்கோ ஓர்மஞ்சத்தில் உறங்கிக் கொண்டுதானே இருக்கிறது என்று அர்த்தம். ஆகவே எம்மாலும் ஒளியின் வேகத்தில், குறைந்த பட்சம் ஒளியின் ஒரு பின்ன மடங்கு வேகத்திலாவது பயணிக்க முடியுமா? முடிந்தால். . .
ஐன்ஸ்டீனின் விசேட சார்புக் கொள்கையை (Special Relativity Theorem) வாய்ப்புப் பார்க்கும் சந்தர்ப்பம் சாத்தியமாகும். சாத்தியமானால். . .
நாங்களும் தேவலோகத்தைச் சேர்ந்தவர்களாகலாம். ஆமாம்! பூவுலோகத்தில் ஒரு நாள் என்பது தேவலோகத்தில் ஒரு நிமிடமென்று புராணங்கள் கூறுகின்றனவே. ஐன்ஸ்டீனின் விசேட சார்புக் கொள்கையின் படி, ஒளியின் வேகத்தை அண்மித்த வேகத்தில் பயணிப்பவர்களின் கால அளவீடானது சாதாரண வேகத்தில் (மிகை ஒலி விமானங்களின் வேகமெல்லாம் ஒளியின் வேகத்துடன் ஒப்பிடும் போது பூச்சியமே) பயணிப்பவர்களின் கால அளவீட்டிலும் வேறானது.
விளக்கமாகச் சொல்வதானால் நேரம் அனைவருக்கும் சமமானது என்பது பொய்யாகும்.
அதாவது 53 வயசான எங்கட கந்தசாமி அண்ணையை, ஒளியின்ர வேகத்துக்குக் கிட்டின வேகத்தில் போகிற ஒரு வாகனத்தில ஏத்தி ஒரு வருசத்திற்கு சந்தோசமா பெஞ்சாதி பிள்ளைகளின்ர தொந்தரவு இல்லாம சுத்திப் போட்டு வாங்கோ, எண்டு 2007 ஆம் ஆண்டில அனுப்பி வைச்சால். . .
அட! அதுக்குள்ள ஒரு வருசம் முடிஞ்சுட்டுதே எண்ட கவலையோட கந்தசாமி அண்ணை திரும்பி ஊருக்குள்ளை வருவமெண்டு வந்தால். . .
என்னடா அதிசயம்! மாறிக் கீறி வேற நாட்டுக்குள்ள போயிற்றேனோ எண்டு அவர் குளம்பிக் கொண்டிருக்க, கருநீலக் காற்சட்டையும் இளநீல மேற்சட்டையும் போட்டு கொண்டு ஜீப் ஒண்டில வந்த கொஞ்சப் பேர் அவர விசாரிச்சுப் போட்டு வியந்து கொண்டே, வேற ஆற்றையோ வீட்டுக்குள்ள கொண்டுபோய் விட்டிச்சினம். அங்க பார்த்;தால் இவற்ற படத்துக்கு மாலை போட்டு பொட்டு வைச்சு இருந்துது. அட, நான் ஒரு வருசத்துக்கு சும்மா சுத்திப் போட்டு வருவமெண்டு போனால், இவள் செய்திருக்கிற வேலை? ஆ. . இந்த உலகத்தில ஆரைத் தான் நம்பிறது ஆ? பிள்ளை குட்டிகளை விடு. அதுகள் தோளுக்கு மூத்திற்றுதுகள். நான் இல்லையெண்ட உடனே எங்கையும் பாய்ஞ்சிருக்குங்கள். இவளுக்கு என்ன நடந்தது? பெண்டுகள நம்பக் கூடாதெண்டு பட்டினத்தார் சொன்னது சரி தான். வீட்டை எல்லாம் அப்பிடியே திறந்து வைச்சிற்று. எங்க கூத்தடிக்கப் போய்ற்றாள்? இண்டைக்கு இவளுக்கு செய்யிறன் பார் வேலை,
'எடியே கமலம்.. எங்கையடியப்பா நிக்கிற?"
தலை நரைத்து கூன் விழுந்த கிழவியொண்டு பக்கத்து அறையால் எட்டிப் பார்த்தது.
"ஆரு மோனே நீ?ஆரைத் தேடுற? எல்லாரும் வேலைக்குப் போயிருக்கினம்"
கந்தசாமி அண்ணை குழப்பத்துடன்
"இஞ்ச கமலமெண்டு. . ."
"அப்பிடி ஒருத்தரும் இஞ்சையில்லயே"
"அப்ப குமார் எண்டு?"
"ம்... எண்ட அவருக்கும் குமார் தான் பேர். ம். என்னத்தைச் சொல்லுறது? என்ன இப்படியே சீரழிய விட்டிட்டு மகராசன் போய்ச் சேந்திற்றேர். அந்தா போட்டோவில இருக்கிறேரே அவர் தான் சீமான். ஆ! இப்பத்தான் ஞாபகம் வருது. அவற்ற அம்மாவுக்கும் பேர் கமலம் தான். அது பாவம் மனுசி அந்தக் காலத்தில ஒரு வருசத்தில ஊர் சுத்திப் பாத்திற்று வாறனெண்டு பேய்க்காட்டிப் போட்டு மனுசன் காரன பெண்டாட்டி பிள்ளையை விட்டுப்போட்டு எங்கையோ போயிற்றுது. இது கோயில் கோயிலா ஏறிஇறங்கி விரதமிருந்து பட்டினி கிடந்தே செத்துப்போச்சு. ம்.. எந்த விசயத்திலயும் ஆம்பிளையளை நம்பேலாது மோனே. ஆனா என்ர சீமான் அப்பிடியில்ல. அப்பன் காரன் வருவான் வருவான் எண்டு பாயில ரெண்டு வருசமா கிடந்து சீரழிஞ்ச அஞ்சு வருசத்துக்கு முதல்ல 2058ல போய்ச் சேந்திற்றுது."
தன் மனக் குமுறல்களைக் கேட்பதற்கு ஆள் கிடைத்த சந்தோசத்தில் கிழவி அலம்பத் தொடங்கியது. (மனிதனால் மொழி உருவாக்கப் பட்டதே தன் ஆதங்கங்களை மற்றவர்கட்கு வெளிப்படுத்தத் தானே)
இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். ஆக ஒரே ஒரு வருசம் என்று ஒளியை அண்மித்த வேகத்தில் பயணம் செய்த கந்தசாமி அண்ணைக்குத் தெரிந்த கால அளவானது, இங்கே பூமியில் பல ஆண்டுகளை விழுங்கியிருக்கிறது. எல்லாமே குழப்பமாயிருக்கிறதா?
ஏனெனில் இது நம் நம்பிக்கைக்கு புறம்பானதாயிருக்கிறது. ஆனால் அது தான் உண்மையானதாயிருக்கக் கூடும். ஆனாலும், உலகம் உருண்டை வடிவானது, சூரியன் பூமியைச் சுற்றவில்லை. மாறாக பூமி தான் சூரியனைச் சுற்றுகின்றது என்று அறிந்து சொன்ன இன்னொரு மனிதனை பொய்யன் என்று சொல்லிக் கொலை செய்த மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா நாம்.
ஆகவே காலப் பரிமாணத்தை விட்டு விடுவோம். சரி ஓளியை அண்மித்த வேகத்தில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தால் எங்கு செல்லப் பிரியப் படுவீர்கள்? வாருங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் பயணிக்க விரும்புமிடம். . .
கருங்குழி!
அது என்ன கருங்குழி? Yah! Who is that black sheep? Oh! sorry who is that black hole or what is that black hole? ஆங்கிலத்தில் black hole என்று அழைக்கப் படுகின்ற இந்தக் கருங்குழி எங்கே இருக்கிறது? அங்கு என்ன விஷேசம் இருக்கிறது?
கருங்குழியில் எதனையும் அவதானிக்க முடியாதென்றும், அதன் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்குள் ஏதேனும் உட்பிரவேசித்தால், தவளை தன் நாக்கை நீட்டி இரையை லபக் எனப் பிடித்து விழுங்கி விடுவது போல், கருங்குழியும் அப் பொருளை தன்னுள் இழுத்து விழுங்கி வலது கையால் வயிற்றை தடவி ஏப்பம் விட்டவாறே அடுத்த இரைக்காய்க் காத்திருக்குமாம் என்ற ஒரு வதந்தி. உண்மையா?
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பார்கள்.
அப்படித்தான் இதுவும் இருக்கிறது. ஆனால் இப்போது நாங்கள் ஒளியின் வேகத்திலோ அல்லது அதன் ஒரு பின்ன வேகத்திலோ பயணிக்கக் கூடியதாய் இருப்பதால், ஊருக்கு நல்லது சொல்வோம். அதன் உண்மை தெரிந்து சொல்வோம்.
நியூட்டன் தரையில் படுத்துக் கிடக்கையில் மரத்திலிருந்து விழுந்த அப்பிள் பழுத்துடன் நாமெல்லாம் புவியீர்ப்பு விசையுடன் கைகுலுக்கிக் கொண்டோம். அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்திய குறள் என்று ஒளவையார் சொன்னார். அணுவின் கருவில் தான் திணிவு தேங்கிக் கிடக்கிறது. அணுவின் அளவுடன் அதன் கருவின் அளவை ஒப்பிடுவதானது ஒரு கிரிக்கட் மைதானத்துடன் ஒரு கிரிக்கட் பந்தை ஒப்பிடுவதற்குச் சமமாகும் என்று படித்திருக்கிறோம். ஆகவே இந்தப் பூமியில் உள்ள அனைத்து அணுக்களினதும் கருக்களை மாத்திரம் ஒன்று திரட்டி ஒரு கோளம் ஒன்றை உருவாக்கினால், அதன் அடர்த்தியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்போது அதன் கவர்ச்சி விசை எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
இப்படித்தான் ஒரு நட்சத்திரம் எரிந்து அதன் ஆயுட்காலம் முடிந்ததும் அங்கே ஏற்றங்கள் அற்ற கருக்கள் மட்டுமே காணப்படும். திணிவுகளுக்கிடையிலான கவர்ச்சி விசை காரணமாக அந் நட்சத்திரம் சுருங்க ஆரம்பிக்கும். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் மேலும் சுருங்க முடியாது என்றவாறு அணுக்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று கருவின் செறிவுடன் காதலில் கட்டுண்டு கிடக்கும். (வள்ளுவர் தோற்றார் போங்கள் - காதலர்கள் ஒருவரை ஒருவர் தழுவும் போது காற்றுக் கூட இடைபுக முடியாதென்றார் வள்ளுவர். ஆனால் இங்கே கேவலம் ஒரு இலத்திரன் கூட இடைபுக முடியாது). இப்போது நட்சத்திரத்தின் அளவையும் (பூமியுடன் ஒப்பிடும் போது கோடி மடங்கு பெரிய நட்சத்திரங்களும் உண்டு) அதன் செறிவையும் மீண்டும் கற்பனை செய்து பாருங்கள். இவ்வாறு இறந்து சுருங்கிய நட்சத்திரங்களே கருங்குழிகளாகும்.
தப்பு வேகம் (Escape Velocity) என்று கேள்விப் பட்டருக்கிறீர்கள். பூமியில் தப்பு வேகம் 11.2km/sec. அதாவது பூமியின் ஈர்ப்பு விசையினின்று தப்பி ஒரு பொருள் வெளியே செல்ல வேண்டுமெனில் அந்தப் பொருளானது புவியின் மேற்பரப்பிலிருந்து 11.2km/sec என்கின்ற வேகத்தில் ஏவப்பட வேண்டும். இதுவே சந்திரனாயிருந்தால் அங்கு தப்பு வேகம் இன்னும் குறைவாய் இருக்கும். ஏனெனில் அதன் அடர்த்தியானது பூமியை விட குறைவாகும் (1/6 பங்கு). இப்போது கருங்குழிகளின் அடர்த்தி உங்களுக்குப் புரிந்திருக்கும். எனவே அங்கு தப்பு வேகம் எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். அட ஆமாம்! அங்கே தப்பு வேகம் ஒளியின் வேகத்திலும் அதிகமாகும். எனவே எந்த ஒரு வெளிச்சமும் கருங்குழியிலிருந்து வெளியேற முடியாது.
சரி. கருங்குழியினுள்ளே சென்று நாம் தரையிறங்க முடியாதா? நாங்கள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்யக் கூடியதாயிருப்பினும் தூரதிர்ஷ்டவசமாக முடியாது என்பது தான் பதில். ஏனெனில் நாங்கள் கருங்குழியின் ஈர்ப்புப் புலத்தின் உள்ளே சென்று கொண்டிருக்கும் போது, எமது உடலின் அனைத்துப் பாகங்களும் கருங்குழியின் மையத்தினின்றும் சம தூரத்தில் இருக்காது (பூமியில் நாம் நிற்கையிலும் எமது சிரசுடன் ஒப்பிடும் போது பாதங்களானவை பூமியின் மையத்துக்குச் சமிபமாகவே உள்ளன.) கருங்குழியின் அளவு சிறிதாயிருப்பதுடன், அதன் ஈர்ப்பு விசையானது பன்மடங்கு அதிகமென்பதாலும் அங்கே பாதங்களானது சிரசுடன் ஒப்பிடும் போது மிக அதிகளவிலான விசையினை அனுபவிப்பதனால், எமது உடலானது நார்நாராக பிய்த்தெறியப்பட்டு சிதிலமாகி விடுவோம்.
அப்படியானால் எதற்காக அழைத்து வந்தேன் என்கின்றீர்களா? உங்களுக்கும் ஊரில் கந்தசாமி அண்ணையின் அநுபவத்தை தருவதற்காகத்தான்.
அப்ப வரட்டுமா?